புதினம்.காம்!
இராணுவத்தீர்வு சாத்தியமற்றது என்ற எமது நிலைப்பாட்டில்
மாற்றமில்லை: அமெரிக்க தூதுவர்
இலங்கை
இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு இராணுவத்தீர்வு சாத்தியமற்றது என்ற
எமது நிலைப்பாடானது கடந்த செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்ற
தாக்குதலின் மூலம் மாற்றமடையப் போதில்லை என்று சிறிலங்காவிற்கான
அமெரிக்க தூதுவர் றோபேட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில்
இடம்பெற்ற மோட்டார் எறிகணை வீச்சுத் தாக்குதலில் மயிரிழையில்
உயிர்தப்பிய பின்னர் இரு நாட்களில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வர்த்தக நிர்வாக முதுமாணிப்
பிரிவினரின் பழைய மாணவர் சங்கத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டு
உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது:
"தாக்குதலின் பின்னர் கெல உறுமயவினால் வெளியிடப்பட்ட அறிக்கையில்
அமெரிக்கத் தூதுவர் இத்தாக்குதலின் மூலம் பாடம் கற்க வேண்டும்
எனவும், விடுதலைப் புலிகளை தோற்கடிக்க ஒரே வழி இராணுவத்தீர்வு தான்
என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்
அதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
இது ஒரு வழியல்ல, இராணுவத் தீர்வு இதற்கு வழியாகாது. இரு
தரப்புக்களும் ஒன்றாக இணைந்து அரசியல் தீர்வைக் காணவேண்டும் என்பதே
அமெரிக்காவின் நிலைப்பாடு. சுதந்திரக் கட்சியினால் வழிநடத்தப்படும்
அரசு அதன் அதிகாரங்களை தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யும்
விதமாக பகிர்ந்தளிக்க வேண்டும். அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு
தர வேண்டும்.
அமைதியை ஏற்படுத்த வேண்டிய அதிகாரம் சிறிலங்காவிடம் உண்டு எனவே
அவர்கள் பாரம்பரிய எல்லைக்கோடுகளைத் தாண்டி அதை அடைய வேண்டும். அமைதி
முயற்சிகளை முன்னெடுக்க சிறிலங்கா அரசிற்கு நல்ல சந்தர்ப்பம் உள்ளது.
எனவே அதனை அடைவதற்கு இரு அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயலாற்ற
வேண்டும்.
இந்தப் பிரச்சனையை தீர்ப்பதற்கு மிகத் தீவிரமான அதிகாரப் பகிர்வுத்
திட்டங்கள் தேவை என்பதை சுதந்திரக் கட்சியினால் வழிநடத்தப்படும் அரசு
உணர வேண்டும். தமிழ் மக்களின் தேவைகளை நிறைவு செய்யக்கூடிய
தீர்வுக்கு ஐக்கிய தேசியக் கட்சியும் தனது ஆதரவை வழங்க வேண்டும்"
என்றார் அவர்.
நன்றி: புதினம்.காம்!