திரு. சாலமன் பாப்பையா இங்கே வரவேண்டாம்!
~ கரு. திருவரசு, மலேசியா ~
[இக்கட்டுரையில்
கரு.திருவரசு தெரிவித்திருக்கும் 'திரு. சாலமன் பாப்பையா இங்கே வரவேண்டாம்'
என்பதில் எமக்கு உடன்பாடில்லை. அவர் அத்திரைப்படத்தில் வரும் ஒரு சிறு பாத்திரம்
மட்டுமே. அவரை அப்பாத்திரமாகவே பார்க்கவேண்டுமே தவிர திரு.சாலமன் பாப்பையாவாகப்
பார்க்கக் கூடாது. எழுதிக் கொடுத்ததை வாசித்தவர் அவர். இருந்தாலும் இவ்விதமான
தமிழினத்தைக்கேவலப்படுத்தும் காட்சியில் நடித்ததற்காக அவரது மன்னிப்பை
வேண்டுமானால் கோரலாம். மேற்படி திரைப்படத்தின் திரைக்கதையினை எழுதியவர் அண்மையில்
மறைந்த எழுத்தாளர் திரு. சுஜாதா அவர்கள். மேற்படி திரைப்படத்தின் இயக்குநர்
சங்கர். கதாநாயகன் தமிழகத்தின் 'சுப்பர் ஸ்டார்' ரஜனிகாந்த. இந்நிலையில்
திரு.சாலமன் பாப்பையா அவர்களைவிட அதிகமாகக் குறறஞ்சாட்டபப்டவேண்டியவர்கள்
அவர்களே. அவர்கள் பக்கம் திருப்ப வேண்டிய கேள்வியினை, குற்றச்சாட்டினைத் திரு.
சாலமன் பாப்பையாவை நோக்கிக் கேட்பதில் நியாயமிருப்பதாகப் படவில்லை. இருந்தாலும்
பெண்களை, குடும்பத்தை, தமிழ் இனத்தை இழிவுபடுத்தும் வகையில் அமைந்திருந்த மேற்படி
காட்சியில் அவர் நடித்திருக்கத் தேவையில்லை. நடிப்பதற்கு அவர் மறுப்புத்
தெரிவித்திருக்கலாம். - பதிவுகள் -]
நம் மலேசியத் திருநாட்டின் தலைநகரில் 6.6.2008 அன்று நடைபெறவிருக்கும் தமிழர்
திருநாள் விழாவின் பேச்சாளர்களாகத்
தமிழ்நாட்டிலிருந்து வருவோரில் பெருவலமான பட்டிமன்றப் பேச்சாளரும் முன்னாள்
பேராசிரியருமான திருமிகு சாலமன் பாப்பையாவும் வருகிறார் என நாளிதழ்களில் செய்தி
வந்திருக்கிறது.
திரு. சாலமன் பாப்பையா எனும் இந்த இலக்கியவாணர் இனப்பற்றில்லாதவர் என நான்
கருதுகிறேன். தமிழ் இனத்தைக் கேவலப்படுத்தும் ஒரு பண்பற்ற படக்காட்சியில்
(இரசினியின் சிவாசி த போசு) நடித்த பொறுப்பில்லாதவர் என்பதால் அவர் நம்
நாட்டிற்கு வந்து எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளக்கூடாது.
அந்தப் படக்காட்சியில் தமிழினத்தைக் கேவலப்படுத்தும் பாங்கில் கண்டிக்கவேண்டிய
செய்திகள் இடம்பெற்றிருந்தன.
1.திருமணம் செய்துகொடுக்கவேண்டிய இரு கன்னிப் பெண்களுக்குத் தந்தை படத்தின்
கதைநாயகனை “வாங்க வாங்க எங்க வீட்டிலே
ரெண்டு பெண்கள் இருக்காங்க. வந்து பழகுங்க. பிடிச்சாத் திருமணம் செய்துக்குங்க.
சும்மா வந்து பழகலாம், வாங்க!” என்று அழைப்பார்.
முகமெல்லாம் கறுப்புச்சாயம் பூசப்பட்ட இரு பெண்களைக்காட்டி “இது அங்கவை, இது
சங்கவை என்று அறிமுகப்படுத்துவார். “நீங்க
ரொம்பப் பொங்கவைச்சுட்டீங்க போலே” என்று மற்றொரு நடிகர் அப்பெண்களைக் கிண்டல்
வேறு செய்வார். இது நம் பண்பையே கெடுத்த காட்சி. எந்தத் தந்தையாவது இப்படி
நடந்துகொள்வாரா? அப்படி அழைப்பவருக்குப் பெயர் தந்தை அன்று. அதற்கு வேறு கேவலமான
பெயர்.
2.அக் காட்சியில் வரும் அங்கவை, சங்கவை எனும் பெயர்கள் தமிழ் இலக்கியம்
படித்தவர்களுக்கு - சங்க இலக்கியம் படித்தவர்களுக்குத்
தெரிந்த அருமையான தமிழ்ப்பெயர்கள்.
பழந்தமிழ் நாட்டிலே பறம்புமலை (இப்போது அது பிரான்மலை) சூழ்ந்த பறம்புநாட்டை ஆண்ட
மன்னன் பாரி வள்ளலின் செல்வத்
திருமக்கள் அந்த இரு பெண்மக்கள். கல்விகேள்வியில் சிறந்து விளங்கியவர்கள்
என்பதற்கு, தந்தையைப் போரில் இழந்தபிறகு
பாடியதாகப் புறநாநூற்றிலே அவர்கள் பாடியதாக இடம்பெற்றிருக்கும்
அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்
எந்தையும் உடையேம்எம் குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவில்
வென்றுஏறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்;யாம் எந்தையும் இலமே!
எனும் பாடலே இனிய சான்று.
போரில் பாரி மன்னன் இறந்த பின்னர் அவரின் நெருங்கிய நண்பராய் விளங்கிய புலவர்
கபிலர் பெருமான் அப் பெண்மக்களைத் தம்
மக்களேபோல் பேணிக்காத்துத் தகுந்த மன்னருக்கு மணமுடித்துக் கொடுக்க
முயன்றதாகவும், அதற்கிடையே பாரிமன்னன் இறந்ததைத்
தாங்கமுடியாத கபிலர் வடக்கிருந்து தாமும் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்து
மக்கள் இருவரையும் புலவர் பெருமாட்டி ஔவையாரிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்ல,
ஔவையார் அங்கவை, சங்கவை இருவருக்கும் மணமுடிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டதாகவும்
இலக்கிய வரலாறு சொல்கிறது.
தமிழருக்குச் சங்க இலக்கியம் என்பது வரலாற்றுப் பெட்டகம் என்பதும், அதில்
புலவர்களால் உயர்வாகப் பாடப்பட்ட மன்னன் பாரிவள்ளல் என்பதும், அம்மன்னனின்
அன்புக்குரிய - கபிலர், ஔவையார் போன்ற பெரும்புலவர்களின் அரவணைப்பைப் பெற்ற
நன்மக்கள் அந்தப் பெண்மக்கள் என்பதும்,
ஒளிபடைத்த மணியிரண்டும் ஒப்பற்ற அழகுப்பேழை உளிபடாச் சிலையைப்போல உருக்கொண்டு
மணக்கும் தாழை மாரிக்கிடையே வானைக் கீறுகின்ற மின்னல் போல பாரிக்கு மகளாய்
வாய்த்தோர் விளங்கலானார்! என நம் காலத்துச் “சங்கத்தமிழ்” எனும் இலக்கியப்
பனுவலில்கூட கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் சிறப்பித்து எழுதப்பட்ட பொன்மக்கள்
இந்த அங்கவை, சங்கவை என்பதும் ஐயா சாலமன் பாப்பையாவுக்குத் தெரியாமலிருக்க
வாய்ப்பே இல்லை.
பாரிமகளிரைப் பற்றியும் அவர்களின் தந்தை பாரி வள்ளலைப் பற்றியும் அவர்களைப்
பின்னிப் பிணைந்துள்ள இலக்கிய வரலாறு பற்றியும் பேசச்சொன்னால் திண்ணமாக
மணிக்கணக்காகப் பேசக்கூடியவர்தான் இந்த ஐயா சாலமன் பாப்பையா.
பண்பாடற்ற - கேவலமான அக் காட்சியில் தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க
இரு பெண்களின் இனிய, அரிய பெயர்களைப் பயன்படுத்திக் கிண்டல் வேறு
செய்திருக்கிறார்கள். அதை ஏற்றுக்கொண்டு இந்த இலக்கியவாணர் எப்படி அக்காட்சியில்
நடித்தார்?
நடித்ததன் வழி அவரும் சேர்ந்தே குற்றம் செய்தவராகிறார். எனவே, தமிழ் இலக்கியம்
பற்றியோ, பண்பாடுபற்றியோ பேசுவதற்குத் தகுதி
அற்றவராகிவிட்டார். இங்கே நடக்கும் தமிழர்திருநாளில் கலந்துகொள்ளும் தகுதி
அவருக்குக் கிடையாது.
கோலாலும்பூர்த் தமிழர் திருநாள் ஏற்பாட்டுக் குழுவினருக்கு என் பணிவான வேண்டுகோள்
இதுதான்:
தலைநகரில் 6.6.2008 அன்று நடைபெறவிருக்கும் தமிழர் திருநாள் விழாவின்
பேச்சாளர்களின் பட்டியலில் இருந்து அவர் பெயரை
நீக்கிவிடுங்கள். திருமிகு சாலமன் பாப்பையா நமக்கு வேண்டாம். தலைநகர்த் தமிழர்
திருநாள் மட்டுமல்ல, இந்த நாட்டில் நடைபெறும்
எந்த நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொள்வதை நாம் ஏற்றுக் கொள்ளமுடியாது. சாலமன்
பாப்பையா இங்கே வரவேண்டாம்!
இங்ஙனம்,
கரு.திருவரசு.
படியல்: 1. திரு. சாலமன் பாப்பையா
2. மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கங்கள்,
தமிழ் - இலக்கியத் தொடர்புடைய இயக்கங்கள்.
15.05.2008
Karu.Thiruvarasu PPN,
12, Jalan Pantai Jerjak Lapan, Sungai Nibong, 11900 Pulau Pinang, Malaysia.
Tel: 04 - 2626075 / 016 - 4282623
E-Mail: thiruv36@yahoo.com |