மீள்பிரசுரம்: தினக்குரல்.காம்- 09 - January - 2009
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை!
"சண்டே லீடர்' பத்திரிகை ஆசிரியரும் பிரபல ஊடகவியலாளருமான லசந்த விக்கிரமதுங்க (50
வயது) நேற்று வியாழக்கிழமை காலை கல்கிசை அத்திட்டிய பகுதியில் வைத்து
சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன் மகாராஜா ஊடக
நிறுவனத்துக்குள் நுழைந்த ஆயுதக் குழுவொன்று அங்கு பேரழிவுகளை ஏற்படுத்திச் சென்ற
நிலையில், நேற்றுக் காலை லசந்த விக்கிரமதுங்க மீதான தாக்குதல் நடைபெற்றுள்ளது.
வழமைபோல் இவர் நேற்றுக் காலை கல்கிசை ரெம்பிளஸ் வீதியிலுள்ள "லீடர் பப்ளிகேஷன்'
அலுவலகத்திற்கு தனது காரில் சென்றுகொண்டிருந்தபோதே மோட்டார் சைக்கிளொன்றில் வந்த
இருவர் இவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அலுவலகத்திற்கு இவர் காரில்
சென்றுகொண்டிருந்தபோது இவரது காரை இரு மோட்டார் சைக்கிள்கள் பின்தொடர்ந்து வரவே
அவர் அதனை பக்கவாட்டுக் கண்ணாடியில் அவதானித்துள்ளார். தொடர்ந்தும் அந்த மோட்டார்
சைக்கிள்கள் பின்தொடரவே தனது கையடக்கத் தொலைபேசி மூலம் அவர், பத்திரிகை
அலுவலகத்தைச் சேர்ந்தவர்களுடன் தொடர்புகொண்டு தெரிவித்ததுடன், ஐக்கிய தேசியக்
கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவருடனும் தொடர்புகொண்டு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, இவரது கார் வந்துகொண்டிருந்த வீதியை நோக்கி அலுவலகப் பணியாளர்கள் சிலர்
வாகனமொன்றில் புறப்பட்டுள்ளனர். எனினும், அதற்கிடையில் மோட்டார் சைக்கிள்களில்
பின்தொடர்ந்து வந்த ஆயுதபாணிகள் மோட்டார் சைக்கிளை வேகமாகச் செலுத்திவந்து ஒரு
மோட்டார் சைக்கிளை அவரது வாகனத்தின் முன் நிறுத்தவே சாரதி ஆசனத்திலிருந்து காரைச்
செலுத்திச் சென்ற லசந்த விக்கிரமதுங்க காரை திடீரென நிறுத்தியுள்ளார். அவ்வேளையில்
அவ்விடத்திற்கு மற்ற மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுதபாணிகள் அவர்மீது பக்கவாட்டுக்
கண்ணாடிப் பக்கத்தால் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
மக்கள் போக்குவரத்து அதிகமிருந்த அந்த வீதியில் அத்திட்டிய சிங்கள ஆரம்பப் பாடசாலை
முன்பாகவே காலை 10.30 மணியளவில் இவரது வாகனம் மீது துப்பாக்கிச் சூடு
நடத்தப்பட்டுள்ளது.
"ஏ.கே.47' ரக துப்பாக்கியால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் லசந்த தலையிலும்
மார்பிலும் படுகாயமடைந்தார். ஐந்து குண்டுகள் வரை தலையில் பாய்ந்து மண்டையோட்டை
பிளந்திருந்தன. மூளையின் சில சிதறல்கள் காரின் உட் புறத்தில் சிதறுண்டிருந்தன.
காரின் உட்புறமெங்கும் இரத்தம் சிதறிக் கிடந்தது.
துப்பாக்கிச் சூட்டுச் சத்தத்தால் அந்தப் பகுதி அதிர்ந்தபோது வீதியால்
சென்றுகொண்டிருந்த அனைவரும் இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்துள்ளனர்.
ஆயுதபாணிகளின் தாக்குதலையடுத்து கார் நடுவீதியில் நின்றுவிட்டது. துப்பாக்கிதாரிகள்
அவர் மீது கடும் தாக்குதலை நடத்திவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து
துப்பாக்கியுடன் மறைந்துவிட்டனர். ஜக்கற்றும் தலைக்கவசமும் அணிந்திருந்ததால்
அவர்களை எவராலும் அடையாளம் காணமுடியவில்லை.
துப்பாக்கிச் சூட்டையடுத்து அச்சத்தால் மக்கள் நாலாபுறமும் சிதறியோடினர். இதன்போது
சிலர் வாகனங்களுடனும் மோதுண்டு சிறு சிறு காயமடைந்துள்ளனர்.
தலையிலும் மார்பிலும் குண்டுகள் பாய்ந்து படுகாயமடைந்து மிகவும் ஆபத்தான நிலையில்
இவர் வேறு வாகனமொன்றில் உடனடியாக களுபோவில ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர
சிகிச்சைக்குட்படுத்தப்பட்டார்.
தலைப்பகுதி துப்பாக்கிக் குண்டுகளால் பலத்த சேதமடைந்திருந்ததால் அவரைக்
காப்பாற்றுவதற்கு டாக்டர்கள் மிகக் கடுமையாகப் போராடினர். மேலதிக அவசர சத்திர
சிகிச்சைக்காக இவரை கொழும்பு தேசிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது.
எனினும், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்திருந்ததால் அவரை அங்கு கொண்டு செல்ல
முடியாத நிலையில் அங்கிருந்த வைத்திய நிபுணர்கள் குழுவொன்று களுபோவில
ஆஸ்பத்திரிக்கு அவசர உபகரணங்களுடன் வரவழைக்கப்பட்டது.
அங்கு வந்த வைத்திய நிபுணர்கள் அவரது உயிரைக் காப்பாற்றுவதற்காக மிகக் கடுமையாகப்
போராடியபோதும் பிற்பகல் 1.45 மணியளவில் சிகிச்சை பலனின்றி லசந்த விக்கிரமதுங்க
உயிரிழந்தார்.
இவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட செய்தியை அறிந்தவுடன் எதிர்க்கட்சித் தலைவர் ரணில்
விக்கிரமசிங்க, மங்கள சமரவீர எம்.பி., ஐ.தே.க. பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க,
ஜோன் அமரதுங்க, கஜந்த கருணாதிலக, ரவூப் ஹக்கீம் உட்பட பல எம்.பி.க்களும்
அரசியல்வாதிகளும் களுபோவில ஆஸ்பத்திரிக்கு வருகை தந்திருந்தனர்.
"லீடர் பப்ளிகேஷன்' ஊழியர்களும் அங்கு வந்திருந்தனர். பல ஊழியர்கள் அங்கு கண்ணீர்
விட்டு அழுதுகொண்டிருந்தனர்.
அரசுக்கெதிராகவும் பல அரசியல்வாதிகள் தொடர்பாகவும் ஆயுதக் குழுக்கள் தொடர்பாகவும்
மிக நீண்டகாலமாக மிகக் கடுமையான கட்டுரைகளை "சண்டே லீடர்', மோர்னிங் லீடர் மற்றும்
ஞாயிறு சிங்களப் பத்திரிகையான "இருதின' என்பன வெளியிட்டு வந்ததால் தொடர்ந்தும் இவை
கடுமையான அச்சுறுத்தல்களுக்குள்ளாகி வந்தன.
- ரொஷான் நாகலிங்கம்-
Courtesy:
http://www.thinakkural.com/news%5C2009%5C1%5C9%5Cmainnews_page65484.htm
வீரகேசரி: http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=10110 |