| 
மீள்பிரசுரம்: தினக்குரல்.காம்! 
08 - June - 2007!கொழும்பு விடுதிகளிலிருந்து தமிழர் பலாத்காரமாக 
வெளியேற்றம் - பஸ்களில் ஏற்றி வட, கிழக்கிற்கு அனுப்பிவைப்பு
 
 
  கொழும்பு 
`லொட்ஜ்'களிலிருந்து வடக்கு- கிழக்குத் தமிழர்களை வெளியேற்றும் நடவடிக்கையை 
படையினர் ஆரம்பித்துள்ளனர். நேற்று வியாழக்கிழமை அதிகாலை 500 இற்கும் மேற்பட்ட 
தமிழர்கள் இவ்வாறு பலவந்தமாக விசேட பஸ்கள் மூலம் வடக்கு- கிழக்கிற்கு கொண்டு 
செல்லப்பட்டுள்ளனர். கொழும்பில் எதுவித காரணமுமின்றி தங்கியிருக்கும் வடக்கு- 
கிழக்கு மக்கள் உடனடியாகத் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பிவிட வேண்டுமென 
பொலிஸ்மா அதிபர் அறிவித்த ஒருசில தினங்களிலேயே லொட்ஜ்களிலிருந்து தமிழர்களை 
வெளியேற்றும் நடவடிக்கையை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். 
 நேற்று முதற்கட்டமாக வெள்ளவத்தை மற்றும் கொட்டாஞ்சேனையிலுள்ள `லொட்ஜ்'களை மையமாக 
வைத்தே தமிழர்களை வெளியேற்றும் நடவடிக்கை ஆரம்பமானது.
 
 இதற்கமைய `லொட்ஜ்'களிலிருந்து வெளியேற்றப்பட்டு பஸ்களில் ஏற்றப்பட்டவர்களில் 500 
இற்கும் மேற்பட்டவர்கள் ஏழு பஸ்கள் மூலம் வவுனியாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
 
 திருகோணமலைக்கு ஒரு பஸ்ஸில் 50 இற்கும் மேற்பட்டோரும் மட்டக்களப்புக்கு ஒரு பஸ்ஸில் 
50 இற்கும் மேற்பட்டோரும் பலத்த காவலுடன் கொண்டு செல்லப்பட்டனர்.
 
 கொழும்பு நகரிலிருந்து தமிழர்களை வெளியேற்றும் அரசின் இந்த நடவடிக்கை உள்நாட்டிலும் 
சர்வதேச நாடுகளிலும் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் உணர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
 
 அதிகாலையில் தேடுதல்!
 நேற்று அதிகாலை வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை பகுதிகளிலுள்ள பல `லொட்ஜ்'களுக்குச் சென்ற 
பொலிஸாரும் படையினரும் தேடுதலெனக் கூறி ஆழ்ந்த உறக்கத்திலிருந்தவர்களை 
தட்டியெழுப்பி விசாரணைக்குட்படுத்தினர்.
 
 ஒவ்வொருவரையும் தீவிர விசாரணைக்குட்படுத்திய படையினரும் பொலிஸாரும் கொழும்புக்கு 
அவர்கள் வந்ததற்கான காரணம் குறித்தும் கேட்டறிந்தனர்.
 
 அதன்பின் லொட்ஜ்களிலிருந்தும் பெரும்பாலானோரை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு 
உத்தரவிட்டதுடன், அவர்களுக்கு நேர அவகாசம் வழங்காது அவர்களது அனைத்து உடைமைகளையும் 
ஒன்றுவிடாது மூட்டை கட்டியதுடன், அவர்களை லொட்ஜ்களுக்கு வெளியே கொண்டு வந்துள்ளனர்.
 
 தாங்கள் கொழும்புக்கு வந்ததற்கான காரணங்களை கூறிய இந்த மக்கள், கொழும்பில் தாங்கள் 
தங்கியிருக்கும் காரணத்தை தகுந்த ஆதாரங்களுடன் காண்பித்தும் அதனைச் செவிமடுக்க 
பொலிஸாரும் படையினரும் மறுத்துவிட்டனர்.
 
 லொட்ஜ்களுக்கு வெளியே கொண்டு வரப்பட்டவர்கள் அனைவரும், அங்கு தயாராக 
நிறுத்தப்பட்டிருந்த பஸ்களில் ஏற்றப்பட பஸ் கதவுகள் இழுத்து மூடப்பட்டன.
 
 இவ்வாறு வெள்ளவத்தை ஸ்ரேசன் வீதி, ஹம்ரன் லேன், சின்சபா வீதி உட்பட பல 
வீதிகளிலுமுள்ள லொட்ஜ்களுக்கு பஸ்களுடன் சென்ற பொலிஸாரும் படையினரும் 
அங்கிருந்தவர்களையெல்லாம் பலவந்தமாகக் கொண்டு வந்து பஸ்களில் ஏற்றினர்.
 
 கைக்குழந்தைகளுடன் பெண்கள் முதல் முதியோர் வரை அனைவரையும் ஏற்றியதுடன், லொட்ஜ்களில் 
அவர்கள் சமைத்து உண்ண பயன்படுத்திய சட்டி, பானை முதல் அனைத்துப் பொருட்களையும் 
பஸ்களில் ஏற்றினர்.
 
 பலர் கண்ணீர் விட்டழுது, தங்கள் அலுவல்கள் முடிவடையும் வரையும் தங்க விடுமாறு 
கேட்டும் எந்தப் பலனும் ஏற்படவில்லை.
 
 இதேநேரம், புறக்கோட்டையில் சில லொட்ஜ்களிலும் கொட்டாஞ்சேனையில் பல 
லொட்ஜ்களிலுமிருந்தும் பெருமளவானோர் இவ்வாறு பஸ்களில் ஏற்றப்பட்டனர்.
 
 அனைத்துப் பகுதியிலுமிருந்து ஐந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் ஒன்பது பஸ்களில் 
ஏற்றப்பட்டுள்ளனர்.
 
 வெள்ளவத்தை பகுதியில் ஏற்றப்பட்ட 400 இற்கும் மேற்பட்டவர்கள் முதலில் வெள்ளவத்தை 
பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது, அங்கு பெருமளவு மக்கள் கூடி விடவே, 
உடனடியாக அவர்கள் அங்கிருந்து வேறிடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
 
 இரண்டு பஸ்கள் புறக்கோட்டைப் பக்கம் சென்று பின்னர் அங்கிருந்து மீண்டும் 
வெள்ளவத்தைக்கு வந்தது. ஏனைய பஸ்கள் முதலில் பேலியகொடை சென்று பின்னர் அங்கிருந்து 
அவை வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்புக்குச் செல்லவுள்ளதாகக் கூறப்பட்டது.
 
 ஆனாலும், அந்த பஸ்களிலிருந்த பொலிஸாருக்கும் படையினருக்கும் சரியான அறிவுறுத்தல்கள் 
வழங்கப்படாததால் அந்த பஸ்கள் கொழும்பு நகரினுள் சில மணிநேரம் சுற்றிக் 
கொண்டிருந்தன.
 
 எனினும், இவர்களை ஏற்றிய பஸ்கள் எல்லாம் ஒன்றாகச் செல்லவில்லை. நீண்ட தூர 
இடைவெளியில் வேறு, வேறு வீதிகளூடாகச் சென்று இறுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட பஸ்கள் 
வவுனியா நோக்கி புறப்பட்டன.
 
 தங்களைப் படையினர் கொழும்புக்கு வெளியே எங்காவது ஓரிடத்தில் இறக்கி விடுவார்களென்றே 
அனைவரும் முதலில் கருதியிருந்தனர். எனினும், கொழும்புக்கு வெளியே பஸ்கள் வந்தபோது 
தான் வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்புக்கு தாங்கள் கொண்டு செல்லப்படுவதை 
பஸ்ஸிலிருந்தவர்கள் உணர்ந்து கொண்டனர்.
 
 வவுனியா நோக்கி புத்தளம் வீதியூடாக இரு பஸ்கள் (140 இற்கும் மேற்பட்டோருடன்) 
அடுத்தடுத்து சென்ற அதேநேரம், மூன்று பஸ்கள் 200 இற்கும் மேற்பட்டோருடன் குருநாகல், 
தம்புள்ளை வீதியூடாக வவுனியாவுக்குச் சென்றன.
 
 அதிகாலையில் தாங்கள் லொட்ஜ்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டு பஸ்களில் 
ஏற்றப்பட்டது முதல் தங்களுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தரவில்லையெனவும் 
குழந்தைகளும் முதியவர்களும் இதனால் பெரும் அவதியுற்றதாகவும் பலர் தெரிவித்தனர்.
 
 இந்த நிலையில், நேற்று மாலை 4.30 மணியளவில் முதல் பஸ் சுமார் 70 பேருடன் வவுனியாவை 
சென்றடைந்தது. அதில் வந்தவர்கள் காமினி சிங்கள மகா வித்தியாலயத்திற்கு கொண்டு 
செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டனர்.
 
 மகா வித்தியாலயத்தைச் சுற்றி பெருமளவு படையினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டு 
பாதுகாப்பு நடவடிக்கை மிகக் கடுமையாக்கப்பட்டிருந்தது.
 
 இதேநேரம், லொட்ஜ்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களை ஏற்றிச் சென்ற இரு பஸ்களுக்கு 
பாதுகாப்பாகச் சென்று கொண்டிருந்த பொலிஸ் ஜீப் மதவாச்சியில் மின் கம்பத்துடன் மோதி 
விபத்துக்குள்ளானது.
 
 இதனால் மேற்படி இரு பஸ்களும் மதவாச்சியில் ஒரு மணிநேரம் தரித்து நின்று மாலை 5.30 
மணியளவிலேயே வவுனியாவுக்குச் சென்றன. இவர்களும் காமினி சிங்கள மகா வித்தியாலயத்தில் 
தங்க வைக்கப்பட்டனர்.
 
 இவர்கள் தங்க வைக்கப்பட்ட பகுதிக்குச் செல்ல பத்திரிகையாளர்களோ, புகைப்படப் 
பிடிப்பாளர்களோ அனுமதிக்கப்படவில்லை
 
 கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றம் 8 மனித உரிமை 
அமைப்புகள் கடும் கண்டனம்!
 
 கொழும்பில் இருந்து நூற்றுக்கணக்கான தமிழ் மக்களை நியாயமற்ற முறையில் வெளியேற்றி 
அரசாங்கம் மிகப் பெரிய தவறை செய்திருப்பதாக சுட்டிக்காட்டி 8 மனித உரிமை அமைப்புகள் 
நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
 இந்த அமைப்புகளும் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள பகிரங்க கடிதத்தில் கொழும்பிலுள்ள சிறிய 
விடுதிகளிலிருந்து தமிழ் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டிருப்பது அம் மக்களின் 
நடமாடும் சுதந்திர மீறலெனவும், இங்கு மனிதாபிமானம் அவமதிக்கப்பட்டுள்ளதெனவும் 
சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
 
 நாட்டின் தலைவர் என்ற வகையில் இந்த நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு சாத்தியமான 
நடவடிக்கை எடுக்குமாறு உங்களிடம் கேட்டுக் கொள்வதுடன் இந்த நடவடிக்கைகளின் போது 
எவரேனும் கொழும்பிலிருந்து பலவந்தமாக அகற்றப் பட்டிருந்தால் அவர்கள் மீள 
கொழும்புவருவதற்கு வாய்ப்பேற்படுத்திக் கொடுக்குமாறும் கோருகிறோம் என இந்த இணைந்த 
கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
 
 மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான மத்திய நிலையம், மாற்றுக் கொள்கைகளுக்கான 
மத்திய நிலையம், சுதந்திர ஊடக இயக்கம், சகல வகையான இனரீதியான பாகுபாடுகளுக்கு 
எதிரான சர்வதேச இயக்கம் என்பன உட்பட 8 அமைப்புகள் கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கு 
அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
 
 கொழும்பு புறக்கோட்டை பகுதியிலுள்ள விடுதிகளில் தங்கியிருந்த வடக்கு - கிழக்கு 
மக்கள் கடந்த மே மாதம் 31 ஆம் திகதியும் வெளியேறுமாறு பலவந்தப் 
படுத்தப்பட்டிருந்தனர். அத்துடன் தகுந்த காரணங்கள் இல்லாமல் வடக்கு - கிழக்கு 
மக்களுக்கு தங்குமிட வசதிகள் வழங்கவேண்டாமென விடுதிகளின் உரிமையாளர்களுக்கு 
பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்திருந்தனர்.
 
 இதேநேரம், வெளியேற்றப்பட்ட மக்கள் அவர்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு வெளியில் 
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸில் ஏறுவதற்கு அரை மணித்தியால நேரம் மட்டுமே 
வழங்கப்பட்டதாக பல விடுதிகளின் உரிமையாளர்களும், அங்கு தொடர்ந்தும் 
தங்கியிருப்பவர்களும் எம்மிடம் முறையிட்டுள்ளனர்.
 
 அத்துடன் அழைத்துச் செல்லப்படும் சரியான இடமெதுவென்று கூறப்படாததுடன் அம் மக்கள் 
திரும்பிச் சென்று தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவே கூறப்பட்டுள்ளது 
.
 
 இந்த வெளியேற்றத்தின் செயற்பாடுகளானது பொலிஸ் மற்றும் படையினரின் தன்னிச்சையான 
தீர்மானங்களாகவே தோற்றமளிக்கின்றது. சில சந்தர்ப்பங்களின் போதும் 
தங்கியிருந்தவர்கள் கொழும்பில் இருப்பதற்கான காரணத்தை தெளிவுபடுத்தியும் தமிழர்கள் 
கொழும்பின் நிரந்தர வதிவுக்குரியவர்கள் அல்லவெனவும் அவர்களுக்கு கொழும்பில் இருக்க 
உரிமையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 இதேநேரம், இந்த வெளியேற்ற நடவடிக்கையானது, பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு 
தகுதியுடையதாக இல்லையெனவும் இது. இந்நாட்டில் வாழும் வேறுபட்ட இனச் சமூகத்தினரிடையே 
மேலும் சமநிலையற்ற தன்மையை வெகு விரைவாக ஏற்படுத்துமெனவும் அவ் அமைப்புகள் சுட்டிக் 
காட்டியுள்ளன.
 
 அத்துடன், இலங்கையிலுள்ள தமிழ் மக்களிடையே வேற்றுமையுணர்வையும் விரோதப் 
போக்குகளையும் மேலும் அதிகரிக்குமெனவும் இந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 ஐ.நா. பிரதிநிதி , தூதுவர்கள் உடனடி கவனம் 
செலுத்துவர்!
 
 இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற செயல் குறித்து உடனடியாகத் தாங்கள் கவனம் 
செலுத்தவுள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.  கொழும்பிலிருந்து தமிழ் மக்களை 
இலங்கை அரசு வெளியேற்றத் தொடங்கியுள்ளது குறித்து மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் 
கொழும்பு மாவட்ட முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட எம்.பி.யு.மான மனோகணேசன் 
இலங்கைக்கான ஐ.நா.வதிவிடப் பிரதிநிதியின் கவனத்திற்குக் கொண்டு வந்ததுடன் இது 
குறித்து ஐ.நா. தலைமையகத்திற்கும் உடனடியாக அறிவிக்குமாறும் கூறிய போதே இலங்கை 
அரசின் மனிதாபிமானமற்ற செயல் குறித்து உடனடியாகத் தாங்கள் கவனம் செலுத்தவுள்ளதாக 
ஐ.நா சபை தெரிவித்துள்ளது.
 
 கொழும்பிலிருந்து தமிழ் மக்களை இலங்கை அரசு வெளியேற்றத் தொடங்கியுள்ளது குறித்து 
மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட முன்னணியின் தலைவரும் கொழும்பு 
மாவட்ட எம்.பி.யு.மான மனோகணேசன் இலங்கைக்கான ஐ.நா.வதிவிடப் பிரதிநிதியின் 
கவனத்திற்குக் கொண்டு வந்ததுடன் இது குறித்து ஐ.நா. தலைமையகத்திற்கும் உடனடியாக 
அறிவிக்குமாறும் கூறிய போதே இலங்கை அரசின்
 
 இந்தச் செயல் குறித்து ஐ.நா. கவனம் செலுத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
 
 அத்துடன் இது குறித்து ஐ.நா உடனடியாக அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாகவும் 
இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
 
 இதேநேரம் கொழும்பிலிருந்து தமிழ் மக்களை வெளியேற்றும் அரசின் செயல் குறித்து 
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பிரிட்டிஷ் தூதர் , இந்தியத் தூதர் மற்றும் 
இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் முறைப்பாடு செய்துள்ளதாக மனோகணேசன் 
தெரிவித்தார்.
 
 கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலுமிருந்து தமிழ் மக்கள் கடத்தப்பட்டு காணாமல் 
போவது தொடர்கையில் தற்போது அவர்களை கொழும்பிலிருந்து அப்புறப்படுத்தும் 
நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளனர். இது 
குறித்து தாங்கள் உடனடியாக கவனம் செலுத்துவதாக அவர்கள் கூறியதாகவும் மனோ கணேசன் 
தெரிவித்தார்.
 
 பலவந்த வெளியேற்றம் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் 
மீதான அவமரியாதை!
 
 கொழும்பில் தங்கியிருந்த வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் அரசினால் வெளியேற்றப்பட்டமை 
தமிழ் மக்களின் அடிப்படை உரிமைக்கன பாரதூரமான அவமரியாதையாகுமென கொழும்பு பேராயர் 
டுலிப் டி.சிக்கேரா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 
 வெள்ளவத்தை மற்றும் புறக்கோட்டை பகுதிகளிலும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களில்லும் 
உள்ள தமிழ் பிரஜைகள் மீதான சுற்றிவளைப்பும் போதிய அளவு விசாரணைகளோ வளக்கங்களோ இன்றி 
வடக்கு, கிழக்கு தமிழ் பிரதேசங்களுக்கும் கொண்டு செல்லுதலும் குறித்த கவலை தரும் 
செய்திகளின் மையமாகக் கொண்டு இதை எழுதுகின்றேன்.
 
 இத்தகைய செயலானது இந்த பிரஜைகளின் மதிப்பிற்கும் அடிப்படை உரிமைகளுக்குமான 
பாரதூரமான அவமரியாதையாகும் என்பதுடன் இந்த அறிக்கைகள் உண்மையெனில் இவை 
நிறுத்தப்பட்டு அனைத்து சமூகத்தினரதும் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் 
பதிலீட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும்.
 
 ஏற்கனவே கொண்டு செல்லப்பட்ட நபர்களின் மோசமான நிலைமையினை உடனடியாக சீர்தூக்கிப் 
பார்த்து பொருத்தமான பரிகார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் மீண்டும் ஒரு 
முறை தனது சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிவகுக்க வேண்டும். கைது செய்து 
விசாரணை செய்வதற்கான தகுந்த ஆதாரங்கள் காணப்படுமிடத்து பொருத்தமான பாதுகாப்பு 
நடவடிக்கைகள் பின்பற்றப்படல் வேண்டும். இவை எல்லாவற்றிலும், எமது நாட்டின் அனைத்து 
சமூகத்தினர்களும் உரிமையான தனிப்பட்ட மற்றும் அலுவலக காரியங்களுக்காக 
பிரயாணிப்பதற்கான சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும்.
 
 சமத்துவமான அடிப்படை உரிமை மற்றும் பிரயாணிப்பதற்கும் தங்குவதற்குமான 
சுதந்திரத்தின் இத்தகைய வரம்பினை அடிப்படையாகக் கொண்டே பாதுகாப்பு 
நடவடிக்கைகளுக்கும் தற்செயலான திட்டங்களும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
 
 இந்த விடயங்கள் குறித்து உடனடியாகவும் புரிந்துணர்வுடனும் செயல்பட நான் நாட்டின் 
சனாதிபதிக்கு கோரிக்கை விடுக்கிறேன்.
 
 நன்றி: தினக்குரல்
 |