- பூங்குன்றன் -
'தனித் தமிழ்' 'தனித் தமிழ்' என்றொரு கோரிக்கை விடப்படுவது பற்றிய எனது கருத்துகளே இச்சிறு கட்டுரை. தமிழ் மிகவும் தொன்மையான வளமுள்ள மொழி. ஏனைய மொழிகளைப் போல் தமிழும் காலத்துக்குக் காலம் பல்வேறு மொழிகளிலிருந்து சொற்களை உள்வாங்கி வளர்ந்து கொண்டுதான் வந்திருக்கிறதே தவிர அழிந்து போய் விடவில்லை. இதனால்தான் தமிழ் இலக்கணத்தில் கூடத் திரிசொற்கள், திசைச்சொற்கள் மற்றும் வடசொற்களெனப் பிரிவுகள். தொன்மையான சொல்வளமுள்ள தமிழ் மொழியைப் பாவிப்பது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது. ஆனால் எத்தனையோ பல நூற்றாண்டுகளாகத் தமிழ் உள்வாங்கிப் பாவித்துக் கொண்டிருக்கும் சொற்களையெல்லாம் தவிர்த்துவிட்டு மீண்டும் வழக்கத்தில் இல்லாத ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் நிலவிய சொற்களையெல்லாம் பாவிக்க வேண்டுமா? எத்தனையோ பல கவிஞர்கள் திரிசொற்கள், வடசொற்கள், திசைச்சொற்களையெல்லாம் பாவித்து அருமையான காலத்தால் அழியாத படைப்புகளையெல்லாம் எமக்கு வழங்கியிருக்கின்றார்களே. அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட வேண்டுமா? மகாகவி பாரதி வடசொற்களை அதிகமாகத் தனது படைப்புகளில் பாவித்திருகின்றார். தனித்தமிழ் என்று அவரது
படைப்புகளையெல்லாம் தமிழ்ப்படுத்தி வாசிக்க முனைந்தால் அவற்றின் சுவை குறைந்து விடாதா?
ஏற்கனவே வழக்கில் தவிர்க்க முடியாதவகையில் தமிழா அல்லது வேற்று மொழிச் சொல்லா என்று பிரித்துக் கூறமுடியாத வகையில் தமிழுடன் பின்னிப் பிணைந்துள்ள சொற்கள் பல உள்ளன. அவற்றையெல்லாம் ஒதுக்கி விட வேண்டுமென்பதில்லை. ஆனால் இயலுமானவரையில் முயல்வதில் தவறொன்றுமில்லை. ஏற்கனவே வழக்கிலுள்ள ஏனைய மொழிச் சொற்களுக்குப் பதிலாக தற்போதும் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையிலுள்ள சொற்களிருக்கும் பட்சத்தில் அவற்றைப் பாவிக்க முனையலாம். இல்லாதவிடத்து ஏற்கனவே வழக்கிலுள்ள சொற்களையே பாவிக்கலாம். இதுபோல் புதிய சொற்களை உள்வாங்கும் போதும் புதிய சொற்களை, இயலுமானவரையில் அவற்றுக்குரிய சரியான தமிழ்ச் சொற்களை, ஆரம்பத்திலேயே உருவாக்கிப் பாவிக்கத் தொடங்கலாம். உதாரணமாக ஆரம்பத்தில் கம்யூட்டர் என்று எழுதியவர்களெல்லாம் இன்று கணினி என்று இயல்பாகவே எழுதுமளவுக்கு நிலைமை மாறி விட்டதைக் கவனிக்கவும். ஆரம்பத்தில் கம்யூட்டர் என்று எழுதுவதைத் தவிர வேறு வழியே இல்லையென்பது போலிருந்தது. ஆனாலும் உரிய தமிழ்ச் சொல்லினைக் கண்டுபிடித்துத் தொடர்ந்து பாவித்துக் கொண்டு வரும்போது இவ்விதமே புதிய சொல் வழக்கில் இயல்பாக இணைந்து விடும். இல்லாமல் ஆரம்பத்திலிருந்தே கம்யூட்டர் போன்ற வேற்றுமொழிச் சொல்லினையே பாவித்துக் கொண்டு வரத் தொடங்குவோமானால் பின்னர் உரிய சொல்லினை உருவாக்கி வழக்கிற்குக் கொண்டு வருதல் கடினமாகி விடும். 'தனித்தமிழ்' ஆர்வலர் ஒரு சிலரைத் தவிர ஏனையவர்கள் அத்தகைய சொற்களைப் பாவிக்க முனைய மாட்டார்கள்.
தனித்தமிழ் என்று வறுபுறுத்தும் பலர் விடும் தவறுகளில் முக்கியமான தவறென்னவென்றால் பலருக்கு வழக்கிலுள்ள தமிழ்ச் சொல்லென்ன வேற்று மொழிச் சொல்லென்ன என்பது பற்றிய போதிய தெளிவின்மைதான். இவ்விதம் வற்புறுத்தும் ஒருவர் தன்னைப் பொறுத்த வரையிலாவது முன்மாதிரியாக இருக்க முயலவேண்டும். அதிகமாக வட, திரி, திசைச் சொற்களையும் பாவித்துக் கொண்டு தனித்தமிழ் தனித்தமிழென்று தீவிரமாக வற்புறுத்துவது கேலிக்குரியதாக மாறிவிடும் அபாயமுமுண்டு. உதாரணமாக 'டொராண்டோ'விலிருந்து வெளிவருமொரு இத்தகைய பத்திரிகையொன்றின் அண்மைய பதிப்பினை (3-11-2006) எவ்வளவு தூரத்திற்கு அப்பத்திரிகை தங்கள் கொள்கையினைக் கடைப்பிடிக்கின்றார்களென்று பார்த்தால் ஆச்சரியப்படத்தக்க வகையில் தமிழற்ற சொற்களை அவர்கள் பாவிப்பது புரிந்தது. 'நட்பான சேவைக்கு' என்று விளம்பரங்களுக்குப் பாவிக்கின்றார்கள். சேவைக்குப் பதிலாகத் 'தொண்டு' என்று பாவிக்கலாமல்லவா. அப்பகுதியிலுள்ள விளம்பரமொன்றில் ' ..பட்டதாரியும் அபிவிருத்தி திட்டமிடல் பணியாளராக..' என்றொரு சொற்றொடர் வருகின்றது. இங்குள்ள 'அபிவிருத்தி' ஒரு வடசொல். 'நகர அவைத் தேர்தல்', 'நகர சபைத் தேர்தல்' என்றெல்லாம் பாவிக்கின்றார்கள். இவற்றில் வரும் நகரமும் வடசொல். சபையும் வடசொல். சபைக்குப் பதிலாக அவையென்று பாவிக்கலாம். 'நகரம்' என்ற சொல் இப்பத்திரிகையில் பல இடங்களில் பாவிக்கப்பட்டிருகின்றது. உதாரணமாக 'நகரமே அதிர்ந்தது', 'மாநகரசபை' , 'நகரத்தந்தை' போன்ற சொற்களைக் குறிப்பிடலாம். இதுபோல் 'அந்தக் கிராமத்தை' என்று 'கிராமம்' என்ற வடசொல்லினையும் பாவித்திருக்கின்றார்கள்.
இன்னுமொரு நேர்காணலில் 'அந்நியப்படுத்துகிற முயற்சி', 'தேசிய நாடகம்', 'அஙகீகாரம்', 'நேர்காணல் பிரகாசம் பெறுகிறது', என்றெல்லாம் பாவித்திருக்கின்றார்கள். உண்மையில் இவற்றில் 'அந்நியம்', 'பிரகாசம்' 'அங்கீகாரம்' இவையெல்லாம் வடசொற்களே. 'தேசத்திலிருந்து' உருவான 'தேசியம்' மட்டுமென்ன தமிழ்ச் சொல்லா? வடசொல்தானே. இன்னுமொரு செய்திக் குறிப்பில் 'நோயாளி காவு வாகனங்கள் (அம்புலனஸ்)' என்று பாவித்திருக்கின்றார்கள். இதில்வரும் 'வாகனம்' என்பது வடசொல். இதற்குப் பதிலாக 'ஊர்தி' என்று பாவித்திருக்கலாம். இதுபோல் இன்னுமொரு சொல். 'முகாம்'. முகாம் என்பது உருதுச்சொல். தடுப்பு முகாம், இராணுவ முகாம் போன்ற சொற்களை இப்பத்திரிகை மிகுதியாகவே பயன்படுத்துகின்றது. 'நூல் அறிமுகம்' என்றொரு பகுதி. 'தன்னுடைய வாதத்தை ஆரம்பித்து', 'அதிகாரத் தலைப்பை' 'எதிரிகளின் சதிகள்', 'அக்கறை காட்டியது' என்றெல்லாம் பாவித்திருக்கின்றார்கள். இவற்றில் வரும் 'அதிகாரம்', 'சதி', 'வாதம்' இவையெல்லாம் வடசொற்கள. 'அக்கறை' கன்னடச் சொல். 'சுயேட்சை' என்றொரு சொல். சுய என்பது தமிழ்ச் சொல்லா? வடசொல்லல்லவா. இன்னுமொரு செய்திக் குறிப்பில் 'மரண ஓலம்' என்றொரு தொடர் வருகின்றது. இதில்வரும் 'மரணம்' வடசொல். 'மரணத்தையே மரணிக்க', 'மரணித்த' என்று மேலும் பலவிடங்களில் மரணமென்ன சொல்லினைக் காணக்
கூடியதாகவிருக்கின்றது. குழந்தைகளுக்கான குட்டிக் கதையொன்றில் 'பாவம் நம் எஜமானர்' என்றொரு தொடர். இதில் வரும் 'எஜமான்' உருதுச்சொல். 'சபதமெடுக்கும் காலம்' என்றொரு கட்டுரைத் தலைப்பு. இதில் வரும் 'சபதம்' என்பது வடசொல். சூளுரையென்று பாவித்திருக்கலாம். 'என்று தணியும் இந்த தாகம்' என்றொரு தொடர். இதில் வரும் 'தாகம்' என்பதும் வடசொல்லே. இதற்குரிய சரியான தமிழ்ச் சொல்: வேட்கை. 'எம் சந்ததியினருக்கு' என்று பாவிக்கின்றார்கள். இதில் வரும் 'சந்ததி' என்பதும் வடசொல்லே. இப்பத்திரிகையில் மிக அதிக இடங்களில் 'சுதந்திரம்' என்ற வடசொல் பாவிக்கப்பட்டிருக்கின்றது. விளம்பரங்களில் 'வாடகைக்கு விடப்படும்' என்று தாராளமாகவே பாவிக்கின்றார்கள். இதில்வரும் 'வாடகை'யென்பது ஒரு திசைச்சொல். தெலுங்குச் சொல். குடிக்கூலி என்று தமிழ்படுத்தலாம். மேலும் தமிழர் நிர்வாகம் என்று பாவித்திருக்கின்றார்கள். இதில் வரும் 'நிர்வாகம்' தமிழ்ச் சொல்லேயல்ல. வடசொல்தான். மேலும் இப்பத்திரிகைய்ல் மிகவும் அதிகமாகப் பாவிக்கப்படுமொரு வடசொல்: 'சுதந்திரம்'. இவை தவிர 'வேண்டாம்' (தமிழ் இலக்கணப்படி வேண்டா என்றுதான் வரவேண்டும்), 'அடமானம்' (அடைமானம்) என்றெல்லாம் இலக்கண வழுவுள்ள சொற்கள் சிலவற்றையும் ஆங்காங்கே காணமுடிகிறது.
எம்மைப் பொறுத்தவரையில் இயலுமானவரையில் தனித்தமிழில் எழுத முயல்வது நல்லதே. ஆனாலும் அதனைத் தீவிரமாக்கித் தனித்தமிழ் என்று கட்டாயப்படுத்துவதில் உடன்பாடில்லை. நம்முன்னோர்களுக்கும் அதில் உடன்பாடில்லை. அதனால்தான் அவர்கள் தமிழ் இலக்கணத்தில் திசை, திரி மற்றும் வடசொற்களெனப் பிரிவுகளை உருவாக்கித் தமிழுக்குள் உள்வாங்கிக் கொண்டார்கள். 'சுதந்திரம்', 'தேசம்', 'நகரம்', 'கிராமம்', 'வயது', 'கீதம்', 'மாதம்' , பிம்பம், பந்தபாசம், பிரார்த்தனை, பிரியம், பாலகன், பாரம், பெளர்ணமி, மாமிசம், மோசம், மோட்சம், மெளனம், புத்திரன், பரிசோதனை, துரோகம், தர்மம், தரிசனம், தந்திரம், தேதி, திருப்தி, துரிதம், சேனாதிபதி, தர்க்கம், நட்சத்திரம், சாகசம், சாதனை, பிரயாணம் என்றெல்லாம் நாம் நூற்றுக் கணக்கான வடசொற்களை அவை வடசொற்களா அல்லது தமிழ்ச்சொற்களா என அறியாத வகையில் தாராளமாகவே (கவனிக்க தாராளமென்பதொரு தெலுங்குச் சொல்) பாவித்து வருகின்றோம். மேலும் தயார் (உருது), சந்தா (உருது), காகிதம் (உருது), அசல் (உருது), மைதானம் (உருது), புகார் (உருது), ராஜினாமா (உருது), ஜாதி (உருது), சாவி (போர்த்துக்கீய), ஜன்னல் (போர்த்துகீயம்), பாதிரி (போர்த்துகீயம்) போன்ற வேற்றுமொழிச் சொற்களையும் பயன்படுத்துகின்றோம். இவற்றையெல்லாம் பாவிக்கக் கூடாதென்றால் பாரதியாரின் 'என்று தணியுமிந்த சுதந்திர தாகம்' என்பது போன்ற சொற்றொடர்களையெல்லாம் தமிழ்ப்படுத்த வேண்டி வந்துவிடும் அபாயமுண்டு. அதே சமயம் 'தனித்தமிழ்' 'தனித்தமிழ்' என்று வறுபுறுத்துபவர்கள் நிச்சயமாக மேலுள்ளவாறு அதிக அளவில் வட சொற்களையெல்லாம் பாவித்துக் கொண்டு 'தனித்தமிழ்' என்று வலியுறுத்துவதும் தவறு. அதே சமயம் இவ்விதம் மாற்றுமொழிச் சொற்களெல்லாவற்றையும் தமிழில் எழுதித்தானே பாவிக்கின்றோம். இந்நிலையில் இதனால் தமிழ் அழியுமென்றும் நாம் நினைக்கவில்லை.