புதினம்.காம்!
ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறோம்:
ஜெயலலிதா
சுயநிர்ணய உரிமை வேண்டி ஈழத் தமிழர்கள் நடத்தும் தார்மீக போராட்டத்தை நாங்கள்
முழுமையாக அங்கீகரிக்கிறோம் என்று
தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகத்தின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெ.ஜெயலலிதா
தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்று வியாழக்கிழமை அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இலங்கை தமிழர் விவகாரத்தில் கருணாநிதியின் கேள்வி-பதில் விளக்கமும், செயல்பாடும்
வேடிக்கையாக உள்ளன.
தன்னுடைய மைனாரிட்டி அரசின் செயல்படாத தன்மையையும், கடமை தவறிய முறைகளையும்,
குறைகளையும் யாராவது
சுட்டிக்காட்டினால், அதற்காக மற்றவர்கள் மீது சேற்றை அள்ளி வீசி பிரச்சினையில்
இருந்து நழுவி தப்பித்துக்கொள்ளும் தந்திரத்தில் இறங்கிவிடுகிறார் கருணாநிதி.
இலங்கை கடற்படையினால் இந்திய மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள்; உள்நாட்டு
சண்டை என்ற பெயரில் இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள்.
இந்த விவகாரத்தில் முதலமைச்சர் கருணாநிதி சிறிதும் அக்கறையின்றி இருக்கிறாரே என்று
கேள்வி எழுப்பினேன். தனது குடும்பத்தாருக்கும், தனது கட்சி விசுவாசிகளுக்கும்
செல்வம் கொழிக்கும் பதவிகளைப் பெற, மத்திய அரசில் தனக்கு இருக்கும் செல்வாக்கை
தயக்கமின்றி பயன்படுத்துகிறார்; இந்திய அரசை மிரட்டுகிறார். ஆனால், இலங்கைத்
தமிழர்கள் பிரச்சினையில், சென்னையில் உட்கார்ந்து கொண்டு அறிக்கை வெளியிடுவதோடு
நின்றுவிடுகிறார் என்பதை நான் சுட்டிக்காட்டியிருந்தேன்.
என்னுடைய அறிக்கையினால், எனது குற்றச்சாட்டினால், "தமிழினத் தலைவர்" என்று தனக்குத்
தானே வழங்கிக் கொண்ட பட்டத்திற்கு
ஆபத்து ஏற்படுவதைக் கண்டு நிலைமையை சமாளிக்க, கருணாநிதி என் மீது குற்றம்
சுமத்துகிறார். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நான் நிலையில்லாமலும், மனம்
போனபடியும் பேசுவதாகப் பழி சுமத்துகிறார்.
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் என்னுடைய நிலைப்பாடும், அனைத்திந்திய அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடும் எல்லோருக்கும் நன்கு தெரிந்ததே.
1. இலங்கையின் மற்ற குடிமக்களைப் போல தமிழர்களும் சம உரிமையுள்ள குடிமக்கள்.
அவர்கள் யாருக்கும் இரண்டாந்தரமானவர்கள் அல்ல.
2. சட்டத்தின் முன் சமத்துவம் வேண்டியும், கல்வியில், வேலை வாய்ப்பில் சமத்துவம்
பெறவும், இலங்கைத் தமிழர்கள் நடத்தும் நெடிய போராட்டத்தை நாங்கள் முழுமையாக
ஆதரிக்கிறோம்.
3. சுய நிர்ணய உரிமை வேண்டி அவர்கள் நடத்தும் தார்மீக போராட்டத்தை நாங்கள்
முழுமையாக அங்கீகரிக்கிறோம்.
4. இலங்கையில் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு, தமிழர்கள் தங்களுக்கென
சுயாட்சி உரிமையுள்ள தமிழ்த் தாயகம் உருவாக்கிக் கொள்ள அவர்களுக்கு இருக்கும்
வேட்கையை நாங்கள் புரிந்து, ஏற்றுக் கொள்கிறோம்.
பகை மூண்டு, திசை மாறிப்போன ஆயுதப் போராட்டத்தினால், பல்லாயிரம் தமிழர்கள் அத்தகைய
பகையில் கொன்று குவிக்கப்படுவதைக் கண்டு வேதனைப்படுகிறோம். அதற்குக் காரணமான ஆயுதப்
போராட்டத்தை எதிர்க்கிறோம். அத்தகைய சகோதரப் பகையினால் மூண்ட ஆயுதப் போரின்
விளைவாக, இந்தியத் திருநாட்டின் முன்னாள் பிரதமர் படுகொலை
செய்யப்பட்டதை நாங்கள் கண்டிக்கிறோம். ஏற்க மறுக்கிறோம். எதிர்க்கிறோம். தமிழர்
விடுதலைக்காகப் போராடிய எண்ணற்ற தலைவர்கள் இலங்கை மண்ணிலேயே கொன்று
குவிக்கப்பட்டதை, பல தமிழ்த் தலைவர்கள் வெடிகுண்டு வீசி பொசுக்கப்பட்டதை ஏற்க
மறுக்கிறோம். எதிர்க்கிறோம்.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இரு வேறு பக்கங்கள் உள்ளன என்பதை தெளிவுற உணர
வேண்டும். சுயநிர்ணய உரிமைக்கென்ற
தமிழர்களின் போராட்டம் என்பது ஒருபுறம்; ஆயுதம் ஏந்தியவர்கள் பயங்கரவாதத்தில்
ஈடுபடுவது என்பது மறுபுறம். முதலாவதை
ஆதரிக்கிறோம். இரண்டாவதை கடுமையாக எதிர்க்கிறோம். தமிழர்களின் சுய உரிமைப்
போராட்டத்திற்கு எங்கள் ஆதரவு, ஒத்துழைப்பு, நல்லெண்ணம் என்றைக்கும் மாறாதது.
பயங்கரவாதச் செயல்களை, ஆயுத மோதல்களை, அதிலும் அத்தகைய மோதல்களால் இந்தியதியாவின்
சட்டம் ஒழுங்கும், பொது ஒழுங்கும், அமைதியும், இறையாண்மையும் சீர்குலைவதை ஒருநாளும்
ஏற்க முடியாது. தமிழ் பயங்கரவாதத்தை எதிர்க்கிறோம். அதில் இரு வேறு கருத்துகளுக்கு
இடமில்லை.
தனது சுயநல நோக்கத்திற்காக ஒன்றோடு ஒன்றை குழப்பி, எங்கள் நிலைப்பாட்டைக்
கொச்சைப்படுத்த தனக்கே உரித்தான பாணியில்
கருணாநிதி முயல்கிறார்.
மத்திய அரசில் தனக்குள்ள செல்வாக்கை, இலங்கைத் தமிழர்கள் நலன் காக்க கருணாநிதி
பயன்படுத்த வேண்டும்; பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை அதிபருடன் பேசி, தமிழர்கள்
மீதான இனப்படுகொலை குறித்த இந்தியாவின் கவலையைத் தெரிவித்து, அதனை நிறுத்துமாறு
வலியுறுத்த வேண்டும் என்று கருணாநிதி பிரதமரை கேட்டுக் கொள்ள வேண்டும் என்று தான்
நான் கேட்டேன்.
நான் இப்படி வலியுறுத்திக் கூறியதால், "பிரதமருக்கு எல்லோரும் தந்தி அனுப்புங்கள்"
என்று ஒரு அதிமேதாவித்தனமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் கருணாநிதி. இந்த
அறிவிப்பு மக்களிடம் எடுபடவில்லை, அவ்வாறு செய்ய மக்கள் தயாராக இல்லை என்பது
தெரிந்ததும், மத்திய கூட்டணி அரசை விட்டே வெளியேறுவோம், அதைப் பற்றியும் யோசிப்போம்
என்று பொதுக்கூட்ட மேடையில் பேசுகிறார்.
டி.ஆர். பாலுவுக்கு கப்பல் போக்குவரத்துத் துறையை தரவில்லை என்பதால், 2004 ஆம்
ஆண்டு மே மாதம் டில்லிக்கே சென்று, ஏழு
திமுக அமைச்சர்களையும் பதவி ஏற்க வேண்டாம் என்று உத்தரவிட்டவர் தான் கருணாநிதி.
தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியின் தலைவர் திரு. கே. சந்திரசேகர் ராவ், தனக்கு
ஒதுக்கப்பட்ட கப்பல் போக்குவரத்துத் துறையை விட்டுக்கொடுக்க முன்வந்து, அன்றைக்கு
டி.ஆர். பாலுவுக்கு அந்தத்துறை ஒதுக்கப்பட்டதால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு
காப்பாற்றப்பட்டது. இல்லையேல் புதிதாக அமைக்கப்பட்ட மத்திய அரசு சில
நாட்களுக்குள்ளாகவே கவிழ்ந்திருக்கும். தனது சுயநலம் என்றால், கருணாநிதி எதுவரை
செல்வார் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. ஆனால், தமிழர்களின் நலன் என்று
சொன்னால், கருணாநிதி பொதுக்கூட்ட மேடைகளில் முழங்குவார். எல்லோரையும் தந்தி
கொடுக்கச் சொல்வார். தமிழ் மக்கள் நலனில் அவருக்கு உள்ள அக்கறை இவ்வளவு தான்!
தற்போது இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் யுத்தத்தின் காரணமாக, ஆயிரக்கணக்கான
அப்பாவி தமிழர்கள் இடம்பெயர்ந்து, வசிக்க இடமில்லாமல், அவர்களுடைய சொந்த நாட்டிலேயே
அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். உண்ண உணவு, தங்க இருப்பிடம், மருந்து ஆகியவை
இல்லாமல் வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இலங்கை இராணுவத்தின் உக்கிரத் தாக்குதலுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளும் கூட
ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். பல மாதங்களாக இந்த நிலைமை தான் இலங்கையில் நிலவுகிறது.
தந்திகள் அனுப்புவதனாலோ, அல்லது இந்தியாவில் உள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றும்
கீழ்நிலை அலுவலரை அழைத்து கண்டனம் தெரிவிப்பதனாலோ, பாதிக்கப்பட்டிருக்கும்
ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கு எந்த பயனும் இல்லை. மத்தியிலும், மாநிலத்தில் ஆட்சி
அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு, வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கை தமிழர்கள்
குறித்து எள்ளளவாவது கவலை இருக்க வேண்டாமா?
உணவு, உடை, இருப்பிடம், மருத்துவப் பொருட்கள் இல்லாமல் அவதிப்பட்டுக்
கொண்டிருக்கும் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு
நிவாரணப் பொருட்களை திரட்டித் தர மத்திய அரசு முன்வர வேண்டும் என்று அனைத்திந்திய
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும், தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதி
என்ற முறையிலும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: புதினம்.காம்
அக்டோபர் 10, 2008.
*********************
மறியல் போராட்டம் நடத்திய வைகோ உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது- அ.தி.மு.க.
வாழ்த்து
ஈழத்தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்து தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் இன்று
வெள்ளிக்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.
சென்னை காயிதே மில்லத் கல்லூரி அருகில் இருந்து ம.தி.மு.க. தொண்டர்கள் சுமார் 2
ஆயிரம் பேர் இந்திய அரசின் தமிழக நிர்வாக அலுவலகமான சாஸ்திரி பவன் நோக்கி ஊர்வலமாக
செல்ல முடிவு செய்திருந்தனர்.
இந்த மறியல் போராட்டத்துக்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை என்றாலும்
தடையை மீறி போராட்டம் செய்ய
ம.தி.மு.க. முடிவு செய்தது.
இதனால் காயிதே மில்லத் கல்லூரி அருகில் இன்று அதிகாலையிலேயே பெரும் எண்ணிக்கையில்
காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
பிற்பகல் 12:00 மணிக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அங்கு சென்றடைந்தார்.
ஆயிரக்கணக்காக திரண்டிருந்த ம.தி.மு.க. தொண்டர் மத்தியில் வைகோ பேசியதாவது:
உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் குமுறிக் கொண்டிருக்கிறது. ஈழத்தில் நடக்கும்
இனப்படு கொலைக்கு இந்திய இராணுவமும்
பின்னணியில் இருப்பது வேதனையான விடயம்.
கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வந்ததில்
இருந்து சிங்கள இராணுவம் இந்தியாவுடன்
ஒப்பந்தம் போட துடித்தது. இதற்கு எல்லாம் எதிர்ப்பு தெரிவித்ததால் ஒப்பந்தம்
கையெழுத்து ஆகவில்லை.
ஆனாலும் அந்த ஒப்பந்தத்தில் உள்ள சரத்துக்கள் நடைமுறையாகிக் கொண்டிருக்கின்றது.
இந்திய அரசு ராடர்களை சிறிலங்காவுக்கு கொடுத்து உதவி உள்ளது. சிங்கள இராணுவத்துக்கு
பயிற்சி கொடுத்துள்ளனர். தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா இராணுவம் செயற்படாது என்று
நம் பிரதமர் வாக்குறுதி கொடுத்தார். ஆனால் அவை அனைத்தும் மீறப்பட்டுள்ளது.
இலங்கையில் பள்ளி செல்லும் குழந்தைகள் கூட குண்டு வீசக் கொல்லப்படுகிறார்கள்.
காட்டில் பதுங்கி வாழும் தமிழக மக்களுக்கு
உணவு, மருந்து போன்றவை கிடைப்பது இல்லை.
கடல் எல்லையில் நமது நாட்டு மீனவர்களும் சிறிலங்கா இராணுவத்தால் சுடப்படுகிறார்கள்.
இந்திய கடல் எல்லைக்குள் வந்து சுடும் அளவுக்கு அவர்களுக்கு தைரியம் வந்து விட்டது.
மத்திய அரசில் பங்கு வகிக்கும் தி.மு.க. ஈழத்தில் சாவும் ஒவ்வொரு தமிழனுக்கும்
பொறுப்பு ஏற்க வேண்டும். இலங்கையில் 265 இந்திய இராணுவத்தினர் பின்னணியில் இருந்து
செயற்படுகிறார்கள்.
இது பற்றி பிரதமருக்கு நான் விரிவாக கடிதம் எழுதினேன். தமிழர்கள் சாவுக்கு நீங்கள்
பொறுப்பு ஏற்க வேண்டும் என்று எழுதினேன். இதற்கு பிரதமர் எனக்கு பதில் கடிதம் எழுதி
உள்ளார். உங்கள் கடிதம் என் மனதை புண்படுத்தி விட்டது என்று குறிபிட்டுள்ளார்.
இன்னும் சிறிலங்கா இராணுவத்தினர் இந்திய மீனவர்களை தாக்கத்தான் செய்கிறார்கள்.
கருணாநிதி தந்தி கொடுக்க சொல்கிறார். அனைத்துக்கட்சி கூட்டம் என்கிறார். இது
தி.மு.க. நடத்தும் நாடகம். இலங்கை ஒருமைப்பாட்டை காக்க வேண்டும் என்பதற்காக இந்திய
ஒருமைப்பாட்டை இழந்து விடாதீர்கள்.
தமிழர்கள் இன்று ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கிறார்கள். ஈழத்தமிழர்களுக்கு
என்றென்றும் துணை நிற்போம். நம் காலத்திலேயே தமிழ் ஈழம் மலரும் என்றார் அவர்
அ.தி.மு.க. சார்பில் இந்த போராட்டத்தில் அமைப்பு செயலாளர் முத்துசாமி வாழ்த்து
தெரிவித்துப் பேசினார். தமிழர் தேசிய
இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க. அவைத் தலைவர் கண்ணப்பன் உள்பட பலர்
வாழ்த்துரையாற்றினர்.
இதைத் தொடர்ந்து ம.தி.மு.க. தொண்டர்கள் வைகோ தலைமையில் அணி, அணியாக மறியலுக்கு
புறப்பட்டனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். வைகோவும்
கைது செய்யப்பட்டார். அவர் தொண்டர்களுடன் காவல்துறை வாகனத்தில் ஏற்றி அழைத்து
நன்றி: புதினம்.காம்
அக்டோபர் 10, 2008 |