- தாஜ்... -
'வெங்கட் சாமிநாதன்' நவீனஇலக்கியப் பரப்பில் வெகுவாக அறியப்படும் பெயர். கலைநுட்ப ஆக்கங்களை விமர்சனச் சகிதமாய் வாசகர் பார்வைக்கு வைப்பதில் தமிழில் இவர் மாதிரி, இவர் மட்டும்தான். வயதும் அனுபவமும் அப்படி! இசை, சிற்பம், ஓவியம், தொன்மை சார்ந்த கூத்துவகைகள், நவீனநாடகம், மற்றும் கலைநுட்பம் கொண்ட உலக சினிமாவுடனான பரிச்சியம் என்று எல்லாவற்றிலும் ஈடுபாடு கொண்டாலும், தமிழின் கலை இலக்கியம்தான் இவருக்கு தாய்க்களம். நவீனஇலக்கியம் சார்ந்த எல்லா மூத்தப் படைப்பாளிகளின் படைப்புகளும் இவரது விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.தாண்டி, வள்ளுவரேகூட ஒருதரம் இவரது வளையத்திற்குள் சிக்கித் திணறி இருக்கிறார். இவற்றைக் குறித்த சர்ச்சைகளும், வசவுகளின் கொடுக்கல் வாங்கலும் ஒரு நேரம் இலக்கியப் பதிவுகளில் ஏராளம். இடையில், சுமார் பதினைந்து வருடங்களாக தமிழில் எது வும் எழுத மறந்த இவர், சமீப ஆண்டுகளாக மீண்டும் தொடர்கிறார். சர்ச்சை எழுப்பியப்படியே வலம் வந்த இவரது முந்தைய எழுத்துப் பாச்சலும், அதன் முறுக்கும் இப்பொழுது இல்லை.
எனக்கு இந்த பெரியவர் மீது மரியாதை உண்டு. அவர் எழுதிய எழுத்துகள் அனைத்தையும் பெரும்பாலும் வாசித்திருக்கிறேன். அதன்மீது என்னிடத்திலும் விமர்சனம் உண்டென்றாலும், அனுபவம்கூடிய அவரின் நுட்பம் சார்ந்த எழுத்து எனக்கு மலைப்பையே தரும். ஐந்து வருடங்களுக்கு முன்னால், கணையாழி அலுவலகத்தின் வாசலில் வைத்து அவரிடம் நான் சிரம்தாழ்த்தி வணக்கம் செய்ததற்குக்கூட அந்த மலைப்புக்காகத்தான்.
கீழே எழுதப்பட்டிருக்கும் கட்டுரையில், அவரை நான் நேர்நோக்கிப் பலவும் பேசியிருக்கிறேன்/ கேட்டுமிருக்கிறேன். அத்தனை யும் அவர் மீதான என் ஆதங்கமே. அவர் குறித்து மேலே நான் வாசித்திருக்கும் பாராட்டுரைக்கும் கீழே என் கட்டுரைக்கும் பெரிதாகச் சம்மந்தமில்லை, அவரது உயர்வுடன் ஒப்பு நோக்கி மட்டும் பார்க்கிறேன். அவ்வளவுதான்.
'Thursday August 3, 2006' திண்ணை வலைப்பதிவில், பி.கே.சிவகுமாரின் 'அட்லாண்டிக்குக்கு அப்பால்' கட்டுரைத் தொகுப்புக்கு பெரியவர் வெங்கட்சாமிநாதன் செய்திருந்த புத்தக மதிப்பீட்டில் காணகிடைத்த அவரது மததுவேஷ சான்றுகளுடன், கிளைக்கிறது அதன் பின்னேயென் வரிகள்.
***
நேசகுமார் விஷயத்தில், நேசகுமாரின் கிண்டலுக்கும் கோபத்துக்கும் தூண்டுதலாக இருந்த காரணிகளை சிவகுமார் மறந்து விடுகிறார். அந்தக் காரணிகளில் சில நேற்று முளைத்தவை எனவும் உண்டு. நூற்றாண்டுகள் பல நீளும் வரலாறும் உண்டு. "உண்மை 7-ம் நூற்றாண்டு இறைவாக்கிலேயே சொல்லப்பட்டு விட்டது. அதன் பிறகு முற்றுப் புள்ளிதான்" என்று ஒரு குரல் மொராக்கோவிலிருந்து ·பிலிப்பைன்ஸின் தெற்குப்பகுதி வரை கேட்கப்பட்டால், என்ன செய்வது?. இதை ஒப்புக்கொள்ளாதவர் எல்லாம் கா·பிர், அதற்கு அடுத்த நடவடிக்கை ஜெஹாத் தான் என்றால் என்ன செய்வது? இந்த கா·பிர்களை ஒழித்துக் கட்டினால், ஜன்னத்தில் மதுக்குடத்துடன் தேவகன்னிகைகள் சூழ்ந்துவிடுவார்கள் என்று நம்பினால் என்ன செய்வது? ஸுன்னிகளுக்கு ஷியாக் களும் கா·பிர், அஹ்மதியாக்களும் கா·பிர், முஜாஹித்துகளும் கா·பிர், என்றால் என்ன செய்வது? இவர்கள் எல்லோருக்கும் ஸூ·பிகள் கா·பிர் என்றால் என்ன செய்வது? அப்படி இருக்க செக்யூலரிசம் போதிக்கப்படும் ஒரு ஹிந்துவாகத் தற்செயலா கப் பிறந்துவிட்டவன் என்ன செய்வான்? ஒரு முஸ்லீம் நண்பரைக் கண்டால், 'ஸாகேப்', '"ஜனாபேவாலி, ஸலாம் ஆலே கும்" என்று வாழ்த்த நான் தயார் தான். விடிகாலையில்; ஒரு நாள் எம்.எஸ் சுப்புலக்ஷ்மியின் விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்டால், மறு நாள் காலை அபீதா பர்வீனின் ஸூ·பி பாட்டுக்கள் கேட்க நான் தயார். கேட்கிறேன். விரும்பி, ரசித்துக் கேட்கிறேன். "தமா தம் மஸ்த் கலந்தர்" அவர் பாடும்போது பரவசத்தில் மயிர் சிலிர்த்துப் போகிறது. ஆனால் "அது பத்தாது, உன் பெயரை அப்துல் ஸமத் என்று மாற்றிக்கொள். கல்மா சொல்லு "லா இல்லாஹ் இல்லில்லாஹ், முகம்மது ரஸூல் அல்லாஹ்",சுன்னத் பண்ணிக் கோ" என்று மிரட்டினால் என்ன செய்வது? பாரதி "அல்லா அல்லா" என்று அரற்றினான். பாடினான். அதெல்லாம் சரி, ஆனால், "எங்கள் குழந்தைகள் பள்ளியில் வந்தேமாதரம் பாடாது. அது எங்கள் மதத்திற்கு விரோதம்" என்று சொல்லும் மதத்தலைவரை, அரசியல் தலைவரை, என்னென்பது? "முதலில் நீ ஒரு முஸல்மான். மற்ற அடையாளங்கள் எல்லாம் அதற்குப் பின்னர் தான்" என்று ·பட்வா முல்லாக்களிடமிருந்து பிறந்தால் என் நண்பன், முஸ்லீமானவன் என்ன செய்வான்? ஸெக்யூலரிஸம் ஒரு புறம் அடைக்கப்பட்ட பாதையாகாதே (cul-de-sac). - வெங்கட் சாமிநாதன்.
***
சமீப காலமாக, விமர்சனம் ஆனாலும் / புத்தக மதிப்பீடு ஆனாலும் பெரியவர்.வெ.சா.வின் எழுத்தில் அவர்தான் பெரிதாகத் தெரிகிறார். சிவாஜி நடித்த 'ராஜ ராஜ சோழன்' திரைப்படத்திற்கு திரு. சுஜாதா எழுதிய விமர்சனம் ஒன்றில் "ராஜ ராஜ சோழனை ப் பார்க்கப்போய் சிவாஜியைப் பார்த்துவிட்டு வந்தேன்" என்றிருந்தார். அது மாதிரி இப்பொழுதெல்லாம் வெ.சா.வின் எழுத்தில் வெ.சா.தான் தெரிகிறார். வயதுகூடிய நிலையில் தழைக்கும் மிடுக்கு, கலைஇலக்கிய ஈடுப்பாட்டிலான மேதமை, அனுபவங்களின் செருக்கு என பலவும் திரண்டுமிளிர, எழுதும் பொருளைப்பற்றி ஏனோதானோ என்பதாகவே நிறைவுச் செய்கிறார்.
அவர் எழுத்தில் பிரதிபலிக்கும் இன்னும் சில 'ஸ்பெஷல்' கூறுகளும் உண்டு. அது அவரது எல்லா கட்டுரையிலும் தவறாது காண கிடைக்கும் சங்கதி. திராவிட இயக்கங்களையும் தமிழகத்தையும் சலித்துக் கொள்வது, அதன் தலைவர்களை பூச்சிக்கு சமமாகப் பார்ப்பது, தமிழின் தொன்மை குறித்து பேசுபவர்களைப் பிறாண்டுவது, சமஸ்கிருதத்தை இரண்டாம் நிலையில் வைத்து மதிப்பிடுப வர்களை உதாசீனப்படுத்திப் பேசுவது, கம்யூனிச சார்பு கொள்ளும் எழுத்தாளர்களைக் கடித்துத் துப்புவது. வல்லிக் கண்ணனை யும், தி.க.சி.யையும் தனது எல்லாக் கட்டுரைகளிலும் இழுத்துவைத்து சாத்தாவது என்பதாக அந்த பட்டியல் நீளும்.
இதெல்லாம் தாண்டி, அவர்எழுத்தில் இன்னொரு விசேஷக்கூறும் சமீபகாலமாகத் தென்படுகிறது. அது அவரது ஆழ்மனக்கிடை க்கையின் வெளிப்பாடாக முகம் காட்டுகிறது. இஸ்லாமியர்களைக் குறித்து, இப்பொழுது அவரிடம்தென்படும் துவேஷத்தை முன் எப்பவும் நான் கண்டதில்லை. பி.கே.சிவகுமாரின் 'அட்லாண்டிக்குக்கு அப்பால்' தொகுப்பிற்கு வெ.சா. புத்தக மதிப்பீடு செய்திருக்கிற கட்டுரையில், அவரது அந்த ஆழ்மனக்கிடக்கை நிதர்சனமாய் காட்சியாகியிருக்கிறது. நேசகுமாருக்காக இவர் பரிந்து கொண்டு வரும் நடையின் நழுவலில், நமக்கு அந்த தரிசனம் வாய்த்திருக்கிறது.
நேசகுமார், திண்ணையில் அவ்வப்போது பலதும் குறித்து கட்டுரைகள் எழுதுபவர். அவைகளில் அவரது 'Anti - Islamic' கட்டுரைகள் மிகவும் பிரபல்யம். அவரை, அவரின் 'Anti - Islamic' சிந்தனைகள் பொருட்டு பி.கே. சிவகுமார் தனது கட்டுரை ஒன்றில் தீர மறுத்திருக்கிறார். மறுப்பு கொஞ்சம் பலமானது. இது வெ.சா.வுக்கு வலிதருவதாகவே தெரிகிறது.
"பகுத்தறிவுப் பகலவர்களது நாஸ்திகத்தின் குணம் புரிந்த, கம்பனை வாசிக்கிற, திராவிடக் கட்சிகளின் பொய்மைகளை உணர்ந்த, தனித்தமிழின் போலித்தனமும் கருணாநிதியின் சந்தர்ப்பவாத அரசியலும் தெரிந்த, இன்னும் அவர்களின் மாய்மாலங்கள் எல் லாமும் தெளிந்த சிவகுமார்" முன்பின் யோசிக்காமல் நம்ம நேசகுமாரை மறுக்கலாமா? என்கிற அர்த்தத்தில் அவர் சிணுங்கியிருக்கிறார். "நேசகுமார் புனைபெயரில் எழுதுகிறவர்" என்பதான உண்மையையும் சிவகுமார் போட்டு உடைத்து விட்டார். பெரியவர் சிணுங்காமல் வேறு என்ன செய்வார்.
இன்னுமொரு உண்மையையும் சிவகுமார் அந்த கட்டுரையில் சொல்லியிருக்கிறார். "குரானிலிருந்து மேற்கோள்கள் காட்டி இஸ்லாம் மோசமென்று நிரூபிக்க நண்பர்கள் முயல்கின்றனர். இந்து மதத்திலிருந்து மேற்கோள்கள்காட்டி இந்துமதம் மோசமானது என்று நிரூபிப்பது அதைவிடச் சுலபம்" என்று. இந்துமத அடிப்படைவாதிகள் மட்டுமல்ல, வேறொரு கோணத்தில் எல்லா மத அடிப்படைவாதிகளும் இந்த உண்மையை ஒப்புக்கொள்ள கஷ்டமாகமே கொள்வார்கள். ஆக இதுவும் பெரியவர் வெ.சா.வுக்கு ஜீரணம் ஆகியிருக்காது.
***
மலர்மன்னனை நமக்குத் தெரியும். பத்திரிகையுலகில் பெரிதாக வலம் வந்தவர். பழைய இலக்கியவாதி. இப்பொழுது தனது கடந்தகால நினைவுகளின் கீர்த்திகளை அசைப் போடுபவராகவும், இந்துத்துவாவின் கோட்பாடுகளை மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டவராகவும் திண்ணையில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவருகிறார். சமயங்களில் "இனி நான் எழுத மாட்டேன்" என்பதாக அவர் கூறினாலும், பிறகு அவர் எழுதவே செய்வார்.சிறிய இடைவெளிக்குப் பிறகு அவர் எழுதத் துவங்கும்போது, "அவர் எழுதச் சொன்னார் இவர் எழுதச் சொன்னார்" என்பார். அது உண்மையும் கூட.
மலர் மன்னனின் இப்படியான கூற்றில், ஒருமுறை பெரியவர் வெ.சா.வின்பெயரும் வெளிச்சத்திற்கு வந்தது. வெ.சா.வின் வேண்டுகோள் கடிதத்திற்குப் பிறகே, மீண்டும் எழுதுவதாக பெருமையுடன் அவர் குறிப்பிட்டிருந்தார். ஆக இந்துத்துவாவின் குரல் தொடர்ந்து யார் மூலமேனும் ஒலிப்பதில் வெ.சா.வுக்கு மிகுந்த ஆர்வம் இருக்கிறது.
***
இரண்டு வருடங்களுக்கு முன், ஏதோ ஒரு வலைப்பதில் வெ.சா. அவர்கள் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு போயிருந்ததைப் பற்றி எழுதியிருந்தார். அதன் அருகில் உள்ள மசூதியின் இரைச்சலால் காசி விஸ்வநாதரை நிம்மதியாக வழிபாடு செய்யமுடியவில்லை என்ற தனது ஏக்கத்தை அதில் அவர் பதிந்திருந்தார்.
'சூலத்தை தூக்கிக் கொண்டு கூட்டம் கூட்டமாக அலைபாய்ந்த அந்த சாதுக்கள் இப்பொழுது எங்கேபோய்த் தொலைந்தார்கள்? அயோத்தி தெரிந்த அவர்களுக்கு இந்த காசியை இன்னும் தெரியாமல் போனதெப்படி?' என்கிற தொனியில் இருந்தது அவரது அந்த ஏக்கம். காசி நகரத்தின் இரைச்சல் பெரியவர். வெ.சா.வுக்கு புதிய செய்தியல்ல. எரிகிற நெருப்பில் எண்ணெய் விடனும். அதிலோர் ஆனந்தம். சுறுங்கச் சொன்னால், இது அவரது இன்னொரு இஸ்லாமிய எரிச்சல்.
***
'இஸ்லாத்தை ஏழாம் நூற்றாண்டிலிருந்து துருவிப்பார்க்க வேண்டும்' என்கிற வெ.சா.வின் கூற்றின்படி, அவருக்கு அந்த மதத்தின் மீது நிதர்சமான காழ்ப்பு இருக்கிறது. பிறகு ஏன் நேசகுமாருக்குப் பின்னாலும்.... மலர் மண்ணனின் நிழலோடும் மறைய வேண்டும்? அங்கொன்றும் இங்கொன்றுமாக இஸ்லாமியர்களைப்பற்றி மேல் தகவல்கள் இல்லாது நழுவிக் கொண்டே எழுதவேண்டும்? விஸ்தீரணமாக எழுதலாமே! எழுதுங்கள்!உங்கள் எழுத்தில் அந்த எதிர்ப்பு நுட்பமுடன் கூடிவரும் என்று எனக்கும் தெரியும்! பிறகு ஏன் பின்பாட்டும், அரைகுறை ஆட்டமும்? 'நான் கலை இலக்கியம் எழுதுகிறவன். அதன் நுட்பத்தின்மீது தேர் ஓட்டுகிறவன். நான் போய் எப்படி?' என்கிற தயக்கமெல்லாம் உங்களது உள்ளார்ந்த ஆசைகளுக்கு தீணிப் போடாது.
'ஒரு முஸ்லீம் நண்பரைக் கண்டால், 'ஸாகேப்', '"ஜனாபேவாலி, ஸலாம் ஆலே கும்"என்று வாழ்த்த நான் தயார்தான்.விடிகாலையில்; ஒரு நாள் எம்.எஸ் சுப்புலக்ஷ்மியின் விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்டால், மறுநாள் காலை அபீதா பர்வீனின் ஸூ·பி பாட்டுக்கள் கேட்க நான் தயார். கேட்கிறேன். விரும்பி, ரசித்துக் கேட்கிறேன். "தமா தம் மஸ்த் கலந்தர்" அவர் பாடும்போது பரவசத்தில் மயிர் சிலிர்த்துப் போகிறது. 'ஆனால் "அது பத்தாது, உன் பெயரை அப்துல் ஸமத் என்று மாற்றிக்கொள். கல்மா சொல்லு "லா இல்லாஹ் இல்லில்லாஹ், முகம்மது ரஸூல் அல்லாஹ்",சுன்னத் பண்ணிக்கோ" என்று மிரட்டினால் என்ன செய்வது?
வெ.சா. அவர்களே, மேலே நீங்கள் சொல்லியிருப்பது மாதிரி, நீங்கள் யாருக்கும் சலாம்போடவேண்டாம். அப்படி நீங்கள் செய்தால் அது எனக்கே பிடிக்காது. பெயரை மாற்றிக்கொள்ளவோ, கலிமா சொல்லவோவெல்லாம் வேண்டாம். தவிர, உங்களை யாரோ சுன்னத்திற்கு நிர்பந்திப்பது மாதிரியான, உங்களின் உள்ளார்ந்த ஆசை கூட இத்தனை வயதிற்குப் பிறகு 'வேஸ்ட்'. உங்களது பூச்சு வேலையெல்லாம் காரியத்திற்கு உதவாது. திரைமறைவைத் தாண்டிவாருங்கள். நேராகவே எழுதுங்கள். இஸ்லாமியர்கள் எல்லோரும் தேசத்துரோகி என்று.
பாரதி "அல்லா அல்லா" என்று அரற்றினான். பாடினான். அதெல்லாம் சரி, ஆனால், "எங்கள் குழந்தைகள் பள்ளியில் வந்தேமாதரம் பாடாது. அது எங்கள் மதத்திற்கு விரோதம்" என்று சொல்லும் மதத்தலைவரை, அரசியல் தலைவரை, என்னென்பது? " - யென கேட்கிறார் வெ.சா.!! எங்கோ, மூளையின் மடிப்புகளில் துருப்பிடித்த இஸ்லாமிய மததலைவர்களின் பிதற்றலை முன் வைத்து, எல்லா இஸ்லாமியர்களையும் ஒரே வட்டத்திற்குள் அடைத்துப் பார்க்கப்பார்க்கிறார் வெ.சா.!
வந்தே மாதரம், இந்தியத் தாயை வணங்குகிறோம் என்கிறது. அதன் பின்வரும் வரிகள் வேறு என்னென்னச் சொல்கிறதுயென எனக்குத் தெரியவில்லை. ஆனால், இந்தியாவை 'பாரதமாதாவாக' வரையப்பட்ட சித்திரத்தை நான் கண்டுயிருக்கிறேன். இந்திய வரைப்படத்திற்குள்ளே பாரதமாதா சக்தியின் அம்சமாக கைகளில் தேசியக் கொடியோடு இருக்க, காலடியில் இரண்டு சிம்மச் சிலை வடிவம் வோறு. அந்தச் சித்திரத்திற்கு பூஜை புனஸ்காரங்கள் செய்யப்படுவதையும் பார்த்திருக்கிறேன்.
இறைவனுக்கு இணை வைப்பதும், இறைவனைத் தவிர்த்து வேறொன்றை வணங்குவதும், மத அழுத்தம் கொண்ட இஸ்லாமியர்களால் ஆகக்கூடியதல்ல. அவர்களின் கோட்பாட்டின்படி, அது பாவங்களிலெல்லாம் முதன்மையானது. ஓரிறைக் கொள்கை உடைய அவர்கள் இறைவனைத் தவிர்த்து எதை வணங்கினாலும், இஸ்லாமியன் என்கிறத் தகுதியையே அவர்கள் இழக்க நேரிடும். தவிர, மறுமையில் (இறப்புக்குப் பிறகு) அவர்களுக்கு சொர்க்கம்வேறுக் கிட்டாது.
மதத்தை எப்பவும் நம்பிக்கையின் அடிப்படையில் சுமக்கும் பழமைவாதிகள் அந்த நம்பிக்கைகளுக்கு மாறுசெய்ய அஞ்சுவது இயற்கை. பழமைவாதிகளின் மத அடிப்படையிலான வைராக்கியம் என்பது, அனைத்து மதங்களிலும் உண்டு. கோவில் யானைக்கு வடகலை நாமமா, தென்கலை நாமமா என்கிற விவாதத்தில் ஸ்ரீரங்கத்து வைஷணவர்கள் ஹைகோர்ட்/சுப்ரீம்கோர்ட் என்றுபோனதையும், சிதம்பரம் நடராஜார் ஆலத்தில் இன்றுவரை தமிழில் பூஜை நடத்த அங்கேயுள்ள தீட்சதர்கள் இடம் கொடாது, திரும்பத் திரும்ப கோர்ட் படிகள் ஏறிக்கொண்டிருப்பதையும் பெரியவர் வெ.சா. அறிவார். இஸ்லாமிய பழமைவாதிகளின் யதார் த்தைப் புரிந்துக் கொள்வதை விட்டு, அவர்களைத்துரத்திக் கூப்பாடுபோடும் பாரதிய ஜனதாவும், பொருமும் பெரியவர் வெ.சா. வும் அநியாயத்திற்குத்தான் கொந்தளிகின்றார்கள்.
இஸ்லாமிய மாணவர்களின் வாழும் யதார்த்தை இங்கே கொஞ்சம் பார்க்கலாம். ஆரம்பக்கல்வி தொட்டு கல்லூரிவரை அவர்கள் ராமாயணம், மகாபாரதம், தேவாரம்,திருவாசகம், பத்துப்பாட்டு,எட்டுத்தொகை, வில்லிப்புத்துரார், குண்டலகோசி, சித்தர்கள்பாடல், சிலப்பதிகாரம், திருக்குரல், என்று பலதையும் படித்து, மனனம் செய்து, தேர்வு எழுதிதான் மேலே வருகின்றார்கள்.
பிளஸ் டூ'வரை எல்லா வகுப்பிலும், தமிழ்ப்பரிட்சை கேள்வித்தாள்களில் இறைவணக்கம் குறித்த கேள்வித்தான் முதல் கேள்வியாக இருக்கும். முதல் நாள் வீட்டில் முதலாவதாக அவன் படிப்பதும் அதுவாகத்தான் இருக்கும். எந்த இஸ்லாமிய மாணவனும் அதை தவிர்க்க முடியாது. நேற்று மட்டுமல்ல இன்றைக்கும் அப்படிதான். வந்தே மாதரம் பாட மறுப்பதாக பழிச்சுமக்கும் இஸ்லாமிய மாணவனின் என்றைக்குமான யதார்த்த நிலை இதுதான். நான் மேலே தந்திருக்கிற உதாரண யதார்த்தம் தமிழகத்தை யொட்டிய ஒன்றென்றாலும், இந்திய அளவில், இஸ்லாமிய மாணவர்களின் யதார்த்தமும்கூட இப்படித்தான்.
இன்னும், சினிமாக்களின் வழியாகவும், சின்னத்திரைகளின் வழியாகவும் இஸ்லாமிய மாணவர்கள் தெரிந்திருக்கும் இந்து கடவுள்களின் மகின்மைகள் ஏராளம். இன்றைக்கு, ஓர் இஸ்லாமிய மாணவனுக்கு தெரியும் இந்துக் கடவுள்களின் புராண, இதிகாச நிகழ்வுகள் மாதிரி பெரும்பான்மையான இந்து மாணவர்களுக்கு, இஸ்லாம் மதத்தின் உட்புல சங்கதிகள் தெரியுமா? என்பதில் எனக்கு ஐயம்கூட உண்டு.
இந்தியாவின் சுதந்திர எழுச்சிக் காலங்களில், சுகந்திரத் தாகம் கொண்டு கைகளில் மணிக்கொடியுடன் வந்தேமாதரம் முழங்கிய எத்தனையோ இஸ்லாமிய இளைஞர்களைப்பற்றி என்னைவிட பெரியவர் வெ.சா.வுக்கு நன்றாகவே தெரியும். அதைவிட, அன்றையக் காலக்கட்டத்தில் வெள்ளையன்அரசுக்கு சேவகம் செய்து, அவனுக்குத் துணைப்போன உயர்குடி மக்களைப்பற்றியும் அவருக்கு நன்றாகவே தெரியும். வந்தேமாதரம் பிரச்சனையினையொட்டி இஸ்லாமியர்களை எதிர் நிறுத்திப் பார்க்கும் பெரியவர் வெ.சா. வின் எழுத்தில் நுட்பம் கூடிவரவில்லை
வந்தேமாதரம் குறித்த, இடைகால சம்பவப்பதிவொன்றை பெரியவர் வெ.சா.வின் கவனத்திற்கு கொண்டுவர நினைக்கிறேன். பாரதத்தின் ஐம்பதாவது சுகந்திர வைபோவத்தை முன்னிட்டு, வந்தேமாதர பாடல் பதிவை 'ஆடியோ & வீடியோ' வாக கொண்டுவர நினைத்து அரசு. ஒரு இந்திய இசையமைப்பாளரை அணுகியது. அவரும் சம்மதம் தந்து, ஒரு வருடக்காலப் பணியாக அதைச் செய்தார். அவர் தனது பணிக்கு வேறொரு நாட்டு இசையமைப்பாளரும் பாடகருமான ஒருவரை உதவிக்கு அழைத்து, அந்த 'Creative'வான பணியை சிறப்பாக முடித்துத் தந்தார். அந்த இந்திய இசையமைப்பாளர் யார்? அவர் உதவிக்கு அழைத்த, அந்த இன்னொரு இசையமைப்பாளரும் பாடகருமானவர் யார்? அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? என்பன அத்தனையும் பெரியவர் வெ.சா.வுக்கு நன்றாகவே தெரியும். அவ்வப்போது எதையாவது ஓர் பிரச்சனையை முன்நிறுத்தி இஸ்லாமியனின் மீது காழ்ப்பை உமிழ என்னத்தான் மனஉந்தல் எழுந்தாலும், ஒரு நிமிடமேனும் அவர் யோசிக்க வேண்டாமா?
வெ.சா., பாரதியை உதாரணத்திற்கு அழைத்திருக்கக் கூடாது. அவன் மிகவும் உயர்ந்தவன். அவன் நம்மை மாதிரி சராசரி கிடையாது. அவன் சொல்சூழ்ச்சிக் கொண்டவனில்லை. வெ.சா. குறிப்பிட்டிருப்பதுபோல் அல்லா குறித்து அவன் அரற்றவில்லை, பாடல் இயற்றித் தந்து, பாடியுமிருக்கிறான். அதுமட்டுமா, இஸ்லாத்தைப் புகழ்ந்திருக்கிறான், இஸ்லாத்தைப் பரப்பிய நபிகள் நாயகத்தின் கீர்த்திகளை நாவினிக்கப் பேசியிருக்கிறான். இஸ்லாமியர்களுக்கு புத்திச் சொல்லியிருக்கிறான், இஸ்லாமியத் தலைவர்களது சில அரசியல் நடவடிக்கைளை சுட்டிக் கண்டித்திருக்கிறான். இஸ்லாமியர்களை மையப்படுத்திக் கதை எழுதியிருக்கிறான். இன்னும், தனது சொந்த மதத்துக்காரர்களையே கூட குற்றம்கண்டு கடினமொழியில் சாடியிருக்கிறான்.
"முற்பகல் செய்யிற் பிற்பகல் விளையும், நாம் பள்ளர் பறையருக்குச் செய்ததை யெல்லாம், நமக்கு அன்னிய நாடுகளில் பிறர் செய்கிறார்கள். நமது சிருங்ககிரி சங்கராச்சாரியாரும், வானமாமலை ஜீயர் ஸ்வாமிகளும் நெட்டால் திரான்ஸ்வால் தேசங்களுக்குப் போவார்களானால், ஊருக்கு வெளியே சேரிகளில் வாசம் செய்ய வேண்டும். சாதாரண மனிதர்கள் நடக்கும் ரஸ்தாக்களில் நடக்கக் கூடாது. பிரத்தியேகமாக விலகி நடக்கவேண்டும். பல்லக்குகள், வண்டிகள், இவற்றைப்பற்றி யோசனையே வேண்டியதில்லை. சுருக்கம்: நாம நமக்குள்ளேயே ஒரு பகுதியாரை நீசர்களென்று பாவித்தோம்; இப்போது, நாம் எல்லோரையுமே உலகத்தார் மற்றெல்லா நாட்டினரைக் காட்டிலும் இழிந்த நீசர்களாகக் கருதுகின்றார்கள். 1200 வருஷங்களுக்கு முன்பு, மகம்மதியர்கள் பஞ்சாப் நாட்டில் பிரவேசித்த போது நம்மவர்களின் இமிசை பொறுக்கமுடியாமல் வருந்திக்கொண்டிருந்த பள்ளர் பறையர் பேரிகை கொட்டி, மணிகள் அடித்துக்கொண்டுப்போய் எதிரிகளுக்கு நல்வரவுகூறி அவர்களுடன் கலந்து கொண்டதாக இதிகாசம் சொல்லுகின்றது. அப்போது நமது ஜாதியைப் பிடித்த நோய் இன்னும் தீராமலிருக்கிறது."
- இது பாரதி. தனது கட்டுரையொன்றில் அவன் சொல்லியிருக்கும் செய்தி. பாரதியை உதாரணத்திற்கு அழைக்கும் முன், பெரியவர் வெ.சா. இரண்டு தடவையேனும் யோசித்திருக்க வேண்டும்.
***
ஜின்னா பாக்கிஸ்தான் கேட்டு பிரிந்துப்போக, இங்கே காலம்காலமாக வாழ்ந்துவந்த இஸ்லாமியர்கள் இன்றுவரை அவதிக்கு உள்ளாகின்றார்கள் என்பது கண்கூடு. ஜின்னாவின் போராட்டங்களால் மட்டும் பாக்கிஸ்தான் பிரிய இந்தியத் தலைவர்கள் ஒப்பினார்கள் இல்லை. சக்கரவர்த்தி திருமகனார் திரு. ராஜாஜியின் அரசியல் சாணக்கியமும், அவரது நிர்பந்தமும் அரசியல்
முக்கியத்துவம்பெற, பாக்கிஸ்தான் பிரிய நம் தலைவர்கள் தலையசைத்தார்கள். இது, இன்றைக்கு நம் நாட்டில் மறைக்கப் பட்டிருக்கிற முக்கிய அரசியல் நிகழ்வு. இந்த அரசியல் சாணக்கியத்திற்கும் சேர்த்துதான் இங்கே இன்றைய முஸ்லீம், நித்தம் நித்தம் பழிப்பாவம் சுமக்கிறான். இதையெல்லாம் வெ.சா. மறுத்து, அதன்பின் தனது இஸ்லாமிய துவேசத்தைக் காட்டணும்.
வெ.சா. அவர்களே அகில உலக இஸ்லாமிய பயமுறுத்தலை இங்கே எங்கள் தலையில் சுமத்தி வேடிக்கைப் பார்க்கும் பொழுதுப்போக்கை யெல்லாம் விட்டுவிட்டு, நமக்குள்ளான நேரடிப்பார்வைக்கு வாருங்கள். அங்கே அமெரிக்கன் அவர்களை தூங்க விடுவதில்லை, அவர்களும் அவனை தூங்கவிடுவதில்லை. அது வேறு சங்கதி. அது வேறு அரசியல்.
***
கேள்வி: எல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் இல்லை. ஆனால், எல்லா பங்கரவாதிகளும் முஸ்லிம்கள்தான். சரியா?
பதில்: சரியல்ல! பயங்கரவாதம் என்பது நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது. உலகத்தின் எல்லா மதத்திலும் பயங்கரவாதிகள் இருக்கின்றார்கள். இதுபற்றி பிரபல பொருளாதார விமர்சகரும், வலதுசாரி அரசியல் ஆதரவுப் பத்திரிகையாளருமான சுவாமிநாதன் எஸ். அய்யர் சில தகவல்களைத் தொகுத்து அளித்திருக்கிறார்.
ஒரு காலகட்டத்தில் பயங்கரவாதிகள் என்று சொல்லப்பட்டவர்கள், வேறு சிலரால் விடுதலை வீரர்கள் என்று கொண்டாடப் பட்டிருக்கின்றார்கள். காலமாற்றம் பயங்கரவாதிகள் பலரைத் தியாகிகளாக்கியிருக்கிறது. பிரிட்டிஷாரைப் பொருட்டமட்டில் (இப்போது நூற்றாண்டு விழா காணும்) பகத் சிங்கும், தோழர்கள் சுகதேவ், ஆசாத் எல்லோருமே பயங்கரவாதிகள்தான். அவர்கள் முஸ்லிம்கள் அல்ல! இந்தியாவில் காஷ்மீரில் மட்டும்தான் முஸ்லிம் தீவிரவாதக் குழுக்கள் உள்ளன. பஞ்சாபில் இருந்த தீவிரவாதி
கள் சீக்கியர். அஸ்ஸாமின் உல்பா தீவிரவாதிகள் இந்துக்கள். திரிபுரா, போடா தீவிரவாதிகள் யாரும் முஸ்லீம்கள் அல்ல. இந்தியாவில் சுமார் 150 மாவட்டங்களில் இருக்கும் மாவோயிஸ்ட் தீவிரவாத அமைப்பு மதசார்பற்ற அமைப்பு.
இருந்தபோதிலும், முஸ்லிம் தீவிரவாதிகள் பற்றியே நம் கவனம் அதிகம் திருப்பப்படுவதற்குக் காரணம், தற்போது மேற்கு நாடுகள் அவர்களைப் பற்றி அதிக பயம் கொண்டு இருப்பதுதான்.
உண்மையில் பயங்கரவாதம் என்பது சாதி, மதம், கடவுள், தேசம் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது. ஒவ்வொரு சமூகமும் தன் பொருளாதார, கலாசாரச் சிக்கல்களை ஜனநாயக முறையில் சமத்துவ அடிப்படையில் தீர்க்கத் தவறும்போது, அந்த தோல்வியை மறைக்க பொய் எதிரிகளை ஒருவாக்கிக் காட்டுகிறது. அதிலிருந்துதான் பயங்கரவாதம் தொடங்குகிறது.
- 10.9.06 / ஆனந்த விகடன் / ஓ... பக்கங்கள் / ஞாநி
இப்படியான எல்லா உண்மைகளையும் அதன் நுட்பங்களையும் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு, அதன்பின் பெரியவர் வெ.சா. இஸ்லாமியத் தீவிரவாதிகளையும், அவர்கள் ஏன் அப்படியானார்கள் என்பதையும் எழுதனும். தவிர, இஸ்லாமியர்கள் நூற்றுக் கணக்கில் பாராளமன்ற உறுப்பினர்களாகவும்/ பத்துக் கணக்கில் மத்திய மந்திரிகளாகவும் இருப்பது போதாதென்று மத்திய
அரசைப் பிடிக்க அவர்கள் ஆளாய்ப் பறக்கின்றார்கள் என்ற 'நிஜத்தை' மக்கள் பார்வைக்கு வைத்து, அவர்களை கிழித்துப்போடும் கட்டுரைகளை பெரியவர் வெ.சா. எழுதனும். கூடவே, 1991ல் கரசேவை செய்த 'சாத்வீகவாதிகளின்' மேன்மையையும், சில வருடங்களுக்கு முன், குஜராத்தை ரணக்களப்படுத்திய அந்த 'அகிம்சாவாதிகளின்' மகத்துவத்தையும் அதில் போற்றிப்புகழனும்.
இந்தியாவுக்குள் சிக்குண்ட பதிமூன்று சதவிகித மக்களை, மீதமுள்ள பெரும்பான்மையினரின் பிரதிநிதிகள் என்போர் பல வழிகளிலும் கிடுக்கிப்பிடிப் போட்டு, அவர்களின் தினசரி வாழ்க்கையில் திகிலூட்டி, தாக்கு தாக்கென்று தாக்குகிறபோது நீங்கள் மட்டும் ஏன் மறைந்து நின்று கட்டாரி வீசவேண்டும்? எப்படியாக இருந்தாலும் இந்த நாட்டில் இஸ்லாமியர்களை அழிக்காமல் உங்களின் நேசம் கொண்ட அரசியல் வாதிகள் தூங்கப்போவது கிடையாது! திட்டங்களை தீர தீட்டிவிட்டீர்கள். எழுபது வருடக் கனவு! காவு கொள்வதுதான் மெதுவாக நடக்கிறது. விஸ்தீரணமாகவே எழுதுங்கள்.
***
கடைசி செய்தி:
08.09.06 / வெள்ளிக்கிழமை.
இஸ்லாமிய மதரசா மாணவர்களும் மற்றும் இஸ்லாமியர்களும் வந்தே மாதரம் பாடும் நிகழ்சிகளில் ஆங்காங்கே கலந்துக் கொண்டு பாடினார்கள்.
மகாராஷ்டிரா மாநிலம், மாலேகானில் ஒரு மசூதிக்கு அருகில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 37பேர்கள்பலி. நேற்று முஸ்லிம்களுக்கு 'ஷப்-இ-பரத்' என்றழைக்கப்படும் புனித இரவு. அதன் வைபவத்தை ஒட்டி நடந்த நிகழ்ச்
சியின் போது இந்த வெடிகுண்டு சம்பவம் நடந்தேறியுள்ளது.
***
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com