'திருக்குர்ஆனும் நானும்....' - சுஜாதா : அஞ்சலி
- தாஜ் -
சுஜாதாவின் மரணத்திற்கு என் சகாக்கள் எல்லாம் இரங்கல் செய்துவிட்டார்கள்.
நான்தான் பாக்கி. தாமதம் தாமதம் என்று மாத ங்கள் ஆகிவிட்டது. என்றாலும், அவருக்கு
இரங்கல் செய்யாது என் மனம் ஆறாது! அவரிடம் நான் கற்றவைகளும் பெற்ற வைகளும்
கொஞ்சமல்ல! சிறு புள்ளிகளால், கோடுகளால், வார்த்தைகளுக்குள் வார்த்தைகளால் அவர்
தொட்டுக்காண்பித்த அங்கதத்திற்காக/அதில் மனம் பறி கொடுத்ததற்காக / வாசித்த
நிமிஷங்களில் சிரித்த சிரிப்புகளுக்காக நான் மரியாதை செய்தேயா கனும்!
'சுஜாதா....' எத்தனை இனிமையான பெயர்! இலக்கியத்தின் பக்கம், நடுத்தர வாசகர்களைச்
சார்ந்ததோர் நிலை எடுத்து அவர் சாதித்தவைகள் ஏராளம்! எழுத்துலகில் எழுதத்
துவங்கிய காலம் தொட்டு, மறைவின் காலம்வரை நின்று நிலைத்து சாதித்தவர் அவர்.
அவரால் இலக்கியத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டவர்கள் ஏராளம். எழுத்துலகில் முகம்
காண்பித்தவர்களை எல்லாம், தன் பங்கிற்கு தட்டிக் கொடுத்து அவர்களைப் பற்றி
அவ்வப்போது கோடிட்டுக்காட்டி, நல்ல வார்த்தைகளாய் நாலு எழுதி, அவர் களை
இலக்கியத்தின் பக்கம் தலையெடுக்கவைத்து ரசித்தவர் அவர். அதை இன்னொரு
இலக்கியப்பணியாகவே கடைசிவரைத் தொடரவும் தொடர்ந்தார்! எத்தனைப் பெரிய சிந்தனை!
எத்தனைப் பெரிய மனம்! இன்றைக்கு, நவீன இலக்கியத்தில் சிம்மா சனம் தேடுபவர்களில்
இருந்து, அங்கே வாசலில் திரிபவர்கள்வரை அவருக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்
என்றால் அது சும்மா அல்ல!
கா.ந.சு./ ஜானகிராமன்/ கஸ்தூரி ரங்கன்/ இந்திர பார்த்தசாரதி/ வெங்கட் சாமிநாதன்/
ஆதவன் போன்ற இலக்கிய ஜாம்பவான் கள் டெல்லியில் தங்களது வாழ்வோடான காலத்தைக்
கழித்தபோது, அந்த வட்டத்திற்குள் வலம் வந்தபடி இலக்கியத்திற்குள் காலடி எடுத்து
வைத்தவர்தான் சுஜாதா! அவர்களை எல்லாம் கற்றுத் தேர்ந்தவராக சுஜாதா இருந்தும்,
அவர்களை ஒத்த இலக் கிய வடிவத்திற்குள் தன்னை ஒப்படைக்காமல், கிண்டலும் கேலியுமான,
புதிய மோஸ்தர் கொண்டதோர் எழுத்து வடிவத்திடம் தன்னை வலியவே சேர்த்துக்கொண்டார்!
அந்தக் காலக்கட்டத்தில் மேலைநாட்டு நவீனவாதிகளிடம் அப்படியொரு போக்கு தலை
எடுத்திருந்ததைக் கண்டு விரும்பி, அதை அவர் சுவீகரித்துக் கொண்டார் என்றும்
சொல்லலாம்.
கணையாழி கடைசிப்பக்கத்தில் சுஜாதா தனது எழுத்துலக கணக்கை துவங்கினார். அவரது
புதிய மோஸ்தர் கொண்ட எழுத்தை கணையாழி நிறுவனரும், அதன் அன்றைய ஆசிரியருமான
கஸ்தூரி ரங்கன் ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், ஆர்வப்படுத்த வும் முனைய, அதன்
தொடர்ச்சியாகத்தான் பிற்காலத்தில் நாம் எதிர்கொண்ட சுஜாதா நமக்கு கிடைத்தார்.
சுஜாதாவின் ஆரம்பகால வளர்ச்சியில் ஓவியர் ஜெயராஜின் பங்கு மிகப்பெரியது. சாவி,
தினமணிகதிருக்கு ஆசிரியராக இருந்த காலகட்டத்தில் சுஜாதாவின் தொடர்கதைகள் அதில்
ஓர் முக்கிய அங்கம். ஜெயராஜ்தான் சுஜாதாவின் கதைகளுக்கு தொடர்ந்து ஓவியங்களை
வரைவார். அதில் சுஜாதா வாராவாரம் எழுதும் எழுத்தின் அளவு கையளவு என்றால்,
ஜெயராஜின் வரைப்படம் இரண்டுப் பக்கங்களை அடைத்துக் கொண்டு பிதுங்கும். அந்த
ஓவியமும் சுஜாதாவின் கதைகளுடான காட்சிகளை மிக சரியாக 'விசுவல்' படுத்துவதாகவே
இருக்கும். சுஜாதாவின் எழுத்துக்காக அவரது கதைகளைப் படிப்பவர்கள் பாதிப்பேர்கள்
என்றால், ஜெயராஜின் ஓவியப் பெண்களுக்காக, அவர்கள் அணியும் 'டி சர்ட்'
வாசகங்களுக்காக படித்தவர்கள் மீதிப் பேர்! நானெல்லாம் ஜெயராஜின் பெண்களுக்காக
சுஜாதாவை பற்றிக் கொண்டவன்.
சுஜாதாவின் நாவல்கள்/ சிறுகதைகள் என்று பார்த்தால் பாதிக்குப் பாதி நிச்சயம்
தேறும். அவரது கட்டுரைகள் அப்படியல்ல.
அது பெரும்பாலும் 'நூற்றுக்கு நூறு' சங்கதி. சமூகம்/ சரித்திரம்/ துப்பறிதல்/
விஞ்ஞானம்/ கம்யூட்டர்/ சார்ந்து அவரது கதைக ளும், நாவல்களும் அமர்க்களப்பட்டதை
நாம் அறிவோம். ஆனால், அவர் எது ஒன்றிலும் தன்னை முழுமையாக ஈடுப்படுத் திக்
கொண்டவர் அல்ல. எல்லாம் மேம்போக்கான தகவல்களையும், குறிப்புகளையும்,
சம்பவங்களையும் தந்து போகிறவை தான். ஆனால், அதைச் சொல்லிச் செல்லும் அவரது
நடைதான் அவர்! தேன் கலந்த தித்திப்பு! ரசனையான சுவை! அவரது
சில சிறு கதைகள் கவிதையாகவே தொடங்கி வளர்ந்து முடியும். அனுபவித்து ரசிக்க
வேண்டிய தமிழ்ச் சுவை அது!
சுஜாதா சம்பந்தப்பட்ட சினிமா குறித்து, மார்க் போட முடியாது. அது ஆளாளுக்கு
வித்தியாசப்படக் கூடியது. என்னளவில், அதில் அவர் எதையும் பெரிதாக சாதிக்கவில்லை.
மணிரத்தினம்/ சங்கர் படங்களுக்கு ஏற்ப அவர் கதைவசனம் எழுதிக் கொடு த்து உதவிகரமாக
இருந்தார் என்பதைத் தவிர! அவரது சினிமா செயல்பாடுகள் குறித்து வேறு ஒன்றும்
சொல்வதற்கில்லை. விதி விலக்கு 'கன்னத்தில் முத்தமிட்டால்' / 'உயிரே' / 'திருடா
திருடா'. கன்னத்தில் முத்தமிட்டால் மற்றும் உயிரேயில் அந்தந்தப் பிர ச்சனைகளை
ஓரளவு விஸ்தீரணமாக தொட்டுக் காண்பித்திருந்தார். திருடா திருடாவில், அவரது
எழுத்தில் வெளிப்படும் நகைச் சுவை அப்படியே அச்சுஅசலாய் அதில் கண்டு
திளைக்கமுடிந்தது. தவிர, சுஜாதா பங்கெடுத்து, ராஜஞானசேகரன் இயக்கத்தில் வெளி வந்த
'பாரதி' படத்தை முன்வைத்து அவரது சினிமா ஈடுபாட்டை புரிந்துணர்வோடு மெச்சலாம்!
தீவிரம் சார்ந்த எதை ஒன்றையும் அவர் அங்கிகரித்ததாக நான் அறிந்தவரை இல்லை.
இலக்கியத்தில், பின் நவீனத்துவ/ மேஜி கல் ரியலிஸ வகை எழுத்துகளை அவர்
பாராட்டியதாக நான் அறியவில்லை. புதுக் கவிதையிலும் அப்படிதான். இலக்கணங் களை/
சந்தங்களை/ ஓசைகளை மீறி உலகளாவிய ஸ்டைலோடு வலம் வரும் நமது தீவிரமான புதுக்
கவிதைகள் அவருக்கு உகப்பானது அல்ல. எளிமையான புதுக் கவிதைகளின் பக்கமே நிற்க
கூடியவர். அதிலும், சந்தம்/ ஓசை கூடியதான புதுக் கவி தைகளை ரொம்பவே
விரும்பக்கூடியவர். அப்படியான கவிதைகளுக்காக அடிக்கடி ஞானக்கூத்தனை மேற்கோள்
காட்டுவார். சினிமாவிலும் அப்படிதான். கலைப்படங்கள் மீது அவருக்கு நல்ல
அபிப்ராயமே இருக்காது. சிலநேரம் ஏதேனும் நிர்பந்தம் பொருட்டு அப்படியான படங்களை
அவர் பொருட்படுத்தவும் செய்திருக்கிறார் என்றாலும், பொதுவில் அவர் அப்படியல்ல.
நவீன நாடகங்களைக்கூட அவர் பாராட்டி நான் வாசித்தது இல்லை. அவரது இந்தவகை
மறுப்புகள், இன்றைக்கும் எனக்குப் புரியாத புதிர்! கலை சார்ந்த தீவிர நிலைகள்
மீது அவர் மற்றுக் கருத்துகள் கொண்டிருந்தாலும், இன்னொரு புறம், தீவிரத் தை முன்
வைத்து பேசப்படும் விடுதலைப் புலிகள் மீதும்/ பிரபாகரன் மீதும் அவர் கசியவிட்ட
ப்ரியம், தீவிரமான யோசிப்பிற் குரியது.
சுஜாதாவால் தட்டிக்கொடுக்கப்பட்ட எத்தனையோ இலக்கிய ஆர்வலர்களில் நானும் ஒருவன்.
சௌதியில் நான் பணியில் இரு ந்தபோது, 'தமிழ்ப் பூக்கள்' என்றொரு கையெழுத்து
பத்திரிக்கையை நடத்தினேன். கையெழுத்தால் ஆன ஆக்கங்களை ஜெரா க்ஸில் நகலெடுத்து,
குமுதம் அளவில் கொண்ட மாதாந்தரி அது. என் ஆர்வக் கோளாரினால், 1981-82ல்
நடந்தேறியக் கூத்து அது என்றால்...மிகச் சரியாக இருக்கும்! அதன் ஒரு பிரதியை
சுஜாதாவுக்கு அனுப்பி வைக்க, அடுத்த மாத கணையாழியின் கடைசிப் பக்கத்தில் அவருக்கே
உறிய கிண்டலோடு, 'தமிழ்ப் பூக்கள்' இதழுக்கான அறிமுகத்தையும், என்னைப் பற்றிய
செய்தி யையும் எழுதியிருந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, இன்னொரு முறையும்
என்னைக் குறித்து கணையாழி கடைசிப் பக்கத் தில் எழுதினார். சந்தமும் / ஓசையும்
கூடியப் புதுக்கவிதையே தனக்கு பிடித்திருப்பதாக அவர் அடிக்கடி சொல்லிக்கொண்டி
ருக்க, அதை மறுத்து அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்திற்கு
பதிலாகவும், என் கோபத்திற்கு மருந்தாகவும் அதை எழுதினார்.
சுஜாதாவை ஒரே ஒருமுறை மட்டும் சந்தித்ததுண்டு! கணையாழி நடத்திய கவிதை வாசிப்பு
கூட்டம் ஒவ்வொரு மாதமும், அதன் கடைசி வாரத்தில் சென்னையில் நடந்த சமயம், அங்கே
வைத்து அவரைச்சந்தித்தேன். அங்கு வந்திருந்த சிலரின் கவித களைப் பெற்று அவர்
வாசித்தபோது, அதில் ஒன்றாய் 'அரங்கேற்ற நேரம்' என்கிற என் கவிதையையும்
வாசித்தார்.
'அரங்கேற்ற நேரம்.'
பார்வைக்குத் திறக்கப்பட்டது/ என் சித்திரக்கூடம்/ மூளையின் மூளி/ முதுகுத்
தண்டின் வளைவு/ கண்களின் ருசி/ நாவின் ஜதி/ கைகளின் தாளம்/ கால்களின் சதிர்/
பாதங்களின் காய்ப்பு/ விரல்களின் முஷ்டி/ நகங்களின் ரத்தப்பூச்சி/ பற்களின்
மழுங்கள்/ குறியின் மகர்ந்தம் இன்னும்/ இறக்கையற்றப் பறப்பென/ வண்ணங்களின்
அரங்கேற்றம்/ தலைப்பு: நிர்வாணம்.
விரிந்தே கிடந்தது/ குறிப்பேடு/ கண்டுகொண்டவர்களின்/ காலடிச் சுவடுகளும் இல்லை.
காலம் தாழ்கிறது/ காற்றின் பெரு வெளிக்கே/ அள்ளி தரலாம்/ நிச்சயம்/ பேரண்டம்
காணும்.
- கவிதை வாசித்துவிட்டு சம்பிரதாயமான வார்த்தைகளை மட்டும் கூட்டத்தில் பேசினார்.
சற்றுநேரம் கழித்து கிடைத்த ஓய்வில்,
"என் கவிதை எப்படி இருந்தது ஸார்?" என்று வினவினேன். "புரியலை தாஜ்" என்றார்.
தொடர்ந்து பேசவும் நேரம் கிடைக்க வில்லை. என்றாலும், அவர் 'புரியவில்லை' என்று
சொன்னதே எனக்கு போதுமானதாக இருந்தது. கவிதைப் புரியாமை ஓர் உலக நியதி!
புரிந்ததுயென சொல்லி இருந்தால்தான் சங்கடம்! படித்த உடனே புரிந்துவிட்டல் அந்தக்
கவிதைக்குத்தான் மதிப் பேது?
எப்படி பார்க்கப்போனாலும் சுஜாதா ஓர் வித்தியாசமான மனிதர். பிரச்சனைகள் அற்ற ஓர்
உலகை நோக்கிய நடை அவருடை யது. பல நேரம் சாதாரணக் கூக்குரலுக்கும், சப்தத்திற்கும்
கூட அவர் பின்வாங்குபவராக இருந்தார். வகித்தப் பணியினால் இந் திய அளவில் அவருக்கு
கிடைத்த அங்கிகாரமாகட்டும், ஆத்மார்தமாக ஈடுப்பட்ட எழுத்துப்பணியில் அவர் கொண்ட
புகழா கட்டும், அத்தனையும் மிகப் பெரியது. அவர் அடைந்தப் புகழில் காலுக்கும்
குறைவானப் புகழை இங்கே இன்னொருவர் பெற்
றிருப்பாரே ஆனால், அவரது தம்பட்டமும் சுய பிரதாபங்களும் விண்ணையும் கிழித்து,
கிரக சஞ்சாரவெளியையும் கலக்கி இருக்கும்! சுஜாதா அப்படி ஒரு கஷ்டத்தை நமக்குத்
தரவில்லை. கடைசி வரைக்கும்!
அவர் விஞ்ஞானம் சார்ந்த பொறியிலாளர்! தவிர, நவீன விஞ்ஞான வளர்ச்சிகள் குறித்து
தொடர் வாசிப்பு கொண்டவர். அத னால்தான் என்னவோ வாசகர்களின் அன்றாட விஞ்ஞானம்
குறித்த கேள்விகளுக்கு அவர் அசராது பதிலளித்துக் கொண்டிரு ந்ததார். இன்னொரு
பக்கம் அவர் ஆன்மீகவாதியாகவும் இருக்க, 'இவ்வளவு தூரம் விஞ்ஞான வளர்ச்சிகளைப்
பற்றி பேசு கிற சுஜாதாவால், எப்படி கடவுள் மீது கேள்விகள் எழுப்ப முடியாமல்
ஏற்கமுடிகிறது?' என்பதாக பலரிடம் ஐயம் துளிர்த்தெழ, அவர்கள் சுஜாதாவிடம் அடிக்கடி
கடவுள் குறித்த, மதங்கள் குறித்தக் கேள்வி எழுப்புவதை தொடர்ந்தார்கள். அதற்கெல்
லாம் அவர் எந்தப் பெரிய தர்க்க நியாயங்களையும் கையில் எடுக்காமல், சட்டென கழண்டு
கொள்ளும் சுலப பதில்களையே தந்து, நகர்ந்து விடுவார். இன்னொரு பக்கம், அவர் ஆன்மீக
வாதியே என்றாலும், அதற்காக அவர் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் வரிந்து
கட்டிக்கொண்டு நின்றவரும் இல்லை. அவருக்கு எல்லா மதங்களின் நல்லவைகள் குறித்து
நல்ல அபிப்ரா யமே இருந்தது. இன்றைய இந்தியாவில் நிலவும் மதம் சார்ந்த காலச்
சூழ்நிலையை மனதில் கொள்கிறபோது, அவர் எவ்வளவு தூரம் தெளிவாக இருந்திருக்கிறார்
என்பதை அறிய முடிகிறது.
மத நல்லிணக்கத்தைப் பேணும் பொருட்டு, தினமணி - 2003 ரம்ஜான் மலரில் அவர் எழுதிய,
"திருக்குர்ஆனும் நானும்...." என்கிற கட்டுரை, சமரசம் 16-31/ மார்ச் - 2008
இதழில் வாசிக்க கிடைத்து, வாசித்ததில் பிடித்தமான கட்டுரையாகவும் ஆகிப் போனது.
எல்லா மதங்களைப்பற்றியும், வேதங்களைப்பற்றியும் நன்கு அறிந்தவர் அவர்! என்றாலும்
இங்கே 'திருக்குர்ஆனை' விமர்சன நோக்கில் பார்க்காமல், அதில் காணும் நல்லவைகளை
நல்லவிதமாய் சொல்லி இருக்கிறார். நல்லன முளைக்க நல்ல தை விதைத்திருக்கும் அவரது
நல்ல எண்ணத்தை இன்னும் பல வாசகர்களின் பார்வைக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியாக,
அர்த்த முடைய அஞ்சலியாக எட்டியவர்களின் பார்வைக்கெல்லாம் வைக்கிறேன்.
*********
"திருக்குர்ஆனும் நானும்...."
- சுஜாதா -
திருக்குர்ஆனுடன் என் முதல் பரிச்சயம் என் தந்தை மூலம் ஏற்பட்டது. அவருக்கு நான்
நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங் களை பெங்களூரில் படித்துக் காட்டிக் கொண்டு
இருக்கும்போது, திடீரென்று 'குர்ஆன் படிக்கலாம், அதில் என்னதான் சொல்லியிருக்காங்கன்னு பார்க்கலாம்டா' என்றார்.
நான் உடனே புத்தகக் கடைக்குப் போய், 'தி மீனிங் ஆஃப் தி க்ளோரியஸ் குர்ஆன்' என்ற
ஆங்கிலப் புத்தகத்தை வாங்கி
வந்தேன். சில நாள்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைத் தள்ளிப்போட்டு,
திருக்குர்ஆன் முழுவதும் படித்தோம். அதில் சொல்
லியிருக்கும் கடவுள் கருத்துகள் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருப்பதைப்போல்
உணர்ந்தோம். 'வாழ்வுக்கான நடை முறைக் குறிப்புகளும், எவரும்
ஒப்புக்கொள்ளும்படியாக இருக்கிறதே! எந்த நாட்டுக்கும், எந்தச் சமயத்துக்கும்
ஆட்சேபம் இருக்க முடியாதே! இதில் வெறுப்பதற்கு என்ன இருக்கிறது!' என்று
வியந்தோம்.
அதன்பின், பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜாஃபர்தீன் போன்ற நண்பர்கள் அனுப்பிய
புத்தகங்களைப் படித்து வந்திருக்கிறேன். இஸ்லாமிய ட்ரஸ்ட் நிறுவனம்
வெளியிட்டிருக்கும் 'அண்ணல் நபிகளார் வாழ்வினிலே' போன்ற புத்தகங்கள் தெளிவாக
எழுதப் பட்டுள்ளன.
மலேசியப் பிரதமர் டாக்டர் மஹாதீர் முஹம்மதின் சொற்பொழிவுகளின் தொகுப்பான
'இஸ்லாமியச் சிந்தனைகள்', நவீன உலக த்தின் முற்போக்குக்கு இஸ்லாம் தடையல்ல
என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. குறிப்பாக, இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு ஆய்வு
மையத்தில் அவர் ஆற்றிய உரையில், இஸ்லாம் எப்படித் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது
என்பதைச் சொல்லியிரு க்கிறார். இந்தியர்கள் அனைவரும் தவறாமல் படிக்க வேண்டும்.
எல்லா மதங்களும் நல்லதைத்தான் சொல்கின்றன. அவைகளின் ஆதார வார்த்தைகளில்
பழுதில்லை. அவற்றைக் கடைப்பிடிக் கும் மனிதர்களிடம்தான் வேறுபாடுகள்
வளர்ந்திருக்கின்றன.
இஸ்லாம் என்பதற்குக் கீழ்ப்படிதல், கட்டளைகளை நிறைவேற்றுதல் என்பது பொருளாகும்.
முழுமுதற் கடவுளாகிய அல்லாஹ் வுக்குக் கீழ்ப்படிந்து, அவனுடைய கட்டளைகளை
நிறைவேற்றுதல். அந்தக் கட்டளை உணர நியமிக்கப்பட்ட இறைத் தூதர் தான் அண்ணல் நபி.
காளிதாசன் நாக்கில் சரஸ்வதி வந்ததும், அவன் சட்டென்று கவிபுனைய ஆரம்பித்தது போல,
அண்ணல் குகையில் இருந்து வெளி வந்ததும் சொன்ன வசனங்கள் இறைவனின் வசனங்கள்.
அவற்றின் எளிமையும் நேரடியான தாக்கமும் பிரமிக்க வைக்கும்.
'சிலைகள் உதவாதவை, அவற்றைக் கைவிடுங்கள். இந்த பூமி, இந்த நிலவு, கதிரவன்,
தாரகைகள், வானம், பூமியில் உள்ள சக்திகள் யாவும் ஒரே இறைவனின் படைப்புகள். அந்த
இறைவனே உங்களையும் படைத்தான். அவனே உணவளிப்பவன்.
அவனே உயிரை வாங்கவோ, உயிரை அளிக்கவோ செய்கிறான். மற்ற அனைத்தையும் விடுத்து,
அவனையே தொழுங்கள்!'
'திடவிசும்பு எரி வளி நீர் நிலம்
இவை மிசை
படர்பொருள் முழுதுமாய்
அவைதொறும்
உடல்மிசை உயிரெனக்
கரந்தெங்கும் பரந்தனன்'
- என்று நம்மாழ்வார் கூறியதும் அந்த இறைவனையே!
தற்பெருமை, கொடுமை, கோபம், பிறரைப் போல் பாவனை செய்தல், பிறர் துன்பத்தைக் கண்டு
மகிழ்தல், பொய், கெட்டவற் றைப் பேசுதல், இரட்டை வேடம் போடுதல், புறம் பேசுதல்,
தகாத ஆதரவு, பாரபட்சம், பொருத்தமற்ற புகழ்ச்சி, பொய் சாட்சி அளித்தல், பரிகாசம்,
வாக்குறுதி மீறல், சண்டை சச்சரவு, வாக்குவாதம், குறை கூறல், ஆராயாமல் செய்திகளைப்
பரப்புதல், பொறாமை, கெட்ட பார்வை இவைகளைத் தீயகுணங்களாகப் பட்டியலிடுகிறார்
பெருமானார். கம்பீரம், நிதானம், எளிமை, தூய்மை, வணங்குவது, நாவடக்கம் போன்ற நல்ல
குணங்களைக் கடைப்பிடிக்கச் சொல்கிறார்.
திருக்குர்ஆனை முதலில் இருந்து கடைசிவரை தேடிப் பார்த்தாலும், மற்றவர்பேரில்
வெறுப்பை வளர்க்கும் வாசகங்கள் எதுவும் இல்லை. பிரச்னை குர்ஆனில் இல்லை.
நம்மிடம்தான். திறந்த மனதுடன் அதைப் படித்துப் பார்க்க விரும்பிய, என் கண்க ளைத்
திறந்த என் தந்தையார் தீவிர வைணவர்.'
*****************
நன்றி: தினமணி, ரம்ஜான் மலர் - 2003/
சமரசம், மார்ச் 16-31 - 2008
தட்டச்சு & வடிவம்: தாஜ்...
satajdeen@gmail.com |