அரவாணிகளின் 
              வாழ்க்கை! (அரவாணிகளின் வாழ்க்கை நிகழ்வுகளை அப்பட்டமாகப் பேசும் 
              'உணர்வும் உருவமும்' தொகுப்பிற்கான விமர்சனம்.) 
              
              - தாஜ் -
              
              
               சீனி. 
              விசுவநாதன்' அவர்களால் ஆறு தொகுப்பாக தொகுக்கப்பட்டிருக்கும் 'கால 
              வரிசைப் படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்' என்கிற பெரும் முயற்சியின் 
              வடிவங்களை சென்னை சென்றபோது வாங்கிவந்தேன். இதற்காகவே இந்த முறை 
              சென்னை சென்றுவந்தேன் என்றாலும் மிகையல்ல. பாண்டவபுரம்/ உணர்வும் 
              உருவமும்/ நினைவின் குட்டையில்/ நீலி/ ஜெயமோகன் சிறுகதைகள் - 
              முழுத்தொகுப்பு/ குத்தூசி குருசாமியின் சிந்தனைக் களஞ்சியம்/ 
              பெரியார்: தலித்துகள் - முஸ் லீம்கள் யென தேடுதலில் தென்பட்ட மேலும் 
              சில புத்தகங்களையும் தெட்டுத்தடவி முகர்ந்து, தவிர்க்க இயலாமல் அந்த 
              சுகமான சுமைகளையும் வரித்துக்கொண்டேன்.
சீனி. 
              விசுவநாதன்' அவர்களால் ஆறு தொகுப்பாக தொகுக்கப்பட்டிருக்கும் 'கால 
              வரிசைப் படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்' என்கிற பெரும் முயற்சியின் 
              வடிவங்களை சென்னை சென்றபோது வாங்கிவந்தேன். இதற்காகவே இந்த முறை 
              சென்னை சென்றுவந்தேன் என்றாலும் மிகையல்ல. பாண்டவபுரம்/ உணர்வும் 
              உருவமும்/ நினைவின் குட்டையில்/ நீலி/ ஜெயமோகன் சிறுகதைகள் - 
              முழுத்தொகுப்பு/ குத்தூசி குருசாமியின் சிந்தனைக் களஞ்சியம்/ 
              பெரியார்: தலித்துகள் - முஸ் லீம்கள் யென தேடுதலில் தென்பட்ட மேலும் 
              சில புத்தகங்களையும் தெட்டுத்தடவி முகர்ந்து, தவிர்க்க இயலாமல் அந்த 
              சுகமான சுமைகளையும் வரித்துக்கொண்டேன். 
              
              எழுத்தில் உண்மையின் தரிசனம் கிடைப்பது இப்பொழுதெல்லாம் 
              அரிதாகிவிட்டது. கவிதைகள் கொஞ்சம் விதிவிலக்கு. இன்னும் அதில் 
              மங்கவில்லை. பெண் படைப்பாளிகளின் கவிதைகளில் இன்னும் பளீச்சென்று 
              தெரிகிறது. தமிழில் எழுதப்படும் பெரும்பாலான கதை, குறு நாவல், நாவல், 
              கட்டுரை என்பதெல்லாம் எழுத்துக்களின் கூட்டுக் குவியலாகவே 
              இருக்கிறது. நிஜத்தைத் தொடுவது மாதிரி புள்ளிகளை வைத்துவிட்டு, அது 
              பறந்து விரிகிற கோலநேர்த்தி 'என்னைப்பார்' என்பதில்தான் 
              போய்முடிகிறது. 
              
              மிகை புனைவு, வாசகனை எத்தனை உயரத்தில் தூக்கிப் பறந்து வட்டமடித்துக் 
              காட்டினாலும், நிஜமாகவே அவன் அதில் திளைத்தாலும் ஒரு நிலைக்கு மேல் 
              தரைக்குத்தான் வரவேண்டும். இங்கே அவன் எதிர் கொள்ள வேண்டிய யதார்த்த 
              வாழ்க்கையும் அவனை விட்டுவிடாது. இந்த மிகை புனைவினூடே சந்தோஷப் 
              படுத்துதலைத்தான், நாமெல்லாம் முகம் சுழிக்கும் தமிழ்ச் சினிமாவும் 
              செய்கிறது. தமிழ்ச் சினிமாவுக்கு ஒரு நீதி, இலக்கியத்திற்கு ஒரு 
              நீதியா?
              
              'உணர்வும் உருவமும்' அரவாணியரின் வாழ்க்கைப் பக்கங்களை நிதர்சணமாக 
              பேசுகிறது. பத்துக்கும் மேற்பட்ட அரவாணியரைப் பேட்டிக்கண்டுத் 
              தொகுத்து தந்திருக்கிறார் ரேவதி. பாலினச் சிறுபான்மையினரின் 
              பாதுகாப்பு பொருட்டு பெங்களூரில் இயங்கும் 'சங்கமா' என்கிற அமைப்பில் 
              பணிப்புரியும் இவரும் அரவாணியரில் ஒருவர்தான். இந்த நூல், அர வாணியர் 
              மீதான இரக்கத்தைக் கோரவில்லை; பரிதாபத்தை வெளிப்படுத்தச் 
              சொல்லவில்லை. இரக்கமும் பரிதாபமும் பெற் றுப் புலம்பல்களாகத் 
              தேய்ந்து போவதைத் தவிர வேறென்ன விதத்தில் பயன்படக் கூடும்? 
              அரவாணியரைப் புரிந்துகொள்ள இந்நூல் கோருகிறது என்கிறார் 
              இந்நூலுக்குப் பின்னுரை எழுதியிறுக்கும் பெருமாள் முருகன்.
              
              "ஆண் உடலைக் கொடுத்து, அதற்குள் பெண் உணர்வை வைத்து திருவிளையாடல் 
              புரிகிறார்களே அவர்கள் கடவுள்களா? பெற்றவர்களா? நான் என்ன 
              கொழுப்பெடுத்துப்போயா வேஷம் கட்டிக் கொண்டு அலைகிறேன்? நான் யார்? 
              எந்தப் பாலினத்தைச் சார்ந்தவள்? நான் இப்படி இருப்பது சரியா? தவறா? 
              என் கேள்விகளுக்கு எங்கு விடை கிடைக்கும்?" - என்று முன்னுரையில் 
              நம்மை கேட்கும் ரேவதி, இன்னோரிடத்தில் நம்மையும், சமுதாயத்தை 
              குற்றவாளிக் கூண்டிலும் ஏற்றுகிறார். 
              
              "ஒரு ஆணும் ஒரு பெண்ணும் காதலிக்கின்றனர். கல்யாணம் 
              செய்துகொள்கின்றனர். அதேபோல, நான் ஒரு ஆணைக் கல்யாணம் செய்துகொள்ளச் 
              சட்டமும் சமுதாயமும் மறுப்பது ஏன்? ற்றுக்கொள்ள மறுப்பதற்கான காரணம் 
              என்ன? நாங்கள் உங்களைப் பார்க்கும் விதம் சரியாக உள்ளது. அதாவது 
              அண்ணனாக, அக்காவாக, அம்மாவாக, அப்பாவாக, நண்பர்களாக, ஆசிரியராக, 
              இப்படி உறவுகளையும் உங்கள் உணர்ச்சிகளையும் எங்களால் புரிந்துகொள்ள 
              முடிகிறது. நீங்கள் பார்க்கின்ற விதம்? எங்களை மனிதர்களாகக்கூட 
              நினைப்பது இல்லை. இது எங்களுடைய தவறு இல்லை. உங்களுடைய, இந்த 
              சமுதாயத்துடைய தவறு" என்கிறார். 
              
              இந்த புத்தகத்தை முன் வைத்து, அவர்களின் உலகத்தைப் பற்றி இத்தனை 
              காலத்திற்கும் நான் அறிந்ததுதான் என்ன என்கிற கேள்வியை எனக்கு நானே 
              கேட்டுக்கொள்கிறபோது, பதில் வெட்கம் கொள்ளத் தக்கதாகவே இருக்கிறது. 
              எல் லோரையும் மாதிரியே, ஒரு சராசரிப் பார்வையைத்தான் 
              கொண்டிருந்திருந்திருக்கிறேன். அவர்களின் பாலியல் சங்கதிக ளைத் 
              தாண்டி யோசிக்காத என் போதாமைக் குறித்து நான் அந்த சமூகத்தின் முன் 
              தலைக் குனிந்தாலும் தவறில்லை. 
              
              அரவாணியர்கள் காதலுக்காகவும், கல்யாணத்திற்காகவும் ஏங்கும் ஏக்கத்தை 
              இந்த புத்தகத்தின் வழியே அறிய வந்தபோது 'சுரீர்' என்றது. கிடைத்த 
              கணவனோடு வாழ்வில் கொள்ளும் அவர்களின் ஈடுப்பாடும், வாழ்வை 
              தங்கவைத்துக் கொள்ள அவர்களின் தவிப்பும் கூட எனக்கு புதிய 
              செய்திதான். இதையெல்லாம் விட, பெண் உருவெடுக்க அவர்கள் கொள் ளும் 
              ஆவலும், ஒரு கட்டத்தில் அதற்காக அவர்கள் தங்களது உடலை ரணமாக்கிக் 
              கொள்ள வலிய நிற்பதுவும் அறிய கஷ் டமாக இருந்தது.
              
              நமது சமுதாயத் தலைவர்களுக்கும், பெண்மொழியில் பெண்விடுதலைப் பேசும் 
              சகோதரிகளுக்கும், மீடியாக்களில் வலம்வரும் அறிவு ஜீவிகளுக்கும் 
              அரவாணியர்களின் வாழ்வியல் சுகந்திரம் குறித்து பிடிப்படாமல் 
              போனதுதான் எப்படி? இவர்களை குறித்து மதங்கள் ஏன் பேசவில்லை? 
              வாழ்வியல் வழிகாட்டுதலாவது சொல்லியிருக்கிறதா என்ன? இந்தி யச் 
              சட்டங்களில் இவர்களின் மனவலிக்கு மருந்துண்டா? இல்லையெனில் ஏன் 
              இல்லை? உயிரற்ற, உடலற்றப் பிரஜைகளா அவர்கள்? மனித உரிமைக் கமிஷன் 
              இந்த பாவப்பட்ட மனித உயிர்களுக்கு எந்தெந்த வகையில் பரிகாரம் தேடிக் 
              கொடுத் திருக்கிறது? அரவாணியர்களின் நேரடிப் பதிவை வாசித்தப் பிறகு 
              இப்படி அடுக்கடுக்காய் சிக்கலான கேள்விகள் மேலெழு ந்த வண்ணமே 
              இருக்கிறது.
              
              
              
              'உணர்வும் உருவமும்' புத்தகத்திலிருந்து அரவாணியர்களின் வலிகொண்ட ஒரு 
              பகுதியை கீழே அப்படியே வாச கர்களின் பார்வைக்கு வைத்திருக்கிறேன். 
              ராதா என்கின்ற அரவாணி 'தாயம்மா நிர்வாணம்' செய்துக் கொண்டதை தன் மொ 
              ழியில் விவரிக்க, தொகுப்பாசிரியர் ரேவதி என்கின்ற இன்னொரு அரவாணி 
              அதைப் பதிவு செய்திருக்கிறார். அரவாணியின் யதார்த்த மொழியும் அதில் 
              தெறிக்கும் நிஜமும் நம்மை பிடித்தாட்டுகிறது. கட்டுரை 
              எழுதுவதற்கென்றே நம் சக எழுத்தாளர் கள் குறிப்பிட்ட முப்பது, நாற்பது 
              வழவழப்பான வார்த்தைகளை எப்போதும் பாக்கெட்டில் வைத்திருப்பார்கள். 
              அவற்றை கட் டுரைக்குள் திணித்து நமக்கு 'கிழுகிழுப்பை' 
              காட்டுவார்கள். தொடர்ந்து அதையே படித்த நமக்கு, இந்த கட்டுரையின் 
              மொழி வித்தியாசமான அனுபவமாக இருக்கும். கட்டுரையில் 
              புழங்கப்பட்டிருக்கும் நிறைய கலைச் சொற்களுக்கான அர்த்தம் புத்த 
              கத்தின் பக்கங்களில் இருக்கிறது. இங்கே தெரிந்தே அதனை பதியவில்லை.
              
              
              
              
              எனக்கு சொந்த ஊரு நாமக்கல். நான் பம்பாயில் காந்தாராவுல 15 வருஷம் 
              இருந்தேன். காமாட்டிபுரம் பயளகள்ளியில்தான் ரெட்லைட் ஏரியா. அங்கே 
              என்னோட குரு வீட்ல பொண்ணுங்களுக்குத் தண்ணி எடுத்துக் குடுக்கிறது, 
              கடைக்குப்போய் வர்றது மாதிரியான வேலைகளப் பார்த்துக்கிட்டு 
              இருந்தேன். நான் பம்பாயிக்கு வந்து எட்டு மாசத்துக்கு அப்புறம் என்னை 
              நிர்வாணத்துக்கு அனுப்பலாம்ன்னு பேசிக்கிட்டாங்க. ஒரு நாள் எங்க நானி 
              என்னைக் கூப்பிட்டு, "பேட்டா! நீ தாயம்மா கைக்குப் போறயா? இல்ல 
              டாக்டர் கைக்குப் போறயா?" ன்னு கேட்டாங்க. நான், தாயம்மா கைக்கே 
              போறேன்னு"சொன்னேன். (ஏன்னா தாயம்மா கை போட்டுகிட்டா பொம்பள மாதிரியே 
              ஆயிடலாம். கை கால் முடி எல்லாம் கொட்டிப் போயிடுமுன்னு பொட்டைங்க 
              சொல்வாங்க) அதுக்கு எங்க நானி "பேட்டா! தாயம்மா கைக்குப் போகணும்ன்னா 
              தைரியம் வேணும்"ன்னு சொன்னாங்க. "நான் தைரியமா இருக்கிறே"ன்னு 
              சொன்னேன். அன்னைக்குத் தாயம்மாவும் இருந்தாங்க. அவங்களும் என்னை 
              மாதிரி பொட்டைத்தான். அவுங்க தனக்குத்தானே கைப்போட்டு அறுத்துக் 
              கிட்டவங்கன்னு சொல்லுவாங்க. என்னை ஒதுக்குப் புறமா கூட்டிக்கிட்டுப் 
              போய் என்னோட ஆண் குறியப் புடிச்சிப் பார்த்துட்டு 'சீசாம்ம'ன்னு 
              சொன்னாங்க. எங்க நானி என்னையும் என்னோட குருபாயி ஒருத்தியையும் 
              தாயம்மா கூட அனுப்பி வச்சாங்க. நாங்க நிர்வாணத்துக்குப் போறதுக்கு 
              முன்னாடி வீட்ல மாதா பூஜை யெல்லாம் போட்டு சாமிக் கும்பிட்டுட்டுப் 
              பெரியவங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கினோம். அவங்களும் 
              "நல்லவிதமா போயிட்டு வாங்க"ன்னு வாழ்த்தி எங்கள அனுப்பி வச்சாங்க.
              
              தாயம்மா எங்களப் பம்பாயில இருந்து தமிழ் நாட்டுல இருக்கிற 
              உளுந்தூர்பேட்டைக்குப் பக்கத்தில இருக்கிற ஒரு கிராமத்துக்குக் 
              கூட்டிக்கிட்டுப் போனாங்க. அங்கே போய் ஒரு மாசம் ஆன பிறகும் கூட 
              எங்களுக்கு நிர்வாணம் பண்ணல. ஒரு மாசம் கழிச்சி நான் தாயம்மாகிட்ட, 
              "எங்கள ஏன் இப்படி கூட்டியாந்து சும்மாவே வச்சிருக்கிறீங்க? ஒன்னு 
              நிர்வாணம் பண்ணி விடுங்க, இல்ல எங்களப் பம்பாயிக்கே அனுப்பி 
              வச்சிடுங்க"ன்னு சண்டைப் போட்டேன். அதுக்கப்புறம் எங்கள 
              ஆத்தூருக்குக் கூட்டிக்கிட்டு போனாங்க. அங்க ஒரு அம்மா, அதுவும் 
              பொட்டைதான், அந்த அம்மா வீட்லயும் அஞ்சு நாள் இருந்தோம். அப்புறம் 
              ஒரு வியாழக்கிழமை அன்னிக்கிக் 'கைபோடறோம்'ன்னு சொன்னாங்க. மொதநாள் 
              எங்களுக்கு நாங்க ஆசப்பட்ட பொருள் எல்லாம் வாங்கிக் குடுத்துச் 
              சாப்பிட சொன்னாங்க. ராத்திரி சினிமாவுக்கு அனுப்பி வச்சாங்க. சினிமா 
              பார்த்துட்டு வந்ததும், எங்கள உள் ரூமுக்குள்ள கூட்டிக்கிட்டுப் 
              போனாங்க. அப்போ மணி இராத்திரி ரெண்டர மணி இருக்கும். எங்களோட 
              'லிங்கத்த' (ஆண்குறி) பிடிச்சி சணல்கயிரால சுருக்குப் 
              போட்டுவிட்டாங்க. எங்களுக்குத் தூக்கமே வரல. என்ன ஆகுமோ ஏதாகுமோன்னு 
              நெஞ்சு படக்படக்குன்னு அடிச்சிக்கிது. ஒரே பயமா இருக்குது. "அம்மா 
              மாதா நீதான் எங்களுக்கு தைரியம் குடுக்கணும்"ன்னு சாமிய 
              வேண்டிக்கிட்டோம். தூங்காமப் படுத்துக்கிட்டிருந்த எங்கள, 
              விடியற்காலம் நாலு மணி இருக்கும் தாயம்மா வந்து எழுப்புனாங்க. என்னோட 
              குருபாயிக்குதான் முதல்ல கைபோட முடிவு பண்ணுனதா லே பக்கத்து 
              அறைக்குக் கூட்டிக்கிட்டுப் போனாங்க. பூஜையெல்லாம் போட்டிருந்தாங்க. 
              சாம்ராணி, ஊதுபத்தி வாசனை எனக்கு வந்துச்சி. அவள் போயி கொஞ்ச 
              நேரத்துக்குள்ள "அம்மா"ன்னு அலர்ற சத்தம் கேட்டுச்சி. ஒரே பயம் 
              எனக்கு. 'இப்படியே ஓடிப்போயிடலாமா'ன்னு நெனச்சேன். 'நமக்கு என்ன 
              ஆகுமோ? மாதா நீ விட்ட வழி'ன்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன். ரெண்டாவது 
              என்னைக் கூப்பிட்டாங்க. நானும் அந்த ரூமுக்குள்ள போனேன். என்னோட 
              குருபாயியே ஓரமா உட்கார வச்சிருந்தாங்க. அவள் என்னைப் பார்த்துச் 
              சிரிச்சாள். அங்கே தாயம்மாவும் பின்தாயம்மாவும் இருந்தாங்க. 
              (பின்தாயம்மாவும் பொட்டைதான். கோயில் பூசாரியாக இருந்தாங்க) அந்த 
              ரூமுக்குள்ள போனதும் எனக்குப் பயம் அதிகமாயிடுச்சி. என்னோட 
              மூக்குத்தி, கம்மல்,வளையல், நகை, புடவ, ஜாக்கெட் எல்லாத்தையும் 
              அவுத்துட்டாங்க. என்னை அம்மணமா நிக்கவச்சாங்க. என்னோட பயம் இன்னும் 
              அதிகமாயிடிச்சி. கைகால் எல்லாம் வெடவெடன்னு நடுங்குது. அப்படியே 
              அம்மணமா மாதா போட்டோ முன்னாடி நின்னேன். அப்புறம் என் தலைமுடிய வாயில 
              வச்சி கடிச்சிக்க சொன்னாங்க. 'மாதா! மாதா'ன்னு சொல்லச் 
              சொன்னாங்க.வாயிலே முடி இருந்ததால வாயிக்குள்ளேயே 'மாதா! மாதா' ன்னு 
              சொல்லிக்கிட்டேன். அப்புறம் என்னோட ரெண்டு கையையும் தூக்கி 
              பின்தாயம்மா சேர்த்துப் புடிச்சிக்கிட்டாங்க.என்னால கத்தவும் முடியல, 
              பேசவும் முடியல. 'மாதா மாதா'ன்னு வாயிக்குள்ளேயே மொனகிக்கிட்டு 
              இருக்கிறப்போ, தாயம்மா என்னோட ஆணுறுப்ப இழுத்துப் புடி
              ச்சி வச்சி ஒரே அறுப்புப் போட்டாங்க. ஆணுறுப்பு முழுசா அவுங்க கையோட 
              வந்துடுச்சு. அறுக்கும்போது வலிக்கவே இல்ல. அறுத்துட்டு உட்கார 
              வச்சாங்க, எரிச்சல்ன்னா எரிச்சல். அப்படியே நெருப்பிலே உட்கார 
              வச்சமாதிரி ஒரு எரிச்சல். என்னால ஒண்ணுமே பண்ண முடியல. மயக்கம் 
              வந்துடுச்சி. ரத்தத்தப் புடிச்சி என்னோட முகம், கை, கால், உடம்பு 
              எல்லாம் தேச்சிவிட்டாங்க. "அப்படி தேய்ச்சாதான் முடி எல்லாம் 
              கொட்டிப்போயிடும்"ன்னு சொன்னாங்க. நான் கீழப் பாக்கவே இல்ல. என்னை 
              அப்படியே கால அகட்டி நீட்டக்கச் சொல்லி சுவத்தில சாய்ச்சி உக்கார 
              வச்சாங்க. எனக்குக் கண்ணுங்க சொருகிக்கிட்டு போச்சி. தாயம்மா என்னோட 
              கன்னத்துல படார் படார்ன்னு அடிச்சாங்க. தூங்கக் கூடாதாம். அதனாலதான் 
              அடிச்சாங்களாம். அடிச்சதும் நான் "அம்மா"ன்னு சொன்னேன் "அம்மா"ன்னு 
              சொல்லக்கூடாது, மாதான்னு சொல்லு" ன்னு சொல்லச் சொன்னாங்க. என்னால 
              எரிச்சல் தாங்க முடியாம, "எரியுது"ன்னு சொன்னேன். கொஞ்ச நேரம் 
              கழிச்சி, நல்லெண்ணய ஆவி பறக்கக் காச்சி எடுத்துக்கிட்டு வந்து அறுத்த 
              எடத்தில ஊத்தினாங்க. அந்த எரிச்சலுக்கு அந்த எண்ணை ஊத்தினதும் ந்ல்லா 
              இருந்திச்சி. அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சி கருகருன்னு வலி 
              திரும்புச்சி. 'அம்மா!'ன்னு கத்திட்டேன். அப்படி கத்தவும் 
              மறுபடியும், "அம்மான்னு சொல்லக்கூடாது, மாதான்னு சொல்லு"ன்னு 
              சொன்னாங்க. காலையில 7மணி வரைக்கும் தூங்காமே பார்த்துக்கிட்டாங்க. 
              தூங்காமே இருக்கிறதுக்கு அப்பப்போ கன்னத்தில அடிச்சுக்கிட்டே 
              இருந்தாங்க. "தண்ணி தாகமா இருக்குது"ன்னு கேட்டேன். தண்ணி குடிக்கக் 
              கூடாதுன்னு சுக்குக் குடுத்தாங்க. அத என்னால மெல்ல கூட முடியல. காரமா 
              இருந்துச்சி. "தண்ணி தண்ணி"ன்னு கேட்டேன். அப்புறம் காலாசாயா போட்டு 
              ஆத்திக் குடுத்தாங்க. அதக் குடிச்சிட்டு அப்படியே மயங்கி 
              தூங்கிட்டேன்.
              
              காலையிலே ஒரு 10 மணிக்குத் தாயம்மா வந்து எங்கள எழுப்பினாங்க. 
              "பேட்டா பொம்பளையா ஆயிட்டீங்க"ன்னு சொன்னாங்க. எந்திரிக்கச் 
              சொன்னாங்க. எங்களால எழுந்திரிக்க முடியல. அப்படியே கை தாங்கலா 
              புடிச்சி எழுப்பி சுவத்தில சாச்சி உட்கார வச்சாங்க. "ஒண்ணுக்கு 
              வந்துச்சா"ன்னு கேட்டாங்க. "இல்லே"ன்னு சொன்னேன். ஒரு இட்லியும் 
              காலாசாயாவும் கெண்டு வந்து குடுத்தாங்க. நான் தாயம்மாவக் கூப்பிட்டு, 
              ஒண்ணுக்கு வருதுமா"ன்னு சொன்னேன். அப்போ கால் பக்கத்தில மணலக் கொட்டி 
              "ஒண்ணுக்குப் போ"ன்னு சொன்னாங்க. நானும் போனேன். ஒண்ணுக்கு நெயில் 
              பாலீஸ் மாதிரி அந்த மணல்ல வந்து விழுந்துச்சி. அஞ்சி நாள் வரைக்கும் 
              எங்களக் குளிக்க வைக்காம அப்படியே வச்சிக்கிட்டிருந்தாங்க. அஞ்சாவது 
              நாள் சுடுதண்ணி வச்சி உடம்பு எல்லாம் கழுவி விட்டாங்க. அன்னைக்கு 
              ராத்திரி "பம்பாயிக்குப் போகலாம்"ன்னு தாயம்மா சொன்னாங்க. எங்களுக்கு 
              ரத்தம் கசிஞ்சிகிட்டே இருந்துச்சி. என்னால எழுந்து நடக்க முடிஞ்சது. 
              என்னோட குருபாயிதான் கொஞ்சம் கஷ்டப்பட்டுட்டாங்க. வெத்தலையில 
              எண்ணைத்தடவி, அதப் புண்ணுக்குமேல வச்சி துணியால கோவணம் கட்டிவிட்டு, 
              மூணு பாவாட கட்டி அதுக்கு மேல பொடவ கட்டிக் கூட்டிக்கிட்டுப் 
              போனாங்க. ஆத்தூரிலிருந்து மெட்ராசுக்கு இரயில் இல்லாம பஸ்சுலயே 
              கூட்டிக்கிடுப் போனாங்க. பஸ் தூக்கித் தூக்கிப் போட்டதில 
              மெட்ராசுக்கு வர்றதுக்குள்ள ரத்தம் கசிஞ்சி என்னோட உள்பாவாட ஒண்ணு 
              நனஞ்சே போச்சி. சென்ரல் ரயில் நிலையத்துக்கு போனதும் எனக்கு 
              ஒண்ணுக்கு வந்துச்சி. அங்க, நின்னுகிட்டிருக்கிற இரயில்ல ஏறி 
              ஒண்ணுக்கு போயிட்டு, ரத்தம் பட்ட உள்பாவாடய கழட்டி வீசிட்டுத் 
              திரும்பி வந்து பிளாட்பாரத்தில உக்கந்துட்டேன். பிளாட்பாரத்தில 
              போறவங்க வறவங்க எங்களப் பார்த்துக் கிண்டல் பண்ணாங்க. "டேய் கட்ட 
              வண்டி பாருட"ன்னு சொன்னாங்க. பம்பாய் ரயில் வந்ததும் நாங்க 
              ஏறிக்கிட்டோம். ஜெனங்க அதிகமா இருந்ததால நாங்க பாத்ரூம் பக்கமாவே 
              படுத்துக்கிட்டோம். ரேணிகுண்டா பக்கத்தில, "நாங்க போற வர்ற வழியிலப் 
              படுத்துக்கிட்டிருக்கிறோம்"ன்னு ஆம்பளைங்க அடிக்க வந்தாங்க. வேற 
              வழியில்லாம, அவங்க கிட்ட சண்டபோட்டு எங்க தாயம்மா துணியத்தூக்கிக் 
              காட்டி பீலி பண்ணினாங்க. எல்லா ஆம்பளங்களும் மிலிட்டெரி காரனுங்க. 
              அதுக்கப்புறம் "கொச்சவாடு கொச்சவாடு"ன்னு பேசிக்கிட்டானுங்க. எங்கள 
              ஏத்தி விட்டுட்டு தாயம்மா வேற பொட்டியில போயி பொம்பளங்களோட 
              உக்காந்துக்கிட்டாங்க. எங்கள சரியா கவனிக்கக் கூட இல்ல. கொண்டு போனப் 
              புளி சோத்த எங்களால சாப்பிட முடியல. எப்படியோ கஷ்டப்பட்டுப் பம்பாய் 
              போய் தாதர்ல எறங்கி னோம். என்னால நடக்கவே முடியல. மெல்ல மெல்ல 
              நடந்துபோய் டாக்சி புடிச்சி எங்க குரு இருக்கிற எடத்துக்குப் போய் 
              சேர்ந்தோம். எல்லாரும் வந்து எங்களப் பார்த்தாங்க. பார்த்த கையோட 
              நானி வீட்டுக்குப் போகச் சொல்லிட்டாங்க. அங்கிருந்து காட்குப்பர் 
              போனோம். வீட்டுக்கு முன்னாடி எங்கள நிக்க வச்சி, சூடம் கொளித்தி, 
              தேங்காய் சுத்தி, ஒடச்சி அதுக்குப் பிறகு எங்கள் உள்ளக் 
              கூப்பிட்டாங்க.
              
              நாங்க இங்க வந்து ஏழாவது நாளன்னிக்கி தண்ணி காய வச்சிக்கிட்டு 
              இருந்தாங்க. தண்ணி கொதிக்குது. எங்களத் துணி எல்லாத்தையும் அவுக்க 
              சொன்னாங்க. பிறகு மோரியில கால அகட்டி உக்காரச் சொன்னாங்க. ஆவி பறக்க 
              இருந்த சுடு தண்ணிய எடுத்து அப்படியே புண்ணுமேல அடிச்சாங்க. தண்ணி 
              அடிக்கும்போது வலிக்கும். அப்புறம் மறுபடியும் அடிப்பாங்களான்னு 
              இருக்கும். அந்த நமச்சலுக்கும் எரிச்சலுக்கும் சுடுதண்ணிய 
              அடிக்கும்போது சுகமா இருந்துச்சி. அப்புறம் எங்க உடம்பக் கழுவி, 
              கத்தரிக்காய், கருவாடு போட்டுக் கொழம்பு வச்சி சாப்பாடுப் போட்டாங்க. 
              மறுநாள் புண்ணு
              இருக்கிற எடத்தில நமச்சல் ஜாஸ்தியா ஆயிடுச்சி. அன்னைக்கும் அதே 
              மாதிரி சுடுதண்ணி அடிச்சாங்க. லைபாய் சோப்புப்போட்டுப் புண்ணுமேல 
              தேச்சி விட்டாங்க. அப்புறம் தண்ணி வச்சி சலார் சலார்ன்னு புண்ணு மேலே 
              அடிச்சதும், புண்ணுசுத்தி இருந்த அழுக்கு, கெட்ட ரத்தம், எல்லாம் 
              போயிடுச்சி. வெள்ள காட்டன் துணிய வச்சிப் புண்ணுமேல ஒத்தி ஒத்தி 
              எடுத்தாங்க. அப்புறம், ஒரு தட்டுல நெருப்பப் போட்டு அதுல ஓமமும் 
              பூண்டுத் தோலையும் போட்டாங்க. அந்தப் பொகைய புண்ணுக்குக் 
              காட்டினாங்க. அப்படி காட்டினா கெட்ட நீர் எல்லாம் வந்துடுமாம். 
              அந்தப் பொகைய காட்டுன பிற்பாடு மறுபடியும் துணி வச்சி ஒத்தி 
              எடுத்தாங்க. நல்லெண்ணய வெதுவெதுன்னு காயவச்சி புண்ண சுத்தி 
              ஊத்தினாங்க. அந்த எண் ணைய் ஊத்தறப்போ சுகமா இருக்கும். ஆனா, 
              ஒண்ணுக்குப் போற ஓட்டையில படும்போது சுரீர்ன்னு வலிக்கும். இந்த 
              மாதிரி முப்பது நாளைக்கு செஞ்சாங்க. 
              
              எங்களுக்கு சப்பாத்தி, பாவக்காய், காலாசாயா, நெய் இந்த மாதிரியானத 
              சாப்பிடக் குடுப்பாங்க. சப்பாத்திய சுத்தி எடுக்கிற மாதிரி புண்ணு 
              காவும் சுத்திலும் ஆறிகிட்டே வருமாம். அப்படித்தான் ஆறிகிட்டே 
              வந்துச்சி. பால் குடம் எடுக்கற் நாற்பது நாள் வரைக்கும் பால் 
              குடிக்கக் கூடாம். 11 வது நாள் தலைக்குத் தண்ணி ஊத்தினாங்க. 20 வது 
              நாள், 30 வது நாள் தலைக்கு தண்ணி ஊத்தினாங்க. தலைக்கு தண்ணி ஊத்தற 
              அன்னிக்கெல்லாம் ஆட்டுத் தலைக்கறி கொழம்பு வச்சி சாப்பாடு 
              குடுத்தாங்க. எங்களப் பார்க்க வர்ற பெரிய, சின்ன பொட்டைங்கொல்லாம் 
              எங்களுக்கு காசு சுத்தி குடுத்துட்டுப் போனங்க. கோதுமை மாவு, 
              வெல்லம், டீதூள், நெய் இந்த மாதிரியான பொருள்கள வாங்கியாந்து எங்களப் 
              பாத் துட்டுக் கொடுத்துட்டுப் போவாங்க. நாற்பது நாள் வரைக்கும் 
              ஆம்பிளைங்க முகத்தையே பார்க்கக் கூடாது, கண்ணாடி பார்க்கக் கூடாது, 
              முகத்தில இருக்கிற முடியக் கூட எடுக்கக் கூடாது. ஏன்னா, ஆம்பளைங்க 
              முகத்தப் பார்த்தா ஆசை வரும். இந்த நேரத்தில ஆசை வரக்கூடாதாம். 
              மாதாவுக்கு பூஜை எல்லாம் போட்டு, பால் குடம் சுமந்து ஆத்துலயோ 
              கொளத்திலயோ கொட்டிட்டு மாதா போட்டோவ முதன் முதல்ல பார்த்துட்டுதா 
              நம்ம முகத்த பார்க்கணுமாம். அப்பதான் அந்த மாதா மாதிரி நாமளும் 
              இருப்போம்ன்னு சொல்றாங்க.
              
              இப்படியே 39 நாள் போச்சி, 40 வது நாள் எனக்கு கப்பு போட்டு 
              விட்டாங்க. கப்புன்னா என்னோட முகத்தில வளந்து இருக்கிற முடிய வேரோடப் 
              புடுங்கி எடுக்கறது. அதையெல்லாம் எடுத்த பிறகு அன்னைக்கு ராத்திரி 2 
              மணிக்கு ஒரு பலகைப் போட்டுப் பாவாட மட்டும் கட்டி, எங்கள அதுமேல 
              உக்கார வச்சாங்க. அன்னைக்கு அல்திமேந்தி வைச்சாங்க. மஞ்சள், மருதாணி, 
              சக்கரயக் கொண்டு வந்து வச்சாங்க. பெரியவங்கள்ல இருந்து சின்னவங்க 
              வரைக்கும் எல்லாரும் வந்து மஞ்சளப் பூசிவிட்டு மருதாணி தடவி, சக்கரய 
              வாயிலப் போட்டு ஆராத்தி எடுத்தாங்க. அதுக்குப் பிறகு தண்ணிய 
              ஊத்திவிட்டாங்க.
              
              காலையில 4 மணிக்கு நல்ல நேரம் பார்த்து என்னோட குரு எனக்குப் பச்ச 
              புடவ, ஜாக்கெட், பாவாட, பச்ச வளையல், மூக்குத்தி, லஜ்ஜா, கொலுசு, 
              மெட்டி எல்லாத்தையும் குடுத்துப் போட்டுக்கச் சொன்னாங்க. 
              எல்லாத்தையும் போட்டுக்கிட்டு யாரையும் பார்க்கக்கூடாது. ஜோக் 
              ஏத்தினபிறகு முக்காடு போட்டு முகத்த மறச்சிக்கிட்டு மாதாவுக்கு 
              பூஜைப்போட்டு பாட்டுப்பாடி, ஆராத்தி எடுத்துப் பால் குடத்தத் 
              தலையிலத் தூக்கி வச்சாங்க. "மாதா மாதா"ன்னு சொல்லச் சொன் னாங்க. அந்த 
              பால் குடத்தத் தூக்கிக்கிட்டு ஊர்வலமா போய் கடல்ல ஊத்திட்டு, அந்த 
              குடம் நெறய கடல் தண்ணிய எடுத் துக்கிட்டு வீட்டுக்குத் திரும்பி 
              வந்தோம். அதுக்குப் பிறகு எங்க முக்காட்ட எடுத்துட்டு மாதா போட்டோவப் 
              பார்க்கச் சொன்னாங்க. எது பிடிக்குதோ அத எடுத்து சாப்பிடச் 
              சொன்னாங்க. நான் முக்காட்ட எடுத்துட்டு மாதா போட்டோவப் பாத்தேன். 
              அந்தம்மா அழகா ஜொலிச்சாள். வெளக்கு ஏத்தி வச்சிட்டு அதுக்குப் 
              பக்கத்தில தேங்கா, பழங்க, பலகாரங்க, கேசரி, எல்லாம் வச்சிருந்தாங்க. 
              கேசரி மேல அந்த அம்மாவோட சின்னமான 'ஓம்' எழுதி இருந்திச்சி. 'எத 
              முதல்ல எடுத்து சாப்பிடறது'ன்னு யோசனப் பண்ணிட்டு முதல்ல அந்த கேசரிய 
              எடுத்துச் சாப்பிட்டேன். எல்லோரும், "நல்லது பேட்டா. இனிப்பு தான் 
              எடுத்து இருக்கிறே. இனிமே உன் வாழ்கை நல்லா இருக்கும்"ன்னு 
              சொன்னாங்க. அப்புறமாதான் கண்ணாடியக் காட்டி என்னோட முகத்தப் பாக்கச் 
              சொன்னாங்க. அதுக்கப்புறம் பெரியவங்களுக்குப் பாம்படுத்தி சொல்லச் 
              சொன்னாங்க. இன்னைக்கும் அந்த மாதா புண்ணியத்தில எந்தக் கொறையும் 
              இல்லாம நான் நல்லா இருக்கிறேன்.
              
              இப்போ எல்லாம் எங்கியாவது கொஞ்சம் ரத்தத்தப் பார்த்தாலும் தலை 
              சுத்திக்கிட்டு வருது, பயமா இருக்குது. ஆனா அன்னைக்கு நான் பொம்பளையா 
              ஆவணும்ன்ற ஆவேசமும், அந்த மாதா என்னோட உடப்புக்குக் குடுத்த தெம்பும் 
              தான் பயமில்லாம வச்சிருந்துச்சி. மேல தண்ணி அடிக்கும்போது சில 
              நேரத்தில வலிக்கும். சில நேரத்தில சுகமா இருக்கும். வலிக்கறப்போ நான் 
              காலுங்கள குறுக்குனாலோ, கத்தினாலோ பெரியவங்க அடிப்பாங்க. 'பொம்பளயா 
              ஆகணும்ன்னா சும்மாவா'ன்னு சொல்லுவாங்க. அவுங்க அடிச்சதும் 
              திட்டினதும் 40 நாளுக்கப்புறம்தான் தெரிஞ்சிச்சி. தண்ணி, பொசு, 
              எண்ணைய் எல்லாம் வாங்குனதாலதான் புண்ணும் சரியா ஆச்சி. ஒண்ணுக்கும் 
              தாராளமா வந்துச்சி. இதெல்லாம் ஒரு தெய்வ செயல்ன்னுதான் சொல்லுவேன். 
              தாயம்மா நிர்வாணத்த இப்ப நெனச்சாலும் பயமாதான் இருக்குது. 
              
              
              satajdeen@gmail.com
              www.tamilpukkal.blogspot.com 



 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991




