இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜூலை 2006 இதழ் 79 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
இங்கே விளம்பரம் செய்ய வேண்டுமா? 
ads@pathivukal.com
Amazon.Ca
In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் முரசு அஞ்சலின் latha, Inaimathi, Inaimathitsc அல்லது ஏதாவது தமிழ் tsc எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
இலக்கியம்!
இன்னுமொரு தரிசனம்!

- தாஜ்..


- மலையாளக் கவிஞர் ஐய்யப்பன் அவர்களது, 'ஐய்யப்பன் கவிதைகள்' தொகுப்பிற்கான மதிப்புரை. உன்னதம் நவ, டிச 2005 இதழில் வெளி வந்தது.
சில மாற்றங்களுடன் மீண்டும். -


எழுத்தாளர் தாஜ்சுமார் பதிமூன்று ஆண்டுகளுக்கு முன் நண்பரும் படைப்பாளியுமான ஜெயமோகனால் எனக்கோர் பின்னடைவு ஏற்பட்டது. சிற்றிதழ்களின் வழியே,
தமிழ் மொழியில் மாற்றம் காணும் மலையாளக் கவிதைகளைத் தேடி ஆர்வமாய் வாசிப்பதிலிருந்து நேர்ந்த பின்னடைவு அது.

'தற்கால மலையாளக் கவிதைகள்' என்கின்ற தலைப்பில் சில ஆண்டுகளுக்கு முன் ஜெயமோகன் ஒரு தொகுப்பை கொண்டு வந்திருந்தார். அதில் பல மலையாள
கவிஞர்களின் கவிதைகளில் ஒரு சிலவற்றை தேர்வு செய்து, அவரே மொழி மாற்றமும் செய்திருந்தார். காலச்சுவடு இதழில் பிரசுரிக்க வேண்டி அந்தப் பணியை தாம் மேற்கொண்டதாக அதன் முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார்.

"இக்கவிதைகள் தனக்கு எவ்விதமான அனுபவத்தையும் ஏற்படுத்தவில்லை, இவை கவிதையின் பின்தங்கிய நிலையையே கட்டுகின்றன" என்று சுந்தர ராமசாமி
நிராகரித்துவிட்டார் என்று கூறிய ஜெயமோகன், உள்ளூர அவருடைய பாரபட்சமின்மையின் மீது அபரிமிதமான மரியாதை உடையவன் என்பதால் அந்தக் கவிதைகளைத் தூரத் தூக்கிப் போட்டு விட்டேன் என்றும் தெளிவுப் படுத்துகிறார்.

தூர தூக்கி போட்ட அந்த கவிதைகளை பின்னர் அவர் ஒரு தொகுப்பாகக் கொண்டு வந்தார். அப்படி கொண்டுவர காரணம் என்ன என்பது பற்றியும், தனது மொழிபெயர்ப்பை நியாயப்படுத்தியும் அந்த முன்னுரையின் கடைசியில் ஒரு பாடு விளக்கமும் எழுதியிருந்தார்.

மேலே குறிப்பிட்டிருக்கிற என் பின்னடைவு சிலகாலம்தான் நீடித்தது. ஜெயமோகன் அல்லாத வேறு நபர்களால் தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்ட மலையாள கவிதைகளை தொடர்ந்து வாசிக்க, பிடித்தும் போனது. சச்சிதானந்தன், பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, ஆற்றூர் ரவிவர்மா, போன்றோர்களின் கவிதைகளில் பழைய மாதிரியே ஈடுபாடு கொண்டேன். இன்னொரு பக்கம் ஜெயமோகன் மீதிருந்த அழுத்தமான பிடி நழுவத் தொடங்கியது.

ஐய்யப்பனின் இந்த தொகுப்பை வாசித்ததற்கு முன், அவரது 'இரவு உணவு' இன்னும் ஓரிரண்டுக் கவிதைகளைத் தவிர அவரது பிற கவிதைகளை வாசித்ததாக நினைவில்லை. எம்.கோவிந்தன், குஞ்நுண்ணி, டாக்டர்.கெ.அய்யப்ப பணிக்கர்,
ஆர். ராமச்சந்திரன், என்.என். கக்காடு போன்ற மலையாளக் கவிஞர்களை தனது கவிதைத் தொகுப்பில் ஜெயமோகன் தாராளமாகவும் சிறப்பாகவும் அறிமுகம் செய்திருந்த அதே நேரம், அய்யப்பன் குறித்த அறிமுகம் என்பது ஏனோ தானோ ரகம்தான். " நிறைய எழுதியுள்ளார், தனித்துவத்தை நிருபிக்காதவர், திருவனந்தபுரத்துக்காரர் " எண்ணி சில வார்த்தைகள். அவ்வளவுதான்.

"வேறு பட்ட கவிதையாக்கம் காரணமாக எழுபதுகளில் இலக்கிய கவனத்திற்குள்ளான அய்யப்பன்"  "பேதலிப்பின் தடுமாற்றங்களுக்கும் தெளிவின் பரவசத்திற்கும் இடையில் உருவாகின்றவை அவரது கவிவெளிகள்" "கண்ணீர்த் துளியின் விசும்பலிலிருந்தும் குருதியோட்டத்தின்
மௌனத்திலிருந்தும் உயர்கிறது அவரது மொழி"

'ஐய்யப்பன் கவிதைகள்' தொகுப்பின் முன்னுரையில் அவரை நமக்கு இப்படி அறிமுகப்படுத்தி சிலாகிக்கிறார் கவிஞர் சுகுமாரன். ஜெயமோகனின் வரிகளால்
ஐய்யப்பனை கண்டுக்கொள்ளாமல் இருந்ததுப் போக, சுகுமாரனால் அவர் மீதான கவனம் இன்றைக்கு இரட்டிப்பாகியது.

அய்யப்பன் கவிதைகளை வாசித்து அசைப் போட்டபோது, கவிஞர் சுகுமாரனின் கூற்றில் இம்மியும் பிசகு இருப்பதாக தோன்றவில்லை.

ஏமாற்றத்தின் வருத்தமும், மரணத்தின் துயரமும், சங்கடத்தின் கோபமும் அவரது கவிதைகளில் பதிவு கொள்கிறபோது அவைகள் முகமற்று, சிதிலமான
கட்டமைப்பினுள், எங்கோ ஒரு தொய்யலில் அதுவும் நமது உணர்தலுக்கு மட்டுமே சிக்குவதாக இருக்கிறது.

கவிதையின் ஊடுபாவு அறுபடாத நேர்த்தியோடு/ எல்லா முனைகளையும் இழுத்துப்பிடித்து நெய்யப்பட்டிருக்கும் நயம் நம் ரசனையைக் குவிக்கிறது/ இன்னும்,
புராண இதிகாச காட்சிகளின் படிம வேலைப்பாடுகள் யென அவரது கவிதைகள் தனித்துத் தெரிகின்றது.

'பறவைகளின் பாட்டும்/ ஆறும் பூக்களும்/ தாயின் அழுகையும் நிறைந்த/ தகர்ந்து போன அதிகாலையில்/ நண்பன் தலை வைத்த/ தண்டவாளத்தோடு நான்/
தீர்த்த யாத்திரைக்குச் சென்றேன்/ யமுனை நிறைய கண்ணீர்/ கங்கா நீருக்கு சவத்தின் ருசி/ இமயத்தில்/ ரத்தம் உறைந்து போன/ பனிக் கட்டிகள்.'

தாயின் அழுகையில் தகர்ந்து போன கவிஞன், மனதிற்கு இதமாய் தெரிகிற மண்ணை விட்டும் புண்ணிய நதிகளில் நீராடச் சென்றான். பாவங்களை கழுவி புதுப்பிறவி எடுக்க யத்திரையை மேற்கொண்டவனுக்கு அங்கே கண்ட காட்சிகள், மீதமிருந்த அவன் நிம்மதியை பறிப்பதாக இருக்கிறது. கவிஞனது ஏமாற்றத்தின் வருத்தத்தை கூறும்
'பாலங்கள்' என்ற அந்த கவிதையின் மொத்த காட்சிகளும் உணர்தல் எனும் மூன்றாவது கண்ணுக்கே சிக்குவதாய் இருக்கிறது.

'கர்ப்பத்தில் உருவாகிய செடி/ மயானத்தில் மகாவிருட்சம்/ இல்லை சூடு/ இல்லை மழை/ இல்லை வசந்தம்/ இலைகள் உதிர்ந்த/ அம்மாவின் சிரசில்/ இறந்த மகனின் சிரிப்புகள் மட்டும்/ பயமே அபயம் பலன் கூடாத/ சிலையை உடைத்தேன்/ தெய்வம் வரவில்லை/ இலயுதிர் காலத்தில் தீ பிடிக்கின்றது/ சிதையில் குதிக்கிறாள் அம்மா.'

சாவு என்பது பிறப்பு மாதிரியே சாதாரண நிகழ்வாக தத்துவங்கள் பேசினாலும், தாயின் மரணத்தில் மகனின் துயரம் தவிர்க்க முடியாதது. இங்கே கவிஞன் தனது தாயாரின் மரணத்தால் அளவிட முடியாத துயரம் கொள்கிறான்.

'மரணத்தைக் கண்டு அஞ்சு, அந்த பயத்தை நிகழ்த்தும் சக்தியிடமே நீ பாதுகாப்பு தேடு, அதனால் நேரும் பலாபலன்களை குறித்து யோசிப்பதையும் தவிர்' யென கடவுள்களின் வேதங்கள் கூறும் கூற்றிற்கு, தன் தாயாரின் மரணத்தால் துயர்கொள்ளும் கவிஞன் கோபாவேசம் கொள்கிறான். கவிதையும் அதன் தாக்கமும் நம் புருவத்தை உயர்த்துகிறது. 'இல்லை சூடு, இல்லை மழை, இல்லை வசந்தம்' என்கிற தலைப்புக் கொண்ட அந்த கவிதையோ கலை நுட்பமாக மலரக் காட்சித் தருகிறது. அங்கே, கவிஞனின் துயரமும் கோபமும் அந்த கவிதையின் துண்டாடப்பட்ட வரிகளில் படிமங்கலாகவே காணக் கிடைக்கிறது.

நவ இலக்கியத்தை நாடி வருபவர்களிடம், புதுக் கவிதை புரிவதில்லை என்ற முனு முனுப்பு உண்டு. இந்த உள் வட்ட சங்கதிகள் குறித்து, கவிதைப் படைப்பாளிகளிடம்
மனசங்கடங்களும் கொஞ்சம் போல மின்னும் கோபமும் உண்டு. சங்கடத்தினாலான அந்த கோபத்தை ஐய்யப்பன் தனது கவிதை ஒன்றில் பதிவு செய்திருக்கிறார். 'கண்களின் வசந்தம்'  என்ற அந்த கவிதையின் நேர் பார்வையில் அவரது கோபத்தின் சரடும் தட்டுப்படாத பிசிர்
அற்றப் படைப்பு.

உள்ளங்கைத் தண்னீர்/ ஒரு தடாகம்/ இருட்டு மரத்தில்/ கருத்தப் பட்சி/ வெடி வெடித்தால்/ கடைசி காலம்/ பெருந்தச்சனின் உளிபட்டு/ ஜனன இந்திரியங்கள் உட்பட/
அனைத்தும் புனர் சிருஷ்டிகள்/ பொந்தில் ஒளிந்த சிவசர்ப்பத்தை/ பாம்பாட்டி பிடித்துச் செல்கிறான்/ தொப்புளில் முளைக்க வேண்டிய அரவிந்தம்/ சகதிக் கிடங்கில் மலர்கிறது.

அய்யப்பனின் பூர்வீகம் தமிழகம் யென கூறப்படுகிறது. திருவனந்தபுரத்தில் உள்ள அவரது குடும்பத்தில் புழங்கு மொழி இன்றைக்கும் தமிழ்தான் என்கிறார்கள். என்றாலும், பிறந்து வளர்ந்த விதத்தில் மலையாள மொழிக்காரராகவே அறியப்படுகிறார். அதனாலோ என்னவோ அவரது கவிதைகள் சிலவற்றில் திராவிட கருத்தாக்கங்களும், வேறு சில கவிதைகளில் கம்யூனிஸ மனோபாவமும் காணமுடிகிறது.

ஒரு நல்ல கவிதைக்கு ஆகாத பிரச்சாரத் தொனி, இந்த கவிதைத் தொகுதியில் மேலேழுந்தவாரியாக சிலவற்றில் முகம் காமிக்கிறது. இருந்தும் அவைகளை புறம் தள்ளிவிட
முடியவில்லை. அத்தனைக்கு அந்த கவிதைகள் உயிர்ப்போடு இருக்கிறது. கொள்கை ரீதியாக,
இன ரீதியாகவும் அவர் கொண்டிருப்பதாக நாம் உணர வரும் 'ஜென்மாந்திர கோபம்த்தினை' உள்ளடக்கியதாக அந்த கவிதைகள் இருக்கிறன .

'ஏகலைவா/ உன்னை காண்பதற்கில்லை/ இன்றும் நீ / அந்த துரோணனின் சிற்ப சிருஷ்டியிலா/ அறிவின் அங்கமான உனது/ பெருவிரல் வளர்ந்து விட்டதா/ ஏகலைவா நீயின்று எங்கிருக்கிறாய்/ உனது கறுத்த உடம்பை நம் குலம் தேடுகிறது/ ஓர் மையில்/ பழைய பனிக்காலம் தந்த/ போர்வையை நினைவூட்டுகிறாய் நீ/ வா ஏகலை
வா/ நீ கலகம் செய்யவோண்டிய காலம் தானிது/ படைக்கின்ற சிற்பத்தை மிதித்துக் குழைத்தொரு மிருகமாக்கு/ குரு ஞாபகம் வோண்டாம் அம்புகளை எடு/ அவனது ஐம் புலன்களைத் தகர்த்தெறி.'

'ஏகலைவா' என்கிற இந்த கவிதை திராவிட கருத்தாக்கத்தை பிரதி பலிக்கிறது என்றால், 'காணத சரித்திரம்' என்னும் தலைப்புடையக் கவிதையோ அவரது கம்யூனிச மனோபாவத்தைப் பிரதி பலிக்கிறது. இந்த தொகுப்பில் காணும் சில குறியீடுகளும், அதனோடான படிமங்களும் ஒன்றிற்கு மேற்பட்ட கவிதைகளில் திருபத் திரும்ப வெளிப்பட்டிருப்பதை காணமுடிகிறது. சில கவிதைகளின் சில வரிகள் வசன நடை. இந்த சின்னச் சின்ன நெருடலான சங்கதிகளைத் தவிர்த்துப் பார்த்தால்... இந்த தொகுப்புத் தந்த அனுபவம் குறிப்பிடத் தகுந்ததாக இருக்கிறது. கவிதை வாசிப்பில் எனக்கு கிடைத்த இன்னொரு தரிசனம்.

கவிஞர் ஐய்யப்பன் அவர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அனுதாபியாக அறிய முடிகிறது. கவிதை என்ற ஊடகத்தின் வழியே பார்த்தால், அவர் கலை நுட்பங்களை
ஆராதிக்கிறவர் என்பது தெளிவு. இங்கே தமிழகத்தில், இந்திய கம்யூனிஸ்டைச் சார்ந்த முற்போக்கு எழுத்தாளர் சங்க எழுத்தாளர்களுக்கு'லோக்கல்' சித்தாந்தத்தின்படி கலை நுட்பங்கள் ஆகாது. அப்படியான எழுத்தாளர்கள் அத்தனைப் பேர்களும் ஆகாதவர்கள். இவகளின் பார்வையில்
இன்னும் ஐய்யப்பன் புலணாகவில்லை என்றே தோன்றுகிறது. நல்ல வேளை அவர் வேறு மானிலத்தவராகப் போய்விட்டார்!

யார் கண்டது, இப்படியான ஒரு பிடியில் அங்கே ஐய்யப்பனும் தன் இயக்கத்தாரிடம்
சிக்கித் தவிக்கின்றாரோ என்னவோ!

இந்த கவிதைகளை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் சொய்திரு க்கும் என்.டி. ராஜ் குமார் மிகுந்த ஈடுபாட்டுடன் உழைத்திருப்பதை நிதர்சணமாக உணரமுடிகிறது. இரு மொழியும் அறிந்து தேர்ந்த 'மகானுபாவன்களுக்கும்' கிட்டாத மொழி மாற்றமாக
இது இருப்பதை அனுபவம் கொண்டு யூகிக்க முடிகிறது.

"புதிய கவிதை வடிவமாற்றம் அல்ல, உணர்வு நிலை மாற்றம் என்பதை திட்பமாக அறிந்த நவீன கவிஞர்களில் ஒருவர் அய்யப்பன்" என்கின்ற கவிஞர் சுகுமாரனின் கூற்றை கர ஒலி எழுப்பி ஒப்புக்கொள்கின்ற தருணத்தில், ஐய்யப்பன் குறித்து ஜெயமோகன் எழுதியிருந்த
'அந்த' அறிமுகம் ஏனோ நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

ஐய்யப்பன் கவிதைகள் / தமிழில்: டி.எம். ராஜ்குமார் / வெளியீடு: புது எழுத்து / 39, ஜே. கே. சி. தெரு / காவேரிப் பட்டினம் / கிருஷ்ணகிரி மாவட்டம் / pin: 635 112 / விலை ரூபாய் : 60.

tamilpukkal@gmail.com

 

© காப்புரிமை 2000-2005 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner