| 
புதிய படிமங்களைத் தேடினக் கலைஞன் வெர்னர் 
ஹெர்ஸாக்! 
- சுப்ரபாரதிமணியன் -
 
  வெர்னர் 
ஹெர்ஸாக்கிற்கு அப்போது பதினாறு வயது உயர்நிலைப்பள்ளியில் படித்துக் 
கொண்டிருந்தார். இரவு எட்டு மணி முதல் காலை ஆறு மணி வரை வெல்டிங் நடக்கும் ஒரு 
இடத்தில் வேலை. பள்ளி நேரங்களில் தூக்கம். மதிய நேரங்களில் படங்களை உருவாக்கும் 
முயற்சி. திரைப்படக் கம்பெனி ஒன்றுக்கு ஒரு கதையை எழுதி சமர்ப்பித்திருந்தார். 
அவர்களுக்கும் அக்கதை பிடித்துப் போய் விட்டது. கடிதத் தொடர்பு கொண்டு ஒரு 
உடன்படிக்கையும் எழுதியாயிற்று. சாவகாசமாய் ஒரு நாள் நேரில் சென்று 
அறிமுகப்படுத்திக் கொண்டார் ஹெர்ஸாக். இளம்வயதும், திரைக்கதையும் கம்பெனிகாரர்களை 
குழப்பிற்று. நாற்பது வயதாவது இருக்கும் என்று நினைத்திருப்பார்கள் போலும். 
ஏமாற்றம் சற்று அவநம்பிக்கை. கடைசியில் ஒப்பந்தம் முறிந்து போய்விட்டது. 
 தொடர்ந்து பல அவமானங்கள், வேதனைகள். தோல்விகள் மட்டுமே உருவாக்கிய மனிதனாய் 
ஹெர்ஸாக் வளர்ந்தார். அவரின் முதல் படத்திற்கு பெர்லின் திரைப்பட விழாவில் 
வெள்ளிக்கரடி பரிசு கிடைத்தது. THE SIGNS OF LIFE என்ற அப்படம் அவருக்கான 
அங்கீகாரத்தை தேடித்தந்தது. அப்படத்திற்குக் கிடைத்த பரிசு அடுத்த படமான DWARFS 
எடுக்க பயன்பட்டது.
 
 தீவொன்றுக்கு அனுப்பப்படுகிற ஜெர்மன் ராணுவ வீரன் ஒருவனுக்கு பழைய கோட்டையையும் 
தேவையற்ற ஆயுதங்களைக் கொண்ட கிடங்கொன்றையும் காவல் காக்கிற வேலை. அவனுடைய மனைவியும் 
மற்ற இரண்டு ராணுவ வீரர்களும் அந்தத் தீவில் அவனுக்குத் துணை. பழைய கிரேக்க 
எழுத்துக்களுடனான அவனின் பரிச்சயம் பொழுது போக்க உதவுகிறது.அதுவும் žக்கிரம் 
அலுப்படைந்து விடுகிறது.
 இந்த படத்தில் மூலப் பிரதியை பார்க்கவும் அவ்வப்போது வந்து போகும் நாடோடி சற்று 
சுவாரஸ்யம் தருகிறான். அந்த நாடோடி தன்னை ஒரு ராஜாவாக சொல்லிக் கொள்கிறான். ராணுவ 
வீரன் அலுப்பான வாழ்க்கையைப் பற்றி கேப்டனிடம் சொல்ல மலைப்பகுதிக்கு ரோந்து செல்ல 
அனுப்பப்படுகிறான். அந்தச் சூழலும் அவனுக்கு சோர்வைத் தருகிறது. எரிச்சலையும் அவன் 
கூட இருப்பவர்களை கொல்வதாக மிரட்டி துரத்துகிறான். ஆயுதங்களை வெடித்து பக்கத்து 
டவுனுக்கு சேதம் விளைவிக்கப் போவதாக மிரட்டுகிறான். அவனை யாரும் நெருங்கக்கூடாது 
என்று எச்சரிக்கிறான். சில ராக்கெட்டுகளை வெடிக்கிறான். பயப்படுகிறார்கள் டவுன் 
மக்கள். அவனைப் பிடிக்க சில ராணுவ வீரர்கள் முயல்கிறார்கள். வெற்றி பெறுகிறார்கள். 
தீவிலிருந்து வெளியேற்றப் படுகிறான். மனிதர்களின் விசித்திர மனநிலை
 பற்றிய கனவை அவரின் முதல் படத்தில் விரித்திருந்தார். ஆழ் மன ஏக்கங்களை இனம் காணும் 
முயற்சியாக இவருடைய படங்கள் அமைந்திருந்தன.
 
 "நான் சினிமாவில் புதிய புதிய படிமங்களைத் தேடினேன். பத்திரிக்கைகள் தரும் 
படிமங்கள் சலிப்பூட்டுகின்றன. அஞ்சல் அட்டைகளும் சலிப்பூட்டுகின்றன. டிராவல் 
ஏஜென்சியின் போஸ்டர் கூட சலிப்பாகிறது. இவையெல்லாம் நைந்து போன வீணான படிமங்கள். 
தொடுவனத்தின் விளிம்பில் தெரியும் தொலைதூரத் துண்டு நிலம் போல எனக்கு புதிய 
படிமங்களை பற்றின அறிவு இருக்கிறது. நான் புதுப்புது படிமங்களை பார்த்து அவற்றை 
வடிவமைக்க முயற்சிக்கிறேன். என் படங்களின் கனவுக் காட்சிகளில் இதை நான் 
முயற்சித்திருக்கின்றேன்" என்றார்.
 
 தனக்குள்ளாக இருக்கும் உள்நோக்கை புரிந்து கொள்வதற்கு படங்கள் உதவி பண்ணியதாக 
நம்பியவர் வெர்னர் ஹெர்ஸாக். நவீன உலகத்தின் இயக்கமும், இயற்கையோடான 
உணர்வுப்பூர்வமான வாழ்க்கையிலிருந்து பிரிந்து விட்டது என்று மனம் நொந்து போனவர்,  
தற்கால வாழ்க்கையைப் பற்றியும் அவரின் படங்கள் எவ்வித அணுகுமுறையை கொண்டதல்ல. அதைத் 
தாண்டியும் வெவ்வேறு கால அளவிலும், அனுபவக் களனிலும் பயணம் செய்கிறவை.
 
 ஹெர்ஸாக்கிற்கு சாதாரண சமூகம் பற்றின அக்கறை வேறுவகையானதாக இருந்திருக்கிறது. 
உலகின் மிக சாதாரணப் பிரஜைகள், ஒதுக்கப்பட்டவர்கள், வாழ்க்கையில் காயம் பட்டவர்கள் 
இவரின் பார்வைக்குள்ளாகிறார்கள். சமூகம் நிராகரித்தவர்களை இவர் படங்களில் 
அங்கீகரித்தார்.
  இந்த 
வகையில் EVEN DWARFS STARTED SMALL என்ற படம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 
இப்படமும் கட்டுப்பாடற்ற மனித மனநிலை பற்றி விவரிக்கிறது. டைரக்டரை ஸ்தானத்தில் 
இருக்கும் ஒருவர் வெளியே போக சிலர், தாங்கள் சுதந்திர உணர்வு பெற்றவர்களாய் 
உணர்கிறார்கள். டைரக்டரை எதிர்த்து நீண்ட உரைகளை நிகழ்த்துகிறார்கள். அவரின் 
பிரியமான மரங்களை வெட்டிச் சாய்க்கிறார்கள். டெலிபோனைச் சிதைக்கிறார்கள். 
டைரக்டரின் படுக்கையில் விஷமங்களைச் செய்கிறார்கள்.இரண்டு குருடர்களை 
இம்சிக்கிறார்கள். அந்த அலுவலகத்தை தீயிட்டு கொளுத்துவதாக ( நம் பார்வைத்திறனை 
டெலிவிஷனால், டெலிவிஷன் ஒளிபரப்பும் வர்தகப் படங்களாய் இழந்து வருகிறோம். பத்து 
அல்லது பதினைந்து நொடிகளில் அதில் தமது செய்தியை அடக்கி விடுகிறார்கள். விளைவு 
பெரும் நாசம். அந்த நாச விளைவுகளை மணிக்கணக்காக டெலிவிஷன் பார்க்கும் குழந்தைகளிடம் 
காணலாம். அவர்கள் தமது கற்பனைத் திறனை இழக்கிறார்கள். தனிமையும் சோகமும் அவர்களை 
பீடிக்கிறது. நீண்ட நேரம் டெலிவிஷன் பார்த்தால் நாம் எல்லோருமே தனிமையிலும் 
சோகத்திலும் ஆழ்ந்து விடுகிறோம். நாம் ஏன் டெலிவிஷனுக்கு எதிராக போரிடக்கூடாது. 
கணக்கில்லாத வியாபாரப் படங்களை காட்டுவதற்காக 
 டி.வி. நிலையங்களை ஏன் தாக்கக்கூடாது? வியாபாரப்படங்களைக் காட்டும் 
டி.வி.நிலையங்களில் கைக்குண்டுகளை வீசி தாக்காத காரணத்துக்காக நமது பேரக்குழந்தைகள் 
நம்மைக் குற்றம் சாட்டப் போகிறார்கள். ) பயமுறுத்துகிறார்கள். பன்றியொன்றைக் 
கொல்கிறார்கள். குரங்கைச் சிலுவையில் அறைந்து ஊர்வலம் போகிறார்கள். தங்களின் மனம் 
போன போக்கில் எதை எதையோ செய்து திருப்தி கொள்கிறார்கள். அடிமைப்படுத்தப்படுபவர்கள் 
சட்டென விழித்துக்கொண்டு எக்காளமிடுகிற மனநிலையோ, அல்லது தங்களை விடுவித்துக் 
கொள்கிற வழிமுறைகளைத் தங்களுக்குள் சொல்லிக் கொள்கிறார்கள். தங்களின் உள்நோக்கைத் 
திரும்பிப்பார்த்துக் கொள்கிறார்கள். வாழ்க்கையின் தரிசனம் இது தான் என்று 
சொல்லிக்கொள்கிற மனநிலை.
 
 THE VAMPYRE(1979) படத்தில் வரும் குரூரமானவர்கள் கூட இரக்கம் கொள்ளத்தக்க வகையில் 
இருப்பதைக் காட்டுகிறார். ENGINE OF KASPAR HOUSE(1975) படக் கதாநாயகன் அடிக்கடி 
மனதை மாற்றிக் கொள்பவன். மாற்றி மாற்றி அமைக்கப்படுகிற உலகத்தின் கோரத்தை ஏற்றுக் 
கொண்டவன். இயற்கையோடான ரசனையை விரும்புபவன்.
 
 நாகரீக வாழ்க்கையின் சகிக்க இயலாத சிதைவையும், தினசரி வாழ்வின் நிராகரிப்பின் 
கோணங்களையும் இவர் படங்கள் காட்டுகின்றன. அவருடைய நடிகர்களை பெரும் சமயங்களில் 
அதிசயப்படும்படியான தீர்மானங்களுக்குக் கொண்டு சென்று விட்டிருக்கிறார். மக்களின் 
விசித்திர மன்க்கூறுகள் சிதறுவதைத் திரையில் விரிவுபடுத்துவது ஹெர்ஸாக்கை மிகவும் 
ஈடுபாடுகொள்ள செய்திருகிறது. மனதுக்குள்
 கொந்தளிக்கும் போராட்டங்களை இந்த வகையில் வெளிக்காட்டுகிறார். மனக் கொந்தளிப்பு 
குறித்த தீர்வுக்கோ, காரணங்களுக்குகோ செல்வதில்லை " இனிமேல் சிங்கங்கள் இருக்க 
முடியாத உலகிலும், அல்லது சிங்கங்களைப் போன்ற மனிதர்கள் இல்லாத உலகிலும் என்னால் 
இருக்க முடியாது " என்கிறார்.
 
 எழுபதுகளில் ஜெர்மன் சினிமாவின் வெற்றியை டி.வி.யி தயாரிப்புகள் பெரிதும் 
பாதித்திருக்கின்றன. இளைஞர்களின் படைப்புகள் கவனிக்கப்படாமல் இருக்கின்றன. அந்தச் 
சமயத்தில் பாஸ்பைண்டர், வெண்டர்ஸ் ஆகியோரின் முயற்சிகளுடன் ஹெர்ஸாக்கின் முயற்சி 
புதிய தலைமுறைப் படங்களுடனான உற்சாகத்திற்கு வித்திட்டிருக்கிறது.
 
 இந்த வகையில் EVERYONE FOR HIMSELF AND GOD AGAINST ALL என்ற படம் ஜெர்மானிய புது 
சினிமாவில் குறிப்பிடத்தக்கதாக அமைந்திருந்தது. இது ஹெர்ஸாக்கின் முக்கிய படங்களில் 
ஒன்றாகும். பதினெட்டாம் நூற்றாண்டை இப்படத்தின் மையமாக எடுத்துக்கொள்கிறார். ஒரு 
நகரத்தின் முக்கியமான சதுக்கமொன்றில் நிற்கும் பதினாறு வயதுப் பையன். அவன் கையில் 
பிரார்த்தனை நூல். ஒரு கடிதம். உள்ளூரின்முக்கிய குதிரைலாய அதிகாரிக்கான விண்ணப்பம் 
அக்கடிதம். கையெழுத்திடப்படாமல் எழுதப்பட்டிருந்தது.
 ஒரு விவசாயி
 
 அந்தப் பையனை அது நாள் வரை தன்னிடம் வைத்துக் கொண்டிருந்தார். வைத்துக் கொள்ள 
முடியாத நிலையில் கைவிடுவதாய் கடிதத்தில் சொல்கிறார்.அவனின் தந்தையைப் போலவே நல்ல 
சவாரிக்காரனாகப் பழக்க வேண்டும் என்பது விவசாயின் விருப்பம். தற்காலிகமாக ஜெயிலில் 
அடைக்கப்படுகிறான். சிலருக்கு விசித்திர பொருளாகிறான். ஜெயிலரின் மகன் ஒருவகையில் 
ஆறுதலாக இருக்கிறான். அவன் சில விஷயங்களைப் படிப்பிக்கிறான். பியானோ 
கற்றுக்கொள்கிறான். கடவுள் பற்றிய கதைகளை கேட்கிறான். புரிந்து கொள்வதற்கு முன் 
குருட்டு நம்பிக்கையே அவசியம் என்று வற்புறுத்துகிறான். அவனுடைய கேள்வியை 
பரிலிக்கிறவர்கள் சிலர். அவனை அவமானப்படுத்துகிறார்கள் சிலர். அவனுடைய உலகின் 
விசித்திரதன்மையை அறிந்து கொள்கிறான். நகைப்பிற்கிடமாக இருக்கின்றன விசித்திரங்கள். 
அவனைக் கைவிட்ட விவசாயி அடிக்கிறான். படுக்கையில் வீழ்கிறான். சாவுப்படுக்கையில் 
கதைகளைச் சொல்கிறான். பாலை வனத்தில் செல்லும் ஒருவனைப் பற்றிய கதை அது. கதையின் 
ஆரம்பம் மட்டுமே அவனுக்குத் தெரிந்திருக்கிறது.
 
 உலகின் குரூரத்தன்மையை காட்டுகிறார். வாழ ஆசைப்படுகிறவன் ஜெயிலுக்குள் 
அடைபடுகிறான். இறுதியில் அவனைக் கைவிடுபவனே அவனைத் தாக்குகிற நிலை . அவனுடைய 
கனவும், கேள்விகளும் முதல்நிலைத் தாண்டிச் செல்லாமல் அடைபட்டுவிடுகின்றன. 
இப்படத்தில் ஆன்மாவும் மனசாட்சியும் அற்ற சமூகத்தின் அவலத்திற்கு எதிரான ஒருவகை 
எதிர்ப்பும்.
 
 இப்பட நாயகன் புரூனோவை வைத்து 1977ல் "strogele" என்ற படத்தை ஹெர்ஸாக் எடுத்தார். 
ஒருவகையில் 18ம் நூற்றாண்டின் மையத்தை மாற்றி இந்த நூற்றாண்டின் பிரச்சனைகளுக்குள் 
அதே நாயகனை உலவவிட்டிருந்தது போலிருந்தது. நவீன உலகின் பிரச்சனைகளின் மத்தியில் கதை 
கனவு காணும் ஒருவனை இதில் காட்டி இருந்தார்.
 
 புரூனோ சிறைக்கொடுமைகளை அனுபவித்துவிட்டு வெளியே வருகிறான். மகாக்குடியன். தெரு 
இசையமைப்பாளனாக ஒரு விலைமாதுவுடன் வாழ்க்கையைத் தொடர்கிறான். விலைமாதுவின் முந்தின 
சகவாசங்களால் நிம்மதியற்ற வாழ்க்கையாகிறது. இந்த பிரச்சனைகளிலிருந்து தப்புவதற்காக 
அமெரிக்காவிற்குச் செல்ல முடிவெடுக்கிறார்கள். வேலையும் கிடைக்கிறது. வீட்டிற்காக 
வாங்கும் சாமான்களிலிருந்து தவணைத்தொகையைக்கூட கட்ட முடியாமல் திணறுகிறார்கள். அவள் 
உடம்பை விற்கிற தன் பழைய வாழ்க்கையை மீண்டும் மேற்கொள்கிறாள். புரூனோவின் சாதாரணக் 
கனவுகளும் அங்கே நிறைவேறுவதில்லை.
 
 சினிமாப்படம் எடுப்பதென்று ஒருவகையான ஹ’ஸ்டீரியாத்தனம் என்பதைத் திரும்பத்திரும்ப 
எண்ணிப்பார்த்திருக்கிறார். விசித்திர மனநிலை கொண்ட மனிதர்களைப் படங்களில் 
சொல்லும்போது தன்னையும் அப்படி ஆக்கிக் கொண்டிருக்கிறார். விசித்திர மனநிலையைப் 
புதுப் படிமங்கள் மூலம் முன் வைக்கிறார்கள். நமது பொது மனநிலையை விளக்கவும் அவை 
முயற்சிக்கின்றன. ஆனால் அறிவு சார்ந்த படங்களில் தோல்வி, சினிமா, இம்மாதிரி 
முயற்சிகளுக்கு இடம் தராத அம்சத்தை பற்றிப் பல சமயங்களில் குறிப்பிடுகிறார்.
 
 திட்டமிடாமல் எதேச்சையாகத் தேர்ந்தெடுக்கும் விஷயங்கள் வலுவானவையாக அமைவதாக 
நினைக்கிறார். உள்ளுணர்வு படத்தின் நாடியாக அமைகிறது. தொழில்நுட்ப விஷயங்கள் 
தெரிந்ததையெல்லாம் உபயோகிக்காமல் கட்டுப்படுத்திக் கொள்கிற தன்மை இவருக்கு 
இருந்திருக்கிறது. ஒரே சமயத்தில் தொடர்ச்சியாக பல படங்களை உருவாக்குவது என்பது 
அவரின் செயல்முறையாக இருந்திருக்கிறது.
 ஒரு பெரும் கட்டிடத்தை அமைப்பதை போல பல படங்களை உருவாக்குவது அவருக்கு 
இருந்திருக்கிறது. ஒரு படம் அஸ்திவாரமாகவும்,  இன்னொரு படம் மேல் பாகமாகவும் 
தொடர்பாக இருந்திருக்கிறதை அவரின் பல படங்களை ஒருநிலைப்படுத்தி பார்க்கிறபோது 
தெரிந்துகொள்ள முடிகிறது.
 
 சிரமங்களான ஆபூர்வமான இடங்களைத் தேடிப்பிடித்துப் படமாக்குவது இவருக்கு சாகசமாக 
இருந்திருக்கிறது. Auquire படத்தில் தங்கம் தேடும் படலத்தில் மிகுந்த சிரமங்களை 
நடிகர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்திருக்கிறது. அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் 
ஒருவீட்டை நிமாணித்து படபடப்பை நடத்தியிருக்கிறார். அவரின் முக்கிய கதாநாயகரான 
சிகஸ்சியை ஒரு தரம் துப்பாக்கி காட்டி மிரட்டி தொடர்ந்து நடிக்க செய்திருக்கிறார். 
தண்ணிரில் மூங்கில்களைச் சேர்ந்தமைந்த படகு போன்றதில் நடிகர்கனை 
காட்டுப்பகுதிகளுக்கு கூட்டிச்சென்று படமாக்கியுள்ளார்.nosferatu படத்தில் எலிகளின் 
கடும் தக்குதலைக் காட்ட ஆயிரம் எலிகளுக்கு வெள்ளைச் சாயம் அடிக்க 
வைத்திருக்கிறார்.Heart of Glass என்ற படத்தில் அதன் நடிகர்களை மனோவசியத்திற்கு 
உட்படுத்தி நடிக்க வைத்திருக்கிறார். இன்னோரு படத்திற்கு நானூரு குரங்குகளை 
ஒரிடத்திலிருந்து திருட்டுத் தனமாய் கடத்திவந்து படம் எடுத்திருக்கிறார். கோழி 
ஒன்றை வசியப்படுத்தி அதன் விசித்திர நிலையை ஒரு படத்தில் காட்டியுள்ளார்.
 
 நமக்கு தர்சனம் பற்றிய போதுமான அறிவு இல்லை. மிகச்சொற்பமாக நாம் அதைப்பற்றி 
தெரிந்துகொண்டிருக்கிறோம் என்கிறார். இதைஅவரின் பரிசோதனை படைப்புகள் ஓரளவில் 
வெளிப்படுத்துகின்றன. இம்மாதிரி அறிவு மிகமுக்கியமாக படுகிறது. போதுமான படிமங்கள் 
இல்லாத ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதால் இது மிக அவசரமான ஒரு தேவையாக 
இருக்கிறது. வேண்டிய அளவு படிமங்களும், நமது நாகரீகத்திற்கு அவற்றை 
வெளிப்படுத்துவதற்கு தேவையான மொழியையும் நாம் உருவாக்காவிட்டால் டைனோசர் போன்ற 
கற்கால விலங்குகளின் அழிவை நாமும் சந்திக்க வேண்டியிருக்கும். எரிபொருள் 
பற்றாக்குறை, மக்கள் தொகைப்பெருக்கம், சுற்றுப்புறச்சூழல் போன்ற பிரச்சனைகள் நமது 
மனிதகுலத்திற்கும் நாகரீகத்திற்கும் பெரும் அபாயங்கள் என்பதை உணர்ந்துவிட்டோம். 
ஆனால் நமக்கு புதிய படிமங்களும் மிக அவசியமாகத் தேவைபடுகின்றன என்பதைப் பரவலாக 
இன்னும் யாருமே புரிந்து கொள்ளவில்லை என்கிற ஹெர்ஸாக் அவரின் படங்கள் மூலம் நம் 
உள்மன இயல்புகளை வெளிக்கொணர்ந்திருக்கிறார். நமது வாழ்க்கை பற்றிய புது படிமங்களைத் 
தேடுவதாக அவற்றை அமைத்திருக்கிறார்.
 
 இனி ஹெர்ஸாக்கின் சில கூற்றுகள்:
 
 " சினிமா வெறும் சினிமாதான் . அதில் அதிகமாக எதையும் காண்பதோ பெரும் 
எதிர்பார்ப்புகளைக் கொண்டு இருப்பதோ தவறுதான். சமூகத்தின் எந்தப் பிரச்சனையையும் 
சினிமாவினால் தீர்த்து விட முடியாது. "
 
 " என்னை ஒரு கலைஞன் என்று நான் சொல்லிக்கொள்ளவில்லை, மைக்கல் ஏன்ஜலோவின் 
காலத்துக்கு முன்னால் சிற்பிகள் தம்மை மரவேலை செய்பவர்களாகவும், ஓவியர்கள் தம் 
உதவியாளர்களுடன் தொழிற்கூடங்கள் வைத்திருப்பவர்களாகவும் தன்னை கருதிக்கொண்டது போல 
நானும் என்னை ஒரு தொழில்நுட்ப வல்லுநராகத் தான் நினைத்துக்கொள்கிறேன்" என்கிறார் 
ஹெர்ஸாக்.
 
 " எதிர்காலத்தில் மிகவும் அண்மையில் புதிய தர்மமும் புதிய மதமும் உருவாகி வருவதை 
என்னால் மிக நிச்சயமாக உணரமுடிகிறது. நான்கு குழந்தைகளுக்கு மேல் பெறுதல், பூமியின் 
வளங்களை வீணடிப்பது போன்றவை எல்லாம் பாவச் செயல்களாகி விடும். ஏற்கனவே இது பற்றின 
உணர்வு நம்மிடம் இருக்கிறது. தேவையின் கரணமாய் நாம் உருவாக்கியுள்ள சூழலின் 
தேவைக்காகவே ஒரு புதிய நெறியையும், ஒரு புதிய மதத்தையும் உருவாக்க வேண்டும். நான் 
தொடுவானத்தில் நம்பிக்கையளிக்கும் விதத்தில் கூட சிலதை பார்க்கிறேன். எனவே சொந்த 
கால்களால் நடப்பதென்பது எதிர்கால நம்பிக்கைக்கான ஒரு செயல் தான் என்று தீர்மானமாக 
நம்புகிறேன்."
 
 - சுபமங்களா 1995.   -
srimukhi@sancharnet.in
 |