| 
ரௌத்திரம் பழகு
 - சோ.சுப்புராஜ்
 
 
  செல்வராணிக்கு 
பொங்கிப் பொங்கி அழுகை வந்தது. அவளுக்கு முன்னே இரண்டே இரண்டு சாத்தியங்கள் தான் 
இருந்தன. ஒன்று தற்கொலை செய்து கொண்டு செத்துப் போவது; இன்னொன்று புருஷனே கதி என்று அவனிடம் 
சரணாகதி அடைவது. இரண்டிலுமே
 அவளுக்குச் சம்மதமில்லை.ஆனால் அதைத் தவிர்த்து வேறு வழி எதுவும் புலப்படவில்லை. 
மனசு வழிகளற்று வெறுமை போர்த்தி
 இருண்டு கிடந்தது.
 
 எத்தனை சிக்கலும் சிடுக்குமாய் ஆகிப்போனது தன்னுடைய தாம்பத்ய வாழ்க்கை என்று 
யோசிக்க யோசிக்க ஆற்றாமையில் மனசு கனத்தது. அம்மாவின் மடியில் முகம் புதைத்து 
கண்ணீர் வற்றும் வரைக் கதறி அழ வேண்டும் போலிருந்தது. திருமணம் என்பதே 
பெண்களுக்குப் பெரும் சுமை தான். காலில் கல்லைக் கட்டிக்கொண்டு கிணற்றுக்குள் 
குதித்து, கனத்தை மீறி நீச்சலடிக் கச் சொல்கிற சித்ரவதை தான் என்று அவளுக்குப் 
புரிந்தது.
 
 ஆனால் படிப்பறிவே இல்லாத அம்மா அத்தனை கனத்தோடு எத்தனை லாவகமாய் நீந்திக் கரை 
சேர்ந்தாள் என்று நினைக்கும் போது செல்வராணிக்கு ஆச்சர்யமாயும் அவ்வப்போது 
பொறாமையாகவும் இருந்தது. தான் இத்தனை படித்திருந்தும் வேலைக்குப் போயும் கூட 
காலுதைத்து நீந்தவே தெரியவில்லையே! அம்மாவிடம் போய்த்தான் ஆரம்பம் முதல் மறுபடியும் 
கற்றுக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.
 
 செல்வராணிக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து கவனித்துக் கொண்டு தான் இருக்கிறாள். 
அம்மாவின் திருமண வாழ்க்கை என்பது சகிக்க
 முடியாத நரகமாய்த் தானிருந்தது. அப்பாவிடமிருந்து அவளுக்குக் கிடைத்ததெல்லாம் 
அடிகளும் சித்ரவதைகளும் நாக்கூசும் நாரச
 வார்த்தை களும் தான். அப்பா வேலைக்குப் போனதும் அம்மாவை ஆட்டிப் படைக்க அவளின் 
மாமியார் தயாராகி விடுவாள்.
 
 அம்மா நிஜமாகவே பொறுமையில் பூமா தேவி தான். அப்பா, பாட்டி இருவரையும் தன்னுடைய 
மௌனத்தாலும், அமைதி தவழும்
 முகத்தாலுமே எதிர்கொண்டாள். ஒரு வார்த்தை எதிர்த்துப் பேச மாட்டாள். வாய் வலிக்கும் 
வரைத் திட்டி கை வலிக்கும் வரை அடித்து அவர்களே ஓய்ந்து போவார்கள்.
 
 அப்பா: முரட்டு அப்பா. அவரை நினைத்தாலே செல்வராணிக்கு ஈரக்குலை 
நடுங்கும்.உடம்பெல்லாம் ஒரு பயமும் படபடப்பும் பரவும்.
 எப்போதும் பீடி நாற்றமும் சாராய வீச்சமுமாய், கொஞ்சமும் நாசூக்கு இல்லாமல் 
புர்புர்ரென்று நடுவீட்டில் உட்கார்ந்து குசுப் போட்டுக்
 கொண் டிருப்பார். சின்னச் சின்ன பிரச்னைக்கும் ஆங்காரமாய்க் கோபம் வந்து அம்மாவையோ 
அல்லது செல்வராணியையோ போட்டு அடிப்பார்.
 
 அம்மாவை, அப்பா வீதியில் போட்டு அடிக்கிற போதெல்லாம் எதிர்த்த வீட்டு நரசிம்மன் 
மாமா தான் விலக்கி விடுவார். அவரையும்
 அப்பா சும்மா விட மாட்டார். "நீ இவள வச்சிருக் கையாடா....." என்று அமில வார்த்தைகளை 
அவர் மீதும் கொட்டுவார். அவரும்
 பதிலுக்கு ஏதாவது திட்டிவிட்டு வீட்டுக்குள் போய் விடுவார்.
 
 நரசிம்மன் மாமா பல தடவை அம்மாவிடம் சொல்லியிருக்கிறார். "எதுக்கும்மா இந்த குடிகார 
முட்டாப் பயகிட்ட அடியும் மிதியும்
 வாங்கிக் கிட்டு குடித்தனம் பண்ற? உதறீட்டு வெளியில வாம்மா....இவன் வீட்டுக்குள்ள 
செய்யிற வேலைகள வெளியில நாலு வீட்டுக்கு செஞ்சீன்னா, கௌரவமா இதைவிட சந்தோஷமா 
பொழைச்சுக்கலாம்...."
 
 அம்மா ஒவ்வொரு தடவையும் பொறுமையாக அமைதியாக மறுத்து விடுவாள். 
"இருக்கட்டும்ணா....ஒருநாள் இல்லைன்னா ஒருநாள்
 நிச்சயமா அவர் திருந்தி வருவார் - தன் தவறுகளை எல்லாம் உணர்ந்து, பொண்டாட்டியும் 
பிள்ளையுமே பெரிசுன்னு.....கடவுள் கண்டிப்பா நல்வழி காட்டுவார் அண்ணா...."
 
 அம்மாவின் நம்பிக்கை வீண் போகவில்லை. அப்பா தன் ஐம்பது வயதுக்கப்புறம் ஆடி ஓய்ந்து 
குடித்த சாராயத்தில் உடம்பு தளர்ந்து
 அம்மாவே கதி என்று வந்து விழுந்தார். அம்மா என்ன சொன்னாலும் அதை அப்படியே கேட்டார். 
பாட்டியும் படுத்த படுக்கையாய் விழுந்து
 விட அம்மாவின் பணிவிடைகளில் நெகிழ்ந்து "மகாராசியா நீ இருப்ப...." என்று வாழ்த்தி 
விட்டுத்தான் செத்துப் போனாள்.
 
 அம்மாவின் பொறுமையும் சகிப்புத் தன்மையும் தனக்கு ஏன் இல்லாமல் போய் விட்டது என்று 
மனதுக்குள் புழுங்கினாள் செல்வராணி. எனக்கும் என் புருஷனை கனிவாய் எதிர் கொள்ள வும் 
அவரும் அவரின் குடும்பத்தினர்களும் செய்கிற கொடுமைகளைத் தாங்குகிற மனவலிமையை யும் 
கற்றுக் கொடும்மா? செல்வராணி அம்மாவைப் போய் பார்த்து வரக் கிளம்பினாள்.
 
 செல்வராணி எம்.எஸ்.ஸி முடித்து,பொழுதைப் போக்க சிரமப்பட்டு மாவட்ட நூலகத்தில் 
உறுப்பினராகச் சேர்ந்தபோது தான் பிரேம்குமார்
 பரிச்சயமானான். ஒருமுறை இரண்டு மணி நேரத் தேடலுக்குப் பிறகும் தன் ரசனைக்கேற்ற 
புத்தகம் எதுவும் அகப்படாமல் வெறுமனே திரும்ப முற் பட்ட போது தான் அங்கு நூலகராய் 
இருந்த பிரேம்குமார் "மெம்பர்ஸ் புத்தகமில்லாமல் திரும்பிப் போறதாவது! என்ன மாதிரி 
புக்ஸ் புடிக்கும்னு சொல்லுங்க, நான் தேடி எடுத்துத் தாரேன்..." என்று முன் 
வந்தான்.
 
 "தமிழ் நாவல் நல்லதா ஏதாவது கிடைச்சா பரவாயில்ல...." என்று அவள் சொல்லவும், 
"அசோகமித்திரன் படிப்பீர்களா?" என்று கேட்டபடி
 இவளின் கால்களுக்குப் பக்கத்தில் கீழடுக்கில் புத்தகம் தேட அவன் குனிய, இவள் 
அவசரமாய் சேலையை இழுத்துவிட்டு கால்களைக்
 கொஞ் சம் தள்ளி வைத்துக் கொண்டாள். பிரேம்குமார் சரேலென நிமிர்ந்து, "எதுக்குங்க 
என்னை இப் படி இன்சல்ட் பண்றீங்க?
 உங்களுக்குப் புத்தகம் தேடத்தான குனிஞ்சேன்? என் நோக்கத்தையே கொச்சைப் 
படுத்திட்டீங்களே!" என்றபடி கோபமாய் விலகிப்
 போனான்.
 
 செல்வராணிக்கு கொஞ்ச நேரம் எதுவும் விளங்கவே இல்லை. நாமங்கே இவனை அவ மானப் 
படுத்தினோம் என்று யோசித்தபடி
 வீட்டிற்குப் போய்விட்டாள். அப்புறம் நிதானமாய் யோசித்தபோது அவன் புத்தகம் தேடக் 
குனிந்தபோது, தான் அவசரமாய் புடவையை
 சரி செய் தது அவன் மனதைப் பெரிதும் காயப்படுத்தி விட்டது புரிந்தது. அடுத்தநாள் 
அவனிடம் போய் , தான் வேண்டுமென்றே அப்படி செய்யவில்லை என்றும் பெண்மைக்கே உள்ள 
இயல்பில் தான் அப்படி செய்ததாகவு விளக்கம் சொல்லி மன்னிப்பும் கேட்டாள்.
 
 " ஏன் லேடீஸெல்லாம் இப்படி இருக்கிறீங்க! ஒரு ஆம்பளையப் பார்த்தாலே மாராப்ப இழுத்து 
மூடுறது; ப்ளவுஸ்ஸ சரி பண்றதுன்னு
 உங்களையும் அறியாம எங்களை எவ்வளவு இன் சல்ட் பண்றீங்க தெரியுமா? நாங்க ப்ரண்லியா 
முகம் பார்த்துப் பேசிக்கிட்டு இருக்கும்
 போது, நீங்க பண்ற சில செய்கைகள், உங்ககிட்ட விஷேசமா இருக்கிற சில உறுப்புகள 
பார்க்கச் சொல்ற சைகைகளா அர்த்தமாகிற
 அசிங்கம் புரியலையா உங்களுக்கு? நீங்க ஏன் உங்கள உடம்பாவே ·பீல் பண்றீங்க! நான் 
பெண்கள சக மனுஷியாத்தான் பார்க்குறேன்......"
 நீளமாய்ப் பேசி போரடித்தாலும் சில நல்ல புத்தகங்களைத் தேடி எடுத்துக் கொடுத்தான்.
 
 அப்புறம் வந்த தினங்களில் இருவரும் பேசிப்பேசி நட்பாகி, பிரமித்துக் காதலாகி 
கசிந்துருகி, ஆச்சர்யமாய் இரு குடும்பங்களும் அதிகம்
 எதிர்ப்பின்றி சம்மதிக்க, கல்யாணமாய்க் கனிந்தது. ஆனால் ஆசை அறுபது நாள்; மோகம் 
முப்பது நாள் என்கிற ஆரம்பக் கணக்கு
 களுக்குக் கூட அவளின் கல்யாண சந்தோஷம் நீடிக்கவில்லை. முதலிரவு முடிந்து, வலியும் 
களைப்புமாய் படுத்திருந்த போது
 பிரேம்குமார் சிரித்துக் கொண்டே கேட்டான்.
 
 "மொத ராத்திரியில தான் பெண்களுக்கு கற்புக்கு அடையாளமான கன்னித்திரை கிழிந்து 
இலேசாய் இரத்தமெல்லாம் வருமின்னு
 புத்தகங்கள்ல படிச்சிருக்கேன். ஆனால் உனக்கு அந்த மாதிரி எதுவும் நடந்த மாதிரியே 
தெரியலியே, ஒருவேளை ஏற்கெனவே உனக்கு
 'இந்த' அனுபவமிருக்கோ?"
 
 ஒரே ராத்திரியில் காதலன் கணவனாய் உருமாறியதில் என்னன்னெவோ இராசாயானங்கள் எல்லாம் 
நிகழ்ந்து, அவனுடைய குரூர முகம் அசிங்கமாய் வெளிப்பட்டதில் செல்வராணி சுக்குநூறாய் 
உடைந்து போனாள் - கூடவே அவளின் காதலும் கனவுகளும் தான். காதலிக்கும் போது கனிவும் 
கரிசனமுமாய் பெண்களை ஆராதித்த பிரேம்குமார், கல்யாணத்தின் எந்த இடுக்கில் சிக்கி 
காணாமல் போனான்? பூ
 நெஞ்சமும் புன்னகை தவழும் முகமுமாய் சுற்றிச் சுற்றி வந்தவன் கல்யாணத்திற்கப்புறம் 
பாறாங்கல் மனதினனாய் இறுகிப் போனது
 எப்படி? இந்த கேள்விகளுக்கெல் லாம் அவளுக்குப் பதிலும் தெரியவில்லை. வாழ்வின் 
சூட்சுமமும் புரியவில்லை.
 
 காதலிக்கும்போது வெளிப்படாத பிரேம்குமாரின் இன்னொரு முகம் -அவனின் குடிகார முகம் - 
கல்யாணத்திற்கு பிறகு
 வெளிப்பட்டது.அப்பாவுக்கும் இவனுக்கும் ஒரே வித்தியாசம் அவர் வெளியிலே போய் சாராயம் 
குடித்து வீதியில் விழுந்து கிடந்தார்;
 இவன் வீட்டிலேயே கொண்டு வந்து குடித்தான் வெளிப்படையாக. காதலிக்கும் போது 
சிகரெட்டைக் கூட மூடி மூடி ஆயிரம்
 சமாதானங்கள் சொல்லி குற்ற உணர்வுடன் குடிப்பதாக பாசாங்கு பண்ணியவன், கல்யாணத்திற்கு 
பிறகு மது குடிப்பது மிகச்சாதாரண,
 அன்றாட நிகழ்வாயிருந்தது.
 
 எளிமையாய், சீரும் அதிகமில்லாமல், அப்பா நிகழ்த்திய கல்யாணம், பிரேம்குமார் 
வீட்டாரின் எதிர்பார்ப்புகளை நொறுக்கிவிட்டது என்பது
 அவர்களின் பேச்சில் அப்பட்டமாய் வெளிப்பட்டது. காதல் கல்யாணம் என்பதால் வரதட்சணை 
என்று பேரம் பேசவும் வாய்ப்பில்லாமல்
 போய் விட்டது. ஒரே பெண்ணிற்கு அப்பா நிறையச் செய்வார் என்று ரொம்பவும் 
எதிர்பார்த்து ஏமாந்து போனார்கள்.
 
 "எத்தனை சம்பந்தம் சொந்தத்துல, சொத்து சுகத்தோட நான் நீன்னு போட்டி போட்டு இவனுக்கு 
பொண்ணு தர முன் வந்தாங்க.
 எல்லாத்தையும் வேண்டாம்னுட்டு காதல் கண்றாவின்னு ஒண்ணுமில்லாதவளைக் கட்டிக்கிட்டு 
வந்து சீரழியுறானே......" என்று
 செல்வராணி யின் மாமியார் அடிக்கடி குத்திக்காட்டினாள். பிரேம்குமாரின் அக்காள் 
ஒருத்தியும் புருஷனுடன் சேர்ந்து வாழாமல்
 இவர்களுடன் தங்கி இருந்ததில் அவளின் அட்டகாசங்களும் அவ்வப்போது அரங்கேற, வீட்டில் 
எப்போதும் சண்டையும் சச்சரவுகளும் தான்.
 
 கல்யாணமாகி கொஞ்ச நாளிலேயே பிரேம்குமாருக்கு மதுரை பக்கத்திற்கு மாற்றலாகிவிட, அவன் 
செல்வராணியை அம்மா மற்றும்
 அக்காளுடன் சென்னை போரூரிலேயே குடிவைத்து, மாதம் ஓரிரு தடவை மட்டுமே வந்து போனான். 
அவன் வீட்டில் இல்லாத குறையை மாமியாரும் நாத்தனாரும் செவ்வனே நிறைவேற்றினார்கள். 
செல்வராணியை அடித்து துவைத்து அலசி காயப் போட்டார்கள்.
 
 மாடு மாதிரி வீட்டு வேலைகளைச் செய்தாலும் மாமியாரையும் நாத்தனாரையும் செல்வராணியால் 
திருப்திபடுத்த
 முடியவில்லை.எப்போதும் அடுப்பங்கரை கரியும் வியர்வை நசநசப்பும் ஈரப்புடவையுமாய் 
எவ்வளவு தான் உழைத்தாலும்
 எடுத்ததெற்கெல்லாம் குற்றம் சொல்லி மனதைக் குதறினார்கள்.
 
 "பொம்பளை இத்தனை சோறா திங்கிறது? இப்படி தின்னு தீர்த்தா அவன் ஒருத்தன் 
சம்பாத்தியம் எத்தனை நாளைக்காகும்? சும்மா
 மோரை ஊத்திக்கிட்டு ஊறுகாயகடிச்சு சாப்ட்டு எந்திரி......." சாப்பாட்டில் கூட சண்டை 
போட்டு செல்வராணியின் வயிற்றையும்
 நோகடித்தார்கள்.
 
 ஒரு தடவை ஊருக்குப் போயிருந்தபோது அப்பாவிடம் இது பற்றி எல்லாம் பேசி தன் னால் 
அங்கு மறுபடியும் போய் வாழ முடியாது
 என்று சொல்ல அவர் அதிர்ந்து போய் விட்டார். "குடும்பம்னா அப்படித்தான் இருக்கும். 
எப்படி இருந்தாலும் நீ தான் அனுசரித்துப்
 போகனும்.கல்யாணம் பண்ணுனதோட எங்க கடமை முடிஞ்சு போச்சு. அதுவும் இது நீயா 
தேடிக்கிட்ட வாழ்க்கை. இலாபமோ நஷ்டமோ
 புருஷன் வீட்ல அவன் கூட சேர்ந்து வாழ்றதுதான் பொம்ப ளைக்கு லட்சணம். கண்ணை 
கசக்கிக்கிட்டு அம்மாகிட்ட போய்
 நிக்காத.அவளால இதை தாங்க முடியாது...." என்று அறிவுரை கூறி அனுப்பினார்.
 
 இவளின் கல்யாணத்திற்கு வர முடியாத கல்லூரி நண்பனொருவன், வேறொரு நாளில் இவளைப் 
பார்த்துப்போக வந்திருந்தான்.இவளும்
 அவனுக்கு தடபுடலாக டிபனும் காபியும் தந்து உபசரித்து அனுப்பி வைத்தாள். அவன் போவது 
வரை அமைதியாய் இருந்தவர்கள் அவன்
 வெளியேறவும் ஆரம்பித்தார்கள்.
 
 "செல்வராணியோட அப்பா அவளை எப்படி சுதந்திரமா வளர்த்திருக்கார் பார்த்தியாமா? 
ஆண்களோட எல்லாம் ஜோவியலா அலைஞ்சு திரிய அனுமதிச்சிருக்காரே! நீயும் தம்பியும் என்னை 
வாசப்படி தாண்டவாவது விட்டுருப்பீங்களா?" அலுத்துக் கொள்வது போல் நக்கலடித்தாள் 
நாத்தனார்.
 
 "அது சரி தான். பொண்ணை அப்படி எல்லாம் அலைய விட்டாத்தான, உன் தம்பி மாதிரி 
இளிச்சவாயன் மாட்டுவான். காக்காசு
 செலவில்லாம கல்யாணம் பண்ணி தள்ளி விடலாம். நமக்கு ஏதுடி அந்த சாமர்த்தியம்?" 
மாமியார் நீட்டி முழக்கினாள்.
 
 "அவன் வந்து போன தோரணை, இவ மாய்ஞ்சு மாய்ஞ்சு கவனிச்சுக்கிட்ட கரிசனத்த எல்லாம் 
பார்க்குறப்ப சும்மா பார்த்துட்டுப் போக வந்தது மாதிரி தெரியலம்மா. ஏற்கனவே ரெண்டு 
பேருக்கும் கனெக்ஷன் இருக்கும் போலருக்கே...." விஷம் கொட்டினாள் நாத்தி.
 செல்வராணிக்கு மனசு கூசியது. உதடு கடித்து கண்ணீரை அடக்கி, உள்ளுக்குள்ளாகவே 
கதறினாள்.
 
 இந்த வேளையில் இவளது எம்.எஸ்.ஸி டிகிரி சான்றிதழ் போஸ்டலில் வந்தபோது இன்னொரு 
பூகம்பம் வெடித்தது. அப்போதுதான், இவள் இரண்டாம் வகுப்பில் அதுவும் கோர்ஸ் முடித்து 
ஒன்றரை வருடங்களுக்கப்புறம் அரியர்ஸ் எழுதி பாஸ் பண்ணியிருந்த விபரம் மாப்பிள்ளை 
வீட்டாருக்கு தெரிந்தது. அன்றைக்கு பிரேம்குமாரும் வீட்டிலிருந்தான்.
 
 "சரியான பிராடு குடும்பம் போலருக்குடி. இவங்கப்பன் இவள ஏதோ, கோல்டு மெடல் 
ரேஞ்சுக்கு புத்திசாலின்னு புகழ்ந்தான். இவ
 என்னடான்னா கோட் அடிச்சு செகண்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணியிருக்கிற இலட்சணம் இப்பத்தான் 
புரியுது....." என்றாள் மாமியார்.
 
 "காலேஜூல உட்கார்ந்து படிச்சாத்தானம்மா, இவள் ஆம்பிளைக்குச் சமமா, அவங்க ளோட போய் 
ஊர் மேய்ஞ்சா...." நாத்தனார்
 முடிப்பதற்குள் செல்வராணிக்கு ஆங்காரம் பொங்கியது. "நீ எஸ்.எல்.சி யவே ஒழுங்கா 
முடிக்கலை .உங்க தம்பி பி.ஏ.ஹிஸ்டரி. உங்க
 குடும்ப படிப் புக்கு என் எம்.எஸ்.ஸி ஒண்ணும் குறைஞ்சு போயிடல......" செல்வராணி 
பேசி முடிப்பதற்குள் பளீரென அறை
 விழுந்ததில் பொறி கலங்கிப் போனாள்.
 
 "திமிராடி உனக்கு; என் படிப்பையே எளக்காரமா பேசுற அளவுக்கு துணிஞ்சிட்டியா? நான் 
மாசம் எட்டாயிரம் சம்பாதிக்கிறேனே, உன்
 எம்.எஸ்.ஸிய வச்சு நாக்கா வலிக்க முடியும்!" என்று பிரேம்குமார் கேட்கவும் 
செல்வராணிக்கு சுருக்கென்றது. ஒரு வெறியோடு பேப்பர்
 விளம் பரம் பார்த்து விண்ணப்பிக்கத் தொடங்கினாள். மூன்றே மாதத்தில் ஒரு சுயநிதி 
தனியார் பாலிடெக்னிக்கில் மாதம் ஐயாயிரம்
 ரூபாய் சம்பளத்தில் ஆசிரியை வேலை கிடைத்தது.
 
 "இவ வெள்ளைத் தோலப்பார்த்து விழுந்து வேலை போட்டுக் குடுத்திருப்பான்கள்....." 
என்றாள் நாத்தனார்.ஆனாலும் சம்பளப் பணம்
 பார்த்து அவளை வேலைக்குப் போக அனுமதித்தாள் மாமியார். "அம்மா இனிமேத்தான் இவள நீ 
பத்திரமாப் பார்த்துக்கனும்; நான் வேற எப்பவாவது தான் வீட்டுக்கே வர்றேன். இவ 
வெளியில வேலைக்குப் போறேன்னுட்டு எவன் பிள்ளையையாவது வயித்துல வாங்கிட்டு வந்துடப் 
போறாள்...." என்றான் பிரேம்குமார்.
 
 செல்வராணிக்கு ஏற்கெனவே மனசு மரத்துபோய் விட்டிருந்தபடியால் அவள் பதிலேதும் 
பேசவில்லை. வீட்டுப் பிரச்னைகளை
 வேலையில் மறக்க முயன்றாள். சாயங்காலமும் ஒரு டியூசன் செண்டரில் பகுதி நேர 
ஆசிரியையாக வேலை பார்த்துவிட்டு, இரவு நேரங்கழித்துத் தான் வீட் டிற்குப் போனாள். 
அப்படியும் மாமியார் மற்றும் நாத்தனாரின் விஷ நாக்குகளிலிருந்து இவளால் தப்ப 
முடியவில்லை. இவளும் பதில் பேச வீடு இரணகளமானது.
 
 மாதம் இரண்டு அல்லது அதிக பட்சம் மூன்று தடவை மட்டுமே வீட்டிற்கு வருகிற 
பிரேம்குமாரும் எப்போதும் குடித்துவிட்டு போதை
 தெளியாமலே இவளை அணுகினான்.
 
 "உன்னைப் பார்த்தாலே எனக்கு மூடே வரமாட்டேங்குதுடி....பஸ்ஸ¥ல, டிரெயின்ல, எவனெவனோ 
உரசி, இடிச்சு, வேலை செய்ற எடத்துலயும் எவன்கிட்ட யெல்லாமோ இளிச் சுட்டுத்தான வர்ற! 
அதனால உன்னைப் பார்த்தாலே கோபமும் அருவருப்பும்தாண்டி வருது......" எட்டி உதைத்து, 
வெளியில் தள்ளி கதவை மூடுவான். அவமானமாக இருக்கும்.
 
 திடீரென்று அவனுக்கு தினவெடுத்தால் பாதி இராத்திரியில் உலுக்கி, "மகாராணிய கால்ல 
விழுந்து கெஞ்சனுமா, வாடி" என்று இழுத்துப்
 போய் பலாத்காரம் பண்ணுவதுபோல் முரட்டுத் தனமாய் புணர்ந்தான். பல நேரங்களில் இந்த 
நரக வேதனையிலிருந்து மீள ஒரே அடியாக
 செத்துப்போய் விடலாமா என்று கூட யோசித்தாள் செல்வராணி.
 
 இந்நிலையில் செல்வராணிக்கு நாள் தள்ளிப் போய் அவள் கர்ப்பம் என்று டாக்டர் 
கன்பார்ம் பண்ணவும் வீடு கொந்தளித்தது. "நான்
 சொல்லல, இவள் வேலைக்குப் போறேன்னுட்டு வேசித்தனம் பண்ணி வயித்துல குழந்தையோட வந்து 
நிக்கிறா! அது நிச்சயமா என்
 குழந்தையே இல்ல" என்றான் நாக்கூசாமல். கருவைக் கலைத்து விடும்படி குடும்பமே கூச்சல் 
போட்டது. இவள் முடியாது என்று
 மூர்க்கம் காட்டினாள்.
 
 "என் ஒருத்தன் சம்பாத்தியம் இந்த குடும்பத்துக்கு போதும். நீ தேவடியாத்தனம் பண்ணி 
இந்த குடும்பத்த ஒண்ணும் தூக்கி நிறுத்த
 வேணாம். வேலைக்குப் போற திமிருல தான் இப்ப எல்லாம் நீ ஓவராப் பேசுற. குழந்தைய 
அழிச்சிட்டு, வேலையையும் வேண்டாம்னு
 எழுதிக் குடுத்துட்டு வா. எல்லோரும் மதுரைக்கே போயி அங்க வீடெடுத்து தங்கி 
குடித்தனம் பண்ண லாம்" என்றான் தீர்மானமாக.
 செல்வராணியும் வேறு வழி தெரிமாமல் இனியும் அவர்களுடன் மல்லுக்கட்ட முடியாது என்ற 
முடிவில் அவர்களின் ஏற்பாட்டுக்குச் சரி என்றாள்.
 
 அதற்குள் அம்மாவைப் போய் ஒரு முறை பார்த்து விட்டு வரலாம் என்று கிளம்பினாள். 
ஊருக்குப் போனபோது அப்பா வீட்டில் இல்லை.
 ஆபிஸில் ஏதோ அவசர வேலையாக வெளியில் போயிருப்பதாக அம்மா சொன்னாள்."நீ மட்டுமா தனியா 
வந்த, எங்கடி உன் புருஷன்
 வரலயா?" என்று மலரச்சியாய் வரவேற்றாள். வழக்கமான குசல விசாரிப்புகள் முடிந்ததும் 
செல்வராணி அழுகையும் கண்ணீருமாய்,
 தான் புருஷன் வீட்டில் படுகிற அவஸ்தைகளை எல்லாம் ஒன்று விடாமல் விஸ்தாரமாய் சொல்லி 
முடித்தாள்.
 
 "ரெண்டு வருஷம் கடத்துறதுக்குள்ள இருபது வருஷம் வாழ்ந்த அலுப்பும் சலிப்பும் 
ஏற்பட்டு வாழ்க்கையே வெறுத்துப் போச்சேம்மா. நீ
 எப்படிம்மா அப்பாவோட அடாவடித்தனங் களை முப்பது வருஷம் பொறுத்துக்கிட்டு காலந் 
தள்ளுன? உன்னை நெனச்சா எனக்கு ரொம்ப
 பெருமையா இருக்குமா. எனக்கும் உன் பொறுமையையும் சகிப்புத் தன்மையையும் கத்துக் 
குடும்மா....ப்ளீஸ்" - செல்வராணி.
 
 எல்லாவற்றையும் கேட்டு முடித்த அம்மா "எதுக்குடி சகிச்சுக்கணும்? பொம்பளைன்னா சுய 
கெளரவமே இல்லாம எல்லாத்தையும்
 பொறுத்தே போகணுங்குறது யார் போட்ட சட்டம்? காலுக்கு உதவாத செருப்ப கழட்டி வீசுறத 
விட்டுட்டு காலை வெட்டணுங்கிறியே!
 விவாகரத்துக்கு எழுதிக் குடுத்துட்டு வீட்டுக்கு வாடி. உனக்கு நான் எல்ல வழி 
காட்டறேன்" என்றாள் வெடுக்கென்று.
 
 அம்மா சொன்னதைக் கேட்டதும் ஆடிப்போனாள் செல்வராணி. "என்னம்மா இப்படி சொல்ற? எனக்கு 
புத்தி சொல்வீன்னு வந்து சொன்னா,
 ஒரேயடியா வெட்டிட்டு வந்துடுன்ற! அப்பா கடைசி காலத்துல திருந்தி வந்து இப்ப நீயே 
கதின்னு கெடக்குறாப்புல என் புருஷனும் வர
 மாட்டாரா?அது வரைக்கும் நானும் பொறுமையா காத்திருக்கிறது தானம்மா நம்ம பண்பாடு!"
 
 என் புருஷன் மாதிரியே உன் புருஷனும் கண்டிப்பா ஒரு நாளைக்கு திருந்தி வருவான். அதுல 
சந்தேகமே இல்ல. ஆனா, ஆடி ஓய்ஞ்சு
 உடம்புலே இரத்தம் சுண்டுனப்புறம் அவன் திருந்தி வர்றதுலே என்னடி பிரயோசனம்? 
வாலிபவயசுல எல்லாம் கண்ணீரும்
 கவலையுமா காலங் கடத்திட்டு, வயசு போன காலத்துல என்னத்தடி சந்தோஷப்படறது?"
 
 "நீ இருந்தியேம்மா, ஒரு தவம் மாதிரி பொறுமை காத்தியே!"
 
 "அப்ப எனக்கு புத்தியும் இல்ல; போக்கிடமும் இல்லடி. உன்னை வச்சுக்கிட்டு நான் 
எங்கடி போயிருக்க முடியும்? எனக்கு என்ன
 வருமானம் இருந்துச்சு காலத்த ஓட்ட. ஆனா நீ அப்படி இல்லடி. சொந்தக் கால்ல நிக்கிறே. 
ஒரு பொண்ணுக்கு புருஷன விட வேலை
 தான்டி முக்கியம்! எதுக்காகவும் உன் வேலைய மட்டும் விட்டுடாத....."
 
 "வயித்துலே புள்ள வேற வந்துருச்சேம்மா. எப்படி தனியா வந்து அதை ஆளாக்குவேன்? அப்பன் 
இல்லாத புள்ளைன்னு சமுகம்
 பலிக்குமே!"
 
 "போடி அசடே. இன்னைக்கு காலம் எவ்வளவோ மாறியாச்சு. உன் புள்ளைக்கு உன் புருஷனோட 
இன்ஷியல் கூடத் தேவையில்லை. உன்
 இன்ஷியலே போதும். தைர்யமா உன் புருஷன் கிட்டருந்து வெலகி வா. நானும் நீயும் 
சென்னையில போயி தனி வீடெடுத்து தங்கு
 வோம். எப்பவும் போல நீ வேலைக்குப் போயிட்டு வா. காலம் கனிஞ்சு கடவுளுக்கும் 
சம்மதம்னா, உனக்கு பொருத்தமான உன்னை
 அப்படியே ஏத்துக்கிற நல்ல உள்ளத்தோட இன்னொருத்தன் கிடைச்சா உனக்கு மறுபடியும் 
கல்யாணம் பண்ணி வைக்கிறேன். இன்னொரு
 புருஷன் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. உன்னால் தனியாகவே வாழ்ந்து ஜெயிச்சுட 
முடியும். தைர்யமாக முடிவெடுத்து கிளம்பி வா...."
 
 "அம்மா நீ என் கூட சென்னைக்கு வந்துட்டா அப்புறம் அப்பா இந்த ஊருல எப்படி தனியா 
இருப்பார்?"
 
 "எனக்கு எப்பவும் அவர் முக்கியமில்லை; நீ தாண்டி முக்கியம். இந்த ஏற்பாடு 
அவருக்குச் சம்மதம்னா அவரும் நம்ம கூட கிளம்பி
 வரட்டும். இஷ்டம் இல்லைன்னா எக்கேடும் கெட்டுப் போகட்டும்!"
 
 அம்மாவின் திடமும் தீர்மானமும் பார்த்து செல்வராணிக்கு மலைப்பாக இருந்தது. அவள் 
அழைத்துப் போகிற பாதையில் நிறைய
 வெளிச்சமிருப்பதாகத் தோன்ற ஒரு நல்ல வக்கீலைப் பார்த்துப் பேச கிளம்பினாள் 
செல்வராணி.
 
 -
 (நன்றி : தாமரை - டிசம்பர் 2007)
 engrsubburaj@yahoo.co.ina
 |