பதிவுகள்
|
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம்.
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும்
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில்
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
|
மணமக்கள்! |
|
தமிழ்
எழுத்தாளர்களே!..
|
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை
வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள்
ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை
கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல்
ngiri2704@rogers.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்
படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு
ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு
அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின்
நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப்
படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே
சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள்
பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப்
பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது
மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து
கொள்ளலாம். |
|
சிறுகதை! |
கற்பு என்னும் குறும் படத்தின்
கதைச் சுருக்கம்
- சோ.சுப்புராஜ் (திருமுல்லைவாயில்) -
"ஆரம்பிக்கலாமா ஸார்......" என்றான் அரவிந்த். எப்படியாவது முன்னேறி தன்னை
நிரூபித்து விடுகிற துடிப்பும் தீவிர
தேடலும் நிறைந்த அவன் சினிமாவில் இயக்குனராக முயற்சித்துக் கொண்டி ருப்பவன்.
முப்பது அல்லது கொஞ்சம் கூடப் போனால்
முப்பத்திரண்டு வயதிருக்கலாம் அவனுக்கு.
அவர்களிருந்த அறை மிகவும் சுத்தமாக இருந்தது. அரவிந்தும் இன்னொருவரும் தரையில்
ஜமுக்காளம் விரித்து
உட்கார்ந்திருக்க, மூலையில் ஒரு கட்டில் மடிப்புக் குலையாத விரிப்புகளுடன்
மல்லாந்து கிடந்தது. அரவிந்துடன் அமர்ந்திருந்தவர்
வெள்ளை வெளேரென்று தும்பைப் பூப்போல் வேஷ்டியும் சட்டையும் அணிந்து ஐம்பதுகளின்
ஆரம்ப வயதிலிருந்தார்.
கண்ணாடி டம்ளரிலிருந்த கறுப்பு திரவத்தில் ஐஸ் கட்டிகளைப் போட்டபடி "நான் கேட்டி
ருந்தது இன்னைக்கு
கிடைக்கும்ல....." என்றார் அரவிந்திடம். "கண்டிப்பா ஸார். எல்லா ஏற்பாடும்
பண்ணீட்டேன்; முதல்ல கதை கேட்ருங்க...." என்றான்
அவன்.
"ஊர்ல நான் பாட்டுக்கு மசால்பொடி வியாபாரம் பண்ணிக்கிட்டு செவனேன்னு கெடந்தவன,
என்னென்னவோ
ஆசையெல்லாம் காட்டி இவ்வளவு தூரம் இழுத்து வந்துட்ட.... குறும்படத்துக்கு பெரிசா
என்ன மார்க்கெட் வேல்யூ இருக்குன்னு தெரியல.
அவார்ட் ஏதாவது கிடைச்சாத்தான் அசலாவது தேறும். பத்துக்கு மேல ஒரு பைசா கூட
செலவழிக்க மாட்டேன் பார்த்துக்க....சரி படத்துக்கு
என்ன டைட்டில்....." கொஞ்சம் அசெளகரியமாக உணர்ந்தபடி பேசினார்.
"கற்பு;இரு நிகழ்வுகள்னு இப்போதைக்கு டைட்டில் வச்சிருக்கேன். கதை சொல்லி
முடிச்சதும் வேற டைட்டில்களும்
யோசிக்கலாம்...."
தலையணையை எடுத்து கால்களுக்கு இடையில் அழுத்தி வைத்து, வசதியாய் சுவரில் சாய்ந்து
கொண்டு
கண்களாலேயே கதை சொல்லத் தொடங்கும்படி சமிக்ஷை செய்தார் அவர்.உடனே அரவிந்த்
தொண்டையைச் செருமி கைகளை
விரித்துத் தொடங்கினான்.
ஓப்பன் பண்ணதும் ஸ்கிரீன்ல பைவ்ஸ்டார் ஓட்டல் மாதிரி அதீத முகப்பு அழகுடன் ஒரு
பில்டிங்கைக்
காட்டுறோம்.ஆனால் அது ஹோட்டல் இல்லை.ஒரு தொழிற்சாலை.தாம்பரம் தாண்டி
செங்கல்பட்டுக்கு மிகச் சமீபத்தில் இருக்கிறது அந்த மல்டி நேஷனல் லெதர் கார்மெண்ட்ஸ் தொழிற்சாலை.பெண்களே அதிகமாய் வேலை பார்க்கும்
அங்கு ஒவ்வொரு அங்குலத்திலும்
அழகும் சுத்தமும் பளிச்சிடுகிறது.எங்கும் எதிலும் அமெரிக்கத்தனம். கழிவறைகளில் கூட
தண்ணீர் டேப்புக்கு பதில் காகிதச் சுருள்
வைக்கப் பட்டிருக்கிறது.
எங்கு பார்த்தாலும் கேமாராக்கள் பொருத்தபட்டு ஒவ்வொருவரின் பணியும் தீவிரமாகக் கண்
காணிக்கப் படுகிறது.
அதனால் தொழிற்சாலையில் எப்போதும் ஒருவிதமான இறுக்கமான சூழலே
நிலவுகிறது."டாய்லெட்டுல கூட முழுசா தொறந்து
ஒண்ணுக்குப் போகக் கூட பயமா இருக்குடி....கண்ணுக்குத் தெரியாத கேமரா பொருத்தி
அதையும் படம் புடிச்சிப் பார்த்துக்கிட்டு
இருப்பான்களோ என்னவோ...."ன்னு கழிவறையில் இரண்டு பெண்கள் பேசிச் சிரித்துக்
கொள்கிறார்கள்.
அலுவலகத்திலும் அதே சூழல் தான். இங்கும் பெரும்பான்மை பெண்களும் கொஞ்சூண்டு
ஆண்களும் வேலை
செய்கிறார்கள்.யாரும் யாரையும் ஸார் என்றோ மேடம் என்றோ அழைக்காமல்
பதவிப்பாகுபாடில்லாமல் ஒருவரை ஒருவர் பெயர்
சொல்லியே அழைத்துக் கொள்கிறார்கள்.ஆனாலும் மனதளவில் யாரும் யாருடனும் நெருங்காமல்
கனத்த இடைவெளிகளுடன்
புன்னகையால் மழுப்பியபடி நடமாடுகிறார்கள்.
மதிய உணவு இடைவேளை.டைனிங் ஹாலில் டேபிளுக்கு இரண்டு பேராக உட்கார்ந்து சாப்பிட்டுக்
கொண்டிருக்கிறார்கள். சன் டீவியில் செய்தி வாசிப்பு ஓடிக் கொண்டிருக்கிறது.
நம்முடைய கதாநாயகி மைதிலியும் - அவளுக்கு 28
வயதிருக்கும்;ஏற்றுமதி இறக்குமதிப் பிரிவில் உதவி மேலாளர் உத்தியோகம் - அவளின் தோழி
ஜான்சியும் - அவளுக்கு 25
வயதிருக்கும்;எம்.டி.யின் செக்ரட்டரியாக இருக்கிறாள் - ஒரு டேபிளில் உட்கார்ந்து
பேசியபடி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மைதிலி : என்ன ஜான்சி லன்ச்சுக்குப் போயி பர்கரக் கடிச்சுக்கிட்டு
இருக்கிற!அமெரிக்க கம்பெனியில வேலை பார்த்தா
அவங்கள மாதிரி சாப்புடனுமா என்ன?
ஜான்சி : அப்படியெல்லாம் ஒண்ணுமில்லப்பா... நேத்து வேலைக்காரி வேலைக்கு வராததால
வீட்டுல சமைக்கல.கேண்டீன்ல
இதான் இருந்துச்சு.அதான் சாப்பிட்டுத் தான் பார்க்கலாமேன்னுட்டு
வாங்கியாந்தேன்.....
மைதிலி தன்னுடைய டிபன் பாக்ஸிலிருந்து சாம்பார் சாதமும் கோஸ் பொரியலும் ஜான்சியின்
பிளேட்டில் போட அவள் போதும் போதும்
என்று தடுக்கிறாள். டீவியில் செய்தி ஓடுவதை மறுபடியும் போகஸ் பண்ணுகிறோம்.
ஜான்சி : எனக்கே எல்லாத்தையும் போட்டுட்டா அப்புறம் நீ என்னத்த சாப்பிடுவ!
மைதிலி : இதில என்ன இருக்குப்பா.....போன மாசம் கம்பெனியிலருந்து டிஸ்மிஸ் ஆனாளே
சுமித்ரா, அவளப் பத்தி ஏதாவது தகவல்
தெரிஞ்சுதாப்பா...?
ஜான்சி : பாவம்ப்பா அவ; இன்னும் சரியா வேல அமையலியாம்.தீவிரமாத் தான்
தேடிக்கிட்டுரு கிறாளாம். இந்த சீனக்காரன் சம்பளத்த
அள்ளி அள்ளிக் குடுக்குறான். சின்னதா தப்புப் பண்ணினாலும் அடுத்த நிமிஷமே எந்த
விளக்கத்தையும் கேக்காம உடனே வேலையில
இருந்து தூக்கிடுறான். எல்லோரையும் ஒரு வித பயத்துலயே வச்சு, வேலை வாங்குற
மேல்நாட்டுக்காரன் டெக்னிக்.
மைதிலி : சுமித்ரா மேல ஒரு தப்பும் இல்ல;குவாலிட்டி டிபார்ட்மெண்ட் பண்ணின
குளறுபடிக்கு இவ பலிகடாவாயிட்டா.என்ன செய்றது?
ஜான்சி : சுமித்ராவுக்கு ஆதரவா பேசுனம்னு நம்மளயும் வேலைய விட்டு கடாசிடப் போறாங்க.
சன் டீ.வி.யில் நடிகை குஷ்பு தமிழ் பெண்களின் கற்பு பற்றி தாறுமாறாக கருத்துச்
சொன்னதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல்
கட்சிகளைச் சேர்ந்த பெண்கள் தெருவில் இறங்கிப் போராடுவதாகவும் செய்தி
சொல்கிறார்கள்.அவர்களின் பேச்சு கற்பு பற்றித்
திரும்புகிறது.
மைதிலி : இந்த குஷ்பு சும்மா கிடக்காம கற்பு பத்தி ஏதோ கருத்துன்னு சொல்லி வைக்க
அதுக்கு கோயில் கட்டுன தமிழ்நாட்டு ஜனங்க
இப்ப வெளக்க மாத்த எடுத்துக்கிட்டுப் போறாங்களே, குஷ்புவுக்கு இதெல்லாம் தேவையா?
ஜான்சி : நம்மூர்லதான் எல்லாத்தையும் அரசியலாக்கிடுவாங்களே! இதுல குஷ்பு என்ன
செய்யும் பாவம்? கற்காலத்துலருந்து கம்யூட்டர்
காலம் வரைக்கும் பெண்ணோட ஒடம்பு தான் பிரதானம். என்ன அசிங்கம் இது!
மைதிலி : அப்படீன்னா நமக்கு கற்பு, கலாச்சாரம் எதுவும் தேவை இல்லைங்குறியா? இந்திய
வாழ்க்கையோட ஆணிவேரையே கிள்ளி
எறிஞ்சுட்டு அப்புறம் நாம என்ன வாழ்றது!
ஜான்சி : கற்புங்குற கான்செப்டே மிகப் பெரிய கற்பிதம். ஆணாதிக்க சிந்தனை பெண்களைத்
தன்னோட சொத்தா அடிமையா
ஆக்குறதுக்காக உருவாக்கி உலவ விட்ட எத்தனையோ அழகான மாய விலங்குகள்ல கற்புங்குறதும்
ஒண்ணு.நம்ம உடம்புல
நமக்கே உரிமை இல்லாம ஆண் அதிகாரம் செலுத்துறது எவ்வளவு பெரிய கொடுமை! இதுலருந்து
முதல்ல வெளிய வரணும்.....
மைதிலி : அப்ப சோரம் போகுறது தான் பெண் விடுதலைங்குறியா?
ஜான்சி : இப்படி விபரீதமாப் புரிஞ்சுக்கிட்டா நானென்ன செய்றது! பெண்கள் உடம்பக்
கடந்து வரணும்னு சொல்றேன்.அதிகமான
எண்ணிக்கையில பெண்களப் புணர்வதே ஆண் மைன்னும் வீரமின்னும் நம்பி அலை பாய்கிற ஒரு
சமூகத்துல பெண்ணுக்கு மட்டும்
கற்புங்குற கவசமும் அதனால நேர்கிற உயிர்ப்பலிகளும் எதுக்குன்னு கேட்குறேன்!
வெளிப்படையா வெக்கமில்லாம ரெண்டு
மனைவிகளோட வாழ்கிற தலைவர்கள் எல்லாம் தமிழ்க்கற்பு பற்றி தாளிக்கிறது தேவையான்னு
கேட்குறேன்...சரி விடு.....நாம ஏன் வீணா
சண்டை போடணும்...இன்னும் எரநூறு வருஷம் போனாலும் கற்பு, கருமாந் திரங்கள்லருந்து
மக்கள இவங்க விடுபட
விடப்போறதில்ல...நம்ம தமிழ் டைரக்டர் களும் கைபடாத, கன்னி கழியாத விதவைகளுக்கு
மட்டுமே மறுமணம் செய்து வைக் கிற
புரட்சிகளும் மாறப் போறதில்ல....
அப்போது மைதிலியின் கைத்தொலைபேசி அலறி திரையில் 'காலிங் எரிக் ஸாங்' என்று
மின்னுகிறது. மைதிலி ஜான்சியிடம், "நம்ம
எம்.டி.ப்பா...இவன் எப்ப சென்னைக்கு வந்தான்?" என்று சொல்லியபடி போனை ஆன் பண்ணி
"எஸ் எரிக்......ஓகே.....ஓகே....ஷ்யூர்..." என்று
பேசிவிட்டு போனைத் துண்டிக்கிறாள்.
அரவிந்த் கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டபடி தயாரிப்பாளரின் முகம் பார்த்தான்.
"கொஞ்சம் சாப்டுறியா....?" என்று கிளாசை நீட்டினார். "பழக்கமில்லீங்க....."என்றபடி
அவன் கதையைத் தொடரப் போனான்.
"ஒரு நிமிஷம் தம்பி..." என்றபடி அவர் குறுக்கிட்டார். "ரெண்டரை மணி நேர
சினிமாவிலேயே படம் ஆரம்பிச்ச அஞ்சு நிமிஷத்துக்குள்ள
கதை எதை நோக்கிப் போகுதுன்னு தெளிவாச் சொல்லி ஒரு எதிபார்ப்ப ஏற்படுத்தணும்.
இல்லைன்னா படம் பார்க்கிறவன் வெளில
கிளம்பிப் போயிடுவான். நீ இன்னும் 'நாட்'டுக்கே இன்னும் வரலயே! சீக்கிரம்
சட்டுப்புட்டுன்னு சொல்லுப்பா...."என்றார்.
"ட்ரீட்மென்ட்ல சரி பண்ணீடலாம் ஸார்...." என்று சமாதானப் படுத்தியபடி அரவிந்த் கதை
சொல்லலைத் தொடர்ந்தான். மைதிலி
எம்.டி.யிடம் போனில் பேசி முடிக்கவும் அவளிடம் ஜான்சி கேட்கிறாள்.
ஜான்சி : இப்பல்லாம் இந்த சீனாக்காரன் ஷெட்யூலே தெரியுறதில்ல....அமெரிக்காவுல
இருக்கான்னு நெனச்சிக்கிட்டு இருந்தா
திடீர்னு இங்க வந்து நிக்கிறான்.என்னவாம் அவனுக்கு?
மைதிலி : காலைல தான் சென்னைக்கு வந்தானாம். சாயங்காலம் கண்டிப்பா என்னைப்
பார்க்கணுமாம்.கொஞ்சம்
தாமதமானாலும் காத்திருந்து பார்த்துட்டுப் போகச்சொன் னான். கஸ்டம் கிளியரன்ஸ்
சம்பந்தமா என்கிட்ட ஏதோ பேசணுமாம்.
ஜான்சி : நானே கேட்கணும்னுருந்தேன். இப்பல்லாம் கஸ்டம்ஸ¤ல நம்ம கம்பெனி புராடெக்ட்
ரொம்பத் தேங்குது போலருக்கே!
பேக்டரில ஸ்டோர் கொள்ளாம புரொடக்ஷன் ஆயிட்டு இருக்கு. பொருள் வந்து சேரலைன்னு
ஜெர்மனிலருந்தும் ஜப் பான்லருந்தும் போன்
மேல போனாப் போட்டு ஒரே கொடச்சல். உங்க டிபார்ட் மென்ட்ல என்னதான் நடக்குது?
மைதிலி : அய்யோ! அதை ஏன் கேக்குறப்பா.....கஸ்டம்ஸ¤ல இப்ப முருகதாஸ¤ன்னு ஒரு புது
ஆபீஸர் வந்துருக்கான்.ஒரே
கொடச்சல்ப்பா. அது சரியில்ல; இது சரியில் லன்னு நொண்டிக் காரணங்களாச் சொல்லி
கிளியரன்ஸ் சர்ட்டிபிகேட் தராம வேணும்னே
இழுத்தடிக்கிறான். சரக்கு தேங்குறதால டேமரேஜ் சார்ஜும் எகிறிடுது.....ஆபீஸ்ல
என்னடான்னா எனக்குத்தான் சாமர்த்தியம்
போதாதுன்றாங்க....நானென்ன சினிமால மாதிரி கவர்ச்சி டான்ஸ் ஆடியா கஸ்டம்ஸ் ஆபிஸர்கள
கவுக்க முடியும்?
ஜான்சி : (சிரிக்கிறாள்) அவனுக்கு என்ன தான் வேணுமாம். ஏதாவது பெருசா எதிர்பார்க்கு
றானோ என்னவோ?
மைதிலி : அதையும் சொல்லித்தொலைக்க மாட்டேன்றான்.புரோக்கர் மூலம் பணமும் அனுப்பிப்
பார்த்தோம். திருப்பி
அனுப்பிட்டான்.
ஜான்சி : கழுதைய விட்டுத் தள்ளு. அதுக்கு மேல நாம தான் என்ன பண்ண முடியும்? இனிமே
எரிக் பார்த்துக்குவான்.
நம்மகிட்ட ஆயிரத்தெட்டு ரூல்ஸ் பேசுறவன்கள் வெளிநாட்டுக்காரன் போயி தாட்பூட்னு
இங்கிலீஸ¤ல நாலு வுடுவுட்டா வாலச்
சுருட்டிக்கிட்டு நீட்டுன எடத்துல கையெழுத்துப் போட்டு சலாமும் போட்டு
அனுப்பிடுவான்கள். நம்ம அடிமை புத்தி அவ்வளவு சீக்கிரம்
போகுமா என்ன! இன்னைக்கு உனக்கு லேட்டாகும் போலருக்கே....உன் பொண்ண நீ போற வரைக்கும்
யாரு பார்த்துக்குவா?
மைதிலி : அது பிரச்னையில்லப்பா....ஸ்கூல் முடிஞ்சு டியூஷனுக்குப் போயிடுவா.டியூஷன்
முடிஞ்சு அவள் வீட்டுக்குப்
போறதுக்குள்ள சுப்புலட்சுமின்னு ஒரு வேலைக்காரி வந்து என் பொண்ணப்
பார்த்துக்குவா...அவள மாதிரி ஒரு வேலைக்காரி பட்டணம்
முழுக்க சல்லடை போட்டுத் தேடுனாலும் கிடைக்க மாட்டா.வேலை நறுவிசா அத்தனை சுத்தமா
இருக்கும். ஒரு வம்பு தும்பு கிடையாது.
பொரணி கிடையாது.பொய் கிடையாது; திருட்டுக் கிடையாது. கொஞ்ச வயசுக்காரி தான்.
சுறுசுறுப்பா பம்பரமா உழைப்பா.பகல்ல ஒரு
கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனில சித்தாளா வெலைக்குப் போறா. சாயங்காலம் எங்க வீட்டு வேலை.
வேலைக்காரி விஷயத்துல நான்
ரொம்ப லக்கி.....
அப்படியே கட் பண்ணி , அடையாரில் கட்டிட வேலை மும்முரமாய் நடைபெறும் ஒரு இடத்தைக்
காண்பிக்கிறோம். கான்கிரீட் வேலை
நடந்து கொண்டிருக்கிறது. சாரத்தில் பெண்களும் ஆண் களும் நின்றபடி கான்கிரீட்
நிரம்பிய சட்டியை ஒவ்வொருத்தராய் கை மாற்றி அது
மேலே பயணித்துக் கொண்டிருக்கிறது. பொழுது இருள்கிறது. ஒரு சாரத்தில் நின்று
கொண்டிருக்கும் சுப்புலட்சுமி பதட்டமாக இருக்கிறாள்.
சு.லட்சுமி : நாழி ஆகுது மேஸ்திரி. நான் கெளம்பனும். என் இடத்துக்கு யாரையாவது
அனுப்பு.
மேஸ்திரி : உன்னோட இதே ரோதனையாப் போச்சு. நீ என்ன ஆபீஸர் உத்தியோகமா பார்க்குற! ஒரு
நாள் போல அஞ்சு
மணிக்கு கிளம்ப முடியுமா? இன்னைக்கு ஆள் கம்மி. கான்கிரீட் வேலையை பாதில நிறுத்த
முடியாது. அதால பேசாம வேலையப்
பாரு.இல்லைன்னா எனக்கு கெட்ட கோவம் வந்துரும் பார்த்துக்க.....
ஒரு ஜோடிக் கண்கள் சுப்புலட்சுமியை வெறித்துக் கொண்டிருக்கின்றன.வேலை தொடர்கிறது.
மீண்டும் லெதர் கார்மென்ட் தொழிற்சாலை.
எல்லோரும் வேலை முடிந்து கிளம்புகிறார்கள்.
ஜான்சி : பை மைதிலி. நான் கெளம்புறேன். எரிக் வந்தாச்சு. இந்த ஏரியா கவுன்சிலர் ஏதோ
டொனேஷன் விஷயமாப்
பேசிக்கிட்டிருக்கிறார். அவர் வெலிய வந்ததும் நீ உள்ள போயிரு. ஒன்னும் ஒர்ரி
பண்ணிக்காத. எரிக் எம காதகன்.அவன் கிட்ட உன்
பிரச்னைகள மட்டும் தெளிவா சொல்லீடு.எதையும் ஈஸியா சமாளிப்பான். இன்னும் கொஞ்சம்
இருள்கிறது. மைதிலி கதவைத்தட்டிவிட்டு
உள்ளே போகிறாள். டை கட்டிய ஒடிசலான சீனன் நெடுநெடுவென நின்று கொண்டிருக்கிறான்.
இருவரும் ஆங்கிலத்தில் பேசிக்
கொள்கிறார்கள். ஒரு ·பைலை விரித்து சில பேப்பர்களைக் காட்டி அவள் விளக்கங்கள் சொல்ல
அவன் குட் என்கிறான்.இனி அவர்கள்
பேசிக் கொள்வது பின்னணியில் தமிழில் ஒலிக்கிறது.
மைதிலி : நானும் எவ்வளவோ போரடிப் பார்த்துட்டேன் எரிக். அந்த கஸ்டம்ஸ் ஆபிஸர்
வேணும்னே இழுத்தடிக்கிறார்.
எரிக் : எனக்குத் தெரியும் அது. நீ மிக நல்ல வேலை செய்திருக்கிறாய். அதில் எனக்கு
கொஞ்சமும் சந்தேகமில்லை. நானும்
முருகதாஸிடம் பேசி விட்டேன். அவனும் நம் பொருட்களை எந்த கால தாமதமும் செய்யாமல்
உடனுக்குடன் கிளியர் செய்ய ஒத்துக்
கொண்டிருக்கிறான். அதற்காக அவன் ஒரு சிறு உதவியை உன்னிடமிருந்து எதிர்பார்க்கிறான்.
மைதிலி : (சந்தோஷமாக) செய்துடலாம் எரிக். என்ன வேணுமாம்?
எரிக் : சிம்பிள். முருகதாஸ் உன் மேல் மிகவும் ஆசையாக இருக்கிறானாம். ஒரே ஒரு
இராத்திரி நீ அவனைச் சந்தோஷப்
படுத்த வேண்டு மென்கிறான். அவ்வளவுதான். நீயும் அவனும் நாளை ஊட்டி கிளம்புவதற்கான
எல்லா ஏற்பாடுகளும் செய்து விட் டேன்.
ஓ.கே.
மைதிலி : (அதிர்கிறாள். கொஞ்ச நேரம் எதுவும் பேசாமலிருக்கிறாள்.அப்புறம்
தீர்மானமாகப் பேசுகிறாள்.) நோ எரிக். ஒரு நாளும்
இதுக்கு நான் சம்மதிக்கவே மாட்டேன். உங்க கல்ச்சர்ல வேணும்னா இது ரொம்ப சாதாரணமா
இருக்கலாம். யாரும் யாரோடயும் போய்
படுத்துக்கிறது எங்க கல்ச்சர்ல சாத்தியமே இல்ல. வெரி ஸாரி.
எரிக் : நோ ப்ராப்ளம் அட் ஆல். உன்னை நான் ஒருபோதும் வற்புறுத்தவே மாட்டேன்.
நாளைக்கு வந்து உன் ராஜினாமாக்
கடிதம் கொடுத்துட்டு அக்கவ்ண்ட்ட செட்டில் பண்ணிக்கோ. ஆனா ஒரு விஷயம் தெளிவா
தெரிஞ்சுக்கோ. நம்ம நிறுவனத்துல எவ்வளவு
வெளிநாட்டுக் காரங்க வேலை செய்றோம்! யாராவது உன்கிட்ட தப்பான எண்ணத்தோட
அணுகியிருக்கமா? பதில் சொல்லு மைதிலி.......
மைதிலி : நிச்சயமா இல்ல எரிக்.
எரிக் : உன்னை படுக்கைக்கு கூப்புடுறது உன்னோட தேசத்துக்காரன் தானே! காதலையும்
காமத்தையும் எதுக்கோ விலையா
கேட்குறது உங்க ஆண்களோட மனோபாவந் தான். இந்த ஏற்பாட்டுல எனக்குமே உடன்பாடில்லை. ஒரு
இந்தியப் பெண்ணிற்கு இது
எத்தனை வலி மிகுந்த அனுபவம்னு எனக்கும் புரியும். நானும் அந்த முட்டாள்
அதிகாரியிடம் எவ்வளவோ எடுத்துச் சொன்னேன்.
உன்னை விட இளமையான அழகான வேறு பெண்களை அனுப்புகிறேன் என்று கூட சொல்லிப்
பார்த்தேன். ஏனோ அவன் மசியவே
இல்லை. உன் பேரழகில் உண்மையிலேயே அவன் மயங்கி யிருக்கலாம்; அல்லது அவனது ஈகோவைக்
காயப்படுத்தும் படி எப்பவாவது நீ
பேசி இருக்கலாம். நீ மட்டும் தான் வேண்டுமென்று பிடிவாதமாக நிற்கிறான். எனக்கு என்
பிஸினெஸ் முக்கியம். உங்களின் கற்பு,
கலாச்சாரம் பற்றி எல்லாம் எனக்கு அக்கறை இல்லை. நீ விரும்பினால் நாளைக்கு
ஊட்டிக்குப் போய் அந்த முட்டாளுடன் தங்கி விட்டு
உடையில் பட்ட குருவி எச்சத்தை துடைப்பது போல் அந்த அனுபவத்தையும் கழுவித்துடைத்து
விட்டு உன் தினப்படி வாழ்க்கைக்குத்
திரும்பி விடலாம். ஒரு உத்திரவாதம் தருகிறேன். இதுவே முதலும் கடைசியும்! இனி ஒரு
தடவை அவனே கேட்டாலும் உன்னை
அனுப்ப மாட்டேன். இந்த ரகசியம் எனக் கும் இந்த அறைக் காற்றுக்கும் தவிர வேறு
யாருக்கும் தெரியப் போவதில்லை. இதில் உனக்கு
இஷ்டமில்லாத பட்சத்தில் நாளைக்கு உன் ராஜினாமாக் கடிதத்துடன் வந்துவிடு. இப்போது நீ
போகலாம்.குட் நைட்.
அலுவலக வாகனம் அடையாறில் அவர்களின் புது ·பிளட்டில் மைதிலியை இறக்கிவிட்டுச்
செல்கிறது. வீடு இருளோடிருக்கிறது.
வீட்டைத் திறந்து உள்ளே போகிறாள். அவளின் ஆறு வயது செல்ல மகள் ஒரு மூலையில்
சுருண்டு படுத்துத் தூங்குகிறாள். பார்த்ததும்
சிலீரென்கிறது. வேலைக்காரி இன்னும் வரவில்லை என்பது புரிந்து பரபரப்புடன்
செயல்பட்டு பதட்டத்துடன் பாலைக் காய்ச்சி மகளை
எழுப்பி புகட்டுகிறாள்.அவளுக்கு அழுகை பொங்குகிறது.
காசைத் துரத்துகிற தன் வாழ்க்கை மீது அவளுக்கு கோபம் வருகிறது. பிறந்ததிலிருந்தே
தன் பிள்ளை தாதிகளிடமும்
வேலைக்காரிகளிடமுமே வர்கிற அவலம் உறைக்கிறது. நெஞ்சோடு அணைத்து மார்பு விம்ம விம்ம
ஒரு நாளும் பால் புகட்டியதில்லை.
மடியில் போட்டு கதை சொல்லித் தூங்கப் பண்ணியதில்ல. வேலைக்குப் போகிற அம்மா என்கிற
நிதர்சனம் புரிந்ததில் குழந்தையும்
அதிகம் பிடிவாதம் பிடிக்காமல் தன்னைத்தானே தயார்படுத்திக் கொண்டதில் அவளுக்கும்
குழந்தைத் தனமே இல்லாமல் போய் விட்டது.
இன்றிலிருந்து எல்லாவற்றையும் உதறிவிட்டு இவளே உலகமென்று இருந்துவிடலாம்
போலிருந்தது.
வேலைக்காரி சுப்புலட்சுமி அவசர அவசரமாக வருகிறாள். "மன்னிச்சுக்கோ தாயி. அந்த
வீணாப்போன மேஸ்திரி கான்கிரீட்
போட ஆள் போதாதுன்னு நேரத்தோட அனுப்ப மாட்டேன் னுட்டான். அதான்
தாமதமாயிருச்சு....குட்டிச் செல்லம்: அஞ்சு நிமிஷம்
பொறுத்துக்கோ; எல்லாம் ரெடி பண்ணீடுறேன்......" என்றபடி குழந்தையின் கன்னம் வருடி
சேலையைத் தூக்கிச் சொருகிக் கொண்டு
சமையலறைக்குள் போகிறாள். அங்கு இரண்டு பெண்களும் பரபரப்பாக இயங்குகிறார் கள்.
குழந்தை ஏதோ வீட்டுப்பாடத்தைக் கிறுக்கிக்
கொண்டிருக்கிறது.
மைதிலியின் புருஷன் இராமனாதன் வேலை முடிந்து வீட்டிற்கு வருகிறான். கார்ச்சாவியை
அதற்கான வளையத்தில்
மாட்டிவிட்டு தன் அறைக்குப் போக யத்தனிக்கும் போது குழந்தை ஓடிவந்து "டாடி..."
என்றபடி கால்களைக் கட்டிக் கொள்கிறது. <
"ஓ...இன்னுமா நீ தூங்கல. டாடிக்கு ரொம்ப டயர்டா இருக்குடா...." என்று உதறிவிட்டுப்
போகிறான்.
மைதிலி வந்து அவனுடைய பெட்டியை வாங்கியபடி, "குழந்தைய ஏங்க இப்படி உதறிட்டுப்
போறீங்க; இன்னைக்குத்தான் நீங்க
வரும் போது அவள் முழிச்சுருக்கா; ஒரு ரெண்டு நிமிஷம் அவளக் கொஞ்சீட்டுப் போனா
குறைஞ்சா போயிடுவீங்க....." என்று
கண்டிக்கிறாள். "நான் எத்தன தடவை உங்களுக்குச் சொல்றது! ஐயாம் சாட்டர் டே
ஹஸ்பெண்ட்; சண்டே ·பாதர். மத்த நேரமெல்லாம்
ஒரு கம்யூட்டர் ரோபோ அவ்வளவு தான்..."என்று சொல்லிப் போகிறான்.
சுப்புலட்சுமி கிண்ணத்திலிருந்து உணவை எடுத்து குழந்தைக்கு ஊட்டியபடி, "பொம்பளையாப்
பொறந்தாலே எல்லாக்
காலத்துலயும் அவஸ்தை தான் செல்லம். அதுவும் கண்ணுக்கு கொஞ்சம் லச்சணமா இருந்துட்டா
நாய் பொழப்பு தான். நீ ஏன் செல்லம்
பொண்ணாவந்து இந்த பூமியில பொறந்த?" என்றபடி குலுங்கி குழுங்கி அழத் தொடங்குகிறாள்.
சத்தம் கேட்டு மைதிலி ஓடி வந்து
"என்னாச்சு சுப்பு?" என்கிறாள்."ஒண்ணுமில்ல தாயி...." என்று அவசரமாய் கண்ணீரைத்
துடைத்துக் கொண்டு அவளிடம் விடைபெற்று
வெளியேறுகிறாள். ஐயோ பாவம்; இவளுக்கு என்ன பிரச்னையோ? என்று நினைத்துக் கொள்கிறாள்.
சாப்பாட்டு மேஜை. புருஷனுக்கு உணவு பரிமாறியபடி மைதிலி சொல்கிறாள். "ராம்; நான்
வேலைய விட்டுடலாம்னு
நெனைக்கிறேன்..." அவனுக்கு அதிர்ச்சியில் உணவு புரையேறுகிறது. தண்ணீர் அருந்தியபடி
கேட்கிறான். "திடீர்னு ஏனிந்த விபரீத முடிவு?
இதைவிடவும் கூடுன சம்பளத்துல வேற ஏதாச்சும் வேலை கிடைச்சுருக்கா?"
மைதிலி : இல்ல ராம்; கொஞ்ச நாளைக்கு வீட்லருந்து குழந்தையப் பார்த்துக்கிறேன். இவள்
இன்னும் கொஞ்சம் பெரியவளான
பின்னாடி வேற ஏதாச்சும் வேலை தேடிக்கலாம்.
ராம் : (சிரித்தபடி) அது அத்தனை சுலபமில்ல மைதிலி. அபிமன்யூ சக்கர வியூகத்துல
மாட்டிக்கிட்டு முழிச்ச மாதிரி நம்மள
மாதிரியானவங்க சம்பாத்யம்ங்குற வியூகத்ல மாட்டிக்கிட்டிருக்கோம். நாமளே
ஆசைப்பட்டாலும் நம்மால அதை உடைக்க முடியாது. 45
இலட்ச ரூபாய் ·பிளாட்; 7 இலட்ச ரூபா கார். ரெண்டுக்கும் மாதத் தவணை கட்டுறதுக்கே
என் ஒருத்தனோட சம்பளம் போதாது. மத்த
தினப்படி செலவுகள்; வளரும் குழந்தைக்கான செலவுகள்னு எப்படி சமாளிக்க முடியும்!
அதனால வேலைய விடுறதெல்லாம் கனவுலயும்
நெனைக்க முடியாதுப்பா....
மைதிலி :ஆபிஸ்ல ஒரு சின்னப் ப்ராப்ளம் ராம்; வேலைக்குப் போக முடியாத சூழல். அதான்..
ராம் : வேலைன்னா பிரச்னை இல்லாமயா இருக்கும். எனக்குக் கூடத்தான் தினசரி ஆயிரத்
தெட்டுப் பிரச்னை. டார்கெட்
முடிக்கலைன்னு தலையத் தின்னுறான்கள்.நானும் வேலைய விட்டுடட்டுமா? அப்புறம் நானும்
நீயும் வீட்டையும் காரையும் சுத்தி சுத்தி>
வந்து கும்மி அடிக்கலாமா? சொல்லு....(எரிந்து விழுகிறான்)
மைதிலி : புரிஞ்சுக்கோங்க ராம்; ஆபிஸ்ல என் பெண்மைய விலையாக் கேட்குறாங்க.வேசியா
வேஷங்கட்டச் சொல்றாங்க.
நானென்ன செய்யட்டும்! (வெடித்து அழுதபடி அலுவலகத்தில் நடந்தவற்றைச் சொல்லி
முடிக்கிறாள்)
ராம் : (கொஞ்ச நேரம் அமைதியாக உலவுகிறான். மைதிலியை அணைத்து ஆறுதல் படுத்துகிறான்)
உணர்ச்சி வசப்படாம
கொஞ்சம் பொறுமையா யோசி மைதிலி. இந்த சின்ன விஷயத்திற்காக வேலைய விட்டுடுறது
புத்திசாலித் தனமாத் தோணல. நீ இப்ப
இருக்கிறது வெளிநாட்டுக் கம்பெனி. அங்கருந்து வெளிய வந்தீன்னா இப்ப நீ வாங்குறதுல
பாதிச் சம்பளம் கூட வேற கம்பெனில
கிடைக்காது. ஒரே ஒரு மாசம் உன் வருமானம் இல்லைன்னாலும் நம்ம குடும்பம்
திண்டாடிடும். கடல்ல தத்தளிச்சா யாராவது வந்து
காப்பாத்த ஒரு சான்ஸ் இருக்கு; ஆனா கடன்ல தத்தளிச்சா மூழ்குறதத் தவிர வேற வழியே
இல்ல....அடுத்தவன் பொண் டாட்டி மேல
ஆசைப் படுறவன் ஆண்மை இல்லாதவனாத்தான் இருப்பான். உன்னை ஒண்ணும் செய்ய முடியாது
அவனால. உனக்குப் புரியும்னு
நெனைக்கிறேன். அதால தைர்யமா கிளம்பிப் போயிட்டு வா...(எழுந்து போகிறான்)
படுக்கை அறை. ராமனாதன் தூங்கிக் கொண்டிருக்கிறான்.மைதிலிக்கு தூக்கம் பிடிக்க
வில்லை.அவளுக்கு மிகவும் வேதனையாக இருந்தது.
கற்பை காணிக்கையாகக் கேட்கிறான் கயவன். கணவனோ மறக்காமல் காண்டம் கொண்டு போ
என்கிறான்.என்ன தாம்பத்யம் இது! <
பேசாமல் வேலையையும் புருஷனையும் சேர்த்தே உதறிவிட்டு குழந்தையுடன் வெளியேறிவிடலாமா
என்று யோசிக்கிறாள் மைதிலி.
கூடவே ஒரு கேள்வியும் எழுகிறது - வெளியேறி எங்கு செல்வது?
இந்த நிமிஷம் கையில் காலணா இல்லை. இவளின் வங்கிக் கணக்கிலும் ஐநூறு ரூபாய் தேறினால்
அதிகம்.சம்பளம் கிரெடிட்
ஆன அடுத்த நிமிஷமே விழுங்கிக்கொள்ள முதலையாய் வாய் பிளந்து காத்திருக்கின்றன பின்
தேதியிட்ட காசோலைகளும் கடன்
அட்டைகளும். அப்பாவிடம் போனால் அதிகபட்சம் மூன்றுநாள் தாங்குவார்கள். அப்புறம்
கிளம்பலியா என்று கேட்கத் தொடங்கி
விடுவாள் அம்மா. ரிட்டயர்டு வாத்தியார் வீட்டில் கொட்டியா கிடக்கும் செல்வங்கள்!
அதுவும் காலம் போனபிறகு ஒரு அஜாக்கிரதையான <
தருணத்தில் அம்மாவின் வயிற்றில் வந்து தங்கிவிட்ட தங்கையை கரையேற்றவே வழி தெரியாமல்
முழி பிதுங்கிக்
கொண்டிருப்பவர்களுக்கு இவளும் போய் இன்னொரு சுமையாக இருக்க முடியாது.
யோசணைகளின் கனத்திலேயே உறங்கிப்போகிறாள் மைதிலி. நடு இஅரவில் மறுபடியும் விழிப்பு
வருகிறது அவளுக்கு. ஏனோ
புருஷனின் அணைப்பும் வெதுவெதுப்பும் வேண்டியிருக்க, நெருங்கிப் போய் அவனை இறுக
அணைத்து காதுமடல்களை இதழ்களால்
வருடுகிறாள். ராமோ அரைத்தூக்கத்திலேயே "இன்னைக்கென்ன சனிக்கழமையா இதையெல்லாம்
வச்சுக்கிறதுக்கு....பேசாம தூங்கு
மைதிலி....நாளைக்கு நேரத்தோட எழும்பி வேலைக்குப் போக வேண்டாமா" என்றபடி புரண்டு
அவளுக்கு புறமுதுகு காட்டித் தூங்கிப்
போகிறான்.
மைதிலிக்கு சுளீரென்று அடிமனதில் வலிக்கிறது. அவமானத்தில் தன் பெண்மை காயம்
பட்டதாய் உணர்கிறாள். இந்த
உதாசீனப்படுத்தலுக்காவது இவனைப் பழிவாங்க வேண்டுமென்று மனதில் வெறி கிளம்புகிறது.
மறுபடியும் தூங்கிப் போகிறாள்.
விடிந்ததும் வழக்கம் போல அலுவலகம் கிளம்பிப் போகிறாள். இவளின் மேஜையில் ஊட்டிக்கு
போய் வருவதற்கான விமான
டிக்கெட்டும் தங்கப் போகும் ஐந்து நட்சத்திர விடுதி பற்றிய விபரங் களுமிருக்கின்றன.
எடுத்துக் கொண்டு கம்பெனிக் காரில் கிளம்பிப்
போகிறாள்.
ஊட்டியின் பசுமையையும் பனி சூழ்ந்த அழகுகளையும் காட்டுகிறோம். ஹோட் டலில் இவ
ளுக்காக இளித்துக் கொண்டு
காத்திருக்கும் முருகதாஸைப் பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது அவளுக்கு. முருகதாஸ்
மிருக இச்சை கொண்டவன் - மிருக இச்சை
என்று சொல்வது மிரு கங்களை கேவலப் படுத்துகிற வார்த்தை; ஏனென்றால் அவை கலவிக்காக
ஒரு போதும் தன் இணைகளை
வெறிபிடித்து இம்சிப்பதில்லை- கண்ணில் படுகிற பெண்களை எல்லாம் காதலும் இல்லாமல்
காமமும் இல்லாமல் வெறும் உடம்பாகவே
பார்த்து அணைந்து விடுகிற ஆவேஷத்தில் அலைபவன். அந்த இரவு மிகமிக வலி மிகுந்ததாக
நினைத்தாலே குமட்டலெடுக்கிற கசப்பான
நினைவுகளாக மைதிலிக்கு கடந்து போகிறது. ஊட்டிக் காட்சிகளை ஆபாசமில்லாமல் காட்சிப்
படுத்துவது பெரிய சவால் தான் நமக்கு.
ஒளிப்பதிவாள நண்பர் - பூனே திரைப்படக் கல்லூரியில் படித்தவர் - இதைக் கச்சிதமாகப்
படம் பிடித்துக் கொடுப்பார்.
அடுத்த நாள் சாயங்காலம் சென்னைக்குத் திரும்புகிறாள் மைதிலி. வீடு போட்டது போட்டபடி
அப்படியே அலங்கோலமாகக்
கிடக்கிறது. நேற்று வேலைக்காரி வேலைக்கு வரவில்லை என்று தெரிகிறது. அலுவலகத்திற்கு
போன் பண்ணி இரண்டு நாட்கள் விடுப்பு
சொல்லிவிட்டு வீட்டை ஒதுங்க வைக்கிறாள். குழந்தையைக் கட்டிக்கொண்டு குமுறி
அழுகிறாள்.
நான்கு நாட்கள் கழித்துத் தான் சுப்புலட்சுமி வேலைக்கு வருகிறாள். அப்போது
வீட்டிலிருக்கும் ராம் "இனிமேல் வேலைக்கு வர
வேண்டாம்...." என்று வேலைக்காரியிடம் சண்டைக்குப் போகிறான். சுப்புலட்சுமியோ
மிகவும் களைத்து சோர்ந்து போயிருக்கிறாள்.
ராமைக் கையெடுத்துக் கும்பிடுகிறாள்.
சு.லட்சுமி : இந்த ஒரு தடவை மன்னிச்சிருங்கையா....வீட்டுல கொஞ்சம் பிரச்னை. அதான்
வேலைக்கு வர முடியல. இனிமே
ஒழுங்கா வேலைக்கு வந்துருவேன்......
ராம் : இவ சொல்றது எதையும் நம்பாத மைதிலி. அத்தனையும் வெளி வேஷம். பயங்க ரமான
பசப்புக்காரி இவள்.
கொலைகாரக் குடும்பம். இவ புருஷன போலீஸ் புடிச்சிட்டுப் போயிருச்சு தெரியுமா?
இரண்டு நாட்களுக்கு முந்தைய செய்தித் தாளை எடுத்து அதில் சுப்புலட்சுமியின் புருஷன்
சம்பந்தமாக செய்தி வெளிவந்திருக்கும்
பக்கத்தைப் பிரித்துப் படிக்கச் சொல்லித் தருகிறான். அதில் சுப்புலட்சுமிக்கும்
அவள் கட்டிட வேலைபார்க்கும் இடத்தில் இன்ஜீனியராக
இருப்பவனுக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததாகவும் அது தெரிந்த சுப்புலட்சுமியின்
புருஷன் அந்த இன்ஜீனியரைக் கொலை செய்து
விட்டதாகவும் அதனால் காவல்துறை அவனைக் கைது பண்ணியிருப்பதாகவும் போட்டிருந்தது.
சு.லட்சுமி : அதுல போட்டுருக்கது அவ்வளவும் அபாண்டம் தாயி. எல்லாரும் ஒண்ணாச்
சேர்ந்துக்கிட்டு நடந்ததத் திரிச்சு தப்புத்
தப்பா செய்தி போட்டுருக்காங்க தாயி. நீயும் ஐயா சொல்றாப்ல என்னை வேலையிலருந்து
விரட்டிட்டா நானும் என் பையனும் தெருவுல
தான் நிக்கனும். அடைக்கலம் கொடு தாயி; உன்னைத் தான் மலை போல நம்பி
இருக்கேன்....(மைதிலியின் கால்களைக் கட்டிக்கொண்டு
கதறி அழுகிறாள்.)
மைதிலிக்கு அவள் மீது இனந்தெரியாத இரக்கமும் பிரியமும் சுரக்கிறது. அவளும் தன்னைப்
போல ஒரு உழைக்கிற பெண்மணி
என்பதால் வந்த கனிவு அது. சுப்புலட்சுமி உண்மையில் என்ன நடந்ததென்று விவரிக்கத்
தொடங்குகிறாள். அவள் பேசப்பேச
பின்னணியில் காட்சிகள் பிளாஸ் பேக்குகளாக விரிகின்றன.
"எனக்கும் என் புருஷனுக்கும் பில்டிங் வேலை நடக்குற எடத்துல குடிசை போட்டுக்
குடுத்திருக்காங்க தாயி. நான் அந்த
பில்டிங்குல சித்தாளாவும் என் புருஷன் பகல்ல ஸ்டோர் கீப்பராவும் இராத்திரில வாட்ச்
மேனாகவும் வேலை பார்க்குறோம். அங்க
கனகவேலுன்னு ஒரு இன்ஜீனியர் இருக்கான். அவன் தான் அங்க பொறுப்பு. ஓனரோட பையன்.
சின்னவயசுக்காரன் தான்.
தேவையில்லாம என்கிட்டத் தேடித்தேடி வந்து பேசுவான்; பார்க்கிற நேரமெல்லாம்
பல்லிளிப்பு வேற. அவனப் பார்த்தாலே யெனக்குப்
பத்திக்கிட்டு வரும். ஒரு சித்தாளுக்கும் இன்ஜீனியருக்கும் பேசுறதுக்கு என்ன
இருக்குன்னு நான் பேசாம ஒதுங்கிப் போயிடுவேன்.
அன்னைக்கு - வேலை முடிஞ்சு முகங்கால் கழுவிக்கிட்டு என் குடிசையில இருக்கிறப்போ
இவன் வந்து என்னைக் கூப்பிட்டான்.
அவன் பொண்டாட்டி பிரச வத்துக்குப் போயிட்டதாவும், நான் அப்பப்ப அவன்
வீட்டுக்குப்போயி அவன் பொண்டாட்டியா இருக்கனும்னு
பச்சையாவே கூப்பிட்டான். 'அதுக்கு நான் ஆளுல்ல;வேறாளப் பார்த்துக்கோ'ன் னு காறித்
துப்பிட்டேன்.
'நானும் ரொம்ப நாளாவே ஜாடை மாடையா கூப்டுக்கிட்டு இருக்கிறேன்; நீ பெரிய பத்தினி
மாதிரி டேக்கா குடுத்துக்கிட்டு
இருக்குற. இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு முடிவு தெரிஞ்சாகனும்; ஒண்ணு நீ என் ஆசைக்கு
இணங்கணும், இல்லைன்னா உனக்கும் உன்
புருஷனுக்கும் இங்க வேலை கிடையாது. குடிசையக் காலி பண்ணீட்டு வேற எடம் பார்த்துப்
போயிக்கங்க'ன் னு முடிவாச் சொல்லீட்டுப்
போயிட்டான்.
நானும் 'மானம் மருவாதைய அடமானம் வச்சு வாழணும்ங்கிற தேவை எங்களுக்கில்ல; போடா
நீயும் உன் புண்ணாக்கு
வேலையும்' னு சொல்லிட்டு வந்துட்டேன்.
இத,அத்தோட விட்டுருக்கணூம்;என் புருஷன்கிட்ட இதமா பதமாய் பேசி, வேற எதுனாச்சும்
வேலை தேடிப்
போயிருக்கனும். நம்மளப் போயி வப்பாட்டியா வரச் சொல்லீட்டானேங்குற ஆத்தாமையில
அன்னைக்கு ராத்திரியே என் புருஷன்கிட்ட
போட்டு உடைச்சிட் டேன்.இது கோபத்துல கிளம்பிப் போயி சாராயத்த வயிறு முட்டக்
குடிச்சிட்டு இன்ஜீனியர இழுத்துப்போட்டு அடிச்சே
கொன்னுருச்சு தாயி. என் ஒரே புள்ள மேல சத்தியமா இதுதான் தாயி நடந்துச்சு......"
சொல்லி விட்டு நீளமாய் அழுகிறாள் சுப்புலட்சுமி.
ராம் : நல்லா கதை கட்றாள். இவ நமக்கு வேண்டாம் மைதிலி. இவள இங்க வேலைக்கு
வச்சிருந்தா
போலீஸ¤க்கும் தேவை இல்லாம பதில் சொல்ல வேண்டியிருக்கும். நான் உனக்கு வேற
வேலைக்காரி ஏற்பாடு பண்றேன்.....
மைதிலி : அவசியமில்ல; நான் முடிவு பண்ணீட்டேன் - நமக்கு சுப்புலட்சுமி தான்
வேலைக்காரி. இனிமே அவள் நம்ம
வீட்டோட தங்கி முழு நேரமும் வேலை செய்வா. நீ உள்ள போயி வேலையப் பாரு சுப்பு.....
மைதிலி தன் கணவனை கோபமாய் ஊடுருவி ஒரு பார்வை பார்க்கிறாள். அந்தப் பார்வை
அவனுக்குள் ஆயிரம்
கேள்விக் கணைகளை வீச அதன் உஷ்ணம் தாளாமல் கல்லாகச் சமைகிறான். கல்லின் மேல்
டைட்டில் ஓடி படம் நிறைவடைகிறது.
கதை சொல்லி முடித்து அரவிந்த் தயாரிப்பாளரின் முகம் பார்க்கிறான். " கதை
நல்லாருக்கு தம்பி.....நீங்க காலதாமதம் பண்ணாம
காட்சிபிருச்சு வசனமெல்லாம் எழுதிருங்க.நாம கண்டிப்பா இந்தக் குறும்படத்தப்
பண்றோம்....."என்கிறார். "தம்பி அப்புறம் நான் கேட்டிருந்தது......" என்று
தயாரிப்பாளர் ஏதோ கேட்கத் தொடங் கும் போது கதவு தட்டப்படுகிறது. அரவிந்த் போய்
கதவைத் திறக்க ஒரு பெண் நின்று கொண்டிருக்கிறாள்."வா புவனா....."என்று அவளை உள்ளே
அழைத்து வருகிறான். தயாரிப்பாளரைக் காட்டி " இவர்தான் புரடீயூசர்; கொஞ்சம் பார்த்து
நடந்துக்கோ...."என்கிறான்.
"ஸார் நீங்க கேட்டிருந்தது; பேரு புவனா.சினிமாவுல முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கு.
நல்ல திறமையான ஆர்ட்டிஸ்ட். திறமைக்குத் தகுந்த வாய்ப்பு இன்னம் இதுக்கு அமையல.....
நம்ம ஸ்கிரீப்டலயே ஒரு கேரக்டர் கொடுக்கலாம்.நீங்க பார்த்து ஏதாச்சும்
பண்ணுங்க...." என்று சொல்லி அறையிலிருந்து அவன் வெளியேற அறைக் கதவு இறுக மூடிக்
கொள்கிறது.
- முற்றும்
e.mail : engrsubburaj@yahoo.co.in |
|
©
காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
|
|
|
|