| 
இவர்களும் சுவர்களும்
 - சோ.சுப்புராஜ் -
 
 கடினமாக இருந்தாலும்
 பெரும் போராட்டத்திற்கு பிறகாவது
 வீதியில் மனிதர்களைப் பிரித்தபடி
 விஸ்தீரணமாய் எழும்பி நின்ற
 சாதீயச் சுவர்களை
 உடைத்து விட்டோம் ; ஆனால்
 மனவெளிகளில் மதிலுகளாய்
 உயர்ந்து நிற்கும் உத்தப்புரச் சுவர்களை
 உடைப்பது எப்போது....!
 
 
   அங்கு மட்டுமா அந்தச் சுவர் என்னும் தலைப்பிட்டு இளமாறன் எழுதிய சிறு கவிதை அதிகம் 
பெயர் தெரியாத அந்த 
சிறுபத்திரிக்கையில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அவன் எழுதி அச்சில் வந்த முதல் 
கவிதை. ஒவ்வொரு எழுத்தாக வாசித்து மனசுக்குள் சந்தோஷப் பட்டுக் 
கொண்டிருந்தான். இதை யாரிடமாவது வாசித்துக் காட்ட வேண்டும் போல் இருந்தது. ஆனால் 
இந்த அலுவலகத்தில் யாருக்காவது கவிதை பிடிக்குமா 
என்பது பற்றி அவனுக்கு எதுவும் தெரியாது. அப்போது ஆவுடையப்பன் இளமாறனுக்கு தேனீர் 
கொண்டு வந்தான். 
 இளமாறன் தனக்குப் பரிமாறப்பட்டிருந்த தேனிரை மிகவும் ரசித்துக் குடித்தான். 
குடித்து முடித்ததும் ஆவுடையப்பனை மனதாரப் 
பாராட்டினான். “டீ போடுறதுல நல்லா தேறீட்ட ஆவுடையப்பா….நீ போடுற டீக்கு நான் அடிமை 
ஆகிக்கிட்டே வர்றேன்; இப்பல்லாம் காலையில நீ 
போட்டுக் குடுக்குற டீயக் குடிச்ச பெறகு தான் வேலையே ஓடுது….” என்றான்.
 
 அட்மினிஸ்ட்ரேஷன் ஆபிஸரே மனதாரப் பாராட்டிய பின்பும் ஆவுடையப்பனின் முகத்தில் 
சந்தோஷத்திற்குப் பதில் வாட்டமே
மிகுந்திருந்தது. ”நீங்க பாராட்டுறீங்க; ஆனா மத்தவங்க…? இன்னைக்கும் யாரும் எதுவுமே 
குடிக்கல ஸார்; மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு…..” 
என்றான் அழுதுவிடுகிற தொனியில்.
 
 “இதுல உன்னோட தப்பு எதுவுமில்ல ஆவுடை ; இது எனக்கும் அவங்களுக்குமுள்ள சின்ன ஈகோ 
பிரச்னை…சீக்கிரம்
 தீர்த்துடலாம்….கொஞ்சம் பொறுமையா இரு…..”
 
 “அது இல்ல ஸார்; இப்பவும் நாலஞ்சு நாளா இப்படித்தான் நடக்குது…. கலந்த காஃபி, 
டீயெல்லாம் ஒவ்வொரு நாளும் அப்படியே 
கீழ கொட்டும் போது தாங்க முடியல…. சாயங்காலமும் இப்படித்தான் ஆகுது; ஸ்நாக்ஸும் 
சாப்பிட மாட்டேங்குறாங்க…. எதுக்கு இந்தப் போராட்டம்? 
நான் வேணும்னா ஊருக்கே திரும்பிப் போயிடட்டுமா ….?”
 
 “நோ நோ… அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துடாத ஆவுடை….” என்ற இளமாறன் திடீரென்று 
இவனிடம் காட்டினால் என்ன 
என்று எண்ணமிட்டபடி கவிதை வந்த இதழை அவனிடம் விரித்துக் காட்டி படித்துப் பார்க்கச் 
சொன்னான். “நீங்க எழுதுனதா ஸார்.... நீங்க கவிதை 
எல்லாம் எழுதுவீங்களா ஸார்....” என்றபடி ஆர்வமாய் வாசிக்கத் தொடங்கினான். படித்து 
முடித்ததும் “எனக்கு சொல்லத் தெரியல்; ஆனா ரொம்ப நல்லா
இருக்கு ஸார்....” என்றபடி காலிக் கோப்பையை எடுத்துக் கொண்டு போனான்.
 
 இன்றைக்கும் அலுவலகத்தில் யாருமே காஃபி, தேனீர் எதுவும் குடிக்கவில்லை. எல்லோருடைய 
மேஜைகளிலும் பீங்கான்
கோப்பைகளில் பரிமாறப் பட்டிருந்த காஃபியும் தேனீரும் அலுங்காமல் குலுங்காமல் அப்படி 
அப்படியே வண்ண வேலைப்பாடுகள் நிறைந்த மூடிகளால்
மூடப் பட்டிருந்தன. அவை குளீரூட்டப்பட்ட அறையின் குளிர்ச்சியில் வேக வேகமாய்த் தன் 
வெப்பத் தன்மையை இழந்து கொண்டிருந்தன.
 
 இளமாறன் தன் அறை ஜன்னலில் தொங்கிய வெனீஸியன் பிளைன்டை விலக்கிப் பார்த்தான். 
அனைவரும் இரண்டு மூன்று 
பேர்களாகச் சேர்ந்து வேலைத் தளத்திற்கு வெளியே கீற்றுக் கொட்டகையில் இயங்கும் அவசர 
டீக்கடை நோக்கி மெதுவாய் நகர்ந்து 
கொண்டிருந்தார்கள். அப்போது சென்னையின் தலைமை அலுவலகத்திலிருந்து வைஸ்பிரஸிடென்ட் 
பிரபுபட்டேலின் வாகனம் அலுவலகம் நோக்கி
வந்து கொண்டிருப்பது தெரிந்தது. வாகனத்தை நிறுத்தி, கார்க் கண்ணாடியை இறக்கி 
விட்டு, கொத்துக் கொத்தாய்ப் போய்க் கொண்டிருப்பவர்களில் 
ஒருத்தனை அழைத்து அவர் ஏதோ விசாரிப்பதும், அவன் ஏதோ பதில் சொல்வதும், இங்கிருந்து 
தெரிந்தது. இன்றைக்கு கண்டிப்பாய் பிரச்னை வெடிக்கப்
போகிறது என்று இளமாறன் நினைத்துக் கொண்டார். அவர்களும் இதைத்தான் 
எதிர்பார்த்திருப்பார்கள்.
 
 இது மிகச்சிறிய மார்க்கெட்டிங் அலுவலகம். 15 பேர் தான் வேலை பார்க்கிறார்கள் - 
இரண்டு பெண்களையும் சேர்த்து.
சென்னையிலிருந்து 40கி.மீ.தூரத்தில் பிரதான சாலையிலிருந்து வெகுவாக தள்ளி பெரும் 
பசி கொண்ட நகரத்தால் வேக வேகமாக விழுங்கப்பட்டுக் 
கொண்டிருக்கும் ஒரு கிராமத்தில், சுற்றிலும் விவசாயம் செய்யப் படாமல் வெறுமனே 
போடப்பட்டிருக்கும் நிலங்களால் சூழப்பட்டு, புத்தம் புதுப் 
பொலிவுடன் இப்போது தான் கட்டிமுடிக்கப் பட்ட கட்டிடத்தில் இயங்குகிறது. சுற்றிலும் 
தரிசாகப் போடப்பட்டிருக்கும் நிலங்களில் எல்லாம் அடுக்குமாடி 
குடியிருப்புகளும், ஐ.டி.பார்க்குகளும் கட்டப்போகிறார்கள். அவற்றை விற்பனை 
செய்வதற்கான அலுவலகம் தான் இது.
 
 இந்த அலுவலகத்திற்கு ஹவுஸ் கீப்பிங் வேலைகளுக்குத் தான் இளமாறனுக்கு சட்டென்று 
ஆட்கள் அகப்படவில்லை.எலக்ட்ரிக் 
வேலைகளுக்கு பக்கத்து கிராமத்திலிருந்து ஒருவனை நியமித்து விட்டான். இன்னொரு ஆள் 
வேண்டும். அவன் ஆல் ரவுண்டராக - ஆபிஸ் பையனாக, 
காஃபி, டீ கலந்து தருபவனாக, அலுவலகத்தைக் கூட்டிப் பெருக்குவனாக,முக்கியமாக தினசரி 
ஒருமுறையாவது கழிவறைகளைச் சுத்தப்
படுத்துபவனாக - இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தான். எவ்வளவு முயன்றும் அப்படி 
ஓர் ஆள் அவருக்கு அகப்படவே இல்லை.
 
 பக்கத்து கிராமத்திலிருந்து வேலை கேட்டு வருபவர்களும் கழிவறைகளைச் சுத்தப் படுத்த 
வேண்டுமென்று சொன்னதும் 
முகஞ்சுழித்துப் போய்விட்டார்கள். ஏதாவது ஏஜென்சியை நியமிக்கலாமென்றால் இரண்டே 
இரண்டு சிறிய கழிவறைகளை தினசரி ஒருமுறைச் சுத்தப் 
படுத்துவதற்கு மாதம் ரூபாய் 15 ஆயிரம் வேண்டுமென்று கேட்டார்கள். சென்னையிலிருந்து 
தூர மென்றும், அக்கம் பக்கத்தில் வேறு அலுவலகம் ஏதும்
இல்லாததால் இந்த வேலைக்கென்று தனியாக முழு நேரமாகத்தான் ஆட்களை நியமிக்க 
வேண்டுமென்றும் காரணம் சொன்னார்கள்.
 
 ஒருமுறை நீண்ட இடைவேளைக்கப்புறம் இளமாறன் தன் சொந்த கிராமத்திற்குப் போயிருந்த போது 
சங்கரலிங்கத்துடன் பேசிக்
கொண்டிருந்தார். அவர் இவர்களின் தோட்டத்தில் பண்ணையாளாக வேலை பார்த்தவர். இளமாறனின் 
அப்பா பெரியாரிடம் தீவிர ஈடுபாடு கொண்டவராய்
இருந்ததால் ஜாதி வித்தியாசங்களுக்கு அப்பாற்பட்டு இவர்களின் வீடுகளில் சகஸமாகப் 
புழங்க அனுமதிக்கப் பட்டவர். இளமாறனை சிறு 
வயதிலிருந்தே தூக்கி வளர்த்தவர்.
 
 “என் பையன் ஆவுடைக்கு ஏதாவது வழி பண்ணக் கூடாதா தம்பி? வேலை வெட்டி எதுக்கும் 
போகாம, ஊர்க் காரங்களோட சண்டையும் சச்சரவுமா 
அலையுறான். புதுசு புதுசா பிரச்னைகளையும் இழுத்து விட்டுக்கிறான்….கூப்பிட்டு 
கொஞ்சம் புத்தி சொல்லிட்டுப் போங்க தம்பி ; நீங்க சொன்னாக் 
கொஞ்சம் கேப்பான்….”.
 
 உள்ளூர் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு, அப்புறம் நான்குமைல் நடந்து 
போய்ப் பக்கத்து ஊரில் படிக்க பால்மாறிக் கொண்டு, 
படிப்பை எட்டாவதோடு நிறுத்திக் கொண்டு, காடுமேடுகளில் காலித்தனமாய் அவன் அலைந்து 
கொண்டிருப்பதாகவும், இப்போது ஒரு பெரிய 
பிரச்னையில் வேறு அவன் மாட்டிக் கொண்டிருப்பதாகவும் சொன்னார்.
 
 அவர்களின் ஊரைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமைகள் 
வெகுவாகக் குறைந்து விட்டது என்றும், 
டீக்கடைகளில் இரட்டை டம்ளர் முறை எல்லாம் இல்லவே இல்லை என்றும் சட்டமன்றத்தில் 
பேசியிருந்தார். அந்த செய்தியைப் படித்த கோடானு 
கோடிப்பேர் மனசுக்குள் சிரித்தபடி கடந்து போய்விட, ஆவுடையப்பனுக்கு மட்டும் பலியாய் 
கோபம் வந்திருக்கிறது.
 
 அமைச்சரின் சொந்த கிராமத்திலேயே தீண்டாமைக் கொடுமைகள் தாண்டவமாடுவதையும் , டீக் 
கடைகளில் இரட்டை டம்ளர் முறை 
இன்னும் அமலில் இருப்பதை ஆதாரங்களுடன் விவரித்தும், அவரின் மாவட்டத்தில் மட்டும் 
இன்னும் எங்கெல்லாம் இரட்டை டம்ளர் முறை
கடைபிடிக்கப் படுகிறது என்று ஒரு பெரும் பட்டியலையும் தயாரித்து அந்த செய்தி வந்த 
பத்திரிக்கைக்கே வாசகர் கடிதமாக எழுதி விட்டான்.
 
 எதிர்க் கட்சிக்கு ஆதரவான அந்தப் பத்திரிக்கைக்காரனுக்கு இந்த விஷயம் லட்டு மாதிரி. 
அவனுடைய பத்திரிக்கையிலேயே
குறிப்பிட்ட ஜாதியினரைத் தவிர வேறு யாரும் உள்ளே போய் எட்டிப் பார்த்துவிடக் கூட 
முடியாது; ஆனாலும் அவர்கள் ஏதோ ஜாதிக்கு எதிரிகள் 
மாதிரி பாய்ந்து கொண்டு, தங்களுடைய நிருபரை அனுப்பி வண்ணப் புகைப்படங்கள் 
எடுக்கவைத்து ஆவுடையப்பனைப் பேட்டி கண்டு நீண்ட 
கட்டுரையாக எழுதி முதல் பக்கத்திலேயே
 
 அமைச்சரின் ஊரிலேயே தீண்டாமைக் கொடுமைகள்; டீக்கடைகளில் இன்னும் தொடரும் இரட்டை 
டம்ளர் அவலம்
 
 என்று கொட்டை எழுத்துக்களில் செய்தியை வெளியிட்டு விட அமைச்சருக்கு மானமே 
போய்விட்டது. அன்றைக்கிலிருந்து அமைச்சரின்
உறவினர்களும் கட்சிக்காரர்களும் ஆவுடையப்பனுக்கு குடைச்சல் கொடுக்கத் தொடங்கி 
விட்டார்கள். தகுந்த வாய்ப்புக் கிடைத்தால் அவனைப் போட்டுத் 
தள்ளவும் தயங்க மாட்டார்கள் என்பதால் உயிருக்குப் பயந்து ஓடி ஒளிந்து 
கொண்டிருக்கிறான்.
 
 இளமாறன் ஆவுடையை அழைத்துப் பேசினான்.
 
 ”எங்க அப்பன் தலையால அடிச்சிக்கிச்சு படிக்கச் சொல்லி…உங்கள மாதிரி நானும் 
ஒழுங்காப் படிச்சிருந்தா இந்தப் பாழாப்போன ஊரை விட்டுப்
போயி கௌரவமா பொழச்சிருக்கலாம்……. உலகம் எங்கயோ போயிட்டுருக்கு; ஆனால் இன்னும் நம்ம 
மாதிரி கிராமங்கள்ல, அய்யா, சாமின்னு
துண்டை எடுத்து கக்கத்துல வச்சுக் கூழைக் கும்புடு போட்டுக்கிட்டு, குடியான வங்க 
குண்டியைத் தாங்கிக்கிட்டு அடிமையா வாழ வேண்டியிருக்கு..! 
இதெல்லாம் மாற இன்னும் எத்தனை நூற்றாண்டு ஆகணுமோ?” என்றான் விசனத்துடன்.
 
 “ஜாதிங்கிறது நம்ம இந்திய சமுதாயத்தோட இரத்தத்துலயே இருக்குற வியாதி ஆவுடை… 
கிராமங்கள்ல மட்டுமில்ல; பட்டணத்துலயும் கண்ணுக்குத் 
தெரியாம இருக்கத் தான் செய்யுது….” என்று அவனை ஆறுதல் படுத்த முயன்றான் இளமாறன்.
 
 “அங்கெல்லாம் இலைமறை காய்மறையா இருக்கலாம் ஸார்; ஆனா கிராமங்கள்ல தான் வெட்ட 
வெளிச்சமா எந்த குற்ற உணர்ச்சியுமில்லாம பிறந்த
ஜாதிக்காக ஒரு கூட்டம் பெருமைப் பட்டுக்கிட்டும் இன்னொரு கூட்டத்த சிறுமைப் 
படுத்திக் கிட்டும் இருக்காங்க…. என்னையும் உங்க கூடவே
கூட்டிட்டுப் போயிடுங்களேன் ஸார்….. ஆப்புட்ட வேலை செஞ்சு பொழச்சுக்கிறேனே….”
 
 இளமாறனுக்கு தன்னுடைய புது அலுவலகத்திற்கே ஒரு ஆள் தேவை என்பது உறைக்க உடனே சரி 
என்றான். வேலை பற்றியும் 
விவரித்தான்.”பட்டணத்துக்குக் கூட்டிட்டு வந்து நம்மல இப்படி கக்கூஸ் கழுவ 
விட்டுட்டானே நம்ம ஊர்க்காரன்னு என்மேல வருத்தப் படக் கூடாது
ஆவுடை… உன் மனசுக்கு ஒப்புச்சுன்னா மட்டும் என்கூட கிளம்பி வா…நாளைக்கே போகலாம்….”
 
 “எந்த வேலையும் எனக்குச் சம்மதந்தான்… இப்போதைக்கு இந்த சனியம்புடிச்ச ஊருலருந்து 
தப்பிச்சுப் போனாப் போதும்….” என்று சொல்லி 
மாறனுடன் கிளம்பி வந்து விட்டான்.
 
 வேலை எளிமையாகவும் சந்தோஷமாகவுமே இருந்தது. காலையில் ஆவுடைதான் அலுவலகத்தைத் 
திறந்து வைத்து, மேஜை நாற்காலிகளைத் 
துடைத்து, அறைகளையும் பெருக்கி, கழிவறைகளையும் சுத்தப் படுத்தி அலுவலகத்தை தயார்ப் 
படுத்துவான். காலை 10மணிக்கு ஒரு முறையும் 
மாலை 4 மணிக்கு இன்னொரு முறையும் எல்லோருக்கும் காஃபி, டீ கலந்து தருவான். அப்புறம் 
நகல் எடுப்பது, கேட்பவர்களுக்கு வெளியில் போய் 
சாப்பாடு வாங்கி வருவது என்று அவ்வப்போது இடப்படுகிற வேலைகளையும் சுணங்காமல் 
செய்வான். பத்து நாட்களுக்கு மேல் எந்தப்
பிரச்னையுமில்லாமல் சுமுகமாகப் போய்க் கொண்டிருந்தது.
 
 ஒருநாள் மிகச் சீக்கிரமே அலுவலகம் வந்துவிட்ட கோபாலன், ஆவுடையப்பன் கழிவறைகளை 
கழுவுவதைப் பார்த்ததும் பதறிப் போய் விட்டான். 
அவனிடம் எதுவும் சொல்லாமல் இளமாறன் வந்ததும் அவருடன் சண்டைக்குப் போனான்.
 
 “என்ன அட்மினிஸ்ட்ரேஷன் ஆபிஸர் நீங்க? கக்கூஸ் கழுவுறவனையா காஃபி டீ கலந்து 
கொடுக்குச் சொல்றது….”
 
 “ஏன் இதிலென்ன தப்பு? ஒவ்வொண்ணுக்கும் தனித் தனியா ஆள் போடுறதுக்கு இதென்ன அவ்வளவு 
பெரிய ஆபிஸா என்ன?” என்று கேட்டான் மாறன்.
“அதெப்படி, கக்கூஸ் கழுவுறவன், காஃபி டீ கலந்து கொடுத்தா அது ஹைசீனிக்கா இருக்குமா 
என்ன!”
 
 “ஏன் இருக்காது? நீங்க எல்லாம் கக்கூஸ் போயி கழுவிட்டு அப்புறம் காபி டீ குடிக்கிற 
தில்லையா? அல்லது சாப்புடுறது தான் இல்லையா?”
 
 “இது விதண்டாவாதம்! நானும் அவனும் ஒண்ணா உங்களுக்கு? நான் கக்கூஸ் உள்ள போயிட்டாளே, 
சோப்புப் பட்டு கம்பிளீட்டா கழுவிட்டுத்தான் 
வெளியவே வருவேன்; அதே அளவுக்கு சுத்தமும் அக்கறையும் இவன்கிட்ட எதிர்பார்க்க 
முடியுமா? கண்டதையும் ஒழப்பிட்டு அப்படியே வந்து காஃபி 
டீ கலந்து குடுத்துட்டான்னா, அதை குடிக்குற நம்மளோட ஆரோக்கி யத்துக்கு யாரு 
பொறுப்பு?” என்று சீறினான்.
 
 “இங்க பாருங்க கோபாலன்; தேவை இல்லாம பிரச்னை பண்ணாதீங்க… அவன் எட்டாவது வரைப் 
படிச்சிருக்கான்; சுத்தம் பத்திய அடிப்படையான
விஷயங்கள் அவனுக்கும் தெரியும்; நானும் அவனைக் கண் காணிச்சுக்கிட்டுத்தான் 
இருக்கேன்; அதனால நீங்க பதட்டப் படுற மாதிரி எதுவும் 
நடந்துடாது…” இளமாறன் பொறுமையாய் எடுத்துச் சொல்லியும் அவன் சமாதானமாகாமல் 
திருப்பித் திருப்பிச் சொன்னதையே சொல்லிக் 
கொண்டிருந்தான். கக்கூஸ் கழுவுகிறவனை காஃபி, டீ, கலந்து கொடுக்க அனுமதிக்கக் கூடாது 
என்று.
 
 இளமாறனுக்கு கோபம் வந்து விட்டது. “””’”உங்களுக்கு இதுல இஷ்டமில்லைன்னா, அசூசையா 
ஃபீல் பண்ணீங்கன்னா நீங்க வேணு மின்னா ஆபிஸ்ல 
எதுவும் குடிக்காம இருந்துக்குங்க…..” என்றான் வெடுக்கென்று. அவனும் கோபமாய் 
முறைத்து விட்டுப் போய் விட்டான். அலுவலகத்தில் வேலை 
பார்க்கும் மற்றவர்களிடமும் சொல்லி, அவர்களுக்கும் பீதியைக் கிளப்பி விட்டு 
எல்லோரும் ஆவுடையப்பனைப் புறக்கணிக்கத் தொடங்கி விட்டார்கள்
மௌனமாய்.
 
 எதிர்பார்த்தபடி வைஸ்பிரஸிடென்ட் அனைவரையும் ஒரு அவசர மீட்டிங்கிற்கு அழைத்தார். 
நேரடியாக விஷயத்திற்கு வந்தார். “இளமாறன் என்னப்பா 
இதெல்லாம்? ஸ்டாஃப் வெல்பேர் அரேன்ஞ்மென்ட் இவ்வளவு மோசமாவா பண்றது? ஹைஸீனிக்கா 
இருக்காதுன்னு ஃபீல் பண்ணாங்கன்னா ஆள 
மாத்துறத விட்டுட்டு இதென்ன அக்கப்போர்….?”
 
 “ஸார், மன்னிக்கனும்; இது ஹைஸீனிக் சம்பந்தப்பட்ட பிரச்னை இல்ல. அதுதான் 
உண்மையின்னா இப்ப இவங்கல்லாம் காஃபி, டீ, குடிக்கிற கீத்துக் 
கொட்டகை ஓட்டலுக்குள்ள ஒரே ஒரு தடவை போய்ப் பார்த்துட்டு வாங்க….ஈயும் எறும்புமாய் 
எவ்வளவு அருவருப்பா இருக்குன்னுட்டு… 
அதுமட்டுமில்ல; அங்க ஒரே வாளி தண்ணில தான் காலையிலருந்து இராத்திரி வரைக்கும் 
எச்சிக் கிளாஸ முக்கி முக்கி கழுவுறதா பேர் பண்றாங்க…. 
பார்த்தாலே குமட்டலெடுக்கும் அந்த சூழல்ல எப்படி சந்தோஷமாக் குடிக்குறாங்க?” 
என்றான் இளமாறன்.
 
 வீ.பீ. கோபாலனைப் பார்த்தார். “எங்களுக்கு வேற வழி இல்லாததால தான் அங்க போய்க் 
குடிக்குறோம் ஸார்…பிரச்னையையே புரிஞ்சுக்க
மாட்டங்கறார் ஸார்…” என்றான் அவன்.
 
 “என்னோட சின்ன வயசுல எங்க கிராமத்துப் பள்ளிக் கூடத்துல சத்துணவு சமைக்கிறதுக்கு 
ஒரு தலித் பெண்ண நியமிச்சார் 
ஹெட்மாஸ்டர்….ஊர்க்காரங்கல்லாம் ஒண்ணாச் சேர்ந்துக் கிட்டு தங்கள் பிள்ளைகள 
சாப்பாடு வாங்க அனுப்பாமப் புறக்கணிச்சாங்க….ஒரு தலித்  சமைச்சத தாங்கள் சாப்பிடுறதாங்கிற ஜாதித் திமிர் அது…. அதேதான் இங்கேயும் நடக்குது; 
படிச்ச பட்டணத்துக் காரங்களுக்கும் படிக்காத
கிராமத்துக்காரங்களுக்கும் ஜாதி பார்க்குறதுல மட்டும் பெரிய வித்தியாசம் 
எதுவுமில்லன்னு நிரூபிக்கிறாங்க….” என்றான் இளமாறன்.
கோபாலன் அவசரமாய் இடை மறித்தான். “எல்லாத்துலயும் ஜாதிக்கண்ணாடி மாட்டிக்கிட்டு 
குதர்க்கமாப் பார்க்காதீங்க ஸார்.. ஆவுடையப்பன் என்ன 
ஜாதீன்னு இதுவரைக்கும் எங்க யாருக்கும் தெரியாது; அதைப் பத்தி எங்களுக்கு 
அக்கறையும் இல்ல…. ரெண்டு வேலையையும் ஒருத்தரே செஞ்சா 
கண்டிப்பா ஹைஸீனிக்கா இருக்காதுன்னு நெனைக்கிறோம்; அதான் எதிர்க்குறோம்…”
 
 “என்ன கோபாலன் ஹைஸீனிக் ஹைஸீனிக்குன்னு ரொம்பத்தான் அலட்டிக்கிறீங்க; அவன் என்ன கைய 
உள்ளவுட்டா கக்கூஸ் கழுவுறான்….எல்லா
வேலைக்கும் டூல்ஸ் இருக்கு; ஸொலுசனைத் தெளிச்சு, பிரஸ்ஸால தேய்ச்சு,ஃபிளஸ்ஸவுட்ட 
திறந்துவிட்டா கிளீனிங் முடிஞ் சது…கையில கிளவுஸ் 
மாட்டிருக்கான்; முகத்துலயும் கவசம் அணிஞ்சுதான் வேலை பார்க்குறான்… இதுல 
எங்கருந்து ஹைஸினிக் பிராப்ளம் வருதுசொல்லுங்க… நம்ம 
வீடுகள்ள எல்லாம் நம்ம பொண்ணுங்க கழிவறைய கிளீன் பண்ணீட்டு வந்து சமையல் கட்டுல 
வேலை பார்க்குறதில்லையா? அவங்க சமைச்சத நாம 
சாப்புடுறதுதான் இல்லையா?
 
 ஆவுடையோட ஜாதி என்னன்னே தெரியாதுன்னு அப்படியே அப்பாவி மாதிரி பேசறீங்களே! நெஞ்சைத் 
தொட்டுச் சொல்லுங்க…. கக்கூஸ் கழுவ 
சம்மதிச்சு வர்றாங்கன்னாலே அவங்க தலித் ஜாதியாத் தான இருப்பாங்கன்னு உங்களுக்குத் 
தெரியாதா என்ன? அந்த அடிப்படையில தான அவன் 
காஃபி, டீ, கலந்து தர்றத எதுக்குறீங்க…?” இளமாறன் நீளமாய்ப் பேசிக் கொண்டே போக 
வீ.பி. இடையில் புகுந்தார்.
 
 “இளமாறன் உங்க லெக்சரக் கேட்க இப்ப நாம கூடி இருக்கல! அதோட இதை ஜாதிப் பிரச்னையா 
நீங்க மாத்த முயற்சி பண்ணாதீங்க…. நம்ம
வீடுகள்ளயே ஒரே ஓவர்ஹெட் டேங்க்லருந்து தான் சமையலறைக்கும் தண்ணி வர்றது; 
கழிவறைக்கும் வர்றது; சமையலறை குழாய்லருந்து ரெம்ப 
சாதாரணமா தண்ணி புடிச்சுக் குடிப்போம்; ஆனால் கழிவறை குழாயிலருந்து தண்ணி 
புடிச்சுக் குடிக்க நமக்கு மனசு ஒப்புமா? அசூசையா ஃபீல் 
பண்ணுவமா இல்லையா? அது ஹுமன் சைக்காலஜி அவ்வளவு தான்; இங்கயும் அதுதான் பிரச்னைன்னு 
நான் நெனைக்கிறேன்…அதனால ரெண்டு 
வேலையையும் ஒருத்தன செய்ய விடாதீங்க; பிரிச்சுடுங்க….” என்றார் தீர்மானமாய்.
 
 “சரி ஸார்; இன்னையிலிருந்து ஆவுடையப்பன் காஃபி, டீ மட்டும் கலந்து குடுப்பான்; 
கக்கூஸ் கழுவுறதுக்கு நான் வேற ஆள் ஏற்பாடு 
பண்ணிக்குறேன்….” என்றான் இளமாறன்.
 
 அவசரமாய் ஆட்சேபித்தான் கோபாலன் “நோ…நோ…அதெல்லாம் சரியா வராது ஸார்; ஆவுடை கக்கூஸ் 
வேணா கழுவட்டும்….காஃபி, டீ 
கலக்குறதுக்கு வேற ஆள் போடச் சொல்லுங்க…”
 
 “ஏன் ஸார் அப்படி….” சிரித்தபடி கேட்டான் இளமாறன்.
 
 “பொதுவாவே அவங்க சுத்தமா இருக்க மாட்டாங்க; அவங்க கலக்குறத எப்படி ஸார் எல்லோரும் 
குடிக்க முடியும்?”
 
 இளமாறனுக்கு ஆக்ரோஷமாய்க் கோபம் வந்தது. அப்படியே பொங்கினான். “ஏன் ஸார் இப்படி 
இருக்கிறீங்க? இதை நான் தான் ஏதோ வலிஞ்சு ஜாதிப் 
பிரச்னையா மாத்திறேன்னு சொன்னீங்களே, பார்த்தீங்களா ஸார் இவரோட அடி மனசோட 
விகாரத்த…இப்படித் தான் அர்த்த மில்லாம எதையாவது
சொல்லி காலங்காலமா அவங்கள ஒதுக்கி வைச்சுருக்கோம்…. அவங்க குளிச்சு சுத்தபத்தமா 
இல்லாததால தான் கோயிலுக்குள்ள விடுறதில்லைன்னு
அபத்தமா சொல்லிக்கிட்டும் திரியறோம்….என்ன கொடுமை ஸார் இதெல்லாம்…!
 
 உத்தப்புரம்ங்குற கிராமத்துல தீண்டாமையின் சின்னமா இருந்த ஒரு நீண்ட சுவரக் 
கண்டுபிடிச்சு ரொம்பப் பெரிய போராட்டத்துக்கப்புறம் அதோட ஒரு 
சிறு பகுதிய அரசாங்கம் தலையிட்டு உடைச்சிருக்காங் களாம்…நெஞ்சத் தொட்டுச் 
சொல்லுங்க, அந்த மாதிரிச் சுவர் அங்க மட்டுந்தான் இருக்கா? அந்த 
உயர் ஜாதி மனோபாவமும் அகம்பாவமும் நம்ம எல்லோருடைய உள்ளுணர்வுலயும் இல்லையா? அதனால 
தான தலித்துகள்னா சுத்தமா இருக்க
மாட்டாங்க; அவங்க கலக்குற காஃபி, டீ எல்லாம் ஹைஸீனிக்கா இருக்காதுன்னு கண்டபடி கதை 
கட்டிக்கிட்டு அவங்களத் தொட்டா தீட்டு பார்த்தா 
பாவம்னுட்டு ஒதுக்கி வச்சுக்கிட்டு இருக்குறோம்….” மூச்சு விடாமல் பேசியதும் அந்த 
இடத்திலிருந்து எழுந்து கோபமாய் வெளியேறினான் இளமாறன். 
அடுத்த நாள் இளமாறனும் ஆவுடையப்பனும் அந்தக் கம்பெனி வேலையிலிருந்து 
விடுவிக்கப்பட்டார்கள்.
 
 engrsubburaj@yahoo.co.in
 |