| உதிர்ந்த இலைகள் - க.ராஜம்ரஞ்சனி (மலேசியா) -
 
            1 
             கடுமையான 
            இடிகள் காதில் விழ மழை பெய்ய போகிறது என்ற இயற்கையான எண்ணத்தில் ஜன்னலை 
            எட்டிப் பார்த்தாள் கல்பனா. மழை தூறல்களைத் தெளித்துக் கொண்டிருந்தது. 
            அப்போதுதான் வெங்கட் கண்ணில் பட்டான். ஜன்னலுக்கும் அவளுக்குமான 
            இடைவெளி குறைய உற்றுப் பார்த்தாள். ஆமாம், வெங்கட்தான். வீட்டுக் 
            குடியிருப்பில் இருக்கும் மாமரத்தின் கீழே சரிந்திருந்த இலைகளைப் 
            பொறுக்கிக் கொண்டிருந்தான். பெரிய கிளைகளை ஏந்தி நிற்கும் மாமரம் பல 
            ஆண்டுகளாக குடியிருப்புப் பகுதியில் இருக்கின்றது. ஒரு முறை அப்பா 
            மாமரத்தைப் பற்றி சொன்னது நினைவைக் கடந்து சென்றது. ‘நாம இங்க 
            வர்றப்பவே இந்த மாமரம் இருந்துச்சி. நம்ம வந்தே பதிமூனு வருஷமாச்சே..’ 
            என மனதில் கணக்கிட்டவாறே சொன்னார். 
 மாமரத்தின் வரலாறு தெரியாமல் போக மாமரத்தை உரிமை கொள்ள யாராலும் 
            முடியவில்லை. அந்த மாமரம் குடியிருப்புக்கே பொது சொத்தாகியிருந்தது. 
            மாமரம் பூக்களைச் சூடிக் கொள்ளும் காலக்கட்டம் தொடங்கி பழம் பழுத்து 
            தீரும்வரை பெரும் அவஸ்தைகுள்ளாகிவிடும். குடியிருப்பு மக்களே 
            ‘பந்திக்கு முந்தி’ என்ற வார்த்தைகளை ‘மாங்காய்க்கு முந்தி’ என மாற்றி 
            அமைத்திருந்தனர். மாங்காய்கள் தீரும்வரை அங்கே குடியிருப்பு மக்களின் 
            நடமாட்டம் அதிகம் இருக்கும். மரத்தின் கீழ் விளையாடும் சிறுவர்கள் 
            பச்சை மாங்காய்களைச் சாப்பிடுவதைப் பார்த்தால் மாங்காயின் புளிப்பு 
            நாவில் பதிய பற்கள் கூசும். சில மாங்காய்கள் இனிப்பு புளிப்புடன் கூடிய 
            சமையலாவதும் உண்டு. எப்போதாவது விழுந்த பழம் கண்ணில் பட்டால் மட்டுமே 
            கல்பனாவின் அம்மாவும் அப்பாவும் வீட்டுக்கு எடுத்து வருவார்கள். கீழே 
            விழுந்த பழங்கள் காயப்பட்டிருக்கும். காயப்பட்ட பகுதி நீக்கப்பெற்று இள 
            மஞ்சள் நிற துண்டுகளாக்கி சாப்பிடும்போது இனிப்பாக இருக்கும்.
 
 இன்னும் ஜன்னலின் அருகேதான் நின்றிருந்தாள். ஜன்னலுக்கும் அவளுக்கும் 
            இடைவெளியே இல்லாமல் அவள் தேகம் அழுத்தமின்றி ஜன்னலோடு ஒட்டியிருந்தது. 
            வெங்கட் இலைகளைப் பொறுக்கிக் கொண்டு நடக்க முற்படுவது தெரிந்தது. 
            வெங்கட் பக்கத்து வீட்டு குடியிருப்பில் வசிக்கிறான். பத்து வருடங்களாக 
            அவர்களின் குடும்பம் இப்பட்டணத்தில் குடியிருக்கின்றது. வெங்கட்டை 
            எல்லோரும் பைத்தியம் என்றே அழைத்தார்கள். இன்னும் அழைத்துக் 
            கொண்டிருக்கிறார்கள். முதலில் கல்பனாவுக்கு வெங்கட்டின் பெயர் வெங்கட் 
            என தெரியாது. மற்றவர்கள் ‘பைத்தியம்’ ‘கிறுக்கு’ என்றே அழைத்தார்கள். 
            யாரும் பெயர் சொல்லி கேட்டதில்லை. அவர்களின் அழைப்பே அவள் வெங்கட்டை 
            உற்று கவனிக்க செய்தது. எல்லா மனிதர்களைப் போலவே இருந்தது வெங்கட்டின் 
            உருவமைப்பு. நேர்த்தியாக வெட்டப்பட்டிருந்த கேசம், எப்போதும் 
            அணிந்திருக்கும் சுத்தமான உடை யாவும் ஒழுங்குடைய மனிதனாகவே அவள் 
            கண்முன் நிறுத்தியது.
 
 ஒரு முறை கல்பனாவின் அம்மா வெங்கட்டின் அம்மாவைச் சந்தையில் 
            சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார். காரினுள் கல்பனா அம்மாவுக்காக 
            காத்திருக்கையில் இருவரும் பேசுவது தெரிந்தது.
 
 ‘மார்க்கெட்ல பேசிக்கிட்டிருந்தீங்களே.. யாரும்மா அது? புதுசா 
            இருக்கு...’ கார்களில் ஏறி அமர்ந்தவுடனே அம்மாவிடம் மறப்பதற்குள் 
            கேட்டுவிட்டாள்.
 
 ‘அதான் வெங்கட்டோட அம்மா..’
 
 ‘வெங்கட்டா? யாரு..?’
 
 ‘அதான் கல்பனா.. எல்லாம் கிறுக்கு கிறுக்குனு ஒரு பையன கூப்டறாங்கல.. 
            அந்த பையன்தான் வெங்கட்..’ அவளுக்குப் புரிந்தது. அம்மா பெயர் 
            சொன்னதில் மகிழ்ச்சி. உண்மையில் மன வளர்ச்சி குன்றியிருந்தாலும் கூட 
            பைத்தியம், கிறுக்கு என அழைப்பது அவளுக்கு வெறுப்பாயிருந்தது. அனைவருமே 
            ஏதாவது ஒரு தருணத்தில் பைத்தியமாவதை அறியாதவர்கள் தங்களின் பிம்பத்தைப் 
            பைத்தியம் என சொல்வதுபோல் இருந்தது.
 
 உதிர்ந்த இலைகளை ஏன் பொறுக்கினான் என்று புரியாமல் அவள் சிந்தனை அலைகள் 
            ஒவ்வொரு மணி நேரத்திலும் தன் அலை உயர்வினைப் பெருக்கிக் கொண்டிருந்தன. 
            மரத்திலிருந்த பச்சை இலைகளைப் பறித்திருந்தால் அவள் சிந்தனை அலைகள் 
            பிறக்காமல் மாவிலைகளாக ஏற்றுக் கொண்டிருக்கும். வெங்கட் 
            அறிமுகமில்லாததால் நேராக கேட்டு விடையறிந்து குமுறிக் கிடந்த 
            சிந்தனைக்கடலை நிதானப்படுத்தவும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. வெங்கட் 
            அருகிலுள்ள கடைகள், கோயில் என எங்குச் சென்றாலும் நடந்தே சென்றான். 
            அதனால் அடிக்கடி வெங்கட்டைப் பார்க்கும் சந்தர்ப்பங்கள் தடையின்றி 
            வாய்த்துக் கொண்டிருந்தன. வெங்கட் சாலையோரங்களில் நடந்து செல்லும்போது 
            சில சமயங்கள் பார்த்துள்ளாள். எதைப்பற்றியும் கவலையில்லாமல் நடப்பது 
            போல அவனது நடை இருக்கும்.
 
 2
 
 ‘அந்த கிறுக்கனயா செய்ய கூப்டீங்க?’ பக்கத்து வீட்டு அக்காவின் குரல் 
            காரைச் சுத்தம் செய்து கொண்டிருந்த கல்பனாவின் காதுகளில் விழ 
            தொடர்ந்தது அக்காவுடைய கணவரின் குரல்.
 
 ‘அவன் தான் வெல கொறவா வாங்குவான். மத்தவங்கள கூப்டா நூறு வெள்ளிக்கு 
            செலவு. இவன்கிட்ட முப்புது வெள்ளிதான்.. வெலய விசாரிச்சு 
            பாத்துட்டேன்..’
 
 ‘அப்டினா சரி..’ கிறுக்கன் என அழைத்தவள் பட்டென சம்மதித்துவிட்டாள்.
 
 வெங்கட்டை பற்றியதாகதான் இருக்கும் கல்பனாவால் புரிந்து கொள்ள 
            முடிந்தது. வெங்கட் வேறு எங்கும் வேலை செய்யவில்லை. அந்த 
            வட்டாரத்திலுள்ள வீடுகளுக்கு மின்னியல் பிரச்சனைகளைக் களைவதை 
            வேலையாக்கிக் கொண்டிருந்தான். தொலைக்காட்சி, மாவு அரைக்கும் இயந்திரம், 
            துணி துவைக்கும் இயந்திரம், வானொலி என அனைத்தும் பழுது பார்க்கும் 
            திறன் அவனுள் இருந்தது. போன வாரம் கார்த்திக் வீட்டில் வாசல் விளக்கைப் 
            பழுது பார்த்தான்.
 
 ‘எனக்கு பயம்தான்.. கிறுக்கு பையனாச்சே.. சரியா செய்வானோ என்னவோனு மனசே 
            அடிச்சிக்கிச்சி. கொஞ்ச நேரத்துல சரியா செஞ்சுட்டான். காசும் 
            கொஞ்சமாதான் கேட்டான்..’ முதன்முறையாக வெங்கட்டைப் பற்றிய பாராட்டு 
            கார்த்திக்கின் அப்பாவிடமிருந்து அப்பாவிடம் முன்வைக்கப்படுவதைக் கேட்ட 
            கல்பனாவின் காதுகளுக்கே விந்தையாயிருந்தன. பிறகொருநாள் கார்த்திக்கைச் 
            சந்தித்த வேளை, ‘கொம்ப்யூட்டர் கூட பழுது பார்க்க தெரியுது. என் 
            கொம்ப்யூட்டர நேத்தே பழுது பாத்து குடுத்துட்டாரு..’ என்று கார்த்திக் 
            கூறியபோது வெங்கட் திறமைசாலிதான் என்பது அவள் எண்ணங்களில் பதிவானது. 
            தற்கால அறிவியல் தொழில்நுட்பம் மின்சாரத்தை அடிப்படையாக வைத்து 
            மின்னியல் பொருட்களைத் தொடர்ந்து பிரசவித்துக் கொண்டிருப்பதால் வெங்கட் 
            வேலை இல்லாமல் திண்டாட வாய்ப்பே இல்லை என வேலை இல்லா பட்டதாரிகளைப் 
            பற்றிய செய்தியை நாளிதழில் படிக்க நேர்ந்தபோது நினைத்துக் கொண்டாள்.
 இதற்கிடையில் வெங்கட் கோயிலிலிருக்கும் 
            வேப்பிலை மரத்தின் கீழ் உதிர்ந்த இலைகளைச் சேகரிப்பதை கோயிலைச் சுற்றி 
            வலம் வருகையில் அவள் கண்ணில் பட ஏற்கெனவே நிதானமற்ற சிந்தனை அலைகள் 
            இன்னும் பேரலைகளாக வெளிப்பட்டன. வேப்பிலையின் பச்சை இலைகள் மருத்துவம், 
            வழிப்பாடு என உதவும். ஆனால் காய்ந்த இலைகள்? காய்ந்த இலைகள் எதற்காக... 
            எதற்காக... எதற்காக... என்ற கேள்வி வார்த்தைகள் அவள் சிந்தனைதளத்தில் 
            மோதி மோதி எதிரொலித்தன. கேட்டுவிட்டால் என்ன என்றும் தோன்றியது. 
            முன்பின் அறிமுகமில்லாதவரிடம் எப்படி கேட்க முடியும் என்றும் 
            தோன்றியது. எதிர்மறையான இரு தோன்றல்கள் காத்திருப்பை மட்டும் 
            அவளுக்குத் தீர்வாய் வழங்கி விட்டு விலகிவிட்டன.
 மாலை நேரத்தில் வீட்டு குடியிருப்பில் இருக்கும் விளையாட்டு 
            மைதானத்தில் சிறுவர்கள் கூடி விளையாடுவது வழக்கம். சற்றே நடந்து வரலாம் 
            என அவள் மனம் சொல்ல உடலும் ஒத்துழைத்தது. பல சமயங்களில் உடல்பயிற்சியை 
            மனம் சொல்ல உடல் நிராகரிப்பதே அவளுக்கு நடப்பில் இருந்து வந்தது. 
            நடந்து சென்று விளையாட்டு மைதானத்தில் போடப்பட்டிருந்த நீண்ட 
            நாற்காலியில் அமர்ந்தாள். நாற்காலியின் மறுமுனையில் சீன முதிய பெண்மணி 
            அமர்ந்திருந்தார். அவள் அமரும்போது பார்த்துப் புன்னகைத்தார். அவளும் 
            பதிலுக்குப் புன்னகைத்தாள். பேர குழந்தைகளை அழைத்து வந்திருப்பார் 
            போலும். அடிக்கடி சீனப் பெயர்களைக் கூவி அழைத்தார். பிள்ளைகள் 
            பாட்டியின் அழைப்புக்கு அவ்வப்போது வந்து தலைக் காட்டிச் சென்றனர். 
            சிறுவர்களின் கூச்சலும் ஆரவாரமும் விளையாட்டுத் திடலைச் 
            சூழ்ந்திருந்தது. ஊஞ்சலாடும் சிறுவர்களைப் பார்த்திருந்தபோது, ‘ஏ 
            கிறுக்கு... லூசு.. லூசு... கீலா...கீலா’ சிறுவர்களின் பேரிரைச்சல் 
            அவளைத் திரும்ப வைத்தது. வெங்கட் நடந்து சென்று கொண்டிருந்தான். 
            அவனுடைய எதிர்வினையாக முறைத்துப் பார்ப்பான் அல்லது கொச்சை 
            வார்த்தைகளால் திட்டுவான் என்ற அவளுடைய எதிர்ப்பார்ப்பு எவ்வித 
            சதவீதத்தையும் எட்டாமல் பூஜ்யமானது. வெங்கட் சிறுவர்களின் பக்கம் கூட 
            திரும்பவில்லை. பைத்தியம் என்ற அர்த்தத்துக்குரிய மலாய் வார்த்தை 
            ‘கீலா’ சீனப் பெண்மணிக்கு விளங்கியிருக்க வேண்டும். அவளும் வெங்கட் 
            நடந்து செல்வதைத் திரும்பிப் பார்த்தாள்.
 
 3
 
 இரண்டு வருடங்களாக எவ்வித பிரச்சனையும் இல்லாமல் இயங்கிக் கொண்டிருந்த 
            கல்பனாவின் கணினி சுயமாக அவ்வப்போது உறங்க முற்பட்டது. முக்கிய 
            தகவல்களைச் சேமிப்பதற்குள் அவ்விதம் நிகழ்வது மன உளைச்சலை 
            ஏற்படுத்தியது. அப்பாவிடம் மன உளைச்சல் உச்சத்தை எட்டிய தருணம் 
            வார்த்தைகளைக் கொட்டினாள்
 
 ‘சேவ் பண்றதுக்குள்ள சட் டவுன் ஆயிடுச்சு.. சே இந்த கொம்யூட்டரோட 
            பெரும்தொல்லையா இருக்குப்பா..’
 
 அப்பாவின் பதில் வந்து சேர்வதற்குள் அம்மாவின் பதில் முண்டியடித்து 
            வந்துவிட்டது.
 
 ‘வெங்கட்ட கூப்டு செய்ய சொல்லலாமே... வெலையும் கொறைவாம்..’
 
 ‘ஆமா ஆமா... வெங்கட்ட கூப்டலாம். சீக்கரமா செஞ்சி குடுத்துடுவான். 
            அப்புறமா வெங்கட்ட வர்ற சொல்றேன்..’ அப்பாவும் அம்மாவும் வெங்கட்டின் 
            மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் வெங்கட் என பெயர் சொல்லி 
            கூப்பிடுவதும் அவளுக்கு இதமாயிருந்தது.
 அன்று மாலையே வெங்கட் வீட்டுக்கு வந்தான். அவனை வீட்டிற்குள் 
            பார்த்தபோது இன்னும் முதிர்ச்சி தன்மையோடு காணப்பட்டான். அவளிடம் 
            கணினியின் பிரச்சனை குறித்து கேட்டறிய பேசிய போது எல்லா மனிதர்களைப் 
            போன்றே பேசினான். ஆனால் சுருக்கமாய் இருந்தன அவனது பேச்சுக்கள்.
 
 ‘உங்க பேரு என்ன?’ அறிமுக உரையாடலின் திகட்டி போன அதே தொடக்கம். 
            பேச்சைத் தொடங்க அதுவே அவளுக்கு எளிதாய் பட்டது.
 ‘வெங்கட்’ அவளுக்குத் தெரிந்திருந்த பதில். அது அவனுக்குத் தெரியாததால் 
            அவளிடம் பதில் கூறினான்.
 
 ‘உங்க வயசு..?’
 
 தேவையற்ற கேள்வி என்பதுபோல் நிமிர்ந்தவன் கணினியைப் பார்த்துக் கொண்டே 
            ‘இருவத்தி ஒம்பொது’ என்றான். அவளைவிட வயதில் பெரியவன். அதன்பின் 
            அவனிடம் அவள் ஏதும் கேட்கவில்லை. அவள் பெயரையும் வயதையும் அவன் 
            கேட்கவில்லை. இடத்தை விட்டு நகர்ந்து விட்டாள். சிறிது நேரத்தில் 
            கணினியைப் பழுது பார்த்து விட்டான்.
 
 அப்பாவிடம் பழுது பார்த்த கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு வெளியேற 
            முற்பட்டான்.
 
 ‘ரொம்ப தேங்க்ஸ் அண்ணே..’ பதற்றமாய் திரும்பி கல்பனாவின் முகத்தைப் 
            பார்த்தான். அவள் அப்பா கைத்தொலைப்பேசி அழைப்பு வர பேசிக் கொண்டே 
            அறைக்குள் சென்றுவிட்டார்.
 
 ‘மொத தடவ நீங்கதான் என்ன அண்ணேனு கூப்டறீங்க...’ மெதுவாய் இருந்தது 
            பேச்சின் ஒலி.
 
 ‘ஓ.. ஒங்களுக்கு தங்கச்சி இல்லயா? பரவால.. இனிமே என்ன தங்கச்சியா 
            நெனச்சிக்குங்கண்ணே...நோ ப்ரொப்ளம்..’
 
 ‘ரெண்டு தங்கச்சிங்க.. லூசுன்னுதான் கூப்டுவாங்க..’
 
 சொல்லிக் கொண்டே வெளியேறிவிட்டான். அவனது கடைசி வரியில் காட்டமோ கோபமோ 
            கொஞ்சமும் கலந்திருக்கவில்லை. மறுநாள் காரை விட்டிறங்கி வீட்டினுள் 
            செல்ல எத்தனித்தபோது வெங்கட் அவளை நோக்கி நடந்து வருவது தெரிந்தது. 
            அவள் கால்கள் அதற்கு மேல் அடி எடுத்து வைக்காமல் நின்றன.
 
 ‘நான் இந்த எலைங்கள எடுத்துக்கலாமா?’ வீட்டின் முன் இருந்த கொய்யா 
            மரத்தைக் காட்டினான்.
 
 ‘எலையா..? எடுத்துங்குங்கண்ணே..’
 
 ‘ரொம்ப தேங்க்ஸ்மா.. நீங்க டீச்சரா?’
 
 ‘ஆமாண்ணே...’
 
 அவளைப் பார்த்துப் புன்னகைத்தான். இரு கால்களை மடக்கி உட்கார்ந்தவாறே 
            கொய்யா மரத்தின் கீழ் உதிர்ந்த இலைகளைச் சேகரித்து பிளாஸ்டிக் பையினுள் 
            போட்டுக் கொண்டான்.
 
 ‘வேணும்னா மரத்துல இருந்து பச்ச எலைங்கள பறிச்சுங்குங்கண்ணே..’
 
 ‘இல்லம்மா இது போதும்.. பச்ச எலைங்க மரத்துக்கு சொந்தம்..’ சொல்லிக் 
            கொண்டே எழுந்தான்.
 
 ‘ரொம்ப தேங்க்ஸ்மா..’
 
 ‘நீங்க எப்ப வேணுனாலும் வந்து எடுத்துங்குங்கண்ணே...’
 
 4
 அறிவியல் வகுப்பில் மாணவர்களுக்கு 
            தாவரங்களின் உணவு தயாரிப்பு பாடத்தைப் போதித்து முடித்த தருணம். ‘பச்ச 
            எலைங்க மரத்துக்கு சொந்தம்..’ வெங்கட்டின் வார்த்தைகள் 
            மறுஒலிப்பரப்பாய் ஓடிக் கொண்டிருந்தன.
 ஒரு நாள் கல்பனாவைத் தேடி வந்தான் வெங்கட். அம்மாவும் அப்பாவும் 
            வெங்கட் அவளிடம் பேசுவதைப் பெரிது பண்ணவில்லை.
 
 ‘எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்மா..’
 
 ‘சொல்லுங்கண்ணே..’ வெங்கட் வேண்டும் உதவியை மனம் தேடிச் சென்றது.
 
 ‘இத உங்க ஸ்டூடன்ஸ்க்கு குடுங்கம்மா..’ காகிதப் பையை அவளிடம் 
            நீட்டினான். அதைப் பெற்று திறந்து பார்த்தாள். நிரம்பிய காய்ந்த 
            இலைகளின் நேர்த்தியான வரிசை. மாவிலைகளும் கொய்யா இலைகளும் ஒன்றோடொன்று 
            அழகிய நூலால் இணைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு இணைப்பிலும் ஒரு மாவிலையும் 
            கொய்யா இலையும் இருந்தன. இணைப்பு நூல்கள் ஊதா, கருஞ்சிவப்பு, மஞ்சள், 
            நீலமென வேறுப்பட்டிருந்தன. ஒரு இலை இணைப்பை வெளியே எடுத்துப் 
            பார்த்தாள். இலைகள் மடிப்பும் சுருங்கலுமின்றி இருந்தன.
 
 ‘ரொம்ப அழகாருக்குண்ணே... அயர்ன் போட்ட மாதிரி சுருக்கமே இல்ல...’ 
            இலைகளைத் தடவினாள்.
 
 ‘புக்குக்கு இடையில ஒரு வாரம் வச்சிடுவேன்மா.. எல நேராயிடும்..’ 
            உற்சாகமாய் தெளிவு படுத்தினான்.
 
 ‘அண்ணே.. நான் ஒன்னு எடுத்துக்கறேன்..’
 
 ‘ஒ.... எடுத்துக்கங்கம்மா.. புக் மார்க்கா யூஸ் பண்ணிக்கலாம்...’ அவன் 
            சுய ஆற்றல் அங்கீகரிக்கப்படுவதாய் அவனுள் பெருமிதம்.
 
 ‘உங்களுக்கு எலைனா ரொம்ப புடிக்குமாண்ணே?’
 
 ‘ஆமாம்மா.. ரொம்ப புடிக்கும்... எலைங்க மரத்தோட கைரேகை மாதிரி.. எல்லா 
            மரத்துக்கும் வேற வேற மாதிரி ரேகை.. ஒரே மாதிரி எல எல்லா மரத்துக்கும் 
            இல்ல... வேற வேற மாதிரி எல..’
 
 தன் கையிலிருந்த இலைகளின் இணைப்பை மீண்டும் தடவிப் பார்த்தாள். 
            இலைகளின் மேற்பரப்பு ரேகைகளின் வரிகள் அவள் கை ரேகைகளோடு இணைந்து 
            கொண்டன.
 
 ktrajamranjini@yahoo.co.in
 |