| 
| பதிவுகள் |  
|   பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் 
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். 
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
 என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
 
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு 
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் 
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் 
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை. |  
| 
            மணமக்கள்! |  
|  |  
| தமிழ் எழுத்தாளர்களே!..
 |  
| அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை 
வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் 
ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை 
கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் 
யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் 
ngiri2704@rogers.com 
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் 
படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு 
ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு 
அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு 
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் 
நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் 
படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே 
சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் 
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் 
பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் 
பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது 
மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து 
கொள்ளலாம். |  | 
| சிறுகதை! |  
| முலையகம் நனைப்ப விம்மி அழுதனள் 
 - நாகரத்தினம் கிருஷ்ணா -
 
 
  வரவர 
பிரான்சு ரொம்பத்தான் மாறிப்போச்சு. எண்பதுகளில் நான் பிரான்சுக்குத் தனியே வந்த 
புதிதில் நான்கு காலமும் கோடுபோட்டதுபோல அதனதன் எல்லைக்குள் அடங்கிக் கிடக்கும். 
இப்போது என்னடாண்ணா குளிர்காலத்தில் வெயில் கொளுத்துது, கோடையிலே பனிபெய்யுது. 
நேற்று தோட்டக்கலையில் ஆர்வமுள்ள கிழவரொருவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் 
வழக்கத்திற்கு மாறா ஒரு மாதத்திற்கு முன்பே லீலா பூப்பதற்குக் காரணங்களைத் 
தேடுகிறார். நிலைமை அப்படி ஆயுட்டுது. காலமாற்றத்திற்கும் மனதிற்கும் 
சம்பந்தமிருக்குமா? அனிதா விஷயத்தில் அப்படித்தான் இருக்குமோங்கிற சந்தேகம். 
 அனிதா வருத்தப்பட அவ்வப்போது ஆயிரத்தெட்டுக் காரணங்களுண்டு: தி.நகரில் இரண்டு 
வருடத்திற்கு முன் எடுத்த புடவைக்கு இதுவரை (சமீபத்தில் இந்தியாவுக்கு வந்திருந்த 
இரண்டுவாரத்தில் மூன்று நாட்கள் அந்த பிளவுஸ¤க்காக கடைகடையாக ஏறி 
இறங்கியிருக்கிறோம்) மேட்சாக பிளவுஸ் கிடைக்கவில்லையென்பதில் ஆரம்பித்து சமீபத்தில் 
தனக்கு எடைபோட்டுவிட்ட வருத்தம் வரை, நிறையச் சொல்லிக்கொண்டு போகலாம். ஆனால் இது 
'நான்' சம்பந்தப்பட்டது. என்ன ஆச்சு? ஏனிப்படி?
 
 இரவு முழுக்கத் தூக்கமில்லை கொஞ்ச நேரம் உலாத்திப் பார்த்தேன். குனிந்து கட்டைவிரலை 
நீவி விட்டேன் (எங்கோ படித்தது).இல்லாத ஆடுகளை ஒன்று.. இரண்டு.. எண்ணுகிறேன்.. ம் 
தூக்கம் வரவில்லை. புரிதலுக்காக, இரவின் இரண்டாம் ஜாமம்வரைக் காத்திருந்தேன். 
அரையிருட்டில் அவளைச் செயற்கையாய் அணைத்து, காலையில் அவள் பார்த்த பார்வைக்கான 
காரணத்தைத் தேடி அலுத்துப்போனேன். என்னைத் தள்ளிவிட்டு கட்டில் விளிம்புக்குப் 
போய்விட்டாள்
 
 ஆபீஸ¤க்குப் போகும் அவசரத்திலிருந்தேன், தட்டில் வேண்டுமென்றே ஆவிபறக்கும் இட்டலியை 
வைத்திருக்கிறாள். தொட்டவுடன் விரல் சிவந்துபோகிறது, கொதிக்கிற விள்ளலை நாக்கு 
சிவ்வென்று உள்வாங்கி தொண்டைக்குழிக்கு அனுப்பிவைக்க, அதே அவசரத்தில் கண்களில் 
நீர்கோர்த்துக்கொள்கிறது. தண்ணீர் தண்ணீர் என்கிறேன், ஐந்து நொடிகள் கழித்து 
எட்டிப் பார்க்கிறாள். அப்போதுதான் அந்தப் பார்வை, ஐந்து நொடிகளோடு சம்பந்தப்பட்ட 
அவளுடைய வழக்கமான பார்வையிலிருந்து முரண்பட்டிருந்தது. இடது கண் இமைகளை அவசரமாய் 
ஒத்தி, ஆழமாய்ப் பார்க்கிறாள். அப்படியொரு பார்வையைச் சந்திக்க நேர்ந்த அனுபவம் 
இதற்கு முன்பு ஏற்பட்டதில்லை.
 
 - ஹனி என்ன ஆச்சு?
 
 ஹனி என்கிற அனிதா, என் மனைவி. பெயரைக்கேட்டு தரகர் கொடுத்திருந்த போட்டோவைக்கூடப் 
பார்க்காமல் பெண்பார்க்க சம்மதித்தேன். பி.ஏ.வில் ஆங்கில இலக்கியம், பிரெஞ்சு 
இரண்டாவது மொழி, படிக்கிறபோது மாணவர் யூனியனில் பொறுப்பான பதவி, பட்டிமன்றத்தில் 
புதுமைப்பெண்களுக்கு வக்காலத்தென அத்தனையும் எனக்குச் சந்தோஷம், அம்மா தயங்கினாள், 
நான் டபுள் ஓகே சொன்னேன். 93ல் தம்பதிகளாக பாரீஸிற்கு வந்தோம். கடந்த மாதத்தோடு 
பதினைந்து வருடங்கள். அதைக் கொண்டாடவும் செய்தோம். யார் கண்பட்டதோ ஒரு மாதமாக 
வீட்டில் நுழையும்போதெல்லாம் பலமுறை யோசிக்கிறேன், மனது திக் திக்கென்று 
அடித்துக்கொள்கிறது. அவளுக்கும் எனக்குமிடையில் படிப்பில், வயதில், உயரத்தில், 
அழகில், புத்திசாலிதனத்தில் சிறு, சிறு வித்தியாசங்கள் இருப்பதாக நான் 
நம்பிக்கொண்டிருக்கும் உண்மையை விளையாட்டாகத்தான், ஒரு நாள் - கிழமையும் தேதியும் 
ஞாபகமில்லை-சொன்னேன். அன்று பிடித்தது சனி. மற்றது எப்படியோ புத்திசாலிதனத்திலும் 
அழகிலும் நீங்கள் மில்லி - கிராம் அல்லது மீட்டர்- அளவு கூடுதலென்றாலும் நான் 
நம்பமாட்டேன் என்கிறாள்.
 
 நெருங்கிய நண்பன் குமாரை யோசனைக்கேட்டேன். "இதற்கெல்லாம் பயந்தா ஆகுமா, கணவன் 
மனைவியென்றால் சகஜம் மாப்பிள்ளை? அதிலும் பிரான்சிலிருக்கிறோம். உன் பாடு 
பரவாயில்லை. கோபப்படும்போது ரஸஞ் சோறாவது கிடைக்கிறதென்கிற, எங்க வீட்டிலே எல்லா 
நாளிலும் ரொட்டிதான். வெள்ளைக்காரியைக் கட்டிக்கொண்டு படும் அவஸ்தையை யார்கிட்டே 
சொல்ல. அவ்வப்போது கரண்டியையும் பிடிக்கத் தெரியணும், கட்டிலை மட்டும் நம்பிக் 
கொண்டிராதே, நல்ல தாம்பத்தியத்திற்கு அதுதான் இலக்கணம்", ஒரு பெரிய லெக்சரே 
கொடுத்தான்.
 
 அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை, நண்பனின் யோசனையை நடைமுறை படுத்தவேண்டி, காலையில் 
தோசையை வார்ப்பதென்று தீர்மானித்து சமயலறைக்குள் நுழைந்திருந்தேன், ஏதோ உலகத்தில் 
வேறெங்கும் நடந்திராத அதிசயம்போல வியப்புடன் என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.
 
 - டியர் உனக்கு எத்தனை தோசை ஊத்த?
 
 - ஒன்று போதும்
 
 நான் இரண்டு ஊற்றியிருந்தேன், காரணம் அன்றைக்கு பாசிபருப்பு தோசைக்கு 
அரைத்துப்போட்டிருந்தாள். சாதாரண தோசையென்றால், விவாதத்திற்கு இடமேயில்லை, அவளுக்கு 
ஒன்றே போதும். வழக்கம்போல ஐந்து நொடிகள் பதிலின்றி குழம்புவது தெரிந்தது, 
அவளுக்குப் பாசி பருப்பு தோசையென்றால் கூடுதல் பிரியம். எனக்கு அவள் பதில் என்னவாக 
இருக்குமென்று தெரியும். ஒவ்வொரு நொடியாகக் கடந்துகொண்டிருக்கிறது. இதற்கென்றில்லை 
எல்லா விஷயங்களிலும் முதல் ஐந்து விநாடிகள் மௌனம் காத்தபிறகே பதில் வரும், அந்த 
ஐந்து விநாடிகளுக்குள் அவள் மனதில் என்ன நடக்கிறதென்று தெரியும், தொடங்கும் 
வாக்கியத்தின் எழுவாய் தெரிந்தால் போதும் பயனிலை எது, செயப்படு பொருளெதுவென ஊகித்து 
விடுவேன். துணிக்கடையில், கடைக்காரர் ஒரு மணிநேரத்துக்குமேல் செலவிட்டு 
அடுக்கிவைத்திருக்கிற அத்தனையையும் இறக்கி பிரித்துப்போட்டிருப்பார், 
எடுத்துப்போட்ட பத்தாவது நிமிடத்தில் இதைத்தான் எடுக்கப் போகிறாளென்று முடிவுக்கு 
வந்திருப்பேன். நானும் அவளும் உறவு கொள்ளும்போதுகூட எத்தனையாவது நிமிடத்தில் 
அலுத்துக்கொள்வாளென்பது எனக்குத் துல்லியமாக அத்துபடி. இந்தியன் ரெஸ்டாரெண்டில் 
சாப்பிடுகிறபோதேல்லாம், வாயில் வைக்க 'சகிக்கலை' என்பதும், அவளைத்தவிர அத்தனை 
இந்திய மதாம்களும், 'வாயாடிகள்' என்பதும் அடிக்கடிக் கேட்டு புளித்துப்போன சொற்கள்.
 
 - ஏங்க அப்படியே எனக்கு இன்னொண்ணு ஊத்திடுங்க.- அனிதா. பார்த்தீங்களா, சித்தேமுன்னே 
நான் சொன்னது சரியாப் போச்சா இல்லையா.
 
 மாதத்தில் ஒரு நாளாவது எனது பிரெஞ்சு நண்பன் ஒருவன் வீட்டிற்கு வருவான், மனைவியை 
விவாகரத்து செய்தவன். மாதமுழுக்க பட்டினி கிடப்பான் போல, வஞ்சனையில்லாமல் கேட்டுச் 
சாப்பிடுவான். அவன் புறப்பட்டுப் போனானோ இல்லையோ, இனியில்லையென திட்டித் 
தீர்த்திடுவாள், இந்த முறை என்னென்ன சொற்களை உபயோகித்து அவனை விமர்சிப்பாளென்று 
ஊகித்திருப்பேன், அதே வரிசையில் சொற்கள் வரும். ஒவ்வொரு முறையும் அனிதா 
இப்படித்தான், இன்று நேற்றா?. இதோ தோசை வார்க்கிற இந்த நேரத்தில்கூட அடுத்து அவள் 
என்ன சொல்லப்போகிறாளோ அவ்வாக்கியத்தை மனத்திரைக்குள் ஓடவிட்டுக் காத்திருக்கிறேன், 
வழக்கம்போல ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு வாய் திறக்கிறாள்.
 
 - வாழ்க்கையிலே பணம் மட்டுமே முக்கியமில்லை, கார்த்திக்!. ஏதோ உழைக்கணுமென்று 
உழைச்சீங்க இல்லைண்ணு சொல்லலை. இனிமே உங்க உடம்பையும் கொஞ்சம் பார்த்துக்கணும்.
 
 - ஹனி, நீயா இப்படி பேசற? இப்ப என்ன செய்யலாம் சொல்லு. அப்படியா 
இளைச்சுப்போயிட்டேன்?
 
 - உங்க எடையைக் குறைக்கணுமென்று சொல்ல வந்தேன். எனக்கென்னவோ நீங்க 90கிலோவுக்குக் 
குறையாம இருப்பீங்கண்ணு தோணுது, இருபது கிலோவையாவது உடனடியா குறைச்சு ஆகணும்.
 
 - என்ன செய்யப்போற, பட்டினிப் போடப்போறியா?
 
 - இல்லை நல்ல சைக்கியாட்றிஸ்ட்டைப் போய்ப் பாருங்க.
 
 - எடைக்கும் சைக்கியாட்றிஸ்ட்டுக்கும் என்ன சம்பந்தம். உனக்குக்கூடத்தான் எடை 
கூடிபோச்சுண்ணு வருத்தமிருக்கு, நீ வேண்டுமானாப் போய்ப்பாறேன்.
 
 அநேகமாக தீர யோசிச்சுத்தான் சொல்லியிருக்கணும். சட்டென்று எதையாவது சொல்லும் 
வழக்கம் அவளுக்குக் கிடையாது.
 
 - ஆமாம் தீர யோசித்துத்தான் சொல்றேன். எடைபோடறதுக்கும், மனசுக்கும் 
சம்பந்தமிருக்காம் TF1ல(பிரெஞ்சு டெலிவிஷன் சேனல்) சொன்னாங்க. எங்களை மாதிரி 
வீட்டுப் பெண்களுக்கு அதைக் காரணமா சொல்லமுடியாது.
 
 - என்ன.. என்ன யோசிச்ச? பதினைந்து வருஷமா நம்ம படுத்தின மனுஷன பைத்தியக்காரனா 
ஆக்கிபார்க்கணும்னா?
 
 - அவசரப்படாத கார்த்திக், உன்னைப் பார்க்க எனக்குப் பரிதாபமாயிருக்கு, முன்னப்போல 
நீயில்லை. குறை சொல்லாம எப்பவாச்சும் நீ சாப்பிட்டதுண்டா? சாப்பிட்டு முடிக்கிறவரை 
வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டுதானே இருந்திருக்கேன். இப்ப என்னடாண்ணா 
போட்டதைச் சாப்பிட்டுவிட்டு எழுந்திருக்கிற. ஒரு மாதத்திற்கு முன்புவரை நம்ம 
வீட்டிலே என்ன நடந்தது?
 
 - என்ன நடந்தது?
 
 - நம்ம வெட்டிங் அன்னிவெர்சரிக்கு, ஒற்றைக்கல்வைத்து வைர மோதிரம் வாங்கணுமென்று 
சொன்னேனில்லையா?
 
 - ஆமாம் சொன்னே, நானும் சந்தோஷமா வாங்கிக் கொடுத்தேனே?
 
 - இல்லை அங்கேதான் தப்பிருக்குண்ணு உளவியல் டாக்டருங்க சொல்றாங்க. இதற்கு முன்னாலே 
என்ன நடக்கும்? ஜனவரியில் நான் ஒன்றை வாங்கணுமென்றால், டிசம்பரில் உன்னிடம் 
அப்ளிகேஷன் போடணும், தடாலடியா நீ முடியாதுண்ணு சொல்வ. நான் கோபித்துக்கொண்டு ஒரு 
வாரம் பேசாம இருக்கணும், நீ இறங்கிவருவ, இதுவரை வரிசைக்கிரமமா அப்படித்தான் எல்லாமே 
நடந்திருக்கு. கொஞ்ச நாட்களாக இதெல்லாம் இல்லைண்ணு ஆயுப்போச்சு, அதனாலத்தான் 
பயப்படறேன். நீ எங்கிட்ட இருந்து எதையோ மறைக்கிற கார்த்திக். ஆபீஸ்ல எல்லா 
வேலையையும் நீயே இழுத்துப்போட்டுக்கிட்டு செய்யறண்ணு நினைக்கிறேன்.
 
 என்னாலே நம்ப முடியலை, அவளை நல்லா புரிஞ்சு வச்சிருக்கேன் என்கிற என் நினைப்புல 
முதன் முறையா கை நிறைய மண்ணெடுத்துப் போட்டிருக்காள். பத்துவருடமா காரை 
ஓட்டினாலும், கராழிலிருந்து காரை எடுக்கவும், திரும்பவிடவும் நான்தான் வேண்டும், 
புத்தகத்தை மூடிவைத்துவிட்டு லைட்டை அணைத்தவுடன் அடுத்த பத்துநிமிடங்களுக்கு 
சாய்ந்திருக்க என் தோள்தான் வேண்டும். வலைத்தளைமொன்றில் தமிழ் சீரியல்களைப் 
பார்க்கலாம் என்பதைக் கண்டுபிடித்தவளுக்கு, அதற்குள் நுழைவதற்கான சங்கேத சொல்லை 
நிரப்பப் போதாது, தடுமாறுவாள், உதவிக்கு நான் வேண்டும். எதற்கெடுத்தாலும் நான் 
வேண்டுமென்றிருந்த அனிதாவிற்கு இன்றைக்கு இந்த நான் பரிதாபத்திற்குரிய ஒரு ஜீவன். 
காரணம் என்னவாக இருக்குமென யோசிக்க யோசிக்க அவள் பயப்படுவதுபோல, எனக்குப் பைத்தியம் 
பிடித்தாலும் பிடிக்கலாம். நல்ல சைக்கியாட்றிஸ்ட்டைப் போய்ப் பார்க்கணுமாம்.
 
 * * *
 
 - கார்த்திக் காலையிலே கராழில இருந்து காரை எடுத்த நீங்க, கதவைப் பூட்டாம 
நீங்கபாட்டுக்கு ஆபீஸ¤க்குப் போயிட்டீங்க. நல்ல வேளை பக்கத்து வீட்டுக்காரர் 
பார்த்துட்டுச்சொல்ல கராழை பூட்டிட்டு வந்தேன் சாவியைக் கொடுத்துட்டுப் போனார். 
அவர் பார்க்காமலிருந்தால் என்ன ஆகியிருக்கும்.
 
 - ஒண்ணும் குடி முழுகியிருக்காது. எப்பவாவது இப்படி மறக்கிறது, எல்லாருக்கும் 
நடக்கிறதுதான்
 
 - சைக்கியாட்றிஸ்டை பார்க்கணுமென்று சொல்லியிருந்தேனே
 
 - அனிதா, இன்றைக்கு ஆபீஸ¤லே பெரிய பிரச்சினை. முக்கியமான கடிதமொன்றை எங்கேயோ 
வச்சுட்டு ஒரே டென்ஷனா இருக்கேன். நீ என்னடாண்ணா உள்ளே கூட நுழையலை அதற்குள்ளே 
ஆரம்பிச்சுட்ட.
 
 - அந்தக் கடிதம் வேறெங்கும் போகலை மேசைமேலே பத்திரமா எடுத்து வச்சிருக்கேன். வரவர 
மறதி உங்களுக்கு அதிகமாயிட்டுவருது. நம்ம ரமாவைத் தெரியுமில்லையா?
 
 - எந்த ரமா?
 
 - எத்தனை ரமா இருக்காங்க. போனமுறை சிவன் கோவிலில் பார்த்தோமே, அவள்தான். அவள் 
குழந்தைகூட ஓடும்போது விழுந்து தலையில் லேசாக அடிப்பட்டு அதன் காரணமா திக்கித் 
திக்கிப் பேசியதாகக்கூட சொன்னாளே?
 
 ஞாபகமில்லையென்று சொன்னால், எங்கே அதற்கும் சைக்கியாட்றிஸ்ட்டை பார்க்கவேண்டுமென்று 
ஆரம்பிச்சுடுவாளோங்கிற பயம்.
 
 - ஆமாம் நல்லா ஞாபகமிருக்கு, அந்தக் குழந்தைக்கு என்ன?
 
 - அவளையும் அப்படித்தான் ஒரு சைல்டு சைக்கியாட்றிஸ்ட் கிட்டே காட்டியிருக்காங்க, 
தொடர்ந்து ஐந்து செஷன் வரவேண்டி இருக்குமென்று சொன்னாராம், கடைசியிலே மூன்று 
செஷனிலேயே நல்ல முன்னேற்றமாம். ஆனா ரமாவை நாமப் பார்த்தது நீங்க குழப்பிக்கொள்வது 
மாதிரி சிவன் கோவிலில் வைத்து இல்லை, சித்தி விநாயகர் கோவிலில். பார்த்தீங்களா, 
நீங்க மறத்துட்டீங்க. உங்களுக்கு மன அழுத்தம் இருக்கணும், அன்லோடிங் டிப்ரெஷன் என்ற 
புத்தகத்துல ரிச்சர்ட் ஓ-கொனோர்ஸ் அதற்கு நிறைய யோசனைகளைச் சொல்றார்.
 
 எனக்குப் பேச ஒன்றுமில்லை. முதன்முறையாக அவள் பார்த்துக்கொண்டிருக்க நாற்காலியில் 
சோர்ந்து அமர்ந்தேன். பக்கத்தில் வந்து நின்றாள், தலையைக்கோதினாள். மார்பில் 
சாய்த்துக்கொண்டாள், அழவேண்டும் போலிருக்கிறது.
 
 * * *
 
 வெளியே வந்தபோதுதான் கதவில் ஒட்டியிருந்த சைக்கியாட்றிஸ்ட் பெயரை ஒருமுறைக்கு 
இருமுறையாக உச்சரித்துப் பார்த்தேன், ஏதோ வாயில் நுழையாத பெயர், போலந்து ஆசாமியாக 
இருக்கணும். அனிதாவின் தொல்லை தாங்காம, டெலிபோன் டைரக்டரியில் தேடி, 
அப்பாயிண்ட்மெண்ட் எடுத்து, மூக்கை உறிஞ்சும் சீ·ப்கிட்டே அனுமதிக் கேட்டு, 
பார்த்துட்டு வறேன். அனிதா காரில் சாய்ந்தபடி என்னை எதிர்பார்த்துகிட்டிருக்கிறாள்.
 
 - என்ன சொன்னார்?
 
 - காரிலே ஏறு சொல்றேன்.
 
 உண்மையிலே ஏன் போனோமென்று ஆயுப்போச்சு, மனநல மருத்துபவர்களைப்பற்றி புத்தகங்களில் 
படிச்சதோடு சரி, ஒன்றிரண்டு அமெரிக்க திரைப்படங்களிலும் பார்த்திருக்கேன். எனக்கும் 
அப்படியொரு நிர்ப்பந்தம் வருமென்று நினைச்சு பார்த்ததில்லை.
 
 - கார்த்திக் என்ன நடந்ததுண்ணுதான் சொல்லேன்?
 
 - என்ன சொல்ல, உனது தொல்லை தாங்காம போனேன். அந்த ஆள் என்னடாண்ணா, பழைய தமிழ் 
சினிமாக்களில் வர்ற மந்திரவாதிபோல இருக்கான். அவன் பார்வையும் சிரிப்பும், 
சகிக்கலை.
 
 - இதைத்தான் ஒவ்வொருமுறையும் சொல்ற கார்த்திக்.
 
 - என்னை என்ன பண்ண சொல்ற. நீயும் என்னை விடாமல் துரத்தற, நானும் ஒவ்வொருத்தரா 
பார்த்துக்கிட்டுவறேன். திரும்பத் திரும்ப அதே கேள்விகள். அனிதா பக்கத்துலே வா.
 
 - ஏய் என்ன செய்யறே, எதற்காக இப்படி கிள்ளற?
 
 - சாரி டியர். உன் கண்கள் கலங்கிட்டுது, வலிக்கிற மாதிரி கிள்ளிட்டனா. உனக்குப் 
பதிலா ஏதாவது பேய் பிசாசுண்ணு என்னைச் சுற்றிவருதோங்கிற சந்தேகம்.
 
 * * *
 வீட்டுக்குத் திரும்பணுமென்று நினைக்கிறபோது அனிதா ஞாபகம் வந்திடுது, கையிற் 
பிரம்பு சகிதம் எதிரே நிற்கிறாள் அவள் பின்னே வரிசையாக சைக்கியாட்றிஸ்டுகள், 
ஆபீஸ¤லே வேலை பளு தெரியறதில்லை. இரவு பத்துமணிவரைக்கும் இருக்கிறேன். 
சனிஞாயிறுகளில், மறந்துவிட்ட நண்பர்களைத் தேடிச் சென்று பார்க்கிறேன்; வார 
இதழ்களில் விளம்பரங்களையெல்லாங்கூட வாசிக்கிறேன். மொத்தத்தில் கடந்த இரண்டு 
மாதங்களாக அவளை நேருக்குச் நேர் சந்திப்பதை முடிந்தமட்டும் தவிர்க்கிறேன்.
 
 - கார்த்திக், அனிதா எங்கிட்டே பேசினா. வீட்டுக்கு நேரத்துக்குத் 
திரும்பறதில்லையாமே? - குமார்
 
 - என்ன பண்றது நீதான் பார்க்கறீயே, நம்ம ஆபீஸ்ல வேலைக்கா குறைச்சல். இனி இந்த பைலை 
நம்ம வக்கீல் கிட்டே கொடுக்கணும். நாளைக்கு நம்ம வழக்கு வருதாம், சித்தே முன்னேதான் 
போன் பண்ணி பேசினார்.
 
 - பரவாயில்லை கார்த்திக், பைலை நான் கொடுத்திட்டு போறேன். நீ வீட்டுக்குப் போ, 
அனிதா எங்கேயோ போகணுமென்று சொன்னா.
 
 - அப்படியா? எங்கிட்டே காலமை எதுவும் சொல்லலீயே, நீ புறப்படு. வீட்டுக்குப் போகிற 
வழியிலெதான வக்கீல் வீடு எனக்கு அதில் சிரமம் எதுவுமில்லை, பைலை நானே 
எடுத்துப்போறேன்.
 
 உண்மை என்னன்னா, எனக்கு வீட்டிற்கு நேரம் கழித்துப் போகக் காரணம் வேண்டும், 
அனிதாவிடமிருந்து நிரந்தரமாகத் தப்பினால்கூட பரவாயில்லைண்ணு நினைக்க 
ஆரம்பிச்சிருந்தேன். அவள் சொல்வதுபோல என்னிடத்தில் மாற்றம் தெரியுது. அனிதாவின் 
கணிப்பிலே தப்பில்லைண்ணுதான் தோணுது. பாகிஸ்தான் எல்லையிலே வாக்கிங் போன இந்திய 
அமைச்சர்போல சில நேரங்களில் கவனப்பிசகா ஏதாவது செஞ்சிடறேன். கூட வேலைபார்க்கிற 
குமார் மட்டுமில்லை, பிரெஞ்சு நண்பர்களும், ஆளாளுக்கு ஒரு சைக்கியாட்றிஸ்ட் 
பேரைச்சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.
 
 அவென்யூவில் வில்சனில், கதவிலக்கம் ஐந்தில் வெள்ளைவெளேர் என்று நின்றிருந்த 
கட்டிடத்தின் கேட்டினைத் திறந்துகொண்டு வழக்கறிஞர் பிரான்சுவா ஸ்டெனிஸ்லாஸ் பெயரைத் 
தேடி, அழைப்பு மணியில் விரலை வைத்தேன். இண்ட்டெர் போனில், எங்கள் கம்பெனிப் பேரைத் 
தெரிவித்து, கேட்டிருந்த பைலுடன் வந்திருப்பதாகச் சொன்னேன்.
 
 - கதவைத் திறக்கிறேன், மூன்றாவது மாடிக்கு வாங்க. - என்று குரல் வந்தது.
 
 லிப்ட் எடுக்கவிருப்பமில்லை. மூன்றாவது மாடிவரை படிக்கட்டுகளையே உபயோகிக்கிறேன். 
உடலுக்காக அல்ல, வீட்டிற்குச் சீக்கிரம் திரும்பக்கூடாது, முடிந்த மட்டும் 
நேரத்தைப் போக்கணும், கதவருகே இருந்த அழைப்பு மணியில் மீண்டும் விரல்பட்டபோது பத்து 
நிமிடங்கள் கூடுதலாக கிடைத்திருந்தன.
 
 கதவு திறக்கிறது, நான் எதிர்பார்க்கலை. பூனை நடை முடித்து போஸ்கொடுக்கும் மாடல் 
அழகிபோல கதவைப் பிடித்துக்கொண்டு நிற்கிறாள், இளமையின் மதர்ப்பில் வயது 
அதிகம்போனால் இருபத்தைந்து இருக்கலாம், நேராக என் கண்களைப் பார்த்தாள். கூச்சமாக 
இருந்தது. எதையோச் சொல்ல நினத்து, சொற்களை தேடினேன்.
 
 - மன்னிக்கணும், பைல் கொஞ்சம் அவசரமா தேவைப்பட்டது, அதனாலதான் உங்களைச் 
சிரமப்படுத்த வேண்டியிருந்தது. உள்ளே வாங்க. நீங்கதான் குமாரா, இந்தியர்?
 
 பண்ணீர் மழையில் நனைந்ததாகச் சொல்லலாமா இல்லை குற்றால அருவில் குளித்ததாகச் 
சொல்லலாமா? உங்க விருப்பம்போல இரண்டிலொன்றை வச்சுக்கங்க.
 
 - பாதி சரி பாதி தப்பு. அதாவது இந்தியன், பெயர் கார்த்திக். குமார் என் நண்பன். 
இரண்டுபேருமே ஒருவகையிலே இந்தப் ·பைலுக்குப் பொறுப்பு. நீங்க யாரு, வக்கீல் எங்கே 
போயிட்டார்?
 
 - ஏன் என்னைப் பார்த்தா வக்கீலா தெரியலையா? சிரிக்கிறாள். நீங்க தேடிவந்த வக்கீலோட 
சகோதரி. பெயர் சோ·பி. நானும் வக்கிலுக்குப் படிச்சவதான். என் சகோதரனும் நானும் 
கூட்டாகத்தான் இந்த அலுவலகத்தை நடத்தறோம். இந்த நேரத்திலே உங்களை வரவழைத்ததற்கு 
மன்னிக்கணும்.
 
 கையை நீட்டுகிறாள், சட்டென்று பற்றிக்கொள்ள வேண்டும்போல் இருக்கிறது, தயங்குகிறேன். 
இருவரும் கைகுலுக்கிக் கொண்டோம், உடல் திடீரென சிலிர்த்து அடங்கியது. 
கால்கலிரண்டும் கனத்துப்போக பாரமாக உணர்ந்தேன். நெற்றியில் வேர்த்தது. கைகளிலும் 
அதுதான் நிலைமை, ·பைல் நழுவி கீழே விழ அவள் குனிந்து எடுக்கிறாள்- ஆபத்து சட்டென்று 
எட்டிப்பார்க்கிறது. சமாளிக்கிறேன்.
 
 - என்ன நீங்க அடிக்கடி மன்னிப்பு கேட்டுக்கிட்டு, உங்களைப் பார்க்க புண்ணியம் 
பண்ணியிருக்கணும்.
 
 - பரவாயில்லை பெண்களுக்கென்றே வார்த்தைகள் வச்சிருப்பீங்க போல. என்ன குடிக்கிறீங்க?
 
 ஆளுக்குக் கொஞ்சம் மர்த்தினிக் எடுத்துகிட்டோம், எனக்கு எதிரே கால் நீட்டி 
அமர்ந்திருந்தாள். உயரம் 170 செ.மீட்டருக்குக் குறையாமலிருக்கலாம், எடையும் 
குறைவாகத்தான் இருக்கணும், மற்ற அளவுகளைப் பத்திச் சொல்லத் தெரியலை. வக்கீல் 
தொழிலிலில்லாமல், மாடல் பெண்ணாக இருந்தால் ஜெயிக்கக் கூடியவள் என்பதற்கான 
குறியீடுகளிருந்தன. கொண்டு வந்திருந்த ·பைலைப்பற்றிப் பேசவேண்டுமென்பதில் 
அக்கறையில்லாதவள்போல இருந்தாள்.
 
 - இந்தியாவில் எங்கே?
 
 - புதுச்சேரி
 
 - நான்கூட 92ல் புதுச்சேரிக்கு வந்திருக்கேன். ஆரோவில்லில் மூன்று மாதங்கள் 
தங்கியிருந்தேன்.
 
 - அதற்கப்புறம் கேரளா போயிருப்பீங்க அப்படித்தானே? பெரும்பாலான 
பிரெஞ்சுகாரர்களுக்குத் தெரிந்த சுற்றுலாப் பாதை. அதைத்தான் அவளும் 
கடைபிடித்திருக்கணுங்கிற ஊகத்தில் கேட்டது.
 
 - அப்படி நினைச்சுத்தான் புறப்பட்டுப் போனேன், வழியிலே பழனியிலே இரண்டுவருடம் 
தங்கிட்டேன். அங்கே தமிழாசிரியர் ஒருத்தர் வீட்டுலே தங்கி தமிழ் கத்துகிட்டேன்.
 
 - பழனி, தமிழ்னு ஆசைபட்டதற்கு என்ன காரணம்?
 
 - ம் சொல்லத் தெரியலை. என் வீடு தேடி இன்றைக்கு நீங்கள் வரவும், உங்களை நான் 
சந்திக்கவும் என்னகாரணமோ அந்தக் காரணம்..
 
 "-------------------------
 வாயில் தோன்றி, வாழ்த்தி நின்று,
 நின்னும்நின் மலையும் பாட, இன்னாது
 இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்.
 முலையகம் நனைப்ப, விம்மிக்
 குழல்இனை வதுபோல் அழுதனள், பெரிதே?
 
 - என்ன, என்னென்னவோ சொல்றீங்க
 
 - புற நானூற்றில் வருது. நான் தங்கியிருந்த பழனியிலே சங்க காலத்திலே பேகன் என்று 
ஒரு மன்னன் இருந்திருக்கான், ஏழு வள்ளல்களில் அவனும் ஒருவனாம். குளிரில் வாடிய 
மயிலுக்குப் போர்வையெல்லாம் கொடுத்திருக்கான்.
 
 - பெண்ணைக்கூட நாங்க மயிலென்றுதான் சொல்வோம். உங்களைப்போல ஒரு மயில் கிடைத்தால் 
நான் கூட போர்த்தி விடுவேன்.
 
 - நான் சொல்ல வந்ததை முடிச்சிடறேன், நீங்க பொறுமையா போர்த்துங்க. கபிலர் என்ற 
புலவர், பேகனைத் தேடி பரிசுவாங்க போயிருக்கிறார். அங்கே அவன் மனைவிமாத்திரம் 
அழுதுகொண்டு இருந்திருக்கிறாள், விசாரித்ததில் மன்னன் வேறொரு பெண்ணைத் தேடிப்போன 
தகவல் கிடைச்சிருக்கிறது. அங்கிருந்து புறப்பட்ட புலவர் நேராக மன்னனைத் தேடிப் 
போனார், மனைவியில் நிலமையை எடுத்துசொல்வதாகப் பாடல். எனக்கு முழுப்பாடலும் 
ஒருகாலத்திலே மனப்பாடமா தெரியும், இப்போ மறந்துபோச்சு.
 
 - உங்கக்கிட்டே நான் தமிழ் கற்றுக்கொள்ளாமென்று சொல்லுங்க
 
 - அந்த அளவிற்கு இல்லை. ஆனா பழக்கமில்லைண்ணா தமிழை மறந்துடுவேன் என்கிற பயமிருக்கு.
 
 - என்ன செய்யப்போறீங்க
 
 - உங்கக்கிட்டதான் பழகிக்கணும்
 
 * * *
 சோ·பியிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டபோது, இரவு பத்துமணியைத் தாண்டிவிட்டது. கடந்த 
பத்து நிமிடங்களாக அவளை மறக்க நினைத்து, முடியலை. வீட்டுக்குத் திரும்பியபோது மணி 
இரவு பதினொன்று. அனிதா தூங்கி இருப்பாளென்று நினைத்து கைவசமுள்ள சாவியால் கதவைத் 
திறக்க முயற்சிக்க, சட்டென்று கதவு உள்வாங்கியது, அனிதா.
 
 - என்ன தூங்கப் போகலியா?
 
 - உங்களுக்காகத்தான் காத்திருந்தேன், சித்தே முன்னேதான் இந்தியாவுக்கு போன் 
பன்னிணேன், உங்களுக்கு அஷ்டமத்துலே சனிண்ணு அம்மா சொன்னாங்க, தோஷ நிவர்த்தி 
செய்யணுமென்கிறாள். சூரியனார் கோவிலிலே தங்கி பன்னிரண்டு ஞாயிற்றுக்கிழமை தலவாசம் 
செய்து வழிபடணுமாம்.
 
 அனிதா முகத்தில் சோகம் மொத்தமா குத்தகை எடுத்ததைப்போல இருந்தது. நாசி விடைக்க 
சட்டென்று கண்களில் நீர் கோர்த்துக்கொள்கிறது.
 
 - அசடு.. அசடு, இப்ப என்ன நடந்திட்டுது கண்கலங்கிற
 
 - எனக்கு என்னமோ பயமாயிருக்கு.
 
 - ம்.. வேண்டுமானா ஒண்ணு செய். கொஞ்சகாலம் இந்தியாவுல இருந்திட்டு வாயேன். ஏதோ தோஷ 
நிவர்த்தி செய்யணுமென்று சொன்னியே, அதையும் அப்படியே செய்திட்டு வந்திடு.
 
 - சப்பாத்தியும், புதினா மசியலும் எடுத்து வச்சிருக்கேன்
 
 - எனக்குப் பசியில்லை, உனக்காக வேண்டுமானா இரண்டு எடுத்துக்கிறேன்
 
 சட்டென்று தன் முன் கால்களை ஊன்றி என்னை முத்தமிட முயன்றவளுக்கு உதவினேன். திரும்பி 
நடந்தாள். சந்தோஷம் நடையில் தெரிந்தது. சப்பாத்தியை எடுத்துத் தட்டில் வைத்தபோது, 
சோ·பி மர்த்தினிக்கை நீட்டுகிறாள். ம்.. சராசரி மனிதர்களுக்கு இரண்டு எங்கே 
வாய்க்கிறது?
 
 - கார்த்திக், இன்றைக்குக் காலமே அரபு நாட்டவர் கடைக்குப் புதினா வாங்கலாமென்று 
போனேன். அங்கேயொரு பிரெஞ்சுக்காரி மன அழுத்தத்திலிருந்து தனக்கு எப்படி விடுதலை 
கிடைத்தது என்பதுபற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள்..
 
 புதினா மசியலில் தோய்ந்த சப்பாத்தி விரல்களுக்கிடையில் தவித்துக்கொண்டிருக்க 
எழுந்துகொண்டேன். அனிதா பக்கத்தில் வந்து நின்றாள்.
 
 - சாரி டியர், நீங்க சாப்பிடும்போது அதைச் சொல்லியிருக்ககூடாது. ஜூலையிலே நான் 
இந்தியாவுக்குப் போயிட்டு அம்மா யோசனைப்படி செய்யறேன், நீங்க எதுக்கும் ஒரு நல்ல 
சைக்கியாட்றிஸ்ட்டை பார்க்கிறது நல்லது. எனக்கென்னவோ இதுவரை எந்த முன்னேற்றமும் 
இல்லைணுதான் தோணுது. சில நேரங்களில் பேயறைஞ்சவர் மாதிரி இருக்கீங்க..
 
 - அனிதா, வரவர நீ எதைச்சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும்ணு தோணுது நீ "முலையகம் 
நனைப்ப விம்மிக் குழல்இனைவதுபோல் அழ" நான் விடமாட்டேன், என்னை நம்பு.
 
 சட்டென்று என்னிடத்திலிருந்து விலகி நின்றாள். வழக்கம்போல ஐந்து நொடிகள் 
குழப்பத்துடன் பார்த்தாள். வேகமாய் நடந்து போனவள், கை நிறைய விபூதியைக்கொண்டுவந்து 
நெற்றியில் பூசினாள். மெல்ல அணைத்தபடி நடத்திச்சென்று கட்டிலிற் படுக்கவைத்தாள்
 * * *
 
 ஒரு வாரம் கடந்திருந்தது
 
 - ஒவ்வொரு முறையும் என் பின்னாலே நீ வரணுமென்றில்லை, அனிதா.
 
 - உங்கமேலே எனக்கு நம்பிக்கை இல்லை கார்த்திக். சில நேரங்களில் பொய் சொல்றீங்களோ 
என்று சந்தேகம். இதற்கெல்லாம் தொடர்ந்து போகணும், இல்¨யென்றால் பலனில்லை. இனி 
ஒவ்வொரு முறையும் காரில் உங்ககூடவந்து, கபினேக்குள்ள போகிறவரை இருந்து 
பார்க்கறதுண்ணு தீர்மானிச்சிருக்கேன். சைக்கியாட்றிஸ்ட்டுப் பேரு என்னண்ணு 
சொன்னீங்க?
 
 - சோனியா.
 
 காரை அனிதாவே ஓட்டிவந்தாள். இருபது நிமிடங்களுக்குப் பிறகு, நான் சொல்லியிருந்த 
முகவரிக்கு எதிரே நிறுத்தினாள். இறங்கிக்கொண்டேன். கட்டிடத்தின் வாசலில் சோனியா, 
சைக்கோ அனாலிஸ்ட் என்ற புதிய பித்தளைத் தகடு வெயிலில் பளபளக்கிறது.
 
 - மேலே வறியா.
 
 - இல்லை நீங்க போங்க, அதுவரை பக்கத்திலிருக்கும் டிராவல் ஏஜென்ஸியில் ஜூலை 
மாதத்திலே இந்தியாவிற்கு டிக்கெட் எப்படிண்ணு விசாரிச்சுட்டு வந்திடறேன்.
 
 அனிதாவின் கார் மறைந்ததும் வேகவேகமாக படிக்கட்டுகளில் தாவி ஏறினேன். கதவைத் 
திறந்ததும், எதிர்பார்த்ததுபோல சோ·பி காத்திருந்தாள்
 
 - உங்க மனைவி எப்படி? பேகன் மனைவி கண்ணகிபோல அழுவாங்களா?
 
 - எப்படி?. முலையகம் நனைக்க விம்மியா? நினைக்கலை.
 
 - nakrish2003@yahoo.fr
 |  
| 
 |  
| © 
காப்புரிமை 2000-2008 Pathivukal.COM முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
 |  
|   |  
|  |  |