இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
மே 2008 இதழ் 101  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
சிறுகதை!
ஒரு கைதியின் மௌனம் கலைந்தபோது..!

குரு அரவிந்தன்


குரு அரவிந்தன் என்றுமில்லாதவாறு அந்தச் சிறைச்சாலை பரபரப்பாக இருந்தது. கடந்த இரண்டு நாட்களாக சிறைச்சாலையின் முன்பகுதியை மட்டும் கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோதே யாரோ அங்கு வருகை தரப்போகிறார்கள் என்பதைக் கைதிகள் புரிந்து
கொண்டார்கள். இப்படியான சம்பவங்கள் சுதந்திரதின விழாவின் போதோ அல்லது அரசியல் வாதிகள் யாராவது பிறந்ததினம் கொண்டாடும் போதோ மட்டும்தான் நடப்பதுண்டு. அப்போதெல்லாம் வாய்க்கு ருசியாய் நல்ல சாப்பாடும் இனிப்பும் கிடைக்கும். சுதந்திரதின விழா என்றால் சிறிய குற்றம் செய்து சிறைக்கு வந்தவர்களில், நன்னடத்தையில் உள்ளவர்களுக்குச் சில சமயம் சிறையிலிருந்து விடுதலையும் கிடைப்பதுண்டு;. சென்ற மாதமே, தேசியக் கொடியேற்றி ஜனகனமன பாடிச் சுதந்திரதினக்
கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்துவிட்டன. எனவே யாரோ அரசியல் வாதிகள்தான் வரப்போகிறார்கள் என்பதைக் கைதிகள் ஊகித்துக் கொண்டார்கள். என்றுமில்லாத அதிசயமாய் அன்று சிறை அதிகாரிகள்கூட நேர்த்தியாக உடை அணிந்து வந்திருந்தார்கள்.
அதிகாலைத் தூக்கத்தைக் கலைத்துக் கொண்டு சிறைச்சாலையில், பெண்கள் பகுதியில் பவானி படுத்திருந்த அறை வாசற் கதவு
திறக்கப்பட்டது. என்ன, ஏது என்று தெரியாததால், பவானி வெறுமனே கண்களை மூடிக் கொண்டு தூங்குவது போன்ற பாவனையோடு
மௌனமாகப் படுக்கையிலேயே கிடந்தாள். யாரோ அருகே நடந்து வரும் சத்தம் கேட்டது.

‘எழுந்திரு..!’ என்றாள் அருகே வந்த பெண் பணியாளர். பவானி எழுந்து நின்று நித்திரைத் தூக்கத்தோடு சோம்பல் முறித்தாள்.
வந்தவள் வாட்டசாட்டமாய் சிறைப் பணியாளருக்கு உரிய சீருடையில் இருந்தாள். பெண்மையின் நளினம் கொஞ்சம்கூட இல்லாமல், ஆண்மைத் தன்மையின் அகங்காரத்தோடு இருப்பதுபோலத் தோற்றம் தந்தாள். இப்படிப் பட்டவர்களிடம் வாய் திறந்தாலே, ‘படார்’ என்று கன்னத்தில் ஓங்கி அறைதான் விழும் என்பதைச் சிறைச்சாலையில் பெற்ற அனுபவமூலம் உணர்ந்து கொண்ட பவானி, எதுவும் பேசாது அவளையே பார்த்தபடி நின்றாள்.

‘இந்தா இதைப்பிடி, குளிச்சு உடைமாத்திக் கொண்டு சீக்கிரம்வா’ என்று அவளது கையிலே சலவை செய்த வெள்ளைநிற சேலையையும், மேல் அங்கியையும் திணித்தாள் அந்தப் பெண் பணியாள்.

எதுவும் பேசாது பவானி குளியலறைக்குச் சென்று குளித்து உடை மாற்றிக் கொண்டு வந்தாள். தனக்குமட்டும் அதிகாலையில் ஏன் இந்த
உபசாரம் என்பது அவளுக்குப் புரியவில்லை. ஆண் பெண் என்ற வித்தியாசம் இல்லாமல், சந்தர்ப்பம் கிடைத்தால் அவளது இளமையைப் பருகத்துடிக்கும் எத்தனையோ வக்கிரப் பேர்வழிகள் அங்கேயே கண்முன்னால் காத்திக்கிறார்கள் என்பதை அவள் அறிவாள். சிறைச்சாலைக்குள் நடக்கும் எத்தனையோ வேண்டாத சம்பவங்கள் பற்றி ஏற்கனவே இவள் நிறையக் கேள்விப் பட்டிருந்ததால் கொஞ்சம் நடுக்கமாகவே இருந்தது.

‘தலை வாரினியா, இதென்ன பத்திர காளிமாதிரி முடியை விரிச்சு விட்டிருக்கிறாய், போடி சீக்கிரம் தலையை வாரிட்டுவா!’ என்று
மீண்டும் விரட்டினாள் அந்த பணியாளர். யாரோ என்னைப் பெண் பார்க்க வருவதுபோல் ஏன் இந்த ஆர்ப்பாட்டம்? இவள் அவசர அவசரமாகச் சீப்பை எடுத்து தலை வாரிக் கொண்டை முடிந்து கொண்டு வந்தாள். முகத்திலே ஒருவித சோகம் குடியிருந்தாலும், அன்றலர்ந்த தாமரையாய் முகம் பளீச்சென்றிருந்தது.

கறுப்பென்றாலும் இவளிடம் ஒருவித வசீகரம் குடிகொண்டிருக்கிறது என்பதை மனதுக்குள் பதித்துக் கொண்டாள் அந்தப் பெண்
பணியாளர்.சற்று நேரத்தால் பெரிய அதிகாரி ஒருவர் அங்கே வந்தார். ‘இவளா..?’ என்ற சந்தேகத்தோடு அவளை மேலும் கீழும் பார்த்தார்.
‘பெயர் என்ன?’ என்று கேட்டார், ‘பவானி’ என்று ஒற்றைச் சொல்லில் இவள் பதில் சொன்னாள். ‘திமிர் இன்னும் அடங்கவில்லை’ என்று
மனதுக்குள் கறுவிக்கொண்டு, அவளது அறை சுத்தமா இருக்கிறதா என்று எட்டிப் பார்த்தார்.

‘நீயா பொறுப்பு?’ என்று, திரும்பி அந்தப் பெண் பணியாளரைக் கேட்டார்.

‘ஆமா!’ என்றாள் அவள்.

‘அவளைச் செக் பண்ணினியா?’ சந்தேகத்தோடு கேட்டார்.

‘இல்லை!’ என்றாள்.

‘திரும்பவும் ஒரு தப்புச் செய்ய இடம் கொடுக்காதே, கூட்டிட்டுப்போ..!’ குரலில் அதிகாரத் தோரணை தெரிந்தது. பெண் பணியாளர்
பயந்துபோய் பவானியின் கையைப் பிடித்து தறதறஎன்று ஒதுக்குப் புறமாய் இழுத்துச் சென்றாள். பிடியின் இறுக்கத்தில் வேதனை தாங்க
முடியாமல் பவானி கையை உதறவே பணியாளருக்குக் கோபம் வந்துவிட்டது.

‘ஏன்டி கொண்டதுதான் கொண்டீங்க உங்க ஊரிலை வெச்சுச் செய்திருக்கலாமே, ஏன்டி இங்கை வந்து தொலைச்சீங்க?’ கடுப்போடு
திட்டினாள்.

அவள் ஏன் தன்னைத் திட்டுகிறாள் என்பது மற்றக் கைதிகளுக்குப் புரியாவிட்டாலும் அவள் என்ன சொல்கிறாள் என்பது பவானிக்குப்
புரிந்தது.

மறைவான ஒரு இடத்தில் அவளை விட்டு, அவளது ஆடைகளை உருவினாள் அந்தப் பெண் பணியாளர். பவானியோ வெட்கப்பட்டு
இரண்டு கைகளையும் மார்புக்குக் குறுக்கே கட்டிக் கொண்டு அவமானப்பட்டு நின்றாள்.

‘நீ கெட்ட கேட்டுக்கு, உனக்கு வெட்கம் வேற வருகுதாக்கும்..!’ என்று எரிச்சலோடு ஏசிக் கொண்டே, பவானி உடம்பில் ஏதாவது மறைத்து
வைத்திருக்கிறாளா என்ற சந்தேகத்தோடு அவளது உடம்பில் ஓரிடமும் மிச்சம் விடாமல் தடவிப் பார்த்தாள். அவளது கைபட்ட
இடமெல்லாம் நாக்கிளிப்புழுக்கள் ஊர்வது போன்ற உணர்வில், அவமானம் தாங்க முடியாமல் பவானி அப்படியும் இப்படியும் நெளிந்தாள்.

‘சரி, டான்ஸ்ஸாடினது போதும், சீக்கிரம் வா!’ என்று சொல்லிக் கொண்டே அந்தப் பணியாளர் இடத்தை விட்டகலவே, பவானி
தாறுமாறாய்க் கிடந்த சேலையை எடுத்து மீண்டும் அணிந்து கொண்டு தனது அறைக்குச் சென்றாள்.

‘இந்தபார், உன்னைப் பார்க்கப் பெரிய இடத்தில இருந்து வர்றாங்க. பவ்வியமாய் நடந்து கொள்ளணும், புரியுதா?’ என்று அந்த அதிகாரி;
அதட்டவே, அவள் சரி என்று தலை அசைத்தாள்.

‘ஏதாவது ஏடாகூடமாய் நடந்து கொண்டியோ அப்புறம் எங்கிட்ட தப்பமாட்டாய், புரியுதா?’ மீண்டும் மிரட்டினார்.

திடீரென யாரோ தடதடவென்று ஓடிவந்தார்கள். நிமிர்ந்து பார்த்தாள். கறுப்புப் பூனைகள். இவர்கள் எங்கே இங்கே? அரசியலோடு
தொடர்புடையவர்கள் யாராவது வருகிறார்களோ?

அவர்கள் எல்லாப் பக்கமும் சூழ்ந்து கொண்டு, தங்களின் கட்டுப்பாட்டில் அந்த இடத்தைக் கொண்டு வந்தார்கள். அவர்களில் ஒருத்தன் வாக்கிரோக்கியில் ஏதோ சொல்லவே, சற்று நேரத்தில் அந்தப் பரபரப்புக்கு மத்தியில் திடீரென அந்தப் பெண்மணி தோன்றினாள். அவளது நடையிலும், பார்வையிலும் இளமைத் துடிப்பு துள்ளித் தெறித்தது. வெளிநாட்டு நாகரிகத்தில் வளர்ந்தவள்போலத் தோன்றினாலும், அடக்க ஒடுக்கமாய் அழகான பச்சை நிறத்தில் சேலை அணிந்திருந்தாள்.

அவள் சென்ற அறைக்குப் பவானியை அந்த அதிகாரி அழைத்துச் சென்றார்.

பவானி உள்ளே வந்ததும், தனிப்பட்ட முறையில் பவானியோடு ஏதோ பேச விரும்பியவள்போல, அருகே நின்ற மற்றவர்களைப் பார்த்து
வெளியே செல்லும்படி சைகை செய்தாள்.

தயக்கத்தோடு அவர்கள் விலகிச்சென்றதும், ஒரு கணம் பவானியைத் தீர்க்மாகப் பார்த்துவிட்டு, ‘உட்காரு’ என்றாள். பவானி முதலில்
தயங்கினாலும் ஏதோ மந்திரத்திற்குக் கட்டுப்பட்டதுபோல அருகே உட்கார்ந்தாள்.

‘என்னை யாரென்று உனக்குத் தெரியுதா?’

பவானி ‘தெரியாது’ என்று தலையசைத்தாள்.

‘நான்தான் பிரியதர்ஸினி! என்றாள்.

பவானி, யாராய் இருக்கும் என்று சிந்தனையை ஓடவிட்டாள்.

‘இன்னும் உனக்குப் புரியலையா?’ என்றாள்.

மீண்டும் பவானி ‘இல்லை’ என்று கைகளை விரித்து சைகை செய்தாள்.

‘என்னுடைய அப்பாவின் மரணத்திற்கு நீயும் ஒரு காரணம்!’ என்றாள் அவள் நிதானமாக.

இப்போ பவானிக்கு ஏதோ புரிவதுபோலவும், அதேசமயம் திடீரென அவளைப் பார்த்ததில் அதிர்ச்சியாகவும் இருந்தது. என்னைத்தேடி இவள் இங்கே எதற்கு வந்தாள்? பவானியின் மனதைப் படித்தவள்; போல அவளே பதில் சொன்னாள். ‘எனக்கு நிம்மதியில்லை. நடந்ததை எல்லாம் மறந்திடணும் என்றுதான் இருந்தேன். ஆனால் முடியலையே, என்ன நடந்தது என்று எனக்குத் தெரியணும்!’ என்றாள்.

அவள் என்ன சொல்ல முற்படுகிறாள் என்பது இவளுக்குப் புரியவில்லை.

‘உன்னோடு கொஞ்சம் தனியே பேசணும்!’ என்று சொன்னவள், திடீரென

‘நீயேன் இப்படிச் செய்தாய்?’ என்று கேட்டாள்.

கேட்கும்போதே அவள் அழுதுவிடுவாள் போல இருந்தது.

பவானி அதற்குப் பதில் சொல்லத்தயங்கினாள்.

ஓற்றை வார்த்தையில் சொல்லக்கூடிய பதிலா, சொல்லி முடிப்பதற்கு!

பவானியின் நீண்ட மௌனம் அவளை மேலும் சங்கடப்பட வைத்தது. இவளிடம் இருந்து ஏதாவது முறையில் பதில் எடுக்கவேண்டும்
என்பதில் அவள் ஆர்வம் காட்டினாள்.

‘என்னுடைய அப்பா மிகவும் நல்லவர், அவருடைய நல்ல குணங்கள் பற்றி உனக்குக் கொஞ்சம்கூடத் தெரிந்திருக்க நியாயமில்லை! என்ன
இருந்தாலும் நீ இதைச் செய்திருக்கக்கூடாது..!’ என்றவளின் கண்கள் கலங்கின.

அவள் மனசுக்குள் அழுகிறாள் என்பது இவளுக்குச் சட்டென்று புரிந்தது.

அதே போன்ற வலியையும் வேதனையையும் இத்தனை காலமாய் இவளும் அனுபவித்துக் கொண்டுதானே இருக்கிறாள் என்பது
அவளுக்குப் புரிந்திருக்க நியாயமில்லை. அவள் குளிரூட்டிய அறையில் சொகுசுமெத்தையில் படுத்துக் கொண்டு அனுபவிக்கும் அதே வேதனையை, இவளோ சீமென்ட்டுத் தரையில் காற்றோட்டமில்லாத சிறைச்சாலையில் கைதியாய் இருந்து கொண்டு அனுபவிக்கிறாள். அவ்வளவுதான்!

‘அவள் என்ன சொன்னாலும், ஏசினாலும் பேசினாலும் தேவையில்லாமல் நீ வாய் திறக்கக்கூடாது’ என்று சிறைச்சாலை அதிகாரி காலையில் திரும்பத் திரும்ப இவளை எச்சரித்துவிட்டுச் சென்றது ஞாபகம் வந்தது. எனவே மௌனம் காப்பது நல்லது என்று
நினைத்தவள், வாய் திறவாது நினைவுகளை மீட்டிப் பார்த்தாள்.

‘எனக்கும் புரியுது பிரியா, உன்னுடைய அப்பா மிகவும் நல்லவர்தான் ஆனால் தவறானவர்களால் வழிகாட்டப்பட்டு அவர்கள் விரித்த
வலைக்குள் சிக்கிக் கொண்டு கண் மூடித்தனமாய் இருந்ததால் வந்த வினைதான் இது! நீ உன்னுடைய அப்பாவை மட்டும்த்தான்
இழந்தாய், நான் என் குடும்பத்தையே இழந்து விட்டேன் என்பது உனக்குத் தெரியுமா?; என்னுடைய அப்பாவும், எங்கள்மேல் அன்பையும், பாசத்தையும் அள்ளியள்ளிக் கொட்டியவர்தான் என்பது உனக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. வயதான காலத்தில் காந்தியின் பக்தரான அவர் எந்த ஒரு பிரச்சனையும் வேண்டாம் என்றுதானே தானும் தன்பாடுமாய் வீட்டிலே அடைந்து கிடந்தார். காரணமில்லாமல் அவரை வெளியே இழுத்து வந்து வீதியில் வைத்துச் சுட்டுக் கொன்றபோது இதே கேள்விதான் என் மனதிலும் எழுந்தது. சமாதானத்தை நிலை நாட்டவந்தவர்களா, அல்லது எங்களைக் கொன்று குவிக்க வந்வர்களா என்ற சந்தேகம் அப்போதுதான் எங்கள் எல்லோருக்கும் ஏற்பட்டது.
நியாயம் கேட்டதற்காகவே என்னுடைய அக்கா அந்த சிப்பாய்களால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டாள் என்பதாவது உனக்குத்
தெரியுமா பிரியா? இதுபோன்ற வேதனை தரும் பலசம்பவங்கள் எங்க மண்ணிலே நடந்தது உனக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை,
ஏனென்றால் எல்லாமே மூடிமறைக்கப் பட்டுவிட்டன. வேலியே பயிரை மேய்ந்தால் யாரிடம் நாங்கள் முறையிடுவது?
பவானியின் நீண்ட மௌனத்தால் பிரியா மீண்டும் நிலை குலைந்தாள்.

‘சொல்லேன், நீ ஏன் இப்படிச் செய்தாய்?’ இவளது கைகளைப் பற்றிக் கொண்டு, விடை தெரிந்து கொள்ளும் ஆவலில் அவள் மீண்டும்
கேட்டாள்.

பதில் சொல்வதா, விடுவதா? இனியும் பொறுப்பதில் பயனில்லை என்று பவானி நினைத்தாள். அவளை அறியாமலே, ஆற்றாமையால்
மனசுக்குள் வெந்து கொண்டிருந்த வார்த்தைகள், மௌனத்தை உடைத்து கொண்டு வெளியே தெறித்தன.

‘ஏன்னா, என்னுடைய அப்பாவும் நல்லவர்தான்!’ என்றாள் பவானி.

எதிர்பாராமல் வந்து விழுந்த வார்த்தையின் உண்மை சுடவே, அந்த அதிர்ச்சியில் பிரியா கலங்கிப்போனாள். இவளது கைகளைப்
பற்றியிருந்த அவளது கைகள் தானாகவே தளர்ந்தன.

‘ஐயாம் ஸொறி..!’ என்று மட்டும் சொல்லிவிட்டு நடைபிணமாய்; வெளியேறினாள் பிரியா.

kuruaravinthan@hotmail.com

© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner