| 
  முதியோர் இல்லம்!
 - குமரவேலன் -
 
 
  
  குருசாமி ஈசிச்சேரில் சாய்ந்துகொண்டு தமிழ் செய்தித் 
  தாளை அலசிக்கொண்டிருந்தார். அவர் மகன் சந்துரு ஹாலில் டெலிபோனில் யாரிடமோ 
  உரையாடிக்கொண்டிருந்தான். அவன் உரத்த குரலில் பேசிக்கொண்டிருந்தது அவருடைய 
  கவனத்தைக் கலைத்தது.
 'ஹலோ, ராமகிருஷ்ணா முதியோர் இல்லமா' என்று விசாரித்ததும் பின்னர் நடந்த 
  சம்பாஷ¨ணைகளும்அவர் காதில் தெளிவாகவே
 விழுந்தன.
 
 ஆவல் மேலிட,கொஞ்சம் உன்னிப்பாகக் கவனித்தபோது, அவருக்கு விஷயம் புரிந்து விட்டது.
 
 சென்னையில் உள்ள சில முதியோர் இல்லங்களுக்குப் போன் செய்து அவைகளில் முதியோரை 
  இலவசமாகச் சேர்ப்பதற்கான
 வழிமுறைகளைக் விசாரித்துக் கொண்டிருந்தான்.
 
 அவன் செயலைக் கண்டு குருசாமிக்கு பெரும் அதிர்ச்சி!
 
 சந்துரு அவருடைய ஒரே செல்ல மகன். அவன்அம்மா சிறுவயதிலேயே இறந்து விட்டாள், அதனால் 
  அப்பா தான் அவனுக்கு
 சகலமாகவும் இருந்து எந்தக் கவலையுமில்லாமல் பாசத்துடன் வளர்த்தார். மகனின் 
  எதிர்காலத்தை உத்தேசித்து அவர் இரண்டாவது கல்யாணத்தைப் பற்றிக்கூட 
  சிந்திக்கவில்லை.
 
 இப்போது அவருடைய முதுமைக் காலத்தில் அவன் நன்றாயும் பொறுப்பும் உள்ள மகனாக , 
  அப்பாவை எந்தக் குறையும் இல்லாமல்
 கண்ணும் கருத்துமாய் கவனித்துக் கொள்வதை நினைத்து அவருக்கு மிகுந்த சந்தோஷம். 
  தனக்கு இப்படி ஒரு பாசமான மகன்
 கிடைத்தது தன் அதிருஷ்டம் தான் என்று அடிக்கடி தன் நண்பர்களிடம் பெருமையடித்துக் 
  கொள்வார்.
 
 ஆனால் அப்படிப்பட்டவனுக்கு திடீரென்று இப்போது என்ன ஆயிற்று.? முதியோர் 
  இல்லங்களைத் தொடர்பு கொண்டு விசாரிப்பது ஏன்? -இந்தக் கேள்விகளுக்கு விடை 
  தெரியாமல் அவர் தவியாய்த் தவித்தார்.
 
 கடந்த சில நாட்களாகவே அவருக்கும் அவர் மருமகள் சுதாவுக்கும் சிறுசிறு சண்டைகளும் 
  மனத் தாங்கல்களும் ஏற்பட்டது என்னவோ உண்மைதான். அவர் அவைகளை மறந்து மன்னித்து சகஜ 
  நிலைக்குத் திரும்பிவிட்டார். அவளும் அதை எல்லாம் பெரிதாகப் பொருட்படுத்த 
  மாட்டாள் என்றுதான் நினைத்திருந்தார்.
 
 இப்போது?
 
 அவள் ஒருவேளை அவைகளையெல்லாம் மனதிலேயே வைத்துக்கொண்டு தன்னைப் பழி வாங்கத் 
  துடிக்கிறாளோ என்ற சந்தேகம்
 அவரை உலுக்கியது. கணவனிடம் ஒன்றுக்கு இரண்டாகப் போட்டுக்கொடுத்து தன்னை முதியோர் 
  இல்லத்திற்கு விரட்டிவிட்டு ஹாய்யாக
 இருக்கத் திட்டமிட்டிருப்பாளோ என்றும் தோன்றியது.
 .
 அடுத்த நாளே அவருக்கு மகனுடன் தனியாகப் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது.
 
 சந்திரனாகவே அன்று நடந்ததை விவரிக்க ஆரம்பித்தான்.
 
 "அப்பா, நேத்து கார்த்தாலே நான் ஆபீஸ் போறப்போ பனகல் பார்க் வாசலில் ஒரு பெரியவர் 
  பேச்சு மூச்சு இல்லாமே மயங்கிக் கிடந்தார்."
 
 "அடப்பாவமே!" '
 
 "அவரைப்பார்க்கவே ரொம்பப் பரிதாபமாக இருந்தது.,அவரை தட்டி எழுப்பி, சூடாக ஒரு 
  காபி வாங்கிக் கொடுத்தேன்."
 
 "அவரைப் பத்தி ஏதாவது விசாரிச்சயா?"
 
 "விசாரிக்காமெ இருப்பேனா? விசாரிச்சேன்."
 
 '"என்ன சொன்னாரு?"
 
 "அவர் ஒரே மகனும் மருமகளும் போதிய வருமானம் இல்லாமெ ரொம்பவும் கஷ்டத்தோட 
  குடும்பம் நடத்தறாங்களாம்., கூட அவர் இருக்கறதையே ஒரு பெரிய சுமையாகவே 
  நினைக்கறாங்களாம். அந்த உதவாக்கரை மகன் சரியான பெண்டாட்டி தாசனாம். மருமகளோ 
  அவருக்கு சரியாக சாப்பாடு கூடப் போடாத கொடுமைக்காரியாம். அவர் வீட்டை விட்டு 
  எங்கேயாவது ஒழிஞ்சாத்தான் நிம்மதியா இருக்க முடியும்னு அடிக்கடி அவர் காதுபடப் 
  புலம்புவாளாம்"
 
 "பாவம், என்ன கஷ்டம் வயசான காலத்திலே?"
 
 "அவங்களோட இருந்துகிட்டுப் பலவிதங்களிலும் துன்பம் அனுபவிக்கறதைவிட, வெளியில் 
  வந்து பிச்சை எடுத்தாவது வாழலாம் என்று
 ஏதோஒரு அசட்டுத் தைரியத்தில் வீட்டை விட்டு வெளியில் வந்து விட்டாராம்."
 
 "என்னதான் இருந்தாலும் அவசரப்பட்டு இந்த முடிவுக்கு வரலாமா?"
 
 "வெளியே வந்தப்புறம் தான் அவருக்குப் புரிஞ்சிருக்கு அது அவ்வளவு சுலபமில்லை 
  என்று. மேற்கொண்டு என்ன செய்யறது என்று
 புரியாமல் தவித்திருக்கிறார். சுய கெளரவத்தினால், மறுபடியும் அந்த வீட்டை மிதிக்க 
  அவர் மனம் இடம் தரவில்லை."
 
 "அப்புறம் ?"
 
 "எனக்கு அவர் நிலைமையைக் கண்டு ரொம்பப் பரிதாபமா இருந்தது."
 
 "அது சரி, இதிலே நீ என்னப்பா செய்ய முடியும்.?"
 
 "மனசு இருந்தா எதுவுமே முடியும்ப்பா."
 
 "அப்போ என்ன செய்யப்போறே நீ ?"
 
 "சொந்தக்காரங்களாலே கைவிடப்பட்ட ஆதரவற்ற துரதிருஷ்டசாலிகளுக்கு நேசக் கரம் நீட்டி 
  இலவசமாகவே உதவ எத்தனையோ
 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இல்லங்களும் இருக்கே?"
 
 "ஆமாம்,இருக்கு."
 
 "முயற்சி பண்ணி அதிலே ஏதாவது ஒண்ணுலே. அந்த முதியவரைச் சேர்த்துவிடவேண்டும்னு 
  முடிவு செஞ்சிருக்கேன். அதுக்காகத்தான் அந்த இல்லங்களுக்குத் தொலை பேசிமூலம் 
  பேசினேன்"
 
 "அடாடா, இப்போதாண்டா எனக்கு எல்லாமே புரியுது. உன் நல்ல மனசைப் புரிஞ்சிக்காமே 
  அவசரப்பட்டு உன்னையும் சுதாவையும் தப்பா
 நினைச்சுட்டேன்.. என்னைத்தான் முதியோர் இல்லத்துக்கு தள்ளிவிடத் திட்டம் 
  போட்டிருக்கீங்களோன்னு கூட சந்தேகப் பட்டுட்டேண்டா."
 
 ."என்னைப் பத்தி நல்லாத் தெரிஞ்ச நீங்களே எப்படி அப்பா ஏதேதோ கற்பனை பண்ணிகிட்டு 
  பயப்பட்டீங்க? எனக்கு ஒரு பக்கம் இது
 ஆச்சரியமாயும் இன்னொரு பக்கம் கஷ்டமாயும் இருக்கு. ஆனா ஒருவிதத்திலே தப்பு என் 
  மேலேகூடத்தான்னு தோணுது. நானே
 முன்கூட்டி இந்த விஷயத்தை உங்ககிட்டே சொல்லி இருந்தா இந்த்க் குழப்பமே 
  இருந்திருக்காது இல்லயா? ஐயாம் சோ சாரி அப்பா,
 என்னை மன்னிச்சுடுங்க"
 
 குருசாமியிடமிருந்து ஒரு நிம்மதிப் பெருமூச்சு வெளிப்பட்டது. பெருமிதத்தோடு 
  மகனைப் பார்த்து அன்பான ஒரு புன்னகை செய்தார்.
 
 thambudu@hotmail.com
 |