- குமரவேலன் -
வசந்த் ஜுவல்லரி தியாகராயநகரிலேயே பிரபலமான பெரிய நகைக் கடை. வசந்த்லால் சேட்டின் அப்பா காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட அந்தக் கடை கிட்டத்தட்ட அறுபது வருஷங்களை நெருங்கிக்கொண்டிருக்கிறது. ராமன் அந்தக் கடையில் தான் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். வயது முப்பது. கல்யாணமாகாத பிரம்மச்சாரி. வயதான விதவைத் தாயார்,அண்ணன் கோவிந்தன், அண்ணி மீனா இவர்களுடன் பழையமாம்பலத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தான்.
ராமனுக்குச் சின்ன வயதிலிருந்தே படிப்பே ஏறவில்லை.அப்பாவும் அகால மரணமடைந்து விட்டார். கண்டித்து வளர்க்க ஆளில்லாமல் பத்தாம் வகுப்புடன் படிப்புக்கு 'பை' சொல்லிவிட்டு தீய சகவாசம், குடி, சீட்டாட்டம் என்று பொழுதுபோக்கிக்கொண்டு எதிர் காலத்தைப்பற்றிக் கவலைப்படாமல் இஷ்டம் போல் வாழ்ந்து வந்தான். வீட்டுக்கு அடங்காத பிள்ளையாகக் அவிழ்த்து விட்ட காளை போல் ஊர் சுற்றி கெட்ட பெயர் சம்பாத்¢த்துக்கொண்டிருந்தான்.
காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு அல்லவா? கண்ணெதிரே மகன் இவ்வாறு கெட்டுச் சீரழிந்து போவதை லட்சுமி அம்மாளின் தாயுள்ளத்தால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. .
லட்சுமி அம்மாளின் தம்பி சுந்தரம் சென்னையில் ஒரு பிரபல பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக இருந்தார்.நல்ல செல்வாக்கு உடைய மனிதர். ஊரின் பெரிய புள்ளிகளுடனும் உயர் பதவி வகித்தவர்களுடனும் அவருக்கு நெருங்கிய பழக்கம் உண்டு. அவரிடம் ராமனை அனுப்பினால் அவனுக்கு ஏதாவது வேலை வாங்கிக் கொடுத்து நல்ல வழிகாட்டிக் கவனித்துக் கொள்வார் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது.
அப்படியே செய்தார்கள். அவர்கள் நினைத்ததும் வீண் போகவில்லை. சுந்தரம் வசந்திடம் சிபாரிசு செய்து அவனுக்கு நகைக்கடையில் வேலையும் வாங்கிக்கொடுத்தார்.
ராமனும் திருந்தியவனாய் மிகவும் சந்தோஷமாக வாழ்க்கையை நடத்தி வந்தான். சம்பளம் சொற்பமாக இருந்த போதிலும் .தாராளமாகச் செலவு செய்தான். அம்மாவுக்கு விலையுயர்ந்த புடவைகளை வாங்கிக்கொடுத்தான். டாக்சி வைத்து அம்மாவை சென்னையைச் சுற்றியுள்ள §க்ஷத்திரங்களுக்கு அழைத்துச் சென்று காட்டினான். வீ£ட்டுக்கு பிரிட்ஜ், டி,வி ஆகியவற்றை வாங்கிப்போட்டான். வெளி மனிதர்களின் பார்வைக்கு அவன் தன் நிலைமைக்கு மீறி ஆடம்பரமாக இருப்பதாகத் தோன்றியது உண்மைதான்.ஆனால் அவன் அம்மாவிற்கோ ராமன் ஒரு உத்தம புத்திரனாக மாறிவிட்டதாக நினைப்பு!
கோபாலனுக்கு மட்டும் மனதில் ஏதோ சந்தேகமும் உறுத்தலும் இருந்துகொண்டே இருந்தன. வெள்ளைக்காரன் கம்பனியில் ஸ்டெனோவாக இருக்கும் அவனுக்கு அங்கு நல்ல் சம்பளம். அவனாலேயே குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியாமல் விழிபிதுங்கித் திணறியபோது, ஒரு நகைக் கடையில் சாதாரண சம்பளத்துக்கு வேலை பார்க்கும் தம்பியால் எப்படி இவ்வாறு 'தாம்தூமெ'ன்று செலவழிக்க முடிகிறது? இதில் ஏதோ மர்மம் இருப்பதாய் அவனுக்குப் பட்டது. ஒன்றிரண்டு முறை ஜாடை மாடையாகத் தம்பியிடம் கேட்டும் கூட அவன் திருப்திகரமான பதிலைத் தராமல் ஏதேதோ சொல்லி மழுப்பியது அவனுடைய சந்தேகங்களை ஊர்ஜிதம் செய்தது.
அடுத்த தை மாதம். கல்யாண சீசன். அது மாதிரி முக்கியமான நாட்களில் நகைக்கடைகளில் கூட்டம் நிரம்பி வழியும். நம்பிக்கைக்கும் நாணயத்திற்கும் பெயர் பெற்ற வசந்த் ஜுவல்லரியில் கேட்கவே வேண்டுமா?.
அன்று எதிர் பாராத அளவிற்குக் கூட்டம். கடை ஆட்கள் பம்பரமாய்ச் சுழன்று சுறுசுறுப்போடு இயங்கிக் கொண்டிருந்தார்கள்.
ராமன் தாலிகள் விற்கும் கவுன்டரில் சேல்ஸ்மன்.ஒரு வட நாட்டுக் குடும்பம் தாலி வாங்குவதற்காக வந்திருந்தது-- நாலைந்து ஆண்களும் ஆறேழு பெண்களும் இருந்தார்கள். ராமனுக்குத் தெரியும். இந்த மாதிரி ஆட்களை சுலபத்தில் திருப்திப்படுத்த முடியாது.பெண்கள் ஒவ்வொரு டிஸைன் தாலியாக எடுத்துப் போடச் சொன்னார்கள். அலமாரிகளே கிட்டத்தட்டக் காலி. அவைகளை ஆண்களிடம் காட்டி அவர்களுடைய யோசனையைக் கேட்டார்கள். ஒருவருக்குப் பிடித்தது மற்றவருக்குப் பிடிக்கவில்லை இப்படியாக வியாபாரம் இழுத்துக்கொண்டே போயிற்று. அவர்கள் நடந்துகொண்ட விதத்தைப் பார்த்தால் சீக்கிரத்தில் வியாபாரத்தை முடிப்பதாகத் தோன்றவில்லை மேஜையில் விதவிதமான தாலிகள் இறைந்து கிடந்தன. எல்லாவற்றையும் ஒப்பிட்டுப் பார்த்துத்தான் அவர்களுக்குப் பிடித்ததைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதால் அவைகளை எடுத்து அலமாரியில் வைக்கவும் அவர்கள் விடவில்லை.
ராமனுக்கு அலுப்புத் தட்டியது. சட்டென்று ஒரு நொடி சுதாரித்துக்கொண்டான். அவர்கள் தங்களுக்குள் தீவிர விவாதத்தில் ஈடுபட்டிருந்தபோது,அவன் மின்னல் வேகத்தில் கடைக்குள்ளே சென்று விட்டுத் திரும்பி வந்தான்.
அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு மனிதன் மட்டும் அவனைக் கவனித்துக் கொண்டிருந்தது ராமனுக்குத் தெரியாது. அந்த ஆள் மட்டும் தாலி செலக்ஷனில் பங்கேற்காமல் ஒரு மூலையில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது சற்று வித்தியாசமாகத்தான் இருந்தது. அவன் கைகளில் நிறையப் பைகளை வைத்திருந்தான். பார்த்தாலே அந்த வட நாட்டுக் கும்பலின் வீட்டின் வேலைக்காரனாக இருக்கலாம் என்று தோன்றியது. ஒரு வழியாக அவர்கள் தங்களுக்குப் பிடித்தமான தாலிகளை வாங்கிக்கொண்டு கிளம்பியபோதுதான் ராமனுக்கு நிம்மதிப் பெருமூச்சு வந்தது.
நிறைய வாடிக்கையாளர்கள் வரும்பொதெல்லாம் முதலாளி ஸ்டாக்கைச் சரி பார்ப்பது வழக்கம்.அன்றும் கடை மூடுவதற்கு முன்னால் நகைகளின் கையிருப்பை சரிபார்த்தபோது அவருக்கு ஒரு அதிர்ச்சி! நான்கு தாலிகள் குறைவாயிருந்தன. அவருக்குக் கையும் ஓடவில்லை .காலும் ஓடவில்லை.மனதில் பெரும் குழப்பம். ஆனாலும் ராமனை அவர் எள்ளளவும் சந்தேகிக்கவில்லை. காரணம் அவன் சுந்தரத்திற்கு உறவு. சுந்தரம் எந்த அப்பழுக்கும் இல்லாத கண்ணியமான பெரிய மனிதர்.
இருந்தாலும் உண்மையான நிலையை அறிய, ராமனிடம் துருவித் துருவி விசாரித்தார். எப்படித் திருட்டுப் போயிருக்கலாம் என்று பலவித யூகங்கள்; கடைசியில் அன்று கடையில் தாலி வாங்கியவர்களின் விலாசங்கள் பில் புத்தகத்திலிருந்து திரட்டப்பட்டன. வடநாட்டுக் குடும்பத்தினர் கும்பலாக வந்திருந்ததால் அவர்கள் மீது லேசாக சந்தேகம் படர்ந்தது,
முதலாளி வசந்த், ராமன், மற்றும் சில கடை ஊழியர்களுடன் முதலில்அந்த விலாசத்திற்கு விரைந்தனர். நடந்ததைச் சொன்னார்கள்.
குடும்பத் தலைவர் பதறிப் போனார். அவரும் ஒரு வியாபாரியானதால் வசந்தின் நிலைமை கண்டு இரக்கப்பட்டார். அதே சமயம் தங்கள் மீது இம்மியளவும் சந்தேகப் பட வேண்டாம் என்றும் தங்கள் குடும்பத்தில் யாருமே அந்த அளவுக்குக் கீழ்த்தரமாக நடக்கக் கூடியவர்கள் இல்லை என்றும் மன்றாடினார். வசந்திற்கும் அவர் கூறியதில் நியாயம் இருப்பதாப் பட்டது. அவர்கள் நடந்து கொண்ட விதம் கண்ணியமாகவும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டும் இருந்தது.
ஆனால் அங்கிருந்த வேலையாள் மட்டும் ராமனையே வைத்த கண் வாங்காமல் முறைத்துப்பார்த்துக் கொண்டிருந்தான். ஏனோ ராமன் அவன் பார்வையை தவிர்த்து வேறெங்கோ பார்த்துக்கொண்டிருந்தான்.
திருட்டு எப்படி நடந்திருக்கும்?-இதுதான் வசந்தின் மண்டையைக் குடைந்த கேள்வி.
அப்போது ராமன் அந்த வேலையாளை சுட்டிக் காட்டி அந்த ஆளைத் தான் சந்தேகப் படுவதாக வசந்தின் காதில் கிசுகிசுத்தான்.
வசந்த் அவனை அருகில் அழைத்தார்.எதிர்பாராதவிதமாகப் பொறி கலங்கும்படி பளாரென்று அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். ஒரு சின்ன விசாரனையே நடத்தினார். உரத்த குரலில் மிரட்டினார். கொஞ்சமும் இதை எதிர்பார்க்காத அந்த ஆள் பதறிப் போனான். அவர் கால்களில் தடாரென்று விழுந்து அழ ஆரம்பித்தான்.
அப்போது அந்தக் குடும்பத்தலைவர் குறுக்கிட்டுப் பேசினார்.
"அந்த ஆள் எங்கள் வீட்டு வேலையாள் கன்யாலால். எங்களுக்கு தூரத்து உறவு கூட. பாவம் பிறவியிலேயே ஊமை. ஆனால் நம்பிக்கைக்கும் நாணயத்திற்கும் அவனை யாரும் மிஞ்ச முடியாது.கை படு சுத்தம். இன்று அவன் கவுண்டருக்கு அருகில் கூட வராமல் தூரத்தில் தான் நின்றுகொண்டிருந்தான்.அவன் கண்டிப்பாக இந்தத் திருட்டுக்குக் காரணமாக இருக்க முடியாது என்பதை நான் திட்ட வட்டமாகச் சொல்ல முடியும். அதனால் எக்காரணம் கொண்டும் அவனைத் தயவு செய்து சந்தேகப்படாதீர்கள்." என்று கெஞ்சாத குறையாகக் கேட்டுக்கொண்டார்.
ஆனால் வசந்திற்கோ ராமன் சொன்னது உண்மையாயிருக்குமோ என்று சந்தேகம். அதனால்,விழிகளை உருட்டிக்கொண்டு மீண்டும் கண்யாலாலை நோக்கிக் கத்தினார்: "திருட்டுப் பயலே உண்மையைச் சொல்லி¢டு, நீதானே அந்தத் தாலிச் சரடுகளைத்திருடினாய்? அதையெல்லாம் எங்கெ ஒளிச்சு வச்சிருக்கே, மரியாதையாத் திருப்பிக் கொடுத்துட்டா, இத்தோட விட்டுடுவோம். இல்லைன்னா போலீசுலே கம்ப்ளைன்ட் பண்ண வேண்டி வரும். அப்போ உன் கதி என்ன ஆகும்னு உனக்கே தெரியும், ஜாக்கிரதை"
தன்மீது அபாண்டமாகப் பழி சுமத்தப்படுவதை எண்ணிக் கலங்கிய கன்யாலால் கண்ணீர் விட்டுப் புலம்பினான். ஜாடையால் கெஞ்சினான்.திருடவே இல்லை என்று சத்தியம் செய்து காட்டினான்.எல்லாருடைய காலிலும் மாறி மாறி சாஷ்டாங்கமாக விழுந்தான். திரும்பத்திரும்ப எல்லோரையும் கும்பிட்டு, தனக்கு எதுவுமே தெரியாது என்பதை ஜாடை முலம் அறிவித்தான்.அவனைப் பார்ப்பதற்கே பரிதாபமாயிருந்தது.
போலீசில் புகார் தரலாம் என்று ஒரு கடை ஊழியர் சொன்னபோது, ராமனுக்கு அதில் ஏனோ ஒப்புதல் இல்லை. அவன் முகத்தில் ஏதோ கவலை படர்ந்திருப்பதும் அவன் பதட்டத்தோடிருப்பதும் நன்றாகவே தெரிந்தது. அவன் வாயை மூடிக்கொண்டு சும்மா இருந்திருக்கலாம். இருந்தாலும் தன் பங்கிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்தலில் கன்யாலிடம், "டேய் உன் மீதுதான் எங்களுக்கெல்லாம் சந்தேகம், உண்மையைச் சொன்னால் பிழைத்தாய். இல்லாவிட்டால் நடக்கறதே வேறு" என்று மிரட்டிப்பார்த்தான்
அப்போதுதான் அந்த நாடகத்தின் எதிர்பாராத கிளைமாக்ஸ் அரங்கேறியது.
கண்யாலால் கோபத்துடனும் வெறியுடனும் ராமன் மேல் புலிபோலப் பாய்ந்தான். அவன் சட்டையைப் பிடித்துப் பயங்கரமாக உலுக்கினான். பேச முடியாவிட்டாலும் சைகை மூலமே தன் மனதில் தேங்கி இருந்தவற்றை வெளியிட்டான். கூடியிருந்தவர்களுக்கு அவன் கீழ்க்கண்டவாறு சொல்லத் துடிக்கிறான் என்பது புரிந்தது. ஒரு கைதேர்ந்த நடிகனைப் போல் தன் உணர்ச்சிகளைத் தத்ரூபமாக நடித்துக்க் காட்டி விளங்க வைத்தான்.
"அடே அயோக்கியா! என்னையா திருடன் என்கிறாய். நீ தான் அந்த நகைகளைத் திருடியவன் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். எந்தக் கோவிலிலும் சத்தியம் செய்யத் தயார். நீ பூனை போல் பதுங்கி கைகளில் தாலிகளை மறைத்துக்கொண்டு கடைக்குள் சென்றதை நான் என் கண்களாலேயே பார்த்துவிட்டேன். கடையினுள் சென்று, கணக்கு லெட்ஜர்களுக்கு நடுவில் அவசரமாக ஒளித்து வைத்ததும் எனக்கு நல்லாவே தெரியும். என் வாயாலே உன்னைக் காட்டிக் கொடுக்க வேண்டாம் என்று தான் பொறுமையா இருந்தேன். என்னை உண்மையைச் சொல்லும்படி நீயே உசுப்பிவிட்டுட்டே. நீ எடுக்கல்லேன்னு இந்த சாமி படத்துக்கு முன்னாடி சத்தியம் செய், பார்க்கலாம்"
ராமன் எதிர்பாராத இந்த பலத்த தாக்குதலால் நிலை குலைந்து சிலையனான். ஓன்றும் பதில் சொல்லத் தெரியாதவனாய்த் தவித்தது அவனைக் குற்றவாளி என்று காட்டிக்கொடுத்தது. எல்லாரும் கடைக்குப்போனார்கள். லெட்ஜர்களுக்கு நடுவில் தாலிகள் ஒளித்து வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. வசமாக மாட்டிக்கொண்ட ராமன் குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று. எத்தனை நாட்களாக அவன் இப்படி மற்றவர் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு இப்படித் திருடியிருக்கிறானோ என்ற கேள்வியும் எழுந்தது. அவன் மாமா சுந்தரத்துக்கு விஷயம் தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டது. " நன்றி கெட்ட அந்தப் பயலை போலீசில் ஒப்படைத்துவிடுங்கள். அதுதான் அவனுக்குச் சரியான் தண்டனை. என் முகத்திற்காகப் பார்க்க வேண்டாம்," என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார் சுந்தரம்.
சுந்தரத்தின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த விரும்பாததால் வசந்த்லால் அப்படிச் செய்யவில்லை . வேலையை விட்டு ராமனை உடனடியாக நீக்கியதோடு நின்றுவிட்டார்.
இன்னொரு சந்தோஷ சமாசாரம்! கன்யாலால் அந்த ஜுவல்லரியில் இரண்டாவது வாட்ச்மேனாக அமர்த்தப்பட்டார்.
லட்சுமி அம்மாள் கதறவில்லை, கண்ணீர்விடவில்லை. "அவன் ரொம்ப நாளாவே ஆடம்பரமா செலவு செஞ்சப்பவே என் மனசுக்குள்ளே லேசா பொறி தட்டிச்சு. பெரியவன் சொன்ன போதும் நான் நம்பலை. ஆனா திருட்டும் நம்பிக்கைத் துரோகமும் பண்றவனுக்கு கடைசியிலே இது தான் கதி. நன்றாக அனுபவிக்கட்டும்" என்று தனக்குத் தானே சமாதானம் செய்துகொண்டாள். அவள் பார்வையில் பெரிய மகன் கோவிந்தன் இப்போது சத்புத்திரனாகத் தெரிந்ததில் சற்றும் ஆச்சரியமில்லை.
e-mail: gurusubra@yahoo.com