| குரு. சுப்ரமணியன் (தமிழ்நாடு) குட்டிக் கதைகள்! 
  1. சாப்பாடு
  
 
 
 
 "அம்மா, நீங்க நேத்து செஞ்சது உங்களுக்கே நியாயமாப் படுதா" என்று ராப்பிச்சை 
  சொன்னபோது பத்மாவுக்குத் திக்கென்றது.
 
 "என்னப்பா செஞ்சேன் எனக்கு ஞாபமில்லையே?"
 
 "பிச்சைக்காரன் தானேன்னு ஊசிப்போன சாப்பாட்டை என் தலையிலே நேத்து கட்டிட்டீங்களே அதைத்தான் சொன்னேன்." என்றான் அவன்.
 
 "என்னப்பா இப்படிச் சொல்றே? என் வீட்டுக்காரருக்கும் அதே சாப்பாடுதானே 
  குடுத்தேன். அவர் 
  ஒண்ணுமே சொல்லலியே?"-பத்மா சொன்னாள்.
 
 "என்னம்மா இப்படிச் சொல்றீங்க? உங்க புருஷனும் நானும் ஒண்ணா?" என்று ஒரு போடு 
  போட்டான் ராப்பிச்சை
 
 2.கைராசி
 
 பூக்காரி அஞ்சலைடம் நான் பூ வாங்கிவிட்டுப் பணம் தரும்போதெல்லாம் அவள் ஒவ்வொரு 
  தடவையும்,"ஏம்மா அய்யா
  இல்லையா?"என்று கேட்பது வழக்கமாகப் போயிற்று.
 
 ஏன் இப்படி அடிக்கடி ஐயாவைப் பத்திவிசாரிக்கிறான்னு எனக்கு ஒரு சந்தேகம் 
  முளைத்தது. அவருக்கும் இவளூக்கும் என்ன தொடர்பு?
 
 ஆவலை அடக்க முடியாமல் ஒரு நாள் அவளிடம் கேட்டே விட்டேன்_-"ஒருநாள் ஐயா பூவுக்குப் 
  பணம் கொடுத்தாரும்மா. அன்னிக்கு என் 
  கிட்டே இருந்த பூ மொத்தமும் வித்துப்போயி எனக்கு நல்ல லாபம் கிடைச்சது. 
  அப்படிப்பட்ட நல்ல ராசிம்மா அய்யா கைக்கு.
  அதனாலேதான் அவர் இருந்தாஅவர் கையாலே பணத்தை வாங்கிக்கலாமேன்னுதான் கேட்டேன்." 
  என்று அஞ்சலை சொன்னபோது எனக்கு
  நிம்மதியாயிருந்தது.
 
 வியப்பாயிருந்தது..
 
 3.குழந்தைத் தொழிலாளி
 
 "என்னடி,சரசு, உன் மனசிலே பெரிய ராணின்னு நினைப்பா? ஆடி அசஞ்சு¢கிட்டு லேட்டா 
  வர்றியே? தூங்குமூஞ்சிக் கழுதை! பாத்த்திரம் 
  வண்டி வண்டியா சேர்ந்து கிடக்கு .அதையெல்லாம் சீக்கிரம் தேய்ச்சுப்போடு. 
  அழுக்குத் துணி ஒரு மூட்டை சேர்ந்து இருக்கு, 
  அதையெல்லாம் சுத்தமாத் தோய்ச்சுப் போடணும். வீடு, மாடியை பெருக்கிபளிச்னு 
  துடைச்சாகணும். மிஷினுக்குப் போய் மாவு
  அரைச்சுகிட்டு வரணும். கார்த்திக்கை ப்ளேஸ்கூல்லே விடணும். இதையெல்லாம் 
  முடிச்சாத்தான் நீ ஸ்கூலுக்குப் போக முடியும். 
  தெரியுதா?"
 
 எஜமானி மாலா மிரட்டலாகப் பேசியதில் அரண்டு போன சிறுமி சரசு மவுனமாகத் தலை 
  ஆட்டினாள்.
 
 "'மசமச'ன்னு இருக்காமே சுறுசுறுப்பா வேலைகளை சீக்கிரம் முடி. நான் லேடீஸ் கிளப்லே 
  பேசப்போகணும்."என்று மீண்டும் கண்டிப்புடன் 
  கட்ட¨ளையிட்டாள் மாலா.
 
 அவள் கணவர் சபேசன் ஆவலுடன் கேட்டார்_'மாலா, எதைப் பத்தி நீ பேசப்போரே?"
 
 "குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பைப்பத்தி."
 
 சபேசன் தனக்குள் சிரித்துக் கொண்டார்.
 
 4. லாப நஷ்டம்
 
 அடுத்த வீட்டு தென்னை மரத்திலிருந்து அடிக்கடி தேங்காய் ராஜன் வீட்டு 
  காம்பவுண்டிற்குள் விழுவதுண்டு.அவற்றை ராஜன் ரகசியமாக
  சேகரித்து வைத்துக் கொள்வார். தேங்காய் வாங்கும் செலவு மிச்சமாவதை எண்ணி சந்தோஷப் 
  படுவார். ஒரு நாள் தென்னைமட்டை 
  ஒன்று கார் மேல் விழுந்து காரில் நசுங்கல் விழுந்தது.உடனே கோபத்துடன் பக்கத்து 
  வீட்டுக்காரரிடம் நடந்ததைச் சொல்லி, கார்
  ரிப்பேருக்குப் பணம் கேட்டதோடு, தென்னை மரத்தையும் வெட்டித் தள்ளும்படி 
  கடுமையாகக் கத்தினார்
 
 
 5. சத்தம்
 
 அந்தப் பொது லைப்ரரியில் நிறையப் பேர் படித்துக் கொண்டிருந்தார்கள்.இரண்டு பேர் 
  மட்டும் உரக்கப் பேசியது மற்றவர்களுக்கு 
  இடைஞ்சலாயிருந்தது. அதைக்கண்ட நூலகக்காவலர் அவர்களை நெருங்கி, "சத்தம் போடாதே" 
  என்ற போர்டைச் சுட்டிக்காட்டி, அவர்கள் 
  பேச்சை நிறுத்தச் சொல்லிவிட்டு, தன் அறைக்குச் சென்றார்.பத்தே நிமிடங்களில் அந்த 
  அறையிலிருந்து பலத்த குறட்டைச் சத்தம் 
  கேட்டது. ஆவலுடன் ஒருவர் சென்று அந்த அறையில் எட்டிப்பார்த்த போது, நூலகக் காவலர் 
  மேஜை மேல் தலை வைத்து அயர்ந்து
  தூங்கிக்கொண்டிருந்தார்.
 
 6.திருட்டு
 
 மாமனாரும் மாமியாரும் வலசரவாக்கம் வீட்டைப் பூட்டிக்கொண்டு, திருவண்ணாமலை 
  தீபத்திற்கு சென்றிருந்தபோது. திருடர்கள் பூட்டை 
  உடைத்து, முப்பதாயிரம் ரொக்கப் பணத்தையும். ஐம்பது பவுன் நகைகளையும் கொள்ளை 
  அடித்துச் சென்றுவிட்டதை. மாப்பிள்ளை ரவி பேப்பரில் படித்தான். ."நன்றாக வேண்டும் 
  அவர்களுக்கு. நான் தீபாவளிக்கு ஒரு மோட்டார் பைக் கேட்டப்போ,"என் கையிலே 
  பணமேயில்லை மாப்பிள்ளை. நானே குடும்பச் செலவை சமாளிக்க முடியாமே திணறி 
  கிட்டிருக்கேன்னு மாமனார் பொய்
  சொன்னாரில்லையா, அதுக்கு இதுதான் தண்டனை." என்று நினைத்து சந்தோஷப்பட்டான் ரவி.
 
 7. மரணம்
 
 தீபாவளி நெருங்க நெருங்க சேகருக்கு தீபாவளி செலவுகளை எப்படி சமாளிப்பது என்ற 
  பிரச்னை மனதைக் குடைந்து கொண்டிருந்தது. 
  ஏற்கனவே ஊரெல்லாம் கடன். சம்பளத்தில் பிடிப்புகள் போக கைக்கு வரும் தொகை அரைமாத 
  குடும்பச்செலவுக்குக் கூட போதாது.
  தீபாவளியை சிக்கனமாகை கொண்டாட வேண்டும் என்றால் கூட குறைந்தது எட்டாயிரம் 
  ரூபாயாவது தேவைப்படும். அவன் இந்தக் 
  கவலையில் மூழ்கியிருக்கும் போது ஒரு நாள் காலை அவனுக்கு அந்தச்செய்தி வந்தது. 
  தாம்பரத்தில் அவன் சித்தப்பா ஹார்ட்
  அட்டாக்கில் மரணமடைந்து விட்ட செய்திதான் அது. "சித்தப்பா, ரொம்ப நன்றி. நல்ல 
  சமயத்தில் செத்து என்னைக் காப்பாற்றி 
  யிருக்கிறாய். இந்த வருஷம் எங்களுக்குத் தீபாவளி கிடையாது என்பதே எனக்கு ஒரு 
  சந்தோஷ சமாசாரம்" என்று துக்கத்தை மறந்து 
  ஆனந்தத்துடன் துள்ளிக் குதித்தான்.
 
 gurusubra@yahoo.com
 |