இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
யூன் 2007 இதழ் 90 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
சிறுகதை!
பூங்கொத்து கொடுத்த பெண்!

அ.முத்துலிங்கம்

பூங்கொத்து கொடுத்த பெண்! - அ.முத்துலிங்கம்நான் பாகிஸ்தானில் போய் இறங்கி இரண்டு மணி நேரம் முடிவதற்கிடையில் வேலை கேட்டு என்னிடம் ஐந்து விண்ணப்பங்கள் சேர்ந்துவிட்டன. நான் அப்பொழுது பணியில் சேரக்கூட இல்லை. என்னுடைய வேலையை பொறுப்பேற்பதற்கு இன்னும் 15 மணி நேரம் இருந்தது. ஆனால் விண்ணப்பங்கள் வரும் வேகம் குறையவில்லை. நான் விமான நிலையத்திலிருந்து பிடித்து வந்த வாடகைக்கார் சாரதியிலிருந்து, ஹொட்டல் சேவகர் வரை வேலைக்கு விண்ணப்பம் செய்தார்கள். இதில் அதிசயம் என்னவென்றால் இவர்கள் எல்லோரும் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த விண்ணப்பக் கடிதங்களையே கொடுத்தார்கள். என்ன வேலைக்கான விண்ணப்பம் என்று கேட்டால் எந்த வேலை என்றாலும் பரவாயில்லை என்றார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் காலையில் எழும்பி வீட்டிலிருந்து வெளிக்கிடும்போது ஒன்றிரண்டு விண்ணப்ப கடிதங்களை தயாரித்துக்கொண்டு புறப்படுவார்கள் போலும்.

பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவாரில்தான் எனக்கு பணி. நகரத்தின் எந்த மூலையில் பார்த்தாலும் அங்கே நடிகை
ஸ்ரீதேவியின் முகம் தெரிந்தது. சுவரிலே இடம் இருந்தால் அதிலே ஸ்ரீதேவியின் படமுள்ள சுவரொட்டியை காணலாம். மூன்று
சக்கரவண்டிகளின் பின் படுதாவிலும் ஸ்ரீதேவி சிரித்தபடி அசைந்து கொண்டிருப்பார். ஸ்ரீதேவியின் புகழ் உச்சக்கட்டத்தில் இருந்த காலம் அது. அவர் பாகிஸ்தானில் நடந்த தேர்தலில் அப்போது போட்டியிட்டிருந்தால் நிச்சயமாக வென்றிருப்பார். வடமேற்கு மாநில முதலமைச்சராகக்கூட ஆகியிருக்கலாம். யார் கண்டது?

நான் தங்கியிருந்த ஹொட்டலில் இருந்து வீடு வாடகைக்கு பார்க்கப் புறப்பட்டால் அதற்கும் நூற்றுக்கணக்கான தரகர்கள் இருந்தார்கள்.  ஹொட்டலுக்கு வந்து கூட்டிப்போய் வீடுகளைக் காட்டுவார்கள். ஒரு சுற்றுப் போய் திரும்பிவந்தால் இன்னொரு தரகர் வந்து முந்தியவர் காட்டிய அதே வீடுகளைக் காட்டுவார். பாகிஸ்தானில் வீடு பார்ப்பது பெரிய அலுப்பு தரும் காரியம். மழைக்காலம் ஆரம்பித்துவிட்டபடியால் வீட்டுக் கதவுகள் எல்லாம் உப்பிப்போய் இருந்தன. கதவுகளை தள்ளித் திறக்கமுடியாது; உதைத்துத்தான் திறக்கவேண்டும். வாசலில் இருக்கும் குழல் விளக்கை போட்டால் நீங்கள் வீட்டைப் பார்த்துவிட்டு திரும்பும்போதுதான் அது எரியத்
தொடங்கும்.

ஒரு வீட்டுக்கு போய்ப் பார்த்தபோது மேசையிலே கோப்பைகளில் உணவு பரிமாறி பாதி சாப்பிட்ட நிலையில் இருந்தன. மேசையின் நாலு கால்களும் தண்ணீர் ஊற்றிய நாலு டின்களில் ஊறியபடி நின்றன. அந்த உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆட்களைக்
காணமுடியவில்லை; அதைச் சாப்பிடமுடியாத எறும்புகளையும் காணமுடியவில்லை. போகப் போகத்தான் தெரிந்தது ஒரு வீட்டைக் காட்டும்போது இந்த தரகர்கள் வீட்டுப் பெண்களையும், குழந்தைகளையும் ஓர் அறையில் வைத்து பூட்டி விடுகிறார்கள் என்பது.  பிரதானமாக இளம் பெண்கள் கண்ணிலே படமாட்டார்கள். ஐந்து அறைகள் கொண்ட வீட்டைப் பார்த்தால் தரகர் நாலு அறைகளைத்தான் காட்டுவார். முழு வீட்டையும் பார்ப்பதென்பது முடியாத காரியம்.

முதல் வாரம் வீடு பார்த்ததில் எனக்கு ஒரு வீடும் அமையவில்லை ஆனால் தரகர்கள் கொடுத்த விண்ணப்பங்கள் நிறைய சேர்ந்திருந்தன. அதிலே ஒன்று ஸைராவுடையது. கைகளினால் எழுதிய பல விண்ணப்பங்களுக்கிடையே அவளுடையது நல்ல தாளில் அழகாக அச்சடிக்கப்பட்டிருந்தது. தகைமைகள் சரியாக இருந்தன. தேவையான அளவுக்கு அனுபவம் கொண்ட இளம் பெண். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படவர்களின் பட்டியலில் அவள் பெயரும் இருந்தது. நான் நினைத்தது சரி. அவள் வித்தியாசமானவளாகவே இருந்தாள்.
எல்லாப் பெண்களும் சாதரால் தலையை மூடி அடக்கவொடுக்கமாக வந்திருந்தார்கள். இவளுடைய தலை மூடப்படவில்லை. கேசம் அருவிபோல ஒரு பக்கமாக விழுந்து இடது கண்ணின் பாதியை மறைத்துக் கொண்டிருந்தது. சிரிப்பா இல்லையா என்பதுபோல ஒரு மெல்லிய நகை முகத்தைவிட்டு அகலாமல் இருந்தது. கேட்ட கேள்விகளுக்கு மேசையைப் பார்த்து அவள் பதில் சொல்லவில்லை. அவள் நடந்து வந்தபோதும், நீளமான வார் கைப்பை தோளிலே ஆட திரும்பிப் போனபோதும், தன்னம்பிக்கை தெரிந்தது. ஆனால் என்ன
பிரயோசனம், அவளுக்கு வேலை வாய்க்கவில்லை.

எங்கள் நிறுவனத்தில் எந்த வேலைக்கு விளம்பரம் செய்தாலும் குறைந்தது இருநூறு அல்லது முந்நூறு விண்ணப்பங்கள் வந்துசேரும்.  அவற்றை புரட்டிக்கொண்டு போனால் அதில் ஸைராவின் விண்ணப்பமும் இருக்கும். ஒரு விளம்பரத்தையும் அவள் தவற விடுவதில்லை.  நேர்காணலின்போது திருப்பி திருப்பி சந்தித்ததில் அவள் எனக்கு பழக்கமாகிவிட்டாள். தேர்வுக் குழுவினர் கேட்கப்போகும் கேள்விகள் அவளுக்கு மனப்பாடம். சரியான பதில்களையே கொடுப்பாள். ஆனால் தேர்வுக் குழுவினரை அவளால் வெற்றிகொள்ள முடியாமல்
போனது.

ஸைராவுக்கு வயது இருபது நடந்தது. அவளுக்கு பதினாறு வயதில் மணமாகி, பதினேழில் மணவிலக்காகி மீண்டும் மணமுடித்து அதுவும் விலக்கில் முடிந்திருந்தது. விடாமுயற்சி என்பதை அவளிடம்தான் பார்க்கலாம். தொலைபேசியில் என்னை அழைத்து ஏதாவது வேலை விளம்பரங்கள் வருகின்றனவா என்று விசாரிப்பதோடு அந்த விளம்பரங்களின் விபரங்களையும் கேட்பாள். ஆனால் ஒருமுறைகூட தேர்வுக் குழுவின் முடிவு என்னவென்றோ, தனக்கு ஏன் வேலை கிடைக்கவில்லை என்றோ எல்லை மீறி அவள் கேட்டது கிடையாது.

ஒரு நாள் எனக்கு கல்யாண அழைப்பிதழ் ஒன்று வந்தது. என்னை யாரும் திருமணவிழாவுக்கு அழைத்தது கிடையாது. ஒரு பாகிஸ்தான் மணவினை எப்படி நடக்கும் என்பதை பார்ப்பதிலும் எனக்கு ஆசையிருந்தது. வேறு சில நண்பர்களும் எங்கள் நிறுவனத்திலிருந்து அந்த மணவிழாவுக்கு போனதால் நானும் அவர்களுடன் சேர்ந்துகொண்டேன். இதுவே நான் போன முதல் இஸ்லாமியத் திருமணம் என்று சொல்லலாம். ஸைராவின் தங்கைதான் மணப்பெண். அவர்கள் வழக்கப்படி மணப்பெண்ணும் மணமகனும் சந்திக்கவே இல்லை. தனித் தனியாக குர்ஆனில் கையெழுத்து வைப்பது மட்டுமே பெரிய சடங்காக நடந்தது.

லாகூரில் இருந்து வரவழைக்கப்பட்ட முஜ்ரா நடனப் பெண்களின் ஆட்டம் ரகஸ்யமாக நடந்தது. வாசலில் துப்பாக்கிதாரிகள் இருவர் நின்று காவல் காத்தனர். பெஷாவாரில் இப்படியான நடனங்களுக்கு அனுமதியில்லை. நாலு பெண்கள், கணக்கற்ற சினிமாப்படங்களில்
காட்டியதுபோல சினிமா இசைக்கு நடனமாடினார்கள். ஆண்கள் ரூபா நோட்டுக்களை அள்ளி வீசுவதை முதன்முதலாக பார்த்தேன். சில துணிந்த பேர்வழிகள் நேரே நடந்துபோய் அந்த பெண்களின் மார்புக் கச்சைக்குள் பணத்தை செருகினார்கள். முஜ்ரா நடனம் ராஜஸ்தானில் பரம்பரை பரம்பரையாகப் பேணப்பட்ட நடனம் என்று சொன்னார்கள். ஆனால் நான் பார்த்தது ஹிந்தி சினிமாவைப் பார்த்து கற்றுக்கொண்டு ஆடிய பெண்களைத்தான்.

ஸைரா என்னை அழைத்து தன்னுடைய தாய், தம்பி, மணப்பெண் எல்லோருக்கும் அறிமுகம் செய்துவைத்தார். அவர்களுக்கெல்லாம்
என்னை ஏற்கனவே தெரிந்திருந்தது. என்னைப் பற்றி நிறைய ஸைரா சொல்லியிருப்பதாக சொன்னார்கள். விண்ணப்ப படிவங்கள் வரவர அவற்றை ஸைராவிடம் கொடுத்த பாவம் ஒன்றை மாத்திரம்தான் நான் செய்தேன். என்னில் அவ்வளவு மரியாதை வைக்கும் அளவுக்கு நான் ஒன்றும் செய்யவே இல்லை. ஆனால் நான் அதை மறுக்காமல் அவர்கள் தந்த மரியாதையை ஏற்றுக்கொண்டேன்.

ஒருநாள் மாலை ஐந்துமணி வாக்கில் விண்ணப்ப படிவம் ஒன்றைப் பெற அலுவலகத்துக்கு வந்த ஸைரா என்னைப் பார்க்கவேண்டும் என்று சொன்னாள். அந்த நாள் எனக்கு நல்லாக ஞாபகம் இருக்கிறது. சில மணி நேரம் முன்புதான் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டு நாங்கள் அரண்டுபோய் இருந்தோம். எங்கள் அலுவலகம் இருந்த நாலாவது மாடி ஒரு கணம் ஒரு பக்கம் சாய்ந்து, பிறகு நிமிர்ந்து மறுபக்கம் சாய்ந்து நேராக வந்து நின்றது. அரைவாசி அலுவலர்கள் பயந்துபோய் வீட்டுக்கு ஓடிவிட்டார்கள்.

இந்தப் பெண் வேறு ஒரு கிரகத்தில் இருந்து வந்தவள்போல கவலையே இல்லாமல் காணப்பட்டாள். எனக்கு முன்னால் இருந்த
நாற்காலியில் அமர்ந்துகொண்டு விண்ணப்ப படிவம் நிரப்புவதுபற்றி சில கேள்விகள் கேட்டாள். நானும் பதில் தந்தேன். சிறிது நேரமாக ஒரு சத்தமும் வராததால் நிமிர்ந்து பார்த்த நான் திகைத்துவிட்டேன். அவள் கண்களில் இருந்து கண்ணீர் பெருகிக்கொண்டு இருந்தது. உதடுகள் மேலும் கீழும் அசைந்தனவே ஒழிய ஒரு சிறு சத்தம்கூட வெளிப்படவில்லை. அவள் அடக்க அடக்க கண்ணீர் நிற்காமல்
கொட்டியது. நான் அதிர்ந்துபோய் 'என்ன, என்ன?' என்றேன். அவள் பேச முயன்றாள் ஆனால் முடியவில்லை. வார்த்தைகள்
ஒவ்வொன்றாக வெளியே வர அவள் விழுங்கிக் கொண்டிருந்தாள்.

'எனக்கு ஏன் வேலை கிடைக்கவில்லை என்பது தெரியும்' என்றாள்.

'ஏன்?'

'நான் இப்படி உடுத்துவது ஒருவருக்கும் பிடிக்காது. தலையை முக்காடிட்டு வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இரண்டு
விவாகரத்து செய்தவள் என்பது அடுத்த காரணம். ஆனால் முக்கியமானது என்னுடைய மகனை நான் கிறிஸ்தவ பள்ளிக்கூடத்துக்கு
அனுப்புவது.'

'உங்களுக்கு ஒரு மகன் இருக்கிறானா?'

'ஐந்து வயது. முதல் கணவருக்கு பிறந்தவன். என்னுடைய சுயவிபரக் குறிப்புகளை படிப்பவர் நீங்கள் ஒருவர்தான்.
தேர்வுக்குழுவில் உள்ள மற்றவர்களுக்கு அதில் இல்லாத விபரங்கள் நிறையத் தெரியும்.'

எங்கள் நிறுவனத்தின் எல்லா விளம்பரங்களுக்கும் அவள் சளைக்காமல் விண்ணப்பித்தாள். அவள் வாழ்க்கையின் குறிக்கோள் எங்கள் நிறுவனத்தில் ஏதாவது ஒரு வேலையில் சேர்வது என்பது போலவே செயல்பட்டாள். ஒரு முறை தலைமைச் சாரதி வேலைக்கு விளம்பரம் செய்தபோது அதற்கும் விண்ணப்பம் அனுப்பினாள். இதனிலும் பார்க்க குறைந்த தகைமைகள் கொண்ட வேலை எங்கள் நிறுவனத்தில் கிடையாது. கடைநிலையான இந்த வேலையை செய்வதற்கு மூளை அடைவு 150 தேவையாக இருக்காது. அதற்கும் இவள் விண்ணப்பம் அனுப்பினாள். அந்த எளிமையான வேலைகூட அவளுடைய கையைவிட்டுப் போய்விட்டது. நாலு வருட முடிவில் நான்
பெஷாவாரை விடும்வரைக்கும் அவள் விண்ணப்பம் அனுப்பிக்கொண்டே இருந்தாள்.

பெஷாவாரில் என் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசித்தவர் பெயர் அஹமத். பெரிய வங்கி ஒன்றில் மேலாளராக வேலை பார்த்தார்.
அருமையான நண்பர். எந்த விதமான காலநிலையிலும் அதிகாலையில் வாத்து சுடப்போய்விட்டுத்தான் அலுவலகம் செல்வார். நான் விடைபெறுவதற்காக அவரிடம் சென்றபோது எலும்பு நொருங்குவதுபோல கட்டிப்பிடித்து விடைகொடுத்தார். நான் என்னுடைய வீட்டிலே சில சாமான்களை விட்டுவிட்டு புறப்படுவாதாக இருந்தேன். அவர் அவற்றை எனக்கு அனுப்பிவைப்பதாக உறுதி கூறியிருந்தார். அமெரிக்கா வந்து சேர்ந்ததும் அஹமத்தை தொலைபேசியில் அழைத்தேன். அவர் என்னைப் பேசவிடவில்லை. எடுத்தவுடன் 'உங்களுக்கு
ஒரு பூங்கொத்து பரிசு வந்திருக்கிறது' என்றார். 'பூங்கொத்தா, எனக்கு யார் அனுப்புவார்கள்?' என்றேன். 'நேற்று ஒரு பெண் வந்தாள்.
இந்தப் பூங்கொத்தை தந்துவிட்டு போனாள். அவளுடைய பெயர் ஸைரா. மிக அழகான பெண்' என்றார்.

'பூங்கொத்தில் என்ன என்ன மலர்கள் இருக்கின்றன?' என்றேன்

'கார்னேசன் பூக்கள் மட்டுமே.'

'என்ன நிறம்?'

அவர் 'மென்சிவப்பு' என்றார்.

பூக்கள் அகராதியின்படி மென்சிவப்பு கார்னேசன் மலர்களுக்கு 'உன்னை என்றும் மறக்கமாட்டேன்' என்று அர்த்தம். ஆண்கள் பெண்களுக்கு பூங்கொத்து அனுப்புவது வழக்கம். நான் படித்த நாவல்களிலோ, பார்த்த சினிமாக்களிலோ ஒரு பெண் ஆணுக்கு பூங்கொத்து அனுப்பிய சம்பவம் கிடையாது. கடைசிவரை ஒரு விநோதமான பெண்ணாகவே ஸைரா இருந்தாள். ஒருவர் நாட்டை விட்டுப் போகும் கடைசி நாளில் ஒரு பெண் ஆணுக்கு பரிசு கொடுத்தால் அது நிச்சயமாக எதையாவது எதிர்பார்த்து இருக்கமுடியாது.

நண்பர் அழகான பெண் என்றார். அது தவறு, அவள் பேரழகி. அதிலே துயரம் என்னவென்றால் அவளுக்கு அது தெரியாது. நான்
பாகிஸ்தானில் பார்த்த பெண்களிலே அவளைப் போன்ற ஓர் அழகியை வேறெங்கும் பார்த்ததில்லை. நாட்டை விட்டுப் போகும்போதாவது அவளுக்கு வேலை கிடைக்காததன் உண்மையான காரணத்தை நான் சொல்லியிருக்கலாமே என்று பட்டது.

என் நண்பர் அஹமத் 'மூச்சை நிறுத்தும் அழகு' என்று அடிக்கடி கூறுவார். அது இதுதான். எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும்
அவள் அழகாகவே தென்படுவாள். பைபிளில் வரும் சொலமான் அரசனின் மாளிகையில் பளிங்குத்தரை போட்டிருந்தது. ராணி ஷீபா அரசனைப் பார்க்கவந்தபோது தண்ணீர் என்று நினைத்து தன் ஆடையை சிறிது தூக்கி நடந்தாளம். அவள் முகத்தைக் காண முன்னரே அவள் பாதங்களைக் கண்டு அரசன் மோகித்தான் என்று கதையுண்டு. ஸைரா என்னைக் காண முதலில் வந்தபோது காலுக்கு மேல் கால் போட்டபடி உட்கார்ந்திருந்தாள். பாதிக்கால் தெரியும் செருப்பை அவள் அணிந்திருந்தாள். ஒரு பாதம் ஒளிவீசுவதை அன்றுதான் நான் கண்டேன். அவளுக்கு வேலை கிடைக்காததற்கு அவளுடைய பேரழகுதான் காரணம் என்பதை எப்படி நான் சொல்வேன். அவளுடைய அழகை ஒரு பெண் உடம்பு தாங்கமுடியாது. அவளுடன் வேலை பார்ப்பவர்களால் தாங்க முடியாது. அலுவலகமே தாங்க முடியாது.

நீண்ட காலத்துக்கு பிறகு அரபு தெரிந்த ஒரு நண்பர் ஸைரா என்றால் 'சிரிப்பு அகலாதவள்' என்று ஒரு பொருள் இருப்பதாகச் சொன்னார்.  அவள் பூக்களை எடுத்துக்கொண்டு என்னை பார்க்க வந்தபோது நிச்சயம் அவள் உதட்டில் மாறாத புன்னகை இருந்திருக்கும். அப்போது மணி ஏழரை என்று அஹமத் சொன்னதாக ஞாபகம். நான் அட்லாண்டிக் சமுத்திரத்துக்கு மேல் நியூயோர்க்கை நோக்கிச் சென்ற விமானத்தில் 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தேன்.


amuttu@gmail.com

© காப்புரிமை 2000-2007 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner