| 
கிறிஸ்துமஸ் பரிசு!
 - ஆல்பர்ட், விஸ்கான்சின், அமெரிக்கா -
 
 
  அங்கிங்கெனாதபடி எங்கும் அஞ்சலட்டைகள், அஞ்சலுறைகள், கிறிஸ்மஸ் 
வாழ்த்தட்டைகள் என்று நிரம்பிக் கிடந்த குவியலுக்கு நடுவே சகாயம்
உட்கார்ந்திருந்தான். ஒவ்வொன்றாக எடுத்து முகவரியைப் படிப்பதும், அந்த உறையைக் 
கிழித்து உருப்படியான முகவரி இருக்கிறதா என்று கண்கள் 
துழாவுவதும், இல்லையென்றால் உதட்டைப் பிதுக்குவதும், இருந்தால் உதடு உவப்பான 
ஒரு புன்னகையை விடுவிப்பதுமாக நேரம் நகர்ந்துகொண்டிருந்தது.
 
 நகரின் பிரதான அஞ்சல் பிரிப்பக அலுவலகத்தில் சகாயத்துக்கு வேலை. சகாய ராஜ் 
முழுப்பெயர். அவனுக்கு சகாயம் என்று அவன் பெற்றோர் பெயர் 
வைத்தாலும் வைத்தார்கள். எதாவது உதவியா? நம்ப சகாயத்துக்கிட்ட 
கேளுங்கம்பாங்க. இங்க இருந்த லெட்ஜரைக் காணோமே, யாராவது பாத்தீங்களா?
 "ஸார், சகாயத்தைக் கேளுங்க. தேடிக்கண்டுபிடிச்சு கொண்டுவந்து சேக்க நம்ம 
சகாயத்தை விட்டா யாரு இருக்கா? இப்படி அஞ்சல் நிலையத்தில் 
சகாயம்..சகாயம்...சகலமும் சகாயம்தான்!
 
 வாப்பா, ஒரு சிங்கிள் "டீ" ஊத்திக்கிட்டு வருவோம் என்று அந்தோணி சகாயத்தின் 
அறைக்குள் நுழைந்தார்.
 
 "அட, நீங்க வேற மனுசனுக்கு அதுக்கெல்லாம் நேரம் எங்க இருக்குண்ணே? நீங்க 
போய்ட்டு வாங்க" என்றான் சகாயம்.
 
 "என்னமோ, டீ குடிச்சுட்டு வர்ற நேரத்துல இதெல்லாம் முடிச்சு அனுப்பப்போற 
மாதிரி சொல்ற, அடுத்த கிறிஸ்மசுக்கு கூட நீ இதெல்லாம் 
அட்ரஸ்காரங்க கிட்ட சேப்பியான்னு எனக்குச் சந்தேகமா இருக்கு. சரி, சரி 
வா.. போயிட்டு சுருக்கா வந்துரலாம்" என்று அந்தோணி விடாப்பிடியாக 
சகாயத்தை இழுத்துப்போவதிலேயே இருந்தார்.
 
 "சரிண்ணே, இதை மட்டும்....இங்க பாருங்கண்ணே.. டு அட்ரசில் "எல்லாம் வல்ல 
கடவுள்"ன்னு போட்டு அனுப்பீருக்கிறதை. இப்படியெல்லாம் அனுப்பி 
நம்மைச் சோதிக்கனுமாண்ணே?!
 
 "ஸ்டாம்பும் ஒட்டல, ஒண்ணும் ஒட்டல தூக்கி *டி.எல்.ஒ* வுல போடுவியா, அதப்போய் 
ஆராச்சி பண்ணிகிட்டு" என்று அந்தோணி சகாயத்தைக் 
கெளப்புவதில் குறியாக இருந்தார்.
 
 "கடவுளுக்கு என்னதான் கோரிக்கை போகுதுன்னு பாப்பமே..."
 
 "யாரோ ஒரு அரைக் கிறுக்கு அனுப்பியதைப் போய் படிச்சு டயத்தை வேஸ்ட் பண்ணீட்டு 
இருக்கியே,சகாயம். டீயை ஊத்தீட்டு வந்து அப்புறமா அந்த 
கோரிக்கையை பரிசீலனை பண்ணு" என்று அந்தோணி கருமமே கண்ணாயிருந்தார்.
 
 "அண்ணே, ஒரு நிமிசம், இந்தக் கடிதத்தை படிக்கிறேன். பாவம்ண்ணே...இந்த 
பாட்டிக்கு நாம எதாவது செய்யணும்ண்ணே. படிக்கிறேன். கேளுங்கண்ணே!"
 
 "சகாயம், ஆரம்பிச்சுட்டியாப்பா? உன்னைக் கூப்புட வந்தேம்பாரு, என்னச் 
சொல்லணும்...சரி..சரி படி" என்று அந்தோணி சுவாரசியமின்றிக் கேட்கத் 
தயாரானார்.
 
 "என்னினிய கடவுளுக்கு, தோத்திரம்.
 
 எனக்கு வயது 97 ஆகியும் உங்களை வந்தடையாமல் அரசு கொடுக்கும் முதியோர் 
உதவித் தொகையில் வாய், வயிற்றைக் கழுவி வருபவள் நான் 
என்பது நீங்கள் அறியாதது அல்ல. எனக்கென்று எந்த உறவும் இல்லை, உங்களைத் 
தவிர. வரும் கிறிஸ்மசுக்கு என் அந்தக் கால சினேகிதிகள் 
இருவரை விருந்து சாப்பிட பக்கத்து நகரத்திலிருந்து வரச் சொல்லிவிட்டேன். 
இதெல்லாம் இந்த வயதில் தேவையா? என்று நீங்கள் கூட நினைக்கலாம்.
 
 அந்த இருவருக்கும் என்னைபோலவே உறவு என்று சொல்லிக்கொள்ள யாருமில்லை? 
அவர்களோடு நான் கொண்ட நட்பை நினைவு படுத்தி இருவரும் 
கடந்த வருடம்தான் என்னை தொடர்புகொண்டார்கள். அப்போதே அவர்களிடம் அடுத்த 
வருடம் கிறிஸ்மசுக்கு என் வீட்டில் விருந்து வைப்பதாகச் 
சொல்லிவிட்டேன். அவர்களும் சரி என்று சொல்லிவிட்டார்கள்.
 
 அப்போதிலிருந்தே மாசாமாசம் என் பென்சன் தொகையிலிருந்து ரெண்டும் அஞ்சுமாக 300 
ரூபாய் சேர்த்து சுருக்குப் பையில் போட்டு பத்திரமாக 
வைத்திருந்தேன். எப்படியோ களவு போய்விட்டது. அதிலிருந்து எனக்கு தாங்க 
முடியாத வருத்தமாக உள்ளது. அடுத்தவாரம் கிறிஸ்மஸ். என் அடுத்த 
பென்சன் கூட ஜனவரி மாதம் தான்!
 
 என் தோழிகளை விருந்துக்கு வரச் சொல்லிவிட்டு இப்படியாகிவிட்டதே என்று 
பெருங்கவலையாக இருக்கிறது. என், அன்பான கடவுளே எனக்கு 
நீங்கள்தான் உதவி செய்யவேண்டும். உங்களை விட்டால் எனக்கு யாருமில்லை. 
எப்படியும் உதவி செய்வீர்கள், என்ற நம்பிக்கையோடு இந்தக் 
கடிதத்தை எழுதுகிறேன். என் ஆண்டவரே, இயேசு கிறிஸ்துவே உம்மையே நம்பியிருக்கும் 
மேரி.
 
 "சிறுகச் சிறுகச் சேர்த்து ஒரு துணிமணிகூட தனக்கு வாங்க ஆசைப்படாமல் தன் 
தோழியருக்காக விருந்து கொடுக்க முடியாமல் போய்விட்டதே என்ற 
இந்தப் பாட்டிக்கு நாம எதாச்சும் செய்யணும்ண்ணே" என்றான் சகாயம் 
அந்தோணியிடம்.
 
 "பாவமாத்தான் இருக்கு. என்ன செய்யலாம்? சொல்லு?" என்றார் அந்தோணி.
 
 "அண்ணே இந்தப் பாட்டிக்காக இன்னைக்கு நம்ப "டீ"க்காசை தியாகம் செய்யலாம்ண்ணே!" 
என்ற சகாயம், ஒரு கவரை எடுத்து தன்னிடமிருந்த பத்து 
ரூபாயை அந்தக் கவரில் போட அந்தோணியும் பத்து ரூபாய் போட்டார். மளமளவென்று, 
அந்த மேரிப் பாட்டியின் கடிதத்தை நகலெடுத்து நோட்டீஸ் 
போர்டில் ஒட்டி நன்கொடையளிப்பவர்கள் அளிக்கலாம் என்று ஒரு உறையையும் அருகில் 
தொங்கவிட்டான், சகாயம்.
 
 அடுத்த நாள் உறையை எடுத்து சகாயமும் அந்தோணியும் எண்ணிப்பார்த்தார்கள். 272 
ரூபாய் இருந்தது. மறுபடியும் ஒரு சிறு வசூல் நடத்திச் 
சேர்த்ததில் 287 ரூபாயானது. சகாயம் தன் பையில் அகப்பட்ட மூன்று ரூபாயையும் 
போட்டு 290 ரூபாய் ஆக்கினான். இன்னும் ஒரு பத்து ரூபாய் 
குறையுதேண்ணே, என்றான் சகாயம். அட, மேரிக் கிழவிக்கு இதுவே போதும்ப்பா. 
அதுகிட்ட இதச் சேக்குற வழியைப் பாரு என்று அந்தோணி சொல்ல, 
அரைமனதோடு சகாயம் அந்தப் பணத்தை உறையிலிட்டு ஒரு கிறிஸ்மஸ் வாழ்த்தட்டை 
ஒன்றையும் வைத்து ஒட்டினான்.
 
 மேரி பாட்டியின் முகவரிக்கு டெலிவரி செய்யும் தபாலகாரர் அப்துல்லாவிடம் 
கொடுத்து விசயத்தைச் சொல்லி நேரில் சேர்த்துவிடும்படி 
கொடுத்துவிட்டான். எதோ, இந்தக் கிறிஸ்மசுக்கு ஒரு உருப்படியான கிறிஸ்துமஸ் 
பரிசு கொடுத்த மகிழ்ச்சி சகாயத்திடம் தென்பட்டது.
 
 ஆயிற்று. கிறிஸ்மஸ் வந்து முடிந்தும் போனது.
 
 வழக்கம்போல சகாயம் முகவரி சரியில்லாத கடிதங்களைப் பார்த்துகொண்டே 
வந்தவனுக்கு அந்தக் கடிதம் யாரிடமிருந்து வந்தது என்று 
தெரிந்துவிடவே, அந்தோணி அண்ணே, மாரிமுத்து, அருணாசலம், இஸ்மாயில் இங்க வாங்க 
என்று உற்சாகமாகக் கூப்பிட்டான். நாம மேரிப்பாட்டிக்கு 
அனுப்பியதற்கு நன்றி தெரிவிச்சு மடல் வந்திருக்கு..வாஙக...வாங்க.. 
எல்லோரும் வாங்க என்று சகாயம் உற்சாகம் பொங்க கூப்பிட்டான்.
 
 சகாக்கள் புடை சூழ கடவுள் என்று முகவரியிட்ட மேரியின் கடித உறையைக் கிழித்து 
உள்ளிருந்த கடிதத்தைப் படிக்கத் துவங்கினான் சகாயம்!
 
 என்னினிய இறைவா!
 
 நன்றி! இந்த மூன்றெழுத்து போதாது நீங்கள் செய்த உதவிக்கு. நீங்கள் அன்போடு 
அனுப்பிவைத்த ரூபாயில் என் தோழிகளுக்கு விருந்து வைத்தேன். 
அதுமட்டுமா, அந்த விருந்துக்கு உங்களின் பிரதிநிதியாக இன்னொரு விருந்தாளியும் 
வந்திருந்தது, எங்களை மிகுந்த பரவசப்படுத்தியது. எங்கள் 
பங்குத்தந்தை அருட்திரு.பிலிப் அடிகளார் இந்த ஏழையின் இல்லத்துக்கு வந்து 
விருந்துண்டு ஆசீர்வதித்ததை நீங்கள் ஆசீர் வதித்ததாகவே கருதுகிறேன்.
 
 இந்த கிறிஸ்மசுக்கு நீங்கள் எனக்குத்தந்த பரிசுக்காக மீண்டும் உங்களுக்கு 
என்னினிய நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன்.
 
 கடிதத்தை முடிக்கும் முன் உங்களிடம் ஒன்றைச் சொல்லிவிட விரும்புகிறேன். 
நீங்கள் எனக்கு அனுப்பிய ரூபாய் 300ல் 10 ரூபாய் குறைந்தது. அது 
வேறொன்றுமில்லை. அஞ்சல் அலுவலகத்தில் இப்படித் திருடுவதற்கென்றே ஒரு 
கூட்டம் இருக்கிறது. அது அவர்களின் கைவரிசை என்பது என்
 எண்ணம்.
 
 இப்படிக்கு
 நன்றியுள்ள
 மேரி.
 
 சகாயம் உட்பட எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
 
 albertgi@gmail.com
 |