| தண்டணைகளின் மகிழ்வில் 
  - திலகபாமா - 
   தாலிகள் விதவிதமானவை. எல்லாரும் நம்பிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த ஆண்கள் 
  தூக்கிப் பிடித்த சாதியத்திற்கேற்ப தாலிகள் உருவாயிருக்கிறதென்று. இல்லை இல்லை . 
  கொல்லன் கை பிடித்து நெருப்பில் வெந்து அச்சுப் பதிக்கப் படுவதல்ல தாலிகள். 
  பெண்ணின் 
  எண்ணத்தில் கனலாகி , நினைவில் விழுந்திருக்கும் வாழ்க்கையின் அச்சுப் பதியலாகி 
  ஆளுக்கொரு தினுசாய் கழுத்தில் கிடக்கின்றன. 
 தாலிகள் எல்லாப் பெண்கள் கழுத்திலேயும் ஏதாவது ஒரு ரூபத்தில் கிடக்கின்றன. 
  கணவர்களால் பூட்டப் பட்டிருக்கின்றன. அவர்கள் 
  தேடுகின்ற நேரம் மட்டும் பூக்களாக உயிர்த்திருக்கச் செய்து விட்டு மிச்ச 
  நேரங்களில் கல்லாக உறைந்து விட வரம் தந்ததாய் பெருமை 
  பேசிக் கொண்டிருந்தன. கல்லாக இருந்து இருந்து இறுகிப் போன மனம் தேடுகின்ற நேரம் 
  அல்லது தொடுகின்ற நேரத்தில் பூத்து விடச் 
  சாத்தியமற்று இறுக்கத்தின் வலியை உணரட்டும் என்று மகரந்தங்களை பாறையாகவே வைத்து 
  பூவிதழ்களால் சூடித் தருகின்றன. தான் 
  நினைத்த வாசம் வீசுவதாக மகரந்தங்கள் மூடிக் கிடந்த போதும் உரத்து பெருமை பேசித் 
  திரிகின்றன.
 
 எப்பவாவது வாய்க்குமா? என் கனவு பொழுது போல, அதில் நான் விரும்பும் என் காதலன், 
  பூவாக்கப் பட்டான் என் தொடுகையில், 
  என்னோடு கூந்தலில் எப்பவும் இருக்கின்றான் மாலை நேரத்து பெண் கூந்தல் மலர் 
  தாங்குவது என் அடையாளத்திலா? நான்
  விரும்புகின்றபோது அவன் ஆணாகி என் காதலனுமாகினான், மீண்டுமொரு பொழுதில் பூவாகி 
  என் கூந்தலிலேகினான்.அவனென் கழுத்தில் 
  தாலி பூட்ட முடியா காதலனுமாகினான்.
 
 கழுத்தில் இல்லாத தாலி பற்றி எனக்குள் ஏன் இவ்வளவு நெடிய சிந்தனைகள். யோசித்தபடி 
  சிரித்துக் கொள்கின்றாள்.மடிப்புக் கலையாத
  அந்த மேலாடையின் மேல் கல்லூரி காலங்களில் ஆடிய நீள சங்கிலி நினைவுக்கு 
  வருகின்றது. அப்பவும் அவளைப் பார்த்தவுடன் அந்தச் 
  சங்கிலி பற்றிப் பேசுபவர்களுக்கு அவரவர்கள் விரும்பும் பதில் தந்தாள். ஆம் 
  எதிர்படும் ஆசிரியை ஒரு நாள் கேள்வி கேட்கின்றார். அழகா 
  வித்தியாசமா இருக்கே இந்த டாலர். எங்க செய்தது.
 
 செய்ததிலே ஒன்றும் பெரிய விசயமில்லை. அந்த வடிவத்தை வரைந்து கொடுத்தது என் அம்மா. 
  இன்னொன்று இது போல் கண்டிப்பாக 
  இருக்காது.
 
 ஆசிரியை யோசித்தபடி சிரிப்பை வீசி விட்டு நகருகின்றார். அவருக்குள் இவள் நிஜமாகவே 
  பணிவாக உண்மைத் தகவலைத் 
  தந்திருக்கிறாளா இல்லை கிண்டலடிக்கிறாளா?
 
 எதிரே கண்டதும் ஏன் பெண்களூக்கு ஆபரணங்கள் தான் பட்டுத் தொலைக்கின்றது. இன்னமும் 
  அதைத் தாண்டிய என் அறிவும் 
  ஆளுமையும் காணத் தர முடியாததாக நான் வைத்திருக்கிறேனா. இல்லை கண் முன்னே அது 
  தெரிந்தாலும் இதுவரை அதன் சுயத்தை 
  தன் வழியில் அனுபவித்திராதவர்களுக்கு அது உணர்வாகிடவே போவதில்லையோ , சந்தனக் 
  காட்டை உணர்ந்து விடாத விறகு 
  வெட்டியாய்
 
 குறை சொல்லவும் மனமின்றி அவர்கள் எதிர்பார்த்த பதிலும் தரத் தயாராகவின்றி 
  சங்கிலிக்குள் தன் தாயின் ஆளூமைத் திறனை 
  அழுத்திச் சொன்னதை புரிந்து கொள்ள முடியா கேள்விகளூடவே இதோ இன்னும் நகலுகின்றாள்.
 
 திருமணமாகி 15 வருடங்கள் கழித்து மீண்டும் அதே கல்லூரிக்குள் சிறப்புப் 
  பேச்சாளராக அழைக்கப் பட்டு வருகை தந்திருக்கின்றாள். 
  கல்லூரி தன் முகங்களில் புதிய சாயங்களை பூசிக் கொண்டிருந்த போதும் அதன் அதே 
  ஆத்மாவை உலவ விட்டபடி இருந்ததை உள்ளே 
  நுழைந்த சில நிமிடங்களில் மரம்பட்டு வீசிய காற்றை நுகர்ந்த மாத்திரத்திலேயே 
  உணர்ந்து விடுகின்றாள். அது சஞ்சீவினிக் காற்று 
  போலும் அவளை மெல்ல தூக்கிக் கொண்டு போய் இளமைக் காலத்திற்குள் இறக்கி 
  விட்டுவிடுகின்றது.
 
 இமைக் கால உடல் தாங்கியவளாய் கற்பனை மிதப்பில் அரங்கத்தினுள் நுழைகின்றாள். 
  வாசலில் சந்தனம் குங்குமம் , பூக்கள் 
  கற்கண்டுகள் வரவேற்கின்றன. அதை விட கூடுதலாக பன்னீர் செம்போட நின்ற 
  மாணவிக்களுக்கிடையில் அவளையும் காண்கிறாள்.நலம்
  தானா? சிரிப்பினில் அவளையே அவள் விசாரித்தபடி உள்ளே புகுகின்றாள்.
 
 கண்களால் பேசிக் கொள்ளும் மாணவிகள் வண்ணங்களால் வெளிப்படுத்திக் கொள்ளும் உடைகள். 
  ஒவ்வொரு முகத்திற்குப் பின்னும்
  இன்னுமொரு அழகிய ஆளுமைகள் நகர்வதை ரசித்தபடி நகர்ந்தேன். அரங்கில் இருந்தவர்களோடு 
  வணக்கம் சொல்லி மேடையில் 
  அமர்ந்து விட வரவேற்புரை துவங்குகின்றது.மேடையில் மின்விசிறி ஏற்கனவே இருந்த 
  மார்கழியை வெயிலும் தொலைக்க முடியாது 
  சேர்த்துக் கொண்டு சுழல விரல் நுனியில் குளிர் உறைகின்றது. அருகில் இருந்த 
  ஆசிரியையிடம் மின்விசிறியை நிறுத்திக் கொள்ளலாமே 
  இரகசியக் குரலில் கேட்கின்றேன். ஏன் குளிருதா?
 
 ஆம்
 
 “உடம்பில் சக்தி இல்லையென்று அர்த்தம் எனக்கெல்லாம் வியர்க்கின்றது”
 
 தன்னை மட்டுமே முன்னிறுத்தி பதில் பேசித் தொலைக்கும் கூட்டம். எதையும் 
  எதிர்பார்க்காது போர்த்திய பொன்னாடையை விரித்து 
  விரல் நுனிகளை மூடிக் கொள்கின்றேன் மெல்லிய சிரிப்போடு. பெண்ணிய பேச்சுக்கள் போய் 
  கொண்டிருக்க இடைவேளையின் வெளியில் 
  வருகின்றேன் பழைய முகமொன்று கண்ணில் தெரிகின்றது பழகிய முகம்
 
 ஏய் நீ தீபாதானே? இங்கே எங்கே இப்படி?
 
 இன்னைக்கு தமிழ்த்துறையில் நடக்கின்ற கூட்டத்திற்கு நான் தான் சிறப்பு 
  விருந்தினர்
 அப்படியா? ஆச்சரியம் தான். படிக்கும் போது மேடையில பேசமாட்டியே எங்க இருக்கிற?
 
 பேச்சு உதடு வழி வந்து கொண்டிருக்க கண்கள் கழுத்தில் வீழ்ந்து வழிந்து 
  கொண்டிருந்தது. கழுத்தில் முத்து மாலை மேல் கண் போய் 
  மீண்டு கொண்டே இருந்தது.
 
 ஆமா படிக்கிற வரைக்கும் மேடையில நான் எதுவும் பேசினதில்லை , ஆடிருக்கேன் , 
  நடிச்சிருக்கேன் . ஆனா இப்போ நிறைய 
  பேசுகின்றேன்.
 
 “ஓ எங்கே இருக்கிற? பிள்ளைகள் எத்தனை?”
 
 கேள்விகளும் பதில்களும் நீண்டு கொண்டே போனாலும் சிந்தனையும் பார்வையும் என் 
  கழுத்தைத் தாண்டவில்லை என உணர்ந்து 
  கொண்ட தருணமிதில் அந்தக் கேள்வியும் வந்து விழுந்தது.
 
 கழுத்தில் என்ன தாலியைக் காணோம்? புரட்சியா கல்யாணமாகிடுச்சா ஆகலையான்னு கேட்கவா 
  வேண்டமான்னு சந்தேகமா இருக்கு
 
 கேளுங்க அதுனால என்ன ? பதில் சொல்றேன் என்று சொல்லி விட்டு பதில் சொல்ல 
  விருப்பமற்றே நகலுகின்றேன்
 மேடை என் வசமாகின்றது. ஒலி பெருக்கி என்னிடமிருந்து வாங்கித் துப்ப முடியா 
  பேச்சாய் நான் என்னுடன் பேசிய படியே 
  இருக்கின்றேன்.எதிர்த்திருந்த மாணவிகளுக்கு என் விளக்கங்கள் உரத்த குரலாய் 
  கொட்டிக் கொண்டே இருக்கின்றது. அவை என் 
  காதுகளுக்குள் கேட்ட போதும் மனம் இன்னும் வேறேதோ பதில்களை தேடிய படி அலைகின்றது.
 
 “ நான் கல்யாணம் ஆனவளா இல்லையா சொல்வதற்கு தாலிதான் வேண்டுமா? அப்போ ஆண் கல்யாணம் 
  ஆனவனா இல்லையா ?
  எதை வைத்துச் சொல்லுகின்றோம் ஆனால் உணர்தலோடு தனக்கு திருமணமான விடயத்தை ஒரு 
  ஆணால் தந்து விட முயுமென்றால் 
  அதை விட பொறுப்புணர்வு கொண்ட பெண்களால் முடியாதா என்ன? தாலி தேவையா?
 
 மனதில் ஓடிக் கொண்டிருந்த கேள்விகள் என் காதுகளில் உரத்துக் கேட்ட போது தான் என் 
  மன உரையும் தொடர் நூலாய் 
  இழுவையோடு வெளி வந்து ஒலி பெருக்கியில் ஓடிக் கொண்டிருக்கின்றது என்று 
  உணர்கின்றேன். பேசிக் கொண்டிருந்த விசயங்களோடு 
  மனத்தின் பேச்சும் சரியான தருணத்தில் கைகோர்த்து விடுகின்றது.
 
 கூட்டத்திலிருந்த மௌன உறைதல் சம்மதமெனும் அடையாளமல்ல ஆழமான சிந்தனையில் உறைந்து 
  போயிருக்கின்றது என்று புரிந்து 
  கொள்ள முடிந்தது. யோசிக்க வேண்டியது தானே எனும் அமைதியில் விதை உறக்கமாய் உறைந்து 
  கிடந்தது
 
 அப்பொழுது கீழே முன்வரிசையில் இருக்கும் என்னைப் பார்க்கின்றேன் தாலி இல்லா 
  இன்னொமொரு கழுத்து . வாயற்ற கழுத்து ஏளனப் 
  புன்னகையில் என் பேச்சின் கன மௌனம் தாண்டிய கைதட்டலில் துடைத்து எறிந்தது.
 
 ஏற்கனவே அது தாலியையும் இப்படி ஒரு துச்சத்தில் தான் கழற்றி எறிந்தது தாலி 
  விழுந்த கணத்தின் கணத்தை எண்ணிப் பார்க்கின்றது. 
  தாலியற்று ஆனால் தாவணி போட்ட நாள் முதலாய் தாய் பண்ணிப் போட்டிருந்த அந்த 
  சங்கிலியில் பூக்கூடை நிறைந்திருந்தது
  பூக்களால்.வண்ண வண்ண கற்கள் தங்களைப் பூக்களாய் மாற்றிக் கொண்டிருந்தன. இடையில் 
  ஓடிய ஒரு கம்பி பாம்பாய் விசமூச்சு 
  வெளித் தெரியாது உலவிக் கொண்டிருந்த சுகமான பொழுதுகள்.ஆம் அழுத்தங்கள் மேல் 
  விழுகின்ற வரைக்கும் துப்பப் படுவதில்லை
  விசங்கள் அதுவரைக்கும் எல்லாமே நல்ல பாம்புகள் தாம். அவள் கழுத்துச் சங்கிலியும் 
  பாம்புதான்
 
 தூரத்தில் கல்லூரிக்குள் அவனைச் சந்தித்த நொடியில் உள்ளூற அடிவயிற்றிலிருந்து 
  பந்தொன்று எழும்பி நெஞ்சில் மோதி அழுத்தத்
  துவங்கியதை எல்லாப் பெண்களூம் போலவே தீபா கணக்கியல் புத்தகங்களைக் கொண்டு 
  அழுத்தத் திஒடங்கினாள் ஆனால் விழிகளின் 
  படபடப்பும் நடையின் தயக்கமும் யார் மேல் விழுந்த காதலோ அவனுக்கு மட்டும் மௌனமாகத் 
  தன் இதயத் தகவலை அனுப்பியதை 
  அவளும் அறிந்திருக்கவில்லை அவனும் அறிந்திருக்கவில்லை
 
 ஒரு நாள் மாலை கல்லூரி மரங்கள் பறவைகளீன் இரைச்சல்களை மட்டும் விதைத்துத் தூவிக் 
  கொண்டிருந்த பொழுதினில் அவள் பூக் 
  கூடை டாலரைப் பற்றி அவன் பேசிய குழைந்த வார்த்தைகளின் இதம் பறவைகளின் கூட்டில் 
  குஞ்சினைப் பொரிக்கச் செய்திருந்தது.
  அவை மெல்ல மெல்ல தாய் மென்று தொண்டையில் அடக்கிய அழுத்தத்தை தின்று சிறகுகளை 
  துளிர்க்கச் செய்தன. தாய்ப்பறவை 
  அது சிறகு முளைக்கத் துவங்கியதையும் மறந்து ஊட்டிக் கொண்டே இருந்தது. அவள், அவன் 
  அவளின் இருப்பை, காதலின் மனத்தை , 
  பறை சாற்றித் தீரு மட்டும் திணித்துக் கொண்டே இருந்ததைப் போல . தன் மேலமர்ந்து 
  காதலைத் திணித்துக் கொண்டிருந்ததை 
  சிறகுகளை அழுத்தித் திணித்துக் கொண்டிருந்ததை உணர்ந்த பொழுதினில் தன் 
  வீட்டுக்குத் தெரியாமல் வெறுங்கையோடு அவன் வீட்டுக் 
  கதவு தட்டினாள். தெரியும் இந்த நேரம் அவன் நண்பர்களோடு பெருமை பேசி சுத்தி வரும் 
  நேரம் என்று வாசலில் நிற்கையில் சுவரில் 
  இருந்த திருஷ்டி தேங்காய் பூதம் தோழிகளின் கேலிக் குரலாய் முகம் காட்டியது.
 
 ரொம்ப விளையாட்டாய் உனக்கானவன் அவன் எனக்கானவன் என்று பேசத் தொடங்கிய 
  விளையாட்டுப் பேச்சுகள் நாங்களே அறியாத 
  இடத்தில் எங்களை வைத்தே விளையாடிக் கொண்டிருந்தன.
 
 “அவன் உனக்கு மட்டுமா ஆளு? நேத்து கூட மாலதி கூட நின்று பேசிக் கொண்டிருந்தாண்டி 
  அவளும் மரத்தில் கை வைச்சிருக்க எப்ப 
  வேணுமின்னாலும் கை படலாம் பட்டு கோபப் பட்டா மன்னிப்பு கேட்டு தவிர்த்திடலாம், 
  கண்டும் காணாம விட்டா அப்படியே
  தொடரலாமுங்கிற விடலைத்தனம் அவன் உடலசைவு முழுக்க தெரிஞ்சது . கெட்டிக் காரன் 
  தான், நல்ல குடும்பந்தான் ஆனா விடலைத் 
  தனம் மாறலியே யோசிடி“
 
 சொல்லிய படி நகன்ற தோழியின் வசனம் பூதமாய் மிரட்டிய உண்மையாய் இருந்த போதும் இதோ 
  வாசலில் பயனற்று ஆடவிட்டதைப் 
  போன்று ஆதியிலும் வசனத்தை தொங்க விட்டபடி நகன்றிருந்தாள்
 
 அவன் செய்கையும் பேச்சுக்களும் இரண்டு மூன்று பெண்களுக்குள் எப்பவும் அவனுக்கான 
  போட்டி இருப்பதாக பார்த்துக் கொண்டான். 
  போட்டிகளூடாக தரையில் ஊன்றாது பெண்களின் இழுத்துக் கட்டிய கயிறுகளின் இடுகையிலேயே 
  மிதக்கும் பாரமாக மாறி மிதந்தான்
 
 என்னிடமும் இதற்கு முன் இருந்த பெண் நட்புகளெல்லாம் அவனை தக்க வவத்துக் கொள்ள 
  அருகதையும் திறமையும் அற்றவர்கள் என 
  என்னிடம் கேலியோடு சொல்லிப் போனான். அதன் மூலம் என் அருகதையும் இருப்பும் 
  திறமையும் மறைமுகமாக அவனது இருப்பு 
  என்னுள் நிறையுமாறு இருக்க எதிர்திசையில் இருந்து கொம்பு சீவி விடுகின்றான். 
  புரிகின்ற போதும், உரத்துச் சொல்லி வென்றதாய் 
  சொல்ல தோற்க வேண்டிய நிர்பந்தங்கள்.
 
 இறுதியில் வென்றது அவனை வென்று விட்டதாய் பெருமை பூசித் திரிந்த நாட்களின் சாய 
  முகங்கள். அது கழன்று உதிர்ந்து போனதை 
  காணச் சகியாது மீண்டும் மீண்டும் வண்ணங்கள் தேடி அலையும் மனம் 
  கிடைத்தவற்றிலெல்லாம் வண்ணங்களைத் தேடித் 
  தவிக்கின்றது. நெருஞ்சியின் மஞ்சள் நிறம் சிவப்புப் பூக்களின் நீலச் சாயம், 
  உதடுகள் நிறச் சிவப்பு மாற்றித் தரும் பழத் தோல்கள் , 
  வன்ணத்துப் பூச்சியின் தொட்டால் ஒட்டிக் கொள்ளூம் பட்டு வண்ணத் தூள்கள் எல்லாம் 
  கைவசம் தேடித் தேடிச் சேர்த்தாள் இன்னது 
  என்று பிரித்தரிய முடியா நிறங்களுடன் இப்பொழுது இவள் முகம் செயித்ததாய் சொல்லித் 
  திரிய , மனத்திலோ தோற்றுப் போனதின் வலி
 
 வலியைத் தொலைக்க இன்றவன் வாசலில் நின்றாள். நின்றதின் அழுத்தம் அந்த வீட்டுக்குப் 
  பயம் தர அவன் அழைத்து வரப் பட்டான். 
  தவிர்க்க முடியாது தாலி கட்டினான். விரும்பியது தானே கிடைத்ததாய் சூள் கொட்டிக் 
  கொண்டான். நான் பாடுபட்டு வந்து சேர்க்க
  அதுவாய் வந்து தன் தோளமர்ந்ததாய் பெருமை பேசித் திரிந்தான் என் வெற்றியை அவன் 
  கையகப் படுத்திக் கொள்வது தெரிய வர
  கழுத்திலிட்ட தாலி அவசரத்தில் சவரன் கம்பியாய் இருந்திருந்த போதும் பெரும் 
  பாரமாய் உணரத் துவங்கியது.
 
 உணர்தலும் பேசுதலும் எப்பவும் தன்னந்தனியளாய் என்னோடு மட்டுமே பேசிக் கொண்டிருக்க 
  பலநேரம் மொழி பற்றாமலேயே போய்
  விடுகின்றது. அதன் போதாமையை உணர்ந்த பிறகு பலநேரம் பேச்சே பயனற்றதாய் தெரிய 
  மௌனமும் மனஇறுக்கமும் பெரிய 
  ஆறுதலாய் இருந்தது
 
 தன்னோடு எப்பவும் தனியே பேசிக் கொள்வதின் பழக்கத்தில் வார வாரம் செல்லுகின்ற 
  கோவிலின் துர்க்கையம்மன் தோழியாகிப்
  போனாள். அவளோடு உரத்துப் பேசத் தேவையில்லை. காதில் கேட்கவில்லை என்றோ புரியவில்லை 
  என்றோ திருப்பிக் கேட்காதவள் 
  அவள். செவ்வாய்க் கிழமையில் இரண்டாய் அறுத்து பிழிந்து திருப்பிய எலுமிச்சம் 
  பழத்தில் , என்னைப் போலவே என்னோடு 
  மௌனமாக உரையாடிக் கொண்டிருந்தாள் துர்க்கை. காம்பின் அடிப்பகுதி ஓட்டையாகாது 
  விளக்கு ஏற்ற ஆடாது அசையாது எரியும் 
  விளக்கில் துர்க்கை என்னோடு பேசிக் கொண்டிருந்தாள். யாராவது அபிசேகம் செய்து 
  புதுத்தாலி போட்ட அன்று மட்டும் தாலியோடு 
  இருந்தாள் . மற்ற நாட்களில் சிவப்பு சீலை கட்டி தாலியற்ற கழுத்தோடு விழியில் 
  சிரித்தபடி இருந்தாள்.
 
 ஆயிற்று திருமணம் வென்று விட்டதாய் நினைத்திருந்த காலங்களில் குழந்தையின்மை 
  தோல்வியாய் கவ்விக் கொண்டு போனது. எனது 
  தோல்வியில்லை என்று எங்கள் இருவருக்கும் தெரிந்த போதும் அவனை குறை சொல்லி விடக் 
  கூடாது என்று நான் தயங்கித் தயங்கி
  நிற்க , மெல்ல குறை என் மேல் என்று நிழல் கவியத் தொடங்கியது. நான் தயங்கியது போல் 
  அவன் தயங்காமல் தவிர்த்தது என் மேல் 
  பழியாகிப் போனது அவன் குடும்பத்தார் கூடவே இருந்தும் பேசமுடியாமலும் என் 
  குடும்பம் தூர இருந்ததால் பேச முடியாமலும் என் 
  தனிமை என்னோடவே ஆகிப் போனது.
 
 இணை மான்கள் இருந்திருந்த கொஞ்சத் தண்ணீரை ஒருவர்க்கொருவர் விட்டுக் கொடுத்தலாய் 
  குடிக்காமலே இருந்ததாய் படித்த 
  காலத்தில் பக்கங்களுக்கிடையில் சிகியிருந்த சங்கப் பாடல் காட்சி நினைவுக்கு வந்து 
  , பிடி மான் குடிக்காது காத்துக் கிடக்க கிடா 
  கிடந்த நீரில் தன் கொம்பின் அழகைப் பார்த்து மகிழ்ந்த வண்ணம் குடித்து முடித்து 
  விடுதலாய் காட்சி மாறி என் கண் முன் வந்து 
  போகின்றது
 
 காலம் ஒரு கணத்தில் நெகிழ அதில் முளை விட்டது இளங்குருத்து. பாறைக் கசிவாய் செடி 
  முளைத்தலாய் .பத்திரப் படுத்தியது சூழல் 
  நிம்மதிப் பெருமூச்சு விட்டு ஆசுவாசப் படுத்தி மௌனம் மூச்சில் பேச்சில் 
  திளைத்திருந்த வேளை அவன் வீட்டு படியிறங்கிப் போவதன் 
  வாசம் என் மூக்கு உணர்ந்து கொண்டே இருந்தது
 
 படியிறங்கிய போதும் அவன் தீர்மானத்தின் வெற்றியாய் பிரகடனப் படுத்துகின்றான். 
  அவன் இப்பொழுதெல்லாம் அழைத்து வருகின்ற
  உடன் வேலை செய்யும் தோழிகள் வீட்டின் மையம் வரை வந்திருந்தனர். அது அவர்கள் எல்லை 
  என்று எனக்கு உணர்த்தப் பார்த்த அந்த
  நொடிகளைக் கடந்து அவை அதை மீறிக் கொண்டு படுக்கையறைக்குள்ளாக நுழைந்திருப்பதை 
  மறைக்கப் பார்ப்பது தெரிந்தது. புலிகள் 
  பசுத்தோல் போர்த்திக் கொண்டு நம்பி விடுவான் மேய்ப்பன் என்று 
  நிணைக்கின்றன.தெரியாதிருப்பதாய் காட்டிக் கொண்டு விருந்துபச் 
  சாரங்கள் நடத்தப் பட்டுக் கொண்டே இருக்கின்றன.
 
 என் முன்னாலிருந்த அவர்களுக்கிடையேயான தூரங்கள் எந்த இடத்தில் அற்றுப் போகக் 
  கூடும் என்பது எனக்குத் தெரிந்தே இருந்தது.
  இதே போல எத்தனை தூரங்களை எனக்கும் அவனுக்குமான போலித் தூரங்களை அடுத்தவர் எங்களது 
  நெருக்கத்தை உணர்ந்து விடக்
  கூடாது என்று பொய்யாக உருவாக்கி வைத்திருக்க நடத்திய திருகு தாளங்களை எனக்கான 
  அன்பாக எத்தனை காலம் ரசித்திருக்கின்றேன்
 
 இன்று அது வேறொருத்திக்காக என்று மாறித் தொலைய கைகாட்ட முடியாத கடியாக விசம் 
  ஏறியும் உயிர்த்திருக்க வேண்டிய 
  கட்டாயங்கள் , தாலியின் கணத்தை ஏற்றிக் கொண்டே இருந்தது. ஆறு மாதங்களுக்கு ஒரு 
  புது தோழி தோன்றினாள் நான் சாட்சியமிட்டு 
  சொல்ல முடியாத நன்னடத்தைச் சான்றிதழ் தாங்கும் போலி நடவடிக்கைகளைத் தெளிவாகச் 
  செய்தனர், உண்மைகளை மறைத்து விடும் 
  கவசமாக. மிதி பட்டும் கூவ முடியாத குற்றம் சாட்ட முடியா இடம் ஒவ்வொரு ஆளுக்கான 
  வெறுப்பாய் உருமாறியது.
 
 சமீப காலமாக அம்மா வீட்டாருடனான உறவு மெல்ல தன்னை புதுப்பித்துக் கொண்டது 
  என்னோடு. நானோ என் இறந்த கால முடிவுகள் 
  நிகழ்கால வழ்வாகி , எதிர்கால பாதையாகி இருப்பதாக காட்டிக் கொண்டிருக்க வேண்டிய 
  கட்டாயத்தில். நிர்ப்பந்தம் தந்த இறுக்கம்
 
 கெட்டிக் காரத்தனமாய் வாசிக்கப் பட்டுக் கொண்டிருக்க பாராட்டுரைகளை நிராகரிக்க 
  முடியா கள்ள மௌனம் நிரம்பச் செய்திருந்த
  சூழலது.பாராட்டுரைகளை நிராகரித்தால் தோல்வி அடைந்தவளாவேன். ஒத்துக் கொள்ளும் 
  பட்சத்திலோ அவனின் கள்ளத் தனங்களை 
  “கண்ண” பெருமையாய் வாசித்து விட நேர்ந்து நிஜமாகவே தோற்றும் போவேன் வெளியே 
  தெரியாத படிக்கு.
 
 என் கெட்டிக் காரத் தனம் என்ற வர்த்தைக்கு பின்னால் சிலரின் கயமைத் தனம் என்ற 
  வார்த்தை தம்ம்மை ஒளித்துக் கொண்டு
  திரிகின்றதே.
  குடும்பமோ மகள் தன் தேர்வில் வென்று விட்டதாய் மார்தட்டிக் கொள்ள இடமளித்து 
  விட்டு மகிழ்ந்திருக்க, அவனோ தானே தோளமரும் 
  புறாக்களை பெருமையாய் பேசி மீசை முறுக்கிய படி நகல சிரித்தபடி இரத்தம்வடிதலை 
  சந்தித்துக் கொண்டிருந்தாள்.
 
 பொய்யாய் கண்ணீரின் உவர்ப்பை மறைத்த நாட்கள், தொடர்ந்து சொன்ன பொய்யின் சௌகரியம் 
  அப்படியே அதன் முகமாகிப் போக 
  உவர்ப்பை இனிப்பென்றே சொல்லித் திரிகின்றேன். நான் சொல்லத் தொடங்கிய பொய்யை நானே 
  நம்பத் தொடங்கி விட்டேன். சூழ்ந்திருந்த 
  எல்லாருமே அதை இனிப்பென்றார்கள் என் வாய்மொழியை வழி மொழியாக்கி. 
  தொடக்கத்திலிருந்தே யாருக்கான கௌரவமாகவே 
  தொடங்கிய காதல் காதலாகவே இல்லாது போயிருப்பது உரைக்க ஒரு நாள் சோப்பிட்டுக் 
  கழுவவென்று கழட்டிய தாலியை திருப்பி
  எடுத்துப் போட மறந்திருந்தேன். அவனோ தாலி இல்லாத கழுத்து பற்றி கவலைப் படத் 
  துவங்க முதன் முறையாய் கவலைப் படத் 
  துவங்குகின்றான் என்பது தந்த மகிழ்ச்சி மீண்டும் முறுக்கேறியது.
 
 தாலி எடுத்துப் போட்டுக் கொள்ள மனம் மறுத்துக் கொண்டேயிருக்க திருப்பதி உண்டியல் 
  காசோடு சேர்த்து வைத்தாள். அந்தக் காசுகள் 
  அதைக் கடத்திக் கொண்டு போய் உண்டியலிலும் சேர்த்து விட்டது நானே அறியாப் 
  பொழுதொன்றில். இன்னும் அவன் ஒவ்வொரு 
  கல்யாண வீடு போகும் போதும் தாலி போடச் சொல்லி கேட்ட படியும் , கழற்றியதற்கு 
  காரணம் கேட்டபடியும் பதிலை எதிர்பாராது
 நகலுகின்றான்.
 
 பிறந்த வீடும் சரி புகுந்த வீடும் சரி கேட்டால் அதிர்ச்சியான தகவலை தந்து 
  விடுவாளோ என்ற பயத்தில் கேள்விகளை மண்ணிட்டு 
  புதைத்து விட்டுப் போகின்றது. மழை கண்ட ஒரு நாளில் அது முளைக்கலாம்
 
 காதோடு அருகில் வந்து ஏதும் பிரச்சனையா என்று போலிக் கவலையோடு விசாரிக்கும் 
  பெண்கள், அவள் பிரச்சனையில் நாம் 
  நுழையலாமா என்ற தயக்கமோடு கழுத்தில் காணலியே என்ற ஒற்றை வரிக் கேள்வியில் சில ஆண் 
  நண்பர்களும் தூர நின்று கொள்ள 
  என் உணர்வு பேசாத மொழியோடு சுற்றிக் கூட்டமிருக்க
 
 ஒவ்வொரு சொந்தங்களின் திருமண வீட்டிற்கும் கோவில்களுக்கும் விருந்தினராய் போகும் 
  போதும் ஒரு முறையாவது கேட்டு 
  வைக்கின்றான். கழுத்தில் போட்டுக் கொண்டு வரக் கூடாதாவென்று
 
 எதுவுமே நடக்க வில்லை என்பதாய் மறைத்துக் கொண்டாலும் பேச முடியாத உணர்வு 
  உறுத்தும் தண்ணடனையத் தந்து விட்ட 
  மகிழ்வின்
 
 “தனிமையில் ஒற்றை நிலவாய் “ இருந்து கொண்டே இருக்கின்றேன்
 
 mathibama@yahoo.com
 |