குரு.சுப்ரமணியன் (சென்னை)
குட்டிக் கதைகள்
சர்க்கஸ்
ஒமனாவுக்கு
அந்த பிரபல சர்க்கஸ் கம்பெனியில் வேலை. ஏழ்மையின் காரணமாக அவள்
பெற்றோர்கள் சின்ன வயதிலேயே அவளை அந்த சர்க்கஸ் கம்பெனியில்
சேர்த்து விட்டார்கள்
அந்த வேலையில் அவள்சேர்ந்து கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள்
பூர்த்தியாகி விட்டன.
சர்க்கஸில் அவள் செய்யும் அபார சாகசச்செயல்களுக்காகவே மக்கள்
திரண்டு வருவது யாவரும் அறிந்ததே.
அந்தரத்தில் பாரில் தொங்கிக்கொண்டு ஆபத்தான முறையில் விளையாடுவதும்
மறுமுனையில் இருக்கும் மற்றொரு பாருக்குத் தாவுவதும் போன்ற
விளையாட்டுகளில் அவள் மிகுந்த தேர்ச்சி பெற்றுப் பார்வையாளர்களின்
பாராட்டுதலையும் சம்பாதித்திருந்தாள்.
சார்க்கஸ் மானேஜரும் நிகழ்ச்சிகளில் அவளுடைய செயல்களுக்கு
முக்கியத்துவம் அளித்திருந்தார். அவளே அந்த சர்க்கஸின்
வெற்றிக்கும் மாபெரும் வசூலுக்கும் ஒரு முக்கிய காரணம் என்ற
கருத்தும் பரவலாக இருந்தது.
அன்று ஞாயிற்றுக்கிழமை. பகல் காட்சிக்கு எக்கச்சக்கமாகக் கூட்டம்
முண்டியடித்துக் கொண்டிருந்தது.
ஆனால், அன்று காலை ஷாப்பிங் போயிருந்த ஓமனா அதுவரை திரும்பி
வரவில்லை. காரணம் தெரியாமல் மானேஜர் தவித்துப்போனார். அவளுக்காகவே
சர்க்கஸ் பார்க்க வந்திருக்கும் பொதுமக்களை எப்படி சமாளிப்பது
என்று பயந்தார்.
பகல் காட்சி ஆரமபிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் ஓமனா ஒரு
ஆட்டொவில் வந்து இறங்கினாள். நொண்டிக்கொண்டே
தன் ருமிற்கு நடந்தபோது, அவள் வலது காலில் ஒரு கட்டுப்
போடப்பட்டிருந்ததை அனைவரும் கவனித்தார்கள்.
"அடேடே!என்னம்மா, என்ன ஆச்சு, ஏன் கால்லே கட்டுப் போட்டிருக்கே,
அடி பட்டுதா, எப்படிப்பட்டது.."என்று கேள்வி மேல் கேள்வியாக
அடுக்கிக்கொண்டே போனார் மானேஜர். "டவுன் பஸ்ஸிலேயிருட்ந்து
இறங்கும் போது அஜாக்கிரதையால் தவறிக் கீழே விழுந்துவிட்டேன், சாரே"
என்று அழுதுகொண்டே சொன்னாள் ஓமனா.
மானேஜருக்கு அழுவதா சிரிப்பதா என்று புரியாமல் விழித்தார்!
**********************
பரிசு
அன்று
அந்தப் பள்ளியின் ஆண்டுவிழா.
வழக்கம்போல் பேச்சுப்போட்டி, பாட்டுப் போட்டி, மாறுவேடப் போட்டி
எல்லாம் கோலாகலமாக நடந்து முடிந்தன.
பத்தாம் வகுப்பு மாணவன் சுதாகர் பேச்சுப் போட்டியில் முதல் பரிசு
பெற்றதாக விழாத்தலைவர் ராஜலிங்கம் அறிவித்தார்.
அவனை விடமிகவும் பிரமாதமாகப் பேசிய கேசவனுக்குத்தான் கண்டிப்பாக
முதல் பரிசு கிடைக்கும் என்று எல்லாருமே எதிர்
பார்த்தார்கள்.
ஏமாற்றத்தால் கேசவன் முகம் வாடிப்போனதைக் கண்டு கொள்ளத் தவறவில்லை
சுதாகர்.
அன்று மாலையே பரிசுக்கோப்பையை எடுத்துக்கொண்டு கேசவன் வீட்டிற்குச்
சென்றான். "நடந்ததை நினைத்து நீ சிறிதும் கவலைப் படாதே. நானே கூட
உனக்குத்தான் முதல் பரிசு கிடைக்கும் என்று முடிவுசெய்திருந்தேன்.
ஆனால் நான் தலைமை ஆசிரியரின் மகன் என்பதாலும் ராஜலிங்கம் எங்கள்
குடும்ப நண்பர் என்பதாலும், தீர யோசிக்காமல் எனக்கு முதல் பரிசைத்
தந்துவிட்டார். நியாயமாகப் பார்த்தால் இந்தக் கோப்பை உனக்குத்தான்
சேர வேண்டும், இந்தா, இதை சந்தோஷத்தோடு தருகிறேன். மறுக்காமல்
வாங்கிக்கொள்" என்று பரிவுடன் அளித்தபோது கேசவனின் கண்களில் நீர்
துளிர்த்தது.
g.thambudu@gmail.com