- வி. ரி. இளங்கோவன் ( பிரான்ஸ் ) -
சுனாமிப் பேரலை அடித்து இன்று ஆறு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. ஊரில் எனக்குத் தெரிந்த சிலர் விபரமாகக் கடிதங்கள் எழுதியிருந்தனர். அன்று... ... தொலைக்காட்சி மூலம் செய்தியறிந்ததும் உடனேயே தொலைபேசி எடுத்து கொழும்பில் சகோதரர்களிடம் பேசி விபரங்கள் தெரிந்துகொண்டேன். தொலைக்காட்சியில் மீண்டும் மீண்டும் காட்டப்பட்ட அழிவுகளைப் பார்த்து இதயம் படபடத்தது. இன்றும் அதனை மறக்கமுடியவில்லை...
நித்திரைக்குப் போனால்... .. இராட்சத அலைகள் பேரிரைச்சலோடு... .. ஆயிரக்கணக்கானவர்களோடு சேர்ந்து ஓடும் என்னையும் கலைத்துக்கொண்டு வருகிறது... ... என்ன அவலம்... ..
நேற்று ஒரு கடிதம் வந்தது. எழுபதுகளில் என்னுடன் பழகிய ஒரு தோழர்... .. எண்பத்தோராம் ஆண்டு நடந்த அவன் திருமணத்திற்குக் கூடப் போயிருந்தேன். அன்பான மனைவி. அழகான இரு பெண் குஞ்சுகள் பிறந்தன. அவன் நல்ல இலக்கிய இரசிகன்... ..
கவியரங்குகளின்போது என் கவிதைகளை இரசித்துக் கேட்டுப் பாராட்டியவன். 'வெல்டிங்" ஒட்டுவேலை செய்து உழைத்து வந்தவன். கபடமற்ற மனத்தினன்... ..
இராணுவ நடவடிக்கைகளால் பல இடங்களுக்கு அவன் இடம்பெயரவேண்டியிருந்தது. ஆனாலும் ஒரு நாள் 'இனந்தெரியாதோரின்� துப்பாக்கி அவனைப் பலிகொண்டுவிட்டது. சில மாதங்களுக்குப் பின்னர் தான் செய்தி அறிந்தேன். அப்போதுங்கூட அவன் குடும்பத்தினர் எங்கே இருக்கின்றனர் என்ற விபரம் கிடைக்கவில்லை... ..
நேற்று வந்த கடிதம் அவன் மனைவி எழுதியது தான்... ..
'அன்புள்ள அண்ணர் அறிவது, உங்கள் நண்பர் இறந்து வருடங்கள் பல ஆகிவிட்டதனை அறிந்திருப்பீர்கள். என் கடிதம் உங்களுக்கு ஆச்சரியமளிக்கும். உங்கள் குடும்ப நிலைமை எப்படியோ எனக்குத் தெரியாது. உங்களைத் தெரிந்த நல்ல மனிதர் ஒருவர் தான் உங்கள் பாரிஸ் முகவரியைத் தந்துதவினார். எங்களுக்கு இரு பெண் பிள்ளைகள். உங்களுக்கு அவர்களைச் சின்னஞ்சிறுசுகளாகக் கண்டு ஞாபகமிருக்கலாம்.
எங்கள் வாழ்க்கை நிலைமை மோசமாகிவிட்டது. எங்கள் வீடு வளவு, கராஜ் எல்லாம் இராணுவ வலயத்திற்குள் சிக்கிவிட்டதை அறிந்திருப்பீர்கள். அங்கு போய்க்கூட பார்க்க முடியாது. பல இடங்களில் இடம்பெயர்ந்து வசித்து, தற்போது வட்டுக்கோட்டையில் ஒரு வீட்டுக்காரரின் புண்ணியத்தில் அவர்களது சிறிய வீட்டின் கோடித் தாழ்வாரமாக பத்தி இறக்கி இருக்கிறோம். கடந்த ஒரு வருடமாக இங்கு தான் இருக்கிறோம். அவர்களும் தங்களுக்கு இடைஞ்சல் என்றும் விரைவில் வேறு இடம் பார்த்துப் போகுமாறும் கண்டிப்பாகக் கூறிவிட்டனர். பிள்ளைகள் இருவரும் பெரியபிள்ளைகள்... பொத்திப் பொத்தி வளர்த்தனான். நிவாரண உதவியெண்டு கொஞ்சம் தந்தாங்கள்... இப்ப அதுவும் நிப்பாட்டிப்போட்டாங்கள். நகை நட்டு ஒன்றும் இல்லை. எல்லாம் வித்துத் தான் பிள்ளைகளின் படிப்பையும் கவனித்து, உயிரையும் மானத்தையும் இதுவரை காப்பாத்தி வந்தோம். பிள்ளைகள் இருவரும் 'ஜி. சி. ஈ." சாதாரண தரம் சித்தியடைந்துவிட்டார்கள். மேலே படிக்க வசதியில்லை. நானும் பிள்ளைகளும் தையல் வேலை செய்தும், பலகாரம் செய்து விற்றும் ஒரு மாதிரி உயிரைப் பிடிச்சு வைச்சிருக்கிறம்... .. தற்போது நிலைமை மோசமாகிவிட்டது. அரைப் பட்டினி.. .. வாழ்க்கை.. மாத்திக்கட்ட துணியில்லாத நிலைமை... .. பிள்ளைகளைப் பற்றி நினைக்க நினைக்க நித்திரையில்லை... ... சின்னச் சின்ன கடன் தொல்லைகள் வேறு... இனிமேல் பொறுக்கமுடியாத நிலை... .. ஆரிடமும் உதவி கேட்க முடியவில்லை. மருந்து மாயம் குடிச்சோ, கிணத்தில, குளத்தில விழுந்தோ சாகவேணும்போலிருக்கும்... ஆனால்... அவர் தந்த வாழ்க்கைப் போதனைகள்... எம்மைக் கோழைகளாக்கிவிடவில்லை... தைரியத்தோடு .... ... பிள்ளைகளை மானத்தோடு வளர்க்கவேணும்... .. எத்தகைய துன்பம்வரினும் கேவலமாக வாழமுடியாது... ..! உங்கள் நண்பரின் நல்ல மனசும், தன்னம்பிக்கையும் உங்களுக்கு விளங்கும் தானே..! அவரின் நினைவுகள் தான் எம்மைக் காப்பாற்றி வைத்திருக்கின்றன... .. உங்கள் நண்பருக்காகவும், உங்கள் உடன்பிறவாச் சகோதரி, பிள்ளைகளாக எங்களை நினைத்தும் உங்களால் ஏதும் உதவ முடியுமா..? நாங்கள் வேறு ஒரு வீடு பார்த்துப் போகவேண்டும். ஏதாவது சிறு வேலை, தொழில் செய்து பிழைக்கவேண்டும். பிள்ளைகளை மானத்தோடு வாழவைக்க வேண்டும். என் செய்வேன் அண்ணா..? உங்களால் இயன்ற உதவியை எதிர்பார்க்கிறேன். மேற்கண்ட முகவரியில் தான் இம்மாதம் முடியும்வரை தங்கியிருப்போம்... ... "
என் முன்னால் என் நண்பன் குடும்பம் தெரிகிறது. அந்தக் கடிதம் எனது 'கோட் பொக்கற்றில்" தான் இன்னும் இருக்கிறது. கொழும்பில் எனக்குத் தெரிந்தவரின் பெயருக்கு நூறு 'யூரோ" அனுப்பி அதனை அங்கு உடன் கிடைக்க ஆவனசெய்யுமாறு சொல்லிவிட்டேன். அந்தப் பணம் அங்கு பன்னிரண்டாயிரம் ரூபா வரையில் கிடைத்திருக்கும்.
ஆனால்... .. என் மனம்... அந்தப் பணம் அவர்களுக்குச் சிறிய தேவைக்குத் தானும் போதுமா..? எனது நிலைமை அவர்களுக்குத் தெரியுமா..? எனக்கும் இரு பெண் பிள்ளைகள்... .. பெரியவர்கள்... முன்னர் தனியாகத் தொழில் செய்யவென வங்கிக் கடன் எடுத்திருந்தேன். தொழில் நட்டத்தில் முடிந்துவிட்டது. வங்கிக்கடன் முடியவில்லை.
தற்போது உணவகமொன்றில் வேலை. கிடைக்கும் சம்பளத்தில் வங்கிக்கடன் கழித்து, வீட்டு வாடகை, மின்சாரம், தண்ணீர் என பலவற்றுக்கும் வெட்டினால் மாதம் முடிய கையில் சில்லறைக் காசுகூட மிஞ்சுவது கஷ்டம்... .. உதவிசெய்ய மனம் துடிக்குது... .. என் செய்வேன்.. பணமில்லையே... ..! யாரிடமும் கடன்பெறவும் முடியாது... ..! இங்கு பணம் வைத்திருப்பவர்கள், மேலும் மேலும் பணம் தேடவும், வீடு வளவு, வாகனம், வசதி தேடவும், வங்கிக் கணக்கில் பணத்தை நிரப்பவும் ஆலாய்ப் பறக்கிறார்கள்... ...
மனச்சாட்சி மனிதாபிமானத்தை அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது..
இரவு வேலை முடிந்து, பஸ் எடுப்பதற்கு கொஞ்சத் தூரம் நடக்கவேண்டும். நேரம் நள்ளிரவுக்கு இன்னும் பத்து நிமிடங்களே இருக்கின்றன. இதுவே கடைசி பஸ். எட்டி நடக்கின்றேன். வீதிக்கரையில் பெரிய மரத்தின்கீழ் நின்ற, சுமார் பதினைந்து வயதுடைய, பொலிவான தோற்றமுள்ள கிழக்கு ஐரோப்பிய நாட்டுச் சிறுமி ஒருத்தி புன்சிரிப்புடன் என்னை நோக்கி வருகிறாள். இவளது வாழ்க்கைக்கும் என்ன தேவையோ..? அவளைப் பார்த்தும் பாராததுபோல் மனம் அலைபாய நள்ளிரவு பஸ் புறப்படும் இடத்தை நோக்கி மிகவேகமாக நடக்கின்றேன்.
vtelangovan@yahoo.fr