| 
  அப்பாவின் கண்ணம்மா
 - குரு அரவிந்தன் -
 
 
  அம்மா ஸ்டூல் ஒன்றை இழுத்துப் போட்டுக் கொண்டு அதன்மேல் ஏறி நின்று எதையோ பரணில் 
  தேடிக்கொண்டிருந்தாள். நான் 
  இதையெல்லாம் கவனிக்காதது போல பாடத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தேன். கடந்த 
  ஒரு வாரமாய் இந்த வீட்டில் இதுதான் 
  நடந்து கொண்டிருக்கிறது. அப்பா எழுதிய துண்டுக் காகிதங்கள், பேப்பர்கள் 
  எல்லாவற்றையும் அம்மா கவனமாகச் சேகரித்து கட்டுக்கட்டாக 
  பரண்மேல் குவித்து வைத்திருந்தாள். அதில்தான் எதையோ தேடிக் கொண்டிருக்கிறாள் 
  என்பது புரிந்தது. இப்படித்தான் புதையல் காக்கும்
  பூதம்போல அவ்வப்போது ஸ்டூல் வைத்து ஏறி நின்று எதையாவது கிண்டி எடுப்பதும் அதைப் 
  படித்துவிட்டு மீண்டும் பத்திரப்படுத்தி 
  கவனமாக வைப்பதும் இப்போது அம்மாவின் தினசரி வேலையாய்ப் போய்விட்டது. 
 அப்பா எப்போதும் போல சிரித்துக் கொண்டேயிருந்தார். எங்களை விட்டுப் பிரிந்து 
  இரண்டு மாதங்கள் விரைவாக ஓடிவிட்டாலும், சுவரில் 
  தொங்கிய அப்பாவின் படம், அப்பா கண்முன்னால் இருப்பது போன்றதொரு பிரமையை 
  எங்களுக்கு ஏற்படுத்தியிருந்தது. திடீரென 
  ஒருநாள் நெஞ்சு வலிப்பதாகச் சொன்னவரை அவசரமாக வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற 
  போது, பாதி வழியிலேயே எங்களைத் 
  தவிக்க விட்டுப் போய்விட்டார். சொந்த பந்தம் என்று சொல்லிக் கொண்டு வந்தவர்கள் 
  எல்லாம் தாமரை இலையில் தெறித்து விழுந்த 
  நீர்த்துளி போல ஒவ்வொருவராக விடைபெற்றுச் சென்றுவிட நானும் அம்மாவும் தான் 
  வீட்டிலே எஞ்சி நின்றோம். அப்பா இருந்தவரை 
  நினைத்தும் பார்க்காத தனிமையும், எதிர்காலம் பற்றிய பயமும் திடீரென எங்கள் 
  இருவரையும் பிடித்துக் கொண்டது. நாளைய பொழுது 
  என்ன என்ற கேள்வி எங்கள் முன் விருட்சமாய்ப் பரந்து நின்றதில் வியப்பேதுமில்லை!
 
 ‘எங்களுக்கென்று எதுவும் சேர்த்து வைக்காமல் நிம்மதியாய்ப் போய்விட்டாரேடி 
  பாரதீ..தீ..!’ அம்மா என்னைக் கட்டிப் பிடித்து கதறியபோது, 
  ஆண்களையே நம்பியிருக்கும் எங்கள் சமுதாய அமைப்பை நினைக்க எனக்குள்ளும் அந்தப் 
  பயம் சட்டென்று பிடித்துக் கொண்டது. 
  பெண்ணாய் பிறந்து விட்டால் எப்பொழுதும் பாரம்தானோ என்று அந்தக் கணத்தில் எண்ணத் 
  தோன்றியது.
 
 பாரதியின் எழுத்துக்களால் கவரப்பட்ட அப்பா, நான் பிறந்தபோது அந்தப் பெயரையே 
  எனக்குச் சூடி ’பாரதீ, பாரதீ’ என்று ஆசை தீர 
  அடிக்கொரு தடவை அழைத்து, திருப்திப்பட்டுக் கொண்டிருந்தார். அம்மாவின் நிஜப்பெயர் 
  கண்ணம்மா. அம்மா பிளஸ் டூ படித்துக் 
  கொண்டிருந்தபோது அவர்களின் பாடசாலையில் நடந்த பாரதி விழா ஒன்றுக்கு இளம் 
  ஆசிரியராக இருந்த அப்பாவையும் சிறப்புச் 
  சொற்பொழிவாற்ற அழைத்திருந்தார்களாம். அங்கே அப்பாவின் பேச்சு வன்மையைக் கண்டு 
  அம்மா வியந்திருக்கிறாள். அது மட்டுமல்ல, 
  அப்பாவிற்கு கணிரென்ற நல்ல குரல் வளமும் இருந்தது. அவர் சொற்பொழிவிற்கிடையே 
  ‘சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா’ என்ற 
  பாரதியின் பாடலை சபையோர் மயங்கும் வண்ணம் மிக அழகாகப்பாடி அதற்கு விலாவாரியாக 
  விளக்கமும் கொடுத்திருக்கிறார். 
  சபையோர் மயங்கினார்களோ இல்லையோ அந்தப் பாடலைச் சபையிலே கேட்டுக் கொண்டிருந்த 
  அம்மா தன்னையே கண்ணம்மாவாக 
  நினைத்து ஒரேயடியாய் மெய்மறந்து உருகிப் போய்விட்டாள். அப்பா மீது அவளுக்கு ஒரு 
  வகை ஈர்ப்பு ஏற்பட்டு இருந்ததால் அப்புறம் 
  அடிக்கடி அவர்களின் சந்திப்பும் நிகழ்ந்தது. அவளே விரும்பி பெரியவர்களின் 
  சம்மதத்தோடு அப்பாவை திருமணம் செய்து கொண்டாள். 
  உதடு மெல்ல விரியும் புன்சிரிப்பு, பட்டென்று கவர்ந்திழுக்கும் அந்தக் காந்தக் 
  கண்கள், கணீரென்ற குரல், இவையெல்லாம் அப்பாவின் 
  பிளஸ் பாயின்ட்ஸாக இருந்ததால் அவை எல்லாம் ஒட்டுமொத்தமாக அம்மாவைக் கவர்ந்து 
  இழுத்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லைத்தான்!
  கற்பனை வேறு யதார்த்தம் வேறு என்பதைக் காலப் போக்கில் அம்மா புரிந்து கொண்டாள். 
  குடும்ப பொருளாதார நிலையைக் 
  கவனிக்காமல் கற்பனையில் வாழ்வது, சிந்திப்பது, எழுதுவது, சொற்பொழிவாற்றப் போவது, 
  பொதுச்சேவை என்று இப்படியே அவரது
  வாழ்கை வாத்தியார் தொழிலில் வரும் சொற்ப வருமானத்தை மட்டும் நம்பி தினமும் 
  ஓடிக்கொண்டிருந்தது. அம்மாவிற்கு என்னை 
  எப்படிக் கரைசேர்ப்பது என்ற பயம், அதனாலே தினமும் அப்பாவைத் திட்டித் தீர்த்துக் 
  கொண்டேயிருந்தாள்.
 
 அப்பாவிற்கு ரோஷம் வருமோ என்னவோ தெரியாது, ஆனால் அதற்குப் பதிலாகக் கோபம் மட்டும் 
  வரும். அம்மா திட்டத் தொடங்கியதும் 
  அப்பா கதவை அடித்துச் சாத்திவிட்டு உள்ளே இருந்து கோபம் தீரும்வரை ஏதாவது எழுதிக் 
  கொண்டேயிருப்பார். அப்புறம் அம்மா உள்ளே 
  போய் சாப்பிட வரும்படி சமாதானப்படுத்துவாள். திட்டுவதும், அப்புறம் சமாதானப் 
  படுத்துவதும் தினமும் நடந்து கொண்டிருந்ததால் எங்க 
  வீட்டிலே அது ஒரு சாதாரண நிகழ்ச்சியாகவே போய்விட்டது. அம்மாவின் ஊடலும் அதைத் 
  தொடர்ந்து அப்பா அம்மாவைச் சமாதானப் 
  படுத்துவதும் தொடரும். அம்மாவின் பலவீனம் என்ன என்பதை அப்பா நன்கு அறிந்து 
  வைத்திருந்தார்.
 
 ‘வாலைக் குமரியடி- கண்ணம்மா மருவக் காதல் கொண்டேன்..!’ சமையல் செய்து 
  கொண்டிருக்கும் அம்மாவின் முதுகுப் பக்கம் சென்று
  அவளது தோள்பட்டையில் நாடிபுதைத்து காதுக்குள் மெதுவாக அப்பா கிசுகிசுக்க, தேன் 
  குடித்த வண்டு போல அம்மா சமையலையும் 
  மறந்து அப்படியே உறைந்து போவாள். இப்படிப் பல தடவைகள் அப்பாவின் பாடலைக் கேட்டுத் 
  மெய்மறந்து அவள் உறைந்து போய் 
  நின்றதை நான் பார்த்து எனக்குள் வியந்திருக்கிறேன். அப்பாவைப்போல அம்மாவிற்குத் 
  தனது அன்பை வெளிப்படையாகக் காட்டத் 
  தெரியாதோ என்றும் சில சமயங்களில் நான் நினைப்பதுண்டு. ஆனால் இறுதியில் தணிந்து, 
  பணிந்து போவது எப்பொழுதும் அம்மாவாகத்
  தானிருக்கும்.
 
 ‘ஏனம்மா எப்ப பார்த்தாலும் அப்பாவைத் திட்டிக் கொண்டே இருக்கிறாய்?’
 
 ‘அது என்னோட சுபாவமடி, உன்னையும்தான் தினமும் திட்டிறேன், அதற்காக உன்மேல எனக்கு 
  பாசமில்லை என்று அர்த்தமா?’
  அம்மாவின் அப்பாவித்தனமான இந்தப் பதில் என்னைச் சிந்திக்க வைத்தது. எங்கேயாவது 
  இருவரும் வெளியே சென்றால் அம்மாவைப் 
  பார்த்து என்னுடைய அக்காவா என்றுகூட சிலர் கேட்டிருக்கிறார்கள். தோளுக்கு மேல் 
  வளர்ந்தால் தோழி என்பதுபோல அம்மா ஒரு
  நெருங்கிய தோழிபோலத்தான் என்னோடு பழகினாள். அம்மாவின் பாசம் ஆழமானது, வெளியே 
  காட்டிக் கொள்ளாமல் மனசுக்குள்
  பூட்டிவைக்கும் அன்பு! பொசுக்கென்று வெடித்துவிடும் பலூன் போல, கண்களில் நீர் 
  துளிர்க்கும் போது பளீச்சென்று மின்னலாய்த் தெரியும் 
  அந்த அன்பு!
 
 அப்பா மேல் அம்மாவிற்கு மதிப்பும், மரியாதையும், பாசமும் இருந்தது மட்டுமல்ல 
  அவர்மீது ஒருவித மயக்கமும் இருந்தது. அப்பா 
  என்ன சொன்னாலும், அவர் தான் தனது உலகமென்று தலையாட்டும் பொம்மை போல சரியோ பிழையோ 
  அவர் சொல்லைத்தட்டாது 
  நடந்து கொள்வாள். 'அப்பாவின் கண்ணம்மா' என்றுதான் நான் அம்மாவை எப்பொழுதும் 
  செல்லமாக அழைப்பேன். அப்பாவுக்கு ஏதாவது 
  நடந்தால் அதை அம்மாவால் தாங்கிக் கொள்ள முடியுமா என்றுகூட நான் சிலசமயங்களில் 
  நினைத்துப் பார்த்திருக்கிறேன்.
  எதிர்பாராத விதமாக நடக்கக் கூடாத சோகசம்பவம் அன்று நடந்து விட்டது. பற்றிப் 
  படர்ந்த மரமே பட்டுப்போனால் பாவம் அந்தக் கொடி
  என்ன செய்யும்? முதல் ஒரு வாரம் அப்பாவின் படத்திற்கு முன்னால் சுவரோடு சாய்ந்து 
  உட்கார்ந்து கொண்டு துக்கம் தாளமுடியாமல் 
  அம்மா அழுது புலம்பிக் கொண்டிருந்தாள். அப்புறம் தன்னைத் தானே கட்டுப் படுத்திக் 
  கொண்டாள். பிரிவு என்பது உடலுக்குத்தான், 
  ஆத்மாவிற்கு அல்ல என்ற ஆத்மீகத் தத்துவத்தை அப்பாவிடம் இருந்து அம்மா கற்றுக் 
  கொண்டிருக்கலாம். ஏனோ தெரியாது அதன் 
  பிறகு அம்மா மனதுக்குள் அழுதாளோ, அல்லது இரவு நேரங்களில் எனக்குத் தெரியாமல் 
  தலையணைகளை நனைத்தாளோ தெரியாது, 
  ஆனால் பெரிதாகக் கத்திக் குழறி அழவுமில்லை, எனக்கு முன்னால் தன் சோகத்தைக் 
  காட்டிக் கொள்ளவுமில்லை.
  குட்டிபோட்ட பூனைபோல அம்மா என்னைச் சுற்றிச் சுற்றி வரும்போது எதையோ மனதுக்குள் 
  வைத்துக் குமைந்து கொண்டு வெளியே 
  சொல்லமுடியாமல் சங்கடப்படுவதும், எதையோ என்னிடம் சொல்லத் துடிப்பதும் எனக்குப் 
  புரிந்தது. அவளே சொல்லட்டும் என்று 
  காத்திருந்து பொறுக்க முடியாமல் போகவே அம்மாவிடம் கேட்டேன்.
 
 ‘ஏனம்மா கொஞ்ச நாளாய் ஒரு மாதிரியாய் இருக்கிறாய்?’
 
 ‘என்னுடைய மனசுக்குள்ளே அந்தக் குற்ற உணர்வு குடைஞ்சு கொண்டே இருக்குடி பாரதி!’
 
 ;ஏனம்மா, அப்படி பீல்பண்ணுமளவிற்கு என்ன பெரிதாய் தப்புச் செய்திட்டாய், 
  என்னவென்று என்னிடமாவது சொல்லேன்?’
 
 ‘எப்படி உன்கிட்ட சொல்றது என்றுதான் எனக்குத் தயக்கமாக இருக்கிறது!’
 
 ‘பரவாயில்லை, வேறுயார்கிட்ட சொல்ல முடியும்? என் கிட்டதானே, சொன்னா உனக்கு 
  கொஞ்சம் மனசுக்கு ஆறுதலாய் இருக்குமேம்மா’
  அம்மா கொஞ்ச நேரம் தயங்கினாள். எப்படித் தொடங்குவது என்றோ அல்லது தனது 
  அந்தரங்கத்தை மகளுடன் எப்படிப் பகிர்ந்து 
  கொள்ளவது என்றோ நினைத்திருக்கலாம்.
 
 ‘வந்து.., அன்று அப்பா எங்களை விட்டுப் பிரிவதற்கு முதல் நாள் இரவு நான் ஒரு 
  தப்புப்பண்ணிட்டேன்!’
 
 ‘தப்பா? என்னம்மா சொல்லுறீங்க?’
 
 ‘ஆமா..!, படுக்கையிலே என்னை அவர் ஆசையோடு அணைக்க வந்தார், நான் கொஞ்சம் பிகு 
  பண்ணிவிட்டேன். ‘வயசுப் பெண்ணை 
  வைத்துக் கொண்டு இப்போ இதெல்லாம் தேவையா?’ என்று நான் வீம்போடு விலகிப் 
  போய்விட்டேன். அவருக்கு ஏமாற்றமாய்ப் 
  போய்விட்டது. அதன்பிறகு அவர் மறுபக்கம் திரும்பிப் படுத்திட்டார், என்கூடப் 
  பேசவுமில்லை, ஊடல்தானே சரியாப்போயிடும் என்று 
  நினைச்சு நானும் பேசாமல் இருந்திட்டேன். இப்படியாகுமென்று எனக்குத் தெரியுமா? அதை 
  நினைச்சா எனக்கு இப்பவும் ஒரே குற்ற 
  உணர்வாய் இருக்கு. அவருடைய கடைசி ஆசையைக் கூட நிறைவேற்ற முடியாத பாவியாய்ப் 
  போய்விட்டேனடி நான்..!’ ஒரு 
  தோழியிடம் தன் குறையைச் சொல்வது போல என்னிடம் சொல்லி விம்மத் தொடங்கினாள் அம்மா.
 
 ‘என்னம்மா வேண்டும் என்றா இப்படிச்செய்தாய், யார் எதிர்பார்த்தா இப்படி எல்லாம் 
  நடக்குமென்று, தற்செயலாக நடந்ததுதானே, 
  உன்மேல தப்பேயில்லையம்மா!’
 
 ‘நான் பாவியடி..! அவர் என்கிட்ட தானே கேட்டார். புருஷன் என்ற உரிமையோடுதானே 
  என்னிடம் கேட்டார்..!’ தலையில் அடித்துக் 
  கொண்டே ஒரு குழந்தைபோல என்தோளில் முகம் புதைத்துத் தேம்பித் தேம்பி அழ 
  ஆரம்பித்தாள்.
 
 ‘இப்படி எல்லாம் நடக்கும் என்று நீ நினைச்சியா அம்மா? நம்ம விதி அவ்வளவுதான், 
  வேறு என்ன செய்ய முடியம்?’ அம்மாவை 
  அணைத்துக் கொண்டு சமாதானம் சொன்னேன்.
 
 அவருடைய படத்தைப் பார்க்கும் போதெல்லாம் அவர் என்னுடைய காதுக்குள்ளே ‘வார்த்தை 
  தவறிவிட்டாய் கண்ணம்மா..!’ என்று
  குற்றம் சாட்டுவது போல எனக்குள் ஒரே பிரமையாய் இருக்குதடி பாரதீ, அவரைக் 
  கைபிடிக்கும்போது அக்கினி சாட்சியாய் இன்பத்திலும்
  துன்பத்திலும் அவருக்குத் துணையாய் இருப்பேன் என்றுதானே கைப்பிடித்தேன், நானொரு 
  பைத்தியம், நிவர்த்தி செய்முடியாத தப்புப் 
  பண்ணிட்டேனே என்று என்னுடைய மனச்சாட்சி எப்பொழுதும் என்னைக் குத்திக் காட்டிக் 
  கொண்டிருக்குதே, நான் என்ன செய்ய..?’ 
  விசும்பல் விம்மலாக மாற அம்மா கத்தி அழத்தொடங்கினாள்.
 
 ‘அழட்டும்! நெஞ்சில் உள்ள பாரத்தைக் கொட்டித் தீர்க்கும்வரை அழட்டும்!’ என்று 
  சிறிது நேரம் அம்மாவின் தலையை மெல்ல வருடி 
  விட்டபடி காத்திருந்தேன். முடிந்தவரை அம்மாவிற்கு ஆறுதல் சொல்லிச் சமாதானப் 
  படுத்தினேன். ஒரு மனநோயாளிபோல, பெற்ற 
  மகளிடமே தன் அந்தரங்கத்தைச் சொல்லி அழுது தீர்க்கும் அளவிற்கு அம்மாவின் நிலை 
  தாழ்ந்து விட்டதே என்பதை நினைத்த போது
  என்னையும் மீறி என் கண்கள் பனித்தன.
 
 குடும்ப பொருளாதார நிலையை உத்தேசித்து நான் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குப் 
  போகத் தீர்மானித்தேன். அம்மாவிடம் எனது 
  முடிவைச் சொன்ன போது அம்மா அதை முற்றாக மறுத்துவிட்டாள்.
 
 'வேலைக்குப் போனால் என்ன? வேண்டாம் என்று ஏன் தடுக்கிறீங்க?'
 
 'வேலைக்கு அப்புறம் போகலாம், அதற்கு முன் படிப்பை முடிக்கணும், அப்பாவோட 
  விருப்பமும் அதுதான்!'
 
 'அப்பாவின் விருப்பமா? அவர் உங்ககிட்ட சொன்னாராம்மா?'
 
 'இல்லை, எழுதியேவெச்சிருக்கிறார்.'
 
 'எழுதியா..? எங்கே?'
 
 'இந்தா இதைப் படித்துப் பார்!'
 
 அம்மா கொடுத்த கட்டுப் பேப்பரைப் படித்துப் பார்த்தேன். அது பரணில் இருந்து 
  எடுத்த அப்பா எழுதிய சிறுகதை ஒன்று. அதிலே வரும் 
  கதாநாயகி நிறையப் படித்தவளாகவும், கிணற்றுத் தவளைபோல இருக்காமல் வெளியுலக 
  அனுபவங்களை நிறையப் பெறற்றவளாகவும் 
  இருந்தாள், பாரதியின் புதுமைப் பெண்ணைப் போல பெண்கள் இருக்க வேண்டும் என்பதை 
  அப்பா அதிலே வலியுறுத்தியிருந்தார். 
  அதனால் தான் அம்மா என்னை தற்சமயம் வேலைக்குப் போக வேண்டாம் என்றும், தொடர்ந்து 
  படிக்கச் சொல்லியும் என்னை 
  வற்புறுத்துகிறாள் என்பதையும் புரிந்து கொண்டேன்.
 
 அப்பாவின் எழுத்துக்களைத் தாரக மந்திரமாக ஏற்று அதையே அம்மா பின்பற்றுகிறாள் 
  என்பதை இன்னுமொரு சந்தர்ப்பத்திலும் என்னால் 
  உணரமுடிந்தது.
 
 திடீரென ஒரு நாள் அம்மா நெற்றியிலே பொட்டு வைத்து, பூ வைத்து, வண்ணச் சேலை 
  கட்டியிருந்தாள். அம்மாவிற்கு என்ன நடந்தது 
  என்று தெரியாமல் நான் மலைத்துப் போய்விட்டேன். அவளுடைய கடந்த கால நடவடிக்கைகளைப் 
  பார்க்க ஒருவேளை மனநோயால் 
  பாதிக்கப் பட்டிருக்கிறாளோ என்று கூட எண்ணத் தோன்றியது.
 
 என்னுடைய மனதைப் படித்தவள்போல அவளே வேறு ஒரு கட்டுப் பேப்பரைக் கொண்டுவந்து 
  படித்துப் பார் என்று கொடுத்தாள். இதுவும் 
  பரணில் இருந்து அம்மாவால் கிண்டி எடுக்கப் பட்டதாய்த்தான் இருக்கவேண்டும். அதை 
  ஆர்வத்தோடு படித்துப் பார்த்தேன். அதிலே 
  ஓரிடத்தில் 'மனைவி இறந்தால் கணவன் எதையும் துறப்பதில்லை, கணவன் இறந்தால் மட்டும் 
  ஏன் மனைவி பூவும், பொட்டும் 
  துறக்கணும்? ஏன் இந்தப் பாரபட்சம், வேண்டாம் இந்த அநீதி!' என்று அப்பா 
  எழுதியிருந்தார்.
 
 திடீரென அப்பாவின் எழுத்துக்கள் ஒவ்வொன்றாக அம்மாவின் உருவத்தில் உயிர் பெற்று 
  நிற்பதைப் பார்க்க எனக்கே வியப்பாக இருந்தது. 
  ஒருவேளை அப்பா எதிர்பார்த்த புதுமைப் பெண்ணாக அம்மா மாறிக் கொண்டிருக்கிறாளோ?
 
 அப்பாவை ஒரு ஆசிரியராகத்தான் இதுவரை நான் தெரிந்து வைத்திருந்தேன். அவரை ஒரு 
  சிறந்த எழுத்தாளனாக நான் கற்பனை 
  செய்துகூடப் பார்த்ததில்லை! அப்பாவிடம் இவ்வளவு திறமையும் கெட்டித்தனமும் 
  இருந்ததா என்பதை நினைத்துப் பார்க்க எனக்கே 
  புல்லரித்தது. நடமாடும் பல்கலைக் கழகம் என்று அவரது நண்பர்கள் மேடையில் அடிக்கடி 
  அவரைப் புகழ்ந்ததன் அர்த்தம் இப்போது தான் 
  எனக்குப் புரிந்தது.
 
 காலமும் நேரமும் வந்தால் எல்லாம் கனிந்து வரும் என்பது போல, இதுவரை காலமும் 
  திரும்பியே பார்க்காமல் அசட்டை செய்த 
  பிரசுரதாரர்கள் எல்லாம், அப்பாவின் நாவல் ஒன்றுக்கு அரசவிருது கிடைத்ததும் வீடு 
  தேடி வரத்தொடங்கினார்கள். அப்பாவின் 
  ஆக்கங்களுக்கு அவர்கள் போட்டி போட்டு கொண்டு முற்பணம் கொடுக்க முன் வந்தார்கள். 
  அம்மா தினமும் அவர்களுக்காகத்தான் ஸ்டூல் 
  வைத்து ஏறிநின்று பரணில் புதையல் தேடுகிறாளோ என்று நான் முதலில் நம்பினேன். ஆனால் 
  உண்மையிலேயே அப்பாவின் 
  எழுத்துக்களில் அம்மாவிற்கு இருந்த ஆர்வமிகுதியாலும், ஈடுபாட்டாலும் தான் அம்மா 
  அவற்றைத் தேடித்தேடி படிக்கிறாள் என்பதை 
  விரைவில் நான் புரிந்து கொண்டேன். அப்பா விட்டுச் சென்ற நினைவுச் சின்னங்கள் 
  ஒவ்வொன்றிலும் அவள் தன்னையும் ஐக்கியமாக்கி 
  அதன் மூலம் தன்னைத்தானே மானசீகமாய் திருப்திப் படுத்திக் கொண்டிருந்தாள்.
 
 அப்பாவின் எழுத்துக்களை எப்படியாவது காசாக்கி விடவேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் 
  மெல்லத் தலை தூக்கியிருந்தது. காற்றுள்ள 
  போதே தூற்றிக் கொள்ள வேண்டுமென்பதால், அம்மா வெளியே செல்லும் சமயங்களில் நானும் 
  ஸ்டூலை வைத்துப் பரனில் புதையல் 
  தேடத் தொடங்கினேன். அப்படிக் கிண்டிய பொழுதுதான் அப்பா எழுதிய அந்தக் கதை 
  எனக்குக் கிடைத்தது. அதிலே கணவனை இழந்த 
  ஒரு இளம் பெண், மறுமணம் செய்து புதுவாழ்வை ஆரம்பிப்பதாக அப்பா எழுதியிருந்தார்.
 
 அந்தக் கதையைப் படித்து விட்டு என்ன செய்வது என்று நான் சிறிது நேரம் யோசித்துப் 
  பார்த்தேன். அப்பாவின் எழுத்துக்கள் எல்லாம்
  இப்போ அம்மாவிற்கு வேதவாக்குகளாய்த் தெரிகின்றன. குழம்பிய மனநிலையில் இருக்கும் 
  அம்மாவின் கையில் அப்பாவின் இந்தக் 
  கதை கிடைத்தால் என்ன நடக்கும் என்பதையும் நினைத்துப் பார்த்தேன். வேண்டாம், 
  அப்பாவின் இந்தக் கதையை அம்மா படிக்கக் 
  கூடாது. புது வாழ்வு என்ற போர்வைக்குள் அவளுடைய கனவுகள், சந்தோஷங்கள் எல்லாம் 
  கலைந்து நிர்மூலமாகக் கூடாது. 
  ‘அம்மா இது ஊருக்கு உபதேசமாய் இருக்கலாம் ஆனால் உனக்கு மட்டும் இந்த உபதேசம் 
  வேண்டாம். ஏனென்றால் அப்பாதான் உலகம் 
  என்று ஒரு குழந்தை மனதோடு இதுவரை நீ வாழ்ந்து விட்டாய், இன்றும் அப்பாவின் அந்தப் 
  பசுமையான இனிய நினைவுகளோடு தான் நீ 
  வாழ்ந்து கொண்டிருக்கிறாய், உன்னை வேறு யாராயும் என்னால் நினைத்துக் கூடப்பார்க்க 
  முடியாது. அதனாலே அப்பாவின் கண்ணம்மா 
  வாகவே நீ என்றென்றும் இருந்துவிடு!’
 
 அம்மாவைப் பற்றி நான் எடுத்த முடிவு சுயநலமானதா, சரியானதா என்ற கவலை அவ்வப்போது 
  என்னை வாட்டிக் கொண்டே
  இருக்கிறது. ஏன் அந்த முடிவை எடுத்தேன் என்று எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. 
  எனக்கு மட்டுமே அவள் தாயாக இருக்கவேண்டும் 
  என்ற எண்ணம் ஒருவேளை என் அடிமனதில் இருந்ததோ தெரியவில்லை!
 
 kuruaravinthan@hotmail.com
 
    
 
  அம்ரிதா
 - க.ராஜம்ரஞ்சனி -
 
  1
 
  
   மீண்டும் 
  ஒருமுறை தன்னைத் தானே நிலைக்கண்ணாடியில் பார்த்துக்கொண்டாள். அகன்ற நெற்றியில் 
  சிவப்பு நிறம் குங்குமம். நெற்றி வகிட்டிலும் சிறிதளவு குங்குமம். அழகாய்தான் தெரிந்தாள். நாற்பது வயது ஆகிவிட்ட 
  உடல் தன் அகவையை புறத்தோலின் மூலம் உலகுக்குப் பறைசாற்றிக் கொண்டிருந்தது. அவளது 
  கண்கள் கண்ணாடியில் தெரியும் குங்குமத்தின் மீதே இருந்தது. பார்த்தது போதும் என 
  தோன்ற குளிக்க சென்றாள். நீல நிற சுடிதார் ஒன்றை அணிந்து கொண்டாள். 
  நிலைக்கண்ணாடியின் முன் நின்றவள் எப்போதும் போல 
  நெற்றியில் கறுப்பு நிற ஸ்டிக்கர் பொட்டை வைத்தாள். இப்போதும் கூட அழகாய்தான் 
  தெரிந்தாள். துணிப்பையில் தூக்க முடிந்த அளவு 
  மட்டும் துணிகளை எடுத்து வைத்துக் கொண்டாள். கையில் மாட்டிக் கொள்ளும் வகையில் 
  இருந்தது அந்தத் துணிப்பை. மற்றவர்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தாவண்ணம் 
  இருப்பதற்கு இதுவே நல்லது என்றும் தோன்றியது. கையில் பிடித்துச் செல்லும் 
  துணிப்பையை எடுத்துச் சென்றால் பார்ப்போருக்கு எளிதாக சந்தேகம் பிறந்து அதைத் 
  தொடர்ந்து ‘எங்க கெளம்பிட்ட அம்ரிதா?’,
 ‘எங்கயோ கெளம்பிட்ட மாதிரி தெரிது..’ என ஏதாவதொன்றைக் கண்டிப்பாக எதிர்கொள்ள 
  நேரிடும். இங்கே பார்ப்போர் என சொல்லபடுவது அண்டைவீட்டார் முதல் பேருந்து நிலையம் 
  வரையிலும் சந்திக்கும் அறிமுகமானவர்கள். சந்திக்க விரும்பா தருணத்தில்தான் பலரை 
  எதிர்பாராவிதமாய் சந்திக்கும் தருணங்கள் அமைந்துவிடுகின்றன. அம்ரிதாவை 
  அறிந்தவர்கள் அவள் வேலை, வீடு தவிர எங்கேயும் செல்லாதவள் என்றும் அறிந்தவர்கள். 
  வெளியே செல்ல வேண்டியிருந்தாலும் தன் தம்பி குடும்பத்தினருடன் செல்வாள் என்பதும் 
  தெரிந்தவர்கள். ‘கடவுளே, யார் கண்ணிலும் நான் படக்கூடாது’ வேண்டிக்கொண்டாள். 
  அலமாரியைத் திறந்தவள் அங்கிருந்த வங்கிக் கணக்குப் புத்தகத்தை எடுத்து முதல் 
  பக்கத்தைப் புரட்டினாள். தன்னுடைய வங்கிக் கணக்கு என்பதைக் கணினியில் 
  அச்சிடப்பட்டிருந்த தன் பெயரைக் கொண்டு சரி பார்த்துக் கொண்டாள். அதையும் 
  பத்திரமாக தன் துணிப்பையினுள் சொருகினாள். பக்கத்து அறைக்குச் சென்றவளின் நடையில் 
  துரிதம் காணப்பட்டது. தாய் தந்தையரின் படத்தின் முன் மண்டியிட்டு அமர்ந்தவளின் 
  கண்களில் இருந்து நீர் சுரந்து கன்னங்களின் வழிந்தது. ‘நான் செய்றது தவறுனா என்னை 
  மன்னிச்சிடுங்க. ஆனா நான் தவறு செய்யலப்பா, நான் தவறு செய்யலம்மா..’ ஏதேனும் 
  பதில் கிடைக்குமா என்ற ஏக்கத்தினூடே அவளின் பார்வை அந்த படங்களில் நிலைகுத்தி 
  நிற்க, மௌனமாகவே அவர்களின் பார்வையும் இவளிம் மீதே நின்றிருந்தன.
 
 2
 
  ‘இந்த மாப்ள ரொம்ப நல்லவரும்மா.. இன்னைக்கு உன்ன 
  பொண்ணு பாக்க வர்றாங்க..’ அப்பாவின் பேச்சு குதூகலமாய் ஒலித்தது. பெண் 
  பார்க்கும் படலம் முடிந்து ஒரு வாரத்திற்குப் பின் அப்பாவின் குதூகலம் 
  மறைந்திருந்தது. ‘நீ கவலபடாதம்மா.. உனக்கு ராஜா மாதிரி
  மாப்ள பாக்கறேன்’ என்றவரின் தேடல் பத்து வருடங்களுக்குப் பின் அவரின் 
  மரணத்தின்போது தோல்வியடைந்தது. அந்தத் தேடலை
  அம்மா தொடர்ந்தார். ஏழு வருடங்களுக்குப் பின் அவரின் தேடலும் முற்றுப்பெறாமலே 
  அவரின் மரணத்தோடு தடைப்பட்டது. முதல் 
  மாப்பிள்ளை முன்வைத்த ‘கறுப்பு’ என்ற காரணத்தை மறைத்திருந்தார் அப்பா. ஆனால் 
  தொடர்ந்து வந்த மாப்பிள்ளைகள் எல்லோரும் 
  இதே காரணத்தைத் தவறாமல் சொன்னபோது சீதாவும் தெரிந்துகொண்டாள். காரணத்தை 
  முன்வைத்தவர்கள் அனைவரும் இவளின் 
  நிறம்தான் என்பது இங்குக் குறிப்பிட வேண்டிய முக்கிய விஷயம்.
  தாய் தந்தையரின் படத்தைத் தொட்டு வணங்கி கண்களில் ஒற்றிக்கொண்டவள் கண்களைத் 
  துடைத்துக் கொண்டாள். தம்பியும் 
  குடும்பத்தார் திரும்புவதற்குள் வீட்டிலிருந்து வெளியாகிட எண்ணியவளாய் எழுந்தாள்.
  
   
  ‘அக்கா நீங்களும் வாங்க.. நம்ம அத்தை பொண்ணு கல்யாணம். எல்லாரும் கேட்பாங்க..’
  
   
  ‘இல்ல முரளி.. எனக்கு ஒரே தலைவலியா இருக்கு. ஏன்னு தெரில. கொஞ்ச நேரம் மருந்து 
  சாப்டு படுக்கனும். நீங்க எல்லாரும் போய்ட்டு 
  வாங்க..’ மனதில் ஏற்பட்டிருந்த வலியைத் தலையின் மீது சுமத்தினாள். பழியைச் சுமந்த 
  தலை மறுகணமே வலிக்க ஆரம்பித்தது. 
  ‘சரிக்கா..’ அக்காவின் மனதின் வலியை அறிந்தவனாய் அதற்கு மேலும் ஏதும் சொல்ல 
  இயலாதவனாய் மனைவி, பிள்ளைகளுடன் 
  திருமணதிற்கு சென்றிருந்தான்.
  கடந்த ஒரு வருடமாகவே எந்தவொரு நிகழ்வுகளிலும் அம்ரிதா கலந்து கொள்ளவில்லை. வேலை, 
  உடல் நலமின்மை என ஏதாவதொரு 
  காரணம் அவளுக்குக் கைக்கொடுத்தது. ‘உங்க அக்காவுக்கு எங்காச்சும் போறப்ப சீக்கு 
  வந்துடுது’ ஒரு முறை தம்பி மனைவி கேலியாய் 
  சொன்னது இப்போது ஞாபகம் வந்தது. 
 3
 
  பிற்பகல் ஒரு மணி பயணச் சீட்டு. கைக்கடிகாரத்தில் இருந்த நிமிட முள் ஏழாம் 
  எண்ணில் நின்றிருந்தது. ‘இன்னும் இருவதைஞ்சு 
  நிமிஷம் இருக்கு..’ மெதுவாக முணுமுணுத்துக் கொண்டு அங்கே காணப்பட்ட பயணிகள் 
  காத்திருக்கும் இருக்கைகளைக்
  கண்ணோட்டமிட்டாள். காலியாயிருந்த இருக்கை கண்ணில்பட அதில் அமர்ந்துகொண்டாள். 
  பக்கத்து இருக்கையில் மற்றொரு குடும்பம்.
  அந்தப் பெண் கறுப்பாயிருந்தாள். கணவனும் கறுப்புதான். பெண் பிள்ளை ஒன்றும் ஆண் 
  பிள்ளை ஒன்றும் விளையாடிக் கொண்டிருக்க 
  அவளது மடியில் இன்னொரு ஆண் குழந்தை இருந்தது. பிள்ளைகள் மூவரும் தாய்தந்தையரின் 
  முகசாயலையும் நிறத்தையும்
  கொண்டிருந்தனர். விளையாடும் பிள்ளைகளின் மீது கவனமாயிருந்தான் அந்தப் பெண்ணின் 
  கணவன். அவ்வப்போது கணவனும்
  மனைவியும் ஏதோ பேசி சிரித்துக் கொண்டனர். ‘கறுப்பான ஒரு பெண் மனைவியாகி, தாயாகி 
  இருக்கிறாள்... கொடுத்து வைத்தவள்..
  முன்பிறவியில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்..’ என வார்த்தைகள் மனதில் 
  அணிவகுக்க அவளைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
  அவளும் பதிலுக்குப் புன்னகைத்தாள். காத்திருந்த பேருந்து வர ஏறி அமர்ந்து 
  கொண்டாள். ஐந்து மணி நேர பயணத்திற்குப் பின் அவள் 
  நோக்கிய திசையை அடைந்திருந்தாள். கைப்பையினுள் எழுதி வைத்திருந்த துண்டு 
  காகிதத்தை எடுத்துப் பத்திரப்படுத்தி கையில் 
  திணித்துக் கொண்டாள். வாடகை வண்டியின் ஒட்டுனரிடம் காண்பித்தாள்.
  ‘இந்த அட்ரஸ் ரொம்ப தூரமா தம்பி ?’ காரினுள் அமர்ந்தவாறே கேட்டாள். இதற்கு முன் 
  வந்தேயிராத ஒரு மண்ணில் கால்
  வைத்தவளின் கேள்வியாய் அது வெளிப்பட்டது.
  ‘இல்லக்கா.. முப்பது நிமிஷந்தான். அக்கா, இந்தாங்க ஸ்வீட் எடுத்துக்குங்க..’ காரை 
  சமிக்ஞை விளக்கின் போது நிறுத்தியபோது 
  சாக்லேட்டை பின் இருக்கையில் அமர்ந்திருந்தவளிடம் நீட்டினான்.
  ‘என்னய்யா விஷேசம் ? கையில் ஒரு சாக்லேட்டை எடுத்துக் கொண்டாள். 
  ‘எனக்கு இன்னிக்கு கொழந்த பொறந்துருக்கு.. பொண் கொழந்த..’
  ‘ரொம்ப சந்தோஷம்யா. மொத கொழந்தயா?’
  ‘ஆமாக்கா..’ காரைச் செலுத்தியவாறே பதிலளித்தான். ‘இதான்க்கா என்னோட வைப்..’ 
  காரின் வானொலி விசைக்கருகே இருந்த சிறு 
  இடத்தில் அவனும் அவன் மனைவியும் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று 
  ஒட்டப்பட்டிருந்தது. இருவருமே கறுப்பு. ‘புண்ணியம் 
  செய்தவள்.. மனைவியாகி தாயாகி.. கடவுளே எப்போதும் இவங்க சந்தோசமா இருக்கனும்...’ 
  அம்ரிதாவின் மனம் பிரார்த்தித்துக் 
  கொண்டது. 
  ‘அக்கா, இதான் நீங்க தேடுன அட்ரெஸ்...’ காரிலிருந்து இறங்கிக் கொண்டாள்.
 4
 
  ஒருமுறை காகிதத்தில் உள்ள முகவரியையும் வீட்டின் முன் உள்ள முகவரியையும் 
  ஒப்பிட்டுப் பார்த்து உறுதி செய்து கொண்டாள். 
  ‘நான் அம்ரிதா, போன வாரம் உங்களுக்குக் கால் பண்ணி பேசனேன்.. நீங்க என்ன வர 
  சொன்னீங்கம்மா..’
  ‘ஓ... ஆமாம்மா.. உட்காரு..’ வயது முதிர்ந்த பெண்மணி. மாநிறம். சாதரண நூல் புடவை 
  அணிந்து மங்களகரமாய் இருந்தார். 
  ‘உனக்கு இங்க வேல வேணும்னு கேட்டியேம்மா.. உனக்கு உண்மையிலேயே இந்த வேல 
  பிடிக்குமா? இல்ல குடும்ப சூழ்நில காரணமா
  சம்பாதிக்கனுமா?’ 
  ‘உண்மையிலேயே எனக்கு இந்த வேல புடிக்கும்மா.. எனக்கு நீங்க சம்பளம் ஏதும் 
  தரலானாலும் பரவால.. ஆனா நான் இங்க இருந்து 
  என்னால முடிஞ்ச வேல செய்றேன். எனக்கு இங்க வேல குடுங்கம்மா’ கெஞ்சினாள் அம்ரிதா.
  ‘சரிம்மா.. நீ இங்க வேல செய்யலாம். நாங்க குடுக்கற சம்பளம் கொறவாதான் இருக்கும். 
  ஆனா நீ அத எடுத்துக்கணும். சரியா?’
  ‘அதப்பத்தி பிரச்சனையில்லம்மா.. நான் இங்கயே இவங்களோடயே தங்கனும். எனக்கு அதான்மா 
  ஆசை. முடியுமாம்மா?’
  ‘கண்டிப்பா முடியும். நீ இங்கயே தங்கிக்கம்மா. இவங்ககூடவே இரும்மா..’ அம்ரிதாவின் 
  கெஞ்சல் அவரின் மனதை வருடியிருக்க 
  வேண்டும். 
   
  ‘அம்மா... இன்னிக்கே என் வேலைய ஆரம்பிக்கவா?’ 
  ‘களைப்பாயிருக்குமே.. நாளைக்கு ஆரம்பிக்கலாம்..பரவாலம்மா.’ 
  ‘இல்லம்மா. எனக்குக் களைப்பா இல்ல. இன்னிக்கே ஆரம்பிக்கிறேன்’ 
  ‘சரிம்மா.. அப்படினா உன் விருப்பம்.’ 
  ‘மல்லிகா, இது அம்ரிதா. நம்மக்கூட இனிமே இவங்களும் இருப்பாங்க. இவங்க தங்க ரூம் 
  காட்டுங்க.’ அம்ரிதாவின் வயதையொத்த பெண்மணியிடம் அறிமுகப்படுத்தினார்.‘வாங்க’ என்றழைத்த மல்லிகாவைப் பின்தொடர்ந்தாள் அம்ரிதா.‘மல்லிகா, ரொம்ப நாளா இங்க வேல செய்றீங்களா?’
 
  ‘ஆமாம். ஆறு வருஷமா வேலை செய்றேன்’ 
  ‘இங்கதான் தங்கறீங்களா?’ 
  ‘இல்ல அம்ரிதா.. என் வீடு பக்கத்துலதான் இருக்கு. வேலை செஞ்சுட்டு போயிடுவேன். 
  வீட்டுகாரு கம்பெனில வேலை செய்றாரு. மூனு புள்ளைங்க படிக்கனும். அவரோட சம்பளம் மட்டும்னா கஷ்டம். அதான் கொறைஞ்ச சம்பளமா 
  இருந்தாலும் இங்க வேலை செய்றேன்.’
 மல்லிகா கறுப்பாகதான் இருந்தாள். அவள் மனைவியாகி தாயாகி இருந்தாள். ‘புண்ணியம் 
  செய்தவர்.. கடவுளே எப்போதும் இவங்க நல்லா 
  இருக்கனும்’ அவளின் மனம் வேண்டிக்கொண்டது. அறையில் தன் துணிப்பையை வைத்தவள் 
  குளித்து முடித்து தன் வேலையைத்
 துவங்க எத்தனித்தாள்.
 
 அவள் மனம் எல்லற்ற மகிழ்ச்சியை அடைந்தது; பேரானந்தத்தில் மிதந்தாள். அழுது 
  கொண்டிருந்த பெண் குழந்தையை வாரி அணைத்துத் 
  தூக்கிக் கொண்டாள். தன்னால் முடிந்த வரை முயன்று அழுகையை நிறுத்திய கணம் இன்னும் 
  மனம் ஆனந்த நர்த்தனமாடியது. 
  சுற்றியிருந்த பிஞ்சு குழந்தைகள் அவளை அன்பாய் நோக்குகையில் ஒருவித பரவசம் அவளுள் 
  பரவியது. தாயின்றி தந்தையின்றி 
  தெய்வக் குழந்தைகள் இனி தன்னைத் தாயாய் பார்க்கபோவதை அவள் மனம் எண்ணி எள்ளற்ற 
  உவகையடைந்தது. ‘நானும் புண்ணியம் 
  செய்தவள்..நானும் முன்ன பிறவில புண்ணியம் செஞ்சுருக்கணும்.. நானும் 
  தாயாயிட்டேன்..’
 
 மலேசியா
 ktrajamranjini@yahoo.co.in
 
    
 
  வலி உணர்ந்தவன்
 - மேரித்தங்கம் -
 
 
  கல்லூரிகள் 
  எல்லாம் திறந்து ப்ளஸ் டூ முடித்தவர்கள் எல்லாம் உற்சாகமாக, யூனிபார்ம் 
  களிலிருந்து விடுதலை பெற்று, 
  பட்டாம் பூச்சிகளாக சிறகடித்து கல்லூரிகளுக்குப் போய்க் கொண்டி ருக்க, அல்லது 
  கல்லூரிகளில் சேர்வதற்கான ஆயத்தங்களில் இருக்க, 
  இவற்றில் எதிலும் கலந்து கொள்ளாமல் பூக்காரம்மாளின் பெண் மட்டும் இன்னும் எங்கோ 
  வேலைக்குப் போய்க் கொண்டிருப் பதைப் 
  பார்த்த இவாஞ்சலினின் மனசுக்கு வருத்தமாக இருந்தது. 
 அந்தப் பெண் ரொம்பவும் நன்றாகப் படிக்குமென்று அவள் கேள்விப் பட்டிருந்தாள். 
  அப்படிப் பட்ட பெண், கல்லூரிக்குப்
  போகாமல் இன்னும் ஏன் வேலைக்குப் போய்க் கொண்டி ருக்க வேண்டும்? ஒருவேளை படித்தது 
  போதுமென்று நிறுத்தி விட்டார்களா? 
  மனசுக்குள் உழலும் கேள்விகள் இவாஞ்சலினுக்கு மிகவும் கவலை யளித்தன. 
  பூக்காரம்மாளிடம் இது பற்றி விசாரிக்கலா மென்றால், 
  இப்போதெல்லாம் அவளைப் பார்க்கவே முடிவதில்லை. தண்ணீர்க் குழாயில் சந்தித்து கூட 
  ரொம்ப நாளாகி விட்டது.
 
 இவாஞ்சலினின் வீடு வாஸ்து சாஸ்திரக்காரர்கள் பயமுறுத்தும் தெருப்பார்வையில் 
  அமையப் பெற்றது. அந்த வீட்டிற்கு
 நேர் செங்குத்தாக விரியும் தெருவின் இறுதியில் குறுக்காக வரிசை பிடித்து 
  தீப்பெட்டிகளாக அடுக்கப் பட்டிருக்கும் ஓடு வேய்ந்த
  வீடொன்றில் தான் பூக்காரம்மாவும் அவளின் குடும்பமும் வாடகைக்கு வசிக்கிறது. 
  அவர்களின் காம்பௌண்ட்டிற்கு வெகு அருகாமையில் 
  தான் நகராட்சிக் காரர்கள் அமைத்திருக்கும் தெருக்குழாயும் இருக்கிறது.
 
 பூக்காரம்மாவுடன் இவாஞ்சலினுக்கு இலேசான பழக்கந்தான். எப்போதாவது தெருக்குழாயில் 
  சந்தித்துக் கொண்டால் பரஸ்பரம் 
  சிரித்துக் கொள்வார்கள்; அதிகாலையில் எழும்பி கோயம்பேடு மார்க்கெட்டிற்குப் போய் 
  மொத்தமாய் பூ வாங்கி வந்து அதை சரமாய்
  தொடுத்து விற்பது தான் அவளின் பிரதான தொழில். இவாஞ்சலின் எப்போதாவது பூக்கேட்டால் 
  தன் நீளமான கையினால் தாராளமாய் 
  முழம் போட்டு ஒரு புன்னகைக் கீற்றையும் பூவுடன் ஒட்டவைத்துக் கொடுப்பாள். 
  இவாஞ்செலினும் பேரம் எதுவும் பேசாமல் வாங்கிக்
 கொள்வாள்.
 
 பூக்காரம்மாள் பார்ப்பதற்கு மிகவும் லட்சணமாக, கருப்பென்றுசொல்லிவிடமுடியாத 
  மாந்தளிர் நிறத்தில்,மினுமினுக்கிற தேக அழகுடன் இருப்பாள். அவளை மூன்று 
  பிள்ளைகளுக்கு அம்மா என்று சொன்னால் நம்புவதற்கு
  மிகவும் கஷ்டமாக இருக்கும். இதற்கு நேர்மாறாக அவளின் புருஷன் அடர்த்தியான 
  கருப்பில் கட்டை குட்டையாக….கொஞ்சம் தவங்கித் 
  தவங்கித் தான் நடப்பான். இருவரையும் ஒன்றாய்ச் சேர்த்து வாழ வைத்தது எந்த விதியோ 
  என்று அவ்வப்போது தனக்குள் 
  அங்கலாய்த்துக் கொள்வாள் இவாஞ்சலின்.
 
 அன்றைக்கு இரண்டு குடங்களைத் தண்ணீர்க் குழாயில் வைத்து விட்டு தன் முறை 
  வருவதற்கு கொஞ்சம் நேரமாகுமென்று 
  தோன்றியதால் சமையலறையில் கைவேலையாக இருந்தாள் இவாஞ்சலின். வாசல் கேட்டை யாரோ 
  கிணுக்குவது கேட்டு வெளியில் 
  வந்து பார்த்தாள். இவளு டைய காலிக் குடங்களை கைகளில் வைத்துக் கொண்டு 
  பூக்காரம்மாள் நின்று கொண்டிருந்தாள்.
 
 “ரொம்ப நேரமா காலிங்பெல் அடிச்சடிச்சுப் பார்த்தேன்; சத்தமே கேட்கல; அதான் கேட்டை 
  ஆட்டினேன்…..” வருத்தம் தொனிக்கிற 
  குரலில் பேசினாள் அவள்.
 
 “ஆமாங்க, கொஞ்ச நாளாவே காலிங் பெல் வேலை செய்யல; ரிப்பேர்ப் பண்ணச் சொன்னா இவர் 
  சாக்குப் போக்குச் சொல்லி
  காலங் கடத்திட்டு இருக்கார்….அதுக்குள்ளயா தண்ணி நின்னு போச்சு?”
 
 “இன்னைக்கு என்னன்னு தெரியல, சீக்கிரமே நின்னு போச்சு; எல்லாரும் அவங்கங்க கொடத்த 
  எடுத்துட்டுப் போயிட்டாங்க….உன் 
  கொடம் மட்டும் தனியாக் கெடந்துச்சு; எவளாவது லவட்டிக்கிட்டு போயிடப் போறாளேன்னு 
  தான் கொண்டு வந்தேன்….” சிரித்தபடி 
  சொன்னாள் பூக்காரம்மாள். இவாஞ்சலினுக்கு ஆச்சர்யமாக இருந்தது. பட்டணத்தில் 
  இப்படியும் மனிதர்களா?
 
 “இதென்ன தங்கமா, பித்தளையா திருடு போறதுக்கு? எவர் சில்வர் தான! உங்களுக் 
  கெதுக்குங்க சிரமம்?” குடங்களைப் பெற்றுக் 
  கொண்டு “வீட்டுக்குள்ள தான் வாங்களேன்…”என்றாள்.
 
 “இல்லை தாயி நெறைய வேலை இருக்கு; எனக்கும் இன்னைக்கு ஒரு கொடம் கூடத் தண்ணி 
  கெடைக்கல; அடிபம்ப்புலப்
  போயித் தான் அடிச்சிட்டு வரணும்…..நீயும் வர்றீயா?”
 
 “அய்யோ நான் வரலைங்க; அவ்வளவு தூரத்துலருந்து என்னால தூக்கிட்டு வரமுடி யாது. 
  அதோட அந்தத் தண்ணி அவ்வளவு 
  நல்லாவும் இருக்காது; நாங்க கேன் தண்ணி வாங்கிக்கு வோம் …. “ என்ற இவாஞ்சலின் “ 
  அப்புறம் ரொம்ப நாளாவே உங்ககிட்ட ஒண்ணு 
  கேட்கணும்னு நெனச்சிருந்தேன்; நல்லாப் படிக்கிற உங்க பொண்ணோட படிப்ப ஏன் 
  பாதியிலயே நிறுத்தீட்டீங்க? ஒரு டிகிரியாச்சும் படிக்க
  வச்சுருக்கலாமில்ல…..!” என்றாள்.
 
 பூக்காரம்மாளின் கண்களில் நீர் திரையிட்டது. “அந்தக் கொடுமைய ஏன் தாயி 
  கேட்குற…..?” என்றபடி வாசல்படியில் கால் நீட்டி 
  வசதியாக உட்கார்ந்து கொண்டு பேசத் தொடங்கினாள். “என் பொண்ணு பத்தாப்புல நானூத்தி 
  பதிநாலு மார்க்கு ; நம்ம தெருவே மூக்குல 
  விரல் வச்சு சந்தோஷப் பட்டுச்சு; நான்தான் ப்ளஸ் டூ சேர்க்குறதுக்கு கவர்மெண்ட் 
  பள்ளிக் கூடத்துக்குக் கூட்டிட்டுப் போனேன்; என்ன 
  குரூப் வேணுமின்னு கேட்டாங்க. எங்களுக்கு சொல்லத் தெரியல! உன்னை மாதிரி விஷயம் 
  தெரிஞ்ச மகராசி யாரையாச்சும் 
  கூட்டிட்டாவது போயிருக்க லாம்; அப்பத் தோணாமப் போயிடுச்சு….
 
 ’ஏழை வீட்டுப் புள்ளைய்யா; நல்லதா நீங்களே ஏதாவது படிப்புல சேர்த்துக்குங்க; 
  உங்களுக்குக் கோடி புண்ணியம்
  கெடைக்கும்’ன்னு அவங்ககிட்டயே பொறுப்பக் குடுத்தேன். அவங்கதான் ஏதோ பேசன் 
  டிசைன்னு ஒரு புதுக்குரூப்புல சேர்த்துக்குறோம்; 
  ப்ளஸ் டூ படிச்சு முடிச்சாலே வேலை கிடைச்சுடும்னு ஆசைகாட்டி சேர்த்துக் 
  கிட்டாங்க; ஆனா படிச்சு முடிச்சப்புறம் தான் அந்தப் 
  படிப்போட வண்டவாளம் தெரிஞ்சுச்சு, வேலையும் கிடைக்கல; ஒரு மண்ணும் கிடைக்கல……
 
 அந்தப் படிப்புல படிக்குறதுக்கு ஆளே சேரலைன்னு அரசாங்கமே அந்தக் குரூப்ப மூடச் 
  சொல்லீருச்சாம்; அப்படி மூடிட்டா எங்க 
  அதைச் சொல்லிக் குடுக்குற வாத்தியாருங்களுக்கு வேலை இல்லாமப் போயிருமோன்னு 
  பயந்துக்கிட்டு கூட்டுக் களவாணி 
  வாத்திமாருங்களெல்லாம் ஒண்ணாச் சேர்ந்துக் கிட்டு விவரந்தெரியாத என்னை மாதிரி ஏழை 
  வீட்டுப் புள்ளைங்கள அமுக்கி அந்தக் 
  குரூப்ல சேர்த்துக்கிட்டாங்களாம்; இந்த உண்மையெல்லாம் இப்பத்தான் தெரியுது, என்ன 
  செய்றது?
 
 அந்தப் படிப்புலயும் கண்ணும் கருத்துமாப் படிச்சு ஆயிரத்துச் சொச்சம் மார்க் 
  வாங்கி யிருந்தா என் பொண்ணு; சரி இன்னொரு மூனு 
  வருஷம் வாய, வயிறக் கட்டி ஒரு டிகிரியாச்சும் படிக்க வச்சா அது பொழைப்ப அது 
  பார்த்துக்கிடட்டும்னு காலேஸ் தேடுனா, அக்கம் 
  பக்கத்துல எந்தக் காலேஸுலயும் அந்தப் படிப்பு தட்டுப் படல: பெரிய பெரிய 
  பணக்காரங்க படிக்கிற தனியார் காலேஷுல தான் அது 
  இருக்காம்! அவ்வளவு பணத்துக்கு நாங்க எங்க போறது? அதான் போட்டோக் கடையில 
  வேலைக்குப் போயிக்கிட்டு இருக்காள்…. எல்லாம் 
  விதிம்மா! வேறென்ன சொல்றது? சரி தாயி, ரொம்ப நேரமாயிருச்சு, நான் கெளம்புறேன்” 
  என்றபடி எழுந்து போனாள்.
 
 அன்றைக்கு இரவே அருள்தாஸிடம் சொன்னபோது அவனுக்கும் ஆத்திரம் பொங்கி யது. 
  “நானூறுக்கு மேல மார்க் எடுத்த 
  பொண்ணுக்கு ஃபேஷன் டிசைன் குரூப் குடுத்தாங்களா? அந்த வாத்திமாருங்கள எல்லாம் 
  நிக்க வச்சு சுடணும்! காலேஷுல போயி அந்தப் 
  படிப்பப் படிச்சாலும் இந்தப் பொண்ணால அதுல கரை சேர்றது கஷ்டம்! அதுக்கெல்லாம் 
  கத்தை கத்தையா பணமிருந்தால் தான் 
  முடியும்….” என்றான்.
 
 அப்புறம் “வேணுமின்னா பாலிடெக்னிக்குல சேர்ந்து படிக்கச் சொல்லலாம்…..” என்று 
  அவன் சொல்லவும் அவள் மலர்ந்து, 
  “ரெண்டாவது வருஷத்துல சேர்த்துக்குவாங்களா….?” என்றாள்.
 
 “அது சாத்தியமில்லப்பா…. ப்ளஸ் டூ ல மேத்ஸ்,பிஸிக்ஸ்,கெமிஸ்ட்ரி படிச்சிருந்தாத் 
  தான் இரண்டாவது வருஷத்துல சேர 
  முடியும்; இந்தப் பொண்ண எஸ்.எஸ்.எல்.சி. மார்க்க வச்சு முதல் வருஷத்துல தான் 
  சேர்த்து விடணும்…..” என்றான். “அப்ப ரெண்டு 
  வருஷப் ப்ளஸ் டூ படிப்பு பாழ் தானா! சரி நான் நாளைக்கு அவங்க கிட்டப் பேசிப் 
  பார்க்குறேன்…”என்றாள்.
 
 அடுத்த நாள் பூக்காரம்மாளை அழைத்து இது சம்பந்தமாகப் பேசிய போது,”எனக்கென்னம்மா 
  புரியுது இதெல்லாம்! நான் என்
  பொண்ணையே கூட்டிட்டு வாறேன்; அவள் கிட்டயே பேசு….” என்றபடி உடனே ஓடிப்போய் தன் 
  பெண்ணை அழைத்து வந்தாள்.
 
 அந்தப் பெண் நிறத்திலும் முக வார்ப்பிலும் அவளின் அப்பாவைப் போல் இருந்தாலும் 
  பூக்காரம்மாவைப் போலவே சித்துப் 
  பெண்ணாக பர்க்க லட்சணமாக இருந்தாள்.”உன் பேரென் னம்மா…? “ என்றாள் இவாஞ்சலீன் 
  அவளின் தலையை வாஞ்சையாய்
  வருடியபடி. இத்தனை நாளில் இந்தப் பெண்ணின் பேரைக் கூடத் தெரிந்து 
  வைத்திருக்கவில்லையே என்று மனசுக்குள் தன்னைத் தானே 
  கடிந்து கொண்டாள் அவள்.
 
 “சுகந்தி ஆண்ட்டி….”என்று அவள் சொல்லவும், “அழகான பேரா இருக்கே, யாரு வச்சது?” 
  என்றாள் இவாஞ்சலீன். “அவங்க 
  அப்பாரு வச்ச பேரு தான்; நல்ல ரசணையான மனுஷன் தான்; இப்பத்தான் எதுக்கும் 
  பிரயோசணமில்லாமப் போயிருச்சு ….” என்றாள் 
  பூக்காரம்மாள் கண்களில் மின்னும் காதலுடன்.
 
 “உன்னோட பிளான் என்ன சுகந்தி? போட்டோக் கடையிலேயே இன்னும் எவ்வளவு காலத்துக்கு 
  வேலை பார்த்துட முடியும்னு 
  நெனைக்குற?” என்று கேட்டாள் இவாஞ்சலின்.
 
 “தெரியல ஆண்ட்டி; ஓடுற வரைக்கும் ஓடட்டும்…. கூடவே கரஸ்பாண்டன்ஸ்ல ஏதாவது 
  படிக்கலாம்னு நெனைச்சிருக்கேன். 
  வேறென்ன பண்ண முடியும்? “ கண்களில் கண்ணீர்.
 
 “பாலிடெக்னிக்குல சேர்ந்து டிப்ளமோ படிக்குறியா சுகந்தி? “என்று கேட்டாள் 
  இவாஞ்சலின். அவள் கொஞ்சம் கூட யோசிக்காமல் 
  சந்தோஷம் பொங்க “சரி ஆன்ட்டி ….” என்று தலையை ஆட்டினாள் வேகமாக. படிக்க 
  வேண்டுமென்கிற ஆசையும் வேகமும் அந்தத் 
  தலையாட்டலில் தெரிந்தது.
 
 “முதல் வருஷத்துல தான் சேர்த்துக்குவாங்களாம்; ரெண்டு வருஷம் வீணாப் போயிருச் 
  சுன்னோ, நம்மவிட வயசுல 
  சின்னவங்களோட சேர்ந்து படிக்குறது மாதிரி ஆயிடுச்சேன்னோ ஃபீல் பண்ணக் கூடாது 
  சரியா?” என்று ஆறுதலாய்ப் பேசினாள்
  இவாஞ்சலின்.“அதெல்லாம் பரவாயில்ல ஆண்ட்டி…..” சுகந்தி தெளிவாய்த் தான் பேசினாள். 
  அடுத்து வந்த நாட்களில் பூக்காரம்மாளும் 
  இவாஞ்சலினும் பாலிடெக்னிக் பாலி டெக்னிக்காக ஏறி இறங்கி விசாரித்தார்கள்.
 
 இருவரும் சில நாட்கள் சில பொழுதுகளாவது ஒன்றாகத் திரிய நேர்ந்ததில் இவாஞ் சலின் 
  பூக்காரம்மாளின் வாழ்க்கை 
  பற்றிய நிறைய விபரங்களை அறிந்து கொண்டாள். ஒருமுறை இவாஞ்சலின், அவளிடம் “நீங்க 
  பள்ளிக் கூடத்துக்கே போனதில்லையா?” 
  என்று கேட்கவும், “அதெல்லாம் போனேன் தாயி; நாலாப்பு வரைக்கும் படிச்சேன். 
  அப்புறம் எனக்கொரு தம்பி பிறக்கவும் என் படிப்பை 
  நிறுத்தி என்னைய புள்ளை தூக்கப் போட்டுட்டாங்கல்ல…” என்றாள் கடந்த காலத்தின் 
  கசப்புகளை விழுங்கியபடி.
 
 இன்னொரு சமயம் “சுகந்தி அப்பாவ நீங்க எப்படி கல்யாணம் கட்டிக்கிட்டீங்க! வீட்டுல 
  வற்புறுத்தி கட்டி வச்சுட்டாங்களோ…” 
  என்று கேட்டாள் சிரித்தபடி. “அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல தாயி; நாங்க காதலிச்சுத் 
  தான் கல்யாணம் கட்டிக்கிட்டோம்…” 
  என்றாள். இவாஞ்சலின் முகத்தில் ஆச்சர்யம் காட்ட அவளே விளக்கமாய்ச் சொல்லத் 
  தொடங்கினாள்.
 
 “நாங்க பக்கத்து பக்கத்து ஊரு; சுகந்தி அப்பா பிராயத்துல கருப்பா இருந்தாலும்
 நல்லா களையா இருக்கும். அப்பல்லாம் நல்லா மேளம் வாசிக்கும். கல்யாணம், கருமாதி, 
  ஊர்த் திருவிழான்னு அததுக்குத் தகுந்தபடி 
  அபாரமா வாசிக்கும். அப்ப அதோட கழுத்தசைவையும் விரலோட நாட்டியத்தையும் பார்த்துப் 
  பார்த்து நான் சொக்கித் தான் போனேன். 
  ரொம்பத் தெறமை யான மனுஷன்ம்மா... நான் தான் மொதல்ல அதுட்டப் போயி, ‘எனக்கு உன்மேல 
  ரொம்ப இஷ்டம்; என்னையும் 
  உன்கூடவே கூட்டிட்டுப் போயிரு; உன் மேள வாசிப்பக் கேட்டுக்கிட்டே இருக்கனும் 
  போலருக்கு’ன்னு சொன்னேன். அது முதல்ல
  ஒண்ணுஞ் சொல்லாம சிரிச்சிட்டுப் போயிருச்சு….
 
 நான் திரும்பத் திரும்ப அதுகிட்டப் போயி இதையே சொல்லவும், சரி வான்னு 
  கூட்டிட்டுப் போயி ஒரு கோயில்ல வச்சு தாலி 
  கட்டிருச்சு; நாங்க வேற வேற ஜாதி; அதால ரெண்டு குடும்பத்திலயும் எங்கள 
  ஏத்துக்காம, வெட்டுவோம், குத்துவோம்னு 
  மெரட்டுனாங்க…..உங்களால ஆனதப் பார்த்துக்கங்கன்னுட்டு ஊரை விட்டு இந்த 
  பட்டணத்துக்கு வந்துட்டோம். ஆரம்பத்துல எல்லாம் 
  என்கிட்ட ரொம்ப ஆசையா பிரியமாத்தான் இருந்துச்சு…. ஏனோ பட்டணத்துக்கு வந்ததும் 
  மேளம் வாசிக்கிறத விட்டுருச்சு. அதுக்குப் 
  பதிலா சென்ட்ரிங் வேலைக்குப் போக ஆரம்பிச்சது. நல்ல வருமானம் வந்துச்சு.சொந்தமா 
  கான்ட்ராக்ட் கூட எடுத்துப் பண்ணுச்சு….
  ஒரு சமயம் மூணாவது மாடியில சென்ட்ரிங் வேலை செஞ்சுக்கிட்டு இருக்குறப்போ சாரம் 
  சரிஞ்சு கீழ விழுந்துருச்சு. புட்டாணி 
  போயிருச்சு. பொழச்சு வந்தது அந்த கடவுள் கிருபை; சேர்த்துவச்ச பணமெல்லாம் அதோட 
  மருத்துவ செலவுலேயே காலியாயிருச்சு; 
  உடம்பு ஒடுங்கி பாதி ஆளாப் போயிடுச்சு; தொடர்ந்து வேலைக்கும் போக முடியல. இப்படி 
  ஒண்ணுக்கும் உதவாமப் போயிட்டமேன்கிற 
  மன உளைச்சல்ல ரொம்பவும் ஒடைஞ்சு போயிட்டுது….
 
 சென்ட்ரிங் சாமான்களை யெல்லாம் கூட்டாளிங்களே வித்துத் தின்னுட்டாங்க; வீட்டுல 
  பசியும் வறுமையும் …. 
  கஞ்சிக்கில்லைன்னா சண்டை சச்சரவுதான வரும்; அதான் நடக்குது எங்க வீட்லயும்; 
  ஒருத்தருக்கொருத்தர் முகங்குடுத்து பேசுறதயே 
  நிறுத்திக்கிட்டோம்……மூனு புள்ளைங்கள வச்சுக்கிட்டு எனக்கு முழி பிதுங்கிப் 
  போச்சு. என்ன பண்ற துன்னே புரியல; அப்புறம் தான் 
  எனக்குத் தெரிஞ்ச பூக்கட்டி விற்குற இந்த வேலையில ஏதோ வயித்துப் பாட்டுக்கு 
  வஞ்சணையில்லாம காலம் ஓடிக்கிட்டு இருக்கு 
  தாயி……” மூச்சுவிடாமல் பேசி நிறித்தினாள் பூக்காரம்மாள்.
 
 பெரும்பாலான பாலிடெக்னிக்குகளில் ப்ளஸ் டூ வில் சம்பந்த மில்லாத குரூப்பைப் 
  படித்த பெண்ணை சேர்த்துக் கொள்ளத்
  தயக்கம் காட்டினார்கள். ஓரிரு அரசு உதவி பெறும் பாலி டெக்னிக்குகளோ சுகந்தி 
  எஸ்.எஸ்.எல்.சி. யில் எடுத்திருக்கும் மார்க் இடம் 
  கிடைப்பதற்கு போதாது என்று சொல்லி விண்ணப்பப்பாரம் தருவதற்கே மறுத்து 
  விட்டார்கள். சுய நிதி பாலிடெக்னிக்கு களில்
  டொனேஷன் அது இதென்று கட்டணம் எக்குத் தப்பாய்க் கேட்டார்கள். கடைசியில் ஒரு 
  முஸ்லீம் மைனாரிட்டி பாலிடெக்னிக்கில் 
  விசாரித்தபோது ஆறுதலாயும் நம்பிக்கையாயும் பேசினார் கள். ஆனால் அங்கு 
  சேர்வதற்கும் வருஷத்திற்கு குறைந்தது இருபதாயிரம் 
  ரூபாய்த் தேவைப் படுமென்று தெரிந்தது. “இதெல்லாம் கதைக்கு ஆகிற காரியமில்லை தாயி; 
  அவளுக்கு விதிச்சபடி ஆகட்டும்…..” என்று 
  சொல்லி பூக்காரம்மாள் விடை பெற்றுக் கொண்டாள்.
 
 இவாஞ்சலினுக்கு மனசு ஆறவே இல்லை.எந்த வகையிலாவது அந்தப் பெண்ணிற்கு உதவ 
  வேண்டுமென்று மனசு கிடந்து 
  துடித்தது. “இப்படி பாலிடெக்னிக் படிக்கிற ஆசைய அந்தப் பொண்ணுக்கு ஊட்டிட்டு, அது 
  இப்ப முடியாமப் போயிடும் போல இருக்குங்க….” 
  அருள்தாஸிடம் சொல்லிப் புலம்பினாள். “நாம வேணுமின்னா பணம் கட்டி அந்தப் பொண்ண 
  படிக்க வைக்க லாம்ப்பா….” என்றான் அவன். 
  “நெசமாவா….பணம் கட்டுவீங்களா?” பதட்டப்பட்டாள் அவள்.
 
 பூக்காரம்மாளையும் சுகந்தியையும் அழைத்து விவரம் சொல்லவும் அவர்களால் இதை நம்பவே 
  முடியவில்லை.இரண்டு 
  பேர்களின் கண்களிலும் தாரை தாரையாகக் கண்ணீர். பூக்காரம் மாள் தடாலென்று 
  இவாஞ்சலினின் கால்களில் விழுந்து விட்டாள். 
  இவாஞ்சலின் பதறிப்போய் “அய்யோ என்னங்க இதெல்லாம்…. “ என்று அவளை எழுப்பி சோபாவில் 
  உட்கார வைப்பதற்குள் போதும்
  போதென்றாகி விட்டது. அப்புறமும் பொங்கிப் பொங்கி அழுது கொண்டிருந்தாள் அவள்.
 
 “சொந்த பந்தங்களே ஒரு பைசா தந்துதவாத காலம் தாயி இது; முன்னப்பின்ன பழக்கமில்லாத 
  எங்களுக்கு இவ்வளவு பெரிய 
  தொகையக் கட்டி படிக்க வைக்குறேன்றியே, நெசமாலுமே நீ தெய்வம் தாயி….” என்று 
  அரற்றினாள்.
 
 காரியங்கள் சரசரவென்று நடந்தேறின. அடுத்த நாளே இருவரும் போய் விண்ணப்ப படிவம் 
  வாங்கி வந்தார்கள். அன்றைக்கே 
  மூவரும் உட்கார்ந்து அதை நிரப்பத் தொடங்கினார்கள். இவாஞ்சலின் ஒவ்வொரு பகுதியாக 
  வாசித்து, சுகந்தியும் பூக்காரம்மாளும் 
  சொல்வதை படிவத்தில் நிரப்பிக் கொண்டிருந்தாள். ஜாதி பற்றிய கட்டத்தை 
  நிரப்புவதற்காக , “நீங்க என்ன கம்யூனிட்டி சுகந்தி?” என்று 
  கேட்கவும் “எஃப். சி. ஆன்ட்டி ….” என்றாள் சுகந்தி.
 
 “அந்தக் வயித்தெரிச்சல ஏன்ம்மா கேட்குற! நாங்க கோயிலுக்கு பூக்கட்டி பொழைக்குற 
  பண்டாரம் ஜாதி; ஆண்டிப் பண்டாரம்னு 
  போட்டுருந்தா பிற்படுத்தப்பட்ட வகுப்புன்னு பதிவாயிருக் கும்; எங்க ஆளுங்க 
  எல்லாம் அப்படித்தான் பதிஞ்சிக்கிறாங்க…. பிள்ளைங்கள 
  பள்ளிக் கூடத்துல சேர்க்குறதுக்குத் தூக்கிட்டுப் போன கூறுகெட்ட மனுஷன் வெறுமனே 
  ‘பண்டாரம்’ ஜாதின்னு சொல்லிப் பதிஞ்சிட்டு 
  வந்துருச்சு; பண்டாரம்னா முற்போக்கு ஜாதியாம், சலுகை எதுவும் கெடைக்காதாம். 
  அப்புறமும் மனுக் குடுத்து மாத்தச் சொல்லி
  எவ்வளவோ சண்டை போட்டுப் பார்த்தேன்; ஒரே அடியா முடியாதுன்னுடுச்சு….அதை விட 
  இன்னொரு கொடுமை தாயி; என் ஜாதியில
  பிள்ளைங்கள சேர்க்காம இவ அப்பனோட ஜாதியில பிள்ளைங்களச் சேர்த்திருந்தா இன்னும் 
  விசேஷமா நிறைய சலுகைகள் 
  கெடைச்சிருக்கும்…..” என்றாள்.
 
 “ஏன் அவரு அப்படி என்ன ஜாதி” என்றாள் இவாஞ்சலின் ஆர்வம் மேலிட. பூக்காரம் மாள் 
  சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டு 
  மிகவும் மெல்லிய குரலில் ”அவரோட ஜாதி என்னன்னு இந்தப் பட்டணத்துல யாருக்குமே 
  தெரியாது; உன்கிட்ட மட்டும் சொல்றேன்; நீயும் 
  உன் மனசோட வச்சுக்கோ…” என்று பெரும் பீடிகைக்குப் பின் சொன்னாள். ”அது எஸ்.ஸி. 
  கம்யூனிட்டி தாயி;துப்புக் கெட்ட மனுஷன் அது
  ஜாதியிலயும் பிள்ளைகளச் சேர்க்காம, என் ஜாதியையும் முழுசாச் சொல்லாம படுபாவி 
  பிள்ளைகளுக்கு ஒரு சலுகையும் கிடைக்க 
  விடாமப் பண்ணீருச்சு…”
 
 இவாஞ்சலினுக்கு நிஜமாகவே ஆச்சர்யமாக இருந்தது. எத்தனையோ பேர் தாங்கள் வசதி 
  வாய்ப்புகளோடிருந்தும் தங்களின் 
  பிறந்த ஜாதியை மறைத்து பொய்ச் சான்றிதழ் கொடுத் தேனும் சலுகைகள் அனுபவிக்கத் 
  துடிக்கிறார்கள். அவளுடைய சொந்த கிராமத்தில் 
  நிலபுலன்களும் தோட்டந் துறவுகளும் நிறைந்த ஒரு பெரும் பணக்காரக் குடும்பம்; 
  தாங்கள் பிறந்த ரெட்டியார் ஜாதியை கஞ்ச ரெட்டி 
  என்று மாற்றிக் கொண்டால், மலை ஜாதி மக்களுக்கான சலுகைகள் கிடைக்குமென்று அறிந்து 
  அதற்கான முயற்சிகளில் இறங்கி,
  அவர்களின் மாவட்டத்திலேயே அப்படிப்பட்ட ஜாதிப் பிரிவினர் வசிக்கவில்லை என்று 
  தாசில்தார் சான்றிதழ் தர மறுத்தும் தன்னுடைய 
  பணத்தையும் செல்வாக்கை யும் பயன்படுத்தி வேறொரு மாவட்டத்தில் போய் அப்படிப் பட்ட 
  சான்றிதழ் பெற்று, சலுகைகளை 
  அனுபவிப்பதை நேரிடையாகவே அவள் அறிவாள். அப்படிப் பட்ட மனிதர்களுக்கு மத்தியில் 
  உண்மையிலேயே தாழ்த்தப் பட்ட குடியில் 
  பிறந்திருந்தும் அதைத் தன் பிள்ளைகளுக்குத் தராமல் மறைத்துவிடும் மனுஷன். 
  அறியாமையாலா? ஆணவத்தாலா? இவாஞ்சலினுக்குப் 
  புரியவில்லை.
 
 ஒரு நல்ல நாளில் பூக்காரம்மாளையும் அவளின் பெண்ணையும் அழைத்துக் கொண்டு போய் பணம் 
  கட்டி பாலிடெக்னிக்கில்
  சேர்த்து விட்டு வந்தாள் இவாஞ்சலின்.அன்றைக்கும் இரு வரும் கை கூப்பி கண்ணீர் 
  பெருக்கினார்கள். இரண்டு நாள் சென்றிருக்கும். 
  பூக்காரம்மாளின் புருஷன் மட்டும் இவாஞ்சலினின் வீட்டிற்கு வெளியே வந்து நின்றார். 
  அப்போது அருள்தாஸும்
 
 வீட்டிலிருந்தார். “எங்க குடும்பத்துக்கே விளக்கேத்தி வச்சுருக்கீங்க; கோடானுகோடி 
  வருஷத்துக்கு நீங்க சுகமாய் இருக்கனும்…” என்று 
  கண்ணீருடன் கை கூப்பி வணங்கினார். ”எதுக்குப் பெரிய வார்த்தையெல்லாம் …..” 
  என்றபடி அவரைச் சமாதானப் படுத்தி இருவரும் 
  வற்புறுத்தி வீட்டிற்குள் அழைத்துப் போனார்கள். அவருக்கு சாப்பிட ஏதாவது 
  தரலாமென்று இவாஞ்சலின் சமையலறைகுள் போனாள்.
 
 அருள்தாஸ் தான் கேட்டார்.”என்னைய்யா இப்படி அசட்டு மனுஷனா இருக்குற! உன் ஜாதியில 
  புள்ளைங்கள பதிஞ்சு 
  வைச்சிருந்தீன்னா எவ்வளவு சலுகைகள் கெடைச்சிருக்கும்? வேலை யிலயும் 
  முன்னுரிமையெல்லாம் கெடைச்சுருக்குமில்ல; அத 
  விட்டுட்டு எஃப்.சி.ன்னு பதிஞ்சு பிள் ளைங்களுக்கு ஒண்ணும் கிடைக்காமப் 
  பண்ணீட்டீயே….”
 
 அவர் அருள்தாஸை தீர்க்கமாகப் பார்த்தார். அப்புறம் பேசினார் “சலுகைகள் கிடைக் 
  கும் தான். கூடவே என் ஜாதிக்கான இழிவும் 
  அவங்க மேல படிஞ்சுடுமே! அதால இந்த சமூகம் அவங்களுக்குத் தர்ற வலி,அவமானம் 
  எல்லாத்தையும் அவங்க அனுபவிச்சாகனுமே! 
  எல்லோருக்கும் தலித்துகள் அனுபவிக்குற சலுகைகள் மட்டும் தான் கண்ண உறுத்துது; 
  அதுக்கு அவங்க குடுக்குற வெலை யாருக்குமே 
  தெரிய மாட்டேங்குது….. கிராமத்துல போயி பள்ளனா, பறையனா, சக்கிலி யனா ஒரே ஒரு 
  நாளாவது வாழ்ந்து பார்த்தாத்தான் அந்த 
  வலியும் வேதணையும் புரியும்….
 
 மேளம் வாசிக்குறது என் மனசுக்கு ரொம்ப சந்தோஷம் தர்ற விஷயம் பட்டணத்துக்கு 
  பொழைக்க வந்ததும் நான் அதக் கூட 
  விட்டுட்டேன்; ஏன்னா அதுல என் ஜாதி அடையாளம் ஒட்டிட்டு இருக்கு; அதன் மூலமாக் கூட 
  என் ஜாதி என்னன்னு தெரிஞ்சு என்னைச்
  சுத்தி இருக்குற வங்க என் குடும்பத்தையும் என் பிள்ளைங்களையும் இளக்காரமாப் 
  பார்க்குறத நான் விரும்பல அதான்…என் பிள்ளைகள
  பள்ளிக்கூடத்துல சேர்க்கும்போது சாதி இல்லைன்னு தான் போடனும்னு ஆசைப் பட்டேன்; 
  ஆனா என்ன மாதிரி சாமானியன் அப்படிச் 
  சொன்னா அத பள்ளிக் கூடத்துல ஏத்துக்குவாங்களா என்ன! அதான் என் பொஞ்சாதியோட 
  சாதியில சேர்த்தேன்…..
 
 நானும் படிக்க ஆசைப்பட்டு சின்ன வயசுல கிராமத்துப் பள்ளிக்கூடத்துக்குப் போனேன் 
  ஸார்; அந்த நாட்கள்ல ஊருக்குள்ளதான் 
  சேரின்னு எங்கள ஒதுக்கி வச்சிருந்தாங்கன்னா, பள்ளிக் கூடத்துலயும் அதே கதை தான்…. 
  வகுப்புல தனியா உட்கார வச்சாங்க; மதிய 
  உணவுக்கு தனி வரிசை; குடிக்குற தண்ணிக்கு தனி தம்ளர்; இழிந்த சாதின்னு 
  வாத்தியார்களும் சக மாணவர் களும் எங்க மேல 
  செலுத்துன அதிகாரம் இருக்கே, அப்பப்பா! அந்த வலியும் வேதணையும் இப்ப நெனைச்சாலும் 
  மனசு நடுங்குது.
 
 நான் ஆறாப்பு படிச்சுக்கிட்டிருந்த சமயம்; சின்ன வகுப்புல கிளாஸ் ரூமுலேயே யாரோ 
  ஒரு பையன் வெளிக்குப் 
  போயிட்டான்னு சொல்லி என்னைக் கூப்புட்டு ‘அதை’ச் சுத்தப் படுத்தச் சொன்னாங்க… 
  இத்தனை பேரு இருக்கும் போது நான் ஏன் 
  பண்ணணும்னு கேட்டேன்; என் ஜாதியச் சொல்லி, இதையெல்லாம் நீங்க தாண்டா 
  பண்ணனும்னாங்க; முடியாதுன்னுட்டு என் வகுப்புக்குப்
  போயிட்டேன்; ஹெட் மாஸ்டர் கூப்புட்டு, ‘ஏண்டா நாயெ! உனக்கு அத்தனை திமிறா?’ன்னு 
  அடிச்சார்…. அன்னைக்கோட படிப்பே
  வேணாமின்னுட்டு ஓடி வந்துட்டேன் ஸார்…..
 
 அந்த நிலைமை என் பிள்ளைகளுக்கு வர வேணாமின்னு தான் அவங்களுக்கு என் ஜாதியத் தரல…. 
  ஜாதி இழிவுகளோட வலிய 
  அனுபவிச்சு உணர்ந்த எனக்கு, சலுகைகள் பெரிசாத் தெரியல; நான் பிறந்த ஜாதியோட நிழல் 
  கூட, என் பிள்ளைங்க மேல படிய விட 
  மாட்டேன் ஸார்…” என்றார் தீவிரமான குரலில்.
 
 thangam.mary@gmail.com
 |