இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
அக்டோபர்  2008 இதழ் 106  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
அரசியல்!

பயனுள்ள மீள்பிரசுரம்: தினமணி.காம்!
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு என்னதான் தீர்வு?
- சி.மகேந்திரன் -

*
பாரழுத கண்ணீர் பனிக்கடலாய் கிடக்க இது யாரழுத கண்ணீர் அலை நடுவே மிதக்கிறது

இலங்கைஉப்புக்கடல் நடுவே தனியாக அடையாளம் காட்டி மிதந்து கொண்டிருக்கும் இந்தக் கண்ணீர் திட்டுகள் யாருக்கோ சொந்தமானவை அல்ல. இலங்கையின் பூர்வகுடிகளான ஈழத்தமிழ் மக்களுக்குச் சொந்தமானவை. இடையறாத வெடிகுண்டு சப்தத்தில் வானுயர்ந்த காட்டுமரங்களும் அஞ்சி நடுநடுங்க, ஆதரவற்றவர்களாகிப் போன தமிழ் மக்கள் மண்ணுக்கடியில் தலைபுதைத்து, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பல ஆண்டுகளாய் தங்களுக்குள்ளேயே வடித்த கண்ணீரின் பெரும் சேமிப்புதான் கடல் நடுவே அமைந்த இந்த கண்ணீர்த் திட்டுகள்.

இதைப் போன்ற கண்ணீர் கதைகள் உலகில் சில தேசிய இனங்களுக்கும் நிகழ்ந்திருக்கிறது. ஐக்கிய நாடுகளின் முயற்சியாலும், உலக சமூகத்தின் மனிதாபிமான நடவடிக்கைகளாலும் அவை தீர்க்கப்பட்டுவிட்டன. கிழக்குத் திமோர், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் 15 ஆயிரம் தீவுக்கூட்டங்களுக்கிடையில் அமைந்த ஒரு சின்னஞ்சிறு தீவு. போர்த்துக்கல் கொலணியாக இருந்த இந்த தீவை இந்தோனேசியா 1975 ஆம் ஆண்டில் அதிரடியாகக் கைப்பற்றியது.

தங்கள் அடையாளத்தைப் பாதுகாக்கும் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டேயிருந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் வாக்கெடுப்பு நடந்து கிழக்குத் திமோர் தனக்கான ஆட்சியை அமைத்துக் கொண்டுவிட்டது.

இதைப் போன்ற நிகழ்வுகள் யூகோஸ்லோவக்கியா, அல்பேனியா போன்ற நாடுகளிலும் நிகழ்ந்துள்ளன. ஆனால் இலங்கை தமிழ் மக்கள் பிரச்சினை மட்டும் இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கிறது. ஏன்? இதனை ஆராய்ந்து பார்ப்பது இன்று அவசியமாகிவிட்டது.

காலணி ஆட்சியிலிருந்து விடுபட்ட இலங்கையில் நடந்த முதல் களப்பலி இந்திய வம்சாவளியினர்தான். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தமிழகத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட கூலிகளான இவர்கள் , வெள்ளைக்கார தேயிலை முதலாளிகளிடம் இழந்தது போக எஞ்சிய இரத்தத்தை அட்டைகளிடமும் கொசுக்களிடமும் இழந்து நிற்பவர்கள்.

சுதந்திர இலங்கை, உழைத்து உழைத்து எலும்பும் தோலுமாய் தேய்ந்துபோன இவர்களுக்கான நன்றிக்கடனை இவர்களை நாடற்ற ஆதரவற்றவர்கள் ஆக்குவதன் மூலம் நிறைவேற்றிக் கொண்டது. இதன் பின்னர் தமிழ் மக்களுக்கான ஒப்பந்தங்கள் பலவற்றை இலங்கை அரசு நிறைவேற்றியது என்பதும் உண்மைதான்.

ஆனால் ஒப்பந்தங்களுக்கு முன்னும் பின்னும் நிகழ்ந்த கொடுமைகளைத்தான் யாராலும் சகித்துக்கொள்ள இயலாது. தமிழ் மக்களின் மாமிசத்தை கூறு போட்டு கூவிக் கூவி விற்கும் அளவிற்கு நிலைமை மோசமடைந்தது. இறுதியில் இன அழிப்பு தொடங்கியது. பொருளாதார வலிமையை முறித்துப் போடுவதற்காக வணிக நிறுவனங்கள் அனைத்திலும் தீ வைக்கப்பட்டது. பண்பாட்டு அழிப்பு பாய்ச்சல் வேகம் கொள்ளத் தொடங்கியது.

பாலியல் வன்முறை அச்சத்தால் கணவன் இறந்தால் மட்டும் அகற்றிக்கொள்ளும் நெற்றி திலகத்தைத் தமிழ்ப் பெண்கள் அழித்துக் கொண்டார்கள். இன்று பத்து இலட்சம் தமிழ் மக்கள் அகதிகளாக வெளிநாடுகளுக்குச் சென்று விட்டார்கள். இதில் மிகுந்த துயரம் எதுவெனில் 15 வயதிலிருந்து 40 வயதுக்கு உள்ளிட்டவர்களை இந்த யுத்தம் பலிகொண்டுவிட்டது.

தங்கள் சந்ததியை முற்றாக இழந்து தவிக்கும் முதியவர்களின் புலம்பல் பேரொலிகள் ஈழம் முழுவதும் பரவி நிற்கிறது. கடைசியில் நம்பிக்கையோடு நோர்வே பேச்சுவார்த்தை தொடங்கியது. நான்கு ஆண்டுகளாகியும் குறைந்தபட்ச தீர்வுத்திட்டத்தின் முதல் வரியைக் கூட இலங்கை அரசாங்கத்தால் முன்வைக்க முடியவில்லை. இதற்கு மேல் இலங்கைத் தமிழ் மக்களால் என்ன தான் செய்ய முடியும்?

இரண்டாவது தாயகம் என்று கருதிக்கொண்டு தமிழகத்தின் உதவியையும், இந்தியாவின் உதவியையும் எதிர்பார்க்கிறார்கள். இதில் இந்தியாவின் இன்றைய பங்களிப்பு தான் மிகுந்த வேடிக்கை காட்டிக்கொண்டிருக்கிறது. இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை சகலவிதமான ஒடுக்குமுறையை எதிர்த்து நிற்பதில்தான் அமைந்திருந்தது.

தென்னாபிரிக்காவின் நிறவெறி அரசாங்கத்தை எதிர்த்து மிகவும் கடுமையான போராட்டத்தை நடத்திய கறுப்பின மக்களுக்கு இந்தியா தொடர்ந்து முழு ஆதரவை வழங்கி வந்தது. இதைத்போன்றே பாலஸ்தீனப் பிரச்சினையும். இதன் உயிர்ப்பு மிக்க வாழ்க்கையைப் பாதுகாக்க இந்தியா எல்லா வகையிலும் தனது உதவிகளை வழங்கி வந்துள்ளது.

பாகிஸ்தானின் கிழக்குப் பகுதியில் வங்கமொழி பெரும் ஒடுக்குமுறைக்கு உள்ளானது. பெரும் எண்ணிக்கையில் அகதிகள் இந்தியாவில் குவிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை காரணமாகச் சொல்லி வங்கதேசம் என்ற நாடு உருவாவதற்கு இந்தியா அடிப்படையான காரணமாக அமைந்தது. இதைப் போன்ற உதவிகளை இலங்கைத் தமிழ் மக்களுக்கு இந்தியா தாயுள்ளத்தோடு வழங்கிய உதவிகளை யாரும் மறுக்க முடியாது.

அப்படி இருந்தும் இந்தியா இன்று தடுமாறுவதற்கு எது காரணமாக இருக்கிறது? ராஜீவ் காந்தியின் கொலையை மட்டுமே தொடர்ந்து கூறிக்கொண்டிருக்கிறார்கள். இதனை வரலாற்றில் நடந்த பிழை என்று தான் கூற வேண்டும். இந்தப் பிழையைச் சரிசெய்ய சோனியா காந்தியும் அவரது பிள்ளைகளுமே முயற்சி எடுத்து வருகிறார்கள். எதையும் மன்னித்தல் வேண்டும் என்ற இவர்களின் மேன்மை அனைவரையும் வியக்க வைக்கிறது.

சீக்கிய மக்களை மன்னித்து விட்டோம் என்பதற்காக இப்பொழுது பொற்கோயிலுக்குச் சென்று வருகிறார்கள். இந்த அணுகுமுறையை இலங்கைத் தமிழர்களிடமும் கடைப்பிடிக்க வேண்டியது காலத்தின் தேவையாகும். ஆனால் மாயத்திரை ஒன்று நம்மீது விழுந்துவிட்டது. இது இலங்கைத் தமிழ் மக்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாய் நமக்கு பொய்த் தோற்றம் காட்டுகிறது. இந்திய உளவுத்துறையின் பங்கு தான் மிகவும் கவலை தரும் விதத்தில் அமைந்திருக்கிறது.

இலங்கையில் நடைபெறும் யுத்தத்திற்கு இந்திய இராணுவம் உதவிகளைச் செய்கிறது என்பது ஒருபுறம் இருக்க, மறுபுறத்தில் தமிழக முதல்வரை பாதுகாப்புத் துறைக்கான பிரதமரின் ஆலோசகர் எம்.கே.நாராயணன் சந்திக்கிறார். இலங்கை இராணுவத்திடம் உதவியைப் பெற்றுவிட்டேன் என்று கூறிக்கொண்டிருக்கும் போதே தமிழக மீனவர்கள் சுட்டுத்தள்ளப்படுகிறார்கள்.

இதைவிட கொடுமை என்னவென்றால் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் எல்லையைத் தாண்டியதால் சுடப்பட்டனர் என்று நமது அரசாங்கம் சொல்லிக் கொண்டிருக்கிறது. எல்லையைத் தாண்டிய குற்றத்திற்காக உலகில் எந்த நாட்டிலாவது மீனவர்கள் சுடப்பட்டிருக்கிறார்களா?

சர்வதேச நீதிமன்றங்கள் எதிலும் மீனவர்களுக்காக நீதி கேட்கும் தைரியத்தைக் கூட நமது அரசாங்கங்கள் இழந்துவிட்டன. இவையெல்லாம் இலங்கை அரசுக்கு தனி துணிச்சலைத் தந்திருக்க வேண்டும்.

இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கனடா நாட்டைச் சார்ந்த பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளதாவது;

இலங்கை என்பது சிங்களவர்களின் நாடு. இதில் மற்றவர்கள் உரிமை கேட்பதற்கு எதுவுமே இல்லை. இலங்கையின் பொறுப்புமிக்க இராணுவத் தளபதியின் அறிவிப்பு இதுதான் என்றால் சாதாரண இராணுவ வீரர்களின் மனநிலை எப்படியிருக்கும்?

எந்த ஒரு நாட்டின் தளபதிக்காவது இவ்வாறு பகிரங்கமாக அறிவிக்கும் தைரியம் இருந்திருக்குமா? மன்னார் வளைகுடாவை தங்களுக்கான ஆயுதங்களைப் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்து கொள்ள இலங்கை பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

இது எதிர்காலத்தில் எத்தகைய ஆபத்து என்பதை இந்தியா உணர்ந்ததாக தெரியவில்லை. இதற்கு இந்தியா வகுத்துள்ள செயல்திட்டம் வேடிக்கையானது. மற்ற நாடுகளுக்குப் பதிலாக தாங்களே இராணுவக் கருவிகளை விற்பதில் தவறில்லை என்ற கருத்தைப் பிரசாரம் செய்கிறது.

இதைவிட, தனது சக்தி அனைத்தையும் பயன்படுத்தி இலங்கை இராணுவம் நடத்தும் யுத்தத்தை நிறுத்தினால் இந்திய எல்லைக்கும் பாதுகாப்புக் கிடைக்கும். இதைப்போன்று இலங்கை வாழ் தமிழ் மக்களின் உயிரையும் பாதுகாக்க முடியும். இதை இந்தியா ஏன் உணர்ந்து கொள்ள மறுக்கிறது?

அரசியல் தீர்வுதான் இப்பொழுது இலங்கைத் தமிழ் மக்களுக்குத் தேவை. இன்று கனடா கூட்டாட்சியில் கியூபெக் மக்களின் உரிமையைப் பாதுகாக்கும் அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இனப்பிரச்சினையைத் தீர்க்க இந்த அரசியல் சட்டத்தை இலங்கை அரசு ஏன் பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்தலாம் என்று உலக அறிஞர்கள் பலர் ஆலோசனை வழங்கி வருகிறார்கள்.

வவுனியா தமிழன் ஒருவன் பத்திரிகையில் எழுப்பிய கேள்வி ஒன்றுடன் கட்டுரையை முடிக்க விரும்புகிறேன். எங்கள் தலையைக் குறிபார்த்து குண்டுகள் ஏன் விழ வேண்டும்? உணவும் மருந்துப் பொருட்களும் இல்லாமல் தினம்தினம் நாங்கள் ஏன் சாக வேண்டும்? நாங்கள் செய்த குற்றம் தான் என்ன? தமிழனாய் பிறந்ததைத் தவிர.

இந்தக் கேள்வி ஆறு கோடி தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல. மனித குலத்தின் மனச்சாட்சிக்கும் எழுப்பப்பட்ட கேள்வியாகும்.

நன்றி: தினமணி.காம்.
 


பயனுள்ள மீள்பிரசுரம்: தினக்குரல்.காம்!
இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையில் இந்திய மத்திய அரசின் மௌனம்!  - காலகண்டன் -

மௌனம் சம்மதத்தின் வெளிப்பாடு என்று கூறப்படுவதுண்டு. அது எவ்வளவு உண்மை என்பதை இந்திய மத்திய அரசு இலங்கை இனப் பிரச்சினையில் இன்றைய உச்ச கட்ட யுத்தத்தின் மத்தியிலும் கடைப்பிடித்து வரும் இறுக்கமான மௌனம் எடுத்துக் காட்டுகின்றது. மௌனம் மட்டுமின்றி அதன் பின்னால் இடம்பெறும் சம்பவங்களும் நடைமுறைகளும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானவைகளாகவும் இருந்து வருகின்றன. மேற்படி மௌனத்தைக் கலைக்குமாறும் இலங்கை அரசிற்கு எச்சரிக்கை விடுக்குமாறும் ஆயுத உதவிகளை வழங்க வேண்டாம் என்றும் மத்திய அரசை தமிழகத்துக் கட்சிகள் வற்புறுத்திக் கேட்டு வந்துள்ளன. தமிழகத்தின் சில கட்சிகள் ஆவேசமாக அறிக்கைகள் விட்டும் பிரதமரை நேரில் சந்தித்து மனுக்கள் கொடுத்தும் வந்துள்ளன.

இரண்டு நாட்களுக்குமுன்பு சென்னையில் பல கட்சிகள் கலந்து கொண்ட உண்ணா விரதப் போராட்டம் இடம்பெற்றது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில் நடைபெற்ற இவ் உண்ணாவிரதப் போராட்டமானது இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவாகவும் மத்திய அரசை இலங்கைப் பிரச்சினையில் தலையிட்டு அரசியல் தீர்வை வற்புறுத்துமாறும் கேட்டுக்கொண்டது. தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இவ்வாறான ஒரு உண்ணாவிரதப் போராட்டத்திற்கு முன்னின்று அழைப்பு விடுத்தமை இலங்கைத் தமிழர் பிரச்சினையில் முதல் தடவை என்று கூறலாம். இதற்கு மற்றொரு கம்யூனிஸ்ட் கட்சியான மாக்சிஸ்ட் கட்சி உட்பட சில கட்சிகள் ஆதரவு தெரிவித்தும் கலந்து கொண்டன. மேற்படி அழைப்பை ஏற்ற அ.இ.அ.தி.மு.க. கட்சி, ம.தி.மு.க. என்பன இறுதியில் கலந்து கொள்ளவில்லை. தி.மு.க., பா.ம.க. ஆகியன மத்திய அரசில் பங்கு கொள்வதால் அவற்றுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதனால், பா.ம.க. சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தின் முன் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. அதில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் மத்திய அரசிடம் எதையும் முன்வைக்காது, தமிழக சட்டசபையில் தமிழீழத்தை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றும் கோரிக்கையை முன்வைத்தார். ஏனெனில் மத்திய அரசில் அமைச்சராக இருக்கும் தமது கட்சிக்கும் மகனுக்கும் நெருக்கடி வராதவாறும் அதேவேளை, முதல்வர் கருணாநிதிக்கு சிக்கல் ஏற்படுத்தும் விதமாகவே ராமதாஸ் பேசிச் சென்றார். ஜெயலலிதாவும் வைக்கோவும் தமது அரசியல் நிலைப்பாட்டிற்குரிய கணக்குப் பார்த்து அவ் உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ளவில்லை.

அதேவேளை இவ் உண்ணாவிரதத்தில் நடிகர் விஜயகாந்தின் கட்சியினர் பெருமளவில் கலந்து கொண்டு சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டனர் என்றே பரவலாகப் பேசப்படுகிறது. திருமாவளவன் உள்ளிட்ட பல கட்சிகள் இதில் கலந்து கொண்டு தமிழக மக்களின் இலங்கைத் தமிழர்களுக்கான ஆதரவு உணர்வலைகளுடன் தம்மையும் அடையாளப்படுத்திக் கொண்டனர். தேர்தல் காலம் நெருங்கி வருவதால் தாங்கள் இலங்கைத் தமிழர் விடயத்தில் அந்நியமாகிப் போய்விட்டதாக மக்கள் கருதிவிடக்கூடாது என்பதற்காக தி.மு.க. எதிர்வரும் ஆறாம் திகதி சென்னையில் கூட்டம் நடத்துகிறது. அதேவேளை கருணாநிதியின் மகளான கனிமொழி பிரதமரைச் சந்தித்து ஏதோ முறைப்பட்டதாகவும் செய்தி வெளிவந்துள்ளது. இவைவெறும் போக்குக் காட்டுதல்களேயாகும்.

இவ்வாறு தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விடயத்தில் கட்சிகளுக்கிடையே ஒருமித்த நிலைப்பாடு கிடையாது என்பது தெளிவாகத் தெரிகிறது. எத்தகைய கொள்கையையும் கோரிக்கையையும் கொண்டிருப்பது என்பதில் அக்கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை. அதற்குக் காரணம் கட்சி அரசியல் ஊடாகப் பாராளுமன்றம், சட்டமன்றம், உள்ளூராட்சி மன்றம் போன்றவற்றுக்கான தேர்தல், ஆட்சி அதிகாரம் என்பனபற்றிய நிலைப்பாடுகளேயாகும். ஆதலால் தத்தமது தேர்தல் வெற்றிகளை மையமாக வைத்தே இலங்கைத் தமிழர்களுக்கான ஆதரவு நிலைப்பாடு வரையறை செய்யப்படுகிறது. அதேவேளை, தமிழகத்தின் மக்கள் மத்தியில் இலங்கைத் தமிழர்கள் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படுவது பற்றியும் இன்றைய கொடூர யுத்தத்தால் கடும் பாதிப்புக்கள் பெற்று வருவதும் பற்றிய அனுதாபங்களும் ஆதங்கங்களும் நிறையவே இருந்து வருகின்றன. ஆனால் இந்நிலையைச் சகல தமிழகக் கட்சிகளும் உணர்ந்து பொதுக் கோரிக்கை மூலமான ஐக்கியத்தைக் கட்டியெழுப்பி முன் செல்லத் தயாராக இல்லை. அவை சந்தர்ப்பவாத நிலைப்பாட்டைக் கொண்டு இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு கொடுப்பதால் தமது வாக்கு வங்கிக்கு எவ்வளவு சேரும் என்றவாறே கணக்கிட்டுப் பார்க்கும் நிலையே காணப்படுகிறது. அதுமட்டுமன்றி மத்திய அரசை வற்புறுத்துவதில் தயக்கம் காட்டப்படுகிறது. இந்திய மத்திய அரசில் தமிழகத்திலிருந்து தி.மு.க., பா.ம.க., காங்கிரஸ் என்பனவற்றின் பத்து அமைச்சர்கள் பதவி பெற்றிருக்கிறார்கள். இவர்களுக்கு இலங்கைத் தமிழர் பிரச்சினை எந்த வகையிலும் முக்கியம் இல்லை. பதவிகளே முக்கியத்திலும் முக்கியமானதாகும். தனது மகள் கனிமொழிக்கு அமைச்சர் பதவி பெறுவதற்கு தள்ளாத வயதிலும் டில்லிக்குப் பறந்து செல்லும் கருணாநிதிக்கு இலங்கைத் தமிழர் பிரச்சினை எவ்வகையிலும் முக்கியமல்ல. அதனாலேயே "இலங்கைத் தமிழர் பிரச்சினையில் எனது நிலைப்பாடு மத்திய அரசின் நிலைப்பாடுதான்' என அண்மையில் முத்தமிழ் அறிஞர் எனப்படும் முதல்வர் கருணாநிதி கூறிய பின்பும் அவரிடம் எதிர்பார்க்க வேறு எதுவுமே இல்லை.

அதேவேளை, இந்திய மத்திய அரசு ஏன் மௌனம் சாதிக்கின்றது என்பதையிட்டு சிலர் கடும் ஆதங்கப்படுகிறார்கள். தமிழ்த் தேசிய வாதத்தை உயர்த்தி நிற்கும் சில கற்றறிந்தவர்கள் எனப்படுவோர் இப்பொழுதும் இந்திய மத்திய அரசின் எசமானர்களிடம் எதிர்பார்ப்புக்களைக் கொண்டிருப்பது தான் பரிதாபகரமானதாகும். இன்றைய நிலையில் சென்னையில் காலூன்றி நின்று டெல்கியை நமது பக்கம் கொண்டு வருவதே இலங்கைத் தமிழரின் தந்திரோபாயமாக இருக்க வேண்டும் என எழுதும் ஆய்வாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் பட்டும் பட்டும் பட்டறிவு பெறாதவர்களாகவே உள்ளனர். இன்றும் கூட டெல்கியில் இருந்து எப்பொழுது அழைப்பு வரும் என்றே தமிழர் கூட்டமைப்பின் தலைவர்கள் காத்திருக்கின்றனர். இந்நேரத்தில் ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது. "காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி' என்றவாறே தமிழ்த் தேசியவாதத் தலைமைகள் இந்தியாவை நம்பி மோசம் போனார்கள். இப்போதும் கூட அந்த மாயையில் இருந்து விடுபடத் தயாராக இல்லை.

இது இந்திய ஆளும் வர்க்கத்தின் அடிப்படைக் கொள்கையினை விளங்கிக் கொள்ள மறுப்பதன் விளைவானதாகும். இந்தியா தென்னாசியப் பிராந்தியத்தின் ஆதிக்கம் மிக்க பிராந்திய வல்லரசாக விளங்குவதையே மூலோபாயமாகக் கொண்டு செயற்படுகிறது. இதன் விரிவாக்கம் முழு ஆசியாவிலும் மேலாதிக்கம் செலுத்தும் உள்நோக்குடன் முன் செல்வதாகும். இத்தகைய இந்திய மத்திய அரசின் கொள்கை வகுப்பாளர்கள் இலங்கையின் வடக்கு, கிழக்கில் வாழும் பன்னிரண்டு சதவீதமான தமிழர்களுக்காக தொப்புள் கொடி உறவு, தமிழகத்து உணர்வலைகள் எனக் கூறிக்கொண்டு ஓடோடி வந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பது அறிவீனம் அல்லது முட்டாள் தனமானதாகும். இந்திய ஆளும் வர்க்கத்திற்கு முழு இலங்கையும் அதன் வளங்களும் தேவைப்படுகிறதே தவிர வடக்கு, கிழக்கு அல்ல. இதனையே கடந்த மூன்று தசாப்த காலத்தில் இந்திய மத்திய கொள்கை வகுப்பாளர்கள் தமது கொள்கை வகுப்பின் மத்திய புள்ளியாகக் கொண்டு செயற்பட்டு வந்துள்ளனர்.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையில் கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் இந்தியா நேரடியாகச் சம்பந்தப்பட்டு தலையீடு செய்து வந்துள்ளது. இன்றைய யுத்தம் வரை தேசிய இனப்பிரச்சினையை நகர்த்தி வந்ததில் இந்தியாவின் பங்கும் பாத்திரமும் பற்றி ஆழ்ந்து அறிய ஒருவரால் முடியவில்லை எனின் அத்தகைய ஒருவரால் யதார்த்தத்தையும் உண்மைகளையும் அறிய முடியாது.

இலங்கையில் இந்தியா ஆதிக்கம் செலுத்துவதா அன்றி அமெரிக்க மேற்குலகம் செல்வாக்குப் பெறுவதா என்பதே தேசிய இனப்பிரச்சினை மூலமான கேள்வியாகும். இந்த விடயத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் இளைஞர் இயக்கங்களும் பிளவு பட்டு இருவேறு அணிகளாயின. அவை இரு தரப்புப் பின் புலங்களுடனேயே தமிழ் மக்களின் மத்தியில் அரசியல் நடத்தியும் வந்தன. இன்றும் இந்நிலை தொடர்வதைக் காண முடிகின்றது.

இவ்வாறான சூழலை சிங்கள பௌத்த பேரினவாத ஆளும் தரப்பினர் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். ஜே.ஆர். தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி இந்தியாவிற்கு சாதகமற்ற நிலைப்பாட்டையே முன்னெடுத்து வந்தது. எவ்வாறாயினும் இந்திய ஆளும் வர்க்கத்தை மீறி முற்று முழுதான அமெரிக்க மேற்குலக நிலைப்பாட்டிற்குள் ஜே.ஆரால் செல்ல முடியவில்லை. அதன் பின் வந்த சந்திரிகா அம்மையார் மேற்குலகைப் பகைக்காமலும் இந்தியா எதிர்க்காமலும் ஆட்சி நடத்திச் சென்றார். அதேவேளை இனப்பிரச்சினையைக் கையாள்வதில் இந்திய அனுசரணையை வேண்டியே நின்றார். அதன் அடிப்படையிலேயே அவர் "சமாதானத்திற்கான யுத்தத்தையும்' நடத்தினார்.

அதன் பின் வந்த மகிந்த ராஜபக்ஷ தனது மகிந்த சிந்தனை ஊடாக இந்தியாவை இறுகப் பற்றுவதில் முன் எவரையும் விட உறுதி பூண்டவராகினார். பயங்கரவாதத்தை ஒழிக்கும் கடந்த மூன்று வருட யுத்தத்தில் இந்தியாவைத் தனது நம்பிக்கைக்குரிய பெரியண்ணன் ஆக்கிக் கொண்டார். ஆயுத விநியோகம் ஆலோசனைகள் பெற்றுக் கொள்ள முடிந்தது. அதேவேளை, இந்தியா தனது பொருளாதாரக் கொலனியாக இலங்கையை மாற்றுவதில் விரைந்து செயற்பட்டது. இலங்கை இந்திய வர்த்தக ஒப்பந்தம் தொட்டு திருகோணமலையில் எண்ணெய் சேமிப்பு தாங்கிகள், அனல் மின் நிலையம், மன்னாரில் எண்ணெய் அகழ்வு, காங்கேசன்துறை சீமெந்து ஆலை, பெற்றோல், டீசல் விநியோகம் உட்பட வேறும் பலதுறைகளில் இந்திய மூலதனம் இலங்கைக்குள் உட்புகுத்தப்பட்டுள்ளன. இந்நிலை மேலும் விரிவுபடுத்தப்பட்டும் வருகின்றன.

இன்று இந்திய மூலதனம் எங்கும் தமது கரங்களை விரிவாக்கி வருகிறது. அத்துடன் சந்தை தேடும் போட்டியில் இறங்கி நிற்கிறது. இந்தியப் பெரும் முதலாளிகளுக்கு முதலீடுகளும் சந்தை வாய்ப்புகளுமே முக்கியமானவைகளாகும். அதற்கு இடைஞ்சல் தரக் கூடிய எவற்றையும் அவர்கள் நிராகரிப்பார்கள் எதிர்பார்கள். இதனை மையமாக வைத்தே மத்திய அரசின் கொள்கை வகுப்பாளர்கள் தமது முடிவுகளை நிலைப்படுத்திக் கொள்வார்கள். இத்தகைய பொருளாதார அடிப்படை நலன்களைத் தான் அமெரிக்க, மேற்குலக, ஜப்பானிய ஆளும் வர்க்கத்தினரும் நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். இத்தகைய இருதரப்பு பொருளாதார அரசியல் போட்டிக்குத் தமிழர் பிரச்சினை பலியாகி வருகிறது என்பதை மறைக்க முடியாது.

இத்தகைய நிலையில் இலங்கைத் தமிழர்களின் அடிப்படை அபிலாஷைகளுக்கும் வாழ்வுரிமைகளுக்கும் இந்தியாவின் மத்திய அரசை நம்புவதை விட வேறு முட்டாள்தனம் இருக்க முடியாது. மாநிலக் கட்சிகள் இலங்கைத் தமிழர்கள் சார்பாக எதிர்ப்புக் குரல் கொடுத்தாலும் இலங்கையில் தமிழர் தலைமைகள் எவ்வளவிற்கு இந்திய மத்திய அரசை விசுவாசத்துடன் எதிர்பார்த்தாலும் அவர்கள் தமது பிராந்திய மேலாதிக்க நிலையில் இருந்து ஒரு போதும் மாறப்போவதில்லை. அதுவே இந்தியாவின் மௌனத்திற்குக் காரணமாகும். முன்பு கிழக்கில் யுத்தம் முன்னெடுக்கப்பட்டவேளை இந்தியா இதே மௌனத்தையே கடைப்பிடித்தது. இன்றும் அதையே செய்கிறது. வடக்கும் கிழக்கைப் போல் விடுவிக்கப்படுவதால் பிரச்சினை முடிவுக்கு வரும் என்று மகிந்த சிந்தனை அரசாங்கம் நம்பவது போல் இந்தியாவும் நம்புகின்றது. ஆனால், எந்த நம்பிக்கையும் ஈடேற யதார்த்த நிலைமைகள் இடம் தருமா என்பதே இன்றுள்ள சிக்கல் நிலையாகும்.

நன்றி: தினக்குரல்.காம்!

 


மீள்பிரசுரம்: புதினம்.காம்!
ஈழத் தமிழர் படுகொலைக்கு புதுடில்லியே மெளன சாட்சி: ஜெயலலிதா குற்றச்சாட்டு

ஈழத் தமிழர் படுகொலைக்கு புதுடில்லியே மெளன சாட்சி: ஜெயலலிதா குற்றச்சாட்டு ஈழத் தமிழர் படுகொலைக்கு புதுடில்லியே மெளன சாட்சி என்பது மட்டுமல்ல, இந்தக் கொடூர செயல்கள் அனைத்திற்கும் கூட்டாளியாக இந்திய அரசு செயல்பட்டிருக்கின்றது என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பில் இன்று சனிக்கிழமை ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

சிறிலங்கா இராணுவத்தினர் 100 பேருக்கு அண்மையில் அரியானா மாநிலத்தில் இந்திய இராணுவம் இரகசியமான முறையில் போர் பயிற்சி அளித்ததாக வந்துள்ள பத்திரிகை-தொலைக்காட்சி செய்தியைப்பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன். தொழில்நுட்ப ரீதியாகவும், போர்க்கள ஆற்றலிலும் வல்லமை பெற்றிருப்பதால், இந்திய இராணுவம் இத்தகைய பயிற்சியை சிறிலங்கா இராணுவத்திற்கு அளித்திருப்பதும், இந்திய அரசின் முழு ஆதரவோடும், ஒப்புதலோடும் இந்தப் பயிற்சி நடைபெற்றிருப்பதும் தெளிவாகின்றது.  சிறிலங்கா இராணுவத்திற்கு இந்தியா ஆயுதங்களை வழங்குகிறது என்றும், மிக நவீன இராணுவ ராடர் கருவிகளை வழங்கி, இந்திய இராணுவம் அந்த ராடர் கருவிகளை தந்தது என்றும் அண்மையில் பல ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. இத்தகைய செய்திகளை இந்திய அரசு மறுக்கவில்லை.

பிரதமரின் மூத்த உதவியாளர்கள் சிலரும், இந்திய இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் சிலரும் சிறிலங்காவுக்குச் சென்று வந்தனர் என்ற செய்தியையும் பத்திரிகைகள் வெளியிட்டன. அதையும் இந்திய அரசு மறுக்கவில்லை.

சிறிலங்கா இராணுவத்திற்கு இந்திய மண்ணில் பயிற்சி அளிக்கப்பட்ட செய்தியையும் ஊடகங்கள் திறம்பட கண்டுபிடித்து மக்கள் பார்வைக்குக் கொண்டு வந்துள்ளன.

ஒரு நாட்டு இராணுவம் மற்றொரு நாட்டுப் படையினருக்கு பயிற்சி அளிப்பது எங்குமே நடைபெறக் கூடியது தான். ஆனால், யாருக்கு எதிராக செயற்பட சிறிலங்கா இராணுவத்திற்கு இந்திய இராணுவம் பயிற்சி அளிக்கிறது என்பது தான் முக்கியமான கேள்வி.

இலங்கையில் இராணுவச் செயற்பாடுகள் அனைத்தும் தமிழர்களுக்கு எதிராகத்தான் அமைந்துள்ளன என்பது எல்லோருக்கும் நன்கு தெரியும். விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் மீது மட்டும் தான் தாக்குதல் நடத்துகின்றோம் என்று சிறிலங்கா அரசு பறை சாற்றலாம்.

ஆனால், ஒவ்வொரு நாளும் தமிழர் பகுதிகளில் மடிந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களைப் பற்றி வரும் செய்திகள், சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதலில் உயிரிழப்போர் விடுதலைப் புலிகள் மட்டும் அல்ல, அப்பாவி தமிழ் மக்களும் தான் என்ற உண்மையை உலகுக்குச் சொல்லுகின்றனவே!

இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு இந்திய ஆயுதங்களும், பயிற்சியும் பயன்படுத்தப்படுகின்றன என்பது தான் இந்தச் செய்திகள் அனைத்திலும் பொதிந்திருக்கும் உண்மை.

இந்தக் கொடுமை போதாது என்று சிறிலங்கா இராணுவம் தமிழக மீனவர்களையும் சுட்டுக்கொல்கின்றது. இந்திய அரசால் சிறிலங்காவுக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சதீவு பகுதியிலேயே இந்திய மீனவர் ஒருவரை சிறிலங்கா அரசு சுட்டுக்கொன்றது என்று அண்மையில் செய்தி வந்துள்ளது.

இந்தப் பிரச்சினையை சிறிலங்கா அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றிருப்பதாக இந்திய அரசு எப்போதும் தெரிவிக்கின்றதே தவிர, உருப்படியான நடவடிக்கை எதையும் இந்திய அரசு இதுவரை எடுக்கவில்லை. இந்த வேதனையான உண்மையை என்னவென்று சொல்வது?

இத்தனைப் படுகொலைகளையும் இந்திய அரசு வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கின்றது. அனைத்திற்கும் புதுடில்லியே மெளன சாட்சி என்பது மட்டும் அல்ல, இந்தக் கொடூர செயல்கள் அனைத்திற்கும் கூட்டாளியாக இந்திய அரசு செயல்பட்டிருக்கின்றது. ஆயுதங்களையும், ராடர் கருவிகளையும், பயிற்சியையும் சிறிலங்கா இராணுவத்திற்கு வழங்கியதன் மூலம், இந்த கோரச் சம்பவங்களின் முழு பங்குதாரராக இந்திய அரசு செயற்பட்டிருக்கின்றது.

மத்திய அமைச்சர்கள் என தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் 10 பேரைக் கொண்ட இந்திய அரசு தான் இத்தகைய பழி பாவத்தில் பங்குபெற்றிருக்கின்றது. தி.மு.க-வை மிக இன்றியமையாத உறுப்பினராகக் கொண்ட மத்திய கூட்டணி அரசு தான் இந்தக் கொடுமைகளில் கூட்டாளியாகி இருக்கின்றது.

கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என்று தி.மு.க. அறிவித்தால் மத்திய ஆட்சியே கவிழ்ந்து விடும். ஆனால், "தமிழினத் தலைவர்'' என்று தன்னைத் தானே சொல்லிக்கொள்ளும் கருணாநிதி, தமிழர்களின் நலன், பாதுகாப்பு, நல்வாழ்வு என்பன பற்றிய பேச்சு எழும்போதெல்லாம் பேச்சு, மூச்சற்றுப் போவார் வாய்மூடிக் கிடப்பார்.

தங்களைப் பற்றிய அக்கறை கருணாநிதிக்கு இல்லை என்பதை மக்கள் உணர வேண்டும். வரலாறு கண்டிராத விலைவாசி உயர்வைக்கட்டுப்படுத்த அவர் எதையும் செய்ய வில்லை. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட கருணாநிதி எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

அமெரிக்காவின் தாசானு தாசராக உருமாறியுள்ள டொக்டர் மன்மோகன்சிங், தன் எஜமானிய நாட்டின் அதிபரிடம் இருந்து ஏதும் கற்றதாகத் தெரியவில்லை. நியூயோர்க் நகரின் இரட்டைக் கோபுர கட்டடங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய ஒரு தாக்குதல் காரணமாக, ஆப்கானிஸ்தான் என்ற ஒரு நாடே அமெரிக்காவால் சின்னாபின்னமாக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம்.

அமெரிக்க தேசத்திடம் இருந்து மன்மோகன்சிங் பாடம் எதையும் படித்ததாகத் தெரியவில்லை. சிறிலங்கா மீது படையெடுத்துச் செல்லுங்கள் என்று நாம் கூறவில்லை. சிறிலங்கா பிரதமரை அழைத்து தமிழர்கள் தாக்கப்படுவது குறித்து தனது வருத்தத்தையாவது தெரிவிக்கலாமே?

சர்ச்சைக்குரிய அணுசக்தி ஒப்பந்தம் தான் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கையின் மையப்புள்ளியாகிவிட்டது. இந்தியாவை பாதிக்கும் எந்தப்பிரச்சினையாக இருந்தாலும், அதற்கு மன்மோகன்சிங் கண்ட ஒரே மருந்து அணுசக்தி ஒப்பந்தம் தான்.

பயங்கரவாத தொடர் குண்டு வெடிப்புக்கள், விண்ணைமுட்டும் விலைவாசி, பங்குச் சந்தை வீழ்ச்சி என்று எதுவாக இருந்தாலும், அதற்கு அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றே தீர்வு என நினைக்கின்ற மனிதரைப் பற்றி என்ன சொல்ல இப்படி ஒரு கனவு உலகில் வாழும் மனிதர் கண்ணீரில் மிதக்கும் தமிழ் மக்களுக்காக கடமையாற்றுவார் என நினைப்பது முட்டாள்த்தனம்.

இந்த முகமூடி மனிதர்களின் உண்மை நிலை அறிந்து மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் காலம் வந்துவிட்டது. தங்களின் வாக்குகளால் பதவி சுகத்தை அனுபவிக்கும் இந்தப் போலி மனிதர்களை கீழிறக்க மக்கள் உறுதி ஏற்க வேண்டும்.

மக்கள் சக்தி என்னும் மகத்தான ஆற்றல் மீது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முழு நம்பிக்கை வைத்துள்ளது. மத்திய அரசை அகற்றும் முயற்சியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அயராது பாடுபடும். என் நேரம், நினைவு அனைத்தையும் இந்த முயற்சிக்கே அர்ப் பணிக்கின்றேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: புதினம்.காம்!

 



மீள்பிரசுரம்: புதினம்.காம்!
இந்தியா-சிறிலங்கா கூட்டு சுற்றுக்காவலுக்கு தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி எதிர்ப்பு

இந்தியா-சிறிலங்கா கூட்டு சுற்றுக்காவலுக்கு தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி எதிர்ப்பு இந்தியா - சிறிலங்கா கூட்டு கடற்படை சுற்றுக்காவல் வேண்டாம் என வலியுறுத்தி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பில் அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:
சிறிலங்கா வெளியுறவுத்துறை அமைச்சருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கூட்டு கடற்படை சுற்றுக்காவல் தொடர்பாக ஆலோசனை நடத்தியது தொடர்பாக இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகின்றேன். இந்திய கடல் எல்லையில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் இந்திய கடலோர பாதுகாப்பு படையினருக்கு போதுமான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் நான் மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வந்திருக்கின்றேன். கூட்டு கடற்படை சுற்றுக்காவல் என்பது ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டு பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்ட ஒன்று.அந்த காரணங்கள் பற்றி தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் அப்போதைய தலைமை செயலாளரும் மாநில அரசு அதிகாரிகளும் விரிவான ஆலோசனைகள் நடத்தியுள்ளனர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்னை சந்தித்த போது இந்திய கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படையினருக்கு நவீன கருவிகள், மற்றும் போதுமான கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

உடனடியாக இதை செய்து கொடுத்தால் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

ஏற்கனவே குறிப்பிட்டது போன்று தற்போதைய சூழ்நிலையில் கூட்டு கடற்படை சுற்றுக்காவல் தேவையில்லை. சிறிலங்கா அரசு தெரிவித்திருக்கும் கூட்டு கடற்படை திட்டம் பற்றி பரிசீலிக்க வேண்டிய அவசியமும் இல்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டு கடற்படை சுற்றுக்காவல் திட்டத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உட்பட பல்வேறு தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

நன்றி: புதினம.காம்.


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner