மகிந்த சிந்தனையும், தமிழ் மக்களின் இன்றைய
நிலையும், மறைமுகத் திட்டங்களும்.
இதுவரை
காலமும் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம்தான் ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத்
தீர்ப்பதற்குத் தடைக்கல்லாக நிற்கிறதென்று சர்வதேச சமூகத்திற்குச் சாட்டுக்
கூறிக்கொண்டிருந்த ஸ்ரீலங்கா அரசு இன்று தான் விடுதலைப் புலிகளை இராணுவரீதியில்
வெற்றிகொண்டதாக அறிவித்து இரு மாதங்களைக் கடந்து விட்டிருக்கும் நிலையில் அதன்
செயற்பாடுகள் இலங்கை அரசாங்கத்தின் கடந்த கால வரலாற்றை அறிந்து
கொண்டிருப்பவர்களுக்கு ஆச்சரியமெதனையும் அளிக்கப் போவதில்லை. ஆனால் ஸ்ரீலங்கா அரசானது
தனது கொடூரத்தனமான தாக்குதல்களைத் தமிழ் மக்கள் மேல் கட்டவிழ்த்து விட்டிருந்த
அண்மைய யுத்தத்தில் தமிழ் மக்கள் அன்றாடம்
படுகொலை செய்யப்படுவதைப் பார்த்தும் பார்க்காததும் போல் மறைமுகமாக ஸ்ரீலங்கா
அரசின் புலிகள் மீதான் இராணுவத்
தாக்குதல்களுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்த சர்வதேச சமூகத்திற்கு அதற்கான
பல்வேறு பிராந்திய, பூகோள நலன்களை
மையமாக வைத்துப் பல காரணங்களிருந்தன; இருக்கின்றன. ஆனால் மிகவும் ஆச்சரியமானதும்
, வெறுக்கத்தக்கதானதுமான
விடயமென்னவென்றால் உலகெங்கும் வாழும் அடக்கு, ஒருக்குமுறைகளுக்குள்ளாகும் ம்க்களை
நோக்கி உதவிக் கரங்களைக் கடந்த
காலங்களில் நீட்டிய ருஷ்யா, சீனா, கியூபா மற்றும் நிக்கரகுவா போன்ற
மார்க்க்சியத்தின்பால் நாட்டமுடைய நாடுகளெல்லாமே மிகவும்
தீவிரமாகவே தமிழ் மக்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்த ஸ்ரீலங்கா அரசின்
இராணுவ முயற்சிகளுக்கு ஆதரவளித்ததுதான்.
இடதுசாரிகள் அடக்கு, ஒடுக்கு முறைகளுக்குள்ளாகும் மக்களுக்கு உதவிய காலமெல்லாம்
மலையேறி விட்டது.
உலகமயமாக்கலால் மாறிவிட்ட பின்நவீனத்துவ சூழலில் மேற்படி நாடுகளும்
மாறிவிட்டதைத்தான் மேலுள்ள நிலைப்பாடு சுட்டிக்
காட்டுகின்றது. மாறிவரும் பூகோள மற்றும் பிராந்திய சமூக மற்றும் அரசியற்
சூழல்களில் ஏற்கனவே நிலவிய மையங்கள் தகர்ந்து
கொண்டிருப்பதும், புதியன தமது ஆதிக்கத்தை நிலைநாட்டிடக் கடின
முயற்சிகளெடுப்பதும், இவ்விதமானதொரு சூழலில்
ஈழத்தமிழர்களைப் போன்ற பல்வேறு ஒடுக்குமுறைகளுக்குள்ளாகும் ஒரேயின , ஒரே மொழி
பேசும் மக்களையே பல்வேறு பிரிவுகளாக்கி
அவர்களிடையே நிலவிய மையங்களை உடைத்து மேலும் அவர்களை விளிம்புநிலைக்குத் தள்ளிக்
கொள்வதும் மேற்படி சக்திகளின்
ம்றைமுகத் திட்டங்களாகவிருக்கலாமோ என்னும் எண்ணம்தான் ஏற்படுகின்றது.
இல்லாவிட்டால் இலங்கைத் தமிழ் மக்களையே
முகாம்களிலுள்ள மக்கள், அரச கட்டுப்பாட்டிலுள்ள மக்கள், அரசாங்கத்தின் கீழுள்ள
அரசியல் த்லைமைகளின் கீழுள்ள கிழக்கு மக்கள்...
இவ்விதமாகவெல்லாம் எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்குத் துண்டாடி, தமிழ் மக்களின்
உறுதியைக் குலைத்து, இறுதியில்
போடப்படும் வெறும் எலும்புத்துண்டுகளையே ஏற்றுக் கொள்ளும் வகையிலானதொரு சூழலினை
ஏற்படுத்துவதே இன்றைய
ஜனாதிபதியின் மகிந்த சிந்தனையாகவிருக்கும் போல் தெரிகிறது.
இன்று அரசாங்கம் புலிகளை இராணுவரீதியில் வென்றுள்ளதாக் மார்தட்டிக்கொண்டிருக்கும்
இந்நிலையில் விரும்பினால் அதற்குத் தமிழ்
மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எந்தவிதத் தடைகளுமில்லை. சகல நிறைவேற்று
அதிகாரங்களும் கொண்ட ஜனாதிபதிக்குத்
தனது அதிகாரங்களைச் சர்வதேச அலுத்தங்களையும் புறக்கணித்துப் போரினைத் தமிழ் மக்களின் அழிவிற்கு மத்தியில் பாவிக்க முடியும்.
அதலெந்தத் தயக்கமுமில்லை. ஆனால் தமிழ்
மக்களின் உரிமைகளைக் கொடுப்பதற்கான முயற்சிகளுக்குப் பாவிப்பதென்றால் மட்டும்
தயக்கம். அடுத்த ஜனாதிபதித் தேர்தல்
முடியட்டும், மக்கள் சம்மதிக்கட்டும். பார்க்கலாம். ஒரு புறம் அரசாங்கம் 13வது
திருத்தச் சட்ட மூலத்தை விட அதிகமான
சலுகைகளுடன் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கப் போவதாக
அறிவிக்கின்றது. ஆனால் அரசாங்கத்தின் அந்த
நிலைப்பாட்டினை உண்மையாக நம்பி அதற்காதரவாக தன் கருத்துகளை முன் வைத்த
ஐக்கியநாடுகளுக்கான இலங்கைப் பிரதிநிதியான
டயான் ஜெயதிலகாவின் பதவியை அதற்காகவே பறிக்கிறது. இன்னொரு புறம் அனைத்துக்
கட்சிகளின் செயற்பாடுகளை எவ்வளவு தூரம்
இழுத்தடிக்க முடியுமோ அவ்வளவு தூரத்திற்கு இழுத்தடிக்க மறைமுகமாக மகிந்த அரசு
தூண்டுவதாக நவசமாஜக் கட்சி
குற்றஞ்சாட்டியிருக்கின்றது.
இது இவ்வாறிருக்க, தடுப்புமுகாம்க்ளென்ற பெயரிலுள்ள வதை முகாம்களில்
சுதந்திரமிழந்து வாழும் தமிழ் மக்களின் நிலையோ..
வார்த்தைகளால் கூற முடியாதவாறு மிகவும் துயரகரமானது. குழந்தைகள், பெண்கள்,
மாணவர்கள், முதியவர்களென .. முள்
வேலிகளுக்குள், இராணுவக் கட்டுப்பாட்டினுள் அவர்கள் அடையும் துன்பங்கள் எவ்வளவு
கொடியன. மேற்படி முகாம்களிலுள்ள மக்களில்
வன்னிப்பரப்பையே தாயகமாகக் கொண்ட மக்கள், கடந்த காலங்களில் நடைபெற்ற யுத்தங்களின்
விளைவாகப் புலம்பெயர்ந்து சென்ற
மக்கள்.. இவ்விதம் மக்களிலும் பல்பிரிவினர். இவர்களை உடனடியாக அவர்களது
இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்க
முடியாதிருப்பதற்கு அரசு கூறும் காரணங்களில் முக்கியமானவை:
1. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் காணப்படும் கண்ணிவெடிப்
பிரதேசங்கள். அவர்களைப் பாதுகாப்பாக அனுப்புவதே
தமது பொறுப்பென்று அரசு கூறிக் கொள்வது, அவர்களைக் கொன்றழித்துக் கொண்டே,
புலிகளிடமிருந்து அவர்க்ளைக் காப்பதாக முன்னர்
அவர்கள் கூறிக் கொண்டதைப் போன்றதே. மேலும் கண்ணிவெடிகளைப் பற்றிய அவர்களது
கூற்று சிரிப்பிற்கிடமானது. ஸ்ரீலங்கா அரசு
கூறுவதைப் போல் விடுதலைப் புலிகளின் பிரதேசமெங்கும் கண்ணிவெடிகள்
புதைக்கப்பட்டிருந்தால், அப்பிரதேசங்களில் யுத்தச் சூழலில்
அகப்பட்டிருந்த அரை மில்லியன் மக்கள் நாளும், பொழுதும் விமானப்படையினரின்
பயங்கரமான குண்டுத்தாக்குதல்களுக்கு மத்தியில்
பதுங்கு குழிகளை நாடி ஓடிக் கொண்டிர்நதார்களே... அப்பொழுதேன் அவர்களெல்லாரும்
மேற்படி கண்ணி வெடிகளுக்குப் பலியாகவில்லை.
இவ்வளவுகாலமும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலேல்லாம்
அவர்களாலெவ்விதம் வாழ முடிந்ததது? உண்மையான
நிலையென்னவென்றால்... புலிகளின் இராணுவ முன்னரங்குப் பிரதேசங்களில்
கண்ணி வெடிகளைப் புலிகள் புதைத்து வைத்திருப்பார்களே
தவிர, மக்கள் வாழும் பகுதிகளிலெல்லாம் அல்ல. அரசின் மேற்படி காரணங்களைக் கேட்டுக்
கொண்டும் மெளனமாகவிருக்கும் சர்வதேச
சமூகத்தின் நிலையினை அறியாமையென்பதா? அல்லது அறிந்து கொண்டே அறியாததுபோல்
நாடகமாடுகின்றதா?
2 அவர்களில் ஊடுருவியிருக்கும் விடுதலைப் புலி உறுப்பினர்களைக்
கண்டறிவதிலேற்படும் தாமதம். ஏற்கனவே பத்தாயிரத்திற்கும்
அதிகமானவர்கள் சரணடைந்து விட்டதாகக் கூறுகிறது மகிந்த அரசு. இந்நிலையில் இதனையொரு
தகுந்த காரணமாக ஏற்பதற்கில்லை.
அனைவரைப் பற்றிய விபரங்களும் அதனிடமுள்ளது. விரைவாக் விசாரித்துவிட்டு மக்களை
அவர்களது சொந்த இடங்களுக்கு எவ்வளவு
விரைவாகக் குடியேற்ற முடியுமோ அவ்வளவு விரைவாகக் குடியேற்ற வேண்டும். இதனைச்
செய்யாமல் சாக்குப் போக்குச் சொல்லிக்
கொண்டு காலத்தைக் கடத்துவதன் பின்னணியில் வேறு பல காரணிகளிருக்க வேண்டும்போல்
படுகிறது.
தற்போது வன்னியிலுள்ள தடுப்பு முகாம்களென்ற போர்வையில் இயங்கும் வதை முகாம்களில்
தமிழ் அகதிகளை அடிமைகளாக
அடைத்து வைப்பதால் , சர்வதேச நாடுகளின் கண்டனத்தையும் பொருட்படுத்தாமல், இலாபமென்னவிருக்க முடியும்?
ஸ்ரீலங்கா அரசுக்கு இலாபம் நிச்சயமிருப்பதால்தான்
அவ்விதம் அது மக்களை அடைத்து வைத்துள்ளது. முக்கியமான இலாபங்களாகப்
பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:
1. பனையிலிருந்து விழுந்தவனை மாடேறி மிதித்ததென்று கூறுவார்கள். அது போன்றே
யுத்தக் கொடூரச் சூழலுக்குள் அகப்பட்டு, உற்றார்,
உறவினர், உடைமை மற்றும் சொந்த இருப்பிடமிழந்து , நொந்து, காயமுற்று, உணவின்றிப்
பசியால், பிணியால் வாடி வதங்கி
வந்திருக்கும் இடம்பெயர்ந்த தமிழ் மக்களைச் சொந்த மண்ணிலேயே உறவுகளைப் பிரித்து,
வாட்டி வதக்குவதன் மூலம் அவர்களது
மனவுறுதியினைக் குலைப்பது. ஏனைய பகுதிகளிளுள்ள தமிழ் மக்களுக்கு இதனையொரு
எச்சரிக்கையாகப் புரிய வைப்பது, மேலும் தமிழ்
மக்களை ஏற்கனவே குறிப்பிட்டதுபோல், ஆளை விட்டால் போதுமென்ற நிலைக்குத் தள்ளி,
நாய்க்கு எலும்புத் துண்டொன்றைப் போட்டுச்
சமாளிப்பதுபோல், எந்தவித அதிகாரங்களுமற்ற தீர்வுத் திட்டமொன்றினை நீட்டிச் சமாளிப்பதற்கு பயன்படுத்துவது... இவ்விதம் பல காரணங்களைக்
கூறலாம்.
2. முகாம்களிலுள்ள அகதிகளைக் காரணமாக வைத்து, கறக்க முடிந்த அளவுக்கு
வெளிநாடுகளிடமிருந்து நிதியினைக் கறப்பது. அவற்றில்
பெயருக்குக் கொஞ்சத்தை வடகிழக்குப் புனர்நிர்மாணத்திற்குச் செலவழிப்பது.
எஞ்சியதைத் தெற்குக்குப் பயன்படுத்துவது. படைபலத்தினைப் பெருக்குவதற்குப் பாவிப்பது. அவ்விதம் படைபலத்தினைப் பெருக்குவதற்காக இராணுவத்தளபாடங்களை வாங்கிக் குவிக்கையில், இராணுவ அரசியல் தலைவர்கள் வரும் இலாபங்களைப் பங்கிட்டுக் கொள்வது..
3. மேலும் செட்டிகுளம் தமிழீழத்தின் இன்னுமொரு எல்லையில், மேற்கெல்லையில், அமைந்துள்ள பகுதி.
ஏற்கனவே கிழக்கில் பதவியாவைச்
சிங்களமயமாக்கி விட்டது. முல்லைத்தீவினையும் உயர் பாதுகாப்பு வலையமென்ற பெயரில்
அண்மையில் அபகரித்துக் கொண்டாயிற்று.
இந்நிலையில் அரசின் கவனம் தமிழீழத்தின் மேற்குக் கரைப்பக்கம் திரும்பியுள்ளது.
பல வருடங்களுக்கு முன்னர் முழங்காவிற்
பகுதியில் முந்திரிகைத் தோட்டமொன்றில் சிங்களவர்களைக் குடியேற்றி ஆரம்பிக்கப்பட்ட
முயற்சிகள் தொடர்ச்சியான தமிழ் மக்களின்
விடுதலைப் போராட்டத்தின் தீவிரத்தினால் நிறைகூடவில்லை. இந்நிலையில்
வன்னியிலிருந்து அண்மைய யுத்தத்திலிருந்து அகதிகளாக
வந்தவர்களில் 280,000ற்கும் அதிகமான தமிழ் மக்களைச் செட்டி குளத்திலுள்ள 'மெனிக்
பார்ம்' என்னும் தடுப்பு முகாமில் அடைத்து
வைத்துள்ள ஸ்ரீலங்கா அரசு அவர்களைத் தற்காலிகமாகத்தான் அங்கு தங்க
வைத்துள்ளதாகக் கூறினாலும், எதற்காக அம்முகாமினை ஒரு
நகரமாக்கி வருகிறது. பாடசாலைகள், வங்கிகள், கடைகளென அங்குள்ள மக்களை வாட்டி
வதக்கிக் கொண்டே நிதானமாக
அம்முகாமினையொரு நகராக மாற்றி வருகின்றது ஸ்ரீலங்காவின் மகிந்த அரசு. அதே சமயம்
அங்குள்ள அகதிகளைக் கொண்டே
நிரந்தரமான கட்டடங்களையும் கட்டி வருவதாகக் குற்றச்சாட்டுகள் வேறு எழுந்துள்ளன.
தற்காலிகமான முகாமொன்றில் ஏனிவ்விதமான
செயற்பாடுகள், திட்டங்களெல்லாம். இங்குதான் மகிந்த அரசின் கபடத் தனம் தெரிய
வருகிறது. தற்போதுள்ள சூழலில் கொழும்பில்
மட்டும்தான் மூன்று இலட்சங்களுக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றார்கள். அதற்கு
அடுத்ததாக மக்கள அதிகமாக வாழ்வது மேற்படி
தடுப்பு முகாமில்தான். ஆக இந்த முகாமையே மெதுவாக நிரந்தரமான நகராக அங்குள்ள தமிழ்
மக்களைக் கொண்டே உருவாக்கி
விட்டால் , அவ்விதம் உருவாக்கியபின்னர் அந்த அகதிகளைப் பிரித்துத் தமிழ் மண்ணின்
பலவேறு பகுதிகளுக்கும் அனுப்பி விட்டால்,
300, 000 சிங்கள மக்களை உடனடியாகக் குடியேற்றுவதற்குத் தமிழ் ஈழத்தின் மேற்கு
எல்லைப் புறத்தில் மிகப்பெரிய நகரொன்று
தயாராகவிருக்கும். அந்நிலையில் அந்நகரம் வெறுமையாக இருப்பதால் தாங்கள அதனைப்
பாவிக்கப் போவதாக அரசு கூறலாம். அங்கு
தங்கியிருக்கத் தமிழ் மக்களுக்கு விருப்பமில்லை. அதற்காக அவ்விதமானதொரு நகரை
வீணாக்குவதிலும் பார்க்க சிங்கள மக்களின்
குடியேற்றத்திற்குப் பாவிப்பதில் என்ன தவறுள்ளது? இந்த நாட்டில் சிறுபான்மை,
பெரும்பான்மையென்ற பிரிவினைகள் இல்லாதிருக்க
வேண்டுமானால் , தென்னிலங்கையில் தமிழர்கள் கலந்து வாழ்வதைப் போல் சிங்கள மக்களும்
தமிழ்ப் பகுதிகளில் கலந்து
வாழவேண்டுமென அச்சமயத்தில் ஸ்ரீலங்கா அரசு கூறலாம்.
எனவே உண்மையில் இலங்கை வாழ் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீரவேண்டுமானால், இலங்கை
சுதந்திரமடைந்த காலத்திலிருந்து
தமிழ் மக்கள் மேல் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள், அடக்குமுறைகளுக்கெல்லாம்
ஆட்சி செய்த அரசுகளின் சார்பில் இன்றைய
அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும். சட்டத்தின் முன்னால் சட்டத்தை மீறியவர்கள்
அனைவரும் முன்னிறுத்தப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு (இன, மத, மொழி வேறுபாடுகளற்ற நிலையில்) நஷ்ட ஈடுகள் வழங்க
வேண்டும். அண்மைய யுத்தத்தில் நிகழ்ந்த
போர்க் குற்றங்கள் பற்றிய நீதியான விசாரணகள் சர்வதேசத்தின் அனுசரணையுடன்
நடாத்தப்பட்டு நீதி வ்ழங்கப்பட வேண்டும்.
சர்வதேசத்தின் பங்களிப்புடன், ஆதரவுடன், கண்காணிப்புடன், உத்தரவாதத்துடன் பேச்சு வார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு முறையான
அரசியல்ரீதியிலான தீர்வுகள் முன் வைக்கப்பட்டு, நடைமுறைப்
படுத்தப் படவேண்டும்.
இவையெல்லாம் நடக்கின்றதோ இல்லையோ உலகமெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று
திரண்டு , தமக்கிடையேயுள்ள
வேறுபாடுகளை மறந்து, பொதுவான தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வினை வேண்டி அந்நோக்கத்திற்காக அணிதிரள வேண்டும். தொடர்ச்சியாக
ஸ்ரீலங்கா அரசுகளின் மீது சர்வதேச
அழுத்தங்களை உருவாக்குவதற்கு முயன்று கொண்டேயிருக்க வேண்டும். நெல்சன் மண்டலா
போன்றவர்கள் எவ்விதம் அரசியல்
ரீதியிலான போராட்டங்களை முன்னெடுத்தார்களோ அவ்விதமே ஈழத்தமிழர்களும்
அரசியல்ரீதியிலான போராட்டங்களை தொடர்ச்சியாக
முன்னெடுக்க வேண்டும். உலகத்தமிழ்ர்கள் அனைவரையும் அவர்களது முரண்பாடுகளுடன்
ஒன்றிணைத்துச் செலவதற்கு முதற்படியாக
தமிழ் அரசியல் அமைப்புகள் அனைத்தும் தொடர்ச்சியாக மோதிக் கோண்டிருக்காமல், இது
வரைகாலமும் நிகழ்ந்த தமது அரசியல்,
அமைப்புச் செயற்பாடுகள் அனைத்தையும் சுயபரிசீலனை செய்ய வேண்டும். தம்மைத் தாமே
சத்திய சோதனை செய்து கொள்ள
வேண்டும். தமது தவறுகளை விமர்சனம் செய்ய வேண்டும் இனியும் அதுபோன்ற நிகழ்வுகள்
நடைபெறாது பார்த்துக் கொள்ள வேண்டும்.
கண்களை மூடிய பூனைகளாய், மண்ணிற்குள் முகங்களைப் புதைத்த தீக்கோழிகளாய் இருந்து கொண்டே,
கடந்த காலத் தவறுகளை
ஒப்புக்கொள்வதற்குத் தயங்கி, தொடர்ந்தும் அதே தவறுகளின் அடிப்படையில் போராட்டம்
தொடருமாயின், மீண்டும் அதே வகையான
விளைவுகள் உருவாகும் அபாயங்கள் இருப்பதை உணர்ந்து தமிழ் மக்களின் உரிமைப்
போராட்டம் அரசியல்ரீதியில் முன்னெடுக்கப்பட
வேண்டும். மனித உரிமைகளை மதித்து நடக்க வேண்டும். எத்தகைய மாற்றுக் கருத்துகளையும்
அரசியல்ரீதியில் அணுகும் போக்கு வளரவேண்டும்.
இவ்விதமான தமிழ் மக்களின் நீதியான அரசியல் போராட்டங்களை தென்னிலங்கை அரசுகள்
உணர்ந்து முறையான தீர்வினைக் காண
முன்வர வேண்டும். எதிர்காலத்தில் இலங்கை பிரிபடாமலிருக்க வேண்டுமானால்
தென்னிலங்கைச் சக்திகள் அனைத்தும் ஒன்று திரண்டு,
தம்மைச் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி,
தமிழ் மக்களைத் திட்டமிட்ட வகையில்
காலப்போக்கில் அழித்தொழிக்கும் நடவடிக்கைகளைக் கைவிட்டு உண்மையிலேயே தமிழ்
மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு உரிய
தீர்வுகளைக் காண வேண்டும். கடந்த இரண்டாயிரத்திற்கும் அதிகமான ஆண்டுகளைக் கொண்ட வரலாற்றில் அவ்வப்போது தமிழர்களின் கைகள் ஓங்குவதும், பின்னர் சிங்களவர்களின் ஆதிக்கம் ஓங்குவதுமொன்றும் புதிதான விடயமல்ல. ஏல்லாளனின் ஆதிக்கத்திலிருந்த இலங்கை துட்டகாமினியால் மீட்கப்பட்டது. கனகசூரிய சிங்கை ஆரியனின் யாழ்ப்பாண அரசு சப்புமல் குமாரயாவினால் (செண்பகப் பெருமாள்) வீழ்த்தப்பட்டது. பின்னர் விஜயபாகுவின் கைகளில் விடப்பட்ட அந்த் அரசு மீண்டும் தமிழகத்திலிருந்து படையெடுத்து வந்த கனகசூரிய சிங்கை ஆரியனினதும் , அவன் குமாரர்களின் படையெடுப்பினால் மீட்கப்பட்டது. இடையில் தமிழக மன்னர்களின் குறிப்பாகச் சோழர்களின் ஆட்சியின் கீழ முதலாம் இராஜராஜன் மற்றும் அவனது மைந்தன் முதலாம் இராசேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில் இலங்கையின் ஆட்சி அடிபணிந்திருந்தது. இது தவிர பெரும்பாலான காலகட்டத்தில் தென்னிலங்கைச் சிங்கள அரசுகள் தமிழ்ப் படைகளின் ஆதரவுடனேயே ஆட்சிக் கட்டிலிருந்தன. இவ்விதமானதொரு தொடரும் வரலாற்றில் உண்மையிலேயே இலங்கை மக்களிற்கிடையிலான பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமாயின் , உண்மையான இதயசுத்தியுடன், தொலைநோக்கில் பிரச்சினைகள் அணுகப்பட்டுத் தீர்க்கப்பட வேண்டும். ஆனால் இன்றைய அரசின் தொடரும் அரசியல், இராணுவரீதியிலான நடவடிக்கைகள் அதற்கான நம்பிக்கையினை ஏற்படுத்தவில்லையென்பதே கசப்பான உணமையாகும். சகல நிறைவேற்று அதிகாரங்களையும் கைகளில் வைத்துள்ள ஜனாதிபதி, தமிழர்களைக் கொன்றொழிப்பதறகு அவற்றைப் பாவிப்பதற்குத் தயங்காத ஜனாதிபதி, தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குமட்டும் பல்வேறு காரணங்களைக் கூறித் தமிழர்களினதும், சர்வதேச சமூகத்தினதும் காதுகளில் பூச்சுற்றுவதானது நம்பிக்கையான எதிர்காலத்தினைக் காட்டவில்லை. இருந்தும் அமைதி வழியில் போராட்டங்களையெடுத்து ஏமாந்த தமிழர்கள், பின்னர் ஆயுதப் போராட்டத்தினையெடுத்து அடிபணிந்த தமிழர்கள், இன்னுமொருமுறை சர்வதேசத்தின் ஆதரவுடன் அரசியல்ரீதியில் தமது போராட்டங்களை முன்னெடுப்பதில் தவறொன்றுமில்லை. இதுவும் கடந்த கால வரலாறுகளினடிப்படையில் பார்க்கும்பொழுது நம்பிக்கையளிப்பதாகத் தெரியவில்லை. ஆயினும் தற்போதுள்ள சூழலில் அதுவொன்றே சாத்தியமான வழியாகவுள்ளதால், அவ்வழியினையும் இயலுமானவரையில் பயன்படுத்துவது அவசியம். நம்பிக்கையுடன், ஒற்றுமையுடன் , முரண்பாடுகளுக்கிடையிலான ஒற்றுமையுடன், அடிப்படை உரிமைகளை மதிக்கும் பண்புடன் தமிழர்கள் தமது போராட்டத்தினை முன்னெடுப்பதே ஆரோக்கிய்மானதொரு வழியாகத் தென்படுகின்றது.
- நந்திவர்மன் - ngiri2704@rogers.com
|