- குரு அரவிந்தன் -
இலக்கிய நண்பரும், பிரபல எழுத்தாளரும், சமூக சேவையாளருமான மதிப்புக்குரிய திரு. நா. சோமகாந்தன் அவர்கள் 2006, ஏப்ரல் மாதம் 28ம் திகதி எங்களைவிட்டுப் பிரிந்து விட்டார் என்ற துக்ககரமான செய்தியை கொழும்பில் இருந்து அறிந்ததும் எங்கள் எல்லோருக்கும் அதிர்ச்சியாகவும், கவலையாகவும் இருந்தது. சில தினங்களுக்குமுன் அவரது மூத்த மகன் கண்ணனோடு கதைத்தபோது கொழும்பில் பெற்றோர் நலமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டதால், சடுதியாக ஏற்பட்ட, எதிர்பாராத இந்த துயரசம்பவம் எங்களை அதிர்ச்சிக் குள்ளாக்கியிருந்தது.
சமீபத்தில் நான் கொழும்பிற்குச் சென்றபோது அவரைத் தமிழ்ச் சங்கத்தில் சந்தித்து நீண்ட நேரம் உரையாட முடிந்தது. பத்திரிகையில் தொடராக வெளிவந்த தனது கனடா பயண அனுபவத்தை, நூலாக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு அவர் செயற்பட்டுக் கொண்டிருந்தார். கனடிய இலக்கிய நண்பர்கள் பற்றிய ஒரு ஆவணமாக அந்தப் பயணக் கட்டுரை இருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் முன்னாள் மகாஜனா அதிபர் திரு. கனகசபாபதிதான் இதற்கு அணிந்துரை எழுதுகிறார் என்று மேலும் பெருமையோடு குறிப்பிட்டார். மகாஜனாவின் பழைய மாணவரான அவர் சரியான ஒருவரைத்தான் அணிந்துரை எழுதத் தெரிந்து எடுத்திருக்கிறார் என்று நான் நினைத்துக் கொண்டேன். எனது நூல்களைப் பற்றி விசாரித்தபோது, மணிமேகலைப் பிரசுரம் வெகுவிரைவில் எனது நாவலையும், சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட இருப்பதாகச் சொன்னேன். கட்டாயம் அவற்றை வெள்ளவத்தை தமிழ்சங்கத்தில் வெளியிட வேண்டும் என்றும், அந்த விழாவை தாங்களே முன்னின்று நடத்தி வைப்பதாகவும் கூறி, எனக்கு நம்பிக்கையூட்டி அன்போடு கைகளைப்பற்றி விடை கொடுத்தார். அதுதான் அவருடனான கடைசிச் சந்திப்பு என்று அப்போது நான் நினைத்திருக்கவில்லை.
உடல்நிலை சற்று தளர்ந்துள்ள நிலையிலும், மனம் தளராது எனது அண்ணாவின் மகனின் திருமணத்திற்கு அழைப்பு விடுத்தபோது அவர்கள் தம்பதியாக வந்து வாழ்த்துப்பா மூலம் திருமணத் தம்பதிகளான பிரணவன் - பிரியாவை வாழ்த்தி ஆசீர்வதித்துச் சென்ற காட்சி என் மனக்கண் முன்னால் இப்பொழுதும் பசுமையாக நிற்கின்றது.
2006 மே மாதத்தில் நடக்கவிருக்கும் உதயன் விழாவிற்கு வருவதற்காக எல்லா ஏற்பாடுகளும் செய்வதாகவும், கனடாவில்தான் கனடிய பயணக்கட்டுரை பற்றிய அந்த நூலை வெளியிடப்போவதாகவும் அப்போது அவர் குறிப்பிட்டார். ஏனோ இறைவனுக்குப் பொறுமை இல்லாத காரணத்தால், அவரது கனடியப் பயணத்தைத் தடை செய்து அவசரமாக அவரைத் தன்னிடம் அழைத்துக் கொண்டுவிட்டான். காலனின் கணக்கை யாரால்தான் மாற்றமுடியும்.
தமிழ் இலக்கிய உலகத்தில் திரு.நா.சோமகாந்தன், திருமதி. பத்மா சோமகாந்தன் ஆகியோரின் பங்களிப்பு மிகவும் முக்கிமானது. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையம் தெய்வத்துள் வைக்கப்படும் என்ற பொய்யா மொழிப் புலவரின் வாக்குக்கேற்ப சிறப்பாக வாழ்ந்து காட்டியவர் திரு. நா. சோமகாந்தன் அவர்கள். வாழும்போதே அவர்களைக் கௌரவிக்க வேண்டும் என்ற பரந்த நோக்கத்தோடு எனது நண்பரும் உதயன் ஆசிரியருமான ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்கள் இத் தம்பதியினரை கனடாவிற்கு ஏற்கனவே வரவழைத்து உதயன் ஆண்டு விழாவில் அவர்களது சமூக, இலக்கிய சேவையைப் பாராட்டிக் கொளரவித்திருந்தார். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இவர்கள் இருவரும் சேர்ந்து தமிழ் இலக்கிய உலகிற்கு ஆற்றிய சேவை இலக்கிய ஆர்வலர்களால் மிகவும் பாராட்டப்பட வேண்டிய தொன்றாகும்.
சர்வதேசமும் அறிந்த ஈழத்தின் இலக்கியப் பிரதிநிதியாக தான் இருக்கவேண்டும் என்ற ஆர்வம் காரணமாகவோ, அல்லது ஒருநாள் தமிழீழம் மலரும் என்று முன்கூட்டியே அறிந்து ஈழத்தின் மீது அளவில்லாத பற்றுக் கொண்டதாலோ என்னவோ, வடமராட்சி கரணவாயைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. நா. சோமகாந்தன் அவர்கள் தனது புனைப்பெயரை ஈழத்துசோமு என்று பல வருடங்களுக்கு முன்பே சூடிக்கொண்டார். அதன்மூலம் ஈழத்து மண்ணுக்குப் பெருமையும் தேடிக் கொடுத்தார்.
கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரி, தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி ஆகியவற்றின் பழையமாணவரான மதிப்புக்குரிய சோமகாந்தன் அவர்கள் சிறந்த சிறுகதை, நாவல் எழுத்தாளர் மட்டுமல்ல, இலக்கிய திறனாய்வு செய்வதிலும் சிறந்து விளங்கினார். தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் புலமைபெற்ற இவரது ஆக்கங்கள் பல ஆங்கிலத்திலும் வெளிவந்திருக்கின்றன. தமிழில் வெளிவந்த இவரது சிறுகதைத் தொகுப்பான ஆகுதி, நிலவோநெருப்போ? நாவல்களான விடிவெள்ளிபூத்தது, பொய்கைமலர் போன்ற நூல்கள் முக்கியமாக ஈழத்துஇலக்கிய ஆர்வலர்களால் பெரிதும் பாராட்டப்பட்டன.
பெண்ணிய வாதியான திருமதி. பத்மா சோமகாந்தன் அவர்களுக்கு கணவர் சோமகாந்தனின்
பிரிவு ஈடுசெய்யமுடியாத பெரியதொரு இழப்பாகும். திரு. நா. சோமகாந்தனின்
இறுதிச்சடங்கில் இலக்கியவாதிகள், புத்திஜீவிகள், இலக்கியஆர்வலர்கள்,
எழுத்துத்துறை சார்ந்தவர்கள், சமய, சமூகப் பிரமுகர்கள், கல்விமான்கள் எனப்
பலதரப்பட்டவர்களும் வந்து அஞ்சலி செலுத்தியதிலிருந்தே இச் சிந்தனையாளரின்
முக்கியத்துவம் புலனாகிறது. புன்சிரிப்போடு கனிவான பேச்சும், அமைதியான பண்பும்
ஒருங்கமைந்த சிறப்பு இவருக்கு உண்டு. ஈழத்து மாண்புறு மகளிரில் ஒருவரான திருமதி
பத்மா சோமகாந்தனின் துயரத்திலும், அவரது குடும்பத்தினரின் துயரத்திலும் எனது
சார்பிலும், எனது குடும்பத்தின் சார்பிலும், கனடிய தமிழ் இலக்கிய ஆர்வலர்களின்
சார்பிலும் பங்குபற்றி எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை அவர்களுக்குத் தெரிவித்துக்
கொள்கிறோம்.
அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
kuruaravinthan@hotmail.com