| 
'ஈழத் தமிழ்ச் சிறுகதை மணிகள்' என்னும் 
நூலிலிருந்து!அ. ந. கந்தசாமி: இலக்கிய மின்னல்!
 - செம்பியன் செல்வன் -
 
 [ஈழத்து முற்போக்கிலக்கியத்தின் 
முன்னோடிகளில் ஒருவரான அறிஞர் அ.ந.கந்தசாமி பற்றி செம்பியன் செல்வனின் 'ஈழத் 
தமிழ்ச் சிறுகதை மணிகள்' என்னும் நூலில் வெளிவந்த ஆய்வுக் குறிப்புகளை இங்கு 
பிரசுரிக்கின்றோம். மேற்படி நூலினை 'முன்னோடிகள் கலை. இலக்கிய விமர்சகர் குழு' 
1973இல் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இத்தகவல்களை நூலகத் திட்ட இணையத் 
தளத்திலிருந்து பெற்றுக் கொண்டோம். அதற்காக அவர்களுக்கு எமது நன்றி பல. - 
ஆசிரியர்].
 
 
  இருளை 
விரட்டி ஒளியைப் பரப்பும் மின்னல் - சமுதாயத்தில் சூழ்ந்துள்ள மடமை, வறுமை முதலாம் 
இருள்களை நீக்கி, அறிவையும் ஆனந்தத்தையும் பரப்பும்படி எனக்குப் பணித்தது1, - என்று 
தனது முதற்படைப்பான ‘சிந்தனையும் மின்னொளியும்’ என்ற கவிதை தனது பதினேழாவது வயதில் 
பிறந்ததையும், அது பின்னர் ஈழகேசரிப் பத்திரிகையில் வெளிவந்ததையும் நினைவுகொண்ட 
அமரர் அ.ந. கந்தசாமி அவர்களின் இலட்சியக் கொள்கை வெறி, எழுத்தின் ஆரம்காலம் தொட்டு, 
அவரின் அந்தியகாலமான 14-2-68 வரை மாறவோ, மறையவோ இல்லை. 
 பல் கலைஞன்!
 ஈழத்தமிழிலக்கிய உலகின் பல்வேறு துறைகளிலும் ஈடுபட்டு மற்றையோரால் மறுக்கவோ 
மறைக்கவோ முடியாதளவிற்கு சிறந்த தொண்டாற்றினார். நவீன் தமிழ்க்கலை வடிவங்களாக 
உருவகித்த சிறுகதை, நாவல், விமர்சனம், மொழி பெயர்ப்பு என்பனவற்றுடன் நாடகம், கவிதை 
ஆகிய துறைகளையும் - புத்தாற்றல் நிரம்பிய ஆக்ரோஷ வேகத்துடன் சமூகச் சீர்கேடுகளைக் 
கெல்லி எறியவும், ‘புதியதோர் உலகு’ அமைக்கவும் ஏற்றகருவிகளாக்கினார்.
 
 இதே போன்றே, அவர் அதிகம் ஈடுபட்டு, பெரும் புகழீட்டிக் கொண்ட பேச்சுக்கலை, 
பத்திரிகைத்துற என்பனவற்றையும், சமூக நலன் கருதி அமையும் சிறந்த வெளியீட்டுச் 
சாதனமாக்கிக்கொண்டார்.
 
 இதனால், இவர் எந்தக் கலையை - எந்தத் துறையை எப்போது எதைக் கொண்டாலும் சமூக நல்ன் 
கருதிச் - சிறப்பாகத் தொழிலாள வர்க்கத்தின் நலன் கருதி செயல்பட்ட காரணத்தால். 
இவரின் படைப்புக்கள் இயல்பாகவே - அவர் எடுத்துக்கொண்ட ‘களத்தி’ன் தன்மையினால், ஓர், 
ஆழத்தையும், அகண்ட பரப்பையும் பெற்றுவிடுகின்றன. வாசகரிடையேயும் இலக்கிய 
விமர்சகர்களிடையேயும் இவரின் படைப்புக்கள் ஒரு கௌரவ நிலையை அடைவதற்கு இதுவும் 
முக்கிய ஒரு காரணம் எனலாம். ஆகவே, இவரைப்பற்றிய உண்மையான மதிப்பீடு பல் 
துறைகளையும் தழுவியதாகவிருந்தாலன்றி முழுமையடையாதாயினும், இங்குள்ள தேவை, 
வசதி, அளவுகருதி சிறுகதையில் அவரின் பணியையே மதிப்பிட வாய்ப்பு ஏற்படுகின்றது.
 
 கிராமமும், நகரமும்!
 “சமுதாயச் சூழ்நிலைகளேய மனிதவுணர்வுகளை நிர்ணயிக்கின்றன’ என்ற கார்ல் மாக்ஸின் 
சிந்தாந்தம் இவரின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக அமைந்தது. ஈழத்தின் வடபாகத்திலுள்ள 
அளவெட்டி [உண்மையில் அ.ந.க பிறந்தது யாழ் வண்ணார்பண்ணையில். அவரது தந்தையின் 
அடியாக விளங்கிய அள்வெட்டியில் சிறிது காலம் அவரது பால்யகாலம் கழிந்தது. அளவெட்டி 
மண்ணில் பெருமதிப்பு கொண்ட அ.ந.க அதன் விளைவாக தன்பெயரின் முன்னால் அளவெட்டி நடராஜா 
என்பதைக் குறிக்கும் முகமாக அ.ந. என்னும் எழுத்துக்களைச் சேர்த்துக் கொண்டதாகத் 
தெரிகின்றது. இது தவிர இவர் பல்வேறு புனைபெயர்களில் எழுதியுள்ளார். இவை 
பற்றியெல்லாம் ஏற்கனவே பதிவுகளில் பல்வேறு கட்டுரைகள் அவ்வப்போது வெளிவந்துள்ளமை 
குறிப்பிடத்தக்கது. - ஆ-ர்] என்னும்
 கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் - யாழ்ப்பாண நகரிலுள்ள ஆங்கிலக் கல்லூரி 
ஒன்றிற்கு அக்காலப் புகையிரத வண்டியில், (1940) நாடோறும் சென்று 
திரும்பிக்கொணடிருக்கையில் புதிய புதிய அனுபவங்களினாலும், எண்ணச் சிந்தனைகளினாலும் 
பெரிதும் பாதிக்கப்பட்டான். புரிந்தும் புரியாத - புத்வேகம் ஊட்டக்கூடிய கிளர்ச்சி 
பெறக்கூடிய உணர்வுகளை அக்கிராமத்து இளைஞனுக்கு நகர அனுபவங்கள் ஏற்படுத்தி வந்தன. 
நகரத்திற்கும், கிராமத்திற்குமிடையேயுள்ள வாழ்க்கை முறை வேறுபாடுகள் 
அனுபவிப்புக்கள், துன்ப துயரங்கள், இன்பக் களியாட்டங்கள், உழைப்பும், உழைப்பின் 
பயனும் வேறாகிச் சென்றடைதல், முதலாளித்துவக் சுரண்டல்கள், சாதி சமய
 வேறுபாடுகள் - என்பன பற்றி அவனது இயல்பான மன எண்ணங்களும், நகரக் கல்லூரியின் 
ஆங்கிலக் கல்வித் திறவுகோலினால் ஏற்பட்ட உலகக் கதவுகளின் திறக்கைகளின் ஒளி 
வெள்ளமும் அவனை வியப்பிலும், அதிர்ச்சியிலும், துயரத்திலுமாழ்த்தின. அதனாலேற்பட்ட 
இதயத் துடிப்புகளே அவனை ஓர் எழுத்தாளனாக்கின.
 
 பத்திரிகைத் தொண்டுகள்!
 அ.ந. கந்தசாமி சுமார் நாற்பது சிறுகதைகள் வரையே எழுதியிருப்பார் என அவரின் 
நெருங்கிய இலக்கிய நண்பர்களால் அறியவருகின்றது. அவை யாவும் ஆங்காங்கே அவர் 
பணியாற்றிய பத்திரிகைகளிலும், கையெழுத்துப் பிரதிகளிலும் சிதறிக்கிடக்கின்றன. அவரது 
சிறுகதைகள் இன்றுவரை தொகுப்பாக வெளிவராதிருப்பது விந்தையான வேதனையே, அவரால் 
உற்சாகப் படுத்தப்பட்டும் உயர்த்தப்பட்டும் உருவாக்கப்பட்ட இலக்கியவாணர்கள் 
எத்தனையோ பேர் இன்று ஈழத்தமிழிலக்கிய உலகில் மட்டுமல்லாது சமூக நிலையிலும் உயர்நிலை 
பெற்று விளங்குகின்றனர். அவர்களோ அன்றிப் பிற பதிப்பங்களோ, அ.ந. கந்தசாமியின் 
படைப்புக்களை நூலுருவில் கொணர முயலவேண்டும். அவர் தன் ஆயுட்காலம் முழுவதும் 
தொடர்பு கொண்டிருந்த இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கமாவது இவ்விடயத்தில் ஆழ்ந்த 
கவனம் செலுத்தவேண்டும்.
 
 இவர் - காலத்திற்குக் காலம் பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றி வந்தபோது 
எழுதப்பட்டவையே இச்சிறுகதைகள். எனவே இக்கதைகளில் அவர் பணியாற்றி வந்த 
பத்திரிகைகளின் அவ்வக்கால இலக்கிய, சமூக, அரசியற் போக்குகளை அவதானிக்கக்கூடியதாக 
இருப்பதுடன் அவற்றை மீறிய அ.ந.க-வின் தனித்துவத்தையும் காணக்கூடியதாகவுள்ளது.
 
 1946ஆம் ஆண்டளவில் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் வாரப் பத்திரிகையான 
‘தேசாபிமானி’யின் ஆசிரியர் குழுவில் பணியாற்றி, பின்னர் முறையே சுதந்திரன், 
வீரகேசரி, ஸ்ரீலங்கா ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர் குழுக்களிலும் கடமையாற்றினார். 
இப்பத்திரிகைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையின: கொள்கையளவில் முரண்பாடு கொண்டவை 
நோக்குகளும் போக்குகளும் வௌ;வேறானவை.
 இத்தகைய பத்திரிகைகளில் இவர் கடமையாற்றத்துணிந்த திறம்- காரணம் - என்பன விமர்சன 
ஆராய்வுக்குரியன (தனித்து
 ஆராயப்படவேண்டியதும் கூட). எவ்வாறு இருந்தாலும் இவர் தாம் பணிபுரிந்த அந்தப் 
பத்திரிகைகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக
 இருந்தபோதிலும், தனது கொள்கைப் போக்கை - பொதுவுடமைச் சேவையை - கைவிட்டிலர். ஒவ்வொரு 
பத்திரிகைகளிலும் அவர்
 பணியாற்றியபோது ஒரு பரபரப்பு தென்பட்டது. தேசாபிமானி - மூலம் நாட்டின் சீர்கேடு, 
பொருளாதாரச் சீர்கேடு, சுரண்டல், சாதி ஒழிப்பு என்பனவற்றை ஒழிக்கப்பாடுபட்டார். 
சுதந்திரன் மூலம் நாட்டின் கலை, கலாச்சாரம், இலக்கியம் என்பனவற்றை வளர்க்க 
முன்றார். பத்திரிகைகள் ஏதுவாக இருந்தாலும் அப்பத்திரிகை வாயிலாக நம் கொள்கைகளுக்கு 
முரசம் கட்டினார். இதனாற்றான். எப்பொழுதுமே தம்முள் ஒன்றுடன் ஒன்று 
வக்கரித்துக்கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியிலும், தமிழரசுக் கட்சியிலும் இவரால் பணியாற்ற 
முடிந்தது போலும். அப்போது தினப்பத்திரிகையாக மூவாயிரம் பிரதிகளே 
விற்பனையர்கிக்கொண்டிருந்த சுதந்திரன் பத்திரிகையை, இவர் பொறுப்பேற்ற ஆண்டிலேயே 
பத்தாயிரம் பிரதிகளாக உயர்த்தினார். இவ்வுயர்வுக்கு இவரின் எழுத்தே காரணம் எனலாம் 
இன்று சுதந்திரன் பத்திரிகையில்,
 பிரபலமாக அடிபடும் ‘குயுக்தியார்’ பதிலை முதன் முதலாகத் தாபித்தவர் இவரே! பிரான்சிய 
எழுத்தாளரான ‘எமிலி ஜோலா’வின் ‘நாநா’- என்ற நாவலை மொழிபெயர்த்து வெளியிட்டதும், 
இவரின் சிறந்த சிறுகதைகள் வெளிவந்ததும் இக்காலத்தில்தான். நாநாவின்
 மொழிபெயர்ப்பு - தமிழ் நாட்டிலும், ஈழத்திலும் பெரும் பரபரப்பை ஊட்டியதுடன், 
ஈழத்தின் நாவல் போக்கின் சிந்தனையில் பலத்த
 திருப்பத்தை ஏற்படுத்திற்று.
 
 இதே போலவே, வீரகேசரியில் பணிபுரிந்தபோது, இவரின் கடமை, எழுத்துடன் மட்டும் 
நின்றுவிடாது. செயல் முறையிலும்
 தீவிரமடைந்தது. வீரகேசரியில் முதன் முதலாகத் தொழிற் சங்கம் ஒன்றினைத் தாபித்து 
தொழிலாளர் உரிமைக்காகப் பாடுபட்டவர்.
 ஆகவே, இந்த உண்மைகளை முன்னிறுத்தியே இவரின் படைப்புகளை ஆராய்தல் 
பொருத்தமுடையதாகும்.
 
 சிறுகதைச் சிற்பங்கள்!
 சிதறிக்கிடக்கும் இவரின் சிறுகதைகள் எல்லாவற்றையுமே நாம் சிறந்தனவெனக் கூறிவிட 
முடியாது. எந்தவொரு எழுத்தாளனின் எல்லாக் கதைகளுமே இலக்கிய ரீதியில் வெற்றிபெற்று 
விட முடியாது. ஏன் புதுமைப்பித்தனின் கதைகளில்கூட சுமார் பதினைந்தே வெற்றிபெறும் என 
க. நா. சுப்பிரமணியம் கூறுவதும் இங்கு கவனிக்கற் பாலது. இவரின் கதைகள் 
பத்திரிகைகளின் தேவைகளுக்காக அவ்வப்போது எழுதப்பட்டவையாகும். எனவே, சிலவற்றின் 
கலைத்துவமோ, பூரணத்துவமோ நிறைந்திருப்பதாகக் கூறமுடியாது. அதுமட்டுமல்ல அ.ந.க-வே 
தாம் எழுதியவற்றுள் சிறந்தவை என சுமார் பதினைந்து கதைகளைக் குறித்துப் போயுள்ளார். 
எனவே, அக்கதைகளை மட்டும் வைத்துக்கொண்டு அவற்றின், சிறுகதைப் பண்புகளையும், 
தன்மைகளையும் ஆராய்வதே இம்முயற்சியாகும். அவர் தமது சிறுகதைகளை
 ஆரம்ப காலங்களிலேயே எழுதினார். பிற்காலங்களில் அவர் கவனம் நாடகம், நாவல், கவிதை, 
கட்டுரை எனத் திரும்பி விட்டது.
 
 இரத்த உறவு (மறுமலர்ச்சி), நாயிலும் படையர் (வீரகேசரி), காளிமுத்து இலங்கை 
வந்த கதை (தேசாபிமானி) பாதாள மோகினி, நள்ளிரவு, ஐந்தாவது சந்திப்பு (சுதந்திரன்), 
பரிசு, குருட்டுவாழ்க்கை, உலகப்பிரவேசம், ஸ்ரீதனம், பிக்பொக்கட், சாகும் உரிமை, 
கொலைகாரன், உதவிவந்தது, வழிகாட்டி ஆகிய கதைகளை அ.ந.க. தனது நல்ல கதைகள் 
எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
 இரத்தஉறவு, ஐந்தாவது சந்திப்பு, நாயிலும் கடையர், - ஆகிய கதைகள் இவருக்குப் பெரும் 
புகழீட்டிக் கொடுத்தன. முதலிரு கதைகளும் சிங்கள மொழியில் பெயர்க்கப்பட்டு 
புகழ்பெற்றவை. தேயிலைத் தோட்டவாழ்வு பற்றிய ‘நாயிலும் கடையர்’ - மிகச் சிறந்த 
தமிழ்ச் சிறுகதை என பல்வேறு ஈழத்து விமர்சகர்களால் பாராட்டப்பட்டதொன்று.
 
 இவரின் கதைகளில் நாம் புன்னகையைக் காணவில்லை. எங்கும் ஏக்கமும், போராட்டமும் 
வறுமையும் சமுதாயத்தின் சீர்கேடுமே
 கருவாக அமைந்துள்ளன. ‘இன்று நாம் வாழும் சமுதாயத்தில் நாம் புன்னகையைக் காணவில்லை. 
துன்பமும் துயரமும், அழுமையும் ஏத்தமும் கண்ணீரும் கம்பலையுமாக நாம் வாழும் உலகம் 
இருக்கின்றது. ஏழ்மைக்கும் செல்வத்திற்கும் நடக்கும் போரும், அடிமைக்கும் 
ஆண்டானுக்கும் நடக்கும் போரும் இன்று உலகைக் கலங்க வைத்துக் கொண்டிருக்கின்றது. 
இப்போர்களினால் வாழ்வே ஒரு சோககீதமாகி விட்டது2, எனவே, வாழ்வின் உயிர் நாடியான 
சமூகப்பிரச்சினையான இவற்றைப் பொருளாகக் கொண்டு இவரின் கதைகள் எழுந்தன. சமூக 
ஆராய்வின்போது எழும் முடிவுகள் - தத்துவஞானிக்குத் தத்துவங்களாகவும், 
எழுத்தாளனுக்கு கதைகளாகவும் வெளியாகின்றன.
 உண்மையில் சிறந்த எழுத்துக்கள் வாழ்வின் நடப்பியல்பில் பிறப்பன அல்ல. 
அவ்வியல்புகளின் ஆராய்வின் முடிவிலேயே பிறக்கின்றன என்பதற்கு இவரின் கதைகள் சிறந்த 
உதாரணங்களாகும்.
 
 கலாபூர்வ, சித்தாந்தங்கள்!
 இவரின் பேச்சுக்கள், எழுத்துக்கள், சமூகத் தொடர்புகள், இயக்கத்தொண்டுகள் 
என்பனவற்றைக் கவனிக்கையில் இவர் மாக்ஸீயச் சித்தாந்தங்களினால் வசீகரிக்கப்பட்ட, ஒரு 
சமூகப்புரட்சித் தொண்டனாகவே தரிசனம் தருகின்றார். ஆயினும் இவரின் படைப்புக்களில் 
இச்சித்தாந்தங்கள் கலாபூர்வமாக வெளிவருவதிலிருந்தே இவர் சமுதாய சோசலிச இலக்கிய - 
மக்கள் எழுத்தாளராகின்றார்;. இதுவே, இவரை ஏனைய மாச்ஸீயச் சித்தாந்தகாரரிலிருந்து 
வேறுபடுத்துவதுடன், தனித்துவம் மிக்கவராகவும் காட்டுகின்றது. சித்தாந்தக்காரர்
 எழுத்தாளராவதற்கும், எழுத்தாளர் சித்தாந்த அபிமானியாக மாறுவதற்குமுள்ள நுணுக்கமான 
வேறுபாட்டின் எல்லைக் கோடாக இவர் விளங்கினார் என்பதனை இவரின் சிறுகதைகள் நன்கு 
எடுத்துக்காட்டுகின்றன. இவரை நிதர்சன உலகின் புத்துஜீவியான இலக்கியகாரர் எனவும் 
குறிப்பிடுவது பொருந்தும். ஏனெனில் தம்மை வசீகரித்த - நாட்டின் தவிர்க்கமுடியாத, 
எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய வீடிவெள்ளிச் சித்தாந்தமான - மாக்ஸீயக் 
கொள்கைகளை அவர்தம் படைப்புக்களில் கையாளுகையில் சித்தாந்தங்கள் வாழ்வின் நடப்பியல் 
உண்மைகளாக மாறிவிடுகின்றனவேயன்றி, சித்தாந்தத் தூல உடல்களாக நிற்கவில்லை. பிற 
சித்தாந்தக் கலைஞர்களின் படைப்புக்களில் கலையை மீறி சித்தாந்தங்கள் 
போதனைபுரிவதுபோலோ, கலைக்கொள்கைக்காரரின் வெறும் அலங்கார உயிரற்ற கலைவடிவங்களைப் 
போலவே, இல்லாததால், இவரின் படைப்புக்கள் எல்லாராலும் ஏற்றுக்கொள்ளக் 
கூடியதொன்றாகிவிட்டது. இவரது படைப்புக்களை அவதானிக்கையில் - உருவமா, 
உள்ளடக்கமா? என்பன போன்ற பிரச்சினைகள் எழாதிருப்பதும் குறிப்பிடத்தக்கதே.
 
 இலக்கியத் தொனி!
 அ.ந. கந்தசாமி அவர்களிடம் இலக்கியம் பற்றித் தெளிவான பார்வையிருந்தது. 
உறுதியிருந்தது என்பதனை இவர் கதைகள்
 புலப்படுத்துகின்றன. இலக்கியம் என்பது பொழுதுபோக்குச் சாதனமல்ல. அதுவே சமூகப் 
புரடசியின் உன்னத கருவி. அக்கருவியினால் மக்கள் கூட்டம் இனம் காட்டப்படவேண்டும். 
அவர்கள் வாழ்க்கை வெளிச்சத்திற்கு வரவேண்டும் - உண்மை வளர்சசிபெறவேண்டும் என்ற 
அவாவினால் எழுதினார் என்பதனையே அவர் கதைகளின் பொதுப் பண்பாகக் கூறலாம். அதே 
வேளையில் இவரின் சிந்தனை நாட்டை
 மீறிய சர்வதேசியப் பண்பின் அடியொட்டி விரிவடைவதையும் காணலாம். இவர் சிறுகதைகள் 
மூலம் மனிதனை விமர்சித்தார். அவர் விமர்சனத்தில் சோகம் கூட அனல் எறியும் ஆத்மீக 
வெளிப்பாடாக அமைந்துள்ளதைக் காணலாம். இவர் இலக்கியத்தை மட்டுமலலாது உலக இயக்கம் 
பற்றிய சிந்தனையிலும், ஆழ்ந்து ஈடுபட்டு அதில் உலக மனிதன என்ற ரீதியில் குலத்தில் 
ஈழத்தவனின் பண்பும் பணியும்
 பற்றி ஆழமான கருத்தினைக் கொண்டிருந்தார் என்பதனை.
 
 உலகில் ஒரு பொருளும் தன்னந்தனியே ஏகாந்தமான சூழ்நிலையில் தொடர்பின்றி 
இயங்குவதில்லை. எப்பொருளையும் சூழ்நிலைகளே ஆட்சி செய்கின்றன3, ஆகவே மனஜதன் ஒரு 
சமூகப் பிராணி அவனின் தனித்துவம் பண்புகள், விருப்பு வெறுப்புகள் முக்கியமல்ல. சமூக 
நிலையில் அவன் விருப்பு வெறுப்பு பங்கின் நிலை என்பனவற்றையே விமர்சித்தார். 
சூழ்நிலைகள் என்று கூறும்பொழுது அந்தக் காலங்களின், பிரதேசங்களுட்பட்ட அரசியல், 
பொருளாதார, சமூக நிலைகளையே குறித்தார். அதுமட்டுமன்றி, தன்கதைகளிலே மனிதனை
 விமர்சித்ததுடன் மட்டுமன்றி, மக்களின் கடமைகளையும், இனிச்செய்ய வேண்டியதென்ன? 
என்பதனையும் குறியீடாகவும். தம் கதைகளில் வெளியிட்டார். உண்மையான எழுத்தாளனின் 
உயர்ந்த பணிகளில் இதுவே முக்கியமானதாகும். பிரசசினைகளைக் காடடுவது மட்டும் போதாது, 
அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குரிய வழிவகைகளை காட்டுவதே உந்நத கலைஞனின் நோக்கம் 
என்பதனை இவர் கதைகள் புலப்படுத்துகின்றன. ‘மனிதன் சமுதாயத்தின் ஒரு அங்கம். 
அவளுக்குச் சமுதாயப் பொறுப்பொன்றுண்டு: வெறுமனே உண்ணுவதும்,
 உறங்குவதும் புலனாகர்ச்சிகளில் ஈடுபடுவதும் வாழ்க்கையாகாது. அறிவு, வளர்ச்சி பெற்ற 
மனிதன் இவற்றோடு வேறு சில
 காரியங்களையும் செய்ய விரும்புவான். மற்றவர் முகத்தில் புன்னகை தோட்டத்தில் 
பூத்துக்குலுங்கும் முல்லை மலர் போல் அவனுக்கு இன்பமூட்டும்.
 
 கட்டறுத்த புரோமத்தியஸ்!
 இவரின் எழுத்துக்கள், மானிடவர்க்கத்தின் முன்னேற்றத்தைத் தடைசெய்யும். சாதி சமய 
வேறுபாடுகள், ஆண்டான் அடிமை அமைப்பு, சாதி வித்தியாசங்கள், வர்க்க வேறுபாடுகள் 
போன்ற கைவிலங்குகளை அறுத்தெறிந்து சுதந்திரமானதும், சகோதரத்துவமானதும், 
சமத்துவமானதுமான சகவாழ்வினை வேண்டி நின்றதனாலேயே கலாநிதி க. கைலாசபதி அவர்கள் 
‘கட்டறுத்த புரோமத்தியஸ் என்று கருதப்படும் வகையில் முற்போக்கை முழுமூச்சாகத் 
தழுவிக்கொண்டவரும் முற்போக்கு இலககிய அணியின் மூத்த பிள்ளைகளுள் ஒருவருமான அ.ந. 
கந்தசாமி 5’ என்று குறிப்பிடுவதும் கருத்தில் கொள்ளத்தக்கது. (ஷெல்லி எழுதிய 
Pசுழுஆநுவுர்நுருளு ருNடீழுருNனு
 -என்ற காவியத்தில், நெருப்பின் கடவுளான ணுநுருளு இடமிருந்து நெருப்பைப் பறித்து, 
மானிடர்க்கு வழங்கிய குற்றத்திற்காக
 புரோமத்தியஸ் பாறைகளில் கட்டபட்டு கழுகுகளினால் துன்புறுத்தப்பட்ட கதையே இதுவாகும். 
புNருhமத்தியஸ் இன்று மனித புத்தியின் சின்னமாகக் கொள்ளப்படுபவன்) இவ் அடைமொழி 
சற்று எல்லை மீறியதாயினும், சில உண்மைகளைப் புலப்படுத்தவே செய்கின்றன. அ.ந.க-வின் 
சிந்தனைகள் இலக்கியத்திற்குப் புதியதல்லவாயினும், நம் நாடடிற்கு - அதுவும் 
தமிழிலக்கியத்திற்கு அந்நியமானவையாகவோ, அதிக பரிச்சமற்றனவாகவோ, அல்லது இவற்றைப் 
பொருளாகக்கொண்டு எழுதுபவற்றை இலக்கியமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமற்றவர்களாக 
மக்கள் இருந்த வேளையில் இவற்றைத் தமிழில் எழுதினார். அரசியலும் கலந்து எழுதினார்.
 அரசியலறிவு சாதாரண மக்களிடையே வளர்ச்சிபெறாத அக்காலத்தில் (ஏன் இன்று கூட 
அரசியலறிவு மக்களிடையே வளர்ந்துள்ளதாக கூற முடியுமா?) அரசியற் கலந்த ஆக்கங்களை 
வெளியிட்டார். இவர் தமது எழுத்தால் வாழ்க்கையை விமர்சித்து அதன் மூலம் 
வஞ்சிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் நம்பிக்கையூட்டவும் முனைந்தார். 
சமுதாயத்திற்குப் பயனள்ளதாக சுரண்டலும், அநீதியும் நிறைந்த சமுதாயத்தை ஒழிக்கவும், 
புதிய சமதர்ம சமுதாயத்தை அமைக்கவும் பாடுபட்டார்.
 
 உள்ளத்தின் உரைநடை!
 இவரின் படைப்புக்களின் வெற்றிகளுக்கு இவரின் உரை நடையும் முக்கிய காரணம் எனலாம். 
எளிய வாக்கியங்களாக கருத்துக்களை
 வெளியிட்டார். அக் கருத்துக்களை உவமை, உருவகச் சொல்லாட்சிகளினால் அழகுபடுத்தியும், 
கம்பீரத் தொனியேற்றியும், எல்லாருக்கும் புரியும்வண்ணம் மக்கள் முன் வைத்தார். இப் 
பண்பு சிறுகதைகளில் மட்டுமல்லாது, ஆராய்ச்சிக் கட்டுரைகளிலும், கொள்கை விளக்கக் 
கட்டுரைகளிலும் எல்லாரையும் வசீகரிக்கும் வண்ணம் அழகழகான, ஆழமான, எளிய உவமை 
உருவங்களை அமைத்து எழுதுவார். சாதாரணமாக ஒரு சிறு கட்டுரையிற் கூட குறைந்தது பத்தோ 
பதினைந்து உவமை உருவங்களைக் காணலாம். உதாரணமாக - தேசிய இலக்கியம் 
என்ற கட்டுரையில் பின்வருமாறு எழுதிச் செல்கிறார்.
 
 ‘… சமுதாயம் கலையின் கருத்துக்களை தன்னகத்தே சூல் கொண்ட மேகம் நீரைத் தாங்கி 
நிற்பதுபோல் தாங்கி நிற்கிறது. எழுத்தாளனின் மேதாவிலாசம் நிறைந்த உள்ளம் கூதற் 
காற்றுப் போல் மேகத்தில் வீசுகிறது. அதன் பயனாக இலக்கியம் என்னும் நீர் பொழிய 
ஆரம்பிக்கிறது.6’
 
 தேசிய இலக்கியம்!
 1960ஆம் ஆண்டளவில் ஈழத்தில் எழுந்த தேசிய இலக்கியக் குரலுக்கு பெரும் ஆதரவு 
அளித்தவர் இவர். அதுபற்றி அவர் கொண்டிருந்த கருத்து அவரின் இலக்கியங்களில் 
வெளியாகின. தேசிய இலக்கியம் என்றால் ஏதோ தமிழகத்திலிருந்து, ஈழத்தமிழனைப் 
பிரிக்கும் முயற்சி என மருளும் மக்களும், அரசியற் தலைவர்களும் இருக்கின்றார்கள். 
‘ஒவ்வொரு சமுதாயமும் தனக்கென்ற சில பண்புகளையும், விருப்பு
 வெறுப்புகளையும் தேவைகளையும் பழக்க வழக்கங்களையும் கனவுகளையும் கொண்டு 
விளங்குகின்றது 7’ ….ஈழத்தமிழர்களிடையே வாழும் எழுத்தாளன் ஈழத்தமிழனையும், அவனது 
மொழியையும் பாரம்பரியங்களையும், பண்புகளையும் தானறிவான். அவனிடம் ஜாதி 
வேற்றுமைகளுண்டு. ஆனால் அவனிடத்தே சக்கிலி, படையாட்சி என்ற தென்னிந்திய ஜாதிகள் 
கிடையாது. நாயுடுவும், செட்டியும், நாடாரும், தேவரும் இலங்கையில்லை. இங்கு 
தாழ்த்தப்பட்டவர்கள் உளர். ஆனால் நளவர் என்ற நமது தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பெயரைச் 
சொன்னால் தமிழகம் என்னவென்று ஆச்சரியமடையும். இங்குள்ள சாதிப் போர் பிராமணனுக்கும் 
தாழ்த்தப்பட்டவனுக்குமல்ல.
 வேளாளனும் நளவனும் சாதிப்போரில் சிக்குகின்றனர் 8’
 
 தேசிய இலக்கியத்திற்கு யதார்த்தம், மண்வாசைன என்ற இலக்கிய அம்சங்கள் மிகமிக அவசியம் 
எனக் கருதினார். அத்துடன்
 மட்டுமல்லாது, புற வாழ்வில் என்னவித சீர்திருத்தங்கள் அறிவியக்கங்களை 
மேற்கொண்டாலும், அகவாழ்வில் பூரணத்துவம் பெறாதளவில் மனித வாழ்வு செம்மையுறாது என்ற 
கருத்துக் கொண்டவர் இவர். இவரின் எழுத்துக்களில் காணப்படும் இன்னொரு அம்சம் 
பாலுணர்ச்சி ஆகும். பாலுறவு விவகாரங்களை மனோதத்துவ அடிப்படையில் ஆராயும் பண்பினை 
இவரின் கதைகள் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 பிற சாதனைகள்!
 சிறுகதையைப் போலவே, கவிதைத் துறையிலும் இவர் வெற்றியீட்டினார். எதிர்காலச் 
சித்தன் பாட்டு, துறவியும் குஷ்டரோகியும், சத்திய தரிசனம் என்பன சிறந்தவை.
‘கடவுள் - என்சோரநாயகன்' என்ற கவிதையைக் கேட்ட, தென் புலோலியூர் மு. 
கணபதிப்பிள்ளை ‘ ஒரு நூற்றாண்டிற்கு ஒருமுறைதான் இப்படிப் பட்ட நல்ல கவிதை 
தோன்றும்’ என்றார்.
 
 இவருடைய ‘மதமாற்றம்’ எ;ற நாடகத்தைப் பற்றி பேராசிரியர். க. கைலாசபதி பின்வருமாறு 
குறிப்பிட்டார். ‘இதுவே தமிழில் இதுவரை எழுதப்பட்ட நாடகங்களில் ஆகச்சிறந்தது’
 
 பாரதியார் வரலாற்றை ஆராய்ந்து - பாரதியார் கூறிய யாழ்;ப்பாணத்துச் சாமாயர் - 
அல்வாயூர் அருளம்பல தேசிகர் எனநிலை நாட்டினார்.
 
 1,2,4. நான் ஏன் எழுதுகிறேன் - புதுமையிலக்கியம் - நவம்பர்-1961
 3 கட்டுப்பாடுகள் அவசியமா - அ.ந.க. மறுமலர்ச்சி ஆண்டு இதழ்
 5 அம்பலத்தான் - ஈழத்தில் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி - 1972 கலாச்சார பேரவை
 6,7,8 - தேசிய இலக்கியம் - 4-3-2 - மரகதம் ஒக்டோபர் 1961
 
 நன்றி: நூலகத் திட்டம்: 
http://noolaham.net/
 |