பதிவுகள்
|
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம்.
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும்
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில்
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
|
மணமக்கள்! |
|
தமிழ்
எழுத்தாளர்களே!..
|
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை
வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள்
ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை
கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல்
ngiri2704@rogers.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்
படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு
ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு
அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின்
நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப்
படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே
சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள்
பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப்
பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது
மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து
கொள்ளலாம். |
|
இலக்கியம்: எதிர்வினை! |
ஆபிதீனின் சமீபத்திய கதை
- நாகூர் ரூமி -
போனாலும் -- மீண்டும் ஒரு சஃபர் கதை என்ற தலைப்பில் ஆபிதீன் பதிவுகளில் (அக்டோபர்
2009 இதழ் 118 -மாத இதழ்) ஒரு கதையைப் பதிவு செய்திருக்கிறார். அதைப் படித்ததை
சாக்காக வைத்து நான் அவரைப் பற்றியும் அவரது எழுத்தைப் பற்றியும் கொஞ்சம் சொல்ல
வேண்டும்.
ஆனால் எனக்குத் தயக்கமிருக்கிறது. அதற்குப் பல காரணங்கள். அதில் முக்கியமானது
அவர் என் நெருங்கிய நண்பர் என்பதுதான். நாங்களே மாலைகளை வாங்கி மாற்றி மாற்றி
ஒருவர் கழுத்தில் ஒருவர் போட்டுக்கொள்வது மாதிரி இருக்கலாம். என்றாலும் எழுதுவது
என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். (யாரிடம் திறமை இருந்தாலும் நான் பாராட்டுவேன்.
அது என்னிடமே இருந்தால் நான் அதை பாராட்டக் கூடாதா என்று சோ சொன்ன மாதிரி என்று
வைத்துக் கொள்ளுங்களேன்).
முதலில் நான் அவருடைய எழுத்தில் அவர் மாற்றிக்கொள்ள வேண்டிய விஷயங்களைப் பற்றிச்
சொல்லிவிடுகிறேன் (அப்பாடா என்ன ஒரு உண்மையான, உன்னதமான நட்பு -- ஆபிதீன்).
1.உள்ளடக்கம்
என்னுடைய குட்டியாப்பா பற்றி பேச வந்த பேரா. அப்துல்காதர் என்னைப் பற்றிச்
சொல்லும்போது, “இவர் ஒரு ஐ ஸ்பெஷலிஸ்ட்” என்றார். எனக்கு -- கேட்டவர்களுக்கும் --
ஒன்றும் புரியவில்லை. கண்ணில் நோய் வந்தவனெல்லாம் கண் டாக்டரா?! ஆனால் அவர்
சொன்னது வேறு. என் கதைகள் பெரும்பாலும் முதல் நிலை (Fist Person Narrative)
விவரிப்பாகவே இருக்கும். ’நான்’ என்ற சொல் அடிக்கடி வரும். நான் சொல்வதாகவே
கதைகள் நகரும். அதைத்தான் அவர் இவர் ஒரு
'I' Specialist என்று அவர் பாணியில்
குறிப்பிட்டார். அது என்னிடமுள்ள குறையா நிறையா என்று தெரியவில்லை.
இரண்டுமாகக்கூட இருக்கலாம்.
அதுபோன்ற, ஆனால் அதைவிடத் தீவிரமான ஒரு குறை ஆபிதீனின் கதைகளில் என்னால் பார்க்க
முடிகிறது. இந்தக் குறை எழுத்து சார்ந்ததல்ல. நடை சார்ந்ததல்ல. எழுது முறை
சார்ந்ததல்ல. வடிவம், உத்தி இன்ன பிற சாந்ததல்ல. இது உள்ளடக்கம் சார்ந்தது.
இதுவரை அவர் எழுதிய கதைகள் -- பெரும்பாலானாவை அல்லது ஒன்றிரண்டு தவிர -- எல்லாமே
ஒரே விஷயத்தையே மையமாக வைத்து நகர்கின்றன. வெளிநாடு சென்று கஷ்டப்பட்டு
சம்பாதித்து, தாய்நாட்டில் நிம்மதியாக குடியேற முடியாமல் தவிக்கின்ற விஷயம்தான்
அது. அவருடைய ’இடம்’ தொகுதியிலும் சரி, ’உயிர்த்தலம்’ தொகுதியிலும் சரி, இந்த
விஷயம் பல கதைகளை இணைக்கும் அடிச்சரடாக இருக்கிறது. பல கதைகளில் பாத்திரங்களின்
பெயர்களும் ஒன்றாகவே இருப்பதால் -- உதாரணமாக அஸ்மா -- ஒரே பாட்டை பல
மெட்டுக்களில் கேட்கும் எண்ணம் தோன்றுகிறது.
முற்றிலும் வேறான ஒன்றைப் பற்றி அவர் இன்னும் எழுதவில்லை என்பதே என் ஆதங்கம்.
ஆனால் எழுத வேண்டும். அது அவருடைய ஆளுமையை பன்மடங்கு உயர்த்தும்.
2. நகைச்சுவை
ஆபிதீனின் நகைச்சுவையை குறையாக எவருமே சொல்ல முடியாது. ஆனால் பல நேரங்களில்
எல்லாராலும் புரிந்துகொள்ள முடியாததாக (abstruse),
உள்வயப்பட்டதாக (very
personalised) உள்ளது. உதாரணமாக,
அ) ”ஓரிரு இலைக்கு மேல் அதிகம் பறிக்கப்பட்டால் 'டானின்' என்கிற வஸ்துவை அதிகம்
சுரந்து 'குடு' என்ற மிருகத்திற்கு உணவு குடுக்காமல் விரட்டும் அதிசய ஆப்பிரிக்க
மரத்தைச் சொல்லும் சுஜாதாஸ்யமான புத்தகம்” என்ற வாக்கியத்தில் உள்ள எள்ளல்,
ஆ) “இந்தநிலையில் எப்படி 'மாஷ்' (சம்பளம்) கொடுப்பான்? மாசி சம்பால்தான்
கொடுப்பான் - மாசி வாங்கிக்கொடுத்தால். 'அரபி வாலுலெ தீப்பிடிச்சி' என்கிறான்
'innocent' குரலில் செக்ரடரி” என்ற வாக்கியத்தில் உள்ள மாசி,
இ) ”கம்பெனியால் காசு வருகிறதோ இல்லையோ கச்சிதமாக 'பஸ்க்கூ' வருகிறது. அதையா
அஸ்மாவுக்கு அனுப்ப முடியும்?” என்ற வாக்கியத்தில் உள்ள ’பஸ்க்கூ’போன்றவை
புரிந்துகொள்ள எளிமையாக இல்லை. (மாசி என்றால் கடற்கரையோர முஸ்லிம்களுக்குத்தான்
எளிதாகப் புரியும். ‘பஸ்க்கூ’ என்பது என்னவென எனக்கும் புரியவில்லை.
3. மையமின்மை
பொதுவாகவே அவர் கதைகள்
stream of consciousness உத்தியில் எழுதப்பட்ட மாதிரி மனம்
போனபடி போய்க்கொண்டே இருக்கின்றன. இது சில கதைகளுக்கு சரியாக வரலாம். ஆனால்
எல்லாக் கதைகளுமே இப்படித்தான் என்றால் அதை அவருடைய உத்தி என்று எடுத்துக்கொள்ள
முடியாது. இத்தன்மை படிப்பவருக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது. எங்கே
போய்க்கொண்டிருக்கிறோம் என்று தெரியாத ஆனால் வேகமான விறுவிறுப்பான பயணமாகவே அவர்
கதைகள் அமைவது நிச்சயமாக நிரந்தரமாக சிறப்பாக இருக்காது என்று நினைக்கிறேன்.
சரி இப்போத பாராட்ட வேண்டிய அம்சங்களுக்கு வருவோம்
மறுபடியும் நகைச்சுவை
Our sweetest songs are those that tell us of saddest thought என்று கவிஞன்
ஷெல்லி சொன்னான். எவ்வளவு உண்மை! ஆபிதீனின் நகைச்சுவை சொல்ல வரும் விஷயமும்
மிகமிகத் துயரமானது. ஆபிதீனின் எழுத்தின் உயிரோட்டம் என்று இதைச் சொல்ல வேண்டும்.
இந்த நகைச்சுவை மிகமிக ஆழமான துன்ப அனுபவங்களை மிகத்துல்லியமாகவும் நுட்பமாகவும்
எடுத்துரைக்கும் தன்மை கொண்டவை.
உதாரணமாக,இக்கதையில் வரும் இந்த வாக்கியம் : ”எனக்கு தனியறை - நின்றுகொண்டே
தூங்க”. எனக்குத்தனியறை என்று முடிந்திருந்தால் அது சொல்லும் விஷயம் வேறு. ஆனால்
”நின்றுகொண்டே தூங்க” என்பது அந்த முழு விஷயத்தையும் அங்கதமாக்கிவிடுகிறது. எந்த
அளவுக்கு பணியாளர்களை அரசாங்கம் அல்லது கம்பனி சுரண்டும் என்பதை ஒரே வரியில்
சொல்லிவிட முடிகிறது.
“எல்லாக் கேள்விகளுக்கும் பதில்களும் உண்டு. என்ன ஒன்று, நமக்கு அது தாமதமாகத்
தெரியும். சமயத்தில், இறந்துபோனபிறகு தெரியலாம். அது எப்படி தெரியும்? என்று
கேட்காதீர்கள். அதுதான் சொன்னேனே... வேண்டுமானால் நீங்கள் இங்கே வாருங்கள்.” இந்த
வாக்கியத்தை எடுத்துக் கொண்டால் இதுவும் மிக நுட்பமாக, அழகாக வெளிநாட்டில்
பணத்துக்காக மட்டும் பணி புரிய வேண்டியிருப்பது எப்படிப்பட்டது என்பதைச்
சொல்லுகிறது. அது செத்துப் போனதற்குச் சமம்.
சுய எள்ளல் -- இது ஆபிதீனின் கதைகளில் பொதுவாகவே நான் காண்பது. அவரை அவரே கிண்டல்
செய்துகொள்வது. (இந்தக் குணம் எல்லா மகா எழுத்தாளர்களுக்கும் உண்டு, நான் உட்பட)!
“சரிந்து விழுவதற்காக நான் சிரமப்படவும் தேவையில்லை. 'பொத்தசுரைக்கா' மாதிரி ஓர்
உடல்வாகு. என் முயற்சியல்ல, 'இந்தா' என்று குடும்பம் தூக்கிக் கொடுத்தது” என்ற
வாக்கியம் நல்ல உதாரணம்.
ஆபிதீனிடம் ஒரு குணம் உண்டு. யாராக இருந்தாலும் கிண்டல் செய்துவிடுவார். அது
அவராகவே இருந்தாலும். ஒரு முறை ஒரு பெண்ணை அவர் திருமணம் செய்து கொள்ள
விரும்பினார். ஆனால் அந்தப் பெண்ணின் (ஓடிப்போய்விட்ட) தகப்பன் ஒரு மடையன் என்று
சொல்லி, ‘ஒரு மடையனையா நான் என் சம்மந்தியாக்குவேன்’ என்று பொருமிய அவர்
தந்தைக்கு ஆபிதீன் சொன்ன பதில் (எங்களிடம்தான்) என்ன தெரியுமா? “இதே மாதிரி அவன்
சொன்னால்?” என்பதுதான்! இந்த குணம் கதைகளிலும் வெளிப்படுகிறது. உதாரணமாக, கதையில்
சினிமாத்துறையில் ஒருவர் கஷ்டப்பட்டு வெற்றி பெற்றதை ஜப்பார் நானா கதாநாயகனுக்கு
உதாரணம் காட்டுகிறார். வளரவேண்டுமென்றால் பொறுமை வேண்டும் என்று ஜப்பார்
முடிக்கிறார். அதற்கு கதாநாயகனின் மனம் பேசுகிறது: “இதையெல்லாம் எடுத்துச் சொன்ன
அவர் ஏன் வளரவில்லை என்று கேட்கச் சொன்னது என் மண்டைப்பூச்சி”.
வெளிநாட்டில் மனைவி மக்களைப் பிரிந்து வாழும் ஒழுக்கமான -- அடிக்கோடிடவும் --
ஆண்களுக்கு வரும் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று காமம். அதைத் தீர்த்துக் கொள்ள
வடிகால் இல்லாமை. எனவே அந்த ஏக்கம் பேச்சிலும், நகைச்சுவையிலும் வெளிப்படுகிறது.
இது ஒரு மனநோய் என்கிறாய் சிக்மண்ட் ஃப்ராய்டு. (சைக்கோபாத்தாலஜி ஆஃப் எவரிடே
லைஃப் என்ற நூலில்). அதனால் ஊர் வரும்போதெல்லாம் மனைவியோடு கதாநாயகன்
மகிழ்கிறான். ஆனால் பட்ட ஏக்கம், வார்த்தைகளாக, நகைச்சுவையாக வெளிப்படுகிறது.
கதாநாயகனுக்கும் அஸ்மாவுக்கும் இடையில் நடக்கும் பெரும்பாலான பேச்சுக்கள் இவ்வித
பரிமாணம் கொள்கின்றன. சமயத்தில் அது ரசிக்கத்தக்கதாகவும், சமயத்தில் விரசமாகவும்
வரம்பு மீறியதாகவும் போய்விடுகிறது சில உதாரணங்கள்:
”அஸ்மாவோடு போகும்போது ஐடியல் துணை ஜக்கரியாதான். ஸ்கூட்டர் என்ற பெயருள்ள என்
புராதன கூட்ஸ்வண்டியில் , முன்னால் அவன் நின்று கொள்ள பின் சீட்டில் பேரழகி -
பூதம் போன்ற புர்க்காவோடு. ஆனால் அவளுடையது உரசும்போதே, புர்க்காவைச் சொல்கிறேன்
, கிளம்பிவிடும் - ஸ்கூட்டர். சரியாக, கடற்கரைக்கு 3 கி.மீ தூரத்தில்
நின்றுவிடும். நாங்கள் புறப்பட்ட இடம் அதுதான்.”
”வஞ்சித்தோப்பு ஓரமாக அலைகளையும் அவனையும் பார்த்தபடி நாங்கள் இங்கே விளையாட
ஆரம்பிப்போம். எல்லாம் பேச்சுதான். 'முதல்லெ மாதிரி முடியல புள்ளே.. மூச்சு
வாங்குது' . 'முதல்லெ சிகரெட்டை வுடுங்க'. 'அங்கேயா ? சுடும்டி'. 'சீ..
கோணப்பேச்சுக்கு மட்டும் குறைச்சலில்லெ'. 'உன் மவள்ட்டெயும் சொல்லிவை..
திடீர்திடீர்ண்டு அறையிலெ நுழைஞ்சுடுறா'. 'அத சொல்லிக்கிட்டே ஏன் கை இங்கே
நோண்டுது? ச்சூ..யாரும் பாத்துடப் போறாஹா'. 'பாக்க மாட்டாஹா, பயணத்துலேர்ந்து
வந்திக்கிறாண்டு தெரியும்'. 'ம்..'”
”நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சாய்ந்தேன். ஒன்றும் ஆகவில்லை - அஸ்மாவின் நெஞ்சு.
கவலை வந்தால் அவள் மார்புதான். வராவிட்டாலும் அவள் மார்புதான் என்பது சஃபர்
குறிப்பு. எங்கே தொட்டாலும் பால்கோவா போல இனிப்பவள். 'எல்லாம் உங்க
குலாப்ஜானுக்குத்தான்' எனும் அஸ்மா நரை தெரியும் இந்த வயசிலும் பேரழகு. ஐஸ்வர்யா
அழகாக இருந்தால் எப்படி இருப்பாளோ அப்படி இருக்கிறாள்”.
ஆபிதீனுக்கே இது உறுத்தலாக இருக்கிறதோ என்னவோ கடவுளை நுழைத்து அதைத்
தெரிவிக்கிறார்: “நிறுத்திவிடுகிறேன். 'ஏண்டா இதெல்லாம் எழுதுறே?' என்று ஈ-மெயில்
வருகிறது. கடவுளாகத்தான் இருக்கும்.”
வார்த்தைகளில் விளையாடும் வித்தையும் கற்று வைத்திருக்கிறார் ஆபிதீன். “என் மகள்
சொல்வாள். அவ தனி. அவதானி”, “ஆறிய கம்பெனியின் 'சூடானி'. -- போன்ற உதாரணங்களைச்
சொல்லலாம்.
யாராலும் பின்பற்ற முடியாத, பிரத்தியேகமான நடை ஆபிதீனுடையது. ஆபிதீனைப் போல எழுத
ஆபிதீனால் மட்டுமே முடியும். என்னுடைய தனிப்பட்ட கருத்தில், அவர் நம்பிக்கையோடு
இந்தியாவிலேயே இருந்து தன்னுடைய திறமைகளில் -- அவருக்கு பல திறமைகள் உண்டு
உதாரணமாக பாடுவது, ஓவியம் வரைவது -- ஏதாவது ஒன்றை ஒழுங்காகப் பயன்படுத்தி
இருந்தால் இந்நேரம் ஒரு கோடீஸ்வரராகி இருப்பார். நிச்சயம்.
ஆனால் ஒரு அருமையான எழுத்தாளன் கிடைத்திருப்பானா என்பது சந்தேகம்தான்.
ruminagore@gmail.com
http://www.tamiloviam.com/rumi/main.asp?fldrID=1 |
|
|
|
©
காப்புரிமை 2000-2009 Pathivukal.COM. Maintained By:
Infowhiz Systems Inc.. Pathivukal is a member of
the National Ethnic
Press and Media Council Of
Canada .
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
|
|