இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
மார்ச் 2011  இதழ் 135  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இலக்கியம்!

மீள்பிரசுரம்: 'மின்னற் பொழுதே தூரம்' .
மோகமுள்: இந்த உடல் என்ன பாபம் செய்தது?
 - ஆர்.அபிலாஷ் -

மோகமுள்ளின் நோக்கம் என்ன? பாபு என்கிற முதிரா இளைஞன் யமுனா என்கிற மத்திய வயது பெண் மீதான மோகத்தை எப்படி அடைகிறான் என்பதைச் சொல்வதா? இல்லை. நாவல் பாபுவின் மனக்கோந்தளிப்புகளை பற்றியது; அவனது கொந்தளிப்புகளால் நகர்த்தப்படுகிறது. தஸ்தாவஸ்கியின் ரஸ்கல்னிக்கோ போன்ற நாயகர்களும் சதா கோபாவேசங்கள், தடுமாற்றங்கள் மற்றும் கொந்தளிப்புகளில் வாழ்பவர்கள்தாம். ஆனால் அவை லட்சிய, அறம்சார் ஆவேசங்கள்.

பாபுவினுடையவை பெரும்பாலும் தனிமனித விருப்பு சார்ந்த கொந்தளிப்புகள். இந்நிலைகளின் பின்னால் ஒரு ஆத்மீகத் தேடல் உள்ளது; அதற்கு பிறகு வருகிறேன். பாபு இந்த தீவிர அலைகழிப்புகளைக் கடந்து எப்படிச் சமநிலையை (சமாதியை?) அடைகிறான் என்பதே நாவலின் கரு. ஒருவித coming-of- age பாணி கதை. பாபுவின் லட்சிய நாயகர்களான ராஜம், அப்பா வைத்தி, இசை குரு ரங்கண்ணா ஆகியோர் வெவ்வேறு நிலைகளில் \ தளங்களில் சமநிலை அடைந்தவர்கள்; நாவல் ஆரம்பத்தில் இருந்தே அவ்வாறே இருக்கிறார்கள். பாபுவுக்கு இவர்களே முன்மாதிரிகள். இதனால் தானோ, இவர்கள் மாற்றமின்றி சாலைகளில் சிலையாக பெருமளவில் நிற்கும் தலைவர்கள் மாதிரி சற்றே தட்டையாக உள்ளனர்.

யமுனாவும் தங்கம்மாவும்
பாபு யமுனாவின் உடல் வனப்புடன் அவளது எளிதில் ஏமாற்றத்தை வெளிக்காட்டாத, ஏமாற்றத்துக்கு விழுந்து விடாத நிதானம் மற்றும் தன்மானத்தையும் சேர்த்தே பிரியப்படுகிறான். உரையாடலில் கூடும் சுயபரிகாசமும், சன்னமான எள்ளலும் அவளை வாழ்வின் சரிவை உறுதியுடன் நேரிடும் அவகாசம் அளிக்கின்றன. யமுனா இறுதி வரை ஓரளவு ஒரு புதிர்த்தன்மையை முக்காடாக அணிந்திருக்கிறாள். இதுவும் மற்றொரு ஈர்ப்பு. இந்த உள்வலுவும், மறைபொருளும் தங்கம்மாவிடம் இல்லை. அவளும் யமுனாவைப் போன்று சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவதிப்படுகிறாள். இருவரையும் ஆண் சமூகம் தொடர்ந்து விலை பேசி முடக்கப் பார்க்கிறது. யமுனா பாபுவின் சமநிலை-முன்மாதிரிகளின் பட்டியலில் கடைசியாக இருக்கிறாள். அவளது பாத்திரத்தில் அதிக ஆழம் கூடாததன் காரணம் இதுவே. ஆனால் தங்கம்மா பாபுவைப் போன்று ஆவேசமானவள். தள்ளாத கிழவருக்கு மணமாகி புணர்ச்சி வாழ்வு அநியாயமாக மறுக்கப்பட்ட அவள் பாபுவின் அறைக்கு மாடியேறி குதித்து வருவது அசாதாரணமானதுதான். நாவலில் பிற பெண் பாத்திரங்களும் உறவுகளைப் பொறுத்த மட்டில் கையறு நிலையில் செயலற்று இருப்பவர்கள். பொருளாதார சுயசார்பு அற்றவர்கள். விதவைக் கோலம் பூணும் பார்வதி பாயும், பாலம்மாளும், மூன்று வயதில் இருந்தே விதவை வாழ்வுக்கு அனுசரித்துப் போகும் தைலுப்பாட்டி போன்றவர்களுக்கு மாடி ஏறி வந்து கூடுவது கற்பனைக்கு அப்பாலானது. பாபு தன் அடிப்படை உந்துதல்களை சமூக நியதிகளுக்காக தியாகம் செய்ய மறுப்பவன். ஒழுக்கத்தை ஆன்மீக எழுச்சிக்கான அடிப்படையாக வைத்தியும், ரங்கண்ணாவும் அவனுக்கு போதிக்கிறார்கள். தங்கம்மா இரண்டாவது முறையாக அவனை புணர்ச்சிக்கு அழைக்கும் போது அவன் "சிரம்மப்பட்டு" மறுப்பது இந்த ஒழுக்கக் கடமையிலிருந்து வழுவாது தன்னைக் காப்பதற்கே; அதாவது ஒரு உயர்ந்த லட்சியத்துக்காக. தங்கம்மாவுடனான அவனது பாலுறவை வெளியுலகம் அறிவதில்லை என்பதை கவனியுங்கள். கும்பகோண சாலைகளில் தினமும் சுற்றினாலும் அவன் வாழ்வு மனம் எனும் ஒரு ஒற்றை அலையின் எண்ணற்ற வட்டங்களுக்குள்தான். அவன் அறிந்த தங்கம்மா என்ற பெண் பற்றி வெளி மனிதர்களுக்கு, ஏன் அவளது கிழக்கணவனுக்கே தெரியாது. தங்கம்மா பாபுவின் மற்றொரு பக்கம். ஆன்மீக தேடலற்ற தூய உயிரியல் விழைவு. குருதியும், விந்தும் பொங்கும் போது துடிக்கும் ஆழ்மனதின் கண் அவள். அதனாலேயே முதல் கூடலின் போது பாபு நடுங்க, அவள் திடமாக இயங்குகிறாள். கார்ல் யுங்ஙின் சித்தாந்தத்தில் சுதந்திரம் எடுத்துக் கொண்டு, பாபுவை தங்கம்மாளின் ஆழ்மனதின் பொருந்தாத முகமூடி எனலாம். சுடுகாட்டில் அவளது எரிந்து சாம்பலான மீதத்தை பார்க்கும் பாபுவுக்கு தோன்றுகிறது:

"எவ்வளவு சாம்பல்! இவ்வளவு சாம்பலா உன் உடம்பில் இருந்தது? இவ்வளவு இராது. இது வரட்டியின் சாம்பல்! உன் உடம்பின் சாம்பல் எங்கே? இந்த வரட்டி சாம்பலுக்குள் புடம் போட்டுக் கிடக்கிறா? தங்க பஸ்பம் மாதிரி!

தங்கம்மா! இவ்வளவு சாம்பலுக்கு அடியில் நீ எப்படி படுத்திருக்கிறாய்!"

தங்கம்மா பாத்திரத்தை படலம் படலமாக நாம் உரிக்கலாம். கலப்படமில்லாத தங்கம்; அழிவற்ற இயற்கையின் ஆதி சக்தி. புலப்படாத ஆழ்மனம்.

பாபுவின் பயணத் தடங்களும், குறியீடுகளும்
பாபுவின் கொந்தளிப்பான பயணத்தில் இசையும், ஆன்மீகமும் துணைத் தடங்கள். பாபுவுக்கு சம்பிரதாய வழிபாட்டில், மத ஆசாரங்களில் ஈடுபாடு குறைவே. ஆரம்பத்தில் கோயில் வழிபாட்டாளர்களின் நோக்கம் காமமே என்று விமர்சிக்கிறான். அப்பாவுக்காகவே பூஜை புனஸ்காரங்களில் ஈடுபடுகிறான். ராஜூ என்கிற ஆன்மீகவாதி அல்லது சித்தரிடம் அவனுக்கு ரங்கண்ணாவிடம் ஏற்படும் ஒன்றுதல் ஏற்படவில்லை. அவரது மந்திரத்தை உருவிட்டு அதற்காக ஒழுக்கம் பழகுவது பாபுவுக்கு சிரமமாகவே உள்ளது. ராஜூ தனது அபார மந்திர சக்திகளை ஏன் சமூகத்துக்காகப் பயன்படுத்த இல்லை என்ற கேள்வி அவனிடம் உள்ளது. ஆனாலும் மதமும், சாதியும் வளர்த்த ஆசார நம்பிக்கைகள் அவன் உள்ளுக்குள் உள்ளனதாம். பாபுவுக்கு அவனது பின்புலம் காரணமாய் தவிர்க்க முடியாத உபபாதை ஆகிறது ஆன்மீகம். இசை அளவுக்கு அவனை இது உக்கிரமாய் தாக்குவதில்லை என்றாலும்.

பாபு தங்கம்மாளை நிராகரிப்பது ஒரு சுய நிராகரிப்பே. அதனாலே கதையாடலில் இங்கு நகைமுரண் ஏற்படுகிறது. அதை அவன் சற்றும் உணர்வதில்லை என்பதே தி.ஜாவின் நுட்பம். இதே சரடில், நாவலின் ஓட்டத்தில் உளவியல், தத்துவ சித்தாந்த விவாதங்களை அவர் நுழைப்பதில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இதை கதாசிரியனின் முக்கியமான முடிவாகவே கருதுகிறேன்.

குறும்பாத்திரங்கள இந்நாவலின் பெரும்வலு பாபுவுக்கு முற்றிலும் மாறுபட்ட குறுபாத்திரங்கள். அவர்களை சுருக்கமாகவே சித்தரிக்கிறார். முதல் காட்சியில் வரும் மேலக்காவேரி சாஸ்திரிகள் நல்ல உதாரணம். பாபு சிறுஅலைவட்டத்துக்குள் நீச்சலடிக்க அவர் கரை மேல் நின்று மனிதர்களையும் வாழ்க்கையும் புறவயமாக கவனிக்கிறார். அதைப் போன்றே மாடிக்கும், தெருவுக்குமான பாபுவின் பயணத்தில் எக்காலமும் விழித்து இருந்து தகவல் சொல்லும் கைலாசம் பாத்திரமும் முக்கியம். பாபுவின் இந்த மாடி-வெளி பயணத்தின் படிமத்தை அவர் நாடகீயமாக்குகிறார். மாடிக்கு இவ்வாறு அவன் அடிக்கடி ஏறி இறங்குவது, ஜன்னல் வழி காவேரியை பார்ப்பது, அதன் அதிகம் பயன்படாத துறையில் குளித்து மனதை ஆற்றிக் கொள்வது ஆகிய நிகழ்வுகளுக்கு ஒரு குறியீட்டு பொருள் ஏற்படுவதை கவனித்து, தஸ்தாவஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலில் ரஸ்கால்னிக்கோவின் இத்தகைய பயணத்துடன் ஒப்பிடலாம்; பாவம் ரஸ்காலுக்கு காவேரியும், இசையும் இல்லை.

உரையாடல் வழி பாத்திரங்கள்
உரையாடல்களுக்காகவே மோகமுள்ளை திரும்பத் திரும்ப படிக்கலாம். வைத்தியின் மனைவி ராமு எனும் முன்னாள் சந்தர்ப்பவாதி சீடர் ஒருவர் பற்றின் சொல்வதை படியுங்கள்:

" மோட்டாரில் வந்திருந்தானோ ராமு?" என்று கேட்டவாறே கிழவி எழுந்து வந்தாள்.

"ஆமாம். மோட்டார்லேதான்" (ரங்கண்ணா)

" அவன் மோட்டார்லெ வந்தா என்ன? புஷ்பக விமானத்திலே வந்தா என்ன? அண்ணா ஆறு குடகாரஞ்சுக்கு மேலே பொற மாட்டார்னு புள்ளி போட்டிருக்கானே: நல்ல சமத்து!" என்று அண்ணாவின் முன் இருந்த அரை டஜன் குடகாரஞ்சுகளை பார்த்தாள் கிழவி.

"சாவகாசமா வரேன்னு போயிருக்காண்டி. அப்ப குரு தட்சிணை ரண்டு டஜனாயிடும். உரிச்சு திங்கலாம். கவலைப் படாதே" என்று சிரித்துக் கொண்டே பாபுவைப் பார்த்தார் ரங்கண்ணா.

இந்த சம்பாஷணையிலிருந்து என்னவெல்லாம் தெரிய வருகிறது? ராமுவை சமர்த்து எனும் போது கிழவி குறிப்பது ரங்கண்ணாவுக்கு லௌகீக சமர்த்து போராது என்பதுதான். ராமுவின் போலியான குருபக்தி மீதான நக்கலும் தெரிகிறது. ரங்கண்ணா தன் மனைவியின் அங்கலாய்ப்பை பொருட்படுத்துபவர் அல்ல. அதற்காக கோபிப்பதும் இல்லை. அவரின் பரந்த உலகில் இசையின் மன எழுச்சிகளுடன் அவளது பொருமல்களின் பிசிறல்களுக்கும், ராமுவின் சுய நலத்துக்கும் இடம் உண்டு. "உரிச்சுத் திங்கலாம்" என்று சிரிக்க முடிகிறது அவரால். இம்மூவரையும் இரு உரையாடல்களுக்குள் காட்ட முடிவது தி.ஜாவின் அலாதியான மொழித்திறமை. இங்கு நாம் அவரது கதை சொல்லலை மேலும் ஆராயலாம்.

படர்க்கையிலிருந்து தன்னிலைக்கான தாவல்
பாபுவின் கண்களில் தாரை தாரையாக நீர் பெருகிற்று. கண்ணை மூடிக் கொண்டு இசையின் தூய்மையான இனிமையில் திளைத்தான் ... நாமும் காலத்தை இப்படி வீணடிக்காமலிருந்தால்? இந்த சங்கீதத்தை பயின்றிருந்தால்? முதலில் படர்க்கை நிலையில் இருந்து வேற்றாள் மாதிரி பாபு பற்றி அவர் பேசுகிறார். பிறகு மொழி தன்னிலைக்கு தாவுகிறது. நாவலில் இந்த தாவல் தொடர்ந்து நிகழ்கிறது. தன்னிலை இட கதை கூறலின் நோக்கம் பேசப்படும் பாத்திரத்தின் தனிப்பட்ட தகவல்களை, தீவிர உணர்வு நிலைகளை நம்பும்படியாக வர்ணிப்பது. தி.ஜா இப்படி பாபுவாக மாறும்போது உணர்ச்சிகரம் கூடுகிறது. கதைசொல்லலுடன் வாசகனுக்கு அந்தரங்க உறவாடல் ஏற்படுகிறது. ஆனால் மோகமுள்ளை பாபுவின் தன்வரலாறாக சுருக்காமல் பல்வேறுபட்ட மனிதர்கள் மற்றும் அவர்களின் மாறுபட்ட பரிமாணங்கள் உள்ளிட்ட பெரும்பரப்பாக மாற்ற விரும்பியிருக்க வேண்டும். அதனாலே படர்க்கை இட கதைசொல்லல். பாபு யமுனாவின் சொத்து விசயமாக அவளது அப்பாவின் முதல் மனைவியின் மகன் சுந்தரத்தை சந்திக்கும் இடத்தை இங்கு குறிப்பிட வேண்டும். அப்பா இறந்த பின் சுந்தரம் தன் சகோதரி மற்றும் சித்திக்கு நெல்லும் பணமும் தந்து உதவ மறுக்கிறான். கொடூர மனம் கொண்டவன். சுயநலமி. நீசன் என்றெல்லாம் ஆளாளுக்கு அவனை பொரிகிறார்கள். மேற்சொன்ன சந்திப்பில் சுந்தரம் பாபுவுக்கு தன்னைப் பற்றி வேறொரு பார்வையை அளிக்கிறான். விவசாயத்தில் இரவு பகலாய் உழைத்து அவன் பெறும் ஒவ்வொரு நெல்மணியும் அவனுக்கு மதிப்பு வாய்ந்தது. யமுனா குடும்பத்தினர் உழைப்பினால் விளையும் பணத்தின் மதிப்பறியாத ஊதாரிகள் என்று குற்றம் சாட்டுகிறான். இதுவரையில் அவர்கள் உழைக்காமலே செழிப்பாக வாழ்ந்து விட்டாயிற்று; இனிமேல் தன்னால் இந்த அநியாயத்தை ஆதரிக்க முடியாது என்கிறான். இந்த கட்டத்தில் இருந்து சுந்தரத்தின் தரப்பு தெளிவடைகிறது. இந்தக் கோணத்தில் பார்த்தால் பாபு, ரங்கண்ணா உள்ளிட்ட நாவலின் மகத்தான லட்சியம் கொண்ட பாத்திரங்கள் கூட உடல் உழைப்பின் மதிப்பை அறியாதவர்கள்தாம். சமூகத்தின் ஒரு பகுதி இந்த சேறும் சகதியுமான வாழ்வை தேர்ந்து கொள்வதால் தான் இவர்களால் இசை, காதல், பக்தி, இலக்கியம் என மாய முடிகிறது. இது குற்றசாட்டல் அல்ல. பாபுவின் மனவுலகின் கண்ணாடிப் பரப்பில் வந்து விழும் சிறுகல். அதன் அதிர்வு. அவன் நாடும் சமநிலைக்கு இந்த அதிர்வு தரும் புரிதலும் அவசியம். கட்டுக்கோப்பான நாவல் என்று க.நாசுவை பாராட்ட வைத்ததற்கு பாபுவின் தீவிர மன நிலைகளில் இருந்து வெளிவந்து இந்த சிறுபாத்திரங்கள் கதைக்கு தரும் மாறுபட்ட பார்வைகள் ஒரு காரணம் என்று யூகிக்கிறேன்.

ஆனால் இதையும் மீறி பாபு சதா தீவிர உணர்வு நிலையில் இருப்பது நம்பும்படியாக இல்லை. நாவல் ஆரம்பிக்கும் போது சங்கீதத்தால் ஆட்பட்டு அவன் அழுகிறான். பிறகு கடமை, காமம், குற்றவுணர்வு என்று தொடர்ச்சியாக ஓய்வின்றி அலைகழிக்கப்படுகிறான். நிதர்சனத்தில் ஒருவர் தொடர்ச்சியாக இவ்வளவு உணர்வு கொந்தளிப்புகளுக்கு ஆட்படுவதில்லை. ஆட்பட்டாலும் தாங்க முடியாது. நம் வாழ்வின் சிறு சதவீதம் மட்டுமே இத்தகைய தீவிர மனநிலைகள். மனுஷ்யபுத்திரன் ஒரு தனிப்பட்ட உரையாடலில் இலக்கியமும் கலைகளும் மனிதன் வாழ்வின் சலிப்பில் இருந்து தப்பத்தான் என்று குறிப்பிட்டார். பாபுவுக்கு சலிப்பே இல்லை. மூன்றாவது கியரிலே எப்போதும் ஓடுவது பாபுவின் பாத்திர அமைப்பின் முக்கிய பலவீனம்.

இறுதி கட்டம்
மோகமுள்ளில் பாத்திரங்களிடையே வருகிற ஒரே நேரடி தீவிர சர்ச்சை சங்கீதத்தில் ஞானமா குரலா முக்கியம் என்பது. வித்வான் ராமு ஞான உபாசகர். பாபு இசை அதன் அறிவுத்தளத்தை கடந்து மனித நிலையின் பல்வேறு பரிமாணங்களை பிரதிபலிக்க கூடியதாக இருக்க வேண்டும்; அதற்கு தோதாக குரல் பதப்படுவதே நிஜமான தேர்ச்சி என்கிறான். இங்கு நாம் பாபு வைத்தி மற்றும் ராஜுவின் ஆன்மீகக் கட்டுப்பாடு மற்றும் அறிவுரைகளை தொடர்ந்து பின்பற்ற முடியாமல் தோற்பதை நினைவுகூரலாம். மனிதன் தன் உயிரியல், மனவியல் உந்துணர்வுகளை நிந்தித்து மறுக்காமல் அவற்றின் வழியிலேயே கடந்து சமநிலை அடைவதே பாபுவின் விருப்பத்தேர்வாக இருக்க வேண்டும். வைத்தி, ராஜூ, ராமு வலியுறுத்தும் பிரம்மச்சரிய \ ஏகபத்தினி விரத ஏற்பாடுகளை பாபு வெகுஇயல்பாகவே மீறுகிறான். கட்டமைக்கப்பட்ட சட்டகத்துள் உயிரற்ற விழுமியங்களை அவனால் பின்பற்ற முடிவதில்லை. அவனது ஆரவாரிக்கும் மனதை அமைதிப்படுத்துவது ராஜூ உபதேசித்த மந்திரமோ தியானமோ அல்ல: அது நிகழ்வது யமுனாவுடனான கூடலுக்கு பின்பே.

நாவலின் இறுதியில் பாகவதர் ராமு பாபுவுடனான தனது உரையாடலில் பாலியல் ஒழுக்கத்தை போற்றுகிறார்: "அந்த மந்த்ர ஷட்ஜமத்தை பிடித்து உலுக்குவதானால் சரீரத்தை, சூட்சுமம் பலத்தை காப்பாற்றினால்தான் முடியும் .. பிரம்மச்சாரியாக இருப்பது பெரிய அதிர்ஷ்டம் ஐயா"அந்த மந்த்ர ஷட்ஜமத்தை பிடித்து உலுக்குவதானால் சரீரத்தைசூட்சுமம் பலத்தை காப்பாற்றினால்தான் முடியும் பிரம்மச்சாரியாக இருப்பது பெரிய அதிர்ஷ்டம் ஐயா

நாவலின் ஆரம்பத்தில் வரும் பாபு ஒருவேளை இதற்கு இசைந்திருப்பான். ஆனால் இப்போது தரிசனத்தின் கீற்று அவனை நோக்கி விழுந்து விட்டது; பாபு முதிர்ந்து விட்டான். அவனது சிந்தனை இது: "இந்த உடல் என்ன பாபம் செய்தது? அழகுக்கும் சக்திக்கும் ஆதாரமான இந்த உடல் என்ன பாபம் செய்தது? இவ்வளவு கரிப்புக்கும் எச்சரிக்கைக்கும் ஆளாகும்படி என்ன பாபம் செய்தது?".இந்த உடல் என்ன பாபம் செய்ததுஅழகுக்கும் சக்திக்கும் ஆதாரமான இந்த உடல் என்ன பாபம் செய்ததுஇவ்வளவு கரிப்புக்கும் எச்சரிக்கைக்கும் ஆளாகும்படி என்ன பாபம் செய்தது இந்த அவதானிப்பை பாபுவின் இசை பற்றிய முன்னர் குறிப்பிட்ட நம்பிக்கையுடன் பொருத்தி யோசிப்புதிய திறப்புகளைத் தரும்.

பாபு தன் உடல், உள்ளம், மற்றும் இசையை பரிசோதனைப் களங்களாக மாற்றுகிறான். அவனுக்கும் பிற பாத்திரங்களுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு இதுவே. இதனாலே வாழ்வு அவனுக்கு அசாதாரணமாக அமைகிறது: படித்தும் எந்த வேலையிலும் ஈடுபாடு கொள்ளாமல்; காதலித்தும் அப்பெண்ணை முழுக்க அடையாமல்; இசை பயின்றும் கச்சேரி செய்யாமல் அவன் வாழ்வு சென்றடையாத பயணமாகவே இருக்கிறது. இம்மூன்று நிலைகளிலும் அவன் தன்னை கறாராக சுயபரிசீலனை செய்தபடி உள்ளான். இந்த நிறைவற்ற நிலைகளும் ஒரு நிறைவே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவனது எதிர்காலம் எதிர்பாராத தருணங்களால் நிரம்பியுள்ளது. முழுக்க முன்-தீர்மானிக்கப்பட்ட சலிப்பான வாழ்க்கை வாழும் சாமான்யர்களைக் குறித்து பாபு கொள்ளும் கோபாவேசத்தைப் பாருங்கள். பாபு பேருந்தில் சில் குமாஸ்தாக்களை கவனிக்கிறான்:

"வேலை செய்துவிட்டு வருகிற முகங்கள் எண்ணெய் வழிந்து சோர்ந்து கிடந்தன ... இன்னொரு முகம் எல்லா வேதனைகளையும் கடந்து விட்டது போல் தோன்றிற்று; இந்த சில்லறை இம்சைகள் இனி எனக்கு உரைக்காது என்று. எல்லாவற்றையும் விதியின் கையில் போட்டுவிட்டு அடித்துப் போட்டாற்போல் உட்கார்ந்திருந்தது. வீட்டுக்குப் போய் டிபன் சாப்பிட்டு சாய்வு நாற்காலியில் இரண்டு மணி நேரம் சாய்ந்திருந்து, மீண்டும் சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கி விடும் போலிருக்கிறது. இப்படியே விதியின் கையில் போட்டுக் கொண்டே நாளைப் போக்கி பிள்ளையின் கையிலோ வறுமையின் கையிலோ மூப்பைக் கொடுத்து விட்டு, எரிந்து புகையும் குப்பையுமாகி விடும். அவரை அப்படியே குண்டுக்கட்டாக தூக்கி ஜன்னல் வழியாக வெளியே எறிந்து விட்டால் என்ன? "

நாவலின் மொத்த பரப்பிலும் மிக முக்கியமான பத்தி இது. ஒரு சம்பிரதாய அமைப்பினுள் தன்னை முழுக்க ஒப்புவித்து, வாழ்வின் பால் ஆயாசம் கொள்வது ஒரு எதிர்வாழ்வு நிலைப்பாடுதான்.

நாவலின் முடிவில், பாபுவின் எதிர்காலம் நிச்சயமற்றதாக தெரிந்தாலும், அவன் தனதேயான ஒரு சமநிலையை, முதிர்ச்சியை அடைந்திருப்பதை இறுதிப்பக்கத்தில் கடைசிக்கு முந்தி வருகிற இந்த உருவக வரிகள் குறிக்கின்றன: "அடிவானத்தில் உள்ள மரங்கள் கூட நகர்ந்து வந்தன. வானையும் விண்ணையும் சேர்த்தன அம்மரங்கள்". இந்த விண்—மண் இணைவு ஒரு மரத்தினால் மட்டுமே சாத்தியம். அம்மரம் ஒரு முள்ளாகவும் இருக்கலாம்.

abilashchandran70@gmail.com
thiruttusavi.blogspot.com


 
aibanner

 © காப்புரிமை 2000-2011  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்