இரவு எரிந்து கொண்டிருக்கிறது! கூர்
2010 கனடாக் கலை இலக்கிய மலர் வெளிவந்துவிட்டது!
-
ஊர்க்குருவி -
கூர் 2010 மலர் வாசித்து முடித்தேன். மிகவும் நன்றாக வந்துள்ளது.
அதற்கு ஆசிரியரான தேவகாந்தனையும், ஆசிரியர் குழுவினையும்தான் பாராட்ட
வேண்டும். முதல்முதலாகக் கனடாவிலிருந்து கனடாத் தமிழ் இலக்கியத்தை
நன்கு பிரதிபலிக்குமொரு மலராக வெளிவந்திருக்கிறது கூர் கலை
இலக்கிய மலர். இளைய தலைமுறையின் படைப்புகளைச் சேர்த்திருப்பதானது
இதுவரையில் யாரும் செய்யாததொன்றென நினைக்கின்றேன். சிறுகதைகள்,
கட்டுரைகளெல்லாம் வித்தியாசமான கோணங்களில் பிரச்சினைகளை அணுகுகின்றன.
பிரேம்ஜியின் கட்டுரையில் முற்போக்கிலக்கியத்தின்
முன்னோடிகளிலொருவரும், முக்கியமானவருமான அறிஞர் அ.ந.க.வை வேண்டுமென்றே
தவிர்த்திருப்பதாகப் படுகின்றது. ஏற்றுக்கொள்ளப்பட
முடியாதது. ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகளிலொருவர் அறிஞர்
அ.ந.க. மறுமலர்ச்சிக் காலகட்டத்திலிருந்து இலங்கை எழுத்தாளர்
சங்கம், தமிழ் எழுத்தாளர் சங்கம், பின்னர் உருவான் இலங்கை எழுத்தாளர்
முற்போக்குச் சங்கமென அவரது பங்களிப்பு மறுக்கப்பட முடியாதது.
இலங்கைத் தமிழ் இலக்கியச் சூழலில் இடதுசாரிச் சிந்தனையைப் பதித்த
முன்னோடிகளில் முதன்மையானவர் அ.ந.க. இலங்கை முற்போக்குச்
எழுத்தாளர் சங்கத்தின் பலவேறு காலகட்டங்களில் முக்கியமான பங்களிப்பினை
ஆற்றியவர் அ.ந.க. 'தேசிய இலக்கியம்' மற்றும் 'மரபு' பற்றிய வாதப்
பிரதிவாதங்களில் தர்க்கரீதியாகத் தன் எழுத்தாற்றலைப் ப்யன்படுத்தி
அவற்றின் வெற்றிக்கு உழைத்தவர்களில் அ.ந.க.வும்
முக்கியமானவர்களிலொருவர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின்
கீதத்தினை இயற்றியவரும் அ.ந.க.வே என எழுத்தாளர் அந்தனி ஜீவா
தனது 'அ.ந.க' பற்றித் தினகரனில் வெளிவந்த 'சாகாத இலக்கியத்தின்
சரித்திர நாயகன்' என்னும் தொடர் கட்டுரையில் குறிப்பிடுவதை
இந்நேரத்தில்
நினைவு கூரவேண்டும்.
எழுத்தாளர் சோமகாந்தன் மறைந்தபொழுது
அவரது மறைவையொட்டி 'ஞானம்; இதழ் வெளியிட்ட கண்ணீர் அஞ்சலியில்
பின்வருமாறு குறிக்கப்பட்டிருந்ததும் கவனத்திற்குரியது:
"1964இல் இருந்து இ.மு.எ.ச.வின் தேசிய அமைப்பாளர் ஆனார். அதுவரை
காலமும் அ.ந.கந்தசாமி, பிரேம்ஜி, இளங்கீரன், எச்.எம்.பி.முகைதீன்,
கைலாசபதி, இராம்நாதன், கணேசலிங்கன், ஹமீட், சிவத்தம்பி ஆகியோரின்
கூட்டுச் செயற்பாட்டில் இயங்கிவந்த இ.மு.எ.சங்கத்தின் அடுத்த கட்டச்
செயற்பாடுகளில் சோமகாந்தன் ஒரு பாய்ச்சலை ஏற்படுத்தினார்."
மேற்படி விடயங்களெல்லாம் நமக்குத் தெரிவிப்பவைதானென்ன? அறிஞர்
அ.ந.கந்தசாமி இ.மு.எ.சங்கத்தின் தோற்றத்திற்குக் காரணமாகவிருந்த அதே
சமயம் , தொடர்ந்தும் அச்சங்கத்தின் வளர்ச்சிக்குத் தன் பங்களிப்பினை
நல்கி வந்தார் என்பதையல்லவா.?
மேலும் மறுமலர்ச்சிக் காலகட்டத்தைக்
குறிப்பிடும்போது கூட அவர் தவிர்க்கப்பட்டிருக்கின்றார். மறுமலர்ச்சி
அமைப்பின்
முக்கிய ஸ்தாபகரான வரதரே அவரது நூல்களில் அ.ந.க.வின் மறுமலர்ச்சிக் காலகட்ட பங்களிப்பை
மிகவும் தெளிவாகக் கூறியிருக்கும்போது மேற்படி இருட்டடிப்பு
ஏமாற்றத்தை அளிக்கிறது. பிரேம்ஜி போன்றவர்கள் இலங்கை முற்போக்கு
எழுத்தாளர் சங்கத்தின் வரலாற்றுடன் தவிர்க்கப்பட முடியாதவர்கள்.
இவரது இக்கட்டுரையினை வருங்காலத்தில் ஆய்வு செய்யப் பயன்படுத்த விழையுமொரு மாணவர்
அ.ந.க.வின் பங்களிப்பு பற்றிய பிழையான
பிம்பத்தினையே பெறும் வாய்ப்புண்டு. எனவேதான் இத்தகைய ஆவணங்களை
எழுதுபவர்கள் காய்த்தல் உவத்தலின்றி , நல்லாய்வுக்
கண்ணோட்டத்துடன் எழுதுதலவசியம். ஈழத்து முற்போக்கிலக்கியப் பற்றி
அறிந்திருப்பவர்களுக்கு இக்க்ட்டுரையில் அ.ந.க. தவிர்க்கப்பட்டிருப்பது
நன்கு
புரியும். ஏனெனில் முழுப்பூசணிக்காயை எவ்விதம் சோற்றினுள் மறைக்க
முடியாதோ அதனைப் போன்றதுதான் ஈழத்து முற்போக்குச்
சங்கம் மற்றும் மறுமலர்ச்சிக்காலகட்டங்களில் அ.ந.கவின் பங்களிப்பினை மறைக்க முயலுதலும்.
அ.ந.க.வின் ஆக்கங்கள் 'மறுமலர்ச்சி' இதழ்களில் வெளிவராதிருக்கலாம்.
அதற்காக அவரை மறுமலர்ச்சிக் காலகட்டத்திலிருந்து பிரித்துவிட முடியுமா?
மறுமலர்ச்சி இதழானது மறுமலர்ச்சிச் சங்கத்தின்
நடவடிக்கைகளிலொன்றே. அதனை நிறுவி, நடாத்தியவர்களிலொருவர் அ.ந.க. அதனை
மறுக்க முடியாது.
Starship Award பெற்ற, மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ட சிறுகதையின்
கடைசிப்பக்கங்கள் இரட்டிப்பாக மிள்பிரசுரம் செய்யப்பட்டிருக்கின்றன.
மலரிலுள்ள சிறுகதைகள் பொதுவாகப் பல்வேறு பிரச்சினைகளை
வெளிப்படுத்துகின்றன. ஸ்ரீரஞ்சனியின் சிறுகதையான 'நிரோ' புலம்பெயர்ந்த
சூழலில் கலாச்சாரம், பண்பாடென்று நம்மவர் நடாத்தும் பெண்ணடிமைத்தன
நடவடிக்கைகளை கேள்விக்குள்ளாக்குகின்றது. குழந்தைகளின் பிறந்த
தினங்கள், பெண்களின் சாமத்தியச் சடங்குகள் போன்ற நிகழ்வுகளை
விமர்சனத்திற்குள்ளாக்குகின்றது. குரு அரவிந்தனின் 'அட மானிடா நலமா?'
வித்தியாசமானதொரு கற்பனை. வளர்ப்புப் பிராணியான நாய்களுக்கு நலமடித்து
வாழும் மனிதருக்கு கொரில்லாக் குரங்குகள் நலமடித்து
வாழ்ந்தாலெப்படியிருக்கும் என்றொரு கற்பனை. இதனையொரு அறிவியற்
சிறுகதையாக எழுதியிருந்தால் இன்னும் கனமாகவும்,
சுவையாகவுமிருந்திருக்கும். அகிலின் 'கிறுக்கன்' வளர்ப்புப்
பிராணிகளின் இழப்பின் பாதிப்பினை எடுத்துரைக்கின்றது..
'காலம்'
செல்வத்தின் நேர்காணலில் புதிதாக அறிவதற்கு ஏதுமில்லை. மீண்டுமொருமுறை
ஜெயமோகன், சு.ரா பற்றி மனம் நெகிழ்ந்திருக்கின்றார். ஜோர்ஜ்
பற்றிய அவரது கருத்துகளும் (கனடாத் தமிழ் இலக்கிய வரலாற்றில்
ஜோர்ஜ் குருஷேவின் பங்களிப்பும் முக்கியமானது. காத்திரமானது.
சிறுகதைகளை அவர் குறைந்த அளவே எழுதியிருந்தாலும் அவை
முக்கியமானவையென்பதென் கருத்து ), புத்தகக் கண்காட்சி பற்றிய கவலைமிக்க
கருத்துகளும் சிறிது வியப்பினை ஏற்படுத்தின. குறிப்பாக அவரது பின்வரும்
கூற்றுகளைக் குறிப்பிடலாம்: 'நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்து ஒரு
அறிவார்ந்த சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று ஆரம்பித்த முயற்சி இன்று
வியாபாரி என்ற பெயரைச் சம்பாதித்துக் கொடுத்துள்ளது'. இதற்கு நான்
மற்றவர்களின் அனுபவத்தைக் குறிப்பிட முடியாது. ஆனால் என்
அனுபவத்தைக் குறிப்பிட முடியும். இது நடந்தது பல வருடங்களுக்கு
முன்னர். இப்பொழுதும் நூல்களின் விலைகளை நிர்ணயிப்பதில் அதே
நடைமுறையினைத்தான் செல்வம் கடைப்பிடிக்கின்றாரா என்பது தெரியவில்லை.
ஒரே பருமனுள்ள, ஒரே விலையுள்ள இரு நூல்களுக்கு இரு வேறு விலைகள்
குறிப்பிடப்பட்டிருந்தன. சுந்தர ராமசாமியின் சிறுகதைத் தொகுப்பொன்று.
தமிழக விலை ரூபா 125. அடுத்தது: உ.வெ.சாமிநாதய்யர் பதிப்பித்த
சிலப்பதிகாரம். தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக் கழகத்தால்
பதிப்பிக்கப்பட்டிருந்த நூல். அதுவும் அண்ணளவாக சு.ரா.வின்
கதைத்தொகுப்பின் அளவான பருமனையுடைய நூல். அதன் விலையும் ரூபா 125
என்றுதான் குறிப்பிட்டிருந்தது. சு.ராவின் நூலுக்கான விலை $10 (கனேடிய டாலர்கள்) ஆனால் உவேசாவின் நூலுக்கு $20 (கனேடிய டாலர்கள்). இதற்குக் காரணம் கேட்டபோது உவேசாவின்
நூலுக்கு 'டிமாண்ட்' அதிகமென்பதால்தான் அதன் விலை அதிகமென்று
குறிப்பிட்டார். எனக்கு அச்சமயத்தின் உவேசாவின் சிலப்பதிகாரம்
தேவைப்பட்டதால் அதனை அவ்விலைக்கு வாங்கிக் கொண்டேன். முதலாளித்துவ
நாடொன்றில் 'தேவை'யை (Demand) மையமாக வைத்து இவ்விதம் விலைகளை நிர்ணயிப்பது
சாதாரண்மானதே. ஒரு பொருளின் விலை ஒரே நகருக்குள்ளேயே இடத்துக்கிடம்
பல்வேறு விலைகளில் விற்கப்படுவதைப்போல்தான் இதுவும். இதுவொரு வியாபார
நடைமுறை. இத்தகைய நடைமுறைகளைத் தவிர்த்திருந்தால் வியாபாரியென்ற பெயர்
கிடைத்திருக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கப் போவதில்லை. உண்மையில் இது
போன்ற முயற்சிகளை சேவையென்னும் அடிப்படையில் செய்வதானால் தாக்குப்
பிடிக்க முடியாது. ஓரளவு நியாயமான இலாபத்துடன் கூடிய வியாபாரமாக
நடாத்துவதே மிகப்பெரிய சேவையாக அமையுமென்பதென் கருத்து. இவ்விதமாக
சிற்சில கருத்து வேற்றுமைகளிருந்தாலும் கனடாத் தமிழ் இலக்கியச் சூழலில்
செல்வமும், அவரது 'காலம்' சஞ்சிகையும் மற்றும் 'வாழும் தமிழ்' புத்தக
விற்பனையும் தவிர்க்க முடியாத அமசங்களேன்றே நான் கருதுகின்றேன்.
[செல்வம் அவர்கள் இதுபற்றிக் குறிப்பிட்டதாலேயே இதுபற்றிய என்
கருத்தினைக் கூறவேண்டியேற்பட்டது. இதனைச் செல்வம் அவர்கள்
உணர்ந்துகொள்வார்களென்பதென் எதிர்பார்ப்பு.]
'சுதர்ஸன் ஸ்ரீனிவாசனின் 'எம்மை நாமே சிலுவையில் அறையலாம்'
என்னும்' ரொராண்டோ' குழுக்கள் பற்றிய கட்டுரையில் ஆசிரியர் சட்டவிரோதச்
செயல்களை ஆதரிக்கும் பெற்றோர்கள், உறவினர்களைப் பற்றியும்
விமர்சித்திருப்பது வரவேற்கத்தக்கது. சமூக உதவிப் பணம் பெற்றுக் கொண்டே
மேலும் பிறரது சமூகக் காப்புறுதி இலக்கங்களைப் பாவித்து வேலைப்
பார்த்துக் கொண்டு, பதிவு செய்யாமலே கணவன் , மனைவியாக வாழ்ந்துகொண்டு
மேலும் சுகங்களை அனுபவிப்பதை மிகவும் இயல்பாக ஏற்றுக் கொண்டும்,
அவ்விதம் சேமிக்கும் பணத்தின் மூலம் செல்வந்தராவது தவறான வழியென்பதைக் கூடப் புரிந்து கொள்ளாமல் வாழ்பவர்களிடம் வேறெதைத்தான் எதிர்பார்ப்பது?
நிவேதாவின் 'உம்பர்டோ ஈகோவின் போடோலினோ' என்னும் அறிமுகக் கட்டுரை
நல்லதொரு கட்டுரை. உம்பர்டோ ஈகோ போன்றவர்களின் எழுத்துகளை வாசிப்பதற்கு
மிகுந்த இலக்கியத் தேடல் மிக்க ஆர்வம் அவசியம். இத்தகைய கட்டுரைகள்
தமிழ் வாசகர்களுக்கு மேற்படி ஆர்வத்தினை ஏற்படுத்தும் வல்லமை மிக்கன.
மேலும் இம்மலரைக் கனடாத் தமிழ் இலக்கியச் சூழலில் நன்கு அறியப்பட்ட
டானியல் ஜீவா, மணி வேலுப்பிள்ளை, மெலிஞ்சி முத்தன், மா.
சித்திவிநாயகன், கவிஞர் திருமாவளவன், டி.செ.தமிழன் எனப் பலரின்
ஆக்கங்கள் நிறைத்திருக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால் ஆசிரியர்
குழுவினர் பெருமைப்படும் வகையில் மலர் வெளிவந்திருக்க்கின்றது. 'வடலி'
அமைப்பினரின் நூல் தயாரிப்பும் பாராட்டுதற்குரியது.
மேற்படி 'கூர் 2010' கலை இலக்கிய மலரினை
வாங்க விரும்புவோர் தொடர்கொள்ள வேண்டிய முகவரி மற்றும் மின்னஞ்சல்
விபரங்கள் வருமாறு:
Koor Circle
102, Huntingdale Blvd,
Scarborough,
ON M1W 1T1
Canada
Email: koorcircle@gmail.com
- ஊர்க்குருவி - |