| இலக்கியத் திருவிழா!
 - புதியமாதவி, மும்பை -
 
 
  தமிழகத்தில் பொள்ளாச்சி இலக்கியக் கழகமும் சிற்பி 
அறக்கட்டளையும் இணைந்து மகாலிங்கபுரம் மீனாட்சி திருமண மண்டபத்தில் 30-7-06ல் காலை 
10 மணி அளவில் 11ஆம் ஆண்டு சிற்பி இலக்கிய விருது வழங்கும் விழாவை மிகச்சிறப்பாக 
நடத்தினர். 1996, ஜுலை மாதம் தன் மணிவிழாவின் போது கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியன் 
அவர்கள் அந்த விழாவின்போதே ஒரு கவிஞருக்கு ரூபாய் பத்தாயிரம் வழங்க இருப்பதாக 
அறிவித்தார். அந்த ஆண்டுமுதல் சிற்பி அறக்கட்டளைப் பணி இலக்கியம், கலை, கல்வி 
சார்ந்த பல்வேறு தளங்களில் தொடர்கிறது.
 கவிஞர் சிற்பியின் வரவேற்புரையுடன் விழா துவங்கியது. இலக்கியவிருது பெறும் கவிஞர் 
வ.ஐ.ச.ஜெயபாலன், இலக்கியப்பரிசு பெறும் கவிஞர்கள் புதியமாதவி, கடற்கரய் பற்றிய 
அறிமுகத்தையும் அவர்கள் கவிதை வரிகளில் சிலவற்றையும் வாசித்துக்காட்டி விழாவை 
துவக்கி வைத்தார். கோவை பாரதிய வித்யா பவன், தலைவர் டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் 
வாணவராயர் விழாவுக்குத் தலைமைத்தாங்கி கவிஞர்களுக்கு விருதுகள் வழங்கினார்.
 
 விருதுபெற்ற கவிஞர் வ.ஜ.ச.ஜெயபாலன் தன் ஏற்புரையில் பேசியதாவது"
 
 " கொங்குமண்ணிற்கு நான் நிறைய கடமைப்பட்டுள்ளேன். 1985-86களில் நான் இலங்கையிலிருது 
தமிழகம் வந்து தலைமறைவு வாழ்க்கை நடத்தியபோது எனக்கு ஆதரவு கொடுத்தது இந்த கோவை 
மண்ணின் மக்களும் வானம்பாடிக் கவிஞர்களும்தான். அந்த நன்றிக்காகவே சிற்பி 
இலக்கியவிருதை ஏற்க முன்வந்தேன்.சமூகத்தின் கனவுகள் முன்னிலைப் படுத்தப்படாத ஒரு 
காலத்தில் வானம்பாடிக் கவிஞர்களின் கவிதைகள் சமூகத்தை முன்னிலைப் படுத்தியது.
 
 தமிழ் மண்ணின் அனுதாபமும் ஆதரவும்தான் ஈழத்தமிழர்கள் சரணாகதி அடையாமல் தொடர்ந்து 
போராடும் உறுதியைத் தந்திருக்கிறது. கடந்த நூற்றாண்டுகளில் தமிழ் மொழியில் 
சமஸ்கிருத மயமாக்கல் இருந்தது. தற்போது உலகமயமாக்கல் இருக்கிறது.
 
 இந்த விழாவிற்காக கோவை வந்த போது நன்னன் என்ற மன்னனால் கொல்லப்பட்ட பெண்ணைப் பற்றிய 
பேச்சு வந்தது. அந்தப் பெண்ணுக்கு எழுப்பப்பட்டுள்ள ஆனைமலை மாசாணி அம்மன் 
கோவிலுக்குச் சென்றேன். மாசாணி அம்மனைத் தரிசித்ததையே எனக்கு கிடைத்த மிகப்பெரிய 
விருதாக கருதுகிறேன்."
 
 தன் உரையில் இறுதியாக கவிஞர் ஜெயபாலன் 'நெடுந்தீவு ஆச்சி' என்ற தன் 
கவிதையை வாசித்தார்.
 
 'என் இளமை நாள் பூராக
 ஆடியும் பாடியும் கூடியும் வாடியும்
 தேடிய வாழ்க்கை
 ஆமை நான், உனது கரைகள் நீளப்
 புதைத்து வந்தேனே'
 
 'தருணங்கள் யார் வென்றாலும்
 அவர்களுடைய புதைகுழிகளின்மேல்
 காலத்தை வெல்லுவாள் எனது ஆச்சி'
 
 காலத்தை வெல்லுவார்கள் நம் ஆச்சியின் பேரப்பிள்ளைகள் என்று மானசீகமாக அவையில் 
இருந்த தமிழ் உறவுகள் வாழ்த்தின. திருமதி வாசுகி ஜெயபாலன் அவர்கள் மகாகவி பாரதியின் 
பாடலையும் கவிஞர் ஜெயபாலன் பாடலையும் இசையுடன் பாடி இலக்கிய விழாவுக்கு சங்கீத 
மெருகூட்டினார். அவர் நார்வேயில் இசை ஆசிரியராக பணியாற்றுகிறார் என்பதும் 
குறிப்பிடத்தக்கது.
 
 தன்னில் தானே லயிக்கும் கவிஞர் கடற்கரய் என்றும் வாழ்வின் அசல் பக்கங்களைத் தேடும் 
கவிஞர் புதியமாதவி என்றும் கவிஞர் சிற்பியால் அறிமுகம் செய்யப்பட்ட இருவரும் 
ஏற்புரை வழங்கினர்.
 
 விருது வழங்கும் விழாவுடன் இணைந்து கவிஞர் சிற்பியின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி 
பெயர்த்து பேராசிரியர் மருதநாயகம் எழுதியுள்ள : SIRPI : Poet as Sculptor என்ற நூலை 
கவிஞர் பாலா அவர்கள் வெளியிட கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் அவர்கள் 
பெற்றுக்கொண்டார். கவிஞர் பாலா, விமர்சகர் இந்திரன், கவிஞர் புதியமாதவி ஆகியோர் 
தமிழ்க் கவிஞர்களின் கவிதைகள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் பிறமொழிகளிலும் 
மொழிபெயர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தைக் குறிப்பிட்டனர். சிறப்புரை வழங்கிய 
எழுத்தாளர் ராமகிருஷ்ணன் அவர்கள்
 
 ' தமிழ்க் கடவுளுக்கும் கவிதைக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. பழமொழிகளாக நம் 
பெண்கள் உதிர்ப்பவை எல்லாம் கவிதைகள் தாம். ' என்றார்.
 
 பேராசிரியர் சேதுபதியும் மருத்துவக்கல்லூரி மாணவி நந்தினியும் நிகழ்ச்சியை மிகச் 
சிறப்பாக தொகுத்து வழங்கினர். என்.ஜி.எம். கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் ஜோதிமணி 
நன்றி கூறினார். கல்லூரி பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், 
இலக்கிய ஆர்வலர்கள், புரவலர்கள் என்று அரங்கில் எங்கு திரும்பினாலும் கவிதையின் 
புன்னகைச் சிந்தியது பொள்ளாச்சி. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை இலக்கிய 
விழாவுக்கு அரங்கம் நிரம்பி இருந்தக் காட்சி ஆரோக்கியமான ஓர் இலக்கியச் சூழல் 
பொள்ளாச்சியிலும் கோவையிலும் நிலவுவதைக் காட்டியது.
 
 கவிதையின் முகமே தன் முகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் கவிஞர்களைப் பாராட்டி கவிதையே 
இயக்கமாக வாழ்ந்து கொண்டிருக்கும் கவிஞர் சிற்பிக்கு வாழ்த்துகள்.
 
 puthiyamaadhavi@hotmail.com
 |  |