இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஆகஸ்ட் 2006 இதழ் 80 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
இங்கே விளம்பரம் செய்ய வேண்டுமா? 
ads@pathivukal.com
Amazon.Ca
In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் முரசு அஞ்சலின் latha, Inaimathi, Inaimathitsc அல்லது ஏதாவது தமிழ் tsc எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
அரசியல்!
சலாம் மும்பை..?
- புதியமாதவி, மும்பை -


ரத்த வெள்ளத்தில் உறைந்துவிடும் மும்பை- தொடர் வெடிகுண்டுகளில் தூள் தூளாக சிதைந்துவிடும் மும்பை- மயானக்காடாகி மண்ணில் புதைந்துவிடும் மும்பை- மனிதர்கள் மதத்தின் பெயரால் இனத்தின் பெயரால் மொழியின் பெயரால் சுயநல மிருகங்களாகி மனித நேயத்தை அழித்துவிடக்கூடும் என்ற கணக்கு பொய்த்துவிட்டது. இதோ.. எழுந்து நடக்கிறது எங்கள் மும்பை.. தொடர் வெடிகுண்டுகளில் உறவுகளை இழந்து உடமைகளை இழந்து எல்லாம் இழந்தப் பிறகும் இனி இழப்பதற்கு எதுவுமில்லை என்ற நிலையிலும் கொட்டும் மழையில் நடுஇரவில் ஸ்தம்பித்து நிற்கும் வாகனங்களுக்கு நடுவில் தண்ணீர்ப் பாட்டில்களுடன், சாய், காபி, பிஸ்கட் என்று எங்கிருந்தோ ஓடிவந்து உதவும் மனிதர்களின் கைகளுக்கு நடுவில் எழுந்து நிற்கிறது எங்கள் மும்பை.. 200 பேர் இறந்துவிட்டார்கள்.. 700 பேர் உயிருக்காகப் போராடுகிறார்கள்.. தொடர்ந்து 36 மணிநேரம் மும்பை அரசு மருத்துவமனை டாக்டர்களின் சேவை.. மருத்துவமனைகளை நோக்கி கூட்டம் கூட்டமாக மக்கள் அணிவகுத்து நிற்கிறார்கள்.. உயிருக்காகப் போராடும் ஊர்ப்பேர் அறியாதவர்களுக்கு ரத்ததானம் வழங்க! மருத்துவர்கள் தேவையான அளவு ரத்தவங்கிகளில் ரத்தம் இருக்கிறது என்று சொல்லி கலைந்து போகச் சொன்ன மனித நேய வரலாற்றைப் படைத்து நிமிர்ந்து நிற்கிறது எங்கள் மும்பை.

கடந்த செவ்வாய் அன்று 11/7/06 மும்பையின் மேற்கு மண்டல இரயில் போக்குவரத்து நிலையங்களில் ஏழு இடங்களில் எட்டு தொடர் வெடிகுண்டுகள். மாலை நேரத்தில் வேலையிலிருந்து வீடு திரும்பும் 5.30 மணியிலிருந்து ஏழு மணிவரை (பீக் ஹவர்ஸ்)  மிகவும் அதிகமான பயணிகள் பயணிக்கும் நேரத்தைக் கணக்கிட்டு தீவிரவாதிகளால் மிகவும் சரியாக கணக்கிடப்பட்டு தாக்கப்பட்டிருக்கிறது மும்பை.
6.15க்கு பாந்திரா
6.23 க்கு மகிம்
6.24 க்கு க்கார் ரோட்
6.25 க்கு ஜோகேஸ்வரி
6.30 க்கு மாதுங்கா
6.31 க்கு மீரா ரோடு
6.35 க்கு போரிவலி (இரண்டு இடங்களில்)

தாக்குதல் அனைத்தும் முதல் வகுப்பு பெட்டிகளில். போரிவலியில் மட்டும் இரண்டு வெடிகுண்டுகள். செய்தி காட்டுத்தீ போல பரவியது. ஒரு சில நிமிடங்களில் கைபேசிகள் ஊமையாகிவிட்டன. ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் தொடர்பு கொள்ள முயற்சித்ததால் ஏற்பட்ட விளைவுதான் கை பேசிகளின் செயல் இழப்பிற்கு காரணமானது. எனினும் மும்பையின் MTNL தொலைபேசிகளில் தொடர்புகள் விட்டுவிட்டு கிடைத்தது சற்று ஆறுதலாக இருந்தது.

காவல்துறைக்கு காத்திருக்காமல் தன் சகப்பயணிகளைத் தூக்கிச் சுமந்து கொண்டு வண்டிகளில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பும் மனிதர்கள், சத்தம் கேட்டு ஓடிவந்து உதவிய மக்கள்,தன் அண்டை வீட்டு துக்கத்தை தன் வீட்டு துக்கமாக அனுசரிக்கும் மக்கள்.. இப்படியாக மும்பை மீண்டும் ஒரு சரித்திரம் படைத்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

மும்பையில் வாழ்ந்தவர்கள், மும்பை மின்சாரவண்டிகளில் பயணம் செய்தவர்களால் மட்டுமே நடந்த முடிந்த தீவிரவாதிகளின் தாக்குதல் எவ்விதமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள
முடியும். கிட்டத்தட்ட 60 இலட்சம் மக்கள் தினமும் பயணம் செய்யும் மின்சார வண்டிகள், அதுவும் "பீக் ஹவர்ஸ்" என்று சொல்லப்படும் நேரத்தில் நடந்த தாக்குதல் இது.

அமெரிக்காவில் இரட்டைக்கோபுரங்கள் பின்லேடனின் தீவிரவாதத்தில் எரிந்தபோது அது ஒட்டுமொத்த அமெரிக்காவின் மீது நடந்த தாக்குதலாகவே கருதப்பட்டது. அதுபோலவேதான் மும்பையில் நடந்த இந்தத் தாக்குதலும் இந்தியாவின் மீது ஏவப்பட்ட தீவிரவாதிகளின் தாக்குதலாகவே கருத வேண்டியுள்ளது.

இந்த தாக்குதலுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. 1993, மார்ச் 12ல் மும்பையில் தொடர்வெடிகுண்டுகள் வெடித்து தாக்குதல் நடைபெற்றபோது அதில் சம்மந்தப்பட்ட முக்கிய குற்றவாளியான பிரபல நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம்தான் இந்தத் தாக்குதலுக்கும்
திரைமறைவில் இருந்து செயல்பட்டவன் என்கிறார்கள். தாவூத்தின் பல்வேறு ஷாப்பிங் காம்ப்லெக்ஸ் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களை அரசு பறிமுதல் செய்தது. அதை ஏலம் விடுவதற்காக பலமுறை நடவடிக்கை எடுத்தும்
தாதா தாவூத்தின் கட்டிடங்களை ஏலம் எடுக்க எவரும் முன்வரவில்லை.. இந்நிலையில் 12/7/06 , புதன்கிழமை அக்கட்டிடங்களை இடித்து தள்ள அரசு தரப்பில் திட்டமிடப்பட்டிருந்தது.. தன் கட்டிடங்கள் இடிக்கப்படுவதற்கு
சரியாக ஒருநாள் முன்பாகவே மும்பையைக் கதிகலங்கச் செய்யும் தாக்குதலை லஷ்கர் இயக்கத்தின் மூலம் சிமியின் உதவியுடன் நடத்தி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

மும்பை கிரா·பட் மார்க்கெட்டில் மத்திய அரசுக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டிருக்கும் தாவூத்திற்குச் சொந்தமான சாரா-சஹாரா ஷாப்பிங்

காம்ப்லெக்ஸ் கட்டிடத்தை மும்பை மாநகராட்சி 12/7/06 இடித்து தள்ள இருப்பதை உறுதிச் செய்கிறது பத்திரிகை செய்திகள். 50 மாநகராட்சி அதிகாரிகள், 300  தொழிலாளர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். எந்த தீவிரவாதிக்கும் மும்பை மாநகரம் தலைவணங்காது என்பதை உணர்த்துவதற்கு மிகுந்தப் பாதுகாப்புகளுடன் இப்பணியைத் துணிந்து செயல்படுத்துகிறது மும்பை மாநகராட்சி நிர்வாகம்.

ஜூலை முதல் வாரத்த்தில் தானா மாவட்டத்திலிருக்கும் பீவண்டியில் மசூதி அருகே காவல்நிலையம் கட்டுவதற்கு >எதிர்ப்பு தெரிவிக்கும் கலவரத்தில்

இசுலாமியர்கள் ஈடுபட்டதால் துப்பாக்கிச் சூடு , பதட்டநிலை ஏற்பட்டது. காவல்துறையைச் சார்ந்தவர்கள் கொலை செய்யப்பட்டதால் இக்கலவரம் இந்து-முசுலீம் கலவரமாகும் சூழல் ஏற்பட்டது.

மும்பை தாதரில் சிவசேனா தலைவர் பால்தாக்கரேயின் துணைவியாரின் சிலையில் சில சமூகவிரோதிகள் கறைபடுத்தியதால் மராத்திய மாநிலமெங்கும் சிவசேனாவின் போராட்டம். கதவடைப்பு, தனியார் பேருந்து
எரிப்பு. அன்று ஞாயிற்றுகிழமை 9/7/06 விடுமுறை நாள் என்பதால் பொதுமக்களுக்கு அதிகமான பாதிப்புகள் இல்லை.

இந்த இரண்டு சம்பவங்களையும் பெரும் கலவரமாக்கும் நிலையிலிருந்து மும்பையைக் காப்பாற்றிய மராத்திய மாநில அரசால் செவ்வாய்க்கிழமை நடந்த குண்டுவெடிப்பிலிருந்து மும்பையைக் காப்பாற்ற முடியவில்லை. நடுவண் அரசும் உள்துறை அமைச்சரும் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்கிறார்கள், இந்தத் தாக்குதல் குறித்து ஏற்கனவே அறிந்திருந்தும் எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டதற்காக.

மாநில அரசு மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் பொதுவாகவே எச்சரிக்கை "ரெட் அலர்ட்"  அனுப்பியிருந்ததைக் குறிப்பிடுகிறது. மும்பையைப் பற்றி அறிந்தவர்களுக்குத் தெரியும், மும்பையின் ரயில்களில் குண்டுவெடிப்புகளைத் தடுக்க முன்கூட்டியே அறிந்து கொள்ள எடுக்கும் திட்டங்கள் எத்துணை பலகீனமானதாக இருக்கும் என்பது.

மும்பையின் மேற்குப்பகுதி புறநகர் பயணிகளைக் குறிவைத்து தாக்கப்பட்டிருப்பதால் அதிகமாக் குஜராத்திகள் வசிக்கும் இடம் என்பதாலும் குஜராத்தில் நடைபெற்ற வன்முறைக்கு எதிரானப் பலிவாங்கும் செயலாகவும்
இத்தாக்குதலைச் சிலர் எண்ணுகிறார்கள்.

1993 முதல் இன்றுவரை மும்பையில் நடந்த தாக்குதல்கள்:

*1993, மார்ச் 12: மும்பையின் சவேரி பஜார், சென்ச்சுரி பஜார், ஏர் இந்தியா கட்டிடம், பங்கு சந்தைக் கட்டிடம், சீ ராக் ஹோட்டல், ஜூகு செண்டார் ஹோட்டல், சிவசேனா பவன் ஆகிய இடங்களில் குண்டு வெடித்து தாக்குதல்.
1992ல் பாபர் மசூதி இடித்ததற்குப்

பழிவாங்கவே இத்தாக்குதல் நடத்தப்பட்டது. தாவூத் இப்ராகிம்,டைகர் மேனன், முகமது டோசா - இம்மூன்று நிழலுலக தாதாக்களும், பாகிஸ்தானின் ISI உதவியுடன் இத்தாக்குதலை நடத்தியதாக சொன்னார்கள். அரசு கணக்குப்படி 257 பேர் உயிரிழந்தார்கள், 713 பேர் படுகாயமடைந்தார்கள். 13 வருடமாகிறது..இன்றுவரை குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. நீதிமன்றங்களில் எப்போதாவது தூசித் தட்டி எடுக்கப்படுகிறது இந்தக் கோப்புகள்.

1993 க்குப் பிறகு 13 ஆண்டுகளில் இதுவரை 11 தடவை மும்பையும் மும்பையின் புறநகர்ப் பகுதியும் குண்டுவெடிப்பு தாக்குதலுக்குள்ளாகி இருக்கிறது.

'இந்தியாவில் எங்கு குண்டு வெடித்தாலும் அதற்கு பாகிஸ்தாந்தான் காரணமா?' என்று பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷ்ரப் கேள்விக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பதிலளித்துள்ளார். தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் உதவுவதை நிறுத்தவிட்டால் பாகிஸ்தானுடன் இந்தியா நடத்தும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அர்த்தமில்லை, பாகிஸ்தான் நாட்டிலிருந்து எல்லா தீவிரவாத அமைப்புகளும் ஒழிக்கப்படவேண்டும் என்று எச்சரிக்கை செய்துள்ளார். இந்தியாவின் கருத்தை உலக அரங்கில் ரஷ்யாவின் நடைபெறும் ஜி-8 மாநாட்டில் மிகத் தெளிவாக மன்மோகன்சிங் எடுத்துரைப்பார் என்று நம்பப்படுகிறது.

இந்தத் தாக்குதலில் தொடர்ந்து மும்பையின் பொதுமக்கள் பலியாகி வருகிறார்கள். 11/7 தாக்குதலில் மும்பை ரத்த வெள்ளத்தில் பனிக்கட்டியாக உறைந்துப்போனது உண்மைதான். குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்களில் அடையாளமாக கை விரல்களில் அணிந்திருந்த மோதிரங்கள், அவரவர் பேண்ட் பாக்கெட்டில் இருந்த அடையாள அட்டைகள் இப்படி ஒரு சிலதான் உதவியது. மரணத்தின் கோர முகத்துடன் மனிதர்கள் போராடியது மும்பையின் மனித வரலாற்றில் ஒவ்வொரு மும்பை வாழ் மக்களின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத துயரம். அந்தத் துயரத்திற்காக மும்பை நிலை குலைந்துவிடவில்லை. அடுத்த 12 மணி நேரத்திற்குள் அதே மேற்கு ரயில் தண்டவாளங்களில் ரயில்கள் ஓடியது. அதே வெடிகுண்டு தாக்குதலுக்குள்ளான இரயிலை ஓட்டிய எஞ்சீன் டிரைவர்கள் மறுநாள் அதே தடத்தில் பணியில் அமர்ந்து மும்பையை ஓட வைத்தார்கள். மும்பையின் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. கணினி வழியாக பங்கு சந்தையில் பங்குகள் வாங்குவதும், விற்பதும் சாத்தியமாகிவிட்ட நிலையில் இந்திய பொருளாதரத்தை, இந்திய ரூபாயின் மதிப்பை தீர்மானிக்கும் பங்கு சந்தை வழக்கம்போல செயல்பட்டது. அலுவலகங்களில் பணி செய்பவர்கள், பயணத்தில் இழந்தப்போன பக்கத்து இருக்கையின் காலியிடத்தை நிரப்பும் மன உறுதியுடன் பணியைத் தொடர்ந்தார்கள். இசுலாமிய தீவிரவாதிகளின் இத்தாக்குதலுக்கு அப்பாவி இசுலாமிய மக்கள் பொறுப்பில்லை என்ற தெளிவு மும்பை மக்களுக்கு இருந்தது. இருக்கிறது. தொடர் வெடிகுண்டு தாக்குதலுடன் சேர்ந்தது மழை. அந்த மழையின் தூறல் மும்பை தண்டவாளங்களில், பிளாட்பாரங்களில் சிதறிக்கிடந்த ரத்த வெள்ளத்தை துடைத்தது. அன்றிரவே உள்துறை அமைச்சரும், ரயில்வே அமைச்சரும் சோனியாகாந்தியுடன் மும்பை மக்களைப் பார்த்து ஆறுதல் சொல்ல வந்ததை மும்பையின் காவல்துறையும் பொதுமக்களும் விரும்பவில்லை. காவல்துறையும் அரசும் அவசரமாகச் செய்ய வேண்டிய பணிகளுக்கு இடையூறாக இருக்கும் இவர்களின் வருகை என்ற கருத்தை மிகத் தெளிவாக முன்வைத்தார்கள்.

மும்பை வாழ்ந்து கொண்டிருக்கிறது இழப்புகளைத் தாங்கிக்கொண்டு. தலைவர்களின் அறிக்கைகள், அமைச்சர்களின் வருகை என்ற பளிச்சிடும் காமிராவின் வெளிச்சங்களைக் கண்டு மயங்காமல் அன்றாட வாழ்க்கையைத் தேடும் உங்களைப் போல என்னைப் போல நம்மைப் போல சாதாரண மக்களின் ஓட்டத்தையே தன் ஜீவனாகக் கொண்டு எரியும் சாம்பலிலிருந்து எழுந்து பறக்கும் பறவையாய் இதோ மீண்டும் வேகமாக மின்சார வண்டிகளில், பெஸ்ட் பேருந்துகளில், கார்களில் , சாலைகளில் பயணம் செய்கிறது எங்கள் மும்பை. முகமறியாமல், முகவரி அறியாமல் மும்பை மனிதர்கள் செய்யும் மனித நேயத்தில் மீண்டும் மீண்டும் எழுந்து நிற்கிறது கம்பீரமாக அம்ச்சி மும்பை.

puthiyamaadhavi@hotmail.com
 

© காப்புரிமை 2000-2005 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner