தினக்குரல்: மே 10, 2007!
பேராசிரியர் சிவத்தம்பிக்கு அகவை 75!
-தி. ஞானசேகரன்-
இன்று
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் எழுபத்தைந்தாவது அகவையை நிறைவுசெய்து
பவள விழா நாயகனாகத் திகழ்கிறார் என்ற செய்தி தமிழ்கூறு நல்லுலகிற்குப் பெரும்
மகிழ்வினைத் தருவதாகும். இன்று உலகில் உள்ள தமிழ்ப்பேரறிஞர்கள் வரிசையில்
முன்னணியில் திகழ்பவர் பேராசிரியர். பழந்தமிழ் இலக்கியம், இலக்கணம், நவீன
இலக்கியம், தமிழ் நாடகம், தமிழர் பண்பாடு, அரசியல், பொருளாதாரம், தொடர்பாடல் ஆகிய
துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்ட பேராசிரியர், தமிழில் 35 நூல்களையும் ஆங்கிலத்தில் 11
நூல்களையும் எழுதியுள்ளார். இவற்றைவிட, ஐம்பதுக்கு மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள்,
பிரசுரங்கள் ஆகியவற்றையும் இவர் எழுதியுள்ளார். உலகில் எங்கு தமிழாராய்ச்சி
மாநாடுகள் நடந்தாலும் அங்கு பேராசிரியர் சிவத்தம்பியின் பங்களிப்பும் இருக்கும்.
வெளிநாடுகளில் நடைபெற்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வு மாநாடுகளில் பங்குபற்றி
பேராசிரியர் எமது நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
பொதுவாகப் பேராசிரியர் என்றால் ஒரு துறையிலேயே ஆய்வு செய்து அத்துறையில் அறிஞர்களாக
இருப்பர். ஆனால், பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் தமது பல்துறைச் சங்கம ஆய்வுமூலம்
பல்வேறு துறைகளில் இயங்கி பன்முக ஆளுமையாளராகத் திகழ்கிறார். எவரும் எந்நேரத்திலும்
பேராசிரியரை அணுகி தமக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம். அவர் ஒரு
நடமாடும் நூலகம். பேராசிரியர் அவர்கள் அன்பானவர்; பண்பானவர்; மனிதநேயம் மிக்கவர்.
"ஞானம்" சஞ்சிகைக்காக அவரிடம் ஒரு தொடர் நேர்காணலைப் பெற்ற வேளையிலே தான் அவரோடு
நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. நேர்காணலை ஆரம்பித்து நடத்திக்
கொண்டிருந்தபோது அறிவுச்சுரங்கம் ஒன்றை அகழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதை என்னால்
உணர முடிந்தது. வேறு நேர்காணல்களில் சொல்லியிராத பல விடயங்களை இந்நேர்காணலிலே
பேராசிரியர் சொல்லியிருக்கிறார். அவரது வாழ்க்கைப் புத்தகத்தில் அதுவரை
திறக்கப்படாத பக்கங்கள் சில அந்த நேர்காணலிலே திறக்கப்பட்டன. பேராசிரியரின் அறிவுப்
புலத்தின் ஆழத்தையும் பரந்த தேடல் அனுபவத்தையும் அந்த நேர்காணலில் நான்
தரிசித்தேன். உண்மையில் அவரது அறிவுப் புலம் எனக்குச் சவாலாக இருந்தது. அவர்
கூறியவற்றையெல்லாம் புரிந்துகொண்டு சரியான முறையில் அவற்றை வாசகர்களுக்குக்
கொடுப்பதில் எனது அறிவின் போதாமையை நான் பல சந்தர்ப்பங்களில் உணர்ந்தேன்.
பேராசிரியர் தனது ஆரம்பக் கல்வியை வடமராட்சி கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியிலும்
இடைநிலைக் கல்வியை கொழும்பு ஸாகிராக் கல்லூரியிலும் பெற்றவர். உயர்கல்வியை
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பெற்று பர்மிங்காம் பல்கலைக்கழகம் சென்று பேராசிரியர்
தொம்சனின் கீழ் DRAMA IN ANCIENT SOCIETY என்ற ஆய்வினைச் செய்து பட்டம் பெற்றவர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்திலும்
பேராசிரியராகப் பணிபுரிந்தவர். தஞ்சைப் பல்கலைக்கழகம், ஸ்கண்டிநேவியா
பல்கலைக்கழகம், உப்சலா பல்கலைக்கழகம், அமெரிக்காவிலுள்ள கலிபோனியா, பெர்க்கிளி,
விஸ்கான்ஸியன், ஹாவாட் ஆகிய பல்கலைக்கழகங்களில் வருகைப் பேராசிரியராகப்
பணியாற்றியவர்.
மாணவனாக இருந்த காலத்தில் வானொலி நாடகங்களில் நடித்த பேராசிரியர் பின்னர் மேடை
நாடகங்களிலும் நடித்துப் புகழ்பெற்றார். இந்த நாடக அறிவே பின்னர், இவரை
நாடகத்துறையில் தனது பட்டப்படிப்புக்கு ஆய்வினை மேற்கொள்ள வைத்தது எனலாம்.
பேராசிரியர்கள் கணபதிப்பிள்ளை, வித்தியானந்தன் ஆகியோரின் மாணவராக இருந்து இவர்களது
வழிகாட்டலில் மரபுவழி நாடகங்களையும் நவீன நாடகங்களையும் ஒருசேர வளர்த்ததோடு
பல்கலைக்கழகத்தில் `நாடகமும் அரங்கியலும்' என்ற பட்டப்படிப்பு பாடநெறியினை
உருவாக்குவதில் பெரும் பங்காற்றியவர்.
பேராசிரியர் அவர்கள் தமிழுக்குப் பணியாற்றியதோடு, தமிழ் மக்களுக்கும்
பணியாற்றியவர். 1984-86 காலப்பகுதியில் வடகிழக்குப் பிரதேசத்தின் பிரஜைகள்
கண்காணிப்புக்குழு ஒன்றியத்தின் தலைவராகப் பணியாற்றினார். படையினர் இழைக்கும்
குற்றங்களை தளபதிகளுக்கு எடுத்துக்கூறியும் மக்கள் படும் துன்பங்களை
அரசமட்டத்துக்கு எடுத்துச் சென்றும் பணியாற்றிய வேளையில் இவருக்கு உயிர் ஆபத்து
ஏற்படும் நிலைமைகள் இருந்தன. அரச மட்டத்தில் இவரைச் சந்தேகக் கண்கொண்டு பார்த்தனர்.
அந்நிலையிலும் தமது உயிரைத் துச்சமாக மதித்து தமிழ் மக்களுக்காகப் பாடுபட்டார்.
1986-96 காலப் பகுதியில் தமிழ் மக்கள் அல்லலுற்று அகதிகளாகத் திரிந்த வேளையில்,
"அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்தின்" தலைவராக இருந்து அவர் ஆற்றிய பணி அளப்பரியது.
1960 களில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம், மரபுப் போராட்டம் ஆகியவற்றில்
பேராசிரியர் கைலாசபதியுடன் இணைந்து இவர் ஆற்றிய பணி முக்கியத்துவம் வாய்ந்தது. 1962
இல் சிவத்தம்பி அவர்கள் எழுதிய "அசையாத குட்டை நீரல்ல மரபு" எனத் `தினகரன்'இல்
எழுதிய கட்டுரையே மரபுப் போராட்டத்தின் தொடக்குவாயாக அமைந்தது. மார்க்சிய ஒளியில்
தமிழ் விமர்சனத்துறையில் புதிய பார்வைக்கு வழிகாட்டியவர் பேராசிரியர்.
பேராசிரியர் ஆற்றிய பணிகளுக்காக ஏராளமான பரிசில்களையும் விருதுகளையும்
பெற்றுள்ளார். இவற்றுள் தமிழக அரசு வழங்கிய திரு.வி.க. விருது பெருமைமிக்கது, எமது
நாட்டுக்குப் பெருமை சேர்ப்பது. பேராசிரியர் தமது தமிழ்ப் பணிகளாலும் ஆய்வுப்
பணிகளாலும் எமது நாட்டுக்குப் பல்வேறு சந்தர்ப்பங்களில் பெருமை சேர்த்துள்ளார்.
பேராசிரியர் சிவத்தம்பியிடம் பயின்ற பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இன்று
பூமிப்பந்தெங்கும் பரந்து வாழ்கிறார்கள். பேராசிரியரிடம் பயின்றதை பெரும் பேறாகக்
கருதிப் பெருமைப்படுகிறார்கள்.
பவள விழாக் காணும் பேராசிரியர், மேலும் பலகாலம் வாழ்ந்து தமிழுக்கும் தமிழருக்கும்
பணியாற்ற வேண்டிப் பிரார்த்திப்போமாக!
நன்றி: தினக்குரல்.காம்! |