மீள்பிரசுரம்: தினக்குரல்.காம்!
பேராசிரியரின் 25 ஆவது நினைவு (டிசம்பர் 6,
2007) தினக் கட்டுரை!
கலாநிதி கைலாசபதியின் காலம் கடந்துவிட்டதா?
-சோ.தேவராஜா-
கைலாசபதி கண்டுணர்ந்து தெளிந்து தேர்ந்து எம் சமூகத்துக்குக் கொண்டு வந்து
சேர்த்திருக்கும் பொக்கிசங்களைப் பாதுகாத்து சமகால
மக்கள் வாழ்வுக்கும் வளத்துக்கும் பயன்படும் வல்லமை பெற்ற பண்பாட்டுப்
படையணியினராக எம்மை வலுப்படுத்தும் காலம்
கனிந்துள்ளது. கைலாஸின் `அடியும் முடியும்' பற்றிய ஆய்வுத் தேடல்
அவசியமாகியுள்ளது. அவை தொடர்பில் சிலவற்றைப் பகிர்ந்து
கொள்ள அவாவுகிறேன்.
எழுத்தாளர்களை கடவுளர்களாக்கிக் கை தொழுது பழமையைப் போற்றிப் பரவிப் பாடிப்
பணிந்தேற்றும் அகாலப் பொழுது சமகால கலை, இலக்கிய நிகழ்வுகள் மூலம்
வெளிப்படுகின்றது.
`பழையன கழிதலும் புதியன புகுதலும் காலவழுவல' என்பது உண்மையெனத் தேர்ந்தால்
`மின்னல் முகில் தென்றலினை மறவுங்கள், மீந்திருக்கும் இன்னல் உழைப்பு இவைகளினைப்
பாடுங்கள்' என்ற மகாகவியின் கட்டளையைப் புரிந்து கொள்வது நலம். மக்களின் வாழ்வே
கலை, இலக்கியங்களின் ஊற்று மூலம் உள்ளடக்கமாய் அமைவது தவிர்க்கவியலாப் பண்பாகும்.
பொழுதை வீணடிப்பதற்கும் சுவைப்பதற்கும் சுகிப்பதற்கும் தமிழ் இலக்கியமும்
கலைகளும் வணிகப் பண்டங்களல்ல. வாழ்வை
வளப்படுத்தும் பொக்கிசங்கள். எழுத்தாளர்கள் `அருளிச் செய்யும்' தெய்வப் பிறவிகள்
என தொழுதேற்றுவதன் மூலம் அவர்களை
மண்ணில் இருந்தும் மக்களிலிருந்தும் அப்புறப்படுத்தி வானுறையும் தேவர்களாக்கி
விடுவதென்பது இம் மண்ணில் உழைத்து வாழும்
மக்களுக்கு நன்மை விளைவிக்காது. சிந்தனையைத் தூண்டித் துலங்கச் செய்யாது
செயலூக்கமற்ற வெறும் ரசிக மனோபாவமுள்ள
மக்கள் திரளைத்தான் தோற்றுவிக்கிறது. இதன் மூலம் தமிழ் தற்காலத்தில் தேக்கமடைந்து
விடுகிறது. `யாதொன்றும் அறியேன் பராபரமே' என்று வாழாதிருக்கும் மக்கள்
திரளின் கையாலாகாத் தனத்தைத்தான் காண முடியும்.
சமயகுரவர்களின் தேவார, திருவாசகங்களுக்கு உள்ளும் வெளியிலும் உறைந்திருக்கும்
சமூகவியலின் சாராம்சத்தை பல்லவர் காலப்
பக்தி இலக்கியத்தினுள் பாய்ச்சலை நடாத்தி, மாயைகளைத் தகர்த்து அவற்றினுள்ளே
ஒளிரும் இலக்கியத்தின் வாழ்வை வர்க்க ஒளியில்
ஒளி பெறச் செய்தவர். தெய்வப் புலவர்கள் எனப் போற்றி அவர்கள் கால ஆய்வைத் தடுத்து,
முக்காலமும் முழுமையாகப் பொருந்தும்
முனிவர்கள் எனப் புகழாரம் ஏற்றி காலத்துக்கேற்ற கருத்துகளை கண்டறிவதைத்
தவிர்த்துத் தொன்மையும் தூய்மையுமே மேன்மையெனப் போற்றும் போலித்தனங்களின்
புனிதங்களை உடைத்து வரலாற்றின் தெளிவைத் துலாம்பரமாகக் காட்டியவர்.
சங்க இலக்கியங்களில் வாய் மொழிப் பாடல் மரபில் தமிழர்களின் வாழ்வை கிரேக்க
காவியங்களில் கிரேக்க மக்களின் வாழ்வுடனும்
பண்பாட்டுடனும் ஒப்பிட்டு நோக்கிச் சர்வதேச மானுடப் பாரம்பரியங்களின் இசைவையும்
வேறுபாட்டையும் விளக்கியவர். வீரயுகப் பாடல்கள், பண்டைத் தமிழர் வாழ்வும்
வழிபாடும் ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கன.
சாதியம், பெண் விடுதலை தொடர்பான கருத்துக்களின் தாக்கம் தொடர்பான நோக்கையும்
போக்கையும் தமிழின் பாரம்பரியத்திலிருந்து அடியும் முடியும் நூலின் மூலம்
வெளிப்படுத்தியுள்ளார். அகலிகை, நாத்தனார் ஆகிய கதாமாந்தரின் பின்புலம், கால
ஆராய்ச்சி, வர்க்க முரண்பாடு ஆகியவற்றை நுனித்தாய்ந்து நுட்பமாகத்
தெளிவுபடுத்தினார். இதன் மூலம் இலக்கியப் பாத்திரங்களின் மூலம் வரலாற்றுணர்வை
வளப்படுத்தி இலக்கியக் கொள்கையை வலுப்படுத்தியவர்.
எழுத்தும் இலக்கியமும் தமிழ் நாட்டுக்கே சொந்தமானதென பிரமையூட்டிய வணிகக்
கருத்தியலிலிருந்து தமிழை மீட்டெடுத்து ஈழத் தமிழர்களின் வாழ்வை எடுத்தியம்பும்
ஈழத்து இலக்கியத்தின் வெளிப்பாட்டுக்கும் தனித்துவ மீட்புக்கும் மேம்பாட்டுக்கும்
அங்கீகாரம்
பெறுவதற்கு முற்போக்கு அணியின் முன்னணியில் நின்று போராடியவர்.
பிரதேசவழக்கு, மண்வாசனை இலக்கியம், நாட்டார் இலக்கியம், வழக்காற்றியல் என்ற
தனித்துவத்தை நிலை நாட்ட இயக்கமாக நின்று செயற்பட்டவர்.
தமிழிலக்கியத் தளத்தை சமகால மக்களின் வாழ்வுப் புலத்துக்கும் இலங்கையின்
தளத்துக்கும் இழுத்து வந்த முற்போக்குப் பாசறையில்
முன்னணியில் திகழ்ந்தவர். உழைக்கும் மக்களின் வியர்வையும் இரத்தத்தையுமே கொண்டு
ஆக்கப்பட்ட வரலாற்றை மேட்டுக்
குடியினரின் ஆண்ட பரம்பரையினரின் ஆதிக்கத்திலிருந்து மீட்டெடுக்கும் மார்க்கத்தை
சுட்டிக் காட்டியவர்.
மாறும் சமுதாய சூழலுக்கேற்ப தமிழ் மக்களின் கருத்தையும் கண்ணோட்டத்தையும்
மார்க்ஸியத்தின் மூலம் விரிவாக்கி ஆழப்படுத்தி அகலிக்கும் முயற்சியில் தன்னைப்
பொதுவுடமைப் பின்னணியில் அடையாளப் படுத்திக் கொண்டவர்.
அமெரிக்காவையும் பிரித்தானியாவையும் ஐரோப்பாவையும் மட்டுமே தமிழர் கண்டு காட்டும்
சர்வதேச சமூகம் என மயங்கும்
வேளையில் சோவியத் சோசலிசக் குடியரசையும் மக்கள் சீனத்தையும் மூன்றாம் உலகங்களான
லத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்கா, ஆசியக் கண்டங்களில் பரந்து வாழும் சர்வதேச
சமூகத்தின் பக்கம் தனது பார்வையைச் செலுத்தியவர். `மக்கள் சீனம்' என்ற பயண நூலை
ஆக்கியவர். சீனத்துப் பண்பாட்டுச் சிற்பி அறிஞர் லூசுன் அவர்களை தமிழுக்கு
அறிமுகப்படுத்துவதில் முன்னின்று உழைத்த ஈழத்து முற்போக்கு அறிஞர்களுடன்
ஒன்றுபட்டுச் செயற்பட்டவர். லூசுன் நூற்றாண்டு நினைவை யாழ்ப்பாணத்தில்
நடாத்துவதில் தூண்டியாகச் செயற்பட்டவர்.
தமிழ் இலக்கியப் பரப்பில் `கலை கலைக்காக' என்றும் கலை வடிவத்துக்காக,
உருவத்துக்காக என்றும் உள்ளடக்கத்தை நிராகரித்த புதுமை விரும்பிகளுக்கெதிராக
உருவ, உள்ளடக்க முரண்பாட்டைத் தெளிவுபடுத்தி மக்கள் இலக்கியக் கோட்பாட்டை
வரித்துக் கொண்டு
வழிகாட்டியவர்.
பண்டித மரபினரிடமிருந்து வந்த நவீன இலக்கியமான சிறுகதை, நாவல் ஆகியவற்றுக்கான
எதிர்ப்புகளைத் தீரமுடன் எதிர்த்து தேசிய
இலக்கியத்தை நிலைநாட்ட வேண்டி மரபுப் போராட்டத்தை முன்னெடுத்த முற்போக்கு
எழுத்தாளர் முகாமின் முன்னணிச்
செயற்பாட்டாளராகத் திகழ்ந்தவர்.
தமிழ் எழுத்தாளர்களின் கலை, இலக்கியங்கள் மீது தனது வெளிப்படையான விமர்சனங்களை
வைத்ததன் மூலம் அவற்றின் குறை நிறைகளை ஆய்ந்து தமிழ் இலக்கிய அரங்கில்
வெளிப்படுத்தியதன் ஊடாக தமிழ் இலக்கியச் செல்நெறியைத் திசைகாட்டி
ஆற்றுப்படுத்தியவர். விமர்சனக் கொதிப்பால் தனிப்படக் கோபப்பட்டும் குரோதம்
கொண்டும் குறுந்தேசிய குளறுபடிகளில் குப்புற வீழ்ந்தும் எழுந்தும்
விரக்கதியடைந்தோர் சிலர். எழுத்தாளர் மத்தியில் `ஐக்கியமும் போராட்டமுமாக' தனது
விமர்சனப் பணியைச் சளைக்காது முன் வைத்தவர்.
இவ்வாறு செயற்பட்ட கைலாஸின் விடுபட்ட பணியை நாம் எவ்வாறு எடுத்துச் செல்வது
என்பது எம் முன்னால் உள்ள கேள்வியாகும்.
ஈழத்துத் தேசிய இலக்கியம் இன்னும் மக்கள் இலக்கியமாக வெகுஜன மட்டத்தில்
முன்னெடுக்கப்பட்டுள்ளதா? இதற்காகத் தொடர
வேண்டியவை எவை?
தரமுயர்ந்த தமிழ் இலக்கியங்களை எவ்வாறு ஆக்குவது? அவற்றை எவ்வாறு
பிரபல்யப்படுத்துவது? சொற்களும் எழுத்துகளும் தமக்கு
இருந்து இழந்து போன செல்வாக்கை மீண்டும் மக்களிடம் எவ்வாறு மீட்டெடுப்பது?
எழுத்தாளர்களின் இலக்கு பொழுதுபோக்கும் புகழ்
சேர்ப்பதும், பிரபல்யம் பெறுவதும் என்ற நல நாட்ட அவாவிலிருந்து எழுத்தாளர்களை
மீட்பது எவ்வாறு? மக்களை முட்டாள்
பெட்டிகளான தொலைக்காட்சித் தொந்தரவிலிருந்து தடுத்தாட் கொள்வதற்கு என்ன உபாயங்களை
மேற்கொள்ள வேண்டும்? நிகழ் கலை இலக்கியங்களை அரங்கேற்றுகைக் கலைகளாக
ஆக்கிப் படைப்பது எப்படி? அவற்றைப் பார்த்துப் படித்துப் பயன்பெறுவதற்குப் பரந்த
வெகுஜனத்தை வென்றெடுப்பது எவ்வாறு? உலகமயம், பெருந்தேசியம், குறுந்தேசியம்
என்பனவற்றுக்கெதிராக மார்க்ஸிய இயங்கியலை முன்னெடுப்பதில் கைகொள்ள வேண்டிய கலை -
இலக்கிய வடிவங்கள் எவை?
கைலாஸின் கால் நூற்றாண்டுக் கால கட்டத்தில் எம் முன் எழுகின்ற கேள்விகள்
இவையாகும்.
கொலையும், குற்றுயிருமாகக் கிடக்கும் இலங்கையின் சுதந்திரத்தையும் தேசத்தையும்,
மக்களையும் பண்பாட்டுத் தளத்தில் மீள உயிர்ப்பிப்பது எப்படி? மக்கள் மத்தியில்
நூலிழையில் தொங்கும் கலை - இலக்கிய உறவினை பாதுகாத்து, மானுட நேயத்தை
மீட்டெடுப்பது எப்படி என்ற வினாக்களுக்கான விடைகளைத் தேடிய பயணத்தில் தளர்வுறாது
- தடுமாற்றம் கொள்ளாது - அச்சமின்றி
முன்னோக்கிய நகர்வினையும் சமூக அசைவியக்கத்தையும் முன்னெடுக்க உழைப்பது ஈழத்து
எழுத்தாளர்கள் - கலைஞர்கள் -
ஆசிரியர்கள் - மாணவர்கள் - ஆர்வலர்கள் அனைவரினதும் உடனடிக் கடமையாகும்.
பண்பாட்டுத் தலைமையை ஈழத்து எழுத்தாளர்கள் பொறுப்பேற்கத் தயாரா என்பதே
முக்கியமாகும்.
பேராசிரியர் கைலாசபதி `தனிமனிதர்'. அவரை மையமாக வைத்து ஆராய்வதும் அணிதிரள்வதும்
பொல்லாச் செய்கை எனப் புழுங்குவது
தமிழ்ப் படிப்பாளிகள் எனத் தம்மைத் தாமே பீற்றிக் கொள்ளும் சிலரின் அண்மைக் கால
நடத்தையாகி வருவதை அவதானிக்க முடிகிறது.
கைலாசபதி காலமாகியே கால் நூற்றாண்டு கடந்துவிட்டது. அவரது ஆராய்ச்சிகளுக்கு
அப்பாலுக்கும் அப்பால் அவற்றை மறுத்தும்
எதிர்த்தும் பலரும் எழுதிவிட்டனர். அவரது முற்போக்கின் காலம் முடிவுக்கு
வந்துவிட்டது. அவரது எழுத்து முயற்சிகள் முடிந்தே
முப்பதாண்டுகள் முற்றுப்பெற்று விட்டன. எனவே, கைலாஸ் காலாவதியாகிவிட்டார்.
மாக்ஸியம் மயானத்துக்கு அனுப்பப்பட்டுவிட்டது. கைலாஸின் அரசியல் அடியோடு
அழிந்துவிட்டது. வேண்டுமானால், அவரின் அரசியலை நீக்கி - அவரின் இலக்கியத்தை
விமர்சித்து நூலாக்கி புராதன பொருட்கள் வைக்கும் நூதனசாலை மடத்தில் மாட்டிக்
கொள்ளலாம் என கைலாஸின் அனுதாபிகள் போல் மாறு வேடந்தாங்கி ஆலோசனை வழங்கச் சிலர்
அவதரித்துள்ளனர் என்பதையும் அனுமானிக்க முடிகிறது.
கைலாசபதி வாழ்ந்த காலத்திலே அவரை அவதூறு செய்து கலை இலக்கிய அரங்கிலிருந்து
அகற்றும் முயற்சிகள் சில நடந்தன. அவை
தோல்வியில் முடிந்தன. கைலாஸ் காலமான பின்னரும் அம் முயற்சிகள் சில வேறு
ரூபங்களில் தொடருகின்றன. வன்மத்துடனும்
வக்கிரத்துடனும் பொதுப் புத்தி மட்டத்துக்கு மேலுள்ளவர்கள் போல் பாவனை செய்யும்
ஒரு சிலரால் கைலாஸைப் போற்றுவது போல்
தூற்றும் முயற்சிக்கு தூபமிடுவதைக் காணக்கூடியதாய் உள்ளது.
இவ்வாறு ஏன் இவர்கள் அவதிப்படுகின்றனர் என்பதை நோக்குவதும் இத்தகைய ஒரு சிலரின்
உதிரித்தன எடுத்துரைப்புகளுக்குமப்பால்
எவ்வாறு கைலாஸ் அடுத்த தலைமுறையினரின் அவதானிப்புக்கு ஆளாகியுள்ளார் என்பதையும்
சிந்திப்பதே அவசியம்.
கைலாசபதியின் காலம் கடந்து விடவில்லை. கைலாசபதி கால் நூற்றாண்டு காலம் கடந்தும்
கணிப்புக்குரிய ஒருவராகி - காலத்தைக்
கடந்து - மக்கள் இலக்கியப் பாரம்பரியத்தின் முன்னோடியாய் - சமூக மாற்றத்தை
நேசிக்கும் மானுடரின் வழிகாட்டியாய் - மார்க்சிய
சமூக விஞ்ஞானத்தைத் தமிழ் இலக்கியச் சூழலில் மட்டுமன்றித் தமிழியலிலும் தமிழ்ச்
சமூகத்திலும் பிரயோகித்துப் புதுமையைப் படைக்க விளையும் புரட்சியாளர்களின்
உள்ளங்களில் உள்ளொளி பரப்பி சமூகத்தை டைனோசர் காலத்துக்குப் பின்தள்ள விரும்பும்
தமது கையாலாகாத் தனத்தில் ஈடுபட்டுள்ளமை புரிந்துணரக் கூடியதே.
`பழந்தமிழ்ச் செய்யுள்களையும் - சில வேளைகளில் சிற்சில நாட்டார் பாடல்களையும்
எடுத்துக் கொண்டு அவற்றுக்குச் சோடனை செய்து
கதையளந்து கதாப்பிரசங்க முறையில் விளக்கம் கூறுவதே பெரும்பாலான தமிழறிஞர்களின்
புலமை வெளிப்பாடாகவும் பொழுது
போக்காகவும் இருந்த தமிழ் ரசனைச் சூழலில் இலக்கியக் கொள்கை,வரலாற்று உணர்வு,
சமூகவியில் அறிவு என்பன வாய்க்கப்பெற்ற தமிழ் அறிஞராக:
தமிழ் மொழியைச் சமகால வாழ்வுக்கும் - வரலாற்றுக்கும் - சமூகத்துக்கும் பயன்படும்
பான்மையில் உண்மையை உள்நுழைந்து
ஊடுபோய்த் தேடும் பெருமுயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட பேரறிஞராக;
சமூக மாற்றத்துக்கு தலைமை தாங்கும் சமூகப் புரட்சித் தோழர்களுடன் தன்னை இணைத்துக்
கொண்ட தோழராக;
தமிழ்ச் சமூகத்தில் சாதியம், பெண் ஒடுக்கல், குறுந் தேசியம் எனப் பழமையில்
பற்றும் பக்தியும் கொண்ட பரம்பறையினரின் நிலமானிய
நீசத்தனத்தினை நீறாக்கும் சொல்லேர் உழவராக;
பழமையையும் பிற்போக்கையும் கலியுகம் எனவும் புதுமையையும் முற்போக்கையும்
கிருதயுகம் எனவும் பாரதியின் ஊடக நவயுக
இலட்சணங்களை விளக்கிய சமூக விஞ்ஞானியாக;
தேவார திருவாசகச் செய்யுள்களைப் பாடியோரை சமய குரவராகவும் தமிழ் மொழியை நவீன
உலகுக்கு ஏற்றவாறு வசன நடையை
வளப்படுத்திய ஆறுமுக நாவலரை ஐந்தாம் சமய குரவாகவும் கைதொழுதேற்றிப் புனிதங்
கற்பித்துப் பூட்டுகள் போட்டுச் சிறைப்படுத்தி நிற்கும் சீரழிந்த சமூகத்தின்
சிறைகளிலிருந்து சமய குரவர்களான நாயன்மார்களையும் ஆறுமுக நாவலரையும் மீட்டுச்
சமகால சமூக
வாழ்வுக்குப் பயனுள்ள வர்க்கப் போராட்ட கண்ணோட்டத்தைப் பிரயோகிக்கும் திறனை
வழங்கிய பூரண பொருள் முதல்வாதியாக
அச்சமற்று மார்க்ஸிய இயக்கியலை தமிழ் மக்கள் மத்திக்கு தெளிவுபடுத்திய
மாக்ஸீயராக;
மொத்தமாகக் கூறுவதானால் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டுத் தளத்தின் தள கர்த்தராக -
பண்பாட்டுத் தலைமையின் முதன்மைத்
தோழராக - பண்பாட்டுப் படையணியின் தளபதியாக வழிநடத்திய கைலாசபதியா தனி மனிதர்?
`இது பொறுப்பதில்லை தம்பி, ஏரிதழல் கொண்டு வா' கைலாசபதியைக் கொச்சைப்படுத்தும்
பொய்மைகளைக் கொழுத்துவோம் எனச்
சூளுரைக்கும் இளைஞர் சந்ததி உருவாகிக் கொண்டிருக்கிறது. `பொய்யாயின் வெல்லாம்
போயகல வந்தருளி, மெய்ஞானந்தன்னை
மிளிர்விக்கும் மெய்ச்சுடர்' களாகி வரும் புதிய பரம்பரையினர்க்காக வரலாறு
வரவேற்கக் காத்திருக்கிறது.
நன்றி: தினக்குரல்.காம் |