நிறைவேறிய அமெரிக்கக் கனவு: செனட்டர் பராக்
ஹுசைன் ஒபாமா!
கென்யா
நாட்டைச் சேர்ந்த கறுப்பினத்துத் தந்தைக்கும், கன்சாஸ், அமெரிக்காவைச் சேர்ந்த
வெள்ளையினத்துத் தாயாருக்கும்
பிறந்தவரான 'பராக் ஹுசைன் ஒபாமா' ஜனநாயகக் கட்சியின் சார்பில் அமெரிக்க
அதிபருக்கான தேர்தலில் போட்டியிட்டு, குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட
'வியட்நாம் வீரபுருஷரா'ன ஜோன் மக்வெயினைத் தோற்கடித்து அமெரிக்காவின் நாற்பத்து
நான்காவது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தற்போது பதவியிலிருக்கும்
'ஜோர்ஜ். புஷ் ஜூனிய'ரால் ஆரம்பிக்கப்பட்ட இரு போர்கள், அமெரிக்க, உலகப்
பொருளாதாரச் சரிவு, தவறான சுற்றுச் சூழற் கொள்கைகளினால அழிவை
எதிர்நோக்கியிருக்கும் நமது பூமியின் நிலை, இவ்விதமானதொரு சூழலில் அமெரிக்க
அதிபராக பல்லினக் கலாச்சாரத்தின் குழந்தையான பராக் ஒபாமா தனது நாற்பதேழாவது
வயதில் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்ய்ப்பட்டிருப்பது பலவகைகளிலும் வரலாற்று
முக்கியத்துவம் வாயந்ததொரு நிகழ்வாக விளங்குகின்றது. அமெரிக்காவின் கடந்த கால
வரலாற்றில் ஒரு காலத்தில் அடிமைகளாக, இனரீதியில் ஒதுக்கப்பட்டவர்களாகப் பல்வேறு
துயர்களையெல்லாம் அனுபவித்த ஆபிரிக்க- அமெரிக்கர்களின் வரலாற்றில் மட்டுமல்ல
அமெரிக்காவின் பல்வேறு சிறுபான்மையின மக்களின் வரலாற்றில் மட்டுமல்ல,
பெரும்பான்மையினரான வெள்ளையினத்து மக்களின் வரலாற்றிலும் மிகவும் முக்கியமானதொரு
அரசியல் நிகழ்விது. ஜோன். எப். கென்னடி அமெரிக்க அதிபராகத் தெரிவு செய்யப்பட்ட
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் உலகரீதியாக ஆர்வத்துடன்
எதிர்பார்க்கப்பட்ட தேர்தலிது. பலவருடங்களுக்குப் பின்னர் அமெரிக்க் சட்டசபை
(Congress) மற்றும் மேலவைகளிலும் (Senate) ஜனநாயகக் கட்சியினரே பெரும்பான்மை
பெற்றுள்ளனர். இது ஜனாதிபதி பராக் ஒபாமாவின் திட்டங்களை அமுல்படுத்துவதை
இலகுவாக்கும்.
செனட்டர் பராக் ஒபாமா அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் ஜனநாயகக் கட்சியின்
சார்பில் ஹிலாரி கிளிண்டனை எதிர்த்துத் தெரிவு செய்யப்பட்டபொழுது அது பற்றி
பதிவுகளின் 102வது இதழில் (ஜூன் 2008) 'செனட்டர் பராக் ஒபாமாவின் வெற்றியும்,
அமெரிக்காவும், சர்வதேசமும்!' என்னும் தலைப்பில் குறிப்பிட்டுள்ளதை
மீண்டுமொருமுறை இத்தருணத்தில் நினைவு கூர்வது பொருத்தமானதே. ஏனெனில் இன்றைய அவரது
வெற்றிக்கும் அவையே காரணங்களாக விளங்குவதால்.
1. இதுவரையிலான அமெரிக்க அரசியல் வரலாற்றில்
முதல் முறையாக வெள்ளையரல்லாத ஒருவர் அமெரிக்க அதிபருக்கான ஜனநாயகக் கட்சியின்
வேட்பாளராகத் தெரிவு பெற்றுள்ளார். கென்ய நாட்டைச் சேர்ந்த தந்தைக்கும்,
அமெரிக்க வெள்ளையினப் பெண்மணியான தாய்க்கும் பிறந்த செனட்டர் பராக் ஒபாமாவே
இவ்விதம் வெற்றி பெற்ற வேட்பாளராவார். அமெரிக்காவின் இரு பிரதான இனங்களின்
பிரதிநிதியான செனட்டர் பராக் ஒபாமாவின் வெற்றியானது சர்வதேச அரங்கில்
அமெரிக்காவுக்கு சிறப்பளிப்பதாகும். முன்னாள் ஜனாதிபதியான மிகவும் செல்வாக்குப்
படைத்த பிள் கிண்டனின் மனைவியான செனட்டர் ஹிலாரி கிளிண்டனும் மிகுந்த
செல்வாக்குப் படைத்தவர். அவரை எதிர்த்துப் போட்டியிட்டு வெல்வதென்பது அவ்வளவு
இலேசானதல்ல. போட்டியின்போது நிறம், மதம் எனப் பல்வேறு வடிவங்களில்
வாரியிறைக்கப்பட்ட அரசியல் சேற்றினையெல்லாம் துணிச்சலுடன் எதிர்கொண்டு மேற்படி
வெற்றியினை எதிர்கொண்டுள்ளதே பராக் ஒபாமாவின் சிறப்பாகும். மேற்படி
தேர்தல்களில் பல்வேறு மாநிலங்களிலும் கறுப்பின மற்றும் படித்த, பணக்கார
வெள்ளையினத்தவர்களெல்லாரும் அதிக அளவில் பராக் ஒபாமாவுக்கு வாக்களிந்திருந்த
அதே வேளை, அமெரிக்காவின் மிகப்பெரிய மாநிலங்களிலெல்லாம் செனட்டர் கிளாரி
கிளிண்டனே பெரும்பாலான வெள்ளையினத் தொழிலாளர்கள், வயது முதிர்ந்த
வெள்ளையினத்தவர்கள், ஸ்பானிஷியர்கள் போன்றவர்களின் ஆதரவினையும் பெற்றுள்ளதும்
நோக்கத்தக்கது. மேலும் மேற்படி தேர்தலானது இணையத்தின் செல்வாக்கினையும்
எடுத்துக் காட்டுகிறது. 'You Tube', Face Book' போன்ற நவீன இணையத்தின்
வளர்ச்சியானது இளம் அமெரிக்கர்களை அதிக அளவில் அரசியல் பக்கம் திருப்பியுள்ளது.
இதுவரை காலமும் அரசியலில் சிரத்தை அவ்வளவின்றியிருந்த அமெரிக்க
இளஞ்சமுதாயத்தினர் பெருமளவில் பராக் ஒபாமாவுக்கு ஆதரவளித்துள்ளனர். இதுவும்
குறிப்பிடத்தக்கதொரு அம்சம். [செனட்டர் பராக் ஒபாமாவின் வெற்றிக்கு மேற்படி
நவீன இணையத் தொழில் நுட்பங்கள் பெரிதும்
உதவின. அமெரிக்கர்கள் தனிப்பட்டரீதியில் பத்து, இருபது டாலர்களென பராக்
ஒபாமாவின் தேர்தல் செலவுகளுக்காக அனுப்பிய நிதியே அறுநூறு மில்லியன் அமெரிக்க
டாலர்களுக்கும் அதிகமானதென்பது குறிப்பிடத்தக்கது.- பதிவுகள்]
2. ஆயினும் மேற்படி வெற்றியானது தனித்து நின்று எத்தகைய இடர்களையும், அரசியல்
சூறாவளிகளையும் துணிச்சலுடன் எதிர்த்து நின்று வெல்லும் பராக் ஒபாமாவின்
ஆளுமையினை வெளிப்படுத்தியுள்ளது. கிளாரி கிளிண்டனுடன் இணைந்தோ , தனித்தோ
போட்டியிட்டாலும் குடியரசுக் கட்சி வேட்பாளரான ஜோன் மக்வெயினுக்கெதிராக
எவ்விதம் கிளாரி கிளிண்டனுக்கெதிராகத் தனது போட்டியினை முன்னெடுத்தாரோ அவ்விதமே
பராக் ஒபாமா முன்னெடுப்பாரென எதிர்பார்க்கலாம். வழக்கமாகக் குடியரசுக்
கட்சியினர் நாட்டுப்பற்று, இனம் போன்றவற்றை ஆயுதங்களாகப் பாவித்து தேர்தலில்
வெல்வது வழக்கம். அத்துடன் எதிரிகளுடனான அபாயங்களைப் பூதாகாரப்படுத்தி,
இயலுமானால் அவற்றைக் காரணமாக வைத்து யுத்தங்களை ஆரம்பித்து, அதன் பின்னர்
அத்தகைய யுத்தங்களை நாட்டின் தேசியப்பாதுகாப்புடன் இணைத்துப் பிரசாரங்களை
மேற்கொள்வர். அதன் மூலம் மக்களைப் பயந்ததொரு நிலைக்கு ஆட்படுத்தி மக்களின்
நினைவுகளை மழுங்கடித்து , தம்பக்கம் ஈர்த்து வெற்றிக்கொடியினைப் பறிக்க
முயல்வர். இன்றைய அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ்ஷினால் ஆரம்பிக்கப் பட்ட ஈராக்
யுத்தம் இதற்கு நல்லதொரு உதாரணம். ஆனால் அவற்றை இம்முறை பாவிக்க முடியாது.
அவ்விதம் பாவிக்க முனைந்தால் செனட்டர் கிளாரி கிளிண்டனுக்கேற்பட்ட நிலையே ஜோன்
மக்வெயினுக்கும் ஏற்படும். ஏனெனில் படித்த , பணக்கார அமெரிக்கர்களின் மற்றும்
அண்மைக்காலமாக அரசியலில் ஆர்வம் காட்டிவரும் இளைய சமுதாயத்தினர் மத்தியில்
ஆதரவை அவர் இழக்க நேரிடும் அபாயம் அவ்விதமான அணுகு முறையிலுள்ளது. [நாம்
குறிப்பிட்டுள்ளபடியே நடந்தது. குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட
'அலாஸ்கா' மானிலத்து ஆளுநரான' சாரா பாலின் போன்றோர் செனட்டர் பராக் ஒபாமாவின்
மேல் இவ்விதமான அரசியற் சேற்றை வாரியிறைக்கத்தான் செய்தனர். அவரைப்
பயங்கரவாதியென்றனர். அவரது ஹுசைன் என்ற பெயரின் நடுப்பகுதியினை வைத்து
அமெரிக்கர்கள் மத்தியில் அவரையொரு இஸ்லாமியராகக் காட்டி சந்தேகத்தை விதைக்க
முயன்றனர். ஆயினும் நாம் குறிபிட்டவாறே அமெரிக்க வாக்காளர்கள் மத்தியில்,
அவையெல்லாமே குடியரசுக கட்சியினரின் ஆட்சியின் விளைவுகளால் வெறுப்புற்றிருந்த
அமெரிக்கர்கள் மத்தியில் எடுபடவில்லை. உண்மையில் கடந்த 2000ம் ஆண்டில் நடைபெற்ற
அமெரிக்க அதிபருக்கான தேர்தல் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட அல்
ஹோரிடமிருந்து முறையற்றரீதியில் பறிக்கப்பட்டதாகவே பெரும்பாலான அமெரிக்கர்கள்
கருதுகின்றனர். - பதிவுகள்]
3. இதுவரையில் அரசியலில் இந்தியாதான் இவ்விதமான ஆச்சரியங்களை நிகழ்த்திக்
காட்டியுள்ளது. சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த நரசிம்மராவ், தேவகெளவுடா ,
மன்மோகன்சிங் எனப் பலரை நாட்டின் சக்தி வாய்ந்த பிரதமர்களாக்கிச் சாதனை புரிந்த
இந்தியா இத்தாலியரான சோனியா காந்தியை நாட்டின் பிரதான கட்சியான காங்கிரஸ்
கட்சியின் தலைவியாகவும், இன்றைய இந்தியாவின் மிகவும் வலிமையுள்ள அரசியல்
தலைவியாகவுமாக்கியுள்ளது.
அமெரிக்க
அதிபர பராக் ஒபாமாவின் காலகட்டத்தில் சர்வதேச அரசியல் உறவுகளில், உள்நாட்டு
அரசியல் நடவடிக்கைகளில் மற்றும்
சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆகிய விடயங்களில் அவர் எவ்விதம் ஆக்கபூர்வமான
நடவடிக்கைகளை எடுக்கப்போகிறார் என்பதை உலகம் ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கிறது.
மேற்குலக அரசியல் வரலாற்றில் உண்மையிலேயே பராக ஹுசைன் ஒபாமா அமெரிக்க
ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டதானது அமெரிக்கா உலக அரங்கில் அண்மைக்காலமாக
இழந்திருந்த பெருமையினை, மதிப்பினை மீட்டுத்தந்துள்ளதென்பது மட்டும் உண்மை.
அமெரிக்காவின் அனைத்துப் பிரிவினரும், சிறுபான்மை / பெரும்பான்மை, மற்றும் மத, இன
பேதங்களுக்க்ப்பால் நின்று பராக் ஹுசைன் ஒபாமாவைத் தமது 44வது ஜ்னாதிபதியாகத்
தேர்வு செய்திருக்கின்றார்கள். அது உண்மையிலேயே கவனத்துக்குரியது மட்டுமல்ல,
பாராட்டுதற்குரியது மட்டுமல்ல வரலாற்று முக்கியத்துமும் வாய்ந்ததென்பதில்
சந்தேகத்துக்கிடமில்லை. கியூபாவின் முன்னாள் அதிபரான பிடல் காஸ்ட்ரோவினாலேயே நம்பமுடியாத அரசியல் நிகழ்விது.
- நந்திவர்மன் - |