"காதலில் விழுந்தேன்" திரைப்பட
பாடலாசிரியர் கவிஞர் நெப்போலியன் சிங்கப்பூரிலிருந்து
கோடம்பாக்கத்திற்கு.....=
- மதுரவன் -
[பதிவுகள் வாசகர்களுக்குக் கவிஞர் நெப்போலியன் நன்கு அறிமுகமானவர். பதிவுகளில்
இவரது பல கவிதைகள் வெளிவந்திருக்கின்றன. அவரே இப்பொழுது புகழ்பெற்ற திரைப்படப்
பாடலாசிரியர்களிலொருவருமாகப் பரிணாமம் அடைந்திருப்பதையிட்டு மகிழ்வடைகின்றோம்.
மேலும் இத்துறையில் பிரகாசிக்க வாழ்த்துகிறோம். - பதிவுகள்]
" உன் தலைமுடி உதிர்வதைக்கூட தாங்கமுடியாது அன்பே...
கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்...
உன் ஒரு நொடி பிரிவினைக்கூட ஏற்கமுடியாது கண்ணே...
என் கனவிலும் உன் முகம் தேடுவேன்... "
உலகம் முழுவதும் காதலாய் கசிந்துருகிக் கொண்டிருக்கும் பாடல்... எண்ணற்ற
இளையர் இளைஞகளின்... காதலர்களின் தேசிய கீதமாய் ஒலித்துக்கொண்டிருக்கும்
பாடல்...
திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் நெப்போலியன்.......
தமிழகம் புதுக்கோட்டை மாவட்டம் பிறந்த ஊர். படிததது, சிவில்எஞ்ஜினியரிங்
கானாடுகாத்தான் செட்டிநாடு அண்ணாமலை பாலிடெக்னில். பணியினிமித்தம் சிவில்
எஞ்ஜினியராக சிங்கப்பூர் நிரந்தர வாசம் . தமிழ் ஆர்வமும் விருப்பமும்
எம்.ஏ தமிழ் சிங்கப்பூர் அண்ணாமலைப்
பல்கலைக்கழகத்தில் பகுதி நேரமாக படிக்க வைத்தது.
சிங்கப்பூர் தேசிய விருது கவிதைக்காகவும், சிறுகதைக்காகவும் இருமுறை.
திண்ணை, திசைகள், தமிழோவியம், வார்ப்பு, மரத்தடி, பதிவுகள், தட்ஸ் தமிழ்
இப்படியாய் என்ணற்ற இணைய தமிழ் பத்திரிக்கைகளில் தனது
கவிதைகளை படைத்தது.
"நானும் என் கருப்புக்குதிரையும்" முதல் கவிதைத் தொகுப்பு.
கவிதை நூலைப் படித்து ரசித்து , அதன் காதல் வரிகளில் லயித்து அழைத்தார்
இசையமைப்பாளர் விஜய்ஆன்டணி. வெஸ்டர்ன் மெலொடிஸ் ஆக
கலக்கிக் கொண்டு மாடர்ன் உள்ளம் ஆக இருப்பார் என்ற என் எண்ணத்தை , அவரின்
முதல் கேள்வி மாற்றியது... "அற்புதமா இருக்கு உங்க>
புதுக்கவிதைத் தொகுப்பு, உங்களுக்கு தமிழ் இலக்கண மாத்திரை அளவு, நேர் நேர்
தேமா புளிமான்னு மீட்டருக்கு பாட்டு எழுத வருமான்னு "
கேட்டார். முயற்சி செய்கின்றேன் என சொன்னவுடன் உடனே அவரின் அலுவலகத்திலேயே
அவர் இசையமைத்த நெஞ்சாங்கூட்டில் நீயே பாடலை
என் வரிகளை வைத்து அதன் மெட்டு மாறாமல் எழுதி காண்பிக்க சொல்லி விட்டு அவர்
அறைக்குள் சென்று விட்டார். நான் அரைமணி நேரத்தில்
எழுதி முடித்து அவரிடம் காண்பித்தபோது, மிகவும் மகிழ்சியாகி காதலில்
விழுந்தேன் படத்தில் நீங்க கண்டிப்பாக ஒரு பாடல் எழுதுகிறீர்கள் என்றார்...
இப்படியாய் ஒரு தேர்வு எழுதி கிடைத்த வாய்ப்புதான் " உன் தலைமுடி
உதிர்வதைக்கூட " பாடல். பாடலுக்கான இசையை அவரது கீபோர்டில்
வாசித்துக் காண்ப்பித்தபோது என் கண்கள் கலங்கின..." ஒரு வெற்றிப்பாடலுக்கான
இசையை என் வரிகளுக்காக கொடுத்திருக்கீங்க இந்த வாய்ப்பும்
அதிர்ஷ்டமும் எல்லோருக்கும் கிடைக்காது ரொம்ப நன்றி " என அவர் கைகளைப்
பிடித்துக்கொண்டு சொன்னேன்.
பிறகு இயக்குனர் பி.வி.பிரசாத் படத்தின் பாடல் இடம்பெறும் சூழலை விளக்கி
என்னிடம் ,என்னை ஒரு மூன்று மாதங்களுக்கு பிழி பிழியென பிழிந்து
வார்த்தெடுத்த வரிகள்தான் இந்தப் பாடல். ஓவ்வொரு முறையும் இயக்குனர் மேலும்
மேலும் வரிகளைக் கேட்கும்பொழுது ... நான் சலிக்காமல் எழுதிக்
கொடுத்ததைப் பார்த்துவிட்டு " என்ன நெப்பொலியன் மனசுக்குள்ள என்னை
திட்டுறீங்களா... பெரிய ஹாலிவிட் ரேஞ்சுக்கு படம் எடுக்குற மாதிரி
இந்தப் பாடு படுத்துறாங்களேன்னு" என்பார் சிரித்துக்கொண்டே, கிட்டத்தட்ட
800க்கும் மேற்பட்ட வரிகள் எழுதியிருந்தேன். விரைவில் வாய்ப்பும்
சமயமும் அமையும்பொழுது அதை ஏதேனும் ஒரு பத்திரிக்கையில் தொடராகவும்
தொகுப்பாகவும் வெளியிட எண்ணியுள்ளேன். இவ்வளவு
உழைப்பிற்கும் கிடைத்த வெற்றி இன்று அந்தப் பாடல் மிகப்பெரும் வெற்றியை
அடைந்த்திருப்பதுதான்.
குறிப்பாக இந்த பாடல் வெற்றிக்கு காரணம் இதன் அருமையான மெட்டு, அற்புதமாக
காட்சிமைப் படுத்தியிருந்த இயக்குனர் பிரசாத்தும் நடன
இயக்குனர் சிரீதரும், பாடலைப்பாடிய கார்த்திக்,மாயா, நிதேஷ் கோபாலன்
அவர்களுமே... பிறகுதான் எனது வரிகள். அனைத்திற்கும் மேல் சன்
பிக்சர்ஸ் இந்த படத்தை வாங்கியதும் இந்த படத்திற்கு கிடைத்த நியாயமான
விளம்பரமுமே. குறிப்பாக பாடல் காட்சிகளை மிகவும் அற்புதமாக
ப்ரோமோட் செய்திருந்தது என்னைப் போன்ற வளரும் அறிமுக பாடலாசிரியருக்கு
வாய்த்த அதிர்ஷ்டம் .
இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் 6 வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூருக்கு
தேசியபல்கலைக் கழகத்திற்கு ஒரு கருத்தரங்கத்திற்காக வந்ததிலிருந்து
நல்ல
நண்பராக இன்றுவரை நட்பு.எனது முதல் கவிதைத் தொகுப்பை அம்புலிமாமாவை
படிக்கும் ஒரு குழந்தையின் ஆர்வத்துடன் படித்து முடித்துவிட்டு
ராஸ்கல் நல்லா எழுதியிருக்கேடா... என்றவர். "உன் தலைமுடி உதிர்வதை" பாடலைக்
கேட்டுவிட்டு தொலைபேசியில் ,ஒரு குத்துப்பாடலை எழுதி
ஹிட் செய்வது இன்றைய சூழலுக்கு எளிதான விஷயம்... ஆனால் ஒரு நல்ல மெலோடியை
முதல் பாடலாக அற்புதமான வரிகளால் எழுதி
வெற்றியடைந்திருப்பது சாதாரண விஷயமல்ல வாழ்த்துக்கள்... என்றார்.
வாய்ப்புகள் இப்பொழுது வர ஆரம்பித்திருக்கின்றன... மிகவும் கவனமாக
இருக்கின்றேன். காரணம் எனது முதல் பாடல் செழுமையான காதல் வரிகளால்
இளைஞர்களிடையே குறிப்பாக கல்லூரி மாணவ மாணவிகளீடத்தில்
சென்றடைந்திருப்பது எனக்கு வரும் மின்னஞ்சல் , தொலைபேசி விமர்சனங்களில்
எதிரொலிக்கின்றது... என்னிடமிருந்து இனி வரும் பாடல் வரிகளை
கவனிக்க ஆரம்பிப்பார்கள் என்று.
இன்றைய நவீன கணிணி யுகம் எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கின்றது.
இசைவடிவம் மின்னஞ்சலில் வர... வேண்டிய பாடல் வரிகளை
மின்னஞ்சலில் அனுப்பிவிடுகின்றேன். நெக்ஸ்ட் ஜெனெரேஷன் இசை இந்த வழியிலேயே
இருக்கும். குறிப்பாக எந்த மொழியும் காணாத வளர்ச்சியை
இணையத்தில் நம் தமிழ் பெற்றுள்ளது அதை உலகமெங்குமுள்ள நம் தமிழர்கள்
செய்துகொண்டிருக்கிறார்கள்... கண்டிப்பாக அதை நான் அந்த தொழில்
நுட்பத்தை பயன்படுத்திக்கொண்டு என்னுடைய திரைப்பட பாடல்களை எழுதுவேன்.
இயக்குனர் ஷங்கர் அவர்களின் சீடரான எஸ் பி ஹோசிமின் அவர்களின் அடுத்த
திரைப்படமும், புதிய இயக்குனர்களின் மூன்று திரைப்படமும்,புதிய
இசையமைப்பாளர் மது அவர்களின் திரைப்படமும் இரண்டு அமெரிக்கா வாழ்
தமிழர்களின் இசை ஆல்பமும், இப்படியாய் வாய்ப்புகள்
வந்துகொண்டிருக்கின்றது. எழுதிக்கொண்டிருக்கின்றேன்.
படித்தால் மட்டும் போதுமா திரைப்படத்தில் " தண்ணிலவு தேனிறைக்க தாழைமரம்
நீர் தெளிக்க " பாடலை எழுதிய மாயவனாதன் அவர்களும்,
"அமுதும் தேனும் எதற்கு " என்ற சுரதா அவர்களும், "நட்சத்திர ஜன்னலில்
வானம் எட்டிப் பார்க்குதே" என்ற மு.மேத்தா அவர்களும் என் மனம்
கவர்ந்த பாடலாசிரியர்கள். எண்ணிக்கைகளால் இவர்களது திரைப்பட பாடல்கள்
குறைந்திருப்பினும் என்றும் அழியா யுகம் கொண்டவை இவர்களது
படைப்புகள்.
எனது எல்லா முயற்சிகளின் வெற்றிக்குப் பின்னால் எனது அம்மாவும் , எனது
மனைவியும் முழு உற்சாகம் அளித்துக்கொண்டிருப்பவர்கள். திரை
உலகில் கவிஞனான என்னை ஒரு திரைப்பட பாடலாசிரியராய் அறிமுகம் செய்து வைத்த
இசையமைப்பாளர் விஜய் ஆன்டணிக்கும், இயக்குனர் பி.வி.
பிரசாத்துக்கும் என்றென்றும் என் நன்றிகள் காணிக்கையாகும்.
mathuravan@gmail.com |