- வைகைச் செல்வி-

              பூமியின் முனையில்
              பிணைக்கப்பட்டவனாய்
              நீண்ட நெடுங் கரையில்
              கிடக்கிறேன்
              
              துயிலட்டும் அவள்
              ஆழ்கடலில்.
              கடலின் அலைகள்
              அவளுக்குத் தாலாட்டு.
              விழித்திருக்கையில்
              கரையின் இரைச்சலில்
              நடமாட வருவாளோ?
              நடுநடுங்கிப் போவாளோ?
              
              உடலுக்குள் உருளும்
              என் ஆன்மாவின் நேசம்
              வெடித்துப் பரவி
              கரையெலாம் சிதறும்
              
              தொடுவானம்
              சிவப்பைப் பூசுகையில்
              பாய் மர விரிப்பில்
              அசைந்தாடும் மூச்சு
              என்றாவது ஓர் நாள்
              கடலுக்குள் செல்லும்.
              
              கடற்கரைக் குரல்கள் தேய
              என்
              உறவுக் கண்ணிகள்
              தெறித்து விழுகையில்
              கடற்கன்னி வருவாளோ
              கன்னத்தில் முத்தமிட?
josephine_india@hotmail.com



 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991




