| 
பதிவுகள் கவிதைகள்! 
    
 நகைப்பாக்கள்- சென்ரியூ
 
 -மாமதயானை (புதுவை )
 
 
  வீம்பு 
பிடித்தது குழந்தை விதவைத்தாயிடம்...............
 தம்பிபாப்பாவிற்காக.
 
 நோயாளிக்கு
 ஆயுள் கெட்டி.........................
 மருத்துவர் மரணம்.
 
 கனவில் தினமும்
 தோள் சாய்கிறாள்...............
 விவாகரத்தான மனைவி.
 
 வழிப்போக்கனின்
 பசி போக்குமா......................
 உணவு பற்றியபாடல்.
 
 தேவாலய மணியோசை
 கேட்கும் பொழுதெல்லாம்....
 சாத்தானின் நினைவுகள்.
 
 தவழ்கிறது குழந்தை
 சிரிக்கிறது குழந்தை...........
 இறந்தபிறகும் மனதில்.
 
 manisen37@yahoo.com
 
 விதம் 
விதமாய் ......
 
 - சக்தி சக்திதாசன் -
 
 
  விதம் 
விதமாய் ...... பூச்செடிகள்
 மனிதனிவன் தோட்டத்தில் !
 
 பலவிதமாய் மனிதர்கள்
 இறைவனவன் பூமிதனில் !
 
 எதை எதையோ ...
 எண்ணிக்கொண்டே இவர்கள்
 ஏக்கத்திலே வாழ்க்கைதனை
 எப்படியோ வாழ்ந்து விடும்
 எது இங்கே நிஜம் சொல்லு .......
 
 வகை வகையாய்
 வண்ணமலர் கொத்துக்களாய்
 வாசமிகு மலர்கள் உண்டு
 வண்ணமிகு பூங்காவில்.....
 
 எந்தமலர் மங்கையின் கூந்தலுக்கு
 எந்தமலர் இறைவனின் பூஜைக்கு
 எந்தமலர் கைகளினால் கசங்கும்
 எவரறிவார் சொல்வாயோ ?
 
 மனமென்னும் தோணியிலே
 ஆசையென்னும் ஆழிதனில்
 அனைவரும் பயணம் போவோம்
 மறுகரையை அடைந்தோர் யார் ?
 ஆசையை வென்றோர் யார் ?
 ஆறறிவு படைத்த மனிதா .....
 அறிவாயா நீ உலகில் ?
 
 பூப்புக்கும் வேளைதனை
 பூவன்றி யாரறிவார் ?
 மனம் வெளுக்கும் வேளைதனை
 உனையன்றி யாரறிவார் ?
 
 நினைவுகளில் தேரோட்டி
 கனைவுகளைக் கடந்து நானும்
 புனைகின்ற கவிதை கோடி
 புரிந்திட்ட உள்ளம் ஏது ?
 
 வார்த்தைகளைக் கோர்த்திங்கு
 கட்டிவைத்த கவிதைமாலை
 இயம்புகின்ற செய்தியன்றே ....
 
 நண்பா !
 நமதென்று எதுவுமில்லை
 நமக்கென்று தரவுமில்லை
 கிடைக்கின்ற அனைத்தும்
 காலம் தந்த பரிசு நம்பு
 
 வாழுகின்ற காலம் மட்டும்
 வந்ததை வரவில் வைத்து
 சென்றதை செலவாய்க் கொண்டு
 மனிதனாக வாழ்ந்து மறைந்தால்
 மாபெரும் வெற்றி உனக்கு
 
 ssakthi@btinternet.com
 http://www.thamilpoonga.com
 
 இல்லாமையின் இருப்பு
 
 மெலிஞ்சிமுத்தன்- நடராஜா முரளிதரன்
 
 
  என் 
சூழ்விளக்கின் மீது இருளைக் கொழுத்தி வைத்துவிட்டு
 வெளிச்சம் பற்றிய எனது வியாக்கியானத்தை
 நீ என்னென்று மறுக்கின்றாய்?
 
 விளக்கின் தேவை குறித்தே
 உனக்குள் எத்தனை சஞ்சலங்கள்
 எனவே அதன் இருப்பையே மறுதலிப்பதால்தான்
 உலகின் இருப்பையே
 அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்
 என்றே நான் எண்ணுகின்றேன்
 
 என் இருத்தலுக்கும் இல்லாமைக்கும்
 இடையில்
 விரிந்து கிடக்கும் ஒரு பெருவெளியை
 எதைக்கொண்டு நிரப்புவேன்
 என் எழுத்தைத் தவிர
 என் எழுத்து எழுந்து
 உன்வாசல் வரை வரவில்லையா?
 
 யுகம் யுகமாய்
 வருவதும் போவதுமாய்
 எழுந்தவைகளை
 எண்ணிப் பார்த்துக்கொள்
 நிலைத்தவைகளைவிட நிலையாமைகளே
 வரலாற்றுப் பெருவெளியை
 நிறைத்துக் கொண்டிருப்பதை
 உணராயோ நீ ?
 
 இல்லாமையின் பெருவெளியில்
 தற்செயலாய் விழுந்த
 சிறு துளிதான் நான்
 என் இருத்தலுக்கான
 பிரயத்தனங்கள் எல்லாம்
 குமிழிகுமிழியாய் உடைந்து
 இல்லாமையை நிரப்புகையில்
 நான் என்ன செய்யலாம்
 என நினைக்கின்றாய்
 
 குமிழிகளின்
 தற்காலிக இருத்தலின்பின்
 வெடிப்புக்களும் உடைப்புக்களும்
 நிகழ்ந்து கொண்டுதான்
 இருக்கின்றன
 எனவே
 இல்லாமை என்ற பெருவெளியில்
 வந்து குவிந்த நீயும்
 இன்னோர் இல்லாiமாதான்
 
 nmuralitharan@hotmail.com
 
ஆருக்கையா அக்கறை 
- த.சிவபாலு -
 
  சிந்துவெளி 
சீர்பெருக்கி கங்கைநதி நீராடி வந்தவழி பேரோச்சி வளங்கொண்ட வனிதை
 முந்துதமிழ் பாவையெனும் மொழியாள்
 செந்தமிழாள் தேன்மொழியாள் பாதம்பணிந்தேன்.
 
 அகத்தியனின் அடிதொட்டு தொல்காய்பியன் தோழ்தொட்டு
 அதங்கோட்டான் அழகோடு விளையாடி அருமருந்தாய்
 பதமாகக் குறளினிலே திருப்பெற்று பாரில்மேவி
 இதமாக இருப்பவள்மேல் ஆருக்கையா அக்கறை?
 
 மூவேந்தர் குடைபிடிக்க முன்னாகத் தானிருந்து
 வீராப்பு நடைகொண்ட தமிழ்நங்கை தரணியிலே
 ஆராஅமு தெனப்பருக ஆக்கிவைத்த தமிழ்த்தேனை
 சீராகப் பருகியின்பம் பெறவிங்கு யாருக்கையா அக்கறை?
 
 சங்கம் வளர்த்த தமிழ் சங்கநாதம் கொண்டதமிழ்
 வங்கம் கடந்த தமிழ் வடகரையும் வந்ததமிழ்
 பங்கம் இலாப் பழந்தமிழின் பண்பாடு பயின்றுவர
 இங்கும் இருப்போரில் யாருக்கையா அக்கறை?
 
 பொருள்தேடி புதுவீடுவாங்கி ஏட்டிக்குப் போட்டியாய்
 மருளோடு மாய்ந்துழன்று வேலைசெய்து மயக்குற்று
 இருளோடு இருப்போர்க்கு இறைமீது நினைவோட்ட
 அருளோடு அலைமோத யாருக்கையா அக்கறை?
 
 ஆசைப்பெருக் கோடுஅண்ணன் அகத்தினிலும் அடிபெரிதாய்
 ஆசைமனையாள் மனமொத்து அதில்பெரிய வீடுவாங்கி
 மேசைவிரிப்போடு விலாசம்பெரிதாக்க நினைப்போர்க்கு
 ஆசைஅறுத்து இன்பம் துய்ப்பதற்கு யாருக்கையா அக்கறை?
 
 பெண்மைக்கு அணிகலானாம் ஐம்பெருங் காப்பியங்கள்
 உண்மைக்கு உயர்வாக இம்மைக்கும் பொருளுரைக்கும்
 திண்மைக்கும் திணவெடுக்கும் அகம்புறம் நூறுகளும்
 அண்மித்துப் பருகிவிட யாருக்கையா அக்கறை?
 
 மூவர்முத லிகளை முற்றோதல் செய்வதற்கும்
 சீவன் முத்திபெறும் சீர்பெறு திருமூலர் மந்திரமும்
 திருப்பொலி திருவாசகத் தேன்சுவையும் பருகி
 கருப்பொருளை உணர்ந்துவிட யாருக்கையா அக்கறை?
 
 தமிழ்ச் சுவைத்தேனமுதம் தந்துநின்ற கம்பனையும்
 இழமைத் தமிழ்தந்த இளங்கோவடி களையும்
 அமிழ்தம் பொழிகின்ற ஐங்குறு நூற்றோடு
 பழந்தமிழ்ப்பதிற் றுப்பத்திலும் யாருக்கையா அக்கறை?
 
 மண்ணுக்கும் பெண்ணுக்கும் மனமழிந்து கன்னியரின்
 கண்வீச்சுக் கிடைக்கக் காத்திருக்கும் காலத்தில்
 மண்மீட்புக்கும் மனைமாட்சிக்கும் உறவுகளின் ஓலங்களுக்கும்;
 எண்ணிக் கருத்தூன்ற யாருக்கையா அக்கறை?
 
 அன்பு அறம்கூறும் அருந்தமிழ் மணிமேகலையும்
 துன்பச் சுமைகூறும் குண்டல கேசியையும்
 முற்பிறப்புக் கதைகூறும் சீவகசிந் தாமணியையும்
 கற்பனைச் சுவைமிகு சங்கத்தமிழ்கற்க யாருக்கையா அக்கறை?
 
 எண்ணில் அடங்காத எழு தவியலாத துன்பமெம்
 மண்ணில் மாதாண்டவம் ஆடுதையா எம்மினமோ
 கண்ணில் நீரோடு கால்போன போக்கினிலே
 உண்ண வழியின்றி வாடுவதில் யாருக்கையா அக்கறை?
 
 தனியொருவர்க் குணவில்லை எனில்ஜகத்தினை அழித்திடவே
 தனிமனிதம் பாடிநின்றான் தன்னிகரில்லாப் பாரதியோ
 மனிதவினம் பருகநீரின்றி பசிக்குணவின்றி மாழுவது
 மனிதப்பெருச் சாளிகளில் யாருக்கையா அக்கறை?
 
 கம்பனைத் தமிழ்ச்சுவை தந்தநாவேந் தனையின்று
 நிந்தனை செய்கின்றார் தமிழ்த்தேன் பருகிடாதார்
 சிந்தை சிதைந்து சீறுகிறார் கருணாவாம் கம்பனை
 விந்தைமிக தமிழைக் கற்றிடஅக் கறையின்றி!
 
 பாரதிபுகழ் பாடிடும் பாவலர் நாவினில்
 சாரதியாய்க் கொள்கின்றார் தடையின்றி என்றும்
 நேரடியாய்க் கொண்டவன் வடசொல் உவப்பில்
 யாரின்று வீசிஎறியத் துணிவார் பாரதிபாவை?
 
 இந்துக் கடவுளர் பெயர்களை அழித்திட
 வந்து துணிபவரின்று மறுமதப் பெயர்களை
 ஏந்திப் போற்றியே நிற்பவர் நெஞ்சுரமற்ற
 வஞ்சனைப் பேய்களா பிசாசுகளா சொல்வீர்!
 
 ஆங்கிலம் தமிழில் கலந்திடல் கண்டும்
 தமிங்கிலம் பேசிடும் தமிழர் நன்றே
 ஆரியம் அழித்தது அன்னைத் தமிழென
 காரியம் கெடுப்பதைத் தடுக்கயாருக் கையாஅக்கறை!
 
 பண்பொடு பல்கலை வளர்த்திடக் கூவிமனம்
 புண்பட பாலகர்க்கு சினிமா ஆட்டமே
 வண்ணக் கோலமாய்த் தந்திடும் சீரழிவை
 எண்ணிப் பார்க்கவே யாருக்கையா அக்கறை?
 
 நாடலும் உளமும் தம்வசமிலராய் நெறிபிழைத்து
 கூடலும் குடித்தலும் சுவைத்தலும் தலையாய்த்
 தேடலும் நைற்கிளப்பில் கட்டிப்பிடித்தலிலும்; அக்கறை
 காட்டலை விடுத்து இறையின்பம் கொள்ள
 யாருக்கையா அக்கறை?
 
 “விதியே விதியே தமிழ்ச்சாதியை
 என் செயநினைத்தாய் எனக்குரையாயோ?
 வாழ்ந்திடும் பொருளொடு வகுத்திடுவாயோ?
 சிதைவுற்றழியும் பொருள்களில் சேர்ப்பையோ?
 ஆழியாக் கடலோ? அணிமலர்த்தடமோ? இவரென்ன
 வானுறு மீனோ? மாளிகை விளக்கோ?
 கற்பக தருவோ? காட்டிடை மரமோ?
 எனக் குரையாயோ” எனஏங்கினன்
 மகா கவிபாரதி தமிழ்ச் சாதியை நினைந்து.
 தமிழ் நிலைத்திட வேண்டில்
 தமிழர்க்கு அக்கறை வேண்டுமே அதன்மேல்
 டமிழ் தெரியாது என் பிள்ளைக்கு
 என்பதில் பெருமை சாற்றிடும் போலிகள்
 எம்முள் இருக்கிறார் ஐயா?
 தமிழ் நிலைக்குமா? என்று ஐநா
 கோடிட வைத்த பெருமை
 தமிழ்ச் சாதிக்கன்றி வேறுயாருக் குண்டு?
 தமிழ் பேசமனமிலாச் சாதியே!
 டமிழ் பேசும் தமிழர்களே!
 மொழிக்காகப் போராடுவோம் என்று
 பொய்மொழி உரைப்பது நலமோ?
 கனடிய மண்ணில் தமிழ் கற்க
 இலவசமாகத் தந்தது அரசு
 மாணவர் தொகையோ நூற்றுக் கொன்று
 அறிவீரோ நீவிர் இந்த உண்மை?
 மரணிக்காது தம்புமா தமிழ் என்று
 கேட்பது புதுமையா சொல்வீர்?
 மரணப் படுக்கையில் தமிழ்அன்னை
 இன்று வீழ்ந்திடக் காரணம் யாரோ?
 தமிழின் பெருமை பேசும் தமிழா
 தமிழில் அக்கறை கொள்வாயா?
 தமிழை வீட்டிலும் றோட்டிலும் பேசிடவேண்டும்
 தமிழ் பாலகராக வளர்த்திட வேண்டும்;
 மழலைகள் தமிழ் பேசக் கற்றிடவேண்டும்
 செந்தமிழும் நாப்பழக்கமாக வந்திட வேண்டும்;
 பைந்தமிழ் மீது அக்கறை கொள்ளவே வேண்டும்
 எம்தமிழ் மீது காதலே கொள்ளுதல் வேண்டும்
 வேற்றவர் போற்ற தாய்மொழி பேசிடவேண்டும்
 வையகம் போற்றும் தமிழர்களாக வாழ்ந்திடவேண்டும்
 அதுவே எம்மவர் மூச்சாய் அமைந்திடல் வேண்டும்
 இதனால்
 தமிழன்னை உவகையில் பூரித்திட வேண்டும்
 தரணிபோற்றும் பண்பாடு மிளிர்ந்திடவேண்டும்
 எனவே தமிழை
 மரணிக்க விடாது காப்பது உன்கடன்
 பரணி பாடவைக்காது உறுதியே கொள்ளு
 சீரணி நங்கைசிரித்திட வைப்பது உன்கடன்
 சிரத்தையே கொண்டு சீரடி போற்றி
 தாரணி நங்கையாத் தமிழ் மகள்
 வளர வழிகளே சமைப்பாய்
 உறுதியே கொள்வாய் ஊக்கமும்
 உறவும் உன்னதமாய்க் கொண்டு
 சத்தியம் செய்வாய்
 சித்தியே பெற்றுச் சிறந்திட
 அக்கறை கொள்வாய்
 அருந்திறல் தமிழா?
 இதுவே என் பணிவான வேண்டுகோள்
 அதுவே தாரக மந்திரமாக வேண்டும்
 அவையோரே அன்புக்கு நன்;றி
 அடிபணிந்தேன் விடைநான் கொண்டேன்
 என் கொடுந்தமிழ் செவிசாய்த்த
 என் தமிழ் நெஞ்சங்களே
 நன்றி கூறி விடை கொள்வேன்
 விடைகொடுப்பீரே!
 
 thangarsivapal@yahoo.ca
 
 சுதந்திரமே உன்னால்!
 
 -இமாம்.கவுஸ் மொய்தீன்.
 
 
  சுதந்திரம் 
அடைந்து அறுபதாண்டு காலத்தில்
 இன்றைய நிலையில்
 நம் நாடு...
 உலக அரங்கையே
 வியக்கத்தான் வைக்கிறது!
 
 உற்பத்தியில் தன்னிறைவு
 விவசாயத்தில் பசுமைப்புரட்சி
 
 கல்வி அறிவியல் மருத்துவம்
 தகவல் தொழில் நுட்பம்
 பொறியியல் மற்றும்
 இதர துறைகளில்
 அபார வளர்ச்சி!
 
 சொந்தமாய் விண்கோள்கள்
 ஏவுகணைகள் அணுவாயுதங்கள்
 இயந்திரங்கள் வாகனஉற்பத்தி யென
 வேகமான முன்னேற்றம்.
 எல்லாமே இமயத்தைக்
 காட்டிலும் உயர்வுதான்
 பெருமைதான்!
 
 ஆயினும்...
 செங்கோட்டையில்
 தேசியக் கொடியை ஏற்றிவிட்டு
 குண்டுகள் துளைக்காத
 கண்ணாடிப் பேழையின்
 உள்ளிருந்து
 பிரதமரின் உரை...
 
 விமான இருப்புப்பாதை
 பேருந்து நிலையங்களிலும்
 வழிப்பாட்டுத் தலங்களிலும்
 பொதுவிடங்களிலும்
 பாதுகாப்புச் சோதனையின்
 பெயரில் பொதுமக்கள்
 வதைக்கப்படும் நிலை....
 
 பிரித்தாண்டவர்கள்
 வெளியேறிவிட்ட பின்னரும்
 அவர்கள் விட்டுச் சென்ற
 பிரிவினை இனவாத
 நச்சுவிதைகளின் தாக்கத்தால்
 நிகழும் தீவிரவாத அச்சுறுத்தல்கள்
 அழிவுகள் இழப்புகள்....
 
 அன்னிய மாநிலத்தவர்
 வெளியேற வேண்டும்
 அன்றேல் உதைக்கப்படுவர்
 வதைக்கப் படுவர் ஒழிக்கப்படுவரென
 செயல்படும்
 சில இயக்கங்களின்
 அச்சுறுத்தல்கள்....
 
 ஆணையங்களும் உச்சநீதிமன்றமும்
 ஆணைகள் பிரப்பித்த பின்னரும்
 அண்டை மாநிலங்கட்கு
 நதிநீரைப் பகிர்ந்தளிக்க மறுத்து
 தேசிய ஒருமைப்பாட்டுக்கு
 ஊறுவிளைவிக்கும்
 மாநிலங்களின் மனப்போக்கு...
 
 அன்றாட நடைமுறையாகிவிட்ட
 கொலை கொள்ளை இலஞ்சம்
 ஊழல்கள் சமூகவிரோதச் செயல்கள்...
 சகோதரனே பகையாய் இருக்கையில்...
 சுதந்திரமே உன்னால்
 சுவையுமில்லை!
 மகிழ்வுமில்லை!!
 
 drimamgm@hotmail.com
 
துரத்தும் நிழல்களின் 
யுகம்
 - சித்தாந்தன் -
 
 
  எது 
எனது நிழல் எது உனது நிழல்
 
 நிழல்களின் கருமையாய் படர்ந்திருக்கும்
 எல்லையற்ற மவுனத்தின் மீது
 புழுதியாய் எழும் வார்த்தைகளின் நெடியை
 துரத்திவரும் மிருகத்தின் நிழல்
 எம் நிழல்களுக்கிடையில்
 
 நானொரு பறவையை வரைந்தேன்
 அது போராயுதமாயிற்று
 அதன் நிழல் என் உறக்கங்களிலிருந்து
 என்னைத் துரத்துகிறது
 
 நிழல்களின் மவுனம் கொடியது
 துர்க்கணங்களாய் நீளும் அனாதரத்தருணங்களில்
 சலனமெழுப்பி நுழைந்து பின் இருளாய் உறைகையில்
 நிழல்களின் மவுனம் கொடியது
 
 நிழல்கள் துரத்தும் நகரங்களிலிருந்தும்
 வனங்களிலிருந்தும் வரும் மனிதர்களின் பின்னால்
 ஆயிரம் நிழல்கள் தொடர்கின்றன
 
 நிழல்
 நிழல்
 பறவைகளின் குரலின் நிழல்
 குழந்தைகளின் சிரிப்பின் நிழல்
 காலமாகிய மனிதனின் கடைசிச் சொல்லின் நிழல்
 எல்லாமே அச்சமூட்டுவன
 
 நிழல்களால் நிறைந்த இவ்யுகத்தில்
 ஒரு பூவையோ
 பறவையையோ வரைந்திட முடிவதில்லை
 
 நிழல்களின் நிரந்திரத்தின் மேல் அதிர்கின்ற குரல்
 நிழல்களை எழுப்பி பெருநிழலாய் வளர்கிறது
 
 மிகவும் கொடியது
 உறக்கத்தின் நடுநிசியில் கனவுகளை
 உதறியெழ வைக்கும் சப்பாத்துகளின் நிழல்கள்
 
 நிழல்களுக்கிடையில்தான்
 நீயும் நானுமாகத் தூங்குகிறோம் நிழல்களோடு
 
 siththanthan@gmail.com
 
கவீந்திரனின் (அறிஞர் 
அ.ந.கந்தசாமியின் ) கவிதைகள் சில!
 
  - 
ஈழத்து முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரும், சிறுகதை, கட்டுரை, கவிதை, 
நாவல், மொழிபெயர்ப்பு, நாவல், சிறுவர் இலக்கியம், உளவியல் என இலக்கியத்தின் பல்வேறு 
பிரிவுகளிலும் அளப்பரிய பங்காற்றியவர் அறிஞர் அ.ந.கந்தசாமி. இதுவரையில் அவரது 
படைப்புகளில் 'மதமாற்றம்' (நாடகம்), 'வெற்றியின் இரகசியங்கள்' (உளவியல்) ஆகிய 
நூல்களே வெளிவந்திருந்தாலும், அவரது படைப்புகள் பல பலவேறு சஞ்சிகைகள், இணைய இதழ்கள் 
, தொகுப்புகள் பலவற்றில் மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் 
தொகுக்கப்பட்டு நூல்களாக வெளிவரவேண்டியது காலத்தின் கட்டாயம். அ.ந.கந்தசாமியின் 
படைப்புகளை வைத்திருப்பவர்கள் எம்முடன் தொடர்பு கொண்டு அனுப்பி வைத்தால் 
அவர்களுக்கு நன்றியுடையவர்களாகவிருப்போம். அத்துடன் அவை அவர்களது விபரங்களுடன் 
'பதிவுகள்' இணைய இதழிலும் பிரசுரம் செய்யப்படும். - 
 ரவீந்திரர்!
 
 - அ.ந.கந்தசாமி -
 
 இந்து தேசந் தனில் கவிஎனும்
 முந்து வரகவி காளி தாசனின்
 இந்த நாளின் அவதார மோவென
 வந்தனன் ரவீந்திர நாத தாகுரே.
 
 வெள்ளி வெண்சிகை வெண்ணிறத் தாடியும்
 கள்ளமிற் கருணை காலும் கண்களும்
 விள்ளுதற் கரிய கவிதை வேகம்
 துள்ளிடும் உள்ளமும் கொண்டனன் தாகுரே.
 
 வங்க நாடு வழங்கிய வண்கவி
 எங்கணும் புகழெய்திட ஏதமில்
 துங்கமார் கீதாஞ்சலியாம் துய்ய நூல
 மங்கிடா தொளிர்தர யாத்தளித் தனனே.
 
 கவிதை யாகுக காதை யாகுக
 விவித நாடக நூலு மாகுக
 புவியி லெவரும் புகழுமா றிவன்
 கவிஞர் மன்னவன் செய்தளித் தனனே.
 
 பாரத தத்தின் இன்னிசை பயின்றிடும்
 வீர தேசிய கீதமும் தந்தனன்
 யாரு மெச்சிடும் சாந்தி நிகேதனப்
 பேரு டைக்கலைக் கோவிலும் கண்டனன்.
 
 முந்தைநாள் முனி போலொரு தோற்றமும்
 நந்தமிழ் கவி நாட்டமும் தனது
 சொந்த நாட்டினில் சோர்விலா அன்பும்கை
 வந்தவன் இவன்போல் வேறு யார்ஆரோ.
 
 திறமுடைக் கவி எனில் அத்திறம்
 பிறந்த நாடு பேசிடில் போதுமோ
 பிறபுலத்தும் பேரெய்தி வாழ்ந்தவோர்
 குறைவிலாக் கவி மன்னவனாரோ
 
 பலபு லத்துக் கவித்திற னாய்ந்தோர்
 உலக நோபல் பரிசைத் தருவோர்
 கலைகள் வல்ல கவிஎனக் கொண்டு
 தலையதாமப் பரிசையும் தந்தார்.
 
 காளி தாசக் கவியர சோச்சினால்
 ஊழி தோறும் தன்புகல் நாட்டிட
 வாழி ரவீந்திரன் நாமமும் வையகம்
 வாழும் நாள்வரை வாழிய வாழியவே!
 
 - ஸ்ரீலங்கா ; பெப்ருவரி 1961.-
 
 
 கனல்!
 
 அ.ந.கந்தசாமி
 
 சண்ட மாருதம் எழுந்ததடா - இந்தச்
 சகமெலாம் சூறையில் சுழன்றதடா
 அண்டங்கள் யாவுமே நடுங்குதடா - மேலே
 ஆகாய மேகமும் அலைந்ததடா.
 
 எங்கும் கனல்தோன்றி மூடியதே - காணும்
 எட்டுத்திசையும் எரியுதடா,
 பொங்கும் நெருப்பெங்கும் பாய்ந்ததடா - யாவும்
 பொசுங்கிப் பொசுங்கியே மாயுதடா!
 
 எங்கிருந்தோ இதெழுந்ததடா - என்று
 ஏங்கிநானும் எங்கணும் பார்த்துச் சென்றேன்
 அங்கொரு பாட்டாளி மூச்சுவிட்டான் - பெரு
 மூச்சினில் தோன்றிய சூறையடா!
 
 தீயிது எங்கிருந் தோங்குதடா - என்று
 திக்குகள் எங்குமே பார்த்துச் சென்றேன்
 பேயிது என்றான் பாட்டாளி ஓர்மகன்
 பெருநகை செய்திடக் கண்டேனடா.
 
 - ஈழகேசரி - 7.11.1943. -
 
 நாட்டுப் பற்று!
 
 அ.ந.கந்தசாமி -
 
 யான்பிறந்த பொன்னாடு என்று வாழ்வினி லெண்ணாத
 மானமற்ற நடைப்பிணம் மானிலத்தில் உண்டுகொல்?
 எனதுநாடு எனது தேசம் எனதுமொழியென் றெண்ணிலா
 'மனசு' அற்ற மானமற்ற மனிதன் என்ன மனிதனோ.
 
 வாயகன்று ஊரெல்லாநம் வருத்தமோ டலைந்துதன்
 தாயகத்து மண்ணிலே காலெடுத்து வைக்கையில்
 நேயமூறி நெஞ்சினில் நிறைய இன்பவெறிகொளா
 பாவி மகனாம் உள்ளனோ பாருமையா நும்மிடை.
 
 நாடிநாளப் பாய்ச்சலில் நாட்டுவளர்ச்சி அற்றவன்
 கோடிச்செல்வன் ஆகிலென்? குறைவில் பட்டம் சூட்டிலென்?
 ஓடிப்பதவி உயரிலென்? உவந்துஇதய ஊற்றினால்
 பாடியவனை இசைப்பவர் பாரில் யாரூம் இல்லையே.
 
 சுரணையற்ற சுயநலப் பேடிதன் மதிப்பிழந்து
 இரணை மரண மெய்துவான் இருகிலத்தும் மக்கள்தம்
 அரியநிணவு தன்னிலும் அவனுக்காக அழுபவர்
 அருமைபாடி ஏத்துவார் ஆருமில்லை இல்லையே.
 
 - ஸ்ரீலங்கா அக்டோபர் 1955 -
 |