மொட்டுக்கள்
மலர்கின்றன
- 'பற் மானிக்'
வித்துக்கள்
நித்திய பராமரிப்பால்
முளைவிட்டு இலைவிட்டுப் பயிராகி
களையோடு காலம் கனியும் வேளை
மொட்டவிழ்த்து முனைப்போடு மலர்கின்றன
காலங்கள் சிறப்பாகக் கனியும்வரை
காத்திருப்பு ஒவ்வொருவர் மனதிலுந்தான்
கொக்காகக் கொழுத்தமீன் வரும்வரையில்
பொறுத்திருக்கும் வாழ்வில் தப்பேதுமில்லை
அரும்புகள் விரியும்வரை பொறுத்திருத்தல்
அமைதியாய்ப் பயன்பெறப் பார்த்திருத்தல்
தருணத்தைக் கணித்திருக்கும் நற்கணங்களே
தாழ்வில்லை அதிலென்றும் வரும்வெற்றிகளே
பொறுமையான அணுகலிங்கு பெருமையாக
மொட்டுக்கள் மலர்கின்றன அருமையாக.
pat.manick@googlemail.com
செம்(மொழி)மைத் தமிழர்
- மட்டுவில் ஞானக்குமாரன் (இலங்கை)
-
பன்னீர்பூக்களுக்குப் பதிலாக
கண்ணீர்ப்பாக்களை அனுப்புகிறோம் ....!
மூச்சுப்பிதுங்கி
முழி வெளியே வழிகிறபோது
பொதிகைத் தமிழின்
எதுகை மோனைகளை
எப்படி சுவைத்திட முடியும்.
தீர்க்க வரவில்லையே யாரும்
என்றபோது
நெஞ்சு முழுவதும்
ஏதோ ஒரு பாரம்
எந்தப் பனைக்காட்டிலும்
எங்கள் பிணக்காட்டிலும் கூட
தமிழ் வாழும்
தமிழன் நிலை தான்
சொல்லச் சிரமமாக இருக்கிறது.
பேச மைக்கும்
காசு கைக்கும் கிடைக்குமெனில்
எந்தத்தம்பியும் கோவை வருவான்
சேவை செய்ய
நல்லது
செம்மொழிக்கு மாநாடு நல்லதுதான்
வழிமொழிவதற்குத் தான்
வாய்களற்றவரானோம்.
வந்தாரை வாழவைத்தவன்
அகதிமுகாம்
வாசலிலே
இருந்தும் மலர்க்கொத்து அனுப்பிட
விருப்பம் ஆனால்
பூக்களுக்குப் பதிலாக
மண்டை ஓடுகளே
இங்கே காய்த்துத் தொங்குகின்றன.
maduvilan@hotmail.com
இரவின்
நிழல்
- சோ.சுப்புராஜ் -
அனேக நேரங்களில் - நீயென்
தோளில் முகம் புதைத்து
அழுவதில்
ஆறுதல் அடைந்திருக்கிறாய்;
சிறுகுழந்தையாய்ச் சுருண்டு – என்
மடியில் படுத்துறங்குவதில்
மகிழ்வு கண்டிருக்கிறாய்;
வெறுமை தகிக்கும் உன்
விடுதிச் சூழலிலிருந்து விடுபட்டு
எங்களின் வீட்டிற்கு
ஓடி வரும் போதெல்லாம்
துப்பட்டாவையும் துயரங்களையும்
களைந்து வீசி விட்டு
விடுதலை பெற்ற சிறுபறவையாய்
சந்தோஷச் சிறகை விரித்திருக்கிறாய்.....
இப்போதெல்லாம் நீ
என் அருகில் அமரவே
அச்சப்படுகிறாய்;
தனித்திருக்கும் தருணங்களைத்
தவிர்க்கவே விரும்புகிறாய்;
கண் பார்த்து நான் பேசினாலும்
துப்பட்டாவை அடிக்கடி
இழுத்து விட்டு இம்சிக்கிறாய்;
இருவருக்கும் இடையில்
இப்போது விழுந்து கிடக்கிறது;
எனக்குள்ளிருந்த
ஆணெனும் மிருகம் விழித்து
உலாவத் தொடங்கிய
கனத்த இரவொன்றின் நிழல்
கடக்கவே முடியாதபடி.....
email: engrsubburaj@yahoo.co.in
- வ.ந.கிரிதரன் -
அது
பால்யத்தின்
வெண்பொழுது.
காடு, மேடு, காலறுந்த
செருப்பு, கவண் ...
நான் நினைத்தேனா
இன்னுமொரு பொழுது
பந்தின் மறுபுறத்தே
இன்னுமொரு இருப்பு
தலைகீழெனவே?
காலவெளியில்
கலந்திருக்கிறது
இறப்பு.
அசைமீட்பில்
எதிர்பார்ப்பில்
கழிகிறது
நிகழ்.
சிந்தையென்னும்
விந்தை - உள்
விரியுமிந்த
உலகு
எனக்கும், உனக்கும்,
அவர்களுக்கும்
ஒன்றா?
நம்புதற்கு
என்ன சாட்சி?
நான் நடக்குமிந்த
மண்
ஆழிக்கரங்களால்
அடியுண்டு போனது.
இராட்சச ஆமையென்ன, மீனென்ன
'டைனசோர்'களென்ன
ஆடிய ஆட்டம்தானென்னே!
அரசர்கள் , அரசிகள் ,
திண்தோள் தலைவர்கள்,
பணைமுலைத் தலைவிகள்
ஆண்கள், பெண்கள்
ஊடினார்கள்; கூடினார்கள்
ஆனந்தித்தார்கள்.
பின்னொரு போதொன்றில்
புள்ளொன்று தன் குஞ்சினைக்
காப்பதற்காய்த்
தீனக்குரலிட்டுச்
சோர்ந்துகிடந்தது.
கொப்பொன்றில்
அணிலொன்று
துள்ளியது; தாவியது.
எல்லாம்
இதே இந்த மண்மீதில்தானே!
என் பங்கிற்கு இன்று
நான் விளையாடுகின்றேன்.
அல்லது
அவ்விதமிருப்பதாகக்
கருதுகின்றேனா?
கருதுவதுண்மையெனின்
அறிதற்கு வழி?
நேற்று
அவை.
இன்று
நான்.
நாளை
?
இவ்விதம்தான்
நேற்றும் பலர் இருந்தததாக
எண்ணிக் கொள்கின்றேன்.
இப்பொழுதுமிருப்பதாக
எண்ணிக் கொள்கின்றேன்.
நாளையும் இருக்கப் போவதாகவும்
எண்ணிக் கொள்கின்றேன்.
எண்ணத்திற்கப்பால்
இருப்பதெதுவோ?
எண்ணம் மீறுதற்கு
ஏது
வழி?
உன்னை நான் பார்க்கும்போது
உன்னை நான் பார்க்கவில்லை.
என்னை நீ பார்க்கும்போது
என்னை நீ பார்க்கவில்லை.
உள்ளே நீ பார்ப்பாயென்றால்
உண்மை நீ அறிந்து கொள்வாய்.
இன்னுமுள் பார்ப்பாயென்றால்
இயங்கிடும் துகளே பார்ப்பாய்.
நடனத்தின் விளைவே
இயங்கும் உலகே.
அடிப்படைத் துகள்
நடனம் தவிர்த்து - இந்தக்
காலவெளியில்
என்னதானுள?
இதுவுமென்
புரிதலின் விளைவென்றால்
இருப்புக்கும் அர்த்தமுண்டோ?
ப.மதியழகன்
கவிதைகள்!
வனபர்வம்
நிலையானது எங்குண்டு இங்கு
காலச்சுழற்சியில் மாறி வருவது
உயிர்களின் இயல்பல்லவோ
மரணம் நடைபெற்றிராத
நாட்களுண்டா இப்பூமியில்
கந்தர்வ அழகிகளையும்
பேரரசின் சக்கரவர்த்திகளையும்
கடுநெறி கொண்ட முனிவர்களையும்
ராமர் போன்ற யுகப்புருஷர்களையும்
ராவணன் போன்ற கொடிய அரக்கர்களையும்
மரண ஆற்றுவெள்ளம்
அடித்துச் சென்றுள்ளது
ஒவ்வொரு நாட்களிலும், இயற்கையால்
ஏதோவொரு விதத்தில்
நிலையாமை உணர்த்தப்படுகிறது
பூமியில் வாழும் உயிர்களுக்கு
அப்படியிருந்தும்
தங்கள் வாழ்வு நித்யமானதென்று
நினைத்துக் கொண்டு
பழி பாவங்களில் ஈடுபடுவது
சற்றும் குறையவில்லை இவ்வுலகில்
என்ன அதிசயம் இது என்று
பாண்டவர்களின் மூத்தவரான
யுதிர்ஷ்டரை வியக்க வைத்தது
இச்செய்கைகள்.
(மகாபாரதத்தில் ஒரு சிறு நிகழ்வு)
சிறைச்சாலை
வானம்பாடி பாடல்பாடி
சங்கீதம் இசைக்கின்றது
தேன் அருந்த பூக்களை
வட்டமிடுகின்றன
வண்டுகள்
வானம் சல்லடையாக
மழைநீர் கொட்டுகிறது
துளித்துளியாய்
என்னைத் தழுவிய காற்றலைகளில்
பலரின் மூச்சுக்காற்றின் அனல்வெப்பம்
அடுப்பு பற்ற வைக்க
நெருப்பு எடுக்க உதவும்
கணப்பு உஷ்ணத்தை உமிழ்கிறது
உண்மை விளங்கியது
மனிதர்கள் மரணதண்டணை கைதியென
பூலோகம் ஒரு சிறைக்கூடமென
வாழ்வு கசந்ததாய்
சாவு இனித்தது
நாணம் தடுத்தது
அஞ்ஞானம் சிரித்தது
மோட்சத்துக்கு மனம் சதா
ஏங்கித் தவித்தது
அதற்கான கடவுச்சீட்டை
இங்கேயே பெற்றுவிட
உள்ளம் துடித்தது.
மனநிழல்
அரிதாரம் கலைத்தாயிற்று
அரவான் வேஷம்
கலைத்தாலும் களப்பலியானது
இல்லாததாகிவிடுமா
மகாபாரத அரவானுக்கு பிறகு
எத்தனை அரவான்களை
களப்பலியாக கொடுத்திருக்கும்
இப்பாண்டவர் பூமி
திருநங்கை வேடம் கலைந்தவன்
வந்து சொன்னான்
தர்மரின் சூதாட்டத்திற்கு
ஐவருக்கு அஞ்ஞாதவாசமா
அவதாரம் மண்ணிலிருந்தும்
நீதி பரண் மேலா என்று
தேரை சேனைகளின் நடுவே
நிறுத்தச் சொன்ன அர்ஜுனன்
கிருஷ்ணரின் தந்திரத்தை உணர்ந்திருந்தான்
தர்மத்தை காத்திட கண்ணனுக்கு
அர்ஜுனன் ஓர் ஆயுதம்
குருட்ஷேத்திரம் ஒரு
பத்ம வியூகம்
வெளியே வரத்
தெரிந்தவனே வியூகம்
வகுத்தவன் அதனால் தான்
புனித நூலாயிற்றா
பகவத் கீதை!
தேவதை
வான் நிலவோ, வளர்பிறையோ
பூவிதழோ, தேன் குழலோ
மண்மகளோ, ஈஸ்வரியோ
உமையவளோ, மலைமகளோ
கண்மலரோ, பொன்நிறமோ
விண்ணில் ஒளிரும் நட்சத்திரமோ
மண்ணில் வீசும் தென்றல் காற்றோ
விளக்கில் எரியும் தீச்சுடரோ
வானைத் தொட எழும் பேரலையோ
ஆகாயத்தை வண்ணங்களாக்கும் வானவில்லோ
காற்றிலே கரைந்து போகும் வெண்மேகமோ
வைகறையில் மலர்ந்திடும் பூக்களோ
பாறைகளில் விழுந்து சிதறும் தேனருவியோ
கடலரசனை நாடிச் செல்லும் நதியலையோ
வானிலிருந்து பூக்களாக உதிரும் மழைத்துளியோ
பிரபஞ்சமெங்கும் சூழ்ந்திருக்கும் வெட்டவெளியோ
கைவிடப்பட்ட பூமியை
சுவர்க்கமாக்க வந்திருக்கும் தேவதையோ
mathi2134@gmail.com