| 
  பாரதியின் நினைவு நாட்கவிதை!பாவலர் பாரதியார் நினைவேந்தி...!
 
 - தமிழநம்பி -
 
 
  
  பாரதிக்குத் தனிச்சிறப்பு பழந்தமிழச் சித்தர்பாப்போல எளிதாகப் பாடிஎளி யோரும்
 தேரஉணர்ந் தெழுச்சிகொளத் தேசப்பற் றூட்டித்
 தீக்கனலாய்ப் பரப்பியமை தெரியாதார் இல்லை!
 வீரவர லாற்றுடனே வெவ்வேறு செய்தி
 விளக்கியநல் எழுத்தாளர்! வீறிழந்து மக்கள்
 சீரழிந்தே அடிமையுற்ற சிறுமைநிலை போக்கச்
 சீறிஎழச் செய்தஇத ழாசிரியர் இவரே!
 
 தொன்மையுடன் புதுப்புதுமை தோய்ந்தகருத் தெல்லாம்
 துளித்தயக்கு மில்லாது துணிவுடனே சொன்னார்!
 முன்மையுறத் தாய்மொழியில் முறையாகக் கற்பீர்;
 முந்திடும்ஆங் கிலவழியோ முழுபேடிக் கல்வி!
 வன்மையுடன் அதைத்தவிர்ப்போம்; வண்டமிழின் வழியே
 வழங்கிடுவோம் கல்வியென வழிவகையும் சொன்னார்!
 மென்மையொடும் அன்போடும் மிகப்பரிந்து சொன்னார்
 மேன்மையுறத் தாய்மொழியே மிக்கதுணை என்றே!
 
 ஒருபக்கப் பாரதியே உருவாக்கிக் காட்டும்
 உதவாத போக்கிங்கே உள்ளதிது நன்றோ!
 ஒருவிடுக அயற்சொல்லை ஒல்லும்வா யெல்லாம்
 ஓங்குகலை சேர்த்துதமிழ் உயர்த்திடுக என்றார்!
 தெருளுறவே அவருரைத்த தேர்ந்தகருத் திதனைத்
 தெரிந்திருந்தும் பிறசொல்லைத் தீந்தமிழில் கலக்கும்
 அருவருப்பை மாற்றிடுவோம் அறிவியலும் கலையும்
 அருந்தமிழில் வளர்த்திடுவோம்! அன்புணர்வில் வாழ்வோம்!
 
 [11-9-2009 - பாரதியின் நினைவு நாள்.
 thamizhanambi44@gmail.com
 
 ப.மதியழகன் கவிதைகளிரண்டு!
 
  
   
  1. மனிதம் அற்ற மானுடம்
 
 வானமகள் மேகமெனும் மெல்லிய ஆடையை
 உடுத்தி உடுத்திக் களைகிறாள்
 
 கதிரவன் தன் கதிர்களால் உஷ்ணம் கூட்ட
 அவனுக்கு தங்களுடைய இன்னொரு கன்னத்தையும்
 காட்டியபடி நின்றன மரங்கள்
 
 கடைவிரிக்கப்பட்ட காலத்திலிருந்தே
 காமம், கோபம், பொறாமை குணங்களெல்லாம்
 ஏகமாய் விலைபோக
 கருணையும், தயையும் கேட்பாரின்றிக்
 கிடந்தது, யுக முடிவை எதிர்பார்த்து
 
 அன்றைய விடியலில்
 புதியதாக ஒன்றுமில்லை மானுடத்தை வசீகரிக்க
 ஆனாலும் பிரபஞ்சததின் முதல் நாளைப் போல
 அன்றைய விடியலைக் கொண்டாடின பறவைகள்
 
 நடைபாதையிலுள்ள சிறுசெடியில் பூ ஒன்று
 அழகாக மலர்ந்திருந்தது
 தான் இன்னும் சிறிது நேரத்தில்
 ஜனநடமாட்டம் மிகுந்திடும் போது
 செருப்புக் கால்களால்
 மிதிபட்டழிவோம் என்பதை
 வெகுவாக அலட்சியப்படுத்தியது
 அதன் ஆனந்தமான இருப்பு
 
 இரவினில் தான் கரை ஒதுக்கிய கிளிஞ்சல்களை
 விடியலில் வந்து பொருக்கும் அரும்புகளைக் காண
 குதூகலத்துடன் காத்திருந்தது கடல்
 
 மானிடனோ
 தன்னலத்தால் மதிமயங்கி
 தான் உயிர் வாழ்வதற்கு
 மூலகாரணமாகவுள்ள
 ஐம்பூதங்களையும் அலட்சியப்படுத்தி
 அகங்காரமாகச் சிரிக்கின்றான்
 அதன் எதிரொலி திக்கெட்டும் கேட்கின்றது
 
 ஆழ்குழாய் கிணறு மூலம் பூமித்தாயின்
 உதிரம் குடித்து உதிரம் குடித்து
 வளர்ந்தவர்கள் தானே நாம் ஒவ்வொருவரும்
 மனிதம் அகன்ற பின்பு
 இம்மண்ணில் மானுடம் நிலைக்குமா?
 
 2. ஞானக்குயில்
 
 ஆண்குயில்:
 ‘தனிமையில தவிக்கின்றேன்
 உனைச் சேச்ந்த பிறகு
 உயிரை துச்சமென மதித்து
 தூக்கியெறிந்து
 விண்ணில்புக நினைக்கின்றேன்’
 
 பெண்குயில்:
 'வாழ்வதன் பொருளை
 முழுதும் உணர்ந்தால்
 மனிதரும் அற்பசுகம் தேடுவரோ
 தான் தேடித் தேடி
 காண இயலாமல்
 தேக்கமுற்று இறப்பரோ!
 கோடியில் எவனோ ஒருவன்
 கண்டடைந்துவிட்டால் கூட
 இவ்வுலகம் இங்கு இருக்குமோ
 இதனை நன்றாய் உணர்வாய்
 எந்தன் கருங்குயிலே
 முடிவில்லா இன்பம்
 எனைப் புணர்ந்தால்
 உனக்கு கிடைக்குமென்றால்
 அப்பேரின்பம் பெற்ற
 நம் முன்னோர்கள் மடியாமல்
 இக்கானகத்தில் நிலைத்தனரோ
 சிற்றின்ப ஆசையை
 ஒருநொடி அடக்கினால் கூட
 அச்சங்கல்பத்தால்
 சொர்க்கத்தின் வாசல் கதவு
 திறக்குமன்றோ
 இச்சையினால்
 இம்மாயவுலகத்தில்
 எத்தனைப் பிறவிகள்
 எடுத்து வந்தாய் என்பதை
 உணர்வாய் எந்தன்
 கருங்குயிலே! ’
 
 ஆண்குயில்:
 ‘காம உணர்ச்சித்தீயினை
 ஞானத்தீயாய் மாற்றிவைத்தாய்
 கூடு, இணை, குஞ்சுகள் வேண்டாம்
 இருக்கின்ற பொழுதெல்லாம்
 இறைவன் இட்டபணி செய்திடுவேன்
 யாதுமாகி நின்றிருக்கும்
 பரம்பொருளை பாடல்பாடித் தொழுதிடுவேன்
 நன்றியுனக்கு
 கோடான கோடி நன்றியுனக்கு
 போய் வருகிறேன்
 பறந்து திரிய
 இக்கானகத்தைத் தவிர
 எல்லையில்லாப் பெருவெளியிருக்கு! ’
 
 mathi2k9@gmail.com
 
 ராம்ப்ரசாத் கவிதைகள்!
 
  1. குறிப்பெழுதுங்கள்
 
 தேன்பருகித்
 தாவிவிடும் வண்டதின்
 இயல்பு விளங்காமல்
 வினவும் பதினாரு வயது
 பருவப்பூவிற்கு
 நினைவடுக்குகளில் அங்கொன்றும்
 இங்கொன்றுமாய் சிதறிக்கிடக்கும்
 வாழ்க்கைப்பாடங்களைக்
 கோர்வையாய் சேர்த்துப்
 பழகிடாத நிலையில்
 விளக்கிச்சொல்லுவது எப்படியெனும்போதும்,
 
 கட்டில் அடங்காத மனக்குரங்கை
 அதன் போக்கில் விட்டு,
 இன்றைய பொழுது
 நம்பொழுது,
 நாளையென்பது
 பகல் கனவென்று,
 காரணம் சொல்லி
 சிற்றின்பங்களைக் கணக்கெடுக்கும்
 இளந்தளிர்களுக்கு
 வாழ்க்கையென்பது என்னவென்று
 விளக்கிச்சொல்லுவது எப்படியெனும்போதும்,
 
 இப்படி
 பல்வேறு தருணங்களில்
 கடந்து வந்த பாதைகளில்
 கடந்து போன பாடங்களை
 மீண்டும் படிக்க நேர்கையில்
 தோன்றுகிறது,
 நம் வாழ்க்கையைக்
 குறிப்பெழுதியிருக்கலாமென்று...
 
 2. கடல்
 
 ரத்தமே உடலாய்
 அவள் கடல்...
 
 சதா அலையடித்து
 வேர்ப்பதினால் தானோ
 அவள் உப்புக்கரிக்கிறாள்...
 உலகெங்கிலும் காதல்களை
 கரையோரங்களில்
 வளர வைப்பதிலும,
 காதலர்கள்
 தோற்கையில் சுவீகரித்து
 காதல்களை வாழவைப்பதிலும்,
 ரத்தமே உடலாய்
 அவள் கடல்...
 
 வாழ்க்கை என்பது
 அமிழ்த்தும்...
 அலை மீண்டும்
 கடல் கொள்ள
 கால்கள் அமிழ்வதுபோல...
 போராடி அடுத்த
 அடியெடுத்து வைத்தால்
 மட்டுமே வாழ்வது
 மீண்டும் தொடருமென்று
 மெளனமாய் வாழ்க்கைப்பாடம்
 கற்றுத்தருவாள்,
 ரத்தமே உடலாய்
 அவள் கடல்...
 
 சாய்ந்துவிழும் அந்திவானத்தை
 ஏந்திக்கொள்ளும் தூரத்தில்
 நங்கூரமிட்டிருக்கும்
 மிதக்கும் உலோகத்தீவுகளின்
 பயணங்களின் வாழ்வாதாரமாய்
 ரத்தமே உடலாய்
 அவள் கடல்...
 
 காற்றின் பிறப்பிடம்
 அலை...
 அலையின் பிறப்பிடம்
 காற்று...
 இவ்விரண்டின் பிறப்பிடம்
 ரத்தமே உடலாய்
 அவள் கடல்...
 
 அண்டவெளி தன்னுடலை
 பார்த்துவிடுமோவென
 வெட்கம் கொண்டே
 வானம் கொண்டு
 போர்த்திக்கொள்ளும்
 ரத்தமே உடலாய்
 அவள் கடல்...
 
 3. காதல்
 
 உன் நினைவுகளை
 சுமந்து திரியும்
 எனக்குப் போட்டியாய்
 உன்னையே சுமந்து
 சின்னதாய் ஒரு
 கவிதை சொன்னது
 இந்த எடைமேடை...
 உன் கவனக்குறையோ,
 என் அன்போ,
 அக்கறையோ,
 உன் இப்படியான
 கவிதைகள்
 என் காதல் கதையின்
 கதாபாத்திரங்கள் ஆகின்றன..
 நீ மட்டும் நடித்துவிடாதே
 இது கதைதான்
 நாடகமல்ல...
 உன் ஓரவிழிப்பார்வைகளால்
 நானொரு தொடர்கதையாகிறேன்
 என்றாலது மிகையுமல்ல...
 
 ashwin_i1980@yahoo.co.in
 
 ரூசோவின் கவிதையொன்று!
 
  
   வாசலை 
  சுத்தம் செய்வதற்காய் வந்து போகிறாய்
 என் மனம் குப்பையாய் போகிறது..
 
 நான் காத்திருக்கும் பொழுதுகளில்
 வாசலை மட்டுமின்றி
 வீதியையும் சேர்த்துப் பெருக்குகிராய் ..
 
 உன்னால் ஒதுக்கப்பட்ட
 குப்பைகள் கூட
 குதுகூலமாய் ..
 
 வெறுங்கைவிரல்களால்உன்
 வாசல் கதவை மூடிவிட்டு
 கண்களால்
 என் வீட்டு வாசல்
 கதவை திறந்து வைத்துப்போகிறாய்..!
 
 marine_engineeruso@yahoo.com
 http://minpaakkal.blogspot.com/2009/09/blog-post.html
 
 புத்தக மயிலிறகாய்ப் பொத்திய…
 
 - வேதா இலங்காதிலகம் (ஓகுஸ், டென்மார்க்) -
 
  
   
  புத்தக மயிலிறகான இதயத்தின் ராகங்கள்பொத்திய எண்ணங்கள் வாசனைச் சுகந்தங்கள்.
 தத்தித்தோம் போடும் தலைமுதல் கால்வரை
 தித்திக்கும் ஐதிகள் இன்பத் திறவுகோலாகும்.
 மொத்தமாய்க் காதலெனும் தத்துவ நாடிகள்
 சத்தான வாழ்விற்குச் செங்கம்பளம் விரிக்கும்.
 
 ஊன் பாகமாய் உயிரில் கலந்து
 தேன் பாகாய் இனிக்கும் உயிர்க் காதல்.
 கண்ணெனும் நுழைவாயிலால் பாய்ந்து
 அன்பால் கனிந்து உயிரில் உரசும்.
 ஒன்றாய் இணையும் உயிரின் தாளம்
 கண்ணோடு நாளும் கவிபாடி வாழும்.
 
 இசையும் சுரப்பிகளின் இனிய மென்னகை
 அசைத்து நனைக்கும் உயிர் நதியை.
 கிளுகிளுக்கும் இன்பத்தில் நெஞ்சம் கிறங்கும்.
 தளதளக்கும் நேசத்தில் தனிசக்தி பிறக்கும்.
 குளுகுளுக்கும் பிருந்தாவன நீரூற்றாகும் இன்பம்,
 கிசுகிசுக்கும் உயர் காதல் சிறகுகளாகும்.
 
 நிறம் கொஞ்சும் ரவிவர்மன் ஓவியமாய்
 நினைவிருக்கும் வரை அரங்கேறும் காவியம்.
 பிரபஞ்ச அழிவிலும் பிரிவற்ற காதல்
 சுரம் கொஞ்சும் இராகமாளிகாப் பொழில்.
 தரமுடை நினைவுத் தேனின் தேனடைகள்,
 உரமான நினைவாற்றலில் நீந்தும் கனவுகள்.
 
 ஒரு துளியாய் நானிருந்தேன் கிராமத்தில்.
 பெரும் ஊற்றாம் உன் அன்புச் சாரலில்
 திரு ஊற்றாயுன் விழி மொழியில்
 ஒரு ஓடையாய் இன்று உருமாறினேன்.
 உன்னருகு எனக்கு யானை பலமானது.
 அன்ன பல கவிதை பின்ன வந்தது.
 
 புத்தக மயிலிறகாய்ப் பொத்திய எண்ணங்கள்
 நித்திலக் காதல் நிலவு வெளிச்சங்கள்
 சத்தாகிக் கனதியற்ற கனவான நினைவுகள்.
 பூவிடும் மகரந்தப் பூந்துகள்கள், பூவாணங்கள்,
 காவிடும் பூம்பல்லக்குகள், கனகரதங்களாய்,
 நீவிடும் வாழ்வை நீண்டினிய பயணத்திற்கு,
 
 vetha@stofanet.dk
 |