உடல் உறுப்புகள்
நாணுகவே!
- மு.இளங்கோவன் (புதுச்சேரி, இந்தியா)-
தொங்குகின்ற பலகையிலே தொலைநாட்டார் மொழியேறி
மங்கிநின்று காட்சிதரும் மடமையினைக் கண்டதனால்
செங்குருதி உறைந்திட்ட சிலைப்புருவ கண்களேஇ நீர்
பொங்குநுரை கடலெனவே பனியதுவைச் சிந்துகவே!
மொச்சையைப்போல் உடலழகு மழலையர்கள் விழைந்தாடி
செச்சைத்தமிழ் சீர்பாடும் தெருவினிலே இந்நாளில்
கொச்சைமொழி உளறல்களைக் கொடுங்காதேஇகேட்டபின்பு
பொச்சாப்பால் தொல்லையுற்றுப் புகழுருவம் நீங்குகவே !
மணித்தமிழில் சொல்லெடுத்து மளமளவென எழிற்றமிழில்
அணிகலந்து பேசிடுநல் அழகொளிரும் செவ்வாயே !
பிணிசுமந்த மாந்தனைப்போல் பிறமொழியை விரிப்பதனால்
துணியாகும் இதழிழந்து துன்புற்றே உழலுகவே !
நினையுங்கால் இன்பமதை நீள்வரிசைப் பட்டியிடும்
தனித்தமிழில் கலப்பேற்றித் தருக்குற்ற கைகளேஇநீர்
வினையினிலும் வேண்டியநல் பணிகளிலும் தமிழ்மறந்த
நனிமருவால் நலமிழந்து நயனுருவம் நீங்குகவே !
பண்ணாலை தமிழ்பாடிப் பகையதனை ஒழித்திட்ட
மண்ணுலகப் புலவரைப்போல் வளர்உடலே வாழுகவே !
கண்ணிகர்த்த தமிழதனைக் காத்திடவே ஒழிவையெனில்
புண்ணாகிப் புடைசூழ்வோர் நீர்சிந்தப் புதைகுவையே !
muelangovan@gmail.com
அன்னை திரேசா நினைவாக....
மக்கடோனிய மரகதம்!
- வேதா. இலங்காதிலகம் (டென்மார்க்) -
மக்கடோனிய மண், ஸ்கோப்யத்தில், மலர்ந்த
மரகதம், அக்னெஸ், பன்னிரு வயதில்
பரவசம் இறையழைப்பு என்றுணர்ந்தார்.
சரணமான தேவ அன்பைப் பரப்பினார்.
துள்ளும் இளமைப் பதின்ம வயதிலவர்
தௌ;ளிய அமுதம் இறையருள் வயமானார்.
உள்ளுறை இன்ப இளமையுணர்வைக்
கொள்ளியிட்டு அருட் கொடியேற்றினார்.
பதினெட்டில் பிறந்தகம் விலகிய சேவகியார்
பதியாம் கல்கத்தா கன்னிமாடத்தில் பயின்றார்.
புதிதாய்ப் பயில டப்ளின் பறந்தார்.
நிதியாய்; இந்தியாவில் கன்னியாஸ்த்திரி பிரதிக்ஞை.
பதினேழு வருடம் சென்மேரீஸ் ஆசிரியை.
பதவியைத் துறந்தார் சேரிக் குழந்தைகளுக்காய்;,
படிப்பிற்குத் திறந்த வெளிப்பாடசாலை திறந்தார்.
பரிசுத்த அவதாரம் இருபதாம் நூற்றாண்டில்.
துயரில் பிறருக்காய் உருகிய தூயவர்
அயர்லாந்தில் பயின்ற அன்னை திரேசா,
அயர்வற்ற சேவையில் அட்சயபாத்திரமானார்.
ஆதரவற்றோருக்கு அபயக்கரம் ஈந்த அன்பரசி.
ஆதரவின் இலக்கணம், அறநெறியாளி திரேசா.
பசிக்கு உணவீந்த அன்புக்கங்கை திரேசா.
காசம், பால்வினை பாரிசவாதம், குஷ்டரோகிகளையும்
நேசமாய்த் தொட்டாh,; பல பரிசுகளும் பெற்றார்.
(அன்னை திரேசாவின் தோற்றம் - 27 ஆவணி, 1910.
மறைவு - 5 புரட்டாதி, 1997.
சமாதானப் பரிசு (போப்) - 1971.
நேருவின் பரிசு - 1972.
நோபல் பரிசு, - 1979 லும்
இன்னும் ரெம்பிளெட்டோன்,(Templeton)
மக்செய் செய் (Magsaysay) பரிசுகளையும்; பெற்றார்.)
வேதா. இலங்காதிலகம். ஓகுஸ், டென்மார்க்.
vetha@stofanet.dk
சாவு அச்சங்கள்
நீங்கிய பொழுதுகள்…!
- மட்டுவில் ஞானக்குமாரன் -
தூக்குத் தண்டனைக் கைதிக்கு
தீர்த்து வைக்கப்படும்
இறுதி விருப்பங்கள் போலவே
இங்குள்ள எல்லாமே.
விரிசல் விழுந்த
சுவரை
மூடி மெழுகிய சாந்து போலவே
வாக்குறுதிகள்.
கடினமான
ஒவ்வொரு எத்தனிப்புக்கும் பலன்
புச்சியம் ஆகிறபோது
விதிப் பயனைச் சொல்லியே
வினைப் பயனில் இருந்து
பெரும்பாலானவை
விலகிக் கொள்கின்றன.
பக்ரித் பண்டிகைக்காக
மாலையோடு காத்திருக்கும்
ஆடுகள் போலவே
இங்கே மனிதர்கள்?
சாவு
அச்சங்கள் நீங்கிய பொழுதுகள்
வருவதில்லை
குறைந்த பட்சம்
துப்பாக்கியோ
குத்தியோ
காத்தே இருக்கும்!
maduvilan@hotmail.com
என்.சுரேஷ்
(சென்னை) கவிதைகள்!
மகிழ்ச்சி...
புன்னகைத் தோட்டத்தில் மலர்ந்தும்
பூவழகே
ஏன் மறந்தாய்
உன் பொன்சிரிப்பை
பேசிடவும் வேண்டுமோ
அன்புமனம் அமைதியுற்றால்
மொழிவேண்டாமென விலகி
மலர்கிறதோ உன் மௌனம்?
உந்தன் மௌனம் கண்டு
நினைத்தேனே ஆணவமென்று...
நீ பேச இயலாதவளோ?
வினவுமுன்னே முணுமுணுத்தாய்
இல்லை இல்லையென்று
அதிலுன் புன்னகை
முந்திவரக்கண்டு
மகிழ்ச்சிக்கடலில் என்மனம்!
பறந்து சென்றது!
அவளை
அடித்துதைத்து தன்னுடலே
வலிக்கத் துவங்கனதும் அவனது
ஆத்திரம் தீர்ந்தாம்!
உதை வாங்கி வாங்கி விழுந்து
மயக்க நிலையிலினி திட்டித்தீர்க்க
சக்தியோ வார்த்தைகளோயின்றி
வாடிய நிலையில்
பாவமவளின் கவலைகள் தீரவில்லை
அடங்காத ஆத்திரம் மயக்கதிலிருந்து
வெளிவரவில்லை!
அவன் கணவனாம்
அவனின் தாலி அணிந்ததால்
இவள் மனைவியாம்!
இந்த கொடூரம் கண்டு கலங்கி
பயந்து நடுங்கும்
பாவம் குழந்தைகளின் கண்ணீர்
தொடர்ந்து கேட்கும் கேள்வி
" ஏன் பிறந்தோம் "
மேகமூட்டம் கொண்ட அந்த
உணர்ச்சி நொடிகளில்
கூண்டுக்குள் சிறையிடப்பட்ட
பறவைகளைக் கண்டு
பூக்களுக்கு முத்தமிடவந்த
வண்ணத்துப்பூச்சியொன்று
கவலையாய் பறந்து சென்றது!
எறிந்து விட்டீர்களே...
எஜமானரே
எங்களை எறிந்து வீட்டீர்களே!
ஆண்டுகள் பல
அயராமல் உழைத்தும்
அந்நியராகிவிட
நாங்களின்று விலாசம் தெரியாத சொற்கள்
ஆம்!
நேற்று எறியப்பட உங்களின் பற்கள்!
நினைத்துப் பார்க்கிறோம்...
உங்களில் எத்தனை நினைவுகள்!
எங்களைக் கண்டபோது தான்
உங்களுக்கு அறிவு பிறந்ததென்றார்கள்!
உங்களின் கோபங்களில்
எங்களில் எத்தனை துடிப்புகள்!
உங்களின் ருசிக்கென உணவை அரைத்துழைத்த
இயந்திரச் சக்கரங்களில் மூத்தவர்கள் நாங்கள்
இன்று ஒருவேளை எங்கள் நிலைகண்டு
இன்பமாய் சிரிக்கலாம் நீங்கள்!
இனி வரும் இனிய உணவுப்பொழுதுகளில்
இனியவரே எங்களை நீங்கள் நினைப்பீர்கள்!
எங்களில் காயம் வந்ததற்கு
எப்படி ஐயா நாங்கள் காரணம்?
பாசத்தை நீங்கள் காட்டியதெல்லாம்
எங்களை சுத்தம் செய்வதில் மட்டும் தானே?
வந்து
இரண்டே நாட்களில் அழகிழக்க
ஒவ்வொரு நாளும் முறையிடும்
பாவமந்த பல்துலக்கி!
முன்வரிசை கீழ்வரிசை அழகர்களுக்காவது
நல்லதோர் பலதுலக்கியை
வேலைக்கு வையுங்கள்..
மாதமொன்று போதும் - அதை
மென்மையாய் பயன்படுத்துங்கள்
அந்த வரிசை அழகர்களுக்காவது
எங்கள் நிலை வராமலிருக்கட்டும்!
உங்களின் எத்தனை சந்தோஷங்களிலும்
துக்கங்களிலும் உங்களோடு
பயணித்திருக்கிறோம்?
நீங்கள் பேசின யாவும்
எங்களுக்குத் தெரியும்
பற்கள் எங்களை பயந்தே பலவேளை
நீங்கள் சத்தமாகச் சிந்திக்கவில்லை!
இத்தனை வருட சேவைக்கு பின்
எங்களின் ஓய்வின்று
உங்கள் மருத்தவரின்
குப்பைத்தொட்டியில் தான்!
அவருக்குத் தெரியுமா
நாங்கள் குப்பையிலிருக்கும்
வைரங்களென்று!
ஒரு சமாதானம்!
எங்களை எறிவதற்கு முன்னால்
நகைச்சுவையாய் பலரிடம்
எங்களுக்கு நன்றி சொன்னீர்கள்!
நன்றி ஐயா
நன்றி..!!!!
ஒரு மொழி
அதன் பழைமையாகி விட்ட
அகராதி புத்தகமொன்றை
எறிந்து விட்டது!
இன்று குப்பையிலிருக்கும் நாங்கள்
நாளை எங்கிருப்போமோ!
உங்களுக்கு சேவை செய்ததில்
எங்களுக்கு மகிழ்ச்சியே!
மீண்டுமொரு சமாதானம்
உங்கள் மகிழ்ச்சியில் மகிழ்ந்தே...
நீங்கள் பல்லாண்டு வாழ்கவென்று வாழ்த்தி
உங்களுக்கு முன்னமே
பற்களில் மூத்தவர் நாங்கள்
மங்களமாய்
சென்றுவிட்டோம்!
இருப்பினும் எஜமானரே
எங்களை எறிந்து விட்டீர்களே!
தெளிந்த நிஜம்!
தன்னலத்தின் அவதாரமே
தயவற்ற முதலாளியே!
நன்றியென்பதில்லா நரியே
நாகரீகமே உன்னில் இல்லையே!
உண்மையென்னிடம் உனக்குந்தன் கனவுகளிலும்
உறங்காத எத்தனை இரகசிய சந்தேகங்கள்
உடைந்துபோன சந்தேகக் கண்ணாடியால்
உண்மையென்னை அறியவே முடியாதுன்னால்!
அன்பில் வளர்ந்த மலர் நான்
அன்பைக் கலைத்த கள்ளப்பணத்தில்
அன்பற்று வளர்ந்த முள் நீ!
பூந்தேனை காதலோடு பருகும் தேனீ நான்
கரும்பைப் பிழியும் உணர்வற்ற இயந்திரம் நீ!
ஏழை நானென்பதாலென்றும்
ஏழைகளிடமே பரிவெனக்கு
ஏழ்மை மறந்த ஞானியே
ஏழைகளெல்லாம் வெறும் புழுக்களுனக்கு!
பொய்க் குற்றச்சாட்டென் காதில் விழுந்தாலே
பொய்மைகண்ட கோப்பத்தால் வாடுபவன் நான்!
பொய்யில் மகிழ்ந்து சிரித்துக்கொண்டே
பொல்லாப்பாவம் செய்பவன் நீ!
உந்தன் கொடூரங்களும் அவமானங்களும்
எந்தன் இதயத்தில் புதைக்கப்பட்டுள்ளன
உன்னோடு நட்பென்றாலும் பகையென்றாலும்
உனது கொடுமையென்பது நிச்சயமே!
எனக்கிந்த அறிவின்று வந்த பிறகும்
என்னில் உனக்கென பாசம் எப்படி மலரும்?
எந்தன் நிஜத்தை உணர்த்திய
என்மனத்தெளிவும் இயற்கையும்
என் பார்வையால் கிழித்ததுந்தன் முகத்திரை
அடிமைபாரங்கள் சுமந்து சுமந்து
அடங்கிக்கடந்த எந்தன் நிஜம் மலர்ந்து
அறிவோடு உணர்ந்தது
அடியேன் பூனையல்ல, புலி!
முடியும் ஆனால் மாட்டேன்
மூடனே பயமேன்
நானுனை கொல்லமாட்டேன்
கொடுமைக்கார முதலாளியே
கொள்கையால் இன்றுமுதல் உனையாளும்
தொழிலாளி நான்!
மௌனம்!
மௌனம் அரங்கேறிய அவ்வீட்டில் - சில
குழந்தைகளின் சத்தம் மட்டும்....
அதீத சோகத்தால் மனம் விட்டு
அழத்துடிக்கும் நண்பன்...
அழுது வரண்டுபோன கண்களோடு
அவனினிரு பிள்ளைகள்...
அந்த பிள்ளைகளின் பார்வைகள் கேட்கும்
பல்லாயிரம் கேள்விகளுக்கு பதிலின்றி
அங்குள்ளோர் எல்லோரும்...
கவலையைத் தேற்றவந்து கவலையிலாழும்
சொந்தபந்தங்களும் நண்பர்களும்...
நிர்பந்தமாயந்த வீட்டிற்குள்ளெனை
அழைத்துச் சென்றயென் நண்பன்
ஆழ்ந்த உறக்கத்திலிருப்பது போலிருக்கும்
அவனின் தேவதையைக் காட்டி
கதறிச்சொன்னான்..
"மனைவி இறந்து விட்டாள்"
nsureshchennai@gmail.com
சோறிட்ட உறவுகள்!
- இரா.சரவண தீர்த்தா (மலேசியா) -
சோறிட்ட உறவுகளை
தாழிட்டு விரட்டி
வேர்விட்ட கருவதனை
வேரறுக்க வந்தாய்!
உடன் படிக்கை அட்டையென
உதிரத்தை உறிஞ்சி
பூதத்தை ஏவி விட்டு
வேதத்தைத் திறந்தாய்!
அயல்நாட்டு ஆதரவை
பூசிமெழுகிப்பெற்று
சுயநாட்டுச் சரித்திரத்தை
சுயமாக்கிக்கொண்டாய்!
தாய்மண்ணில் ஒண்டவந்து
தமிழ்கருவைத்தின்று
யாழ்பிடித்த விரல்களில்
சீழ்பிடிக்கச்செய்தாய்!
முரத்தாலே விரட்டிய
புலியென்று நினைத்து
துடைத் தொழிக்கப் புலியதனை
துடைப்பங்கொண்டு நின்றாய்!
எலிவாலைப் பிடித்துநின்று
புலிவாலென்று நினைத்து
மடையர்களை மயிராலெ
மலையிழுக்க வைத்தாய்!
கொட்ட கொட்டகுனிவாரென்று
ராஜபக்சே கணித்தாய்
ஒட்ட நறுக்க வனப்புலியை
ராஜதந்திரி பணித்தான்!
வைரிகளைப் பெயர்த்தெடுக்க
வான்புலியாய் பறந்தான்
யாழெடுத்து இன்பம் சேர்க்க
யாழ்மகன் எழுந்தான்!
sbumi@streamyx.com