கழக
இலக்கியக் கணிக்கருஞ் சால்பு!
- தமிழநம்பி -
“சங்கத் தமிழின் சால்பு”எனுந்
தலைப்பில்
இங்குவந் தெங்கள் இன்னவை தன்னில்
நன்கொரு பாட்டினை நல்குவிர் என்றே
அன்பொடு “பொதும்பர்” அமைப்பினர் கேட்க
அவ்வவை தந்ததைத் துவ்வுற ‘பதிவுகள்’
செவ்வையர்க் கென்றே இவ்விடந் தீட்டினேன்!
அன்பும் மதிப்பும் அணிசெயுந் தலைவ!
நன்புரைப் பாவலீர்! நல்லவை அமர்ந்த
அறிஞரீர்! பெரியீர்! அன்புசால் தாய்க்குலச்
செறிதமிழ் உணர்வீர்! செயல்வல் இளமையீர்!
தோழமை சான்ற தூயநல் லுளத்தீர்!
ஆழன் போடே அவையினை வணங்கினேன்!
‘சங்க’த் தமிழின் சால்புறு காலம்
மங்காத் தமிழின் மதிப்பொளிர் காலம்
முக்கழ கத்தே முற்றறி வோடே
எக்கா லத்தும் ஈடில் சிறப்பொளிர்
செந்தமிழ்ச் செவ்வியல் செப்பிடு மிலக்கியம்
எந்தமிழ் மொழியில் இயற்றிய காலம்!
தொன்மை செம்மை தூய்மை யதனுடன்
தன்தனித் தன்மையும் தகைசால் பொதுமையும்
செம்மொழிக் கிலக்கணம் செப்பினர் அறிவர்!
எம்மொழி யேஅவ் எல்லாச் சிறப்பையும்
உயர்வுறக் கொண்டதென் றுலகம் உரைக்கும்!
மயர்வற ஆய்ந்தே மாட்சியை விளக்கும்!
பொதுமை உணர்வைப் போற்றிய மொழிதமிழ்!
இதுமிகைக் கூற்றிலை; இன்றமிழ் இலக்கியம்
‘உலகம் உவப்ப’, ‘உலகம் யாவையும்’,
‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கு’ என்றும்,
‘வையகம் பனிப்ப’ வாழ்த்தித் தொடங்கலும்,
பொய்யில் புலவர் ‘முதற்றே உலகு’
எனக்குறிப் பிடலும் இனும்பிறி தொன்று
‘நனந்தலை உலகு’என நனிதொடங் கிடலும்
பொதுமை உணர்வுப் பொதிந்துள துரைக்கும்!
இதுதவிர்த் தின்னும் சான்றுக ளுண்டே!
உலக இலக்கியம் உரைப்பதோ மாந்தரின்
இலகிடும் இயற்பெயர்! எந்தமிழ் மொழியிலோ
“மக்கள் நுதலிய அகன்ஐந் திணையும்
சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறார்”
என்ற நெறியினில் இயற்பெயர் தவிர்த்தே
நன்றாம் பொதுப்பெயர் நாடிக் குறிக்கும்!
இயற்கையை விளக்கும் இனியநற் பாக்கள்
வியப்பி லாழ்த்தும் நாடகக் காட்சிகள்!
“ஆடமைக் குயின்ற...” அகநா னூற்றுப்
பாடல் காட்டும் ஆடரங் கழகே!
பிரிவால் வருந்தும் பேதைத் தலைவி
அருந்துயர் தன்னில் அரற்றலைக் கேளீர்!
“முட்டு வேன்கொல்? தாக்கு வேன்கொல்?
‘ஆஅ! ஒல்’எனக் கூவு வேன்கொல்?
அலமரல் அசைவழி அலைப்ப என்
உயவுநோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே!”
ஒப்பிலா துரைத்தயிவ் ஓங்கிய அவலம்
செப்பிய திறத்தின் சீர்சிறப் பறிக!
“அகவன் மகளே, அகவன் மகளே!
மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே!”
இன்றரு கிருந்து இயம்பிடற் போன்றே
என்றும் ஒளிர்ந்திடும் எழிற்றமிழ்ப் பாடல்!
மாபெருஞ் செல்வன், மருத நிலத்தான்
தாவும் அலையுறு தாழ்நிலப் பரதவர்
பெண்ணை விரும்பினன்; பேரறி வோடே
எண்ணிடுந் தோழி இயம்பிடும் பாடலே
“செம்மீன்” தகழியார் தீட்டிடச் செய்ததோ?
அம்மம் மா,ஓ! அகத்தினிக் கின்ற
செந்தமிழ்ச் சீருறைச் செவ்வியல் பாக்கள்!
எந்தநாட் டறிஞரும் ஏற்றிடும் இலக்கியம்!
உலகத் திற்கே ஒப்பிலாக் காதல்
இலக்கணம் இலங்கிட இயம்பிய பாடல்
“யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே!”
வாடிய பயிர்கண்டு வாடிய தாக
ஈடிலா வள்ளலார் இயம்பிய தறிவோம்!
பயிர்களும் மரஞ்செடி படர்கொடி வகைகளும்
உயிருடை யனவே உணர்ந்துளோம், உண்மை.
தன்தாய் வித்தித் தழைத்த மரத்தை
இன்தமக் கையிவள் என்றே நாணி
காதலற் சேரவோர் கரவிடம் தேடிய
காதலி கூற்றைக் கனித்தமிழ்க் கழக
‘நற்றிணை’ப் பாடல் நமக்குக் கூறிடும்!
எற்றைக் கும்இது ஈடிலாப் பாடல்!
அன்புதோய் காதலை அகத்திணை நூல்கள்
என்பும் ஈர்க்கும் இனிமையிற் கூற
மறமும் கொடையும் மற்றுமெய் யறிவின்
திறமும் உரைக்கும் புறநா னூறு!
செந்நா அவ்வை அந்நா ளதியமான்
மன்னன் மறத்தைச் சொன்ன திறமிது:
“களம்புகல் ஓம்புமின், தெவ்விர்! போரெதிர்ந்து
எம்முளும் உளனொரு பொருநன்; வைகல்
எண்தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த காலன் னோனே!”
மங்கையர் மறவுர மாட்சி விளக்கும்
பொங்கிடு முணர்வு பொற்பா பலவே!
“சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்...”
எற்றைக்கும் மறக்க இயலாப் பாடல்!
காரி பாரியோ டோரி குமணன்
வாரி வழங்கிய வண்மை விளக்கும்
சீருறு பாக்கள் செழிப்புறக் காண்கிறோம்!
ஒருதலை யாக உலகிற் குரைக்கும்
ஒருவரி கணியன் உளத்தெழுந் துரைத்தது
“யாதும் ஊரே யாவரும் கேளிர்”
தீதெலாம் அறுக்கும் தேர்வுரை இதற்கிணை
எங்குள தென்றே யாவரும் வியப்பர்!
மங்காப் பெரும்புகழ் தங்கிடும் தமிழ்ப்பா!
“ஓர்இல் நெய்தல் கறங்க ஓர்இல்
ஈர்ந்தண் முழவின் பாணி த்தும்ப...”
தண்டமிழ்ப் புறப்பா கண்டுகேட் டிருப்பீர்!
“உண்டா லம்மயிவ் வுலகம்” எனும்பா
‘புகழெனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்’ என்னும்!
இன்னொரு பாடல் இயம்பிடும் இன்னெறி
பொன்றா உலகிற் பின்றிடாப் பொன்னெறி!
“நல்லது செய்தல் ஆற்றீ ராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்” என்பதே!
எடுத்தெடுத் துரைப்பின் எல்லாப் பாவையும்
அடுத்தடுத் திங்கே அடுக்கிட நேரும்!
கழக இலக்கியக் கவினுறு சால்பு
பழகிப் படித்துப் பயனுற வேண்டும்!
நம்மிருப் பென்ன? நாம்யார்? அறிந்தே
செம்மாப்பு உணர்வில் செறிவுற வேண்டும்!
செழுந்தமிழ்ச் சிறப்பில் அழுந்த மூழ்கி
எழுச்சியும் உணர்ச்சியும் எய்திட
இனிக்கும் கழக இலக்கியம் பயில்வோம்!
thamizhanambi44@gmail.com
*****************************
திரவநீர் கனவுகள்
- நட்சத்திரவாசி -
உயிரின் நந்தவனத்தைக் கொளுத்திப்
போகுமிந்த தென்றல் காற்றுக்கு
அந்தியில் ஏனிந்த பாளும் நிறம்
அதன் நறுமணத்தின் புகைச்சுடர்
கண்களில் தீபமேற்றுகிறது ஒருநாள்
மறுநாளோ கொடும்பனி இழைத்து
மேனியின் வெப்பக்காட்டுக்குள்
போர்கோலம் செய்கிறது
உனது மூச்சுக்காற்றை மெல்ல இறக்கி
வசியம் செய்கிறதன் சப்த நாடிகள்
திரவநீர் கனவுகளை கோப்பைகளில்
நிறைத்து என்னை இன்றிரவு விருந்துண்ண
அழைக்கிறாய்
அதன் போதையின் வர்ணஜாலங்களில்
விரிகிறது நம் உலகம்
தொடுமொரு தூரத்தில்
கையளவு கோப்பையும் தள்ளாடி போகும்
மணல்திட்டுகளில் ஊழி தீயை எரித்து
காத்திருக்கிறது உன் பொழுது
காற்றை நீ நகங்களால் கீறி
ராகங்களை மெல்ல எழுப்புகிறாய்
இனிய நாதங்கள் தாரை வார்க்குகையில்
காற்றின் கரம் பிடித்து நடனம் ஆடுகிறாய்
தனிமையில் உயிர்கோலம் இழந்து
முகம் வாடிய கந்தக கண்களை
பார்க்க நாட்டமில்லாது
புயலாய் மாறி பெரும் புழுதியை
இறைத்து சாம்பலாக்கினாய் இவ்விரவை.
mujeebu2000@yahoo.co.in
*****************************
மதியழகன்
(மன்னார்குடி, தமிழ்நாடு ) கவிதைகள்!
நல்விடியல்
விடியலில் சேவல் கூவுகிறது
குயில் தன் இணையைத் தேடுகிறது
சூரியக் குளியலில் மலர்கள் மலர்கின்றன
வானம்பாடி விடியலை வரவேற்று
தோடி ராகம் பாடுகிறது
குழந்தைகளின் கனவில்
கடவுள் விடைபெற்றுக் கொள்கிறார்
புல்லின் இதழ்களிலுள்ள பனித்துளிகள்
காற்றோடு கரைந்து செல்கின்றன
புவனம் புத்துயிர்ப்புடன் இயங்குகிறது
புண்ணியம் செய்தவர்கள்
காண்பார்கள் நல்விடியலை நாள்தோறும்.
ஆசைகளும் ஆச்சர்யங்களும்
ஒன்றுக்கொன்று இணையாகச்
செல்லும் இருகோடுகள்
மறையும் வரை
குழந்தைகளை குதூகலப்படுத்தும்
வானவில்
கிராமங்களில் இன்றும்
வியப்புடன் பார்க்கப்படும்
வானூர்தி
யானையைப் போல்
பிளீறிடலுடன் வரும்
வெள்ளைக்காரன் பரிசான ரயில்வண்டி
திருவிழா அணிவகுப்பில்
மனிதர்களை விட வரிசையில்
கனக்கச்சிதமாக அணிவகுத்து நிற்கும்
கோயில் யானைகள்
வானுயர
வீதியில் பிரம்மாண்டமாய்
உலா வரும் ஆழித்தேர்
வெள்ளித்தட்டினைப் போல்
இரவின் இருளைக் கிழித்து
வெள்ளொளி பரப்பும் நிலா
ஆகாயத்தின் ஆயிரம் கண்களாய்
எங்கெங்கும் வியாபித்திருக்கும் விண்மீன்
இவை பார்க்கப் பார்க்க சலிப்பதே இல்லை
நதியில் தள்ளாடும்
பரிசல் போன்ற வாழ்வில்.
பூனைகளுக்கு மட்டிலுமான
குணங்கள்
மியாவ் என்ற சத்தம்
வயதானவரைக் கூட
வசியம் செய்திடும்
மீசையைப் பார்த்தவுடன்
மிரட்சி வராமல்
கொஞ்சுவதற்கு ஆசை வருவது
பூனைகளுக்கு மட்டும் தான்
பூனைகளைத் தவிர
வேறெவருக்கு இருக்கிறது
இருளில் சுடர்விடும்
கண்கள்
தங்கள் வீட்டில்
எலி இருக்கிறது
என்பதை சாக்காய் வைத்து
ஆசையாய்
பூனை வளர்ப்பவர் பலர்
கரடி பொம்மை மாதிரி
பூனைகள் எப்பவும்
குழந்தைகளுக்கானவை
மியாவ் மியாவ் சத்தம்
எத்தனை குழந்தைகளின்
அழுகையை நிறுத்தி
அவர்களை சாப்பிடச்
செய்திருக்கிறது
முழுவதுமான
வெண் நிறப்பூனை
பிடிக்காது
அதில் கொஞ்சம்
கறுப்பு அல்லது சாம்பல் நிறம்
கலந்திருந்தால்
அக்குட்டிகளுக்கு
ஏகப்பட்ட கிராக்கி
மொத்தத்தில்
பூனைகளற்ற வாழ்க்கை
குழந்தைகளில்லா
வீட்டிற்குச் சமம்.
mathi2134@gmail.com
*****************************
மகிழ்ச்சிப் பாதை.
- வேதா. இலங்காதிலகம் (ஓகுஸ், டென்மார்க்.) -
அறிவுப் பாதை வழியேகும்
அன்பு நூலகம் சென்றிட
அகந்தையற்ற அகநிலை கொண்ட
அக்கறைப் பாதை தேவை.
அங்கீகாரப் பாதைத் தெரிவு
அகமகிழும் பாதையாக வேண்டும்.
செந்நெறி விலகிய பாதையில்
செல்லும் பயணம் தொடராது.
செழிப்பில்லாப் பாதை விரிப்பில்
விழிபிதுங்கும் சுத்த சுவாசம்.
செழிப்புடை செயற்பாட்டு ஏற்பாடு
செவ்வழிப்பாதையாய் அமையும்.
குருட்டுப் பாதைக்கும் ஒரு
குறியீட்டுப் பலகை உண்டு.
குறிப்பாலுணர்ந்து வெற்றி மனிதன்
குறி தவறாது பயணிக்க வேண்டும்.
குருடாகிப் பயணிக்கும் மனித
குணாதிசயங்கள் மிக வியப்பு!
தோப்பாகும் பாதை நிழல்
தோகை விரித்து வரவேற்கும்.
தோன்றும் சிந்தனைக்கு விலங்கிடாத
தோட்டம் தோதான தோற்றுவாய்.
வேம்பாகக் கசந்து பிரியத்தின்
வேரறுபடாப் பயணமே வெற்றி.
வித்தகப் பாதை விளைநிலங்கள்
வியாபித்துள்ளது வியனுலகில்
வித்தை செய்யும் பாதைக்கு
சொத்தையற்ற தெரிவு தேவை.
விருப்பப் பாதைத் தெரிவிலே
விளைவது என்றும் மனமகிழ்வே!
21-10-2010.
kovaikkavi@gmail.com
*****************************
திமிர்க் காற்றும், விளை நிலமும்
- ராம்ப்ரசாத் ( சென்னை ) -
இடம்பெயர்ந்தறியா விளைநிலத்தை
தேடி வந்து விதைகளைத் தூவிச்செல்கிறது
வஞ்சக வானம் விதைத்த
பெருஞ்சீற்றத் திமிர் பிடித்த காற்று...
பாலின வேறுபாட்டின் மங்கலான ஒளியில்
நெல்லெனப் பதரைத் தாங்கிய விதைகளை
விழுங்கி பசலை கொள்கின்றது
விளை நிலம்...
விதைக்கப்பட்ட விதைகள்
பதரென உமிழ்கின்றன
ஒரு வீணடித்த தலைமுறையை...
ஆங்கொரு மூலையில்,
விளை நிலங்களை ஒத்துவிடும்
தலைமுறையை தேடி உருவாகிறது
சீற்றத்திமிர் கொண்ட காற்று
மிகச்சிறியதொரு சுழலென...
- ramprasath.ram@googlemail.com
*****************************
ஈரம்
- யுகநிதி -
ஏழைகளின்
இதயம் மட்டுமல்ல
அவன்
வயிறும்கூட
ஈரமாகவே இருக்கிறது...
பலநேரங்களில்
அவன்
பசியைப்போகுவது
ஈரத்துண்டுதானே..!
pmanivannan558@gmail.com