| 
    
    
     அரவிந்தம் 
    நனைத்த பொழுதுகள்
 - நட்சத்ரவாசி -
 
 என் பால்ய நதியின் நீரருவி
 பாய்ந்து வழிகிறது
 ஒவ்வொரு பொழுதிலும் புன்னகை பூத்து
 நண்பனாய் வந்து முதலில்
 சேர்ந்து கொண்டவன் நீ
 எனது பிஞ்சு கைகளைப் பிடித்து
 முத்தம் தந்த சூடு இன்னும்
 தகித்து முடியவில்லை
 இலக்கணங்களை புரட்டி
 எழுது கோலெடுத்து மை எழுதினாய்
 எனது கண்களில்
 ஒரு நிரந்தரச் சித்திரம் போல
 இடையில் சிறு பொழுதொன்றில்
 அழுது கொண்டே அஜீத்தும்
 நம்ம்மிடையே நின்று கொண்டு
 முகங்களை பார்க்கிறான்
 அப்போது தான் அந்த தோணி
 உருவானது
 நம் மூவரையும் சுமந்து கொண்டு
 சீறிப் பாய்ந்து முன்னே செல்கிறது
 காற்றில் கலந்து வரும் வாசனையில்
 அரவிந்தம் எப்போதும் நினைத்துக்
 கொள்ளும் பொருட்டு
 எங்கோ ஒரு மூலையில்
 இடவலம், அற்று.
 
 mujeebu2000@yahoo.co.in
 
    நகரத்துப் புறாவும், நானும்! 
      
    - வ.ந.கிரிதரன் -
     
    நள்ளிரவுப் பொழுதொன்றில்'மான்ரியால்' பயணிப்பதற்காய்
 
    நிற்கிறேன் நான் நகரத்துப் பேரூந்து 
    
   
    நிலையத்தே. 
    நள்ளிரவில் படுத்துறங்கும் புள்ளொன்றுஎன் முன்னே விரிந்திருந்த நகரத்துக்
 காங்ரீட் பரப்பொன்றின்மீது வந்தமர்ந்தது:
 மாடத்துப் புறா.
 ஊர் தூங்குமிரவில், நள்ளிரவில்
 சயனிக்கும் இந்தப் புள்ளும்
 சஞ்சரிக்கும் மண்ணுக்கொப்ப
 மாறிற்று போலும்.
 நடப்பதும், பறப்பதும், கொத்துவதும்
 மீண்டும் பறப்பதும், நடப்பதும்,
 கொத்துவதுமென
 நகருமதனிருப்பும்
 வழக்கம்போல்
 படைப்பின்
 நேர்த்தியிலெனையிழந்த
 என் நெஞ்சினைத் தாக்கின.
 அண்ணாந்து பார்த்தேன்.
 தொலைவில்
 மதியும் சுடருமென இருளில்
 விரிந்திருந்தது என்னைச் சுற்றிப்
 படர்ந்திருந்த பெருவெளி.
 உள்ளும்
 விரிந்திருந்த அவ்வெளியின்
 விரிவுற்குள்
 நடனமாடிடும் அடிப்படைத்
 துகள்களின்
 ஆட்டமுமெனை மயக்கிட
 நினைத்தேன் நான்
 இருப்பினைத் தக்க வைப்பதற்காய்
 இங்குளைவது
 அந்தப் புள் மட்டுந்தானா?
 அச்சமயம்
 இயங்கும் வெளியுமதன் விரிவும்
 இருப்பினாட்டத்தில்
 விளையும் பொருளும் கண்டு
 அதிசயித்தேன்..
 இங்கு விரிவதும், அசைவதும்,
 உதிப்பதும் , மறைவதும், பயனாய்
 விளைவதும், உளைவதனைத்துமே
 உணர்வினுள்ளதொன்றா? அன்றி
 அப்பாலுமுள்ளதுண்மையா?
 நள்ளிரவில், நகரத்துப் பேரூந்து
 நிலையமொன்றின்
 நடைபாதையில்,
 நகரத்துப் புறாவொன்றின்
 நகர்வென் சிந்தையிலேற்றிய
 பொறியுடன் தொடர்ந்தேன்
 என் பயணத்தை.
 
      எந்த நாடும் எனக்குச் 
  சொந்தமில்லை- -நடராஜா முரளிதரன் -
 
   எந்த நாடும் எனக்குச் சொந்தமில்லை
 அந்த அவாவினை
 என் நினைவின் இடுக்கிலிருந்து
 பிடுங்கியெறிவதையே
 என் எதிரிகளும்
 என்னவர்களும்
 இடைவிடாது புரியும்
 தொழிலாகக் கொண்டுள்ளார்கள்
 
 எனது கனவுகளின் போதே
 சாத்தியமாகியுள்ள
 அந்த நினைவுப்படலத்தை
 எனது அன்புக்குரியவளே
 நீயும் சிதைத்து விடாதே
 
 மூடுண்ட பனியில்
 அமிழ்ந்து போய்
 சுவாசம் இழந்துபோய்
 நான் தவிப்பதுவாய்
 நேற்றும் ஓர் கனாக் கண்டேன்
 
 கோடை தெறித்த வெய்யிலில்
 கருகும் உயிரினத்துக்கான
 உஷ்ணவெளியில்
 பிறந்த நான்
 கனவுகளில்
 உயிர் பிழைப்பதாய்
 நீ நம்புவாய்
 ஆனால்
 
 எனது மண்ணிலிருந்து
 நான் இடம்பெயர்க்கப்பட்டபோது
 எனது மண்ணின் சில துணிக்கைகளும்
 என்னோடு ஒட்டிக்கொண்டு
 விலக மறுத்து
 சகவாசம் புரிவதை
 யாருக்கு நான் உணர்த்துவேன்
 
 nmuralitharan@hotmail.com
 
 ப.மதியழகன் ( திருவாரூர் மாவட்டம்) கவிதைகள்!
 
   
  1. தெய்வத் தாரகை
 எங்கெங்கு தேடிடினும்
 பாவை, உன் போல வருமோ
 திக்கெற்று அலைகையில்
 நிழல் கொஞ்சம் தருமோ?
 வாடி நின்ற போது
 கலைகளால் ஞானத்தாகம் தீர்த்தாய்
 கலங்கி நின்ற போது
 ஆதரவாய் கை கொடுத்தாய்
 வீழ்ந்து கிடந்த போது
 நம்பிக்கை கொடுத்து மீண்டும்
 உயிர்கொடுத்தாய்
 எனை தொலைத்து அலைந்த போது
 இம்மண்ணில் எனக்கோர்
 முகவரி கொடுத்தாய்
 அவமானங்கள் உள்ளத்தை நொறுக்கிய போது
 உனது வார்த்தைகளின் ஈரம்
 அதனை ஒட்டவைத்தது
 காலம் கொடுத்த காயங்களுக்கெல்லாம்
 மருந்தாய் நீ இருந்து,
 எனையொரு மனிதனாய் உருவாக்கினாய்
 உதாசீனப்படுத்துபவர்களை அலட்சியப்படுத்தி
 லட்சியத்தை நோக்கி முன்னேறச் சொன்னாய்
 ‘முயற்சிகளே முடிவுபெறாத வெற்றிகள்’
 என்று நெஞசத்தில் பதிய வைத்தாய்
 ‘மழைநீருக்கு வாய்க்கால்கள் வெட்டப்படுவதில்லை
 பறவைகளுக்கு கலங்கரை விளக்கம்
 அமைக்கப்படுவதில்லை
 விதைக்கு எப்படி முளைவிட வேண்டுமென்று
 யாரும் பாடம் நடத்துவதில்லை’-
 என்று ஊக்கம் கொடுத்து உறுதுணையாய் நின்றாய்
 முயற்சி எனும் துடுப்பை வளித்து
 வாழ்க்கைக் கடலை
 துணிந்து கடக்க முனைந்தபோது
 உருவமிழந்து ஞானச்சுடராய்
 எனதுள்ளத்தில் நீ கலந்தாய்
 நித்தமும், என் குரல் வானம் எட்டும் வரை
 உரக்கச் சத்தமிட்டுக் கேட்கின்றேன்
 நீ வறியவர் தேடும் செல்வமோ
 குடும்பஸ்தன் ஏங்கும் மன நிம்மதியோ
 கூண்டுக்கிளியின் வானவெளியோ
 முதி்ர்கன்னியின் திருமணக் கனவோ
 மரங்கள் வேண்டி நிற்கும் மழையோ
 ராமனின் பேராண்மையோ
 சீதையின் பொன் எழிலோ
 பாஞ்சாலியின் அவிழ்ந்த கூந்தலோ
 பெண் உருவில் இம்மண்ணில் வந்து உலாவும்
 விண்ணவளோ?
 விண்ணவளோ?
 விண்ணவளோ?
 
 2. தேவியின் சுயம்வரத்திற்கு தேவன் வந்தான்
 
 பார்வைகளிலே தினம் பசியாறி
 பல பொழுதுகள் கழித்தேன்
 உனது புன்னகையில் புனிதம் பெற்று
 சுவர்க்கத்தில் வசித்தேன்
 உனது காற்சிலம்பின் ஒலியைக் கேட்டு
 ஆனந்த தாண்டவம் புரிந்தேன்
 உனது காலடியோசையை நித்தமும்
 கேட்டிட ஏங்கி தவம் பல புரிந்தேன்
 இராவணன் சிறையெடுத்தாலும்
 மறுநாளே மீட்டுனை வருவேன்
 காலன் உன் மீது கைவைக்க முனைந்தாலும்
 கவியாயுதத்தால் அவனிடம் போர் பல புரிவேன்
 உனைச் சேராமல் மடிந்தேன் என்றால்
 உனது மனப்பிரபஞ்சத்தில் சிறு விண்மீனாக
 நான் என்றென்றும் நிலைத்திருப்பேன்
 உன் நினைவுகளாலே
 இரவு வானத்தில் பிரகாசம் பொங்க சுடர்விடுவேன்
 நீ சம்மதம் சொல்வாய் எனில்
 உனை இடப்பாகத்தில் வைத்து
 இவ்வுலகையே நான் ஓரடியால் அளந்திடுவேன்
 நீ விரும்பிக் கேட்டாய் என்றால்
 உயிரை மட்டுமல்ல என் தமிழையே
 வெகுமதியாக நானுனக்கு தந்திடுவேன்.
 
 mathi2k9@gmail.com
 
 ராம்ப்ரசாத் கவிதைகள்
 
   
 1. அன்பு என்பது...
 
 செடிகள் துளிர்க்குமென்று
 மழை பொழிவதில்லை,
 கடல் அலை
 கால் நனைக்குமென்று
 காற்று வீசுவதில்லை,
 பலன் கிடைக்குமென்று
 அன்பு செலுத்தப்படுவதில்லை...
 துளிர்க்க ஏதுமில்லா
 பாறையையும் மழை
 நனைக்காமல் விடுவதில்லை
 மேகங்கள் ஒன்று
 திரண்டால்...
 கலைக்க காலடித்தடம்
 இல்லாவிடினும் அலைகள்
 மோதாமல் விடுவதில்லை
 காற்று வீசினால்...
 
 அதுபோல்,
 அன்பென்பது எதிர்பார்ப்புகளேதும்
 இல்லாவிடினும்
 மழையாய்
 பொழியாமல் இருப்பதில்லை
 மனதிலுண்மை அன்பிருந்தால்...
 
 2. பருந்து வாழ்க்கை
 
 இட்ட முட்டைகளை
 மரப்பொந்தில்விட்டு
 இரை தேடி
 உயர பறக்குமாம் பருந்து...
 
 இத்தனை உயரம்
 பறப்பவன் தானொருவனே
 என் இறுமாந்து
 கொள்ளுமாம் தன்னை மறந்து...
 
 அப்போது,
 மரப்பொந்து முட்டைகளைப்
 பாம்பொன்று வந்து
 கவ்வி செல்லுமாம் அதுவே,
 அதன் பசிப்பிணிக்கு மருந்து...
 
 அப்படித்தான் கவ்வப்பட்டு
 காணாமல் போகிறது
 பணம் சமைப்போரின்
 சொந்த வாழ்க்கையும்...
 
 ramprasathtcs@gmail.com
 |