| கவலுகின்றேன்! 
 - முனைவர் மு.இளங்கோவன்,  புதுச்சேரி -
 
 
  
  மண்தரையின் மீதமர்ந்து வீடு கட்டிமணல்சோறு சமைத்தபடிச் சிறுவ ரோடு
 பெண்மகளிர் எனக்கூட்ட வேண்டாம் என்று
 பெருங்கோபம் காட்டியவா(று) ஓடி,வந்து
 கண்கலங்கி ஏமாற்றிக் களித்தேன்: இன்று
 கடமைபல எனையமுக்கக் கண்ணீர் சிந்திப்
 புண்கொண்ட நெஞ்சனெனப் பொறுமை இன்றிப்
 புவிவாழ்வை வெறுத்தேநான் கவலுகின்றேன் !
 ஊர்சுற்றித் திரிந்திருந்தேன்; உண்மை காணேன்;
 உழைப்பின்றி வாழ்ந்திருந்தேன்; உற்ற நண்பர்
 பேர்கெட்டுப் போமாறு பிழைகள் செய்யப்
 பிடித்திழுத்தப் போதிலெல்லாம் மகிழ்ந்திருந்தேன்;
 நீர்கெட்ட பின்னாலே மக்கள் யாரும்
 நின்றதனைச் சுவைப்பாரோ? அதனைப் போலச்
 சீர்கெட்டுச் சிறைப்பட்டு வாழுகின்றேன்!
 சிந்தனையோ இல்லாது கவலு கின்றேன்!
 
 மெய்யெழிலின் குழந்தையெனை நெருங்கி வந்து
 மினுக்குகின்ற உடலழகைத் தடவிப் பார்த்துக்,
 கையினிலே பொன்பொருள்கள் வலிய தந்து
 காட்டாற்றின் அன்புதரும் உறவோர் தம்மைப்
 பொய்பேசிப் புறம்பேசிப் புன்சொல் சொல்லும்
 புலைஎண்ணம் என்றனுக்கு வந்த ஆற்றைக்
 கையூன்றி மெய்சோர்ந்த இந்த நாளில்
 கண்டுகண்டு யானிங்கே கவலுகின்றேன்!
 
 எடுக்கின்ற செயலிலெலாம் வெற்றி வேண்டி
 எத்தனையோ முறைநானும் முயன்றேன்; தோற்றேன்;
 விடுக்கின்ற விழைவுணர்வு நொந்து நெஞ்சம்
 வெந்தவனாய் நான்வாடிச் சாகின் றேனே!
 மிடுக்கெல்லாம் சிறுபோதில் கலைந்து போக
 மேலெண்ணம் குழிவீழச் சூம்புகின்றேன்!
 கடுக்கின்ற பகைவர்களே! காலம் மாறும்!
 கனல்கின்ற உணர்வடக்கிக் கவலுகின்றேன்!
 
 மின்னஞ்சல்: 
  muelangovan@gmail.com
 இணையம்: 
  www.muelangovan.blogspot.com
 
 துரை. மணிகண்டன் கவிதைகள்!
 - துரை. மணிகண்டன், விரிவுரையாளர், தமிழாய்வுத்துறை,
 தேசியக்கல்லூரி, திருச்சிராப்பள்ளி-620 001, தமிழ்நாடு,  இந்தியா. -
 
 
  மரங்கள்!காற்றை உற்பத்திச் செய்யும் தொழிற்சாலைகள்
 மனிதன் நல்காற்றைச் சுவாசிக்கத்
 தன்னைத் தியாகம் செய்யும் மெழுகுவர்த்திகள்
 அரசியலுக்கு அப்பாற்பட்ட ஆலமரம்
 சாதி மத பேதமின்றி அனைத்து மக்களுக்கும்
 அடைக்கலம் தரும் அற்புத பிறவிகள்
 காற்றைத் தூய்மைப்படுத்தும் வடிகட்டிகள்
 பறவைகளின் பஞ்சு மெத்தை
 தேனீக்களின் தாஜ்மகால்
 அந்தந்த கிராமத்தின் அதிசய கலைப்பெட்டகம்!
 வளர்க்கிறார்கள் எங்களை
 இன்றைய இளையதலைமுறைகள்
 அவர்களைப் போல நாங்களும் வளர்கிறோம்
 காலத்தினால் செய்த நன்றியை நாங்கள் படித்துள்ளோம்
 எங்களை வெட்டுபவர்களை விட்டுவிடுகிறோம்
 ஏனெனில் இன்னா செய்தாரே ஒருத்தர் ... என்ற குறளை
 எங்கள் தலைமுறைகள் கற்றுக்கொடுத்துள்ளனர்.
 மொத்தத்தில் நாங்கள் காற்றின் குழந்தைகள்
 
 மீன்கள்!
 
 மீன் தண்ணீரின் பிள்ளைகள்
 அயிரைக் குழந்தைகள் மண்ணுக்குள்
 ஓடிபிடிச்சு விளையாடுகின்றன.
 சேற்றைத் தன் மீது ப+சிக்கொள்ளும்
 எருமையைப்போல் குறவை மீன்கள் சேற்றில் புதையல் தேடும்
 கெண்டை மீன்கள் உயரம் தாண்டும், கைப்பந்து விளையாடும்
 சின்ன மீன்கள் குழந்தைகளுடன் கும்மாளம் போடும்
 எங்களைப் பிடிக்கும் சிறார்களிடம்
 கண்ணுக்கு அகப்படாத நட்சத்திரம் போல
 ஓடி மறைவோம்
 எங்கள் முன்னோர்களைப் பிடித்தவர்கள்
 அவர்களோடு சென்றுவிட்டார்கள்
 இன்று அவர்கள் குழந்தைகளும்
 நாங்களும் புலம்பெயர்ந்த தமிழர்களைப் போல
 ஒன்றுகூடி வாழ முற்படுகிறோம்.
 
 மண்புழு!
 
 என் பக்கத்து வீட்டு பெரியப்பா
 காலையில் வயலுக்குச் சென்று
 உழவனின் நண்பன் மண்புழுவிடம்
 என் இல்லம் நலம். இல்லத்தில் உள்ளவர்கள் நலம்
 நீ நலமா என்று விசாரிக்க
 மண்ணைப் பொன்னாக்கும் என்னை - இந்த
 மண்ணிலிருந்தே அழிக்க முற்படுவோரை
 என்னவென்று கூற ...
 உமது உறவினர்களைக் காக்கும் என் தோழனே!
 எங்கள் உறவினர்களை யார் காப்பது.
 நீங்கள் இந்த ப+மியின் மனிதர்கள்
 நாங்கள் இந்த மண்ணின் குழந்தைகள்
 ஒன்று மட்டும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்
 முதலில் நாங்கள் செத்தால் பிறகு மண் சாகும்
 இறுதியில் நீங்களும் ...
 
 email : gunama73@yahoo.co.in
 
 திருப்பூர் ம. 
  அருணாதேவியின் கவிதைகள்!
 
  கிழிந்து போனக் கைப்பையைத் தைக்கவீதிதோறும் கடைகள்.
 அறுந்த செருப்பை
 உடனே தூக்கி எறிய முடியாது.
 தைத்து தைத்து போட்டுக் கொள்ளலாம்.
 பர்ஸ் வாய் பிளந்து தெரிந்தாலும்
 தைத்துக் கொள்ளலாம்.
 வளையல்களை ஒட்டிக் கொள்ள
 உயர்ந்த பசை உள்ளது.
 பிய்ந்த நகத்தைக் ஒட்டக்கூட
 அறுவை சிகிச்சை உள்ளது.
 " இது எல்லாவற்றையும் சேர்க்கும்-
 உடைந்த இதயத்தைத் தவிர"
 என்கிறது ஒரு பசை விளம்பரம்.
 கணவனுடன் பிணக்கு என்றபோது
 " பிரிந்து விடு, போதும் சமரசம்
 புறபட்டு வா " என்கிற என் தோழியே
 நீ சிநேகிதிதானா.
 கைப்பையைக் கேட்பவன் கூட
 சில சமயம் காசு கேட்பதில்லை.
 
 
 2.
 
 ஒற்றைக் கீற்றாய் கண்மை
 கால்களை இறுக்கும் சுரிதார்.
 பளிச்சென்ற பவுடர்
 உதட்டில் சாயம்.
 குட்டைத் தலைமயிர்
 இடுங்கிய கன்னம்.
 நகப்பூச்சு.
 ஒல்லியான கவரிங் வளையல்.
 சற்றே உயரம் காட்டும் ஹைகீல்ஸ்.
 செதுக்கிய புருவம்.
 
 எல்லாம் பழசுதான்
 நீதான் புதுசு என்கிறாய்.
 
 
 3.
 
 அறுபதுக்கு நாற்பது அடி வீடு.
 வெளி மூலையில் குப்பைக்கான இடம்
 தாள்கள், இலைகள்
 மக்காத குப்பை
 மக்கும் குப்பை.
 நகராட்சிக்காரனுக்குப் போடவென்று
 மக்காத குப்பை
 மக்கும் குப்பையென
 தனித்தனியேப் பொட்டலங்கள்.
 
 பார்த்துப் பேசி
 கடிதம் பரிமாறி
 நேசம் வளர்த்து
 நகராட்சிக்காரனுக்கு போடும்
 மக்காத குப்பைப் பொட்டலத்தில்--
 நீ சேகரித்ததும்
 நான் கொடுத்ததும்.
 நீ கொடுத்ததும்
 நான் சேகரித்ததும்.
 
 4
 
 புத்தனே
 தியானம் போதும்
 எழுந்திரு.
 யசோதராவின் கனவுகளில் வந்து போகும் ஆண்களை
 விரட்ட வேண்டாமா.
 யசோதராவுக்கு கனவுகள் அபூர்வம்.
 ஆனால் சமீபமாய் வரும் கனவுகளில்
 ஆண்கள் வந்து போகிறார்கள்.
 யசோதராவுக்கு தியானம் பழக்கு.
 அல்லது கை கோர்த்துக் கொள்.
 யசோதராவாகி பார் புத்தனே.
 உனக்கும் அவள் தெரிவாள்.
 அவள் உடம்பை உணர்வாய்.
 தியானம் தனி ஒருவனின் நிம்மதிக்காகவா.
 எல்லோருக்கும் தான்.
 தியானம் என்றால் உலகம்.
 புத்தர் என்றாலும் உலகம்.
 
 புத்தனே தியானம் போதும்.
 
 6.
 
 பேசி நாளாகின்றன்.
 பார்வை கூட
 நேருக்கு நேர் இல்லை.
 கேள்வி கேட்கும்போது
 சுவர் பார்த்து கேள்.
 பதில் சொல்லும் போது
 வானம் பார்த்துச் சொல்.
 மேஜையில் வைக்கப்படும்
 உணவில் சூடில்லை.
 வார்த்தைகளில் வெப்பம் தொடாமல்
 அறைக்குள் நடக்கப் பழகு.
 யாரோ உறவினர்கள் வருகிறார்கள்.
 கேட் திறக்கும் சப்தம்.
 புன்னகை முகமூடியை அணிந்து கொள்.
 சிரித்து வரவேற்பு தா.
 உறவினர் போன பின்
 புன்னகை முகமூடியை கழற்றி எறி.
 அடுத்து
 பக்கத்துவீட்டுக்காரன் அல்லது தபால்காரன்
 வரும் வரை
 புன்னகை முகமூடி
 இருட்டில் கிடக்கட்டும்.
 
 arunaa_devi2007@rediffmail.co.in
 
 தீபாவளி!
 -இமாம்.கவுஸ் மொய்தீன் -
 
   எப்போதோஅழிந்து விட்ட
 அரக்கனுக்காக
 வெடி வெடித்து
 உற்சாகம்
 உவகையுடன்
 இன்னும்
 எத்தனை ஆண்டுகள் தான்
 விழா எடுப்பது?
 
 இன்றும்
 நம்மோடு
 வாழ்ந்து
 கொண்டிருக்கும்
 அரக்கர்களை
 எப்போது தான்
 அடையாளம்
 காண்பது?
 
 வறுமை
 இலஞ்சம் ஊழல்
 அராஜகம்
 மோசடி
 மதவெறி
 தீவிர வாதம்
 அணுவாயுதம் என
 எத்தனை யெத்தனை
 அரக்கர்கள்
 இன்றைக்கும்
 நம் சமுதாயத்தில்...
 
 இவர்களை
 அழித்து விட்டுக்
 கொண்டாடப் போகும்
 தீபாவளித் திருநாள் தான்
 என்னாளோ..?
 அவ்வினிய நாளைச்
 சந்திப்போமா?
 இவ் வினிய
 திருநாளில்
 சிந்திப்போமா?
 
 drimamgm@hotmail.com
 
 புன்னகை மழையே நீ எங்கே?  - 
  தமிழன், நோர்வே -
  பொன் நகைகள்
 கொண்டாடும்
 புன்னகைக்கு
 ஓர் அடையாளம்!
 
 தமிழ் ஈழத்தின்
 தரை மெழுகும்
 நிலவாய்...
 புலம் பெயர்ந்தோர்
 விழிகளிலும்
 தவழ்ந்து வந்த
 பூந்தென்றலாய்...
 எங்கள்
 இதயமெங்கும்
 பூத்துக் குலுங்கிய
 பூந்தோட்டமே!
 
 நீ சென்ற இடமெல்லாம்
 புன்னகை மழை
 பொழிந்து
 உன் தமிழால்
 உலகத் தமிழை
 உயர்த்தினாய்!
 
 எத்தனை செல்வங்கள்
 தமிழில் இருந்தாலும்
 தலைவனுக்கெனவே
 தனித்துவமாய் வாய்த்த
 தமிழ்ச்செல்வா
 எங்கே போனாய்?
 
 இதயத்தில்
 வலிகள் பெருகி
 கண்ணீர் வழிகிறது.
 இமயத்தின்
 இழப்பை எண்ணி
 இதயம் கனக்கின்றது.!
 
 அண்ணா உந்தன்
 புன்னகை
 எமக்கு வேண்டும்
 தமிழீழம் பூக்கும்
 நேரத்தில்
 புன்னகை சிந்த
 நீ வேண்டும்
 வா அண்ணா வா!
 
 வான் கலங்கள்
 அழிப்பின்
 வெற்றிக் களிப்பில்
 மிதந்த எமக்கு
 பெரு வெடியொன்று
 இடியாய்
 விழ்ந்தது ஏனோ?
 
 எரிமலையாய்
 இருக்கும் எம் தலைவன்
 தன் இமைகளில்
 உன்னைச் சுமந்தான்
 தன் ஒற்றைப் பார்வையை
 இன்று இழந்தான்.
 
 புலியாய் உன்
 பாய்ச்சல்கள் இருந்தாலும்
 அமைதி தேடித்தானே
 உலகெல்லாம்
 உன் மனசு பறந்தது!
 
 சோகங்கள்
 எம்மைத் தேடி வந்து
 உதைக்க உதைக்க
 புதுக்கவிதைகளாய்
 பிறக்கின்றோம்.!
 ஆனால்
 மண்ணின் கவிதைகளாய்
 அழுகின்றோம்!
 விழுவதற்காக
 அல்ல
 எழுவதற்காவே!
 
 vaseeharankavithai@gmail.com
   
 பூவுடல் மீதும் 
  கலையாத புன்னகை ....!
 - மட்டுவில் ஞானக்குமாரன் (யேர்மனி)-
 
   
  சிரித்தபடியே மறைந்து போனது
 இந்த இளஞ் சூரியன்...!
 
 கற்றவரோடு
 பேசினால் என்ன
 களிமண்ணை மூளைக்குள்ளே பெற்றவரோடு
 பேசினால் என்ன
 அனைவரையும் ஆட்கொள்ளுவான்.
 
 தமிழ் செல்வா
 உன் வழியையும்
 நீ பேசிய மொழியையும்
 அறிந்து, இருந்தால் நிச்சயம்
 மகிழ்ந்திருப்பார் தந்தை செல்வா.
 
 உலகம் சொல்லியது
 தீர்வுக்குவழி அறந்தான் என்று
 உன் இழப்பு வந்து
 சொல்கிறது
 தீர்வுக்குரிய வழி
 மறந்தான் என்று
 
 ஊன்
 உறக்கம் முழுதையும்
 விடுதலைக்காய் மறந்தான்.
 
 எம்மை மீட்க
 கையில் எடுக்கும் ஒரு வழியும்
 இனி மறந்தான்.
 
 புன் நகையே உன் சிரிப்பு
 போட்டானே பாவி அதை அழிக்க
 வானிலிருந்து வெடிகுண்டு
 நெருப்பு.
 
 தமிழ் செல்வன்
 உலகெங்கும் பேசச் செல்வான்
 தமிழனின் வேதனைகளை
 உரக்கச் சொல்வான்
 உறுதியாக ஈழத்தை வெல்வான்
 என்றெண்ணியதை
 விழுங்கியதே
 சிங்களத்தின் ஊழித் தீ.
 
 கலையவில்லையே தோழனே
 பூவுடல் மீதும் உன்
 புன்னகை .....
 
 maduvilan@hotmail.com
   
 தமிழே! செல்வமே!
 - பட்டுக்கோட்டை தமிழ்மதி -
 
   
  உன்சிந்தனை
 சிரிப்புப் பேச்சால்
 உன் பக்கமிருந்து
 பழகியதாய் உள்ளம்
 
 பழகிய உள்ளம்
 பதறுகிறது இப்போது.
 
 புன்னகைப்பூ சுமந்த
 போராளி நீ
 
 மக்களோடு மக்களாய் வாழ்ந்து
 உன்
 மக்கள் போலவே
 மாண்டிருக்கிறாய்
 வான்வழித் தாக்குதலில்.
 
 அழித்ததை அழித்தீர்களென
 அகம் சிலர்த்தபோது
 அழிக்காத மிச்சம் இருக்கிறதென
 
 நீ
 அவைகளை
 அடையாளம் காட்டியிருக்கிறாய்.
 
 அன்று
 அமைதிப் பேச்சில்
 அவர்களின்
 கத்தலிலும் காதில் விழுந்தது
 உன் அமைதி.
 
 இன்று
 ஒரு அமைதிப்பேச்சை
 வான்வெளியில்
 கிழித்தெறிந்து போயிருக்கிறது
 அவர்களின்
 விமான கத்தல்.
 
 அப்பாவிகளை அழிக்க
 ஆயுதமேந்தியவர்கள் அவர்கள்
 ஆயுதங்களை அழிக்க
 ஆயுதமெடுத்தவர்கள் நீங்கள்.
 
 அந்த
 ஆயுதத்தை விட்டுப் போயிருக்கிறாய்
 
 நீ போனாலும்
 ஆயிரமாயிரம் தமிழ்செல்வங்கள்
 அணிவகுப்பார்கள் என்கிறார்கள்
 
 நீ
 ஆயிரமாயிரம் பேராய் இருந்தாய்
 இனியும் இருப்பாய்
 அத்தனை அத்தனை
 ஆயிரமாயிரம் பேரோடு
 அணிவகுப்பாய் நீ
 உன்
 தாய்மண்
 தமிழீழத்துக்காக
 
 thamizhmathi@gmail.com
 
  பட்டம் வாங்கலியோ!
 - ஈழ நிலா -
 
  
   
  பட்டம் வாங்கலியோபட்டம்….
 ஓடிவாங்கோ…! ஓடிவாங்கோ…!
 ஓழியப்போது…! ஓழியப்போது…!
 
 
 பெயருக்கேற்ற
 பெரிய பட்டம்…
 காசிக்கேற்ற
 கலக்கும் பட்டம்….
 கூட்டங்களில் கூப்பிட
 ‘கூலான’ பட்டம்…
 ‘சிவில’டிக்கத் தக்க
 சிறப்பான பட்டம்…
 
 பட்டம் வாங்கலியோ
 பட்டம்…
 ஓடிவாங்கோ…! ஓடிவாங்கோ…!
 ஓழியப்போது…! ஓழியப்போது…!
 
 
 எழுத்தாள னுக்கேற்ற
 எடுப்பான பட்டம்…
 கவிஞனாயிருந்தால்
 ‘கலர்புல்’ பட்டம்.
 கலைஞனா யிருந்தால்
 கவர்ச்சியான பட்டம்…
 கல்லா திருப்பினும்
 ‘கலாநிதி’ப் பட்டம்;;;…
 
 பட்டம் வாங்கலியோ
 பட்டம்…
 ஓடிவாங்கோ…! ஓடிவாங்கோ…!
 ஓழியப்போது…! ஓழியப்போது…!
 
 வண்ண வண்ணமான பட்டம்
 வகை வகையான பட்டம்
 படித்தவனை பேயனாக்கும்
 ‘பவர்’மிக்க பட்டம்..
 
 பட்டமொன்று வாங்கினாக்கா
 பொன்னாடை இலவசங்க..
 வள்ளுவன் நீயென்று
 வாழ்த்துப்பாவும் தருவமுங்க…
 பிந்தினவங்க இந்த
 பிற்குறிப்ப கேளுங்க…
 
 பழைய அல்லது
 பாவித்தபின் கொடுக்கக்கூடிய
 பொன்னாடைகளை எம்மிடம்
 பொறுப்பாய் தாருங்கள்…
 அமைச்சரை வைத்துப் போர்த்தி
 அழகுபடுத்துவோம்…
 ஆனா லொன்று
 விழாச்செலவை நீங்களே
 விரும்பி யேற்கவேண்டும்!!
 
 kavingerasmin@yahoo.com
 |