நாற்காலி
- முனைவர் கவிதாயினி ச.சந்திரா -
மேசைக்கு
அந்தப்புறம்
உனக்கு ஒரு மதிப்பு !
மேசைக்கு இந்தப்புறம்
உனக்கு வேறு மதிப்பு !
உன்னை வைத்தல்ல
நாற்காலியே !உனக்கு மதிப்பு !
நீ இருக்கும் இடத்தை
வைத்தேஉனக்கு மதிப்பு !
நீ சுழன்றாலோ உனக்கு
தனி மதிப்பு !நாற்காலியே !
மனித அத்தியாயத்தின்
இறுதி நாளில் கூட
உயிரற்ற ஜீவனைச் சுமக்கும்
மனிதாபிமானம் கொண்ட நீ
சில நேரங்களில் மின்சார
நாற்காலியாய் உருமாறி
தூக்குத்தண்டனைக்கு
துணைபோவதும் ஏனோ ?
அனுப்பியவர்:
albertgi@gmail.com
-------------------------------------------------
கனவுதானா தோழா !
- சக்தி -
விடிவு
வரும் !
விடிவு வரும் என்றே
நதிக்கரையோரம்
நடந்து கொண்டே நான் ....
எத்தனை இரவுகள் வந்தன ?
அத்தனையும் விடிந்தன ....
தோழா .... நம் வாழ்க்கையில்
வந்ததா விடிவு ?
கேள்விகள் மட்டும் தான்
எம் நெஞ்சில் எழலாம்
விடைகள் மட்டும்
யார் யாரோ கைகளில் ...
ஒவ்வொரு வருடமும்
ஒவ்வோர் மே மாதம்
தவறாமல் உலகெங்கும்
ஊர்வலங்கள் .... அது மட்டுமா ?
உழைப்போர் அனைவருக்குமாய்
விழாக்களும் கேளிக்கைகளும்.....
தோழா !
நாம் மட்டும் தெருவோரத்தில்
அதே கூழுக்கும், கஞ்சிக்குமாய்
தினம் தினம் வாழ்வோடு போராட்டம்
கைவண்டி இழுத்த தழும்புகள்
தேய்ந்துபோன செருப்பின்
துவாரத்துக்குள்ள்ளே தைத்திடும் முள்
குடிசை வந்தடைந்ததும்
ஆசையோடு அணைத்தேன் மகனை
அப்பா உன் கைகளில் உள்ள தழும்புகள்
உடலைச் சிராய்க்கின்றன
பசியின் சிணுங்கலை ஒர் கணம் மறந்து
வேறோர் சிணுங்கல் என் மழலைக்கு
உலையில் கொதிக்கும் நீருக்குள்
ஓர் பிடி அரிசியைப் போட
என் சட்டைப்பையில்
சிலலறை தேடும் ஆசை மனைவி
பள்ளியில் எழுதும் நோட்டுப் புத்தகத்திற்காய்
பணம் கேட்பதா? இல்லையா? என்று
தயங்கிக் கொண்டே திரைச்சீலைக் கதவோடு
கன்னத்தை உரசிக் கொண்டே
என் முகம் நோக்கும் மகள்
இன்று நேற்றல்ல
அன்று தொட்டு சமுதாயத்தின்
அடிமட்டத்தில் சுரண்டிக் கொண்டே
வாழும் எம் பெயரால்
மேதினக் கொண்டாட்டங்கள்
கனவுதானா தோழா ?
என்று நீயும் நானும்
விடியலைத் தேடி
நாளும் வாடி நிற்கும் இந்த
ஆற்றங்கரையில்
எம் துயர்களை மறந்து
ஆடுகின்றோமோ ? தோழா
அன்றுதான் நமக்கு மேதினம்
ssakthi@btinternet.com
-------------------------------------------------
இரா.இரவி கவிதைகள்!
1. ஹைக்கூ
கோடி நன்மை
கூடி வாழ்ந்தால்
வா என்னவளே
வட்டிக்கு ஆசை
முதலுக்கு கேடு
தனியார் நிதிநிறுவனம்
வயிறு காய்ந்ததால்
விலகியது வெட்கம்
விலைமகள்
வாங்குகிற கை
அலுக்காது
இலஞ்சம்
உலையரிசி வேகுமா?
வாய் கிழிய
மேடைப்பேச்சு
கிணற்றில் விழலாமா?
விளக்கை ஏந்தியபடி
வாக்களிப்பு
விதையொன்று போட்டால்
சுரையொன்று முளைக்கும்
அரசியலில்
உண்டு கொழுத்தால்
நண்டு வலையில் தங்காது
போலிச்சாமியார்
எட்டாப் பழத்திற்குக்
கொட்டாவி விடுவதேன்
ஒருதலைக்காதல்
கடவுளை நம்பினோர்
கைவிடப் படார்
சபரிமலை யாத்திரைவிபத்து?
-------------------------------------------------
2. திருக்குறள் வழி வாழ்ந்தால்
வாழ்க்கை இனிக்கும்
- கவிஞர் இரா.இரவி -
திருக்குறள் வழி வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும்
திருக்குறள் வழி நடந்தால் வாழ்க்கை சிறக்கும்
தான் என்ற அகந்தையை அகற்றுவது திருக்குறள்
நான் என்ற செருக்கை அழிப்பது திருக்குறள்
உயர்ந்த ஒழுக்கத்தை உணர்த்திடும் திருக்குறள்
ஓயாத உழைப்பைப் போதிக்கும் திருக்குறள்
முயற்சியை முன் நிறுத்திடும் திருக்குறள்
அயற்சியை உடன் அகற்றிடும் திருக்குறள்
ஆறாவது அறிவை பயிற்றுவிக்கும் திருக்குறள்
ஆராய்ச்சி அறிவை வளர்த்திடும் திருக்குறள்
மனிதனை மனிதனாக வாழவைக்கும் திருக்குறள்
மனிதனின் மிருகக்குணம் போக்கிடும் திருக்குறள்
மனிதனை அறிஞனாக ஆக்கிடும் திருக்குறள்
மனிதனின் அறியாமையை நீக்கிடும் திருக்குறள்
மனிதனை சான்றோனாக செதுக்கிடும் திருக்குறள்
அறிவியல் அறிவை உருவாக்கும் திருக்குறள்
அப்துல்கலாமை உயர்த்தியது திருக்குறள்
உலக இலக்கியத்தின் இமயம் திருக்குறள்
உலகில் ஈடு இணையற்ற நூல் திருக்குறள்
உலக மனிதர்கள் யாவருக்கும் வாழ்க்கையை
உணர்த்தும் ஒப்பற்ற உயர்ந்த திருக்குறள்
இல்லறம் நல்லறமாக விளங்கிட வேண்டும்
அன்பும் அறனும் அவசியம் வேண்டும்
உயர்ந்த தவத்தை விட சிறந்தது
ஒழுக்கமாக இல்லறத்தில் வாழ்வது
பிறர் பழிக்கும் தீமைகள் இன்றி
பிறர் போற்றும் வாழ்க்கை இல்லறம்
பூ உலகில் செம்மையாக வாழ்பவன்
வானுலக தேவர்களை விட சிறந்தவன்
வாழ்வது எப்படி என்பதை அறிய
வளமான திருக்குறளைப் படியுங்கள்
பாடாத பொருள் இல்லை திருக்குறளில்
சொல்லாத கருத்து இல்லை திருக்குறளில்
1330 திருக்குறள் மனப்பாடம் செய்வதைவிட
10 திருக்குறள் வழி நடப்பது நன்று
-------------------------------------------------
3. புவி வெப்பமயமாதலைத் தடுப்போம்
காந்தியத்தைக் கடைபிடித்தால் நலம் பயக்கும்
கைத்தொழில் பெருகுதல் வளம் சேர்க்கும்
மின்சார பயன்பாட்டை குறைத்திட வேண்டும்
மனித ஆற்றலைiயே பெருமளவு பண்படுத்திட வேண்டும்
எரிபொருள் சிக்கனம் என்றைக்கும் வேண்டும்
எண்ணெய் வளம் வருங்காலத்திற்கும் வேண்டும்
மரம் வெட்டுதல் தடை செய்திட வேண்டும்
மரம் வளர்த்தல் கடமையாக்கிட வேண்டும்
சுற்றுச்சூழல் மாசு இன்றி காத்திட வேண்டும்
சுகாதாரமான காற்றை சுவாசித்திட வேண்டும்
இயற்கையை இயற்கையாக இருக்க விட வேண்டும்
இயற்கையை இல்லாமலாக்குவதை நிறுத்திட வேண்டும்
செயற்கையை முடிந்தளவு அகற்றிட வேண்டும்
செயல்கள் மனிதனால் நடந்திட வேண்டும்
விவசாய உற்பத்தியை பெருக்கிட வேண்டும்
விசம் கக்கும் தொழில்கள் நிறுத்திட வேண்டும்
இயற்கை உரங்களை பயன்படுத்திட வேண்டும்
இரசாயன உரங்களை தவிர்த்திட வேண்டும்
உடலுக்கும் உலகிற்கும் நலம் மிதிவண்டி
உலகம் செழிக்க குறைப்போம் விசைவண்டி
மகத்தானது மனித ஆற்றல் உணர்ந்திடுவோம்
மாசுக் கட்டுப்பாட்டிற்கு உதவிகள் புரிந்திடுவோம்
வெப்பமயமாதலைத் தடுக்க எல்லோரும் உதவிடுவோம்
வெப்பமாகும் செயல்களை உடன் நிறுத்திடுவோம்
எங்கும் இயந்திரமயமாதலை ஒழித்திட வேண்டும்
எங்கும் மனிதமயமாதலை வளர்த்திட வேண்டும்
நவீனமயமாதல் உடலுக்கு உலகிற்கும் கேடு பயக்கும்
நவீனத்தில் நல்லதை எடுத்து அல்லதை விட்டுவிடுவோம்
எப்போதும் துணிப்பை ஒன்று வைத்திருப்போம்
எங்கும் பிளாஸ்டிக் பை இல்லாது ஒழித்திடுவோம்
மக்காத குப்பையாகி மாசுபடுத்துகின்றது
மண்ணில் நீரை இறங்க விடாமல் தடுக்கின்றது
பாலித்தீன் பயன்பாட்டை உடன் குறைத்திடுவோம்
பாதிப்பு இல்லா உலகம் நாம் அமைத்திடுவோம்
முயன்றால் முடியாது எதுவுமில்லை உலகில்
முயன்றிடுவோம் யாவருமே வெப்பத்தைக் குறைக்க
-------------------------------------------------
4. காதல் ஹைக்கூ
அன்றும்
இன்றும்
என்றும் இனிக்கும்
காதல்
உணர்ந்தவர்களுக்கு மட்டும்
புரிந்திடும் உன்னத சுகம்
காதல்
கற்காலம் முதல்
கணிப்பொறி காலம் வரை
காதல்
செல்ல வழி உண்டு
திரும்ப வழி இல்லை
காதல்
கண்களில் தொடங்கி
கண்ணிரில் முடியும்
சில காதல்
காவியத்திலும்
கணினியுகத்திலும்
இனிக்கும் காதல்
விழியால் விழுங்குதல்
இதழால் இணைதல்
காதல்
இரசாயண மாற்றம்
ரசனைக்குரிய மாற்றம்
காதல்
விழி ஈர்ப்பு விசை
எழுப்பும் இனிய இசை
காதல்
சிந்தையில் ஒரு மின்னல்
உருவாக்கும் ஒரு மின்சாரம்
காதல்
வானில் மிதக்கலாம்
உலகை மறக்கலாம்
காதல்
பெற்றோரை விட
பெரிதாகத் தோன்றும்
காதல்
-------------------------------------------------
5. மின்தடை ஹைக்கூ
பாதித்தவர்கள்
சபிக்கிறார்கள்
மின்தடை
வெட்ட வெளிச்சமானது
கையாலாகாத தனம்
மின்தடை
அறிவித்து பாதி
அறிவிக்காமல் மீதி
மின்தடை
தாமஸ் ஆல்வாய் எடிசனை
தினமும் நினைவூட்டுகின்றனர்
மின்தடை
தடையின்றி
கொசுக்கள் ரிங்காரம்
மின்தடை
வந்தது வெறுப்பு
வாக்குப் பெற்றவர் மீது
மின்தடை
ஆளுங்கட்சியை தோற்கடிக்க
ஏதிர்க்கட்சி வேண்டாம்
மின்தடை போதும்
விவசாயம் பாதிப்பு
தொழில்கள் பாதிப்பு
மின்தடை
வல்லரசாவது இருக்கட்டும்
நல்லரசாகுங்கள்
மின்தடை
வெளிநாடுகளில் இல்லை
இந்தத் தொல்லை
மின்தடை
eraeravik@gmail.com |