| அன்னை பூமி! 
 - தமிழினியன் -
 
 
  
  பேராசை கொண்ட மாந்தன்மரங்களை வெட்டினான்
 காடுகள் அழிந்து போயின
 விலங்குகள் ஊருக்குள்...
 பறவைகள் புகலிடம் தேடி
 பறந்து திரிகின்றன...
 பலஅரிய உயிரினங்கள் இன்று
 அழிந்து வருகின்றன...
 
 காற்று நஞ்சாகிப் போனது
 அறிவியல் வளர்ச்சியால் !
 ஓசோனில் ஓட்டை விழுந்தது
 நச்சுப் புகை சுழற்சியால்
 நிலநடுக்கம்,சுனாமி,காட்டுத்தீ
 காரணமென்ன தெரியுமா ?
 தன்னலம் கொண்ட மாந்தனின்
 தவறுதானென்று புரியுமா !
 
 நாளைய தலைமுறை பற்றிய
 கவலை கொள்...
 அவர்கள் வாழ்ந்திட சூழலை
 விட்டுச் செல்...
 இன்றுநான் நாளை நீ மண்ணுக்குள்
 என்பதை புரிந்துகொள்...
 என்றும் அழியாதது பூமிதான்
 தெரிந்துகொள்...
 
 உயிர்கள் வாழ வளியை
 கொடுக்கும் பூமி
 அணுகுண்டு ஏவுகணைகளின் வலியை
 தாங்கிடும் பூமி
 பல்லாயிரம் உயிர் இனங்களை
 கண்டதிந்த பூமி
 பல கோடி ஆண்டுகள்
 வாழுமிந்த பூமி...
 
 senthamilinian@yahoo.com
 
 அகரம்.அமுதாவின் கவிதைகள்!
 
 கைவளைக்கும் இல்லை கனிவு!
 
 
  காமன் வதைபட கட்டில் முறிபடமாமன் வருவானோ மாமயிலே! -சோமனும்
 சுட்டென்னைத் தீய்த்தானே! சொப்பனம்வஞ் சித்ததுவே!
 சட்டெனமா மன்பிரிந்த தால்!
 
 கூந்தல்பூ என்னை குறும்பாய்ப் பரிகசிக்கும்;
 ஏந்திய கைவளைகள் எக்களிக்கும்; -மாந்தளிர்
 மேனியுடை என்னை வெறுத்துப் புறம்நழுவத்
 தேனினிய சொல்திக்கு தே!
 
 மானுலவும் கண்கள் வடிவிழந்து காணும்;எண்
 சாணளவு மேனி தளர்ந்துவிடும்; -தேனுலவும்
 வாலெயிறு நீர்நஞ்சாய் மாறிவிடும் என்தலைவன்
 தோளிரண்டில் தொத்தாதக் கால்!
 
 வதைத்தோடும் பால்நிலா வஞ்சிக்கும் தென்றல்
 எதைத்தூது நான்விட்டால் ஏற்பான்? -சதைச்சிலையாய்
 ஆனேனே! அம்கனவில் கண்டு விழிக்குங்கால்
 காணேனே கண்ணொடுகொண் கன்!
 
 கற்-பனையா என்மேனி? காமன் விடுகணைகள்
 கற்பனைக்கெட் டாத்துயரம் காட்டிடுதே! -நற்றலைவன்
 என்னருகி ருப்பானேல் மண்ணுலக சொர்க்கத்தைக்
 கண்ணருகில் காட்டானோ கண்டு?
 
 வல்வரவைச் சொல்லி வகைமோசம் செய்தவனின்
 சொல்தவறிப் போனதனால் தூக்கமின்றி -மெல்லமெல்ல
 மெய்யிளைக்கும்; மென்புன்ன கையிளைக்கும்; பெய்வளையென்
 கைவளைக்கும் இல்லை கனிவு!
 
 இயற்கையைப் பாடுவேன்!
 
 -அகரம்.அமுதா -
 
 
  நேசக் கையைநீட்டி யழைத்து
 நிற்குது கவின்மாலை! -நெஞ்சை
 நிறைப்பது கவிமாலை!
 வாசம் பரப்பி
 வண்டை அழைப்பது
 வண்ண மலர்சோலை! -என்னை
 வடிப்பது கவிச்சோலை!
 
 மாலை வந்தபின்
 மதியும் வந்தே
 மங்கல வானெழுதும்! -விண்மீன்
 வாழ்த்திசைப் பண்ணெழுதும்!
 சோலை வந்தபின்
 சில்வண் டெல்லாம்
 சொக்கியா நின்றுவிடும்? �பூக்கள்
 வெட்கத்தை வென்றுவிடும்!
 
 உருகும் மேகம்
 உயர்த்திப் பிடித்த
 உறுவில் மையெழுத்து! -மின்னல்
 ஒளியோ கையெழுத்து!
 அருவிக் குழந்தை
 ஆறே மங்கை
 ஆழி மூப்பாகும்! -கரைக்கு
 அலையே சீப்பாகும்!
 
 கயற்கண் காரிகை!
 
 - அகரம்.அமுதா -
 
 
  கயமை சமூகம்கண்டிடு கவிதையிலே -அவைதான்
 கவிதைகள் என்பவனே!
 இயற்கைக் கவிஞன்
 எழுதாக் கவிகள்
 எழுதுதல் என்பொறுப்பு! -இதிலேன்
 இடுகிறாய் பிடிநெருப்பு!
 
 மலர்கள் மீண்டும் மலரும்!
 
 - அகரம்.அமுதா -
 
 
  வில்லென்ற புருவம் வைத்துவேலென்ற விழிகள் வைத்துக்
 கள்ளுண்ட அதரம் வைத்துக்
 கனியுண்ட அங்கம் வைத்தே
 இல்லென்ற இடையும் வைத்தவ்
 இடையகத்தில் இன்பம் பொங்கும்
 நெல்லென்ற ஒன்றை வைத்து
 நிற்பவரோ பெய்வ ளைகள்?
 
 மொழிமுறை முற்றும் மாற்றி
 மொழிதலை விரும்பு வோரும்
 வழிமுறை என்னும் பேரில்
 வனிதையர்க் கிழைக்கும் தீங்கின்
 இழிமுறை அறிந்தி ருந்தும்
 இருப்பதோ கல்லாய்? அவரை
 அழிமுறை அறிந்தெ ழுந்தே
 ஆர்ப்பதே பெண்ணின் வேலை!
 
 வேணவா தீரும் மட்டும்
 விரும்பியே அணைத்துக் கொள்ளும்
 ஆணவா தீர்ந்த பின்னும்
 அணங்கவா தொடர்ந்து விட்டால்
 வீணவா என்னும் கீழ்மை
 விலங்கவா வன்றோ மஞ்சல்
 பூணவா பூவ வாவைப்
 பூணொண்ணா விதவைக் கோலம்!
 
 பெற்றவளைக் காணப் போமோ?
 பிறப்பினால் தமக்கை யாகப்
 பெற்றவளைக் காணப் போமோ?
 பின்னாளில் மனையைக் கூடிப்
 பெற்றவளைக் காணப் போமோ?
 பேச்சிலே முள்ளை வைத்து
 மற்றவளை கைம்பெண் என்றே
 மனங்குளிரும் பேர்கட் கெல்லாம்?
 
 மதியென்பார் முகத்தை@ வாயின்
 மலரென்பார் சிரிப்பை@ திரு
 மதியென்பார் மணந்து கொண்டால்@
 மணவாளன் இருக்கும் மட்டும்
 மதியென்பார்@ அவன்ம ரித்தால்
 மதியவளை மிதியென் பார்கள்@
 விதியென்றே வீட்டின் மூலை
 வீழ்தலோ பெண்ணின் வீரம்?
 
 மெட்டியை@ மஞ்சல் தோய்ந்த
 மணிக்கயிற் றோடு நெற்றிச்
 சுட்டியை@ பூவை@ வண்ணம்
 துளங்கிடும் ஆடை தன்னை@
 போட்டோடு கைவ ளையைப்
 புரத்தலன்றித் துறத்தல் நன்றோ?
 அட்டியிலை அடுத்தோர் மாலை
 அவள்தோளில் வீழ்தல் நன்றே?
 
 பதுமைதான் இதுவ ரைநீ@
 பாவைநீ துணிந்து விட்டால்
 புதுமைதான் பூமி யெங்கும்@
 புத்தியில் ஓர்ந்த றிந்தே
 புதுக்கிடும் மறும ணத்தைப்
 புரிதலே பெருமை யாண்டும்!
 மதுக்குடம் ஏந்தும் கூந்தல்
 மலர்மீண்டும் மலர்தல் வேண்டும்!
 
 agramamutha08@gmail.com
 http://agramamutha.blogspot.com/
 
 அழிய மறுக்கும்.......
 - றஞ்சினி -
 
 
  குப்பைக்காடாய் குவிந்துகிடக்கும்
 நினைவுகளை
 எரிக்கநினைக்கையில்
 அழுது விழுந்து
 ஆர்பரிக்கிறது
 உனது நிழல்
 சிறிது தளரும் மனதை
 இறுகப்பூட்டி
 கவனமாக
 தொடங்கியதிலிருந்து
 முடிந்ததுவரை
 சேர்த்து
 எரிக்கும்போது
 ஆவியாகி மீண்டும் என்னுள் நீ
 shanranjini@yahoo.com
 வேதா. இலங்காதிலகத்தின் பெற்றோரன்புப் பாடல்கள்!
 - வேதா. இலங்காதிலகம் -
 
 மூலச்சக்கரங்கள்.
 
  அன்புப் போதி மரம்
 இன்பப் பெற்றோர் இல்லம்.
 பண்பின் இலக்கியம்; பெற்றவர்
 உன்னத உரை நடைகள். (அன்புப்….)
 
 காலச் சக்கரம் சுழல எமக்கு
 மூலச்சக்கரமானவர் பெற்றோர்.
 சீலமான வாழ்வுத் தேரிற்குப்
 பாலமான இராசிச் சக்கரம். (அன்புப்…..)
 
 என்னை உருவாக்கிய உயிர்த் துளிகள்.
 என்னுள் எதிரொலிக்கும் அன்புமொழிகள்
 எழுத்தாணி இயக்கத்து ஆதார சுருதிகள்
 முழுவதும் பெற்றோரின் கொடைகளே. (அன்புப்….)
 
 பாடல் - வேதா. இலங்காதிலகம். ஓகுஸ், டென்மார்க். 22-4-08.
 
 
 ஊக்கம் தருமன்பு!
 
 - வேதா. இலங்காதிலகம் -
 
 
  வாய்மை, வலிமையாம் தந்தையன்பு,வலையாக வீட்டில் தாய்மையன்பு,
 ஆய்வுக்கும் அப்பாலொரு தூயஅன்பு.
 ஓய்வின்றிப் பொழியும் பெற்றோரன்பு. (வாய்மை…)
 
 பத்து விரல்கள் பாசமாய்ப் பதித்து
 சொத்தாகப் பிள்ளையைப் பார்ப்பார்.
 தித்திக்கப் பேசித் தாய்மொழியை
 முத்தாகப் பழக்கும் பெற்றோர். (வாய்மை….)
 
 பூக்கும் பெற்றோர் அன்பு
 ஊக்கம் தந்து காக்கும்.
 ஆக்கமான அன்பிழந்தால்
 ஏக்கம், தாக்கம் சோகமே. (வாய்மை….)
 
 பாடல் - வேதா. இலங்காதிலகம். ஓகுஸ், டென்மார்க். 22-4-08.
 
 vetha@stofanet.dk
 
 அனாமிகா பிரித்திமா கவிதைகள்!
 
 பட்டம்!
 - அனாமிகா பிரித்திமா - 
   வாழ்த்துக்கள் குவிந்தன...
 பாராட்டுமழையில் நனைந்தேன்...
 எல்லாம்...
 இரு அயல்நாட்டு...
 அங்கீகாரத்துடன் பெற்ற...
 முனைவர் பட்டத்திற்காக...
 நன்றி கூறி அமர்ந்தேன்...
 ஆனால் ....
 மனதின் ...
 ஏதோ ஒரு மூலையில்...
 நெருடல்...
 இன்னும் ...
 மனைவிஇ தாய் ...
 என்ற இந்த இரு...
 பட்டத்தை...
 முழுமையாக...
 பெறவில்லையே என்று...
 
 நடந்தது என்ன?
 
 - அனாமிகா பிரித்திமா -
 
 
  இடையில்...என்ன நடந்தது?
 எப்படி நடந்தது?
 எதற்காக நடந்தது?
 ஏன் நடந்தது?
 யார் பேசினார்கள்?
 என்ன பேசினார்கள்?
 என்று இன்றளவும்...
 முழுமையாய் நான் அறியேன்...
 நீங்களும் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை....
 என்னிடம்...
 தவித்துக்கொண்டிருந்தேன் நான்...
 பேசுவீர்கள் என்று...
 வாய்ப்பு கொடுக்கவில்லை...
 கிடைக்கவுமில்லை...
 சூழ்நிலைக்கைதி நான்...
 
 மேடையேறினோம்...
 பிரிந்தோம்...
 அன்றே என் உயிரும்...
 பிரிந்திருக்கக் கூடாதா...
 என்றேண்ணுகிறேன்...
 மேலே இருந்தாவது காலம் முழுவதும்...
 உங்களை பார்த்துக்கொண்டிருப்பேனே?
 அதற்கும் கொடுப்பில்லா...
 துரதிஷ்டசாலியாகிவிட்டேன்...
 நான்...
 
 என் காதலரே !...
 
 - அனாமிகா பிரித்திமா -
 
 
  கலைகள் கற்றறிந்த வித்தகரே !...என் காதலரே !...
 கற்று கொடுங்கள்...
 இதை மட்டும் கடைசியாய்...
 என்னை தங்கள்...
 இதயத்தில் இருந்து...
 தூக்கி எறிந்தது எப்படி?
 
 மறக்க முடியவில்லை...
 தங்களை மறந்திருந்தால்...
 இந்நேரம்...
 மணம் புரிந்து...
 உலகத்தின்...
 மற்றொரு மூலையில்...
 குடியிருப்பேன்...
 
 ஒவ்வவொரு முறையும்...
 தாங்கள் கடிதத்தில் கடைசியாய்...
 எழுதும்...
 
 பூமி சுழழும் வரை...
 காற்று விசும் வரை...
 அலை அடிக்கும் வரை...
 என்றும்...
 எப்போழுதும்...
 என் இதயத்தில்...
 நீ மட்டுமே !...
 
 அன்புடன்...
 நெசத்துடன்...
 பிரியத்துடன்...
 காதலுடன்...
 உன் “மாவீரன்”
 என்றேழுதியதெல்லாம்?.......
 
 
 anamikapritima@yahoo.com
 http://anamikapritima.blogspot.com/
 http://anamikapritima.weebly.com
 
 தேடலில்...!
 
 இமாம்.கவுஸ் மொய்தீன்.
 
 
  சாலை வசதிகளற்றகுக்கிராமம்!
 வறுமையின் மடியில்
 கூடுதலாய் ஓர் குழந்தை!
 தெருவிளக்கு தந்தது
 கல்வி ஒளி!
 உழைப்பும் உண்மையும் தந்தன
 உயர்வும் ஊக்கமும்!
 
 இன்றோ ஐம்பதைக்
 கடந்த வயது!
 வசதிகள் வளம்
 நற்பெயர்
 மதிப்பு மரியாதை
 செல்வமும் செல்வாக்கும்
 இவருடன் சேர
 இவற்றுடன் சேர்ந்தன
 கொழுப்பு கொதிப்பு
 சர்க்கரையும்...!
 
 உழைப்பைக் கொண்டு
 வறுமையை வென்றவர்
 நலத்தை மறந்து
 வளத்தைத் தேடியதால்-இன்று
 வளத்தைக் கொண்டு
 நலத்தின் தேடலில்....
 கிடைக்குமா...??
 
 drimamgm@hotmail.com
 |