| 
 
தாய்!
 - கவி வைஸ்ணவி -
 
 உணர்வுடன்
 இன்பத்தையள்ளி
 உதிரத்தில் பிசைந்து
 தன்
 கருவினில் இருத்தி
 உயிரினைத் தந்தவள்
 தாய்...!
 
 சதைப்பிண்டமாயிருந்த
 உயிரை...
 பத்து திங்களில்
 குழந்தையாய் உயிர்ப்பித்து
 தந்தவள் தாய்...!
 
 பசியென்றவுடன்
 உணவாகி... உண்மை
 அன்புக்கு முன்
 விலையாகி உதிரம் தந்த
 உலகின் தெய்வம் தாய்...!
 
 பெண்ணில் உயர்தரம்
 கண்ணையிமை போல்
 உன்னைக் காத்தவள் தாய்..!
 
 அவள் கருவிலிருந்து
 நீ... எத்தனை தடவை
 எட்டியுதைத்திருப்பாய்
 எண்ணிப்பார்?
 
 எட்டியுதைந்தாலும்
 "வலியைத் தனதாக்கி
 உன்னையுருவாக்கியவள்
 தாய்...!
 அனாதை மடத்திலே...
 தவிக்க விடலாமோ?"
 
 நீ. தவிக்க விட்டாலும்
 நீ.. தவிக்கின்றாயோவென்று
 உன்னையே
 நினைத்தேங்கிடும் அன்னை
 தான் தாய்!
 
 sakthy-@hotmail.com
 *******************************
 
இலங்கையிலே…!
 - மட்டுவில் ஞானக்குமாரன் (யேர்மனி) -
 
 
  இதயம் 
வறண்டு நீறாக உதிர்ந்து போகிறது
 எந்த நிமிடத்திலோ
 உயிர்கிள்ளக்கூடும்
 
 மெது மெதுவாக
 மூச்சுக்குழல்
 அசைவை நிறுத்தும்
 
 சொல்லிட
 நினைக்கும் வார்த்தைளை
 விழுங்கி விழுங்கியே பழகிவிட்டது.
 
 மண்ணிலே
 கால் பதிக்க முன்னமே
 கரைந்து போன கர்ப்பம் போல
 உள்ளுக்குள்ளேயே
 உருகிப் போகிறது எண்ணங்கள்.
 
 வெளிக்காற்று
 ஆகாயம் எல்லாமே
 காசு கொடுத்து
 வாங்கும் அபுர்வ பொருளானது
 சிறைக்கைதி எனக்கு
 
 அதிகாலை பொழுதிலே
 வீதியோரங்களிலே
 தமிழரின் உடல் துண்டங்களால்
 கோலம் போடப்பட்டிருக்கும்
 
 பிணங்களைத் தோண்டி எடுத்து
 ஆய்வு செய்திட
 பாண்டித்தியம் பெற்ற யாராவது
 வருவார்கள்
 
 எந்த முடிவு வந்தென்ன
 இழந்து போன
 உறவுகள் எழுந்திடாதவரை …!
 
 maduvilan@hotmail.com
 
*********************************** 
எனது கவிதைகளுக்காக ஓர் 
இருப்பிடம் தேடி... 
- வீ.அ.மணிமொழி, மலேசியா -
 
  நான் நேற்று...இன்று...
 சேமித்து வைத்த கால்கள்
 என்னை அறியாமலே
 விட்டு விலகிச் சென்றன
 புன்னகையுடன்...
 * * *
 
 எனக்கான இருப்பிடத்தைத் தேடுகிறேன்
 கண்களையும் கால்களையும்
 கட்டிக்கொண்டு...
 மயான வீதியை நோக்கி...
 * * *
 
 ஒளித்து வைத்திருந்த
 தனிமை...
 தலையை நீட்டி
 என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறது
 எனக்கான மொழியில்...
 * * *
 
 இனி பார்ப்பதற்கு ஒன்றுமில்லை
 எல்லாம்...
 நான் சேமித்த ரகசியங்கள்.
 
 ******************************
 
 ஒரு கணம்!
 
- வீ.அ.மணிமொழி, மலேசியா - 
 இருள்... மீண்டும் இருள்...
 சுற்றிச் சூழ்ந்து கொண்டது
 
 தடித்த வேர்களும்
 முள் படர்ந்த விழுதுகளும்
 உடலை நெறித்து
 முறுக்குகின்றன
 வடுக்கள் பதிக்காமலே...
 
 மௌனங்கள் நிரம்பிய
 நிஜமில்லா
 அதன் மென்மை
 என் இரகசியங்களை
 பொறுக்கிக் கொண்டு
 செல்கின்றது...
 திரும்பி பார்க்காமலே...
 
 moli143@yahoo.com
 
 ***********************
 
உறவென்று........
 - றஞ்சினி -
 
 
  அன்னை 
மடியில் உறைந்துகிடக்கிறது
 மனம்
 அழுதழுது எதுவுமே ஆகிவிடவில்லை
 உறவை இழந்த உயிர் துடிக்கிறது
 ஒருசில கணங்கள்
 கடந்தவை கேள்வியாகி
 வாழ்வு ஸ்தம்பிக்கிறது
 நிஜமென்று நினைப்பவை
 உறவென்று அழுபவை
 உயிருடன் இருக்கும் வரைதான்.
 
 shanranjini@yahoo.com
 
 
*********************** 
புலம் பெயர்ந்த 
ஈழத்தமிழன்!
 - திருநாவுக்கரசன், மதுரை -
 
 
  தோட்டத் 
தொழில்செய்தோம் தோட்டாக்கள் துளைத்தன எங்களை
 வயதொத்த தோழர்களும்
 வாழ்க்கைப்பட்ட மனைவியும்
 வதைபட்டு இறந்ததை
 வாங்கிய கண்கள்
 தூங்கவில்லை இன்னும்.....
 வீடுகள் இழந்தோம்
 வீதிக்கு வந்தோம்
 வீதியும் இழந்தோம்
 வேற்று தேசம் வந்தோம்
 வாழவேண்டும் என்று எண்ணி
 ஈழம்விட்டு இங்கு வந்தோம்
 ஈனப்பட்டு நிற்கின்றோம்.
 உடல் அலுக்க உழைத்தபின்தான்
 குடல் நிறைத்துக் கொள்வது
 கொள்கை எங்களுக்கு - இப்படி
 கொடுப்பதை உண்டு படுத்துக் கிடக்க
 கொடும்பாவம் என்ன செய்தோம்
 அன்னை பூமியில் வாழ்விழந்தோம்
 அன்னிய பூமியில் மதிப்பிழந்தோம்
 போதும் நிறுத்துங்கள் போரை - நான்
 அன்னை பூமியின் மண்ணைத் தழுவி
 ஆனந்தக் கண்ணீர் விடவேண்டும்.
 தொலைந்துவிட்டதைத் தேடலாம்
 தொலையாத சமாதானத்தைத் தேடுவதேன்!
 சமாதான நதி சத்தமில்லாமல் ஓடுகிறது
 அள்ளிப் பருகவேண்டும் - சற்று
 அதை நோக்கி வாருங்கள்
 இறங்கி.....
 வாழ்க்கையின் கதவுகள் மிகப் பெரிது
 சமாதானச் சாவி சிறிதென்றாலும்
 அது திறக்கும்
 
 அனுப்பியவர்: 
kalpa2011@yahoo.com
 
 **************************
 
 பகல்!
 
- நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
 
  தொங்குபாலமான 
என்னுள் தொடுவதும் மறைவதுமாய்
 நடைபாதைச் சூரியன்
 ஒன்றிணைந்த உணர்வில்
 அரூபத்தின் தொடுகை
 உரசி நிற்கின்ற
 சிற்பமாகி
 பிதுங்கித் தெரிகிறது
 சொர்க்க நிழல்
 சூரியனை கொறிக்கின்ற குருவிகள்போல்
 குதூகலம்
 முடிவில்லா பாட்டுக்கள்போல்
 குற்றம் இடைநடுங்கி
 ஆன்ம வெருட்சி
 ரம்மிய வெளிச்சம்
 இதமான இளவெயில்
 இலைகளின் போர்வைக்குள்
 ஆக்கிரமிக்கிறது என் பகல்
 
 navajothybaylon@hotmail.co.uk
 
 
*********************** 
என் சுரேஷ் கவிதைகள் சில!
 கண்ணீர் நொடிகள்!
 
 
  கல்யாணி 
கவரிங் கல்யாணி கவரிங் என்ற
 விளம்பரம் கேட்டு
 கவரிங் நகை வாங்கச் செல்லும்
 ஏழை கல்யாணி
 நிஜ நகைகளுக்காக
 ஏங்கிக் கலங்கும் நொடிகள்!
 
 விதவையாகிப்போன அந்த
 பூக்காரி அக்காவின்
 நினைவுகளும் கனவுகளும்
 மனதை குத்தும் நொடிகள்!
 
 காதலனும் காதலியும் பிரிந்த பின் சந்திக்க
 அவர்தம் கணவனுக்கும் மனைவிக்கும் முன்
 ஒருவருக்கொருவர்
 அறியாதவர்கள் போல்
 நடித்துத் துடித்த தவிப்பின் நொடிகள்!
 
 சொந்த இனத்தின் அழிவைக் கண்டும்
 சட்டத்தால் வாய்ப்பூட்டிடப்பட்டும்
 அமைதியின் வேடத்தில் தவமிருக்கும்
 வீரத்தின் எழுச்சி எரிமலை
 கண்ணீரால் துடிக்கும் நொடிகள்!
 
 பட்டியலிட்டால் அடங்கா
 எத்தனை எத்தனை கண்ணீர் நொடிகள்!
 
 *****************
 
 வானம்!
 
 என்னடா என் தலையில் இத்தனை பாரம் ?
 ஏந்த முடியா என்னில் ஏனோ - இத்தனை
 ஏளனம் ஏக்கம் ஏமாற்றம் ஏகாந்தம் ???
 
 தேடித்தேடி பார்த்தேன்
 மனதினோரம் கவலையென்று ஒன்றுமில்லை
 
 பிறகு
 மனதின் கிரீடத்தில் மட்டும் ஏனிந்த பாரம்
 
 மனமே,
 என்ன வேண்டுமுனக்கு ?
 
 அழ வேண்டுமா ?
 காதலியை காண வேண்டுமா ?
 உறங்க வேண்டுமா ?
 உறக்கத்தில் கனவு வேண்டுமா ?
 
 எது வேண்டுமென்றாலும்
 எதுவும் உனதல்ல
 
 அட !
 
 நீ கண்ட உன் கனவே
 உனக்கு சொந்தமில்லையடா
 
 இதயத்தில் கண்ணீர் நிறைந்தும்
 அழ முடியாத
 மனமே
 நீயொரு
 வித்தியாச வானம் !
 
 ***************
 
 முட்டாள் காதலன்!
 
 பாலைவனத்தில்
 வாழைமரம் நட்டதும்
 உன்னை
 காதலித்தேன்!
 
 வாழைமரம்
 தோப்பானதும்
 பறந்து வந்ததுந்தன்
 திருமணப் பத்திரிகை
 அதிலொரு குறிப்பு
 "மன்னித்து விடுங்கள்"
 
 என்னை
 முட்டாளென்றோ
 ஏமாற்றப் பட்டவனென்றோ
 முரசடித்துக் கொள்ளலாம்!
 
 இன்னமும்
 கனவின் கற்பனையில் வாழ்ந்து
 கானல் நீரில் மீன் பிடிக்கும்
 சுகத்தில் நான் மகிழ்கிறேன்!
 
 என் பெயர்
 முட்டாள் காதலன்!
 
 *****************************
 
 மேகக்கூட்டம்!
 
 கவிதையா?
 நான்கு வரிகளிலென்றால்.. சரி!
 
 சிறுகதையா?
 துணுக்கின் படிவமென்றால்.. சரி!
 
 நோவல்?
 நேரமேயில்லை!
 
 பாடல்?
 நல்லிசையோடிருந்தால் - அல்லது
 இசை பாடலை ஆக்கிரமத்தால்!
 
 என்னாதான் வேண்டும்?
 ஒன்றும் வேண்டாம்
 எல்லாம் சேர்ந்த சினிமா போதும்
 அதுவே இலக்கணத்தின் உச்சம்!
 
 ஒரு சமுதாயம் முன்னேறவும்
 அழியவும் சினிமாவும் காரணமா !!!
 
 இந்த கால சினிமா
 முன்வைக்கும்
 வன்முறையும் ஆடையில்லா ஆட்டமும் - என்
 கண்முன்னே ஓடி வர...
 
 கோபத்தாலென் இமைகளை
 இழுத்தி மூடினது கண்கள்
 
 என் மனத்திரையில்
 ஆஸ்திரேலிய காடுகள்
 எரிந்துகொண்டிருக்கின்றன...
 
 சினிமா சுருள்களை நானந்த
 நெருப்பிலிட்டு மகிழ்கிறேன்
 
 மஞ்சள் புகையும் சிவப்பு புகையும் பொங்கி வர
 வெட்கத்துடனும் பயத்துடனும்
 விரண்டோடுகிறது மேகக்கூட்டம்!
 
 
*********************** 
நியாமான எதிர்பார்ப்புகள்!
 தாய்தந்தையர் பிள்ளைகளிடம்
 தேடும் பாசமும் நன்றியும்
 
 முதல் மாணவனின் தோள்கள்
 தேடும் சமூகத்தின் பாராட்டு
 
 அழகிய குழந்தையின் புன்னகை
 தேடும் பாச ஸ்பரிசம்
 
 கலைஞர்களின் உழைப்பு
 தேடும் கரகோஷம்
 
 கவிஞனின் கவிதைகள்
 தேடும் மௌன நொடிகள்
 
 மண்ணின் மைந்தர்கள்
 தேடும் சுதந்திரம்
 
 ஆசை வேண்டாமென்று சொன்ன புத்தர்
 தேடும் ஆசையற்ற சமூகம்
 
 கடமை செய் பயனை எதிர்பாராதே என்ற கீதை
 தேடும் தர்மமும் சத்தியமும்
 
 ***************
 
 சிந்திப்போம்!
 
 விரல்களிழந்தவனின்
 நிலையுணர்தல்
 மோதிரமில்லையென்ற
 கவலை தீர்க்கும்!
 
 அகதிகள் முகாமில்
 ஒரு நொடி வாழ்தல்
 அவர்களின் விடியலில் தான்
 நம் சுதந்திரம் என்றிடும்!
 
 அடுத்தவனின் நிலையறியும்
 அழகிய ஒற்றை வழி
 அவன் நிலையிலிறிந்து
 நமது தவறை காண்பதே!
 
 யாரையும்
 காயப்படுத்தாத மனதில்
 யாரிடமும் கோபமில்லை
 யாராலும் கவலையுமில்லை!
 
 தீயைக் கண்டு எரிந்து விடாத
 மழைவெள்ளம் கண்டு ஈரமாகாத
 திரை போல் நம் மனமிருந்தால்
 அமைதி நிச்சயம்!
 
 ********************************
 
 என்னைப் புரிந்து கொள்!
 
 உன்னையே உனக்கு விளங்காத போது
 என்னையே நீ விலக்க முயல்வது
 முறையோ சொல்!
 
 தீயில் குளித்தவன் என்னை
 எரித்து விட முயலாதே!
 
 என்னை மூழ்கடிக்க
 கடல்நீரும் போதாதே!
 
 இமயமலையுமெந்தன் உயரம்
 வளரத் துடிக்கிறதே!
 
 ஆணவமல்ல
 இதெல்லாம் உண்மையே!
 
 காதலே
 இன்னுமா புரியவில்லை?
 
 உந்தன் மனதின்
 உள்ளுணர்வில்
 என்றுமென்றும்
 மகிழ்ந்து வாழ்ந்து மகிழ்வைக்கும்
 வசந்தத் தென்றல்
 நான்!
 
 *****************
 
 காதல்..!
 
 காதல் நம்மை முத்தமிடும் காலம்
 கண்கள் நான்கும் மௌனம் மகிழும் கோலம்
 
 துவக்கத்தில் நானும்
 மயக்கத்தில் நாமும்
 
 உந்தன் அன்பில் நனைந்தேன்
 பாசப்பனியில் குளிர்ந்தேன்
 
 அன்பும் பாசமும் போதாதென்று
 காதல் பூமழை பொழிந்தாய்
 
 என்றுமெந்தன் நெஞ்சில் வாழும்
 உயிரே எந்தனுயிரே
 
 காதல் தீயில் குளிர - நம்
 காதல் சுகங்கள் மகிழும்
 
 கனவெல்லாம் நிஜமாக
 கனவின்றி உறக்கம்
 
 பூக்கள் போடும் மாநாடு
 நம் காதலை வாழ்த்தும் பூவாசம்
 
 பூவின் வாசம் அழகைக் கடந்து
 தேன்சுவை பருகும் நம் விருந்து
 
 தாமரைகளால் மெத்தை - அதில்
 மௌனங்களால் நம் கவிதை!
 
 nsureshchennai@gmail.com
 |